அழகான காலைவேளையில் பறவைகளின் கீச் கீச் என்ற சத்தத்தில் சந்தோசமாக கண் விழித்தாள் அவள் இலக்கியா. கண் விழித்தவள் காலண்டரைப் பார்க்க கடுப்பாகிப் போனாள். பிப்ரவரி 14. உலக காதலர் தினம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அது அவளது காதல் முறிந்த தினம். துக்கநாள் என்றே சொல்லலாம். அவள் மனம் என்றோ செத்து மடிந்த தன் முதல் காதலை நினைத்துப் பார்த்தது. அது வெறும் இன்பாச்சுவேசன் தான் என்று அவள் மூளைக்குத் தெரியும் ஆனால் பாலாய் போன மனசு அதை ஒத்துக் கொள்ள வில்லை.
இலக்கியா அந்த குடும்பத்தின் மூத்தமகள். அப்பா ரவீந்திரன் ஒரு விபத்தில் தவறிவிட்டார். அம்மா வெண்மதியும் அவள் பிறந்தவுடனே இறந்து போனதால் அவளது தந்தை ரவீந்திரன் சகுந்தலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சகுந்தலாவிற்கு இரண்டு பிள்ளைகள் மகன் தீபக். மகள் பிரதீபா. மற்ற மாற்றாந்தாய் போல் சகுந்தலா அவளை அடித்து துன்புறுத்தி கொடுமை செய்யவில்லை. மாறாக அன்பு என்ற போர்வையில் அவள் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார். அதை உணராமலே தன் சித்தியை அம்மா என்று அவர் மீது அதிக பாசம் வைத்துக் கொண்டு இருக்கிறாள் இலக்கியா.
நம்ம நாயகியை பத்தி சொல்லனும்னா ரொம்ப பெரிய பேரழகி எல்லாம் கிடையாது . நம்ம அக்கம் பக்கம் வீட்டில் இருக்கிற பொண்ணுங்க மாதிரி சாதாரண பொண்ணு அவ்வளவு தான்.
இஞ்சினியரிங் முடிச்சுட்டு ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பொதுவா இந்த காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் அவளுக்கும். பார்க்கும் கண்கள் எல்லாம் நல்ல கண்கள் என்று சொல்லி விட முடியாதல்லவா. அப்படிப் பட்ட ஒரு கழுகின் கண் அவள் மீதும் பட்டது. அதனால் அலுவலகத்திற்கு செல்லவே எரிச்சலாக இருந்தது.
ஆனால் குடும்ப சூழ்நிலை அவள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். அவளது வருமானத்தை நம்பித் தான் மொத்த குடும்பமும் இருந்தது. அப்பா ஏதோ கவர்மென்ட் ஆபிஸில் வேலை பார்த்ததால் அம்மாவிற்கு பென்சன. வருகிறது. அதை வைத்து தான் பிள்ளைகளை படிக்க வைத்தார் சகுந்தலா. அவர் எங்கு படிக்க வைத்தார் இலக்கியா தான் எல்லாம் படிக்க வைத்தாள். இலக்கியாவின் பாட்டி தெய்வானை தான் பேத்தியின் கல்லூரி செலவிற்கு பணம் கொடுப்பார். தனக்கு தன் பாட்டி கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து சேமித்து தம்பி, தங்கைக்கு செலவு செய்தாள்.
எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்தவளின் சிந்தனை வீட்டு பிரச்சினைகளை பற்றியே சுற்றி வந்தது. அப்பாவின் வாரிசு வேலை தம்பி தீபக்கிற்கு கிடைக்க வேண்டும் என்று சகுந்தலா ஆசைப்படுகிறார். மூத்ததாரத்தின் மகளான இலக்கியாவிற்கு தான் வேலை கிடைக்க வாய்ப்பு இருந்த போதிலும் அவள் அதை தனக்கு வேண்டாம் என்றும் தம்பிக்கு கிடைப்பதில் தனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றும் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டாள். அதனால் சீனியாரிட்டி மிஸ் ஆவதை ஈடு செய்ய மூன்றரை லட்சம் லஞ்சம் கொடுத்தால் அந்த வேலையை உடனே தீபக்கிற்கு வாங்கி விடலாம் அதற்கு பணத்தை எப்படியாவது புரட்டிக் கொடுமா என்று சகுந்தலா இலக்கியாவிடம் கேட்க அவளும் அலுவலகத்தில் லோன் கிடைக்குமா என்று பார்க்கிறேன் என்றாள்.
வீட்டில் உள்ள சேமிப்புகள் பிரதீபாவின் திருமணத்திற்கு வேண்டும் என்று சகுந்தலா கூறி விட்டதால் தீபக்கின் வேலைக்கு எப்படி பணம் புரட்டுவது என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தாள்.
என்னம்மா ஆபிஸ் கிளம்பிட்டியா என்று வந்த சகுந்தலாவிடம் ஆமாம் அம்மா என்றாள் இலக்கியா. தம்பி வேலை விசயமா என்று இழுத்தவரிடம் சரிங்கம்மா முயற்சி பண்ணி பார்க்கிறேன் என்றாள் இலக்கியா. என்னடா முயற்சி பண்றேன்னு சொல்லிட்ட நீ தானே இந்த குடும்பத்தோட மூத்த பொண்ணு உன்னை நம்பி தானே உன் தம்பி, தங்கச்சி இருக்காங்க அவங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நீ தானே உருவாக்கி கொடுக்கனும் என்று தனது வழக்கமான டையலாக்கை அவளிடம் கூறினார் சகுந்தலா. அவளும் தன் அம்மாவிடம் ஆபிஸ்ல லோன் போட முடியுமான்னு பார்க்கிறேன்மா என்று கூறி விட்டு உணவுமேஜையில் அமர்ந்தாள். அவளுக்கான உணவாக இட்லி இருக்க பிடிக்கவில்லை என்றாலும் பெயருக்கு இரண்டு இட்லியை பிய்த்துப் போட்டு சாப்பிட்டு மதிய உணவு அடங்கிய டப்பாவை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.
பஸ் ஸ்டாப்பில் இவள் வயது பெண்கள் எல்லோரும் காதலர் தினம் என்பதால் தங்களை அலங்கரித்துக் கொண்டு நின்றிருந்தனர். அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோசத்தைக் கண்டவள் கசந்த புன்னகையுடன் அவர்களைக் கடந்து பஸ்ஸில் ஏறினாள். கூட்டமான பஸ்ஸில் இடி மன்னர்களுக்கு நடுவில் பயணம் செய்து ஒரு வழியாக அலுவலகம் சென்று விட்டாள்.
அலுவலகத்தில் அவளையே சுற்றி வந்த அந்த கழுகுப் பார்வையை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எரிச்சலாக இருந்த போதும் அதை பொருட்படுத்தாமல் தன் வேலையை பார்த்தாள்.
என்ன திமிரு நான் பார்க்கிறேன் கொஞ்சமாவது கண்டுக்கிறாளானு பாரேன். இருடி இன்னைக்கு உன்னை என்ன பண்ணுறேனு பாரு என்று நினைத்தவன் அந்த பைலை பார்த்து சிரித்துக் கொண்டு அதை மறைத்து வைத்தான்.
இலக்கியாவிற்கு பொதுவாகவே நண்பர்கள் என்று யாரும் இல்லை. அவள் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டாள். அலுவலகத்தில் அவளுக்கு பெயர் சிடுமூஞ்சி . அநாவசியமாக எவரிடமும் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள்.
அவளைப் பொறுத்தவரை நட்பு என்பது எல்லாமே பொய். ஒருவர் மற்றவரிடம் நட்பு கொள்வது ஒரு விதமான தேவைக்காகவே அவர்களது தேவை முடிந்த பிறகு நட்பு என்ற ஒன்று அங்கு இருப்பதில்லை.
இந்த உலகில் எந்த நண்பனும் நிரந்தரமானவன் இல்லை என்பதே அவளது எண்ணம். அதற்கான காரணங்களும் உண்டு. நண்பர்களால் பட்ட வலிகளும் , வேதனையும் தான் அவளால் யாரையும் நண்பனாக ஏற்றுக் கொள்ள முடியாத காரணமாகவும் உள்ளது.
அந்த கடற்கரை முழுக்க காதல் ஜோடிகளின் கூட்டம் எங்கும் அலை மோத அவனோ அவர்களைப் பார்த்து பொறம்போக்கு நாய்ங்க இதுங்க பண்ணுற எச்ச வேலைக்கு பெயர் காதலாம் என்றான். ஏன்டா அப்படி சொல்லுற என்ற நண்பனிடம் பின்ன இங்கே சுத்தற எவனாவது கூட சுத்துறவளையே கல்யாணம் பண்ணிப்பான்னு நினைக்கிற கண்டிப்பா இல்லை. அவளுக்கு அவனோட பணம் மேல ஆசை. அவனுக்கு அவளோட உடம்பு மேல மோகம். இதுக்கு பெயர் காதலா அப்படியே இவங்க ஒருத்தருக் கொருத்தர் கல்யாணம் பண்ணிகிட்டாலும் அடுத்த மூன்று மாதத்தில் அவள் இன்னொருத்தன் கூட படுத்துட்டு இருப்பாள் இது காதலா என்றவன் பீர் பாட்டிலை தூக்கிப் போட்டு உடைத்தான். என்னடா மச்சான் என்ற மற்றொரு தோழனை தடுத்தவன் ப்ரேம் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படியே முடிஞ்சு போனதை நினைத்து கவலைப் பட்டுட்டே இருப்ப என்றான். இல்லை கிஷோர் முடியலடா இந்த பைத்தியங்களை பார்க்கும் போது நானும் ஒரு காலத்தில் இப்படி பைத்தியக் காரனா தான் சுத்திட்டு இருந்தேன்னு நினைத்தால எரியுது. இங்கே இந்த இடத்தில் சுனாமி வந்து இந்த மொத்த பைத்தியங்களையும் அள்ளிகிட்டு போகனும் அதான் எனக்கு வேண்டும் என்றவன் ஒரு புல் பாட்டில் பீரைக் குடித்தான்.
கிஷோர் அவனைத் தடுக்க வர விடு கிஷோர் என்றான் இன்னொரு நண்பன் வினய். முழு பாட்டில் பீரையும் காலி செய்தவன் நேராக தன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.
குடித்து தள்ளாடியபடி வரும் மகனைக் கண்டு கவலைப் பட்டார் அவனது அன்னை சீதாலட்சுமி. கடவுளே என் பையனுக்கு எப்போ இந்த பழக்கம் விடும் . அவனை இப்படி பார்க்க முடியலையே என்று நொந்து கொண்ட சீதாலட்சுமியை தன் தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தினார் அவரது கணவன் ராமச்சந்திரன்.
அவளது கண்கள் கண்ணீரைச் சிந்தினாலும் அதை துடைத்துக் கொண்டவளின் உடலும், மனமும் கூசியது மாலை அலுவலகத்தில் நடந்த நிகழ்வை நினைத்து. பஸ்ஸில் அமர்ந்திருப்பதால் தன் கண்ணீரை பிறர் அறியாமல் துடைத்துக் கொண்டவள் நாளை எதிர்கொள்ளப் போகும் பிரச்சனையை எண்ணியபடியே நொந்து கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
நேரம் காலம் தெரியாமல் சகுந்தலா வேறு என்ன இலா லோன் பத்தி ஆபிஸ்ல பேசிட்டியா என்றதும் அவளுக்கு வந்த கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு இல்லைம்மா என்று கூறி விட்டு தன்னறைக்குள் நுழைந்து மெத்தையில் சரிந்தாள். அழுது அழுது ஓய்ந்தவள் எழுந்து சென்று பாத்ரூமிற்குள் நுழைந்து ஷவரைத் திறந்து விட்டு அதன் அடியில் நின்றாள்.
நாளை அலுவலகத்தில் என்ன நடக்குமோ. தன் வேலை போய்விட்டால் இந்த குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது. அடுத்து வேலை கிடைக்க எத்தனை நாளாகுமோ என்ற கவலையிலே அவள் நனைந்து கொண்டு இருந்தாள்.