13. காதலோ துளி விஷம்

4.6
(83)

விஷம் – 13

அன்று மாலை நேரத்திலேயே தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு விட்டாள் அர்ச்சனா.

அவளுடைய நேத்திரங்கள் வீதியில் பதிந்திருந்தாலும் கூட அவளுடைய எண்ணங்கள் முழுவதும் யாழவனையே சுற்றிக் கொண்டிருந்தன.

‘மூன்று நாட்களுக்கு முன்பு என்னைத்தானே திருமணம் செய்யக் கேட்டிருந்தான்..?

நான் மறுத்ததும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான் போலும்.’

ஏனோ கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.

கண்களைத் தாண்டி கண்ணீர் கன்னத்தில் வழிந்தே விட திகைத்து விட்டாள் அவள்.

வண்டியை வீதியின் ஓரமாக நிறுத்தி தன் கண்களை துடைத்துக் கொண்டவளுக்கு மனம் அதிரத்தான் செய்தது.

அவன் என்னைக் காதலிக்கிறேன். என்று கூறவே இல்லை நானும் அவனை காதலிக்கவில்லை பிறகு ஏன் இந்தக் கண்ணீர்..?

இதை இயல்பாகக் கடந்து செல்வது தானே சரியாக இருக்கும்.

இப்படி மனம் உடைந்து அழுவது நல்லதில்லையே குழம்பிப் போனாள் அவள்.

‘அவன் செய்த உதவியும் அவனுடைய இயல்பும் அவளை வெகுவாக கவர்ந்தது என்னவோ எஉண்மைதான்.

அதற்காக அவனை நினைத்து அழுவதா…? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்னுடைய இயல்பை தொலைத்துக் கொண்டிருக்கிறேனா..?’

தன்னைத்தானே மனதிற்குள் திட்டிக் கொண்டவள் மீண்டும் தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய அதுவோ ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்பதைப் போல வீதியோரத்தில் அப்படியே அடம்பிடித்தவாறு நின்றது.

‘ஓ மை காட் பெட்ரோல் போட மறந்துட்டேனே.. ஹாஸ்பிடல்ல இருந்து வரும்போதே போடணும்னு நினைச்சேன்.. பட் டென்ஷன்ல இத சுத்தமா மறந்துட்டேன்..’ எனத் தன் தலையில் அடித்துக் கொண்டவள் ‘இப்போ என்ன பண்றது..?’ என கைகளைப் பிசைந்தவாறு வீதியில் நிற்க,

அவள் அருகே கார் ஒன்று வேகமாக வந்து நின்றது.

யாரோ எவரோ என அவள் பதறி சற்றே பின்னால் நகர்ந்து மருண்ட விழிகளால் ஏறிட்டுப் பார்க்க யாழவனோ அவளைப் பார்த்தபடியே காரிலிருந்து இறங்கினான்.

யாழவனை அந்த நேரத்தில் அங்கே கண்டதும் அவளுக்கோ சிறு அதிர்ச்சி,

பெண் பார்ப்பதற்கு சென்றிருப்பதாக அல்லவா சார் கூறினார்.

இவன் என்னவென்றால் வாக்கிங் சென்று வந்ததைப் போல் அல்லவா இருக்கின்றான்.

ஒருவேளை பெண் பார்க்கும் படலம் முடிந்து விட்டதோ என்னவோ..?

சட்டென அவளுடைய மனதிற்குள் கலக்கம்.

திருமணம் நிச்சயமாகி இருக்குமோ..?

அவள் தனக்குள் சிந்தித்தவாறு அமைதியாய் நிற்க,

“ஹாய் அச்சு.. என்ன இங்க நிக்கிற ஏதாவது ப்ராப்ளமா..?” என சிநேகமாக சிரித்தபடி கேட்டவனுக்கு அவளுடைய மருண்ட விழிகளைப் பார்க்கப் பார்க்க மையலாக இருந்தது.

“அது வந்து…..”

“வாட் வந்து போயி என்ன ஆச்சுன்னு சொல்லு..” என்றான் சிரித்தபடியே,

“பெட்ரோல் காலி ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்..” என அவள் தயக்கமாக கூற,

“இதுக்குத்தானா இவ்வளவு டென்ஷன் கூல்..” என்றவன் காருக்குள் இருந்த ட்ரைவரை வெளியே அழைத்து அவளுடைய பைக்கை சுட்டிக் காட்டியவன்,

“பெட்ரோல் போட்டுட்டு நான் சொல்ற அட்ரஸ்ல இந்த பைக்கை விட்டுடு..” என அவன் கூற அவளுக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.

‘ஐயோ இவனிடம் எத்தனை உதவிகளைத்தான் பெறுவது..’ என அவள் அவசரமாக மறுக்க முற்பட,

“கமான் அச்சு.. எங்ககூட கார்ல வா நான் உன்னை ட்ராப் பண்றேன்.” என்றதும் காருக்குள் இருந்து கார் கண்ணாடியை இறக்கிய அவனுடைய அன்னையோ “அர்ச்சனா வாம்மா..” என அழைக்க அவளிடம் இருந்தோ பெருமூச்சு.

இனி மறுக்க முடியாது அல்லவா.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்..?”

“ஏய் இதுல என்ன சிரமம் இருக்கு..? கமான்…” என்றவன் அவளுக்காக காரின் பின் கதவைத் திறந்து விட தயக்கத்தோடு உள்ளே ஏறி அவனுடைய அன்னையின் அருகே அமர்ந்தவளுக்கு அப்போதுதான் அந்தக் காரின் முன்னிருக்கையில் அவனுடைய தந்தை இருப்பதும் தெரிந்தது.

அவள் வேலை செய்யும் மருத்துவமனையின் ஏக போக முதலாளி அல்லவா அவர்.

அவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்தவள் பின் தன்னை இயல்பாக்கிக் கொண்டு “குட் ஈவ்னிங் சார்..” என்றாள்.

“குட் ஈவினிங்..” என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டவருக்கோ உள்ளுக்குள் அத்தனை எரிச்சலாக இருந்தது.

‘லோ கிளாஸ் பீப்பிள்ஸ் கூட எல்லாம் எதுக்கு இவங்க பழகுறாங்க..?’ என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டவர் தன் ஃபோனை பார்த்தபடி அமைதியாகிவிட,

ட்ரைவர் இருந்த சீட்டில் வந்து அமர்ந்து கொண்ட யாழவனோ காரை வேகமாக செலுத்தத் தொடங்கினான்.

“எப்படிம்மா இருக்க..?” என அர்ச்சனாவிடம் நலம் விசாரித்தார் ரூபா.

“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க..?”

“இன்னைக்கு காலைல இருந்து கிட்டத்தட்ட என் புள்ள கூட செத்து செத்து விளையாடிகிட்டு இருக்கேன்மா..” என அவர் சிரித்தவாறு கூற,

“மாம்..” என அதட்டினான் யாழவன்.

அவர் சொன்ன விதத்தில் அர்ச்சனாவிற்கோ சிரிப்பு வந்துவிட்டது.

சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியவாறு “ஏன் ஆன்ட்டி..” எனக் கேட்டாள் அவள்.

“பின்ன என்னம்மா இவன் வயசுல பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு புள்ள குட்டி கூட சந்தோஷமா இருக்காங்க… இவன் என்னடான்னா கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லாம சுத்திக்கிட்டு இருக்கான்.. இன்னைக்கு இவனை பொண்ணு பார்க்க கூட்டிட்டு போறதுக்குள்ள என் உசுரே பாதி போயிருச்சு.. பொண்ணு பாக்க அவன் போட்டு வந்திருக்க ட்ரஸ்ஸ பாரேன் பீச்ல சுண்டல் விக்கிறவன் மாதிரி..” என ரூபாவதியோ தன்னுடைய மகனை கழுவி ஊற்றிக் கொண்டே போக யாழவனுக்கோ சங்கடமாக இருந்தது.

“மாம் ப்ளீஸ் ஸ்டாப் திஸ்..”

“பொம்பளைங்க நாங்க பேசிக்கிட்டு இருக்குறதுல நீ எதுக்கு நடுவுல வர்ற..? நீ ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு..” என்றவர் அர்ச்சனாவிடம் மீண்டும் பேசத் தொடங்கிவிட அவளுக்கோ இப்போது சிரிப்பு வரவில்லை.

நிஜமாகவே அவர்கள் பெண் பார்க்கும் படலத்திற்குத்தான் சென்று விட்டு வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து உள்ளே கலங்கிப் போனவள் போலியாக சிரித்தபடி அமர்ந்திருந்தாள்.

“அச்சு..” என யாழவன் அழைக்க பெற்றோரின் முன்பு இப்படி பெயரைச் சுருக்கி அழைக்க வேண்டுமா என அவளுக்கு சங்கடமாக இருந்தது.

ஆனால் அவனுடைய குணம் தான் தெரிந்ததாயிற்றே,

யாராய் இருந்தாலும் எந்த நொடியாக இருந்தாலும் அவன் அவனுடைய இயல்பிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்பதை அறிந்து கொண்டவள் “சொல்லுங்க..” என மென்மையான குரலில் கூற,

“முதல்ல நம்ம வீடு வர்றதால நம்ம வீட்டுக்குப் போய்ட்டு அதுக்கப்புறம் உன்னோட வீட்ல உன்னை விட்டுடுறேன்..” என அவன் கூற அவளுக்கும் அதுவே சரியாகப் பட்டது.

அவனுடைய தந்தையையும் அன்னையையும் வீட்டில் விட்ட பின் தன்னை தன்னுடைய வீட்டில் விடட்டும் என எண்ணிக் கொண்டவள் சரி என்றாள்.

சற்று நேரத்தில் யாழவனின் வீடு வந்து விட வேகமாக காரை விட்டு இறங்கி முன்னே நடந்து சென்று விட்டார் யாழவனின் தந்தை.

அவரின் பின்னே காரில் இருந்து இறங்கிய ரூபாவதியோ அர்ச்சனாவிடம் தலையை அசைத்து விடை பெற்று விட்டு அவருடைய கணவன் பின்னாலையே சென்று விட,

“உள்ள வா அச்சு.. நான் ட்ரெஸ் மாத்திட்டு வந்துடுறேன். எங்கம்மா இந்த ட்ரெஸ்ஸ இதோட வாக்கிங் டிரஸ் மாதிரி இருக்குன்னு கிட்டத்தட்ட நாலு தடவை சொல்லிக் காமிச்சிட்டாங்க.. இதுக்கப்புறமா நான் ஷாப்பிங் வேற போகணும்.. இப்படிப் போகவே ஒரு மாதிரியா இருக்கு..” என அவன் கூறியதும் அவனை ஆழ்ந்து பார்த்தவள்

“உங்களுக்கு எது புடிச்சிருக்கோ அதையே போடுங்க.. நீங்க நீங்களா இருக்கறதுதான் அழகு..” என அவள் சிரித்தபடியே கூற அந்த வார்த்தைகளில் ஒரு நொடி உறைந்து விட்டான் அவன்.

நிஜத்தைக் கூற வேண்டும் என்றால் ஆடையை மாற்ற வேண்டும் என்பதெல்லாம் அவனுடைய எண்ணமே கிடையாது. யாருடைய எண்ணங்களையும் அவன் தன் மேல் திணித்துக் கொள்ளவே மாட்டான்.

ஆடை மாற்ற வேண்டும் எனக்கூறி அர்ச்சனாவை உள்ளே அழைத்துச் சென்றால் இன்னும் சற்று நேரம் அவளுடன் நேரம் செலவழிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் தன் தாயின் மீது பழியைப் போட்டு ஆடையை மாற்ற வேண்டும் என பொய்யாக ஒரு காரணத்தை உருவாக்கினான் அவன்.

ஆனால் அவளும் அவன் நினைப்பதைப் போலவே கூறி விட அவனுக்கு உள்ளுக்குள் ஒரு விதமான பரவசம்.

“பரவால்லையே உனக்கு இந்த ட்ரஸ் பிடிச்சிருக்கு போல..?”

“நான் பார்க்கும் போதும் இது வாக்கிங் ட்ரஸ் மாதிரிதான் இருந்துச்சு..” என அவள் சட்டென கூறி விட தன் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டவன் “நோ வேர்ட்ஸ் டு சே..” என்றான் சிரித்தபடி,

“சரி உள்ள வா ஷுவாவது மாத்திடுறேன்..” என்றவன் அவளை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அழைக்க அவளோ மறுக்க முடியாது அவனுடன் சென்றாள்.

அந்தப் பெரிய வீட்டில் வேலை ஆட்களைத் தவிர யாரையும் காணவில்லை.

“உங்க அம்மாவை காணலையே..?”

“டாட் வீட்ல இருக்காருல்ல.. அவர் போகும் வரைக்கும் அம்மா அவர்கூட தான் இருப்பாங்க.. இங்கேயே ஏன் நின்னுட்ட..? வா நம்ம ரூமுக்குப் போகலாம்..” என்றவன் இயல்பாக அவளை அழைத்தபடி படிகளில் ஏற அவன் நம்ம ரூம் என்று கூறியதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

‘இவன் தெரிந்து பேசுகின்றானா..? தெரியாமல் பேசுகின்றானா..?’

இத்தோடு இரண்டாவது முறையாக அவனுடைய அறைக்குள் செல்கின்றாள்.

மீண்டும் அவளுக்குள் ஒரு விதமான படபடப்பு.

முடிந்த அளவு இவனிடமிருந்து இனி விலகியே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது அவளுடைய மூளை.

மூளை கூறுவதையெல்லாம் அப்படியே கேட்க விட்டுவிடுமா இந்த மனது.

அவளோ தன்னுடைய மூளைக்கும் மனதிற்கும் இடையிலான எண்ணங்களின் இடர்பாடுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க யாழவனோ தன்னுடைய ஷூவை கழற்றியவன் தான் அணிந்திருந்த டி-ஷர்டையும் கழற்றியவாறு அவளிடம் எதையோ கேட்க அவனைப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

‘ஆத்தி இப்போ எதுக்கு இவன் என் முன்னாடி எல்லா ட்ரெஸ்ஸையும் ரிமூவ் பண்றான்..?’ என பதற்றத்தோடு எண்ணிக் கொண்டவளின் இதயமோ வாய்க்குள் வந்து துடிக்கத் தொடங்கியது.

💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 83

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “13. காதலோ துளி விஷம்”

  1. அடேய் யாழவா ஒரு வயசுப் பிள்ளையை கூட வச்சு கிட்டு ஏன்டா அவளை பதற வைக்குற? பாவம் டா அந்த பிள்ளை. பயந்து போய் கிடக்கு. ஆவலாக வெயிட்டிங் அடுத்த பதிவிற்காக.👌👌👌👌👌👏👏👏👏👏😍😍😍🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!