விஷம் – 15
யாழவனின் நெஞ்சம் வெகுவாக நெகிழ்ந்து போயிருந்தது.
அர்ச்சனா என்றால் அவனுக்கு சும்மாவே பிடிக்கும்.
இன்று அவள் அவனுக்காக துடித்ததைப் பார்த்ததும் அவனுக்கோ உயிர் உருகி வழிந்தே விட்டது.
அந்த நொடியே அவளை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் எழுந்து விட அடுத்த கணம் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அவளை அணைத்ததோடு மட்டுமின்றி அவளுடைய மென்மையான சிவந்த இதழ்களில் தன்னுடைய உதடுகளையும் அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.
கட்டி அணைப்பதற்கே பதறிப் போய்விடுபவள் இழுத்து அணைத்து அழுத்தமான முத்தத்தை அவளுடைய இதழ்களில் கொடுத்தால் அதை எங்கனம் தாங்கிக் கொள்வாள்..?
அவளுக்கோ உடல் உதறவே தொடங்கி விட்டது.
அதீத அதிர்ச்சியில் அவள் அப்படியே மயங்கிச் சரிய அவளுடைய உதடுகளைக் கவ்விச் சுவைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவளுடைய உடல் தளர்ந்து சரிவதைக் கண்டதும் உள்ளம் அதிர்ந்தது.
சட்டென அவளை விட்டு விலகி அவளுடைய நிலையைப் பார்த்தவன் அவள் மயங்கி விட்டாள் என்பதை உணர்ந்ததும் பதறிப் போய்விட்டான்.
“ஹேய் அச்சு பேபி… என்னடி..?” என அவளுடைய கன்னத்தை மென்மையாகத் தட்டி அவளை எழுப்பியவன் அவள் கண்களைத் திறவாது போக,
காருக்குள் இருந்த நீர்ப் போத்தலை எடுத்து தண்ணீரை அவளுடைய முகத்தில் தெளிக்க மெல்ல விழிகளைத் திறந்தாள் அர்ச்சனா.
மயக்கம் தெளிந்ததும் சற்று முன்னர் நடந்த முத்த சம்பவம் அவளுடைய நினைவுக்கு வந்துவிட அவளுக்கோ உதடுகள் அழுகையில் துடித்தன.
அவனைப் பார்த்துப் பதறி கார் இருக்கையோடு அவள் ஒன்றிக்கொள்ள தன்னுடைய இரு கைகளையும் மேலே தூக்கியவன்,
“பேபி ரிலாக்ஸ் ரிலாக்ஸ்… ஈஸி.. நான் உன் பக்கத்துலயே வரமாட்டேன்.. நீ டென்ஷன் ஆகாத..” என இவன் பதற அவளுக்கோ முகம் முழுவதும் குங்குமம் போல சிவந்து விட்டிருந்தது.
தன்னுடைய முகச் சிவப்பை மிக சிரமப்பட்டு அடக்கியவள் அடுத்த கணம் ஓவென அழ ஆரம்பித்து விட மீண்டும் அதிர்ந்து விட்டான் அவன்.
“ஹேய் அச்சு…..?
பேபி…?
அடியேய்… இப்போ எதுக்குடி அழுற..?”
“உ.. உங்க நோக்கமே சரியில்ல.. என்ன இழுத்து ஹக் பண்றீங்க.. இங்கே எல்லாம் கிஸ் பண்றீங்க.. போ.. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன்..” என மிரட்டியவள் மீண்டும் வாய் விட்டு அழ அவனுக்கோ ஐயோ வென்றாகிப் போனது.
ஒற்றை முத்தத்துக்கு மயங்கி விழுந்ததும் அல்லாமல் கற்பழித்தது போல அல்லவா கதறி அழுகிறாள்.
“ஹேய் ஹேய்.. அழாதடி.. இனி இப்படி பண்ண மாட்டேன்..”
“உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டயே இப்படி நடந்துப்பீங்க.. இன்னொரு பொண்ண வேற பொண்ணு பாத்துட்டு வந்து என்கிட்டயே இப்படி நடந்துக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..?” என மூக்கை உறிஞ்சியவாறே அவனைப் பார்த்து அவள் திட்ட,
“தெய்வமே ஐ லவ் யூ… உன்னத் தவிர வேற எந்தப் பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எனக்கு சுத்தமா கிடையாது.. அம்மா கூப்பிட்டதால பொண்ணு பாக்க போனேன்.. அப்பவே அந்த பொண்ணுகிட்ட பிடிக்கலைன்னும் சொல்லிட்டேன்.. எனக்கு உன்னத்தான்மா பிடிச்சிருக்கு.. பிடிச்ச பொண்ணுக்கு கிஸ் பண்றது தப்பா..? ஒத்த கிஸ்ஸுக்கே இப்படி மயங்கி விழுந்தா மிச்சதெல்லாம் நான் எப்படி பண்ணுவேன்..?” என அவஸ்தையாக கைகளை விரித்தவாறு அவன் கேட்க அவளோ அசைவற்று அவனைப் பார்த்தபடி இருந்தாள்.
இப்போது என்ன சொன்னான்…?
ஐ லவ் யூ என்றுதானே சொன்னான்..
காதலை சொல்லி விட்டானா..?
அவளால் நம்ப முடியவில்லை.
அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன.
“இப்போ என்ன ஆச்சுடி..?”
“எ.. என்ன டி போட்டு பேசுறீங்க..?” மீண்டும் அதிர்ந்தாள் பெண்ணவள்.
“எப்படி வேணும்னாலும் பேசுவேன்.. எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ஃப்… இதுவரைக்கும் யார்கிட்டயும் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு நான் கெஞ்சினதே கிடையாது. ஃபர்ஸ்ட் டைம் உன்கிட்ட ரிக்வஸ்ட் பண்ணிக் கேக்குறேன்.. தயவு செஞ்சு என்னை கல்யாணம் பண்ணிக்கோ..” என அவன் கூற அவளுடைய மார்புக் கூட்டினுள் இதயம் படபடக்கத் தொடங்கிவிட்டது.
மீண்டும் கன்னங்கள் சிவந்து விட அவனைப் பார்க்காது தன்னுடைய பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டவளுக்கு உள்ளம் முழுவதும் மத்தாப்பூ.
அவன் இன்னொரு பெண்ணை பெண் பார்க்க சென்றிருக்கிறான் என்று தெரிந்ததும் அவளுக்கு உள்ளம் வலித்ததே.
கண்ணீர் வேறு வந்ததல்லவா..?
மனதுக்குள் அவ்வளவு பிடித்தம் இருந்தும் அதை வெளிப்படையாக சொல்ல அவளுக்கோ சற்று தயக்கமாக இருந்தது.
அவனைப் போல அவளால் அவ்வளவு இயல்பாக இருக்க முடியவில்லை.
கரங்கள் வேறு நடுங்கிக் கொண்டிருந்தன.
இதில் அவன் கொடுத்த முத்தத்தின் குறுகுறுப்பு வேறு அவளுடைய உதடுகளில் இன்னும் இருக்க அவள் அவளாகவே இல்லை.
வயிற்றுக்குள் வேறு பட்டாம்பூச்சி சிறகடித்து விளையாடிக் கொண்டிருந்தது.
தன்னுடைய கால் பெருவிரலை காருக்குள் அழுத்தியபடி அமர்ந்திருந்தவள் அமைதியை மட்டுமே கடைப்பிடித்துக் கொண்டிருக்க,
“இன்னும் என்ன பிடிக்கலைன்னு பொய் சொல்லப் போறியா..?” என அழுத்தமாகக் கேட்டான் அவன்.
அப்போதும் அவளிடம் அமைதி மட்டுமே.
அவனுக்கோ பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காணாமற் போகத் தொடங்கியது.
“அர்ச்சனா லுக் அட் மீ..” அழுத்தமாகக் கூறினான் அவன்.
தயங்கியவாறு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“எதுக்கு இப்போ இவ்வளவு நெர்வஸ் ஆகுற..? நான் என்ன சிங்கமா புலியா..? நான் உன்னோட யாழின்டி.. ரிலாக்ஸா இரு..” என்றான் அவன்.
“ரிலாக்ஸா இரு ரிலாக்ஸா இருன்னா எப்படி ரிலாக்ஸா இருக்க முடியும்..? இதெல்லாம் எனக்குப் புதுசு.. எந்த ஆம்பளைங்க கிட்டயும் நான் இந்த அளவுக்கு தனியா பேசினது கூட இல்ல.. திடீர்னு ஹக் பண்றீங்க.. திடீர்னு கிஸ் பண்றீங்க… லவ் பண்றேன்னு சொல்றீங்க… எனக்கு பயந்து வருது… உடம்பெல்லாம் படபடப்பா இருக்கு.. பயமா இருக்கு யாழன்… என்னால ஈஸியா இதை எதையும் எடுத்துக்க முடியல..” என அவள் தடுமாறியவாறு கூற அவனுக்கோ மீண்டும் நெகிழ்வு.
மலரைப் போல மென்மையானவள் பெண் என எங்கோ கேள்விப்பட்டதன் அர்த்தம் இன்று புரிந்தது அவனுக்கு.
“பேபி..?”
“ம்ம்…?”
“மே ஐ டச் யோர் ஹேண்ட்..?” என அவன் அனுமதி கேட்க ஒரு கணம் அமைதியாக இருந்தவள் பின் பெருமூச்சோடு சரியென தலை அசைத்தாள்.
மெல்ல அவளுடைய கரத்தை பூவை ஏந்திக் கொள்வது போல தன்னுடைய கரத்தில் ஏந்திக் கொண்டவன்,
“எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு அச்சுமா… நான் ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கேன்னு எனக்குப் புரியுது.. நீ நினைக்கிற மாதிரி லவ் சொல்றதுக்கு ஒரு நாள், உன்னை ஹக் பண்றதுக்கு ஒரு நாள், கிஸ் பண்றதுக்கு இன்னொரு நாள்னு என்னால வெயிட் பண்ண எல்லாம் முடியாது பேபி..
பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லிடுவேன்.. கல்யாணம் பண்ணிக்கத் தோணினா கல்யாணம் பண்ணுவேன்.. நீ சம்மதிச்சா நாளைக்கு கூட உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்.. நான் இப்படித்தான்.. அப்புறம் சொல்லலாம் அப்புறம் பண்ணலாம் இதெல்லாம் எனக்குத் தெரியாது.. இப்ப கூட உனக்கு புரியனும்னுதான் இவ்வளவு பொறுமையா எடுத்து சொல்றேன்.. நான் யார்கிட்டயும் இப்படி பேசினதே இல்ல அர்ச்சனா..
உன்ன எந்த காரணத்துக்காகவும் இழக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. எங்க அம்மான்னா எனக்கு உசுரு.. எனக்காக அவங்க உயிரையும் கொடுப்பாங்க.. அவங்களுக்கு அப்புறமா என்ன அன்பா பார்த்த பொண்ணுன்னா அது நீ மட்டும்தான்… உன்கிட்ட மட்டும்தான் அந்த பாசத்தை நான் ஃபீல் பண்றேன்.. எனக்காக நீ துடிச்சதெல்லாம் சீரியஸ்லி நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல..
இவ்வளவு நாளும் உன்னோட அழகு பிடிச்சுது… உன் கேரக்டர் பிடிச்சுது.. இப்போ உன்னோட அன்பு பிடிக்குது.. இந்த அன்பு எனக்கு மட்டும்தான் வேணும்னு தோணுது..” என அவன் காரணங்களை அடுக்கிக் கொண்டே போக அவளுக்கு விழிகள் கலங்கியே விட்டன.
“ப்ச் டோன்ட் க்ரை பேபி.. ஏதாவது சொல்லு.. என்ன உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு எனக்குத் தெரியும்.. பட் எதுக்காகத் தயங்குற..?”
அதற்கு மேல் அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.
தன்னுடைய கரங்கள் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைப் பார்த்தவள் மெல்ல அவனுடைய விழிகளை நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் ஆசைப்பட்ட மாதிரியே நீங்க இருக்கீங்க.. எனக்கும் உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா சில விஷயங்கள் நமக்குள்ள ஒத்து வருமான்னு தெரியலை..” என்றாள் அவள்.
“என்னடி..? என்றான் அவன்.
மிகவும் உரிமையாகப் பேசும் அவனுடைய பேச்சில் அவளுக்குத்தான் தடுமாற்றமாக இருந்தது.
“உங்க ஸ்டேட்டஸ் வேற என்னோட ஸ்டேட்டஸ் வேற.. நான் சாதாரண மிடில் கிளாஸ் பொண்ணு.. உங்க ஹாஸ்பிடல்ல வேலை செய்ற சாதாரண நர்ஸ்.. உங்க வீட்ல என்னை ஏத்துப்பாங்களா..? உங்கள மாதிரி எங்ககிட்ட பணம்லாம் கிடையாது..”
“ஷட் அப் அச்சு.. பணம்லாம் ஒரு விஷயமே கிடையாது.. என் பேரன்ட்ஸ் என்னோட விருப்பத்துக்கு மட்டும்தான் மதிப்புக் கொடுப்பாங்க.. வேற ஏதாவது காரணம் இருந்தா சொல்லு..” என்றான் அவன்.
“ஓஹ்.. எங்க அம்மாவை நினைச்சுத்தான் கொஞ்சம் சங்கடமா இருக்கு யாழன்.. அவங்க இத எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல.. என் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தாங்க.. இப்போ திடீர்னு உங்கள பத்தி எப்படி சொல்றதுன்னு தெரியல..” அவளுடைய குரல் வருத்தத்தை வெளிப்படுத்தியது.
“இவ்வளவுதான் மேட்டரா..? நோ வொர்ரீஸ்… உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ல..?”
“ம்ம்…”
“ஓகே மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்..” என்றவன் அவளுடைய கரத்தை அழுத்திப் பிடித்து தன் மார்பில் பதித்துக் கொள்ள பதறி தன்னுடைய கரத்தை அவனிடம் இருந்து உருவி எடுத்துக் கொண்டவள்,
“இதோ பாருங்க.. நீங்க என்னோட வருங்கால கணவரா இருந்தாலும் இப்படி ஹக் பண்றது கிஸ் பண்றது எல்லாம் ரொம்ப தப்பு.. இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்..” என அவள் அவனுக்கு விதிமுறைகளை விதிக்க அவளை வியந்து பார்த்தவன்,
“ஒத்த கிஸ்ல மயங்கி விழுந்த பாத்தியா இன்னும் அந்த ஷாக்ல இருந்தே நான் வெளிய வரலடி.. இப்போதைக்கு பக்கத்துல வர மாட்டேன் பயப்படாத..” என்றான் சிரித்தபடி.
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.
இதுவரை அவனுடைய முன்னாள் காதலிகளில் உணராத ஒரு விதமான உணர்வை அர்ச்சனாவிடம் உணர்ந்து கொண்டான் அவன்.
இவளிடம் மட்டும் எத்தனை முறை வேண்டும் என்றாலும் கெஞ்சலாம் போலத் தோன்றியது.
அவளுடைய கைப்பிடித்து நீண்ட தூரம் நடக்க வேண்டும் போல இருந்தது.
இப்படியே எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் இவளுடன் மட்டும் பேசிக் கொண்டிருக்கலாம் போல இருந்தது.
அவனுக்கு அனைத்தும் விசித்திரமாகத்தான் இருந்தது.
“யாழன் இப்பவாவது நம்ம வீட்டுக்குப் போகலாமா..?” என அவள் தயங்கிக் கேட்க,
“போகலாமே…” என்றவன்,
“அப்போ கல்யாணம் வரைக்கும் கிஸ் பண்ண விட மாட்டியா..?” எனக் கேட்டான்.
அவனுடைய கேள்வியில் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“உங்கள கொன்னுடுவேன்.. மரியாதையா காரை ஸ்டார்ட் பண்ணுங்க..” என அவள் மிரட்ட முகத்தை சுருக்கி வைத்தவாறே காரை செலுத்தத் தொடங்கினான் அவன்.
அவளுக்கோ ஆகாயத்தில் மிதப்பது போன்ற உணர்வு.
கன்னங்களில் வெட்கம் சிவப்பாக குடியேறி இருந்தது.
“பேபி..?”
“ம்ம்…?”
“அட்லீஸ்ட் கையை மட்டுமாவது பிடிச்சிக்கிறேனே ப்ளீஸ்..” என்றவன் அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பிடித்து தன்னுடைய தொடையில் வைத்தவாறு காரை செலுத்தத் தொடங்க அவளோ இன்னும் சிவந்து போனவளாக தன் தலையைக் குனிந்து கொண்டாள்.
எதிரெதிர் துருவங்களுக்கு இடையே அழகாக காதல் மலர்ந்தது.
💜💜