நேரம் 11 ஐத் தொட்டுக் கொண்டிருந்த வேளையில் மிக வேகமாக காற்றைக் கிழித்துக்கொண்டு கார்த்திகேயன் தனது வீட்டிற்குள் புகுந்தான்.
அங்கு வெளியே வாசலில் பூச்சரம் கட்டிக் கொண்டிருந்த அவனது நண்பன் திவ்யன் அவனது நடையை வைத்தே அவன் மிகவும் கோபமாக இருக்கிறான் என்று கண்டு கொண்டவன்,
உடனே கார்த்திகேயன் பின்னே அவன் ஓடோடி வர கார்த்திகேயனோ தனது அன்னையின் அறைக்குள் நுழைந்தான்.
அன்னை நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவனது முகம் சடுதியில் கதிரவனைக் கண்ட பனி போல கோபம் மறைந்து மனம் சாந்தமாகியது விந்தை தான்.
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அவனது அன்னையின் வதனமே அவனுக்கு பெரும் அருமருந்தாக இதுவரைக்கும் இருந்திருக்கின்றது.
அவனது கஷ்டங்களை ஒருநாளும் அன்னையின் முன் அவன் காட்டிக் கொண்டதே இல்லை. அவரை எப்பொழுதும் சந்தோஷமாகப் பார்த்துக் கொள்வது அவனது மிகப் பெரும் தலையாயக் கடமை என்று அவன் எண்ணி வாழ்கின்றான்.
அன்னையின் தலையை ஆதுரமாக தடவி விட்டவன், அருகில் இருக்கும் போர்வையை எடுத்து அவருக்கு போர்த்தி விட்டு திரும்ப வாசலில் நின்று திவ்யன் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் அவன் கவனித்தான்.
செய்கை மூலம் ஒன்றும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியவன், மெதுவாக ஓசை எழும்பாமல் அந்த அறையை விட்டு வெளியேறி கதவை சாத்தினான்.
கார்த்திகேயன் வெளியே வந்ததும் திவ்யன் அவனை அழைத்து வந்து அவனது அறையில் இருக்க வைத்து கிளாசில் தண்ணீர் கொடுத்தான். அதை முழுவதையும் வேகமாக குடித்து முடித்தவன் அருகில் உள்ள மேசையில் அந்த கிளாசை வைத்து விட்டு கையை மடக்கி சுவற்றில் ஓங்கிக் குத்தினான்.
அவனது இவ்வாறான ஆவேசமான தருணங்களை எல்லாம் கடந்து வந்தவனே அவனது உயிர் தோழன் திவ்யன்.
அவன் அருகில் இருந்து அவனது தோளைத் தொட்டு மிக அமைதியாக,
“இங்க பாருடா நீ ஒத்துக்கொண்டு தான் இவ்வளவு தூரம் இந்தக் கல்யாண விஷயமே வந்திருக்கு இதுக்கு மேலேயும் உனக்கு இது பிடிக்கலன்னா இப்பவே சொல்லிடு பிடிக்காத வாழ்க்கை நெருப்புல நிக்கிற மாதிரி உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்..” என்று நண்பன் மீதுள்ள உண்மையான கரிசனையில் கூறினான்.
“திவ்யன் எனக்கு எல்லாம் புரியுது ஆனா என்னால அது மட்டும் முடியாது எங்க அம்மாவ பார்த்தல்ல அவங்க எனக்கு கல்யாணம்னு சொன்னதும் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க அவங்களோட சந்தோசம் என்னால கெடக்கூடாது என்று பார்க்கிறேன்..”
“ஓகே நீ சொல்ற மாதிரியே வைத்துக்கொள்வோம் ஆனா அந்த அம்மாவுக்கு உன்னோட சந்தோசமும் முக்கியம்தான் நீ கவலையில் இருக்கும் போது அவங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருப்பாங்க உனக்கு இந்த விஷயம் சந்தோசம் தராததன்னு தெரிஞ்சிக்கிட்டாங்கன்னா உடனே இந்த கல்யாணத்தை நிறுத்திடுவாங்க..”
“அது எனக்கும் தெரியும் ஆனா டைம் ரொம்ப வேகமாக கடந்து போச்சு இனி என்னால இதை நிறுத்த முடியாது..”
“நீ நினைச்சிருந்தா இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம்..”
“அத விடுடா இனி அத பத்தி பேசி பிரயோசனமில்லை வேலையெல்லாம் முடிஞ்சுதா..”
“எல்லா வேலையும் முடிஞ்சு மத்த பயலுக எல்லாம் போயிட்டாங்க நான் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அதோட அம்மாவும் தனியா இருக்காங்க..”
“ம்ம் சாப்டியாடா..?”
“சாப்பிட்டேன் அம்மா சாப்பாடு கொடுத்தாங்க..”
“சரி சரி நேரமாச்சு வா தூங்குவோம்..” என்றதும் திவ்யன் கார்த்திகேயனது மெத்தையில் படுக்க ஏனோ தெரியவில்லை கார்த்திகேயனுக்கு தூக்கமே வரவில்லை. நடந்த விடயங்கள் எல்லாம் அவனது நெஞ்சை நெருப்பாக அரித்தது.அதனால் தான் தூக்கம் தொலைந்து போனது.
‘ஒருவேளை திவ்யன் சொன்னது போல நான் இந்த திருமணத்தை நிறுத்த முயற்சி செய்திருக்கலாமோ ஆனா அந்த ஒரு விஷயம் என் கைகளை கட்டிப்போடாமல் இருந்திருந்தால் இந்நேரம் முகத்துக்கு நேராக எனக்கு இந்த கல்யாணம் வேணாம் நிவேதாவை பிடிக்கவில்லை என்று நான் கூறியிருப்பேன்..’ என்று மனதிற்குள் கார்த்திகேயன் சிந்தித்துக் கொண்டிருக்க, அவனது சிந்தனையை குழைக்கும் வண்ணம்,தொலைபேசி திடீரென ஒலித்தது.
அருகில் தூங்கிக் கொண்டிருந்த நண்பன் எழாமல் மெதுவாக தொலைபேசியை எடுத்து வெளியே வந்து யார் எனப் பார்க்க தொலைபேசியின் திரையில் காயத்ரி மேடம் எனப் பெயர் விழுந்தது.
நேரமோ 12 ஐக் கடந்திருந்தது. இந்நேரம் எதற்கு என்று ஏனோ மனம் குறுகுறுக்கத் தொடங்கியது.
அந்த அழைப்பை ஏற்க முடியாமல் மனம் லேசாக படபடக்க,
‘ஏதாவது ஏடாகூடமா நடந்து இருக்குமோ இந்த நேரம் மேடம் எனக்கு கால் பண்ணவே மாட்டாங்களே நாளைக்கு வேற கல்யாணம்..’ என்று மனதிற்குள் நினைத்தவனுக்கு, அச்சமும் சூழ்ந்து கொள்ள சிந்தனைச் சுழலில் மாட்டிய வண்ணம் அழைப்பை ஏற்றான்.
“ஹலோ கார்த்தி எங்கப்பா நிக்கிற..?” என்று அழுகையுடன் தழுதழுத்த குரல் காயத்ரியிடமிருந்து வெளிப்பட்டது.
“நான் வீட்ட தான் நிக்கிறேன் ஏன் மேடம் என்ன ஆச்சு..?” என்று மனதை திடப்படுத்திக் கொண்டு கார்த்திகேயன் கேட்டான்.
“இன்னும் நிவேதா வீட்டுக்கு வரலபா பார்ட்டிக்கு போறேன்னா எட்டு மணிக்கு போனவ 10 மணிக்கு வந்துருவேன்னு சொன்னா ஆனா இன்னும் காணல 12 மணி தாண்டிருச்சு எனக்கு என்னவோ பயமா இருக்கு நீயும் பார்ட்டிக்கு போனியாப்பா உன்னையும் கூட்டிட்டு போறேன்னு தான் சொல்லிட்டு இருந்தா..”
“ஆமா மேடம் நானும் போனேன் ஆனா சீக்கிரமாவே திரும்பி வந்துட்டேன்..”
“ஐயையோ என்னப்பா இப்படி சொல்ற அவ ரொம்ப பிடிவாதம்பா நீயாவது கண்டித்து கூட்டி வந்து வீட்டை விட்டுட்டு போயிருக்கலாமே..!” என்று பரதவிப்புடன் காயத்ரி கூற,
“நிவேதாவுக்கு இல்லன்னா அந்த ஹோட்டல் நம்பருக்கு கால் பண்ணி பாத்தீங்களா..?”
“அவ அங்க இல்ல கால் பண்ணி எல்லாம் விசாரிச்சிட்டு இப்ப அவரும் நேர்ல போறாரு இப்போ எங்கன்னு அவளைத் தேடுவேன் நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இந்த பொண்ணு இப்படி பண்ணிக்கிட்டு இருக்காளே..! கார்த்திகேயன் எனக்கு ஒரு உதவி செய்வியாப்பா..?”
“என்ன மேடம் இப்படி எல்லாம் கேக்குறீங்க..? என்ன செய்யணும் சொல்லுங்க இதோ செய்கிறேன்..”
“எனக்காக கொஞ்சம் நிவேதாவை தேடி பாக்குறியாப்பா ப்ளீஸ்பா..”
“நான் இதோ கிளம்பிட்டேன் பக்கத்துல தான் எங்கயாவது இருப்பா பொறுங்க நான் போய் தேடிப் பார்க்கிறேன்..” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவனது கைகள் அவனை மீறி நடுங்கத் தொடங்கின.
அவனது முகம் எல்லாம் வியர்த்து வியர்வை துளிகள் கழுத்து வழியாக கீழே இறங்கி பயணித்தன.
இந்த நள்ளிரவு குளிர் காற்றிலும் கார்த்திகேயனுக்கு இப்படி வியர்த்துக் கொட்டுகிறது என்றால் நடந்த சம்பவம் அவ்வளவு விபரீதமானது.
எதற்கும் சளைக்காத இரும்பு போன்ற மனதை கொண்ட கார்த்திகேயனே மனதளவில் பயம் கொள்கிறான் என்றால் நடந்த சம்பவம் மிகவும் பாரதூரமானதாகவே இருந்திருக்க வேண்டும். அப்படி என்னதான் நடந்தது..?
கார்த்திகேயனின் நெஞ்சமோ இரண்டு மணி நேரத்துக்கு முன் நடந்த விடயங்களை அலசிப் பார்த்தது.
காதை கிழிக்கும் வண்ணம் பாடல்களின் ஓசை ஒலித்துக் கொண்டிருக்க அந்த டிஜே கிளப்பில் ஒரு ஓரமாக நடப்பவை அனைத்தையும் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் நமது நாயகனான கார்த்திகேயன்.
அவனது பார்வை அங்கு அனைவரின் நடுவில் கையில் மது கோப்பையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் நமது நாயகி நிவேதாவின் மீதே பதிந்து இருந்தது.
ஏனோ எதிலுமே மனம் ஒட்டாமல் அனைத்தையும் பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்தவனின் மேசை அருகில் மது கோப்பையுடன் தள்ளாடியபடி வந்து நின்றாள் நிவேதாவின் சினேகிதி ரீனா.
“ஹாய் கார்த்தி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் நீ ரொம்ப அழகா இருக்கடா ஆனா உனக்கு வேதா பொருத்தமான பொண்ணுன்னு எனக்கு தோணல அவ உன்ன யூஸ் பண்ண பாக்குற ஆனா..” என்று கூறியபடி மதுவை ஒரு மிடர் குடித்துவிட்டு அவன் அருகில் மிக நெருக்கமாக வந்து,
“நான் உன்னை ராஜா மாதிரி பாத்துக்குவேன் நீ ஓகேன்னா..” என்று மெதுவாக அவனது தொடையின் மீது கை வைக்க அடுத்த நிமிடம் மின்னல் வெட்டியது போல கன்னம் சிவக்கும்படி அறைந்திருந்தான் கார்த்திகேயன்.
அவன் அறைந்த அறையில் அந்த இடமே அதிர்ந்து அனைத்து ஓசைகளும் அடங்கி மயான அமைதியானது. உடனே அவ்விடத்தை நோக்கி வந்த நிவேதா தள்ளாடியபடி,
“வாட் வாட் ஹேப்பன் காய்ஸ்..?” என்று கேட்க
ரீனா கன்னத்தில் கை வைத்த படி,
“உன்னோட பியான்சே என்ன அறஞ்சிட்டான்டி..” என்று கூறி கண்ணீர் சிந்தினாள்.
உடனே கோபம் உச்சத்துக்கு ஏற,
“ஹவ் டார் யு..” என்று கார்த்திகேயனை அறைய கரம் உயர்த்த அந்த பூக்கரத்தை தனது இரும்புக்கரத்தால் பிடித்த கார்த்திகேயன்,
“ஸ்டாப் இட் நிவேதா முதல் என்ன நடந்ததுன்னு கேட்டுட்டு அதுக்கப்புறம் நீ என்ன வேணும்னாலும் பண்ணு..” என்று பற்களைக் கடித்தவன்,
“உன்னோட ஃப்ரண்ட் என்கிட்ட ரூடா பிஹேவ் பண்றா..” என்று ரீனாவை எரிக்கும் பார்வை பார்த்தபடி கூறினான்.
“சோ வாட் அவ என்கிட்ட பெர்மிஷன் கேட்டு தான் வந்தா..” என்றதும்
“வாட் கம் எகெய்ன்..”
“ஆமா லாஸ்ட் வீக் என்னோட பல கோடி ரூபாய் பெறுமதி மிக்க கார அவதான் ஓட்டிப் பார்த்து எப்படி இருக்குன்னு சொன்னா ஜஸ்ட் லைக் தட்..” என்று தனது தோள்களை குலுக்கினாள் நிவேதா.
“உன்னோட காரும் உன்னை கட்டிக்க போறவனும் ஒன்னா..?”
“ஹேய்..” என்று ஏதோ நிவேதா கூற வர அவளது கன்னம் பழுக்கும் வண்ணம் பளார் என அறைந்திருந்தான்.
“ச்சே நீ எல்லாம் பொண்ணா..?” என்று நிவேதாவை உதறித் தள்ளிவிட்டு அருவருத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினால் கார்த்திகேயன்.
உடனே அவ்விடத்தில் இருக்க மனம் கொள்ளாது வீட்டிற்கு வந்து விட்டான்.
நிவேதாகிட்ட நான் அப்படி நடந்துகிடடதாலத்தான் நிவேதா கோவத்துல எங்கேயாவது போய் ஒழிஞ்சிக்கிட்டு இருப்பா
என்ன பழி வாங்கணும் என்பதற்காக அவ எந்த எல்லைக்கும் போவான்னு எனக்கு நல்லா தெரியும் ஆனா காயத்ரி மேடம் கருணாகரன் சாருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்
‘அவள் எப்படி நடந்துக்கிட்டாலும் நான் எல்லார் முன்னுக்கும் வச்சு அவளை அறைந்திருக்கக் கூடாது காயத்ரி மேடத்துக்கும் கருணாகரன் சாருக்கும் நான் அப்படி நடந்துக்கிட்டேன்னு தெரிஞ்சா அவங்க என்ன எப்படி ட்ரீட் பண்ணுவாங்க என்ன இருந்தாலும் அவங்க அவங்களோட செல்ல பொண்ணு மேல என் கை வச்சான்னு தானே கேட்பாங்க..’ என்று மனதிற்குள் எண்ணி தன்னைத் தானே நொந்து கொண்டான் கார்த்திகேயன்.
நடந்த சம்பவங்களால் இப்படி மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.