விஷம் – 10
யாழவனுடைய கர்ஜனையில் விக்கித்துப் போய்விட்டாள் அர்ச்சனா.
சில நொடிகள் அவன் எதற்காகத் திட்டினான் என்பதே அவளுக்குப் புரியவில்லை.
அவனைப் பார்த்து மருண்டு விழித்தவளுக்கு விழிகள் கலங்கியே விட்டன.
அவனோ அவளை அழுத்தமான ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கு இருந்தவர்களுடன் உரையாடத் தொடங்க அப்போதுதான் மீட்டிங் நடக்கும்போது அனுமதியின்றி உள்ளே நுழைந்தது அவளுக்குப் புரிந்தது.
அங்கே இருந்த அனைவரின் பார்வையும் அவள் மீது ஒரு கணம் படிந்து பின் அவன் மீது திரும்பியதை உணர்ந்தவளுக்கு அவமானமாகிப் போக சட்டென வலது கண்ணில் இருந்து வழிந்த ஒரு துளிக் கண்ணீரை துடைத்தவளாக அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறினாள்.
இரவு முழுவதும் அவனுக்கு நன்றி கூறவில்லை என்ற குற்ற உணர்வும் இங்கே வந்தது முதல் அவனைக் கண்டால் போதும் என்ற பரபரப்பும் ஒன்று சேர்ந்திருக்க இடம் பொருள் ஏவல் அனைத்தையும் மறந்து அவனைக் கண்டதும் அனுமதியின்றி நுழைந்துவிட்டாள் அவள்.
‘அதற்காக இப்படியா அனைவரின் முன்பும் திட்ட வேண்டும் அப்புறமாக பேசுகிறேன் வெளியே காத்திரு என்றால் எனக்குப் புரிந்திருக்காதா..? இப்படி அனைவரின் முன்பும் திட்டி விட்டானே’ என்ற ஆதங்கத்தில் அவளுக்கு முகம் சிவந்தது.
சற்று நேரத்தில் அவளைத் தேடி வந்த பானுமதியோ அவளுடைய விழிகள் கலங்கி இருப்பதைக் கண்டு திகைத்துப் போனாள்.
“என்னடி எதுக்காக அழுகுற ஏதாவது பிரச்சனையா…?” என அவள் விழிகளால் ஆராய்ந்தவாறே கேட்க,
“யாழவன் சார் இங்கே வந்துட்டாருடி.. அவரைப் பார்த்ததும் தேங்க்ஸ் சொல்லலாம்னு பெர்மிஷன் கேட்காம மீட்டிங் நடந்த ரூமுக்குள்ள போயிட்டேன்.. அதுக்காக எல்லாரும் முன்னாடியும் திட்டிட்டாரு..” என அவள் சோகமாகக் கூற பானுமதிக்கோ சிரிப்பு வந்துவிட்டது.
“அடிப்பாவி முக்கியமான மீட்டிங் நடக்கிற இடத்துல பெர்மிஷன் கேட்காம நீ உள்ள போய் நின்னா உன்னைத் திட்டாம கொஞ்சவா செய்வாங்க..? நீ எதுக்குடி அப்படி போன..? மீட்டிங் முடிஞ்சு அவர் வந்ததுக்கு அப்புறமா அவர்கிட்ட பேசி இருக்கலாமே…”
“என் மேலேயும் தப்புதான்டி.. அவரைப் பார்த்ததுமே எல்லாமே மறந்து போச்சு.. என் மனசுல இப்பவே அவர் கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்கிறது மட்டும்தான் இருந்துச்சு.. அதனாலதான் கொஞ்சம் கூட யோசிக்காம அப்படியே உள்ளே போயிட்டேன்.. அதுக்காக இப்படி எல்லாம் திட்டணுமா..? அதுவும் எவ்வளவு சத்தமா கெட் அவுட்னு சொன்னாரு தெரியுமா..? பயந்தே போயிட்டேன்.. ரொம்ப அசிங்கமா போச்சுடி..” என்ற அர்ச்சனாவுக்கோ அவன் மீது கோபமும் வந்தது.
“சரி சரி விடு குணம் இருக்கிற இடத்துலதான் கோபமும் இருக்கும்… ஏய் இதுதான் புது ஜூனிபார்மா சூப்பரா வந்திருக்கு…” என பானுமதி கூறியதும் திகைத்துப் போனாள் அவள்.
“உனக்கு எப்படித் தெரியும்..?” என அர்ச்சனா கேட்க,
“சார் தான் நைட் கால் பண்ணி நம்ம நர்ஸ் யூனிபார்மோட மாடல் அனுப்பி வைக்க சொன்னாரு… நான்தான் அவருக்கு அனுப்பி வெச்சேன் உனக்காகத்தான் கேட்கிறேன்னும் சொன்னாரு.. உன்னோட ஸ்கூட்டர் சாவிய கூட அவரோட ட்ரைவர் கிட்ட கொடுத்து விடச் சொன்னாரு.. அதையும் நான்தான் உன் ஹேண்ட் பேக்ல இருந்து எடுத்து சாரோட ட்ரைவர் கிட்ட கொடுத்தேன்.” என்றதும் அவளுக்கோ மீண்டும் அதிர்ச்சி.
‘எப்படி இதை கவனிக்கத் தவறினேன்..’
காலையில் எப்போதும் போல ஸ்கூட்டி நிற்கிறது என நினைத்து அதை எடுத்துக்கொண்டு வந்துவிட்டவளுக்கு ஸ்கூட்டி எப்படி வீட்டுக்கு வந்தது என்பது பற்றிய கேள்வியே எழவில்லையே..?
அந்த அளவிற்கா தன்னை மறந்து அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தோம்..?
இப்போது என்ன இதற்கும் சேர்த்து அவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமோ..’
பெருமூச்சுடன் பானுமதியைப் பார்த்தவள் “தேங்க்ஸ்டி..” என்றாள்.
“எனக்கு எதுக்குமா தேங்க்ஸ் சொல்ற உன்னை காப்பாத்தினவருக்கு தேங்க்ஸ் சொல்லு..” என சிரித்தபடி கூறிவிட்டு பானுமதி கரத்தில் இருந்த பைல்களை தனித்தனியாக பிரித்து மேஜை மீது அடுக்கத் தொடங்கினாள்.
“இல்லைடி இனி என்ன நடந்தாலும் நானா அவர்கிட்ட போய் பேசுறதா இல்ல.. அவரா வந்து பேசினா பேசட்டும்.. இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தினதுக்கப்புறமா நான் எப்படி போய் பேச முடியும்..”
“பட் உன் மேலே தானே தப்பு. நீ எக்ஸ்கியூஸ் கேட்டுட்டு அதுக்கு அப்புறமா உள்ள போயிருக்கணும்..”
“என் மேலே தப்பு இருக்குன்னு தெரியும்.. ஆனா ஒரு மாதிரி இருக்கு..”
என அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே கதவைத் தட்டி விட்டு யாழவன் உள்ளே நுழைய அவளுக்கோ ஒரு மாதிரியாகிப் போனது.
அவனுடைய மருத்துவமனையில் வேலை செய்யும் இரு ஊழியர்கள் என்றாலும் கூட கதவைத் தட்டி அனுமதி கேட்டு விட்ட பின்னரே அவன் உள்ளே நுழையும் போது தான் செய்த செயல் தவறு தானே என எண்ணியவள் தலையை குனிந்து கொண்டாள்.
பானுமதியோ பைல்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட அவளை நெருங்கி வந்து நின்ற யாழவனின் பார்வையோ அர்ச்சனாவின் மீது அழுத்தமாகப் பதிந்தது.
“ஹாய் அச்சு இங்க என்ன பண்ற..? இன்னைக்கு உன்னை லீவு எடுக்க சொன்னேன்ல..” என அவன் இயல்பாகப் பேச அதிர்ந்து அவனுடைய முகத்தைப் பார்த்தவளுக்கு அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
“அப்போ அவ்வளவு கோபமா திட்டினீங்க இப்போ எதுவுமே நடக்காத மாதிரி பேசுறீங்க..” என அவள் நேரடியாகவே அவனிடம் கேட்டு விட,
“நீ தப்பு பண்ண திட்டினேன்.. அது அப்போவே முடிஞ்சு போச்சு.. இப்போ உன் மேலே இருந்த அக்கறையில கேட்கிறேன்.. இதுல என்ன இருக்கு..” என நிதானத்துடன் பதில் கேள்வி கேட்டான் அவன்.
பெருமூச்சுடன் அவனைப் பார்த்தவள் “சாரி உங்ககிட்ட தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன்.. நேத்தே சொல்லி இருக்கணும்.. பட் டென்ஷன்ல மறந்துட்டேன்.. தேங்க்ஸ் சொல்லாததாலே நைட் முழுக்க எனக்கு தூக்கமே வரல… அதனாலதான் உங்களை பார்த்ததும் எல்லாத்தையும் மறந்து மீட்டிங் ஹாலுக்குள்ள பெர்மிஷன் இல்லாம வந்துட்டேன். அதுக்கு ரொம்ப சாரி.. இருந்தாலும் நீங்க ரொம்ப ஹார்ஷா திட்டிட்டிங்க.. எனக்கு ரொம்ப ஹர்டிங்கா இருக்கு..” என தன் மனதை மறையாமல் அவள் வெளிப்படையாகக் கூற,
“பட், நீ பண்ணது தப்பு தானே.. மீட்டிங் நடந்த இடத்துல மீடியாக்காரங்களும் இருந்தாங்க.. நேத்து போலீஸ்ல கொடுத்த கேஸ் மீடியா வரைக்கும் போயிடுச்சு.. நீ அங்க வந்து நேத்து நடந்ததை பத்தி ஏதாவது பேசி இருந்தா நீ தான் அந்த பொண்ணுன்னு அவங்களுக்கு ஈஸியா தெரிஞ்சு போயிருக்கும்.. அப்புறம் உன்னோட போட்டோவையும் பேப்பர்ல போட்டு பக்கம் பக்கமா கதை எழுதி இருப்பாங்க.. அதனாலதான் ஸ்டார்டிங்லயே உன்னை ஸ்டாப் பண்ணினேன்..” என அவன் கூறியதும் அவளுக்கோ முகம் வெளிறிப் போனது.
“இந்த விஷயம் உங்க அம்மாக்கே தெரிய கூடாதுன்னு நீ நினைச்ச.. அதனாலதான் மீடியாக்கு தெரிய விடாம பண்ணினேன்..
நான் பண்ணதுல எந்த தப்பும் இல்லைன்னு எனக்குத் தெரியும்.. உனக்கு ஹர்ட் ஆச்சுங்கறதுக்காக என்னால சாரி எல்லாம் கேட்க முடியாது.. நான் இப்படித்தான் அச்சு.. நான் இன்னைக்கு திட்டினது உனக்கு ஹர்ட்டிங்கா இருந்தா இன்னொரு முறை மீட்டிங் ஹாலுக்குள்ள வர்றதுக்கு முதல் எக்ஸ்கியூஸ் கேட்டுட்டு உள்ளவா..” என்றவன் கோபமோ சத்தமோ இன்றி தான் கூற வந்த விடயத்தை நிதானமாகக் கூறிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட அவள் திகைத்துப் போனாள்.
‘என்னை பிடித்திருக்கின்றது என்று கூறினானே..?
பிடித்த பெண்ணிடம் இப்படித்தான் கறாறாக நடந்து கொள்வார்களா..?’
நீ என்ன நினைத்தாலும் பரவாயில்லை நான் இப்படித்தான் என மார் நிமிர்த்தி கூறுபவனை அவளுக்குப் பிடிக்கத்தான் செய்தது.
இப்படிப்பட்டவர்களை பார்ப்பதெல்லாம் அரிது அல்லவா..?
வேறுமுகம் காட்டி நடிக்கும் இந்த உலகத்தில் நான் இப்படித்தான் எனக் கூறும் ஆண்மகனை சந்தித்தது அவளுக்கும் மகிழ்ச்சியே.
சரி இப்படியே அவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பதை நிறுத்திவிட்டு அவனிடம் பட்ட நன்றிக் கடனைத் தீர்த்து விடலாம் என எண்ணியவாறு அவனை நோக்கித் திரும்பியவள் அவன் அலைபேசியை காதில் வைத்து பேசுவதைக் கண்டு உதடுகளைப் பிதுக்கினாள்.
அவனோ எதையோ பேசியவாறு எழுந்து கொள்ள ‘அச்சச்சோ அப்படியே போயிருவான் போல இருக்கே.. இப்போ எப்படி தேங்க்ஸ் சொல்றது..’ என எண்ணியவாறு அவன் பின்னாலேயே இவளும் செல்ல,
ஒரு நொடி நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன்
“ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு 10 நிமிஷத்துல வந்துருவேன்.. ஏதாவது பேசணும்னா மேலே என்னோட ரூமுக்கு வா..” என அவளிடம் கூறிவிட்டு சிறு தலையசைப்போடு அவன் வெளியேறிவிட அவளுக்கோ மீண்டும் பெருமூச்சு.
‘இவன் கிட்ட தேங்க்ஸ் சொல்லி முடிக்கறதுக்குள்ள நான் கிழவி ஆயிடுவேன் போல..’ என எண்ணிக்கொண்டவளுக்கு சிரிப்பும் வந்தது.
எப்போது அந்த பத்து நிமிடம் கழியும் எப்போது அவனைச் சந்திக்கலாம் என காத்திருந்தவள் 15 நிமிடங்கள் கழிந்த பின் நேரே அவனுடைய அறையை நோக்கி சென்றுவிட்டாள்.
ஏதோ ஒரு வேகத்தில் வந்தவள் அப்படியே நின்று தயக்கத்தோடு அந்த அறைக் கதவைத் தட்ட “எஸ் கம் இன்..” என்ற கம்பீரமான அவனுடைய குரல் அவளை சிலிர்க்கச் செய்தது.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளைப் பார்த்து இதழ்கள் விரித்து சிரித்தவன்,
“சொல்லு அச்சு..” என்றான்.
“அது அது நேத்துல இருந்து உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்னு ட்ரை பண்றேன்”
“என்ன தேங்க்ஸ் சொல்ல வந்தியா..?”
“ஹ்ம்ம்..”
“சரி சொல்லு..” என்றவன் அவளை அணைப்பது போல தன்னுடைய கைகளை விரித்து விழிகளால் அவளை அருகே அழைக்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“என்ன ஹக் பண்ற மாதிரி நிக்கிறீங்க..” என அவள் அதிர்ந்து போய் கேட்க,
“லண்டன்ல நாங்க இப்படித்தான் தேங்க்ஸ் சொல்லுவோம்..” என்றவன் மேலும் கைகளை விரித்து இதழ்களில் சிரிப்போடு அவளை விழிகளால் அழைக்க அவளுக்கோ உள்ளமும் உடலும் பதறிவிட்டது.
💜💜💜
அடேய் அடேய் இது லண்டன் இல்லை. ஏண்டா அந்த பிள்ளையை பதற வைக்குற? சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🤩🤩🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️