அழகான காலை வேளையில் அந்த நகரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த அப்பார்ட்மெண்ட் ஜிம்மில் அவன் எக்சர்சைஸ் செய்து கொண்டு இருந்தான்.
ஆறடியில் கட்டு மஸ்தான உடற்கட்டுடன் அவன் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான். அவனது ஹேர்ஸ்டைலும், முகத்தில் மீசையை தவிர வேறு முடி இல்லாததுமே கூறியது அவன் ஒரு காவலன் என்று. அவனது மொபைல் ஃபோன் ஒலித்தது. வேர்வையில் குளித்த தன் முகத்தை டவலைக் கொண்டு துடைத்தவன் அந்த ஃபோன் காலை அட்டன் செய்து காதில் வைத்தான்.
பல நாட்களாக அவனிடம் சிக்காமல் தண்ணீர் காட்டிக் கொண்டு இருந்த கூலிப்படை தலைவன் ஒருவன் இருக்கும் இடம் பற்றிய தகவல் தான் ஃபோன் காலில் அவனுக்கு கொடுக்கப் பட்டது. இதோ உடனே வருகிறேன் என்று சொல்லி விட்டு அவன் நேராக தனது ஃப்ளாட்டிற்கு சென்றான்.
கஞ்சி போட்டு அயர்ன் பண்ணிய தனது காக்கி யூனிபார்மை அணிந்து கொண்டு தனது கைத்துப்பாக்கியை சரி பார்த்து எடுத்துக் கொண்டு வேக வேகமாக கிளம்பினான்.
அவன் அரவிந்தன் ஐ.பி.எஸ் அதிகாரி. சட்டம் ஒழுங்கு பிரிவில் உதவி ஆணையராக பணிபுரிகிறான். தனது பொலேரோவில் அமர்ந்து வேகமாக அதை இயக்கினான்.
இன்ஃபார்மர் சொன்ன தகவலின் படி தான் தேடி வந்த குற்றவாளியை நெருங்கி விட்டான்.
அந்த கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் மாடியில் தான் அந்த குற்றவாளி தங்கி இருக்கிறான் என்று தகவல் கிடைத்திட தனியாகவே வந்து விட்டான் அரவிந்தன்.
“வெல்கம் அரவிந்தன் ஐ.பி.எஸ்” என்ற குரலில் திரும்பினான் அரவிந்தன். அவனைச் சுற்றி வளைத்து ஒரு பத்து பேர் நின்றனர் கையில் அரிவாள் கத்தியுடன்.
“தனியா வந்து மாட்டிக்கிட்டியே ஏசிபி” என்ற அந்த தாதா குணாவை, அனல் கக்கும் விழிகளில் பார்த்தான் அரவிந்தன்.
அவன் செய்யாத குற்றமே இல்லை கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று ஏகப்பட்ட வழக்குகள் அவன் மீது இருக்க சரியான ஆதாரங்களை திரட்டி அவனை சட்டத்தின் பிடியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்த போது அவன் தலைமறைவாகி விட்டான்.
இன்றோ அரவிந்தனை தனியாக சிக்க வைத்து கொலை செய்யவே அவன் நினைத்து இன்ஃபார்மரை உருட்டி மிரட்டி அரவிந்தனை தனியாக வர வைத்தான்.
“இன்னையோட உன் கதை முடியப் போகுது ஏசிபி” என்ற குணா தன் ஆட்களைக் கண்ணைக் காட்ட அரவிந்தனின் பின்னால் நின்றிருந்தவன் அவன் மீது அரிவாள் வீச வர தலையை குனிந்த அரவிந்தன் தன்னை வெட்ட வந்தவனின் கையை ஒரு முறுக்கு தான் அவனது கை உடைந்து போனது.
முன்னால் இருவர் வர அவர்களின் தாடை உடைந்து போனது அவன் கொடுத்த அடியில். பத்து பேரும் ஒரே நேரத்தில் சுற்றி வளைக்க அனைவரையும் வெளுத்துக் கட்டினான்.
அவன் அடித்த அடியில் அனைவரும் திசைக்கு ஒருவராக காது, மூக்கு, வாயெல்லாம் இரத்தம் ஒழுக மயங்கி கிடக்க குணா முன் அரவிந்தன் ஒரு அரக்கனை போல தான் தெரிந்தான்.
அவனை நெருங்கிய அரவிந்தன் ஒரே ஒரு குத்து அவன் மூக்கில் குத்தினான் குணா மயங்கி விழுந்தான். அவன் விழுந்த மறு நிமிடமே அங்கு வந்த காவலர்கள் குணாவையும், அவனது அடியாட்களையும் அள்ளிக் கொண்டு சென்றனர்.
“க்ரேட் மிஸ்டர்.அரவிந்தன்” என்ற கமிஷ்னரிடம் சிறு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தவன் அவரைப் பார்த்து சல்யூட் அடித்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
“ஏய் எவ்வளவு நேரம் தான் டீ கிளம்புவ டைம் ஆச்சு” என்று கத்திக் கொண்டு இருந்தார் அபிராமி. “அம்மா ஏன் கத்திட்டு இருக்கீங்க” என்ற படி அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் மயூரி.
அழகான காட்டன் புடவை அணிந்து கொண்டு இடைவரை நீண்ட கூந்தலை கொண்டையாக போட்டிருந்தாள். கண்ணில் மை தவிர முகத்தில் வேறு எந்த ஒப்பனையும் இல்லாமலே அழகாக இருந்தாள் மயூரி.
கழுத்தில் ஒரு மெல்லிய செயின், காதில் குட்டியாக ஒரு கம்மல், இடது கையில் கடிகாரம், வலது கையில் ஒரு மெல்லிய வெள்ளி பிரேஸ்லெட் அணிந்திருந்தாள்.
“சாப்பிட வா டீ” என்று அபிராமி அழைத்திட, “எனக்கு ஒரே ஒரு ஆப்பிள் போதும்மா” என்று கூறி வெட்டி வைத்திருந்த ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு விட்டு சிட்டாக தனது ஸ்கூட்டரில் பறந்தாள் மயூரி தான் வேலை செய்யும் பள்ளிக்கு.
கையில் பிரம்புடன் ப்ரேயரில் கேர்ள்ஸ் அருகில் நின்றிருந்தாள்.
ஐடி கார்டு அணியாதவர்கள், இரட்டை ஜடை போடாதவர்கள், காலில் ஷூ அணியாதவர்கள் என கண்காணித்து பனிஷ்மென்ட் கொடுத்துக் கொண்டு இருந்தாள் மயூரி. அவள் அந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தாள்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் மயூரி. லிஃப்ட்டில் அவள் நின்றிருக்க அதே லிஃப்ட்டுக்குள் ஒரு வாண்டு ஓடி வந்து நுழைய, “பாப்பா நில்லு” என்று அந்த குழந்தையை விரட்டிக் கொண்டு ஆறடியில் ஒருவன் வர அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
அவனது கூர்மையான விழிகளைக் கண்டவள் ஒரு நிமிடம் அசந்து நின்று விட ,அவனோ அவள் முன் சொடுக்கில் டான். அதில் அவள் தன்னிலை அடையை “ப்ளீஸ் மூவ்” என்றான் அவன். அவள் கொஞ்சம் விலகி நின்ற சமயம் “பப்பா பப்பா” என்று அந்த வாண்டு அவனைத் தூக்கச் சொல்ல அவனும் குழந்தையை தூக்கிக் கொள்ள அவள் தான் தலையில் அடித்துக் கொண்டாள்.
“ச்சே ஒரு பிள்ளைக்கு அப்பன் அவனைப் போயி ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல பார்த்து தொலைஞ்சுருக்கியே அதுவும் அவனே சொடக்கு போட்டு கூப்பிடுற அளவுக்கு” என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் மயூரி.
தனது ஃப்ளாட்டிற்கு சென்றவள் காலிங் பெல்லை அழுத்திட கதவைத் திறந்தாள் அவள் வயதுடைய பெண் ஒருத்தி.
“யாரு நீங்க” என்ற மயூரியிடம், “ஹாய் நான் ரூபிணி உங்களோட நெய்பர்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் ரூபிணி.
“மயூ வந்துட்டியா இது ரூபிணி நம்ம பக்கத்து ஃப்ளாட்டிற்கு புதுசா குடி வந்திருக்காங்க” என்ற அபிராமி, “ரூபிணி ரொம்ப நல்ல பொண்ணு” என்று ரூபிணிக்கு புகழாரம் சூட்டிக் கொண்டு இருந்தார். மயூரியும் புன்னகையுடன் அதை கேட்டுக் கொண்டு இருக்க அந்த நேரம் ரூபிணியின் மொபைல் ஃபோன் ஒலித்தது.
“மாமா” என்ற எண் தெரிய அதை அட்டன் செய்தவள் , “பக்கத்து வீட்டில் இருக்கேன் மாமா இதோ வரேன்” என்று கூறி விட்டு ஃபோனை வைத்தாள்.
“மயூ ஒரு நிமிஷம்” என்ற ரூபிணி வெளியே சென்று ஒரு குழந்தையுடன் மீண்டும் மயூரியின் வீட்டிற்கு வந்தாள்.
“மயூரி இது என் பொண்ணு தியா” என்றாள் ரூபிணி. லிஃப்ட்டில் பார்த்த அதே வாண்டு அதைக் கண்ட மயூரிக்கு புரிந்தது இந்த ரூபிணி லிஃப்ட்டில் சைட் அடித்த அந்த அழகனின் மனைவி என்று அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் உடை மாற்ற போகிறேன் என்று தன் அறைக்குள் நுழைந்தாள் மயூரி.
“வீடு எல்லாம் உங்களுக்கு ஓகே தானே” என்று அரவிந்தன் கேட்டிட, “ஓகே இல்லைன்னு சொன்னால் வேற வீடு பிடிச்சு தரப் போறியா?” என்றார் கன்னிகா.
அவரை முறைத்தவன் ஏதோ சொல்ல வர , “மாமா விடுங்க அத்தைக்கு உங்க கிட்ட வம்பு பண்ணலைனா தூக்கமே வராது” என்ற ரூபிணி , “சரி சரி சாப்பிட வாங்க” என்று அழைத்தாள்.
“பப்பா பப்பா எனக்கு மம்மு ஊட்டி விடு” என்று குழந்தை தியா கேட்டிட அவனும் குழந்தைக்கு ஆசையாக உணவினை ஊட்டி விட்டான்.
“ஏன் டீ மயூ உனக்கு அந்த ரூபிணியை பிடிக்க வில்லையா?” என்ற அபிராமியிடம், “அவளை ஏன் எனக்கு பிடிக்கனும்” என்றாள் மயூரி.
“அவள் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு அது மட்டும் இல்லை நம்ம தூரத்து சொந்தம். உன் வயசு தான் ஆனால் பாரு அவளுக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை இருக்கு” என்று அபிராமி கூறிட , “இப்போ என்ன நானும் ஒரு குழந்தை பெத்துக்கனுமா?” என்றாள் மயூரி.
“அதுக்கு முதலில் நீ கல்யாணம் பண்ணிக்கனும்டீ” என்ற அபிராமி , “நேற்று கூட ஒரு வரன் வந்திருக்கு பேசி முடிச்சுரட்டுமா?” என்றார் .
அவரை முறைத்தவள் “இப்போ என்ன அவசரம் என் கல்யாணத்துக்கு” என்றாள் கோபமாக.
“என்ன அவசரமா உனக்கு என்ன பதினைந்து வயசுன்னு நினைப்பா இருபத்தி ஐந்து வயசு ஆச்சு டீ” என்று அபிராமி புலம்ப ஆரம்பிக்க கை கழுவி விட்டு எழுந்து தன் அறைக்குள் சென்று விட்டாள் மயூரி.
“என்ன பொண்ணு இது அவளுக்கு பிடிக்காத விஷயத்தை பேசினால் உடனே ரூமுக்குள்ள போயி கதவை சாத்திக்கும்” என்று தலையில் அடித்து விட்டு தன் வேலையை கவனித்தார் அபிராமி.
அவருக்கு ஏனோ ரூபிணி யின் குழந்தையை பார்த்ததில் இருந்து தன் மகளுக்கும் திருமணம் முடிந்து அது போல ஒரு குழந்தை பிறந்து அந்த குழந்தை “பாட்டி, பாட்டி” என்று தன் புடவையை பிடித்துக் கொண்டு சுற்றிவராதா என்ற ஏக்கம் கூடியது.
“பக்கத்து வீட்டுக் காரங்க உன் சொந்தமா ரூபிணி” என்று கன்னிகா கேட்டிட “ஆமாம் அத்தை. என் தூரத்து சொந்தம் என் அம்மாவுக்கு தங்கச்சி முறை ரொம்ப நல்ல டைப்” என்று கூறிய ரூபிணி , “அவங்க பொண்ணுக்கு வரன் பார்த்துட்டு இருக்காங்களாம்” என்றாள்.
“பொண்ணு பார்க்க எப்படி இருப்பாள்” என்ற கன்னிகாவிடம், “நம்ம அரவிந்த் மாமாவுக்காகவே பொறந்தவள் போல தான் இருந்தாள்” என்று சிரித்தாள் ரூபிணி.
…. தொடரும்…