“அட ஏன் மா நீ வேற காமெடி பண்ணீட்டு இருக்க உன் அரவிந்த் மாமா ஒரு ரோபோ அவனுக்காக ஒருத்தி பிறந்து இருந்துட்டாலும் அந்த நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லைம்மா” என்றார் கன்னிகா.
“ஏன் அத்தை இப்படி பேசுறீங்க மாமாவுக்கு என்ன முப்பத்து வயசு தானே ஆகுது” என்று கூறிய ரூபிணியிடம், “முப்பது வயசுலையே முனிவர் மாதிரி தான் சுத்திட்டு இருக்கிறான். இந்த விஷ்வாமித்ரரை மயக்க எந்த மேனகை வரப் போறாளோ” என்று புலம்பிய கன்னிகா ஏதோ சொல்ல வர “யாரு மேனகா” என்றபடி வந்தான் அர்ஜுனன்.
“உன் அண்ணன் முனிவரை மயக்கி கல்யாணம் பண்ணிக்க போற உன் அண்ணி” என்றார் கன்னிகா. “இஸ் இட் பாசிபில்” என்று அர்ஜுனன் கேட்டிட, “எல்லாம் பாசிபில் தான் முதலில் இரண்டு பேரும் சாப்பிடுங்க” என்றாள் ரூபிணி.
அழைப்பு மணி ஒலித்திட, “அம்மா உன் மகன் துர்வாசர் வந்துட்டாரு போல போயி கதவைத் திறங்க” என்ற அர்ஜுனிடம், “அது யாரு துர்வாசர்” என்றாள் ரூபிணி.
“கோபத்திற்கு பெயர் போன முனிவர்” என்று கூறிய கன்னிகா சென்று கதவைத் திறக்க அரவிந்தன் தான் வந்திருந்தான்.
“மாமா சாப்பிட வாங்க” என்று ரூபிணி அழைத்திட , “வரேன்மா” என்று கூறிய அரவிந்தன் தன் அறைக்கு சென்று உடை மாற்றி விட்டு சாப்பிட அமர்ந்தான்.
“இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே தனியாவே சுத்திட்டு இருப்ப” என்ற கன்னிகாவிடம், “நான் எங்கே தனியா சுத்திட்டு இருக்கேன்” என்றான் அரவிந்தன்.
“தனியா தான் சுத்துற” என்ற கன்னிகாவிடம், “அம்மா எதுவா இருந்தாலும் நேராக பேசுங்க சுத்தி வளைத்து பேச வேண்டாம்” என்று அவன் கூறிட, “நேராகவே கேட்கிறேன் எப்போ நான் உன்னை கல்யாண கோலத்தில் பார்க்கிறது” என்றார் கன்னிகா.
“அது இந்த ஜென்மத்தில் நடக்காது” என்ற அரவிந்தன் கையை கழுவி விட்டு எழுந்து கொண்டான்.
கன்னிகா தான் தலையில் அடித்துக் கொண்டார். “அப்படி என்ன தான் இவன் ஊரு உலகத்தில் இல்லாத போலீஸோ போலீஸ்காரன் எவனும் கல்யாணம் பண்ணிக்காமல், குடும்பம், குழந்தைனு வாழாமல் தனியா தான் இருக்கிறானா என்ன” என்றார் கன்னிகா.
“நம்ம வீட்டு துர்வாசர் அப்பவே போயிட்டாரு இந்நேரம் நித்ரா தேவி அவரை அணைத்துக் கொண்டு இருப்பாள்” என்று அர்ஜுனன் கூறிட, “அவள் யாருடா அவள் நித்ரா தேவி எவளையும் நமக்கு தெரியாமல் ரூமுக்குள்ள பதுக்கி வச்சுருக்கானோ” என்றார் கன்னிகா.
“மம்மி ஏன் இவ்வளவு டம்மியா இருக்கீங்க நித்ராதேவினா தூக்கம்” என்று தலையில் அடித்துக் கொண்டு அர்ஜுன் தன் அறைக்கு சென்று விட்டான்.
கன்னிகாவும் தன் அறைக்கு சென்று உறங்க ஆரம்பித்தார்.
“என்ன யோசனை ரூபி” என்ற அர்ஜுனனிடம், “உங்க அண்ணன் ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு இவ்வளவு பிடிவாதமாக இருக்காரு லவ் பெய்லியர் எதுவும் இருக்குமோ” என்றாள் ரூபிணி.
“அந்த ரோபோக்கு லவ் எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. சின்ன வயசுல இருந்தே ஒரே ஆசை ஐ.பி.எஸ் படிக்கனும்ங்கிறது தான். எந்த பொண்ணு பின்னாடியும் அவன் போனதே கிடையாது. எந்த பொண்ணுகிட்டேயும் அவன் பேசுவதும் கிடையாது. எனக்கு தெரிந்து உன்கிட்ட மட்டும் தான் பேசுறான்” என்றான் அர்ஜுனன்.
“என் கிட்ட என்ன பேசுறாரு சாப்பிட வாங்க மாமானு நான் கூப்பிட்டால் இதோ வரேன்மானு சொல்லுவாரு ஆனால் அத்தை தான் பரிமாறனும்” என்று சிரித்தாள் ரூபிணி.
“அவன் டிசைனே அப்படித் தான் விடு வா நம்ம வேலையை பார்க்கலாம் எந்த நேரத்தில் போயி அந்த முனிவரைப் பத்தி பேசிட்டு இருக்காள் பாரு” என்று மனைவியை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு மெத்தையில் சரிந்தான் அர்ஜுனன்.
“என்ன அப்படி பார்க்கிற இதுக்கு தானே ஆசைப் பட்ட” என்றவன் அவளது கழுத்தில் தாலி கட்டிட அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்த்து ஏதோ கத்த வர பட்டென்று அவள் இதழில் தன் இதழைப் பதித்தான். “ஆஆ அம்மா” என்று அலறி எழுந்தாள் மயூரி.
சுற்றி முற்றி பார்த்தவள் தன் அறையில் இருப்பதைக் கண்டு, “ச்சீ கனவா” என்று தலையில் அடித்துக் கொண்டாள். “என்ன கன்றாவி கனவு இது ஒரு ஐந்து வயசு குழந்தையோட அப்பன் அவனைப் போயி கல்யாணம் பண்ணி முத்தம் ஐயோ மயூரி என்னடி ஆச்சு உனக்கு இப்படி எல்லாம் மோசமான கனவு வராதே” என்று புலம்பிக் கொண்டு இருந்தாள் மயூரி.
“மயூ, மயூ” என்று கதவைத் தட்டினார் அபிராமி. “இந்த அம்மா வேற” என்று நினைத்துக் கொண்டு எழுந்து வந்து கதவைத் திறந்தாள் மயூரி.
“என்னடி கத்திட்டு கிடந்த” என்ற அபிராமியிடம் , “கனவு கண்டேன்மா கனவுல எனக்கு கல்யாணம் நடந்துச்சு அதான் பயந்துட்டேன்” என்ற மகளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் அபிராமி.
“பைத்தியக்காரி கனவுலையாவது கல்யாணம் நடந்துச்சேன்னு சந்தோசப் படாமல் இப்போ தான் பேயை பார்த்த மாதிரி அலறி எந்திரிச்சுருக்கா படுத்து தூங்கு டீ” என்று சொல்லி விட்டு அபிராமி சென்று விட மயூரி படுத்துக் கொண்டாள். உறக்கம் தான் வரவே இல்லை.
கண்ணை மூடினாலே அவன் கொடுத்த முத்தம் தான் நியாபகம் வந்தது. “ஐயோ இந்த கனவு ஏன் முழிச்சுட்டு இருக்கும் போதும் வந்து இம்சை பண்ணுதே” என்று நொந்து கொண்டவள் எப்போது உறங்கினாளோ தெரியவில்லை.
அதிகாலை கண் விழித்து எழுந்த அரவிந்தன் அந்த அப்பார்ட்மெண்ட் ஜிம்மில் எக்சர்சைஸ் செய்ய கிளம்பினான்.
அவன் ட்ரெட்மில்லில் ஓடிக் கொண்டு இருக்க மயூரியும் ஜிம்மிற்கு வந்தாள். அவன் அருகில் இருந்த டாரெட்மில்லில் அவள் நடந்து கொண்டிருக்க எதார்த்தமாக திரும்பினாள் மயூரி. கனவில் வந்த மன்மதன் அருகில் நின்று ட்ரெட்மில்லில் ஓடிக் கொண்டிருக்க “ஐய்யய்யோ இங்கேயும் இவனா” என்று நினைத்தவள் தன் வேகத்தை அதிகரித்தாள்.
அவள் என்ன தான் அவனை பார்க்க கூடாது என்று நினைத்தாலும் அவளது கண்கள் அவளையும் மீறி அவனை ரசிக்க ஆரம்பிக்க ட்ரெட்மில்லின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவள் பின்னோக்கி போயி கீழே விழப் போக எதார்த்தமாக ட்ரெட்மில்லை விட்டு இறங்கி அங்கே தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த அரவிந்தன் மீது மோதி விழுந்தாள் மயூரி.
அவன் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் கொட்டி விட , “ஏய் அறிவு இல்லை எருமை மாடு மாதிரி இருக்க இப்படி மேல வந்து விழற” என்று அவன் கேட்டான்.
“என்ன எருமை மாடா நானா அடேய் வளர்ந்த மாடு” என்று நினைத்தவள், “எக்ஸ்கியூஸ்மீ என்ன கொழுப்பா யாரை பார்த்து எருமை மாடுன்னு சொல்லுறீங்க” என்றாள் மயூரி.
அவளை கோபமாக பார்த்தவன் , “மேல வந்து மோதுனா உங்களை கொஞ்சுவாங்களா இதுவே நான் உங்க மேல வந்து மோதுனா ஈவ்டீசிங் பண்ணிட்டான்னு கத்தி கூப்பாடு போட மாட்டீங்க நீங்க எங்க மேல மோதுனா மட்டும் நாங்க உங்களை அம்மா தாயே பார்த்து போங்கன்னு சொல்லனுமா இரிட்டேட்டிங் இடியட்” என்று அவளைத் திட்டி விட்டு கோபமாக சென்று விட்டான் அரவிந்தன்.
“திமிர் பிடித்தவன் பெரிய இவரு மூஞ்சியும், முகரைக் கட்டையும்” என்று அவள் அவனைத் திட்டி விட்டு சென்று விட்டாள்.
“கருமம் கருமம் உனக்கு கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு , சொரணை இருக்கா டீ அவன் கல்யாணமாகி ஒரு பிள்ளைக்கு அப்பன் அவனைப் போயி சைட் அடிச்சது மட்டும் இல்லாமல் பொதக்கட்டீனு அவன் மேலையே விழுந்து ஐயோ ஐயோ” என்று தலையில் அடித்துக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தாள் மயூரி.
லிஃப்ட்டில் அவள் நுழைய அங்கே அரவிந்தன், அர்ஜுனன், ரூபிணி மூவரும் குழந்தை ரியாவுடன் நின்றிருக்க மயூரிக்கு தான் கடுப்பாக இருந்தது.
கஞ்சி போட்டு அயர்ன் பண்ணிய யூனிஃபார்ம் அணிந்து நின்றிருந்தவனை பார்க்கவும் முடியாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல் கடுப்புடன் நிற்க , “ஹாய் மயூ” என்றாள் ரூபிணி.
மயூரி அவளைப் பார்த்து புன்னகைத்தாள். “இவரு தான் என்னோட ஹஸ்பண்ட் அர்ஜுனன்” என்று அவள் கூறிட , “என்ன இவன் தான் இவள் புருஷனா அப்போ அந்த வளர்ந்த மாடு இல்லையா” என்று யோசித்தவளை புன்னகையுடன் பார்த்த அர்ஜுனனை பார்த்து அவளும் புன்னகைத்தாள்.
“மயூ ஸ்கூலுக்கு தானே போறீங்க உங்க ஸ்கூலில் தான் பாப்பாவுக்கு அட்மிஷன்” என்று ரூபிணி கூறிட, “அப்படியா” என்றவள் அவளுடன் பேச ஆரம்பித்தாள்.
அவர்களின் பேச்சு எதையும் கண்டு கொள்ளாமல் கிளம்பி சென்று விட்டான் அரவிந்தன்.
“ரூபிணி அவர் யாரு நேற்று இவர் தானே பாப்பாவை அழைச்சிட்டு வந்தாரு” என்ற மயூரியிடம், “அவரு என் ஹஸ்பண்டோட அண்ணன்” என்றாள் ரூபிணி.
“அப்போ அது இவள் ஆளு இல்லை” என்று சந்தோஷமான மயூரி “அவரோட வொய்ஃப் என்ன பண்ணுறாங்க” என்று கேட்டாள்.
“ஐயோ மயூ அவரு மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்” என்று கூறிட “எதே அவனுக்கு கல்யாணம் ஆகவில்லையா” என்று நினைத்தவள் , “மயூ அப்போ உன் கனவு நல்ல கனவு தான் டீ” என்று நினைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியை இயக்கினாள்.
…. தொடரும்…