சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 36 ❤️❤️💞

4.6
(17)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 36

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

அன்று காலை எழுந்தவுடன் ஷாலினி வீட்டுக்கு படையெடுத்தார்கள் நடராஜனும் மேகலாவும்.. அழைப்பு மணி சத்தம் கேட்டு அவர்கள் வீட்டில் வேலை செய்யும் அன்னம்மா தான் வந்து கதவை திறந்தார்..

கையில் பூப்பழம் நிறைந்த தட்டோடு அவர்கள் நிற்பதை பார்த்த அன்னம்மாவுக்கு குழப்பமாக இருந்தது..

“இவங்களை இதுக்கு முன்னாடி இந்த வீட்ல பார்த்ததே இல்லையே.. யார் இவங்க..?” என்று யோசித்தவர் “நீங்க யாரு..? உங்களுக்கு யாரை பாக்கணும்..?” என்று கேட்டார் அவர்களை..

“என் பேரு நடராஜன்.. இவ என் மனைவி மேகலா.. நாங்க சுந்தரோட சித்தப்பா சித்தி .. ரவிக்குமார் சாரை ஒரு முக்கியமான விஷயமா பாக்கணும்..” என்று அவர் கூற “நீங்க சுந்தர் தம்பியோட சித்தப்பா சித்தியா? உள்ள வாங்க.. உள்ள வாங்க..” என்று சொல்லி அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து வந்து வரவேற்பறையில் இருந்த சோஃபாவில் அமர வைத்த அன்னம்மா உள்ளே சென்று ஷாலினியின் அப்பா ரவிக்குமாரை அழைத்து வந்தார்..

அங்கே வந்த ரவிக்குமார் “வாங்க வாங்க..” என்று அவர்களை வரவேற்க அவர்கள் சோஃபாவில் இருந்து மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க “உக்காருங்க.. ப்ளீஸ்..” என்றவர் ” அவங்க சாப்பிடறதுக்கு ஏதாவது கொண்டு வந்து கொடுங்க..” என்று அன்னம்மாவின் பக்கம் திரும்பி சொல்லிவிட்டு அவரும் ஒரு கதிரையில் அமர்ந்தார்..

“நீங்க சுந்தரோட சித்தப்பா சித்தினு அன்னம்மா சொன்னாங்க.. சுந்தர் அந்த பேட்டியில உங்களை பத்தி சொல்றதை நான் கேட்டு இருக்கேன்.. ஆனா இப்போ நீங்க எதுக்கு என்னை பார்க்க வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியல.. ஆனா உங்களை மீட் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோஷம்.. இப்போ நீங்க ரெண்டு பேரும் சுந்தரோட தான் இருக்கீங்களா?” என்று கேட்டார் ரவிக்குமார்..

“ஆமா சார்.. அவனை நான் எவ்வளவோ கொடுமை பண்ணி இருக்கேன்.. ஆனா அதையெல்லாம் அவன் வாழ்க்கை தனக்கு கத்துக்கொடுத்த ஒரு பாடமா தான் எடுத்துக்கிட்டான்.. இப்போ தன்னோட உழைப்பில இவ்வளவு முன்னேறி மேல வந்திருக்கான்.. அவ்வளவு கொடுமை பண்ண என்னையும் அந்த வீட்டில சேர்த்துக்கிட்டு எங்களை அப்பா அம்மானு தான் கூப்பிடறான்.. அவன் மனசு யாருக்கும் வராது சார்.. தங்கமான பையன்..”  பெருமை ததும்ப சொன்னார் நடராஜன்..

“அதுல எந்த சந்தேகமும் இல்லை சார்… அவரை மாதிரி ஒருத்தரை பார்க்கிறது ரொம்ப கஷ்டம்.. வாழ்க்கையோட அடி மட்டத்தில இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்து இருக்காரு.. நீங்க கொடுக்கற இந்த சர்டிஃபிகேட்டை இதோ இங்கே வேலை செய்றாங்களே எங்க வீட்ல அன்னம்மா அவங்க கூட கொடுப்பாங்க.. இத்தனைக்கும் ஒரே ஒரு நாள் தான் சுந்தரை மீட் பண்ணாங்க.. அப்படி ஒரு புள்ள சார் அவரு.. நான் கூட இத்தனை நாளா அவரு இப்படி தனியா இருக்காரேனு ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தேன்.. உங்களை மாதிரி பெரியவங்க அவரோட இருக்கிறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..”  சுந்தரை புகழ்ந்து கொண்டே இருந்தார் ரவிக்குமார்..

அவர் பேசியதை கேட்டு தாங்கள் வந்த வேலை எளிதாக முடிந்து விடும் என்று சிறிது நிம்மதி ஏற்பட்டது நடராஜனுக்கும் மேகலாவுக்கும்..

அன்னம்மா அவர்களுக்கு பழச்சாறு எடுத்து வந்து கொடுக்க அதை பருகியபடியே நடராஜன் தான் பேச்சை ஆரம்பித்தார்..

“அப்பறம் நாங்க இப்ப எதுக்கு வந்திருக்கோம்னா..” என்று ஒரு நொடி பேச்சை நிறுத்தியவர் பிறகு சிறிது தயக்கத்துடன் “சுந்தரும் ஷாலினியும் ஒருத்தரை ஒருத்தர விரும்புறாங்க.. ஆனா ஷாலினி உங்ககிட்ட இது பத்தி சொன்னாங்களான்னு எங்களுக்கு தெரியாது.. ஆனா சுந்தர் ஷாலினியை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப தீர்மானமா இருக்கான்.. அதனால உங்க கிட்ட அவங்களுக்கு கல்யாணம் பண்றது பத்தி பேசி சம்மதம் வாங்கலாம்னு வந்தோம்.. உங்களுக்கு ஷாலினியை சுந்தருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறதுல சம்மதமா?” கேட்டுவிட்டு ஆவலோடு அவர் பதிலுக்காக அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் நடராஜன்..

அவர் எதிர்பார்த்தபடி ரவிக்குமாரின் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது.. ஆனால் இன்னொருவர் முகத்தில் அப்பட்டமாக வருத்தம் நிலை கொண்டது.. அது வேறு யாருமில்லை.. அன்னம்மா தான்.. அவருக்குத்தான் ஷாலினி மாதேஷூடன் போடும் அத்தனை ஆட்டமும் தெரியுமே.. எவ்வளவு நாள் அந்த வீட்டில் ரவிக்குமார் இல்லாத சமயங்களில் ஷாலினியும் மாதேஷும் கொஞ்சி குலாவிக்கொண்டு இருந்ததை அவர் பார்த்திருக்கிறார்..!!

“ஐயோ.. இந்த தங்கமான புள்ளைக்கு போய் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறாங்களே.. இவங்க என்ன..? ஷாலினி அம்மாவும் அவரை விரும்பறதா சொல்றாங்க.. அவங்க அந்த‌ மாதேஷ் ஐயாவை தானே விரும்பிக்கிட்டு இருக்காங்க.. கடவுளே‌‌… இந்த பொண்ணால அந்த சுந்தர் தம்பி  வாழ்க்கை கெட்டு போயிடுமே.. இப்ப இதை சொன்னா நமக்கு இங்கே இருக்கிற இந்த வேலை போயிடும்.. ஆனா அதுக்காக சொல்லாமயும் இருக்க முடியல.. என்ன செய்யலாம்..?” என்று யோசித்துக் கொண்டே கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தார் அன்னம்மா..

ஆனால் இதற்கு நேர் மாறாக ரவிக்குமாரோ “சுந்தரை விட நல்ல மாப்பிள்ளை எனக்கு எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாரு.. நீங்க வரலைன்னா இன்னும் கொஞ்ச நாள்ல நானே என் பொண்ணுக்கு சுந்தரை மாப்பிள்ளையா கேட்டு சம்பந்தம் பேச உங்க வீட்டுக்கு வந்து இருப்பேன்.. எனக்கு இதுல பூரண சம்மதம்.. ரொம்ப சந்தோஷமும் கூட..” என்றார்..

“அப்படின்னா நீங்க ஒத்துக்கிட்டதுக்கு அச்சாரமா  இப்பவே இந்த தாம்பூல தட்டை நீங்க வாங்கிக்கணும்.. கூடிய சீக்கிரம் நிச்சயத்துக்கும் ஏற்பாடு பண்ணிடலாம்..” என்றார் நடராஜன்..

“ஒரு நிமிஷம்.. இப்பவே நானும் உங்களோட தட்டு மாத்திக்கிறேன்..” என்றவர் “அன்னம்மா.. ஒரு தட்டுல வெத்தலை பாக்கு பூ பழம் எல்லாம் வெச்சி எடுத்துட்டு வாங்க” என்றார் அன்னம்மாவிடம்..

அன்னம்மா உள்ளே சென்று ஒரு தட்டில் எல்லாவற்றையும் வைத்து எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க இரு பெரிய மனிதர்களும் தட்டை மாற்றிக் கொண்டார்கள்..

தாங்கள் வந்த வேலை நல்ல படியாக முடிந்தது என்ற சந்தோஷத்தோடு அமர்ந்திருந்தார்கள் நடராஜனும் மேகலாவும்.. “ஆமா.. ஷாலினி இல்லையா?” என்று மேகலா கேட்க அன்னம்மா “சின்னம்மா கார்மெண்ட்ஸ்க்கு தான் போய் இருக்காங்க” என்று சொன்னார்..

“அப்ப சரி சம்மந்தி.. நீங்களே ஷாலினிக்கு சர்ப்ரைஸா இந்த விஷயத்தை இன்னைக்கு சாயந்திரம் அவ கார்மெண்ட்ஸ்ல இருந்து வந்த உடனே சொல்லிருங்க.. நாங்க சுந்தர் கிட்ட சொல்லிட்டு தான் வந்தோம்.. இப்போ நீங்க ஒத்துக்கிட்டீங்கன்னு போய் சொன்னா அவனும் ரொம்ப சந்தோஷப்படுவான்..” என்று சொன்ன நடராஜன் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கே இருந்து மேகலாவோடு கிளம்பினார்..

###############

சுந்தரி முந்தைய நாள் நாளிதழில் விற்பனை செய்ய வேலை காலியாக இருப்பதாக விளம்பரம் வந்திருந்த நாளிதழை கையில் வைத்துக் கொண்டு அந்த வீதிக்குள் நுழைந்தவள் அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்த கடையை தேடிக்கொண்டு சென்று கொண்டிருந்தாள்..

அந்தக் கடை வந்தவுடன் அதன் பெயர் பலகையையும் நாளிதழையும் ஒப்பிட்டு பார்த்து அதுதான் தான் தேடி வந்த இடம் என உணர்ந்தவள் மெதுவாக கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்..

அது பெரிய துணிக்கடையாக இருந்தது அங்கே கல்லாவில் ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி அமர்ந்து கொண்டு இருந்தார்..

சுந்தரி உள்ளே நுழைந்தவுடன் அவளைப் பார்த்து “வாங்கம்மா.. உங்களுக்கு என்ன வேணும்? சுடிதாரா..? சல்வாரா..? சாரியா? என்ன வேணும்மா?” என்று கேட்க சுந்தரியோ “இல்லம்மா.. நான் இங்க துணி வாங்க வரல.. வேலை கேட்டு வந்தேன்.. இங்க சேல்ஸ் கர்ல் வேலை காலியா இருக்குன்னு நியூஸ் பேப்பர்ல பார்த்தேன்.. அதான்..” என்று அவள் இழுக்க “ஓ அப்படியா..? இதுக்கு முன்னாடி உனக்கு இந்த மாதிரி வேலை செஞ்ச அனுபவம் இருக்காமா?” என்று கேட்டார் அவர்..

” சேல்ஸ் கர்ல் வேலை செஞ்ச அனுபவம் இல்ல.. ஆனா ஒரு கார்மெண்ட்ஸ்ல துணி தெச்சிக்கிட்டு இருந்தேன்.. அதனால டிசைன்ஸ் பத்தி எல்லாம் ஓரளவுக்கு தெரியும்” என்றாள் சுந்தரி..

“சரி மா..  ஒரு நிமிஷம் இரு.. கலா இங்கே வாம்மா” என்று கடையின் உள்பக்கம் பார்த்து அழைத்தார் அந்த பெண்மணி..

“கலா அந்த புடவை செக்ஷன்ல சேல்ஸ் கேர்ள் இல்லனு நம்ம சொல்லிட்டு இருந்தோம் இல்ல..? இந்த பொண்ணு அந்த வேலைக்கு தான் வந்து இருக்கா.. அவளுக்கு கொஞ்சம் என்னென்ன பண்ணனும்..? எப்படி எல்லாம் விக்கணும்னு சொல்லிக் கொடுத்து இன்னைக்கு ஒரு நாள் அங்க யாரையாவது எப்படி வேலை செய்யறாங்கன்னு பார்த்துக்க சொல்லு.. நாளைல இருந்து அந்த பொண்ணு அந்த செகக்ஷன்ல சேல்ஸை பாத்துக்கட்டும்” என்று சொன்னவர் “ஆமா.. கேட்கவே மறந்துட்டேன் பாரு.. உன் பேரு என்னமா?” என்று கேட்டார்..

“என் பெயர் சுந்தரி..” என்று அவள் சொல்ல “என்னம்மா படிச்சிருக்க?” என்று கேட்கவும் “நான் பிளஸ் டூ தான் படிச்சிருக்கேன்மா” என்றாள் சுந்தரி..

“அப்படியா? சரி.. நீ போய் அங்க எப்படி ஸேல் பண்றாங்கன்னு பாரு.. அதுக்கப்புறம் நாளையிலிருந்து நீயே அந்த செக்ஷனை பார்த்துக்கோ.. சரியா..?” என்றாள் அந்த பெண்மணி..

“ஓகே மேடம்..” என்ற சுந்தரி அந்தப் பெண் கலாவின் பின்னால் சென்றாள்..

அதன் பிறகு அங்கு வேலை செய்பவரை கவனித்து கற்றுக் கொண்டவள் அடுத்த நாள் எப்படி எல்லாம் தான் பேசி புடவை விற்க வேண்டும் என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள்..

அன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன் தன் அக்கா ரதியை ஒரு வாடிக்கையாளராக நினைத்துக் கொண்டு அவளிடமே ஒரு புடவையை விற்பது போல் ஒத்திகை செய்து பார்த்துக் கொண்டாள்..

அவள் செய்வதை எல்லாம் பார்த்து ரதிக்கு சிரிப்பு வந்தது.. ” என்னடி ஆச்சு சுந்தரி உனக்கு..? நீ எப்படி இருந்தாலும் நல்லாத்தான் வேலை செய்வே.. எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டாள் ரதி..

“அப்படி இல்ல கா.. எது செஞ்சாலும் நம்ப நல்லா திருத்தமா செய்யணும்.. அதுக்கு தான்.. இன்னைக்கு உன்கிட்ட புடவை விக்கிறேன்னு சொன்னப்போ நீ எத்தனை கேள்வி கேட்ட.. இதே மாதிரி தானே வர்றவங்க ஒவ்வொருத்தரும் கேப்பாங்க.. இப்போ அந்த மாதிரி அவங்க கேட்கும் போது என்ன சொல்லி சமாளிக்கணும்னு எனக்கு புரிஞ்சிடுச்சு இல்ல..?” என்றவளை வினோதமாக பார்த்தாள் ரதி..

###############

மாலை கார்மெண்ட்ஸில் இருந்து வீட்டுக்கு வந்த ஷாலினி அப்படியே களைப்பில் சோஃபாவில் தொப்பென விழவும் அப்போது அங்கே வந்த ரவிக்குமார் “என்ன மா ஷாலு..? ரொம்ப டயர்டா இருக்கியா?” என்று கேட்டார்..

“ஆமாம்பா.. இன்னைக்கு செம வேலை.. பாட்டி இறந்து போயிட்டதனால ரெண்டு நாளா சுந்தரும் ஆஃபீஸ்க்கு வரல.. நானும் போகல.. நேத்து ஆஃபீஸ் போயி பார்த்தா பெண்டிங் ஒர்க்ஸ் நிறைய இருந்தது.. இன்னைக்கு தான் ஒரு வழியா நானும் சுந்தரும் சேர்ந்து எல்லாத்தையும் முடிச்சோம்.. ரொம்ப முடியலப்பா.. பயங்கர டயர்டா இருக்கு..” என்று சொன்னவள் உள்பக்கமாக குரல் கொடுத்தாள்.. “அன்னம்மா.. ஒரு காபி கொண்டு வந்து குடுங்க அன்னம்மா.. தலை வலிக்குது..” என்று தன் கைகளை நீட்டி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தாள்..

அப்போது ரவிக்குமார் அவள் அருகே வந்த அமர்ந்து அவள் தலையை வருடிய படி ” ம்ம்ம்ம்.. தலை வலிக்குதா கண்ணம்மா..? நான் இப்போ ஒரு விஷயம் சொல்ல போறேன் உன்கிட்ட.. அதை கேட்டா உனக்கு இருக்கிற டயர்ட்னெஸ் எல்லாம் பறந்து போய் அப்படியே சந்தோஷத்தில எழுந்து துள்ளி குதிக்க போறே” என்றார்..

“ம்ம்ம்ம்… அப்படி என்னப்பா விஷயம்? உங்க பிசினஸ்ல ஏதாவது பெரிய ப்ராஃபிட் கிடைச்சிருச்சா..? இல்ல எனக்கு ஏதாவது புது மாடல் கார் வாங்கி தர போறீங்களா..? இல்ல அதைவிட பெரிய சந்தோஷமா ஏதாவது என் பேர்ல ப்ராப்பர்ட்டி வாங்கி இருக்கீங்களா?”

அவள் கேட்க அவரோ இந்த பெண் எப்போதுதான் பணத்தை வைத்து அன்பை மதிப்பிடுவதை விடுவாளோ என்று கவலை கொண்டார்..

அப்போது அன்னம்மா உள்ளே இருந்து காபி கோப்பையை கொண்டு வந்து “இந்தாங்கம்மா காப்பி..” என்று கொடுக்க அதை கையில் வாங்கிக் கொண்டவள் சிறிது சிறிதாக பருக ஆரம்பித்தாள்..

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. ஆக்சுவலா இன்னைக்கு சுந்தரோட சித்தப்பா சித்தி இங்க வந்து இருந்தாங்க..” என்று ரவிக்குமார் சொன்னதும் அப்படியே சிறிது ஆச்சரியத்தில் தன் தந்தையை பார்த்தவள் “சுந்தரோட சித்தப்பா சித்தி வந்தாங்களா? அவங்க எதுக்கு இங்க வந்தாங்க..?” என்று மறுபடியும் காப்பியை பருகியபடி கேட்க “அது நீயும் சுந்தரும் லவ் பண்றீங்களாமே… கல்யாணம் பண்ணிக்கணும்னு டிசைட் பண்ணிட்டீங்களாமே.. என்ன.. எனக்கு இந்த விஷயம் அவங்க மூலமா தான் தெரிஞ்சது.. என் பொண்ணுக்கு என்கிட்ட சொல்லணும்னு கூட தோணல.. உங்க கல்யாணத்தை பேசி முடிக்கலாம்னு தான் அவங்க இங்க வந்து இருந்தாங்க” என்று அவர் சொல்ல குடித்துக் கொண்டிருந்த

காப்பி அப்படியே சிதற ஷாலினிக்கு புரை ஏறியது அவர் சொன்ன விஷயத்தை கேட்டு..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!