விஷம் – 41
அவளின் பிரசவ வலி
யாழனின் கொடூர விபத்து
கைமீறிய சூழ்நிலை
அவளுக்கே புரியாமல் சிதறும் நேரம்..
அனைத்தும் அவளை உறைய வைத்தன.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே அவளுடைய அறிவுக்கு எட்டவில்லை.
அவளுடைய கண்கள் பார்க்க விரும்பாததைப் பார்த்து விட்டன…
அவளுடைய உள்ளம் சகிக்க முடியாததை உணர்ந்து விட்டது…
அவளுடைய மனமும் உடலும் ஒன்றாக அதிர்ந்தன.
“யாழா… யாழா…!” என்று கதறி எழுந்த அவளின் குரல், அந்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வண்டிகளின் பேரிரைச்சலையும் தாண்டி ஒலித்தது.
இருந்தும் என்ன பயன்..?
கேட்க வேண்டியவனுக்கு அவளுடைய குரல் கேட்கவில்லையே..
விபத்து நடந்த இடத்தை சூழ்ந்திருந்த மக்களின் கவனமோ “யாழா..” எனக் கதறிய அர்ச்சனாவின் மீது அப்போதுதான் திரும்பியது.
“ஐயோ அந்த ப்ரெக்னன்ட் லேடிக்கு ரொம்ப முடியல போல.. பிரசவ வலி வந்துருச்சு போல இருக்கே.. யாராவது அந்த பொண்ண தூக்குங்கப்பா..” என சிலரும்,
“ஐயோ இந்த பையன் உடம்புல அசைவே இல்லை.. ஸ்பாட் அவுட் போல..” என மற்றையவரும் கலவர குரலில் பேசத் தொடங்கினர்.
அவளுடைய உடல் அச்சத்தில் உதறத் தொடங்கியது.
அதே கணம் கடுமையான வலியோ அவளது அடிவயிற்றை நெரிக்க ஆரம்பித்தது.
“இல்ல.. இல்ல… இது சரியான நேரமில்ல பேபி…” என அவள் தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டபடியே சற்று தொலைவில் கிடந்த யாழவனின் நிசப்தமான உடலை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றாள்.
அவளுடைய கரங்களிலோ பாதங்களிலோ பலம் இல்லை.
மனதில் தன்னைத்தானே தூக்கி இழுக்கும் தூண்டுதல் மட்டும் தான் இருந்தது.
“யாழா… எழுந்துருடா… இ.. இல்லன்னா நா.. நானே உன்ன கொ.. கொ… கொன்னுடுவேன்… ஆஆஆ…” என்றவள் மீண்டும் எழுந்த வலியில் ஒரே மூச்சில் சீரென கத்தினாள்.
அதற்குள் யாழவனை சூழ்ந்திருந்த சிலர் அர்ச்சனாவை சூழ்ந்து கொண்டனர்.
அவள் அலறிய சத்தமோ மருத்துவமனையின் வாயிலையும் தாண்டி உள்ளே நுழைந்துவிட்டது போல.
வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் தொடக்கம் தாதி வரை வெளியே ஓடி வந்து விட அங்கே வீதியில் கொட்டிக் கிடந்த உதிரமும் சற்று தள்ளி விழுந்து கிடந்த அர்ச்சனாவின் அலறலும் அவர்களை திகைத்து அடுத்த நொடியே செயல்பட வைத்தது.
அதற்குள் அவளை சூழ்ந்திருந்த சிலரில் ஒருவர் அவளைத் தூக்க முயற்சிக்க பலமாக மறுத்தாள் அவள்.
“யா.. யாழன தூ.. தூக்குங்க.. அவ.. அவர தூக்குங்க..” என அழுதவாறு அசைய மறுத்த தன்னுடைய கால்களுக்கு மொத்த பலத்தையும் கொடுத்து ஒற்றைக் கரத்தால் வயிற்றை பிடித்தபடி தடுமாறி எழுந்தவளுக்கோ கால்கள் கிடுகிடுவென நடுங்கத் தொடங்கி விட்டன.
“அந்தப் பையன் இறந்துட்டான்மா… மூச்சே இல்ல.. நீ வாம்மா… சீக்கிரமா உன்ன ஹாஸ்பிடலுக்குள்ள கொண்டு போகணும்…” என பதறினார் ஒரு மனிதாபிமானமிக்க நடுத்தர வயதைஇஅ கொண்ட ஆண்.
அவர் கூறிய வார்த்தைகளில் அவளுக்கோ நெஞ்சம் பதறியது.
“ஐயோ த.. தப்பா பேசாதீங்க… அவருக்கு எதுவுமே ஆகாது அவ.. அவர காப்பாத்துங்க.. அவர முதல்ல தூக்குங்க..” என மீண்டும் அலறினாள் அர்ச்சனா.
யாழவனைச் சுற்றி கூட்டம் கூடியிருந்ததால் அவளால் யாழவனின் உடலைக் கூடப் பார்க்க முடியவில்லை.
“அந்தப் பையனுக்கு இந்த பொண்ணு ஏதோ முறைல சொந்தம் போல.. அதான் இப்படிக் கிடந்த தவிக்கிறாங்க…” சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணியோ அருகே நின்ற பெண்ணிடம் கிசுகிசுத்தார்.
“அம்மாடி சொன்னா கேளுமா.. உன் வயித்துல இருக்க குழந்தையை பத்தி நீ யோசிக்கலையா..? உன்ன பத்தி யோசிக்கலையா..? கொஞ்சம் ஒத்துழைச்சத்தானே எங்களாலேயும் ஹெல்ப் பண்ண முடியும்..” என்ற இன்னொரு பெண்மணியோ அவளைத் தாங்கிக் கொள்ள,
அப்போதுதான் அவளுக்கு தன்னுடைய குழந்தையின் எண்ணமே மூளையில் உறைத்தது
இருந்தும் அங்கே அவளுடைய உயிரானவன் அசைவற்றுக் கிடைக்கின்றானே..
தன் உயிரைப் பார்ப்பதா..?
இல்லை தன் உயிரில் விளைந்த இன்னொரு உயிரைப் பற்றி சிந்திப்பதா..?
அவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.
யாழவனுக்கு மட்டும் ஏதாவது ஒன்று என்றால் என்னையும் எடுத்துக்கொள் இறைவா என அவளையும் மீறி அவளுடைய மனம் இறைவனிடம் புலம்பத் தொடங்கி விட,
அதற்குள் ஸ்ட்ரெச்சர் உடன் சில ஊழியர்கள் வெளியே வேகமாக வந்திருந்தனர்.
வரமாட்டேன் என அடம் பிடித்தவளை தூக்கி ஸ்ட்ரக்சரில் கிடத்தி அவர்கள் மருத்துவமனைக்குள் தூக்கிச் செல்ல,
கதறியவளின் விழிகளோ தன்னவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன.
அதேபோல இன்னொரு ஸ்ட்ரக்சரில் யாழவனையும் தூக்கிக் கிடத்தி மருத்துவமனைக்குள் கொண்டு செல்ல கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்திற்கு செல்ல முயன்றவளின் கன்னத்தில் பலமாகத் தட்டினாள் பானுமதி.
“ஹேய் அச்சு.. கண்ண மூடாதடி நான் உன் கூடவே இருக்கேன்.. என்ன பாரு.. ப்ளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு..” என அழுகையுடன் கத்தினாள் பானுமதி.
தெரிந்த ஒருவரின் குரலில் அவளுடைய கவனம் சற்றே பானுமதியின் மீது திரும்பியது.
“பா… பானு… யா… யாழன பாக்…கணும்னு நி.. நினைச்சேன்… ஆனா இ.. இப்படி பார்… பார்க்கணும்னு நா… ன் சத்….தியமா நினைக்கல… அவர எப்.. எப்படியாவது ஆஆஆஆ…. அவர எப்படியாவது காப்பாத்த சொ…ல்லு… என்ன பிறகு பாத்துக்கலாம்… மு.. முதல்ல அவ.. அவர பாருங்க… ஐ… ஐ அம் பெ…. பெர்பெக்ட்லி ஆல்ரைட்..” என திக்கித் திணறி பேசியவளைக் கண்டு பானுமதியோ விக்கித்துப் போனாள்.
“பைத்தியமாடி நீ..? உன்னையும் குழந்தையும் பத்தி முதல்ல யோசி.. யாழவன் சாருக்கு எதுவுமே ஆகாது.. இது அவரோட ஹாஸ்பிடல் அவர பாத்துக்காம இருப்பாங்களா…” என பானுமதி கூறிக் கொண்டிருக்கும்போதே மயங்குவது போல பலவீனத்தால் விழிகளை மூடிக் கொண்டாள் அர்ச்சனா.
இது என்ன பைத்தியக்காரத்தனமான காதல் என்றுதான் பானுமதிக்குத் தோன்றியது.
இத்தனை காதலை அவன் மீது வைத்திருப்பவள் எதற்கு அவனைப் பிரிந்து வாழ வேண்டும்..?
தன்னையும் பிள்ளையையும் மறந்து அவனுக்காக துடிக்கும் இவள் எப்படித்தான் இவ்வளவு நாள் அவனைப் பிரிந்து இருந்தாளோ..?
அவனுக்குப் பிரிவின் வலியைக் கொடுக்க வேண்டும் என வைராக்கியமாக இருந்துவிட்டாள் போலும்.
பானுமதிக்கு எதுவுமே புரியவில்லை.
இந்தக் காதல் மனிதர்களை என்ன பாடெல்லாம் படுத்துகின்றது..?
நிஜமாகவே இந்தக் காதல் விசித்திரம்தான்..!
விசித்திரம் மட்டுமல்ல விஷமும் கூட.
அவளை ஸ்டிரெச்சருக்கு ஏற்றி விட்ட பிறகு, யாரோ ஒரு மருத்துவர்,
“டெலிவரி பைன்லேனுக்கு எடுத்துப் போங்க.. பத்து நிமிஷத்துல பேபி வெளிய வரணும்… ஹெர் ப்ரெஷர் இஸ் ஹை!” என்றார்.
அடுத்த இரண்டே நிமிடங்களுக்குள் பிரசவ அறைக்குள் கொண்டுவரப்பட்ட அர்ச்சனாவின் நிலையோ மோசமாகியது.
“ப்ளீஸ் அர்ச்சனா… ரிலாக்ஸ் பண்ணுங்க… பிரசவம் ஆரம்பம் ஆயிடுச்சு… குழந்தை வெளிய வரப் போகுது…” என்றார் வைத்தியர்.
தாதிகள் அவளது கைகளை சொடுக்கு பிடித்தபடி சுவாசத்தை ஒழுங்குபடுத்தும் விதத்தை வழிமுறையாகக் கூறினர்.
பிரசவ வலியை வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாதல்லவா..?
அந்த வலியை விட அவளுடைய நெஞ்சம் அதீத வலியை அக்கணம் உணர்ந்து கொண்டது போலும்.
அவளுடைய விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அவளுடைய தவிப்பை அங்கிருந்த அனைவருக்கும் புரிய வைத்தது.
அவள் என்னதான் சிதறும் நிலையில் இருந்தாலும்,
அவளது வயிற்றின் உள்ளே இத்தனை மாதங்களாக ஒளிந்துகிடந்த உயிரோ அவளது தவிப்பை உணர்ந்தபடி வெளியே வர முயன்றது.
அடுத்த சில நொடிகளில் அந்த உயிரின் முயற்சி வெற்றி அடைய பிறந்தது அழகிய பெண் குழந்தை.
“நம்ம அர்ச்சனாக்கு பொறந்தது பொண்ணா பையனா..?” என யாரோ ஒரு தாதி கேட்க,
“பொண்ணு பிறந்திருக்கா..” என்றார் வைத்தியர்.
குழந்தையை துடைத்தார்கள்…
நிறம் பார்த்தார்கள்…
அழும் சத்தத்தை பதிவு செய்தார்கள்…
அர்ச்சனாவுக்கு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சுயம் மீண்டது.
அவளது மார்புக்கு அருகே அந்த பிள்ளையைத் தூக்கி வைத்தபோது அவளுடைய விழிகள் கசியத் தொடங்கின.
ஒரு தாயின் இதயத்தில் பெரும் சந்தோஷம் உருவாகவேண்டிய அந்தக் கணம் அர்ச்சனாவின் இதயத்திலோ தவிப்புதான் கூடிப் போனது.
“அச்சு.. நீ ஓகே தானே..?” எனக் கேட்டாள் பானுமதி.
“யா… யாழன்…?” எனக் கேட்டாள் அவள் பலவீனமான குரலில்.
அவளுக்கு அந்த நிமிடமே தன்னுடைய உயிர் மூச்சு எப்படி இருக்கின்றது என்பதை அறிய வேண்டும்.
அவளுடைய யாழவன் தவறு செய்திருக்கின்றான்தான்.. அவனுக்கான தண்டனையை அவள்தான் கொடுக்க வேண்டும்.
இறைவன் கூட அவனுக்கு தண்டனையைக் கொடுக்கக் கூடாது.. அவனுக்கு சிறு தீங்கும் யாரும் விளைவிக்கக் கூடாது..
அப்படி யாராவது யாழனுக்கு தீங்கு விளைவித்தால் நிச்சயமாக அவர்களை கொன்றுவிடும் எண்ணத்தில்தான் இருந்தாள் அர்ச்சனா.
பானுமதிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
உண்மையைக் கூறினால் இந்தப் பெண் தாங்கிக் கொள்ள மாட்டாளே எனப் பதறியது அவளுடைய மனம்.
வெளியே காத்துக் கொண்டிருந்த அவளுடைய பெற்றோர்களிடம் இவளுடைய பொறுப்பை ஒப்படைத்து விடலாம் என வேதனையுடன் எண்ணிக் கொண்ட பானுமதியோ குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் வெளியே நின்ற அர்ச்சனாவின் அன்னையின் கரத்தில் கொடுக்க,
மனம் முழுவதும் பாரத்துடன் அந்தக் குழந்தையை தன் கரத்தில் ஏந்திக்கொண்டார் அன்னம்.
கீர்த்தனாவோ கட்டுப்படுத்த முடியாமல் அழுது கரைந்து கொண்டிருந்தாள்.
“ஏன் மாமாக்கு இப்படி ஆச்சு..? என்னால தாங்கிக்க முடியல அம்மா.. அக்கா விட்டுட்டு வந்ததுக்கப்புறம் கூட அப்பா மாதிரி இருந்து என்னோட படிப்புக்கு தேவையான எல்லாத்தையும் பண்ணாரு.. அப்படிப்பட்ட நல்ல மனுஷனுக்கு இந்த முடிவு வந்திருக்கவே வேணாம்..
சத்தியமா சொல்றேன் இந்தக் கடவுள் எல்லாம் பொய்மா.. உண்மையா கடவுள் இருந்திருந்தா இப்படி நல்லவரோட உயிரை எடுத்திருக்கவே மாட்டாரு.. இனி நாம் உங்க கூட கோயிலுக்கே வரமாட்டேன்..” என அவள் விம்மி வெடித்து அழ,
அன்னத்தின் விழிகளில் இருந்தோ கண்ணீர் வழிந்தது.
யாழவனின் பெற்றோர்களோ அங்கு இருக்கவில்லை.
எப்போதோ யாழவனின் உடலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கதறலோடு சென்று விட்டிருந்தனர்.