11. காதலோ துளி விஷம்

4.7
(81)

விஷம் – 11

அதிர்ந்து சிலை போல நின்றுவிட்டவளை நெருங்கிய யாழவனோ “என்ன அச்சு தேங்க்ஸ் சொல்லலையா..?” எனச் சிரிப்போடு கேட்க,

“ஐயோ.. அங்கேயே நில்லுங்க.. பக்கத்துல வந்தா அவ்வளவுதான்..” என்றவள் இரண்டடி பின்னால் நகர்ந்து நிற்க,

புருவங்களைக் கேள்வியாக உயர்த்தினான் அவன்.

“எங்க ஊர்ல நாங்க இப்படியெல்லாம் தேங்க்ஸ் சொல்ல மாட்டோம்.. த.. தப்புத் தப்பா பேசுறீங்க..” என்றாள் அவள்.

“வாட் ஜஸ்ட் ஹக்ல என்ன இருக்கு..?” வியந்து போய் கேட்டான் அவன்.

“வாட்..? ஜெஸ்ட் ஹக்கா..? இங்க கைய புடிக்கிறதே தப்பு.. இதுல நீங்க கட்டிப்பிடிப்பீங்களா..?” என முறைத்தவள்,

“நீங்க பண்ண உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி..” என கையைக் கூப்பி அவனுக்கு நன்றியைத் தெரிவிக்க அவனிடமோ எந்த பதிலும் இல்லை.

அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்து விட்டது.

அவன் வட துருவம் என்றால் இவள் தென் துருவம்.

அவன் இதுவரை பழகிய பெண்கள் அனைவரும் அவன் “ம்ம்..” என்றால் படுக்கையில் அத்தனையையும் அவனுக்குக் கொடுக்க தயாராக இருப்பவர்கள் அல்லவா..?

இத்தனை வருடங்களில் அவன் இதுவரை எந்தப் பெண்ணாலும் நிராகரிக்கப்படவே இல்லை.

அவன் நிராகரித்த பெண்கள்தான் ஏராளம்.

இவள் என்னவென்றால் தூசி போல என்னைத் தட்டி விடுகின்றாளே.

ஒற்றை அணைப்பிற்கே என்னைக் கெஞ்ச வைப்பாள் போல இருக்கின்றதே.

இதில் அவள் மீது எனக்கு காதல் வந்துவிடக் கூடாது என பிரார்த்தனை வேறு வைக்கின்றாள்.

ஒருவேளை இந்தியப் பெண்களுக்குப் பிடித்தது போல நான் அழகாக இல்லையோ..?

லண்டனில் ஏராளமான பெண்களின் வசீகரனாய் இருந்த நான் இங்கே அழகற்றுத் தெரிகிறேனோ..?

சட்டென தன்னை ஒரு முறை குனிந்து பார்த்தான் அவன்.

படிக்கட்டுத் தேகம், ஆறடி உயரம், வெண்மையான நிறம் இது போதாதா..?

ஒருவேளை இந்தியப் பெண்களுக்கு கறுப்பான ஆண்களைத்தான் மிகவும் பிடிக்குமோ..?

‘ஓ காட்.. என்ன இவ்ளோ மோசமா திங்க் பண்றேன்.. அப்பீரியன்ஸ் மட்டும் அழகில்லையே..’ என எண்ணியவன் மீண்டும் அவளைப் பார்த்தான்.

இருவரின் குணங்களும் முற்றிலும் வேறுபட்டது என்பதை உணர்ந்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க அந்த ஆழ்ந்த பார்வையில் அவளுக்கோ நெஞ்சம் படபடத்தது.

“ஏ.. ஏன் அப்படிப் பாக்குறீங்க..?” திணறிப் போனவளாய் கேட்டாள் அவள்.

“நீ ரொம்ப வித்தியாசமா இருக்க..”

“நீ.. நீங்களும்தான்.” எனக் கூறியவளின் குரலோ நெகிழ்ந்து போயிருந்தது.

“உங்களை எனக்கு ஒரு நாள்தான் தெரியும்.. எனக்காக நீங்க எவ்வளவோ பண்ணிட்டீங்க.. என்ன காப்பாத்தினது மட்டுமில்லாம என்ன வீட்ல விட்டது, என்னோட பைக்கை கொண்டு வந்து விட்டது எனக்காக ட்ரெஸ் தச்சு எடுத்து வந்து கொடுத்தது இதெல்லாம் நான் உங்ககிட்ட இருந்து சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை.. இவ்வளவு ஹெல்ப் பண்ண உங்களுக்கு நான் என்ன கைமாறு பண்ணப் போறேன்னு தெரியல..”

“சிம்பிள்… எனக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுச்சுன்னா என்னோட கால்ல இருக்க காயத்துக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணி விடேன்.. உனக்கு வேலை இருந்தா வேணாம்.. வேற யாராவது நர்ஸ் இல்லன்னா டாக்டர வரச் சொல்லு..” என்றான் அவன்.

“இல்ல நானே பண்ணி விடுறேன்..” என்றவள் ட்ரெஸ்ஸிங் பண்ணுவதற்கான பொருட்களை எடுத்து வந்து அவனுடைய காலில் இருந்த காயத்தை சுத்தப்படுத்தத் தொடங்க அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அவள் மீது இருந்த ஈர்ப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அவள் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு அங்கிருந்த பாத்ரூமில் நுழைந்து தன்னுடைய கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு வர,

“நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..” என்றான் அவன்.

“என்ன சொல்லணும்..?”

“தேங்க்ஸ் சொல்லணும்…” என்றவன் இரண்டே எட்டில் அவளை நெருங்கி வந்து இறுக அணைத்து விடுவிக்க, அவளுக்கோ தேகம் வெடவெடத்துப் போனது.

உறைந்து விட்டாள் அவள்.

அவள் அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்ட விதத்தை கண்டு அவனுக்குத் திகைப்பாக இருந்தது.

“அச்சு…?” என அவன் சத்தமாக அழைக்க அதில் சுயம் வந்தவளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியவில்லை.

“நா… நான் கிளம்புறேன்..” என திக்கித் திணறி விட்டு வேகமாக வெளியேற முயன்றவளின் கரத்தை சட்டென பற்றிக் கொண்டவன்,

“உன் கூட வாழ்க்கை ஃபிக்ஸ் ஆனா சுவாரசியமா போகும்னு தோணுது… நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என அவன் கேட்டு விட அவளுடைய விழிகளோ சாஸர் போல விரிந்தன.

“கை.. கைய விடுங்க எ.. என்னைத் தொடக்கூடாது..” என அவள் படபடத்தவாறு எச்சரிக்க,

சட்டென அவளிடம் இருந்து தன்னுடைய கரங்களை விலக்கிக் கொண்டவன் பின்னால் நகர்ந்து நின்று தன்னுடைய இரு கரங்களையும் பாண்ட் பாக்கெட்டினுள் நுழைத்துக் கொண்டான்.

“ஓகே ஃபைன்… நான் உன் பக்கத்துலயே வரல.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டுப் போ.. கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என அவன் மீண்டும் கேட்க,

“இ… இப்படி திடீர்னு கேட்டா என்ன அர்த்தம்..?” என படபடத்தாள் அவள்.

“ஏன் பிடிச்சிருந்தா இந்தியால திடீர்னு கேட்க மாட்டாங்களா..? வெயிட் பண்ணி டைம் எடுத்துதான் கேட்பாங்களா..? என சந்தேகமாக அவன் கேட்க,

அவளுக்கு தன்னுடைய தலையை தன் எதிரே இருந்த சுவற்றில் மோதினால் என்ன என்று தோன்றியது.

“கல்யாணம் பத்தி எல்லாம் நான் யோசிக்கவே இல்ல..”

“இட்ஸ் ஓகே இன்னைக்கு யோசி..”

“இல்ல நீங்க புரியாம பேசுறீங்க…”

“வாட்.. நான் புரியாம பேசுறேனா..? நான் என்ன சின்னக் குழந்தையா..? கிட்டத்தட்ட 200 நாட்டோட பிஸ்னஸ் மேக்னட்ஸ்கூட டீல் பேசிட்டு இருக்கேன்.. அவங்களோட பார்வைய வெச்சே அவங்க மனசுல என்ன ஓடுதுன்னு என்னால கண்டுபிடிக்க முடியும்.. அப்படி இருக்கும்போது என்ன பாத்தா புரியாம பேசுறவன் மாதிரியா தெரியுது..?” என அழுத்தமாகக் கேட்க அவளுக்குத் திணறிவிட்டது.

“இ.. இதெல்லாம் எனக்கு புதுசு..” தயங்கினாள் அவள்.

“இவ்வளவு அழகான பொண்ணுக்கு இதுவரைக்கும் வேற எந்த ப்ரொபோசலும் வரலையா..?”

“நிறைய வந்திருக்கு.. ஆனா யார்கிட்டயும் இவ்வளவு நேரம் நின்னு நான் பேசினதே இல்லை..” என்றவள்

“நீங்க என்ன லவ் பண்றீங்களா..?” என தடுமாறியவாறு அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“லவ்…?!” என்றவன் பெரு மூச்சோடு அவளைப் பார்த்தான்.

“இது லவ்வா என்னன்னு எனக்குத் தெரியல.. யாரையாவது கல்யாணம் பண்ணிக்கனும்ல.. அது யாரோ ஒருத்தரா இருக்குறதவிட நீயா இருந்தா என்னோட வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும்னு தோணுது.. அதனாலதான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்..” என அவன் கூறியதும் அவளுக்குத் திகைப்பாக இருந்தது.

என்ன விதமான ப்ரொபோசல் இது..?

காதலா என்றால் தெரியவில்லை என்கிறானே.

சுவாரசியத்திற்காக திருமண வாழ்க்கை என்றால் இதை எப்படி ஏற்றுக்கொள்வது..?

தன்னுடைய எண்ணம் போகும் போக்கை எண்ணி அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அவள் எதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்..?

அவனை ஏற்றுக் கொள்வதற்காக காரணம் தேடுகின்றேனா..?

ஒருவேளை அவன் காதலிக்கிறேன் என்று கூறி இருந்தால் உடனடியாக ஆம் சொல்லி இருப்பேனோ..?

பதறி தன் மார்பில் கரத்தை வைத்தவள்,

“நா.. நான் போகணும்..” என்றாள்.

“ஷோர்… பட் நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு நீ தாராளமா போகலாம்..” என்றான் அந்த விடாக் கண்டன்.

“பதில் சொல்லலைன்னா இங்க இருந்து போக விட மாட்டீங்களா..?” என அவனை அழுத்தமாகப் பார்த்தாள் அவள்.

“கேள்வி கேட்டா பதில் சொல்றது தானே மேனர்ஸ்.. அதுக்கு பதில் சொல்லாம நீ பாட்டுக்கு போனா எனக்கு டென்ஷனா இருக்குமே..” என கைகளை விரித்தபடி கூறினான் அவன்.

மூச்சை ஆழமாக உள்ளே இழுத்தவள்,

“நீங்க காதலிக்கிறீங்களா இல்லையான்னு தெரியாம என்னால எப்படி உங்களோட கேள்விக்கு பதில் சொல்ல முடியும்..? உங்க வாழ்க்கை என் கூட இருந்தா சுவாரஸ்யமாக போகும்னு நீங் சொன்னதுக்காக மட்டும் எல்லாம் என்னால உங்களை வாழ்க்கத் துணையா ஏத்துக்க முடியாது..

எனக்கு வாழ்க்கைல சுவாரசியம் வேணாம்.. நிம்மதி வேணும்.. சந்தோஷம் வேணும்… புருஷன்னா எனக்காக மட்டும் வாழணும்.. நான் அவருக்காக வாழணும்.. அவருக்கு ஒன்னுனா நான் என் உயிரை கொடுக்கவும் தயங்க மாட்டேன்.. அதே மாதிரிதான் எனக்கு வரப்போறவரும் இருக்கணும்.. என்ன உள்ளைங்கைல வச்சு தாங்கணும்.. வாழ்க்கைல யாருக்கு துன்பம் வந்தாலும் மத்தவங்க அந்த துன்பத்தோடு சேர்த்து துணையையும் தாங்கிக்கணும்..

பணம் நகை மேல எல்லாம் எனக்கு ஆசையே இல்லை.. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆத்மார்த்தமா சந்தோஷமா நிறைவா வாழ்ற வாழ்க்கைதான் எனக்கு வேணும்..” என விழிகள் மின்னக் கூறியவளின் ஆசைகளைக் கேட்டு அதிர்ந்து விட்டான் அவன்.

“சோ என்ன ரிஜெக்ட் பண்றியா..?” கரகரப்பான குரலில் கேட்டான் அவன்.

“சாரி சார் நான் எதிர்பார்க்கிற மாதிரி நீங்க இருப்பீங்களான்னு எனக்குத் தெரியல.. அதனால என்னால உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது.. சுவாரஸ்யம் வேணும்னா உங்களுக்கு வேற பொண்ணுகிட்ட கூட இந்த சுவாரஸ்யம் கிடைக்கும்… என்னை விட்ருங்க சாரி..” என்றவள் அந்த அறையை விட்டு வெளியேறிவிட அவனுக்கோ அவன் கட்டி வைத்த பிம்பம் அத்தனையும் நொறுங்கி விழுந்தது போல இருந்தது.

ஒரு நொடியில் தூக்கி எறிந்து விட்டாளே.

அவன் எதிர்கொள்ளும் முதல் நிராகரிப்பு.

வலித்தது.

நான் அவளை சிறு துளி அளவேனும் கவரவே இல்லையா..?

மனம் உள்ளே புலம்பியது.

அதிலும் அவளுக்கு எப்படிப்பட்ட கணவன் வரவேண்டும் என அவள் கூறியதை எல்லாம் நினைத்து அவனுக்குத் திகைப்பாக இருந்தது.

இவள் எந்தக் காலத்தில் இருக்கிறாள்..?

உயிரைக் கொடுப்பதும் ஆத்மார்த்தமாக இருப்பதும் இந்த காலத்தில் சாத்தியமா என்ன..?

காலம் முழுக்க ஒருத்தியுடன் மட்டும் எப்படி வாழ முடியும்.?

மனக்கசப்புகள் வெறுப்புகள் வந்தால் விட்டு விலகி விடுவது தானே சரியானது.

காயத்தைக் கிளறிக் கிளறி ஒன்றாகவே இருக்க வேண்டும் என கட்டுப்பட்டு வாழ்வது எல்லாம் ஆயுட் சிறை போல அல்லவா..?

அவளை ட்ராமாட்டிக் பெர்சன் என எண்ணிக்கொண்டவனுக்கு மனதுக்குள் ஏதோ பிசைவதைப் போன்ற உணர்வு.

அவளுடைய நிராகரிப்பை அவ்வளவு எளிதாக அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அடுத்த நொடியே தன்னுடைய அன்னைக்கு அழைத்தவன்,

“மாம்.. நான் கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கேன்.. நல்லா இந்தியன் பொண்ணா பாருங்க..” என்றவன் அவர் பேசுவதைக் கூட கேட்காது அழைப்பைத் துண்டித்து விட்டு இறுகிப்போய் நின்றான்.

💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 81

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “11. காதலோ துளி விஷம்”

  1. அடடே. யாழவா ஆனாலும் உங்களுக்கு இத்தனை வேகம் கூடாது. எந்த இந்தியப் பெண்ணைப் பார்த்தாலும் கல்யாணம் பண்ணிருவீங்களா? முடியுமா உங்களால்? ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏😍😍😍😍😍🥰🥰🥰🥰🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!