அன்னமே 48 49
உன் கூடவே வருவேன்
உன்னை என்னைக்கும் கைவிட மாட்டேன்
என் உசுரா பாத்துக்குவேன்
எனக்கு நீ உனக்கு நானுன்னு
அக்கினி சாட்சியா பெரியவங்க முன்ன
மாங்கல்யம் சூடி சதிபதியா வாக்கு கொடுத்துட்டு,
பாதியில விட்டுட்டு போன புருஷன்,
திரும்பி வருவானுன்னு
குல தெய்வத்துகிட்ட
ஒத்த ரூபா முந்தானையில முடிஞ்சு வச்சு
கும்பிட்டு வேண்டிக்கிட்டு
பாதகத்தி ஒத்தையடி பாதையில
காத்து நிக்கிறேன்…
செவ்வந்தி வீட்டுல இருந்து குறுக்கு பாதையில போனா கடை வீதிக்கு கிட்டக்கவே போலாம். மனசு முழுக்க இழந்த வாழ்க்க பாரமா அழுத்திக் கெடக்க காலு எப்பவும் போற திசையில போச்சு. சின்ன வயசுல இருந்தே இந்தப் பக்கம்தான் விளையாடுவா.
வாய்க்கால்ல நண்டு பிடிப்பா, மீனு பிடிச்சு விளையாடுவா. சிட்டுக்குருவிக்கு வலைய போட்டு பிடிப்பா பிடிச்சத வீட்டுக்கு எடுத்துட்டு போய் அமுதாகிட்ட சமைக்க தருவா.
சின்ன புள்ள எண்ணத்தையோ கொண்டு வந்து தரான்னு தூக்கி எறியாம அவ கஷ்டப்பட்டு பிடிச்சுட்டு வந்தான்னு மதிச்சு அமுதா சமைச்சு கொஞ்சம் கொஞ்சமா திங்க கொடுக்க. உற்சாகமான செவ்வந்திக்கு அடுத்த தடவ இன்னும் தேடி தேடி பிடிப்பாள். காடை, காடை முட்டை, வாத்து முட்டைன்னு தேடி எடுத்துட்டு வருவா தூக்கு பாத்திரத்துல.
கருப்புச்சாமி அதுக்கும் பங்கு கேட்டு வம்பு பண்ணுவான் சின்ன வயசுல தப்பிச்சு ஓடிப்போவா செவ்வந்தி.
அவளே சமைக்க தெரிஞ்சுக்க அவளை வம்படியா நாக்குக்கு ருசியா செஞ்சு தந்துட்டு போடின்னு இழுத்து நிக்க வைப்பான்.
கையில அமுதா கொடுத்த பை இருக்க, அதை மார்போடு கட்டிகிட்ட செவ்வந்தி கண்கள் சுத்தியும் இருக்கறத உணரல.
பாதையில கண்ணை பதிச்சு அவ பாட்டுக்கு போனாள்.
பொண்டாட்டிய பாக்கறதுக்கான வழிய யோசிச்சுட்டே பைக்கை வரப்பில் ஓட்டிட்டு வந்த கருப்பன் அவளை பாத்துவிட, முகத்தில் பல்பு எரிஞ்சது அவனுக்கு.
அவளுக்கும் தனக்கும் இடையில பிரச்சனை அம்புட்டும் மறந்து போவ, பைக்கை ஓரமா நிறுத்திட்டு, வரப்பில் இறங்கி நடந்தான்.
அவ போட்டுக்கிட்டு இருந்த ஜாக்கெட் லூசா தோளில் சரிஞ்சு போவ, நேரா இழுத்து விட்டுட்டே வந்தவளை பாத்தவனுக்கு பொசுக்குன்னு போனது. இடுப்பு இன்னும் ஒல்லியா இருக்க அதில ஆசையா விளையாடிய நினைவு வந்துச்சு அவனுக்கு.
“எலும்பா போய்ட்டாளே நல்லா இளைச்சு போய்ட்டா”
நெஞ்சில் பிசைவது மாதிரி வலிக்க, மேற்கொண்டு முன்னேறி நடக்காம அப்படியே நின்னுட்டான்.
அவனுக்கு ஒரு அடியில இடமிருக்க கருத்து நிலத்துல ஊனி நின்ன பாதத்த பாத்த செவ்வந்தி அது யாருதுன்னு தெரிய திகைத்து நிமிர்ந்து பார்த்தவள் எதிரில அவன் நிக்க கண்டு, விக்கித்து போனாள்.
வாயாடி செவ்வந்தியா இருந்தா வந்துபாரு வட்டப்பாரைக்குன்னு எதித்து நிப்பா. தள்ளி போ மச்சான் எரும மாடு மாதிரி நிக்கறன்னு ஒரு போடு போடுவா.
ஓய்ஞ்சு போனவகிட்ட அந்தத் தெம்பு இல்ல இப்ப.
அவனை பாத்த மனசு அவன்கிட்ட ஆயிரம் கேள்விய கேட்டு நிக்க, மலுக்குன்னு கண்ணுக்குள்ள கண்ணீர் சுரக்க தன்ன சுத்தி பாத்தவளுக்கு அவன் வயக்காடு வழியா வந்துட்டது தெரிய, தப்பு தன் மேலதான்னு பட. அவன் சுருக்குன்னு எதையாவது பேசி உசுரோட சாவடிக்கறதுக்கு முன்ன விலகிப் போவ மனசு சொல்லுச்சு.
கருப்புச்சாமிய செவ்வந்திக்கு நல்ல பழக்கம். கல்யாணம் ஆன அன்னைக்கு அவன் காட்டுன முரட்டுத்தனம் எல்லாம் அடுத்த நாளுல அவன் அனுசரணையா இருந்தா அதுவே பிடிச்சும் போவும் அவளுக்கு. காமத்தில் முரட்டுத்தனத்தை எதிர்பார்க்குற பொண்ணுங்க உண்டு. இப்ப அது ஒரு பேச்சில்ல இங்க. செவ்வந்திக்கு தாம்பத்தியத்தில எந்த வருத்தமோ வேதனையோ இல்ல. புருஷன் பொண்டாட்டின்னா அது இருக்குமுன்னு தெரியும் அவளுக்கு.
சவத்த கூட கண்ணுல பாக்க விடாம நாய அடிச்சு தூரத்திட்டாங்க அதுவும் கட்டுன தாலிய அத்துப் போட்டு அனுப்பிட்டாரே ராவும் பகலும் செவ்வந்திய தூங்க விடாம கொன்னுச்சு இந்த நினைப்பே.
மனசாட்சி இல்லாத பொம்பளை மாமியாரை நெனைக்கையில கசப்பு வழிஞ்சது அவளுக்கு.
வரப்புல இருந்து வயல்ல பாத்திக்குள்ள இறங்கின செவ்வந்தி அவனை தாண்டிப் போய் ஒரே ஓட்டமா அங்க இருந்து போனாள்.
மனசுக்குள்ள இருக்கறத அவங்கவங்க மென்னு முழுங்கிகிட்டே வேலைய பாத்தனர்.
அமுதாவுக்கு வீட்டுல புருஷனுக்கும் பெத்ததுங்களுக்கும் ஆக்கி போடவும் வீட்டு வேலைய பாத்துகிட்டு ஆடு மாட்ட கவனிக்கவுமே சரியாப் போனது.
கண்ணப்பன் உழவு வேலை இருக்குன்னு உழவு மாட்டை ஓட்டிட்டு போயிட்டார். இளவரசன் வேலைக்கு எப்பவும் போல போய்ட்டுத்தான் இருந்தான் மனசு சரியில்லன்னு வீட்ல உக்காந்தா சம்பளம் தர்றவன் விட்டு வைப்பானா? கிளம்பிட்டான்.
“ஏண்டி நேத்து பாலை எடுத்துட்டு போனியே யாராச்சும் ஏதாச்சும் கேட்டாங்களாடி?” அமுதா பாலை சுத்தம் செய்த கேனில் ஊற்றினார்.
“எதுவும் கேக்கலைம்மா. தெரிஞ்ச கதைத்தான” சோம்பலா சொன்ன செவ்வந்தி பைக்கில் கேனை மாட்டினாள்.
“கண்ணு ஊட்டுக்கெல்லாம் தரவேண்டாம். சொசைட்டிக்கு தந்துட்டு அம்சா கடையில கொடுத்துட்டு வா போதும். பாலு நின்னுருச்சு. கண்ணு போட்டாத்தான் இனிமேட்டு பாலு” அமுதா சொல்லியனுப்ப.
“எத்தன தடவ சொல்லுவ. நா பாத்துக்கறேன் போ” சொல்லிட்டு கெளம்பிய செவ்வந்திக்கு எங்கிட்டு வேலைக்கு போவன்னு குழப்பமா இருந்துச்சு.
அவங்க ஊருல வேலை தர மாதிரி கருப்பன் வயலும் சத்தியசீலன் தேங்கா தோப்பும்தான் இருந்துச்சு.
சத்தியசீலன் முசுடுன்னு ஊரு முழுக்க பேச்சுங்கறதால அந்தப் பக்கம் போகவே மாட்டா செவ்வந்தி.
அதைவிட்டா கருப்பன் வயலு இருக்க அங்க பத்தி நெனைக்கவே இப்ப புடிக்கல செவ்வந்திக்கு. அதனால பக்கத்து ஊருல இருக்க செங்கல் சூளைக்கு போவலாமுன்னு நெனச்சா. அவ வேலைக்கு போவனும்னு யாரும் கேக்கலை. இருந்தாலும் போவனுமே, கல்யாணத்துக்கு வாங்கின கடனு கழிக்கணுமேன்னு செங்கல் சூளையிலும் கஷ்டப்பட தயாரானாள் செவ்வந்தி.
அடுத்த வீதியில இருக்க பொன்னியக்கா சூளைக்கு போவுமுன்னு தெரிய, அந்த அக்காகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தாள். நாளைக்கு போவையில என்னையும் கூப்பிடுக்கான்னு.
வீட்டுக்கு வந்த செவ்வந்தி ஒரம்பரை வந்திருக்கவும், வாங்கன்னு சொல்லிட்டு உள்ளே போனாள்.
வந்தவர் அமுதாவுக்கு ஒண்ணுவிட்ட அண்ணன் முறையாவுது.
செவ்வந்திக்கு கல்யாணம் ஆன மண்டபத்துல வச்சு இளவரசன பாத்தவருக்கு அவன் அமைதியும் பொறுப்பும் பிடிச்சுப் போவ, அவன் ஜாதகத்தை வாங்கிக்கொண்டார்.
ஜாதகம் பொருந்திப் போவ, வந்தவருக்கு ஒரு யோசனையும் மனசுல ஓடுச்சு. கேக்கலாமா வேண்டாமான்னு தயங்கிட்டே இருந்தவருக்கு செவ்வந்திய பாத்ததும் அவ கழுத்துல போட்டிருந்த தேன் பாசிய பாத்துட்டு ஒரு மனசா முடிவெடுத்துட்டார் கேட்டுடலாமுன்னு. வந்தவர் முழு விவரமும் தெரிஞ்சுட்டுத்தான் வந்திருக்கார். அதனால தைரியமாவே பேச்சை எடுத்தார்.
விவரமெல்லாம் தெரிஞ்சுட்டு வந்தவர் கருப்புச்சாமி குணத்தையும் தெரிஞ்சுக்கிட்டு வந்திருந்தா அவருக்கு நல்லதா போயிருக்கும். அதான் முடிஞ்சுது இல்ல யாரும் குறுக்க வரமாட்டாங்கன்னு கருதினார்.
“அமுதா இங்க பாரு புள்ள அண்ணன் நா சொன்னா சரியாத்தேன் இருக்குமுன்னு நம்புறியா. புடிக்கலைன்னா தேங்காய உடைச்ச மாதிரி உடைச்சு சொல்லிப் போடு. சம்பந்தி ஆவப்போற நமக்குள்ள எந்த சங்கடமும் வரப்படாது பாரு” பொன்னன் தயங்கி கேட்டார்.
ஏன்னா புள்ளைய கொடுக்க போற எடத்துல எதுவும் சங்கடம் வந்துடுச்சுன்னா வரப்போவ வசதிப்படாதுல்லன்னு மவளுக்காக கவனம் பாத்தார் பொன்னன்.
“சொல்ல வந்தத சொல்லுண்ணா” அமுதா கேட்டார். புதுசா என்ன சொல்லப் போறாரு. செவ்வந்தியப் பத்தி எதையும் தப்பாச் சொன்னா நாக்குல சூட்டை இழுக்கிற மாதிரி கேள்விய கேட்டு அனுப்பிடணும்னு நெனச்சார்.
இளவரசனுக்கும் எம்மவ சீதாவுக்கும் பொருத்தம் அமோகமா இருக்குது. கண்ணை மூடிட்டு கட்டி வைக்கலாமுன்னு ஜோசியர் சொல்லிப்புட்டார் கண்ணு” பொன்னன் சந்தோசமாய் சொன்னார்.
கண்ணப்பன் பொன்னன் சொன்னதை கேட்டுட்டே வந்தாலும் எதையும் சொல்லலை.
அமுதா புருஷனை பார்த்தார்.
“வாங்க மச்சான்” பொன்னன் கண்ணப்பனை வரவேற்றார்.
“வாங்க மச்சான்” கண்ணப்பனும் பேச வசதியா அங்கேயே உக்காந்துட்டாரு.
“நா வந்த விஷயம்” அவர் ஆரம்பிக்க.
“காதுல விழுந்துச்சு மச்சான். நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். ஆனா பாருங்க இருக்க பணம் முழுக்க செவ்வந்திக்கு கல்யாணம் பண்ணதுல சரியாப் போச்சு. இனிமேட்டு பத்து பைசா எங்கிட்ட இல்ல” கண்ணப்பன் தன் நிலையை எடுத்துச் சொன்னார்.
“அதுக்கென்னங்க. நாம கோவில்ல தாலிய கட்டிடலாம். தாலிக்கொடி தங்கத்துல பொறவு காசு இருக்கப்ப பண்ணி போடுங்க. இப்ப கல்யாணத்தை முடிச்சுக்கலாம்”
பொன்னன் சொன்னது சரியாத்தான் பட்டுச்சு அமுதாவுக்கும் கண்ணப்பனுக்கும். ஆனாக்கா என்னதான் எளிமையா பண்ணாலும் ஒரு லட்சமாவது வேணுமே அதுக்கு கருணாவத்தான் கேக்கணும்னு நெனச்ச கண்ணப்பன் “இதப்பத்தி நாங்க பேசிட்டு சொல்றோம்” யோசனையா சொன்னார்.
“அப்புறம் இன்னொரு விஷயம் கண்ணப்பா” ன்னு ஆரம்பிச்சவர்,
“என்ற மகனுக்கு கல்யாணமாகி அவன் பொண்டாட்டி விபத்துல செத்தது உனக்கு தெரியும். அதான் வந்தியே சாவுக்கு” வருத்தமா சொன்னார் பொன்னன்.
“நல்ல பொண்ணு விதி அப்படிங்கையில யாரு என்ன செய்ய” வருந்தினார்கள்.
“உம்மவளை அவனுக்கு கேக்கலாம்னு நெனச்சேன் மச்சான். அவனுக்கும் சின்ன வயசுதான். இப்படியே விட்டுடக் கூடாது பாரு”
அமுதாவும் கண்ணப்பனும் ஒருத்தரை ஒருத்தர் யோசனையாக பார்க்க, “நல்லா யோசிங்க. சீதாவுக்கும் இளவரசனுக்கும் கல்யாணம் ஆனதும் இவங்களுக்கு பண்ணிப்புடலாம். நம்ம பெரியவங்க பாத்து நல்லதுன்னு பண்ணி வைக்கலாம். அவங்க வாழ்க்கையை வாழட்டும்” அவர் எடுத்து சொல்ல.
அவங்க வெளியே பேசிகிட்டு இருந்ததை உள்ள இருந்து கேட்ட செவ்வந்திக்கு மயக்கம் வர்ற மாதிரி ஆவ, சுவற்றை பிடித்து மெதுவா உக்கார்ந்தாள்.
சுவத்துல தலைய சாச்சிட்டு உக்காந்த செவ்வந்திக்கு வரப்போகும் வாழ்நாளை நினைக்க பயமா இருந்துச்சு. மனசு ஒத்துப் போச்சோ இல்லையோ மச்சான் கூட பொழைச்சுட்டோம். இன்னொருத்தனை மனசார ஏத்துக்கவே முடியாதுன்னு தோன,
சூடான பால்ல வாய வச்ச பூனையாட்டம் ஆச்சு செவ்வந்தி மனசு.
ஒரு கிண்ணம் நிறைய பசும்பாலை காய்ச்சி ஊத்தி வச்சிருந்துச்சு. அதைப் பாத்த பூனை ஆவலா பசியோட குடிக்கப் போவ, பால்ல இருந்த சூடு அதோட வாயை பாதம் பாத்துரும். பாவம் அதோட பசி பறந்து போய் சூடு பட்ட நாவை வச்சுட்டு வலியில துடிக்கும்.
வெளியே கண்ணப்பன் கூப்பிடும் குரல் கேட்க கண்ணை துடைச்சுட்டு எந்திரிச்சி போனாள் செவ்வந்தி.
“அப்பா” கேட்டுட்டே பக்கத்துல போனாள்.
“கண்ணு இதைக் கொண்டு போய் சாமி படத்துகிட்ட வை” இளவரசன் ஜாதகத்தை செவ்வந்திகிட்ட தந்துவிட்டார்.
இவங்க பேச்ச செவுத்துகிட்ட நின்னு ஒட்டுக்கேட்ட பக்கத்து வீட்டுக் கெழவி கருப்புச்சாமிகிட்ட வத்தி வைக்க ஓடுச்சு. சில பேருக்கு பொழுது போக்கே இதான் அடுத்தவன் வீட்டுல என்ன நடக்குதுன்னு பாக்க ஒரு ஆர்வம்.
அத்தியாயம் 49
உன்ன நானும் என்ன நீயும்
விட்டுக் கொடுக்க நாம நெனைக்கல
தனித்தனியா விலகிப் போவ நெனைக்கல
ஆனா விதி விளையாட விட்டு விலகி நிற்கிறோம்.
விளையாடுனது விதியா…
மதியா…
ஏதோ ஒண்ணு நாம மனசொத்து இருக்கலையே மச்சான்.
மனுசு ஒத்தையில கெடந்து தவியா தவிக்குதே.
இழந்தது திரும்பி வாராதான்னு நெஞ்சு அடிச்சுக்குது.
சூளைக்கு போறேன்னு சொன்னதுல பெத்தவங்களுக்கு பிடித்தமில்லன்னு செவ்வந்திக்கு புரிஞ்சு போக, அவ பெருசா எடுத்துக்கலை அத.
அவ தோழிக்கு ஆன கொடுமை தனக்கு ஆவ வேணாமுன்னு யோசிச்ச செவ்வந்தி என்னதான் பெத்தவங்கன்னாலும் இப்ப இருக்க நிலைமையில சும்மா உக்காந்து திங்க கூடாதுன்னு நெனச்சா. இவ இந்த அளவுக்கு யோசிக்க காரணமான அவ தோழி நிலை என்னன்னு நமக்கு தெரிய வேணாமா?
கல்யாணம் ஆகி போன அவ தோழிக்கும் அவ புருசனுக்கும் பேச்சு வார்த்தையில சங்கடம் வர, ஒண்ணுக்கொன்னு சண்டையாச்சு. அதில பொறந்த ஊட்டுக்கு வந்துட்டா அவ.
நாலு வாரமாவ வாரம் மாசமாவ சண்டை போட்டுட்டு வந்த புள்ள புகுந்த ஊட்டுக்கு போற வழிய காணாமுன்னு பெத்தவங்களுக்கு சலிப்பா போச்சு.
கல்யாணத்துக்கு முன்ன சோறு போட்டு வளத்துனா பெத்த கடமை கண்ணு. உக்காந்து தின்னு அப்பன் சொத்த நீ அழிக்க அவன் அங்க புது மாப்பிள்ளையாட்டம் சுத்திட்iடு இருக்கான். பொண்டாட்டிக்கு சோறு போட வக்கில்லாத நாயின்னு அவ புருஷனை பேசிப்புட அவளுக்கு ரோசம் வந்து செத்தாலும் புருஷன் வீட்டுல சாவறேன்னு சொல்லிட்டு போய்ட்டா.
அதை யோசிச்ச செவ்வந்திக்கு பெத்தவங்க சுருக்குன்னு ஒத்த சொல்லு சொல்லிட்டா இருக்க குறை உசுரும் போயிருமேன்னு பயமா வந்துச்சு.
கட்டிக்கிட்டு போனவன் ராசாத்தியாட்டம் பாத்துக்கலன்னாலும் பரவால்ல அவனை யாரும் தப்பு சொல்ல விடக்கூடாதுன்னு அவ மனசு நெனச்சது.
அதுபோக சும்மா திங்க அவளுக்கும் மனசு ஒப்பலை கஷ்டமான வேலைன்னு தெரிஞ்சே கிளம்பிட்டா செவ்வந்தி.
கண்ணப்பன் பக்கத்து ஊருல உழவு வேலைக்கு போறது போல செவ்வந்திய அம்புட்டு தொலைவு விட மாட்டாங்க வீட்டுல. அதனால நடக்கற தொலைவுக்கு இருக்க வேலையா பாத்து தேடிகிட்டா செவ்வந்தி.
அவ உழைச்சு கொட்டித்தான் வயிறு நிரம்பும்னு இல்ல வீட்டுல. ஆனாக்கா சும்மா இருந்தா பைத்தியம் புடிக்கும் போலாச்சு அவளுக்கு. அதனால சூளைக்கு கஷ்டம்னாலும் போவ முடிவு பண்ணிட்டா பெத்தவங்க சொல்லயும் மீறிட்டு.
மதியத்துக்கு சாப்பிட அமுதா, கலந்த சாப்பாடு இலையில கட்டி தந்தாள்.
“மதியம் வந்துக்கறேன் மா. இதை வேற தூக்கிட்டு போவணுமா” கேட்டுட்டே செருப்பை கால்ல போட்டுட்டு வீதியில இறங்கி நடந்தாள்.
“யே புள்ள செவ்வந்தி சித்த நில்லு” அம்மணியம்மா குரலு காதுல கேக்க.
தயங்கி நின்னாள் செவ்வந்தி. ராமாயி கிழவிக்கு அக்கா முறையாவுது. வச்ச பேரு வேற. பெரியம்மிணின்னு கூப்பிட்டு கூப்பிட்டு அம்மணியம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சுடுச்சுங்க நண்டு சிண்டுன்னு அத்தனை பேரும்.
இப்ப இதுகிட்ட பேசினா, வாயை புடுங்குமே. நல்ல கெழவிதான், இதுகிட்ட ஒன்னை சொல்லி ஆலோசனை கேட்டா கெட்டது நெனைக்காம, யாருக்கும் பாதகம் பண்ணாம நல்ல சொல்லு சொல்லிட்டு போவும். இருந்தாலும் நின்னு பேச தயங்கினாள் செவ்வந்தி.
கருப்புச்சாமி அப்பத்தாகிட்ட பேசிட்டு இருக்கா ஆடு பகை குட்டி உறவாட்டம் இருக்கு. புருசனுக்கு தூது சொல்லிவிட்டுட்டு இருக்கா செவ்வந்தின்னு பேச்சு பரவுமேன்னு, நழுவ நெனச்சாள்.
“அம்மாயி வேலைக்கு நேரமாச்சு. பொறவு பொழுது சாஞ்ச பின்ன உன்ற வீட்டுக்கு நானே வரேன். இப்ப ஆள விடு” ன்னு செவ்வந்தி போவ முயல.
“அட இரு புள்ள போவியாமா” ன்னு அவ கையைப் புடிச்சு நிக்க வச்சுட்டு கையை விடவே இல்ல.
“சொல்லும்மாயி. எதுக்கு போறவள வம்படியா நிப்பாட்டி வச்சிருக்க?” கேட்டுட்டே யாராச்சும் பாக்கறாங்களான்னு பாத்தாள் ரெண்டு பக்கமும் பார்வைய அலைய விட்டு.
“கல்யாணம் முடிஞ்சு அதுக்குள்ள ரெண்டு மாசமாவப் போவுதா. ராமாயி செத்தது அதுக்கு அடுத்த நாளுதானே. நிமிஷத்துல நேரம் ஓடிப்போச்சு போ” செவ்வந்தி கையை ஆதரவா புடிச்சு தட்டிக் கொடுத்தார்.
அவர் நகம் மணிக்கட்டில் குத்த “அம்மாயி கைய விடு” வலிச்ச கையை வெடுக்குன்னு விடுவிச்சுக்கிட்டு “மொத நாள்லயே லீவு போட்டா நல்லாருக்காது. நீ கெளம்பு” சொல்லிட்டு போவ.
அவ சூளைக்கு போறது அம்மனியம்மாவுக்கு புடிக்கலை. வெப்பமும் சூடுமா இருக்க நிலம் அது. அங்கிட்டு போயி இந்தப் புள்ளைய கண்ணப்பன் அனுப்பறானே. அட அவந்தான் ஆம்பளை அறிவில்ல. இந்தப் புள்ள அமுதாவுக்கு என்ன வந்துச்சு, பேசிக்கிட்டே போனார் அவர்.