சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 42
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தரியின் வகுப்புக்குள் நுழைந்த சித்தார்த் ஷ்ரவன்.. வகுப்புக்கு நடுவே வந்து நின்று “ஹாய் ஸ்டூடென்ட்ஸ்.. நான் உங்களோட லெக்சரர்.. சித்தார்த் ஷ்ரவன்.. ” எனவும் அங்கு இருந்த சுந்தரியும் வனிதாவும் மட்டுமில்லாமல் எல்லோரும் வியப்பில் வாயடைத்து போனார்கள்..
“நான் மாஸ்டர் ஆஃப் டிசைன்ஸ் முடிச்சிருக்கேன்.. அதுக்கப்புறம் யூ எஸ்ல ஒரு ஃபேஷன் டிசைனிங் கம்பெனி வச்சு நடத்திட்டு இருந்தேன்.. இப்போ ஒரு பர்சனல் விஷயமா நான் இந்தியாவுக்கு வந்து இருக்கேன்.. நான் உங்களுக்கு மூணு கோர் சப்ஜெக்ட்ஸ் எடுக்க போறேன்” என்றான்..
முதல் இருக்கையில் அமர்ந்திருந்த சுந்தரியை ஏளனம் செய்த அந்த நால்வரும் திரு திருவென விழிக்க சித்தார்த்தை மிரட்டிய அந்த மாணவனோ சிறிது பயந்து தான் போனான்..
நால்வரும் ரகசியமாய் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுவென பேசிக் கொண்டிருக்க அவர்கள் அருகே வந்த சித்தார்த் “உங்களுக்கெல்லாம் நான் சொன்னதுல ஏதாவது சந்தேகம் இருக்கா? இருந்ததுன்னா நேரா என்னை கேட்கலாம்.. ” என்று சொல்ல அந்தப் பெண் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சார்.. நாங்க வேற ஏதோ பேசிட்டு இருந்தோம்..” என்று சொல்லி தானே மாட்டிக் கொண்டாள்..
“இப்போ ஓகே.. ஆனா கிளாஸ் எடுக்கும் போது இந்த மாதிரி உங்களுக்குள்ள பேசிக்கிறதை கொஞ்சம் அவாய்ட் பண்ணுங்க.. ஏன்னா என் கிளாஸ்ல இன்ட்ரஸ்ட் இல்லாதவங்க என் கிளாஸ்ல இருக்கிறதை நான் விரும்புறதில்லை.. தாராளமா அவங்கள்லாம் கிளாஸை விட்டு வெளியில போயிடலாம்..” என்றவன் நால்வரையும் முறைத்து விட்டு மறுபடியும் வகுப்பின் நடுப்பகுதிக்கு வந்தான்..
“உங்க எல்லாருக்கும் நான் ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன்.. என்னை பொறுத்த வரைக்கும் இந்த கிளாஸ்ல இருக்குற ஒவ்வொரு ஸ்டுடென்ட்டும் எனக்கு முக்கியம்.. ஒவ்வொரு ஸ்டூடெண்ட்க்கு உள்ளேயும் ஏதாவது ஒரு திறமை ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்னு நான் நம்புறேன்.. உங்கள்ல என் சப்ஜெக்ட்ல யாரு நல்லா பெர்ஃபார்ம் பண்ணீங்கன்னாலும் அஃப்கோர்ஸ் என்கிட்ட இருந்து உங்களுக்கு அப்ரிஸியேஷன் கிடைக்கும்.. அதே சமயம் கொஞ்சம் நல்லா பெர்ஃபார்ம் பண்ணாதவங்க இந்த கிளாஸ்ல இருந்தா அவங்களை இன்சல்ட் பண்ணியோ அவங்களை தேவை இல்லாம கீழ்தரமா பார்க்கிறதையோ நான் விரும்ப மாட்டேன்.. அப்படி ஏதாவது நடந்ததுனா அப்படி நடந்துக்கிறவங்க மேல நிச்சயமா நான் ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்.. சோ நீங்க எல்லாரும் ஒரு டீமா ஒர்க் பண்ணி நீங்க க்ரோ ஆகறது மட்டும் இல்லாம இந்த கிளாஸ்ல இருக்குற ஒவ்வொருத்தருமே மேக்சிமம் லெவலுக்கு பெர்ஃபார்ம் பண்ண ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கிறேன்.. என்ன பண்ணுவீங்களா..?” என்று சித்தார்த் கேட்க “எஸ் ஸார்” என்று அந்த வகுப்பில் இருந்த அத்தனை பேரும் பதில் சொன்னார்கள் அந்த நால்வரும் உட்பட..
“ஓகே.. நான் இப்ப பேசுனதை வச்சு நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்ன்னு நினைக்காதீங்க.. மோஸ்ட்லி உங்களோட ஃப்ரண்ட்லியா தான் இருப்பேன்.. ஸப்ஜெக்ட்ல என்ன டவுட்ஸ் இருந்தாலும் என்னை தாராளமா எப்ப வேணா நீங்க கேட்கலாம்..” என்று சொன்னவன் கரும்பலகையின் பக்கம் திரும்பி அதில் ஒரு எண்ணை எழுதினான்..
“இது என்னுடைய நம்பர்.. உங்களுக்கு சப்ஜெக்ட் ரிலேட்டடா எப்போ என்னோட பேசணும்னாலும் நீங்க இதுக்கு காண்டாக்ட் பண்ணலாம்.. ஓகே.. நம்ம எல்லாரும் ஸெல்ஃப் இன்ட்ரொடக்ஷன் பண்ணிக்கலாமா.. லெட் அஸ் ஸ்டார்ட் வித் த லாஸ்ட் பெஞ்சர்ஸ்..” என்றான் சித்தார்த்.. சுந்தரி பக்கம் கைகாட்டி..
அங்கே சுந்தரியும் வனிதாவும் அமர்ந்திருக்க சுந்தரி எழுந்து “என் பெயர் சுந்தரி.. நான் ஒரு கடையில சேல்ஸ் கேர்லா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.. எனக்கு ஃபேஷன் டிசைனிங்ல கொஞ்சம் ஆர்வம் இருந்தது.. அதனாலதான் இந்த காலேஜ்ல சேர்ந்து படிக்க வந்து இருக்கேன்..” என்றாள்..
“ஓ வெல்.. சுந்தரி.. ஒரு இடத்துல வேலை பண்ணிக்கிட்டு இருந்தாலும் உங்க பேஷனை விட்டு கொடுக்காம இங்க வந்து ஜாயின் பண்ணி படிக்கிறீங்க.. கிரேட்.. இதுல நிறைய டிஃபிக்கல்டீஸ் இருக்கும்.. ஆனா அதை எல்லாம் ஃபேஸ் பண்ண ரெடியா இருக்கீங்க.. சூப்பர்.. நீங்க இந்த காலேஜ்ல எவ்வளவு கத்துக்க முடியுமோ கத்துக்கிட்டு உங்களோட ஃபியூச்சர் ட்ரீமை ஒரு ரியாலிட்டி ஆக்குவீங்கன்னு நான் நம்புறேன்..” என்று சொன்னவன் “நெக்ஸ்ட்..” என்றான்..
அதன் பிறகு எல்லோருடைய அறிமுகமும் நிகழ அந்த நால்வரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.. அந்தப் பெண்ணின் பெயர் தீக்ஷா.. அவளுடன் வந்த இன்னொரு பெண்ணின் பெயர் மோனா.. சித்தார்த்துடன் சண்டையிட்ட அந்த இளைஞனின் பெயர் மிஷால்..
இன்னொரு இளைஞனின் பெயர் விக்கி..
அந்த நால்வரின் பெயரையும் அறிந்து கொண்ட சுந்தரி தினமும் எப்படி இவர்களை எதிர்கொள்ள போகிறோம் இதே வகுப்பில் என்று மனதிற்குள் சிறிது சஞ்சலம் கொண்டாள்..
ஆனால் எப்படியோ சமாளிக்கலாம் என்று அவளுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.. சித்தார்த் வகுப்பு எடுக்க ஆரம்பிக்கவும் ஒவ்வொரு முறையும் அவன் வேகமாக ஆங்கிலத்தில் சொல்லும் போது சுந்தரி எழுந்து “ப்ளீஸ்.. கொஞ்சம் தமிழ்ல சொல்ல முடியுமா..?” என்று கேட்க அவனும் நிதானமாக எல்லாவற்றையும் விளக்கினான்..
ஒவ்வொரு முறையும் அவள் எழுந்து அப்படி கேட்கும் போதும் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் தங்கள் வாயை மூடிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.. அது தெரிந்திருந்தும் சுந்தரி அதை கண்டு கொள்ளவில்லை..
ஆனால் சித்தார்த்துக்கு அவர்கள் சிரித்ததை பார்த்து ரொம்பவும் கோபம் வந்தது.. ஆனால் அதை அப்போது காட்ட முடியாது என்று உணர்ந்தவன் வகுப்பு முடியும் தருவாயில் சிரித்தவர்களை அன்றைய பாடத்திலிருந்து கேள்வி கேட்க ஆரம்பித்தான் ஒவ்வொருவராக..
வரிசையாக ஒவ்வொருவராக பதில் சொல்ல முடியாமல் திணற அதே கேள்வியை சுந்தரியிடம் கேட்டபோது டாண் டாண் என்று அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னாள் அவள்..
அப்போது அந்த மாணவர்கள் பக்கம் திரும்பிய சித்தார்த் “சுந்தரி என்னை தமிழ்ல எக்ஸ்ப்ளைன் பண்ண சொல்லி கேட்டப்போ நீங்க எல்லாம் சிரிச்சீங்க.. ஆனா இப்போ நீங்க பதில் சொல்லாம இருக்கறப்போ சுந்தரி சிரிக்கல.. அவங்க தமிழ்ல என்னை விளக்க சொல்லி கேட்டது தப்பே கிடையாது.. ஆனா எல்லாம் தெரிஞ்ச மாதிரி எதுவுமே டவுட்ஸ் கேட்காம உக்காந்துட்டு இப்ப நான் கேள்வி கேட்கிறப்போ ஒன்னுமே தெரியாம முழிச்சிட்டு நிக்கிறீங்க இல்ல..? இதுதான் ஆக்சுவலி ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம்.. இனிமேலாவது உங்களுக்கு ஏதாவது புரியலனா மறுபடியும் கேட்டு தெளிவுபடுத்திக்கோங்க… அதுல எந்த கௌரவ கொறச்சலும் கிடையாது..” என்று சொன்னவன் அந்த வகுப்பு முடிந்ததற்கான மணி அடிக்கவும் “ஓகே கைய்ஸ்.. சீ யூ டுமாரோ..” என்று வெளியே வந்தான்..
சுந்தரி தான் சொல்லிக் கொடுத்ததை சட்டென பிடித்துக் கொள்ளும் விதம்.. தைரியமாய் எழுந்து தன் சந்தேகங்களை கேட்கும் விதம்.. மற்றவர்கள் ஏளனம் செய்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தன் வேலையில் கவனமாய் இருக்கும் பாங்கு இவை அனைத்தும் அவனை வெகுவாகவே கவர்ந்திருந்தது..
காலையில் அவளைப் பார்த்ததிலிருந்து அவன் மனத்தில் அவள் மேல் பெரிய மதிப்பு உண்டாகி இருந்தது.. ஒவ்வொரு முறையும் அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டு இருந்ததே தவிர குறையவே இல்லை..
##############
அதன் பிறகு ஒரு மாதம் கழிந்திருந்தது.. சுந்தரியும் வனிதாவுடன் பகலில் கல்லூரிக்கு சென்று மாலை வேளைகளில் கடையில் வேலை செய்தாள்..
கல்லூரியில் சித்தார்த்தோடு நல்ல நட்பு உருவாகி இருந்தது சுந்தரிக்கு.. மற்ற மாணவர்கள் தன்னை ஏதாவது ஏளனம் செய்தால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க பழகி இருந்தாள் சுந்தரி..
எல்லோருமாக இணைந்து உழைத்ததால் கடை இன்னும் நன்றாக முன்னேறி இருந்தது.. கடையில் வியாபாரம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது…
சுந்தர் ஷாலினி நிச்சயதார்த்த தேதியும் நெருங்கிக் கொண்டிருந்தது.. நிச்சயதார்த்தத்தை பிரம்மாண்டமாக பத்திரிகை அடித்து நடத்த திட்டமிட்டு இருந்தார் ஷாலினியின் அப்பா ரவிக்குமார்.. தன் ஒரே செல்ல மகளின் திருமணம் ஆயிற்றே.. சுந்தர் போன்ற ஒரு அருமையான மாப்பிள்ளை வேறு..
நிச்சயத்தையே வெகு விமரிசையாக செய்யவேண்டும் என்று எண்ணியதில் வியப்பேதும் இல்லை அவ்லவா?..
பத்திரிகை அடித்து வந்திருந்தது.. பத்திரிகையை பார்த்தவுடன் சுந்தருக்கு பத்திரிகையை முதலில் சுந்தரிக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.. உடனே அந்த நிச்சயதார்த்த பத்திரிகையை கையில் எடுத்துக் கொண்டு சுந்தரியின் வீட்டுக்கு புறப்பட்டான்..
காலை 8 மணிக்கு எல்லாம் அவள் வீட்டுக்கு சென்றால் அவள் கல்லூரி செல்வதற்குள் அவளைப் பார்த்து பத்திரிகையை கொடுத்து விடலாம் என்று எண்ணி காலையிலேயே கிளம்பினான்..
இங்கே சுந்தரி வீட்டில் சுந்தரியும் ரதியும் தனியாகத்தான் இருந்தார்கள்.. ரதி தன் கணவனை வீட்டை விட்டு என்று துரத்தினாளோ அன்றிலிருந்து அவனை வீட்டின் உள்ளே சேர்க்கவில்லை..
எங்கெங்கோ சுற்றிவிட்டு அதற்கு மேல் தங்க எந்த குடிகார நண்பனின் வீடும் இல்லாமல் முந்தைய நாள் இரவு ரதியை தேடி வந்திருந்தான் பாஸ்கர்..
வேகமாக கதவை தட்டியவன் “ஏய் ரதி.. கதவை திறடி.. புருஷன் என்னை துரத்திட்டு எவனோடடி நீ இங்க குடுத்தனம் நடத்திக்கிட்டு இருக்கே..? நான் இங்க கத்தி கத்தி கூவிட்டு இருக்கேன்.. அங்க எவனோடடி கொஞ்சி குலாவிட்டிருக்க..?” என்று கேட்டபடி இரவு வெகு நேரம் கதவை தட்டிக் கொண்டிருந்தவன் பிறகு குடிபோதையில் அங்கேயே மயக்கமாகி விழுந்திருந்தான்..
ரதியோ அவன் எவ்வளவு கத்தியும் கதவை திறக்கவே இல்லை.. சுந்தரிக்கு அவன் எங்கேயாவது உள்ளே வந்து விடப் போகிறான் என்று பயமாக இருந்தது..
ஆனால் காலையில் எழுந்தவள் கல்லூரிக்கு போக வேண்டுமே.. என்று மெதுவாக எட்டு மணிக்கு மேல் கதவை திறந்தவள் அங்கேயே பாஸ்கர் இன்னும் மயக்கமாக படுத்திருப்பதை பார்த்தாள்..
அவளிடம் வந்த ரதி “ஏய்.. சுந்தரி.. நீ பாட்டுக்கு கிளம்பி காலேஜுக்கு போற வழியை பாரு.. இந்த ஆளை நான் கவனிச்சுக்கறேன்.. எழுந்ததும் தொடப்பக்கட்டையை எடுத்து அடிச்சு துரத்திவிடுறேன் இந்தாளை..” என்றாள்
“அதெல்லாம் சரி தான் ரதி.. இப்போ போய் தண்ணி புடிச்சிட்டு வந்தா தான் சமைக்கவே முடியும்.. நான் போய் தண்ணி புடிச்சிட்டு வர்றதுக்குள்ள இவர் எழுந்துட்டார்னா உள்ள வந்துருவாரு.. அதான் யோசிக்கிறேன்..” என்றாள் சுந்தரி..
“சரி விடு.. நான் போய் தண்ணி புடிச்சிட்டு வரேன்.. நீ கதவை சாத்திக்கிட்டு குழந்தையை பார்த்துட்டு உள்ளே இரு..” என்று ரதி உள்ளே சென்று தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிய நேரம் அவளின் மகள் அழும் குரல் கேட்டது..
சுந்தரியும் அந்த சத்தத்தை கேட்டு “பாப்பா அழுவுறா ரதி.. அவளுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல.. இதுல இவ்வளவு அழுதான்னா இன்னும் மோசமாயிடும்.. நீ அவளை பாத்துக்கோ.. நான் போய் தண்ணி கொண்டு வரேன்.. ஆனா கதவை சாத்திட்டு உள்ளே இரு ரதி..” என்று சொன்னாள் சுந்தரி..
“சுருக்க தண்ணி எடுத்துட்டு வந்துடு.. உள்ள வந்த உடனே கதவை சாத்திட்டு வந்துடு..” என்று சொல்லி அனுப்பினாள் ரதி..
சுந்தரி தண்ணீர் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைய வரும் நேரம் பாஸ்கர் குடி போதை தெளிந்து எழுந்து விட்டான்..
சுந்தரி தன்னை தாண்டி செல்வதை கண்டவன் அவள் கையைப் பிடித்து இழுக்கவும் தான் கொண்டு வந்த தண்ணீர் குடத்தை அப்படியே கீழே போட்டு “விடுங்க.. கைய விடுங்க மாமா..” என்று சொல்ல அவனோ அவளுடைய இரண்டு கையையும் தன் இரு கைகளால் பிடித்துக் கொண்டான்..
“ஏ.. சுந்தரி குட்டி.. நீ இங்கதான் இருக்கியா? எப்ப வந்த..? இது தெரிஞ்சு இருந்தா மாமா எப்பவோ இங்க வந்து இருப்பேனே..” என்று இளித்துக் கொண்டே கூற “ஐயோ ரதி.. இங்க வந்து பாரேன்..” என்று சுந்தரி கத்த ரதி கதவை திறந்து கொண்டு ஓடி வந்தாள்..
“யோவ்.. கைய விடுயா..” என்று சொல்ல அவனோ சுந்தரியின் கையை விடுவதாய் இல்லை.. ரதி அடித்து பார்த்தாள்.. அவனை திட்டி பார்த்தாள்.. எதற்கும் அவன் மசியவில்லை..
“யோவ் விடுயா அவ கைய.. என் வாழ்க்கையை நாசமாக்கினது போறாதுன்னு அந்த பொண்ணோட வாழ்க்கையையும் குட்டிச்சுவர் ஆக்காத.. கைய விடுயா.. முதல்ல..” என்று கத்தினாள் ரதி..
“ஏண்டி எவனோ ஒருத்தன் பணம் கொடுக்கிறான்னு அவன் வீட்டோட உன் தங்கையை கொஞ்ச நாள் போய் இருந்துட்டு வர சொன்னே இல்ல..? எவன் எவனுக்கோ சந்தோஷத்தை கொடுக்குறா.. பணம் கொடுத்தா எவனுக்கு வேணா வ******யா இருப்பா.. ஆனா என்னை ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டா அப்படித்தானே..?”
அவன் நா குழற கேட்க சுந்தரிக்கு அப்படியே செத்து விடலாம் போல இருந்தது..
“யோவ்.. அவ பாட்டியை பாத்துக்க தான் அங்க போனா.. ஊரு தப்பா பேசும்னு சொல்லி தான் பாட்டி போனதுக்கப்புறம் அவ இங்க வந்து என்கூட இருக்கா.. நாக்கில நரம்பு இல்லாம பேசாத..” என்று ரதி சொல்ல “அதான் இந்த காலனியே பேசுதேடி.. அவ அங்க அந்த பெரிய மனுசனோட என்ன செஞ்சுகிட்டு இருந்தான்னு… இதுல நீ வேற தனியா சொல்லணுமா.. நேத்து வரும்போதே எல்லாம் என் காதுல விழுந்துச்சு.. இவங்க சொல்றது அத்தனையும் கேட்டா உன் தங்கச்சிய எவண்டி கல்யாணம் பண்ணிப்பான்? எவனுக்கோ வ*******யா இருந்தவளை எவனும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்டி.. அதனாலதான் சொல்றேன் நானே ரெண்டாவ.. ” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கழுத்தை ஒரு வலிய கரம் இறுக பற்றி இருந்தது..
சுந்தரி அது யார் என திரும்பி பார்க்க “மரியாதையா சுந்தரி கைய விடுடா..” என்று சொல்லியபடி அவன் கழுத்தை இன்னும் இறுக்கமாக நெருக்கி கொண்டு இருந்தான் சுந்தர்..