அன்னமே 50 

4.9
(14)

அன்னமே 50

 

 

அம்மனியம்மா நேராக கருப்புச்சாமியத்தான் தேடிப் போனார். “அப்பனுக்கு சோகையாவே இருக்குது அப்பத்தா. நீ ஒரு எட்டு வந்து பாத்துட்டு போ. அப்பங்கூட சித்த நேரம் உக்காந்து பேசிட்டு போனீன்னா அவருக்கும் மனசுக்கு இதமா இருக்கும்னு” கருப்புச்சாமி வந்து ராத்திரி வந்து சொல்லிட்டுப் போனான்.

 

அம்மணியம்மா அடிக்கடி போவத்தான் நெனச்சார். ஆனாக்கா மருமவள ஒரே நாள்ல தூரத்தி விட்ட கொடுமைக்கு அது ஒண்ணுதான் குறைச்சலுன்னு கம்முன்னு இருந்துட்டார்.

 

இப்ப பேரன் வந்து சொல்லிட்டு போவ மனசு கேக்காம கிளம்பிட்டாரு.

 

செவ்வந்தி செங்கல் சூளைக்கு வேலைக்கு போறேன்னு சொன்னதும் அவருக்கு மனசு கேக்கல. அவ கையை புடிச்சுப் பாத்தவருக்கு கெதக்குன்னு ஆச்சு. நாட்டு வைத்தியத்துல இவரு கெட்டி. அவசரத்துக்கு இவருகிட்டதான் மருந்து கேப்பாங்க பக்கத்துல.

 

செவ்வந்திய பெத்தவளுக்கு அறிவே இல்லைன்னு அடிச்சுக்கிட்டது அவர் மனசு. பின்ன கல்யாணம் பண்ணி கொடுத்த புள்ளைய அத்துவிட்டு அனுப்பிட்டாங்க. நல்லவனா இருந்தா வச்சு பொழைப்பான். இல்ல போனவ போவட்டும்னு விட்டுருவான்.

 

அதனால அறிவோட குடிக்கறதுக்கு அப்பவே மருந்து மாத்திரைன்னு எதையாவது வாங்கி குடுத்துருந்தா வயித்துல ஒரு பூச்சி பொட்டுனு எதுவும் தங்காது. ஒரு நாளுதானன்னு அமுதா கண்டுக்காம விட்டுட்டாருன்னத விட அவருக்கு இந்த அளவுக்கெல்லாம் அறிவும் இல்ல அப்ப இருந்த சோகத்துல இதை யோசிக்கல அவரு.

 

இப்ப செவ்வந்தி முழுகாம இருக்கான்னு அம்மனியம்மாளுக்கு புரிஞ்சு போனது. செத்துப் போன ராமாயி கெழவிதான் இந்தப் புள்ளைய பாக்க வச்சு இந்த விஷயத்தை தெரிய வச்சுருக்கான்னு தானா நெனச்ச்சுகிட்ட மனுசிக்கு செவ்வந்திய கருப்பன் கூட சேர்த்து வைக்க தோணுச்சு.

 

பெத்தவ பேச்சை கேட்டு ஆடறவன் கிடையாது அவன். அதனால அவனுக்கு புரிய வச்சு குடும்பம் குட்டின்னு வாழ வைக்க யோசிச்சார்.

 

இங்க மண்ணோட உசுர நீக்கி அத நெருப்பு கணல்ல சுட்டு செங்கல்லா மாத்துவாங்க. சூடும் அனலும் நெறைஞ்ச பூமி அது. புதுசா போனவங்களை வாட்டி வதைக்கும் அந்த வேலை.

 

மண்ணுல வேல செய்யறது புதுசு இல்ல அவளுக்கு. ஆனா அதெல்லாம் குளுமையான மண்ணு. உசுரும் ஜீவனும் இருக்க மண்ணு.

 

ஒரு விதைய விதைச்சு அது செடியா முழைச்சு வர்றத பாக்கற சந்தோசமே தனிதான். அது பெருசாகி விளைச்சல் கொடுக்கறது பத்தி அவளுக்கு கவலை இல்ல. அவளால ஒரு புது உசுரு மண்ணுக்குள்ள இருந்து உருவாகுது. அதான் அவளுக்கு வேணும்.

 

வேலைய ஆரம்பிச்சு பத்து நிமிஷந்தான் ஆச்சு. செவ்வந்திக்கு அனல் காய்ச்சியது. முடியாம சோர்ந்து போயி நின்னா.

 

செங்கல் சூளை ஆளுக்கு கருப்பன் மேல என்ன எரிச்சலோ, “என்ன கருப்புச்சாமி சம்சாரம் இங்கிட்டு வேலை தேடி வந்துருக்காவ. ஒரு வேலை சோறு போட உன்ற புருசனுக்கு வக்கில்லையா?” கேட்டான்.

 

“இந்தா உங்கிட்டே வேலைக்கு வந்தா வேலைய வாங்கிட்டு கூலிய தர வேலைய மட்டும் பாத்துட்டு போ. வெட்டி பேச்சு பேசாத” செவ்வந்தி அடக்கி விட்டாள் ஒரே பேச்சுல.

 

அவ வாயாடின்னு தெரிஞ்ச கதைத்தான.

 

காரை சட்டியில கல்லை அடுக்கி எடுத்துட்டு வரதுக்கு ஆம்பளை ஆளுங்க இருந்தாங்க. சம்பளம் கூட வேணும்னா பொம்பளைங்க அந்த வேலைய பாப்பாங்க. இவன் வேணுமுன்னே செவ்வந்திக்கு அந்த வேலைய தந்தான்.

 

“ஓனரு நல்லவருதான். நா வேணா போய் பேசட்டா செவ்வந்தி” செவ்வந்திய வேலைக்கு கூட்டிட்டு வந்த பொண்ணு கேட்டாள்.

 

“இல்லக்கா வேண்டா. பழகிப் போவும் போக போக” ன்னுட்டு செவ்வந்தி வேலைய பாத்தாள்.

 

பொழுது சாய கருப்புச்சாமி பைக்கு அங்கு வந்து நின்னத பாத்த ஓனருக்கு ஒரே சந்தோசம். போன மாசம்தான் கருப்பு சாமிகிட்ட குத்தகைக்கு எடுத்த நிலத்தை திரும்ப கொடுத்திருந்தான். கருப்புச்சாமி கறாரா சொல்லிட்டான். நிலத்தை திருப்பி கையில கொடுத்துட்டு திரும்ப வேணும்னா ஆறு மாசம் கழிச்சு குத்தகைக்கு வாங்கிக்க. ஒரேயடியா அம்புட்டு வருசத்துக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டான்.

 

சரின்னுட்டு இப்பத்திக்கு கருப்புச்சாமி நிலத்துல வேலைய நிறுத்திப்புட்டான் இவன். இவன் பொருளையெல்லாம் அப்புறப்படுத்திட்டு வேலி கதவ சாத்தி சாவியை கையில வாங்கிட்டான் கருப்பன்.

 

திரும்ப ஒப்பந்த பத்திரத்த தயார் பண்ணி அதுல கையெழுத்து போட்டாத்தான் அவன் நிலத்துல இவன் வேலைய ஆரம்பிக்க முடியும். திரும்ப தன்கிட்டயே நிலத்தை குத்தகைக்கு தருவேன்னு வாக்கு தந்திருந்தா இவனுக்கு கவலையில்லாம போயிருக்கும்.

 

கருப்புச்சாமி அப்படி எந்த நம்பிக்கையும் தரல. யாருக்கு வேணா தருவேன். என்ற நிலம் என்ற விருப்பமுன்னுட்டான். அதனாலதான் இவனுக்கு மனசு அடிச்சுகிட்டது.

 

“வா கருப்பா. உன்னத்தான் பாத்துட்டிருந்தன்” பேசிட்டிருக்க செவ்வந்தி செங்கல் சுமையோட அங்க வர அவளை வெறிச்சு பாத்தான் கருப்பன்.

 

“பாத்தியா கருப்பா உன்னை வேணாம்னு போனவ நிலைய?. புத்தி வரட்டும்னுதான் ரெண்டு கல்லு சேத்தி போடச் சொன்னேன். சுமந்துட்டு வரட்டும் கழுதைன்னுட்டு” இவன் கருப்பன் மனச ஆறுதல்படுத்த சொன்னான்.

 

அடுத்தவன் கஷ்டத்த பாத்து சந்தோஷப்படுற கொடுமைக்காரன் இல்ல கருப்பன். அப்படியிருக்க தம் பொண்டாட்டிய சிரமப்பட விடுவானா? அதனால செவ்வந்தியை பாத்த பார்வைய எடுக்காம அவளையே பாத்துட்டிருந்தான்.

 

செவ்வந்திக்கு ஒண்ணுமே முடியல. அடுத்த நாலு இங்கிட்டு வேலைக்கு வர வேண்டாமுன்னு நினைச்சுட்டு எப்ப முடியும்னு வேலைய பண்ணவ கருப்பன பாக்கவே இல்ல. அவன் வந்தது தெரியாது அவளுக்கு.

 

“நா வந்த விஷயம் என்னன்னா. எந்தங்ச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவளுக்கும் அவ பங்கு தரணும். இந்த மாசமே அதை செய்யறோம். இனி குத்தகைக்கு விடுற மாதிரியில்ல” சொல்லிட்டு செவ்வந்தி பக்கம் போனான் கருப்பன்.

 

சுமக்க முடியாம சுமந்துட்டு வந்த செவ்வந்திக்கு கருப்பன் எதிர வர பயம் புடிச்சுக்கிட்டது. “மச்சான்?” அப்படியே நின்னுட்டாள்.

 

அவளை பாத்துட்டே அவ கையில இருந்த சட்டியை வாங்குனவனுக்கு அதன் கணம் தெரிய, செவ்வந்திய ஒரு முறை முறைச்சவன் ஓனரை அடிக்க பாஞ்சுட்டான்.

 

“என்ற பொண்டாட்டின்னு தெரிஞ்சுட்டே இப்படி பண்ணிட்டியாடா”ன்னு கேட்டு கேட்டு அடிச்சான்.

 

“வுடு மச்சான் அவன” செவ்வந்தி அவனை தடுக்காட்ட.

 

“நீ விடு புள்ள. இவனை கொன்னே ஆவனும்” அப்படின்னு அவன் சண்டைக்கு பாய.

 

“அய்ய விடு மச்சான் அவன. அவன கொன்னுட்டா எல்லாம் சரியாப் போவுமா. அப்படி அடிக்கற அளவுக்கு என்ன தப்பு பண்ணிப்புட்டாரு. நாந்தான் இங்க வேலை கேட்டு வந்தேன். வேலைக்கு வந்த இடத்துல எல்லாந்தான் இருக்கும்” அவள் அவன்கிட்ட சண்டைக்கு நின்னாள்.

 

“அவனுக்கு வக்காலத்து வாங்குறியா புள்ள?” பல்லை கடிச்சுட்டு கோவமா கேட்டான் அவகிட்ட.

 

“வாழாவெட்டியா போனவ நானு. பொறந்த வீட்டுல எம்புட்டு நாளைக்கு சும்மா உக்காந்து திங்க முடியம். எனக்காக வாங்குன கடனு இருக்க இப்படி வேலை வெட்டின்னு பாத்துதான ஆகணும்?” அழுவா கொடுமையா கேட்டாள் இருக்கற வேலைய கெடுத்துட்டானேன்னு.

 

“என்ற பொண்டாட்டின்னு தெரிஞ்சே உன்ன கொடுமைப்படுத்துனான். சும்மா விட சொல்லுறியா?” வீம்பா கேட்டான்.

 

“அடப்போய்யா. பெருசா வந்துட்டான் பேசறதுக்கு. உன்னோட வேலைய பாத்துட்டு போய்யா. ஆமா உனக்கும் எனக்கும் இடையில என்ன கிடக்கு. அதான் ஒண்ணுமில்லன்னு கழுத்த புடிச்சு வெளியே தள்ளிப்புட்டயே” சொன்னவ அவனை தாண்டி நடந்தாள்.

 

பைக்கில் ஏறிட்டு அவளையும் ஏறச் சொன்னான்.

 

“நா வரல போய்யா” அவன்கிட்ட சொல்லிட்டு வீட்டு பக்கம் நடந்தாள் செவ்வந்தி.

 

“இனிமேட்டு வெளியே வேலைக்கு போனா கால வெட்டிப்புடுவேன் பாத்துக்க. அடங்காதவளே”

 

“வா வந்து வெட்டுன்னு பாத்துட்டு கிடக்கறேன் பாரு. தொட்ட கைய முறிச்சுப்புடுவேன். மூடிட்டு போயிக்க”

 

“அம்புட்டு வாயாடி உனக்கு? வாயாடி செல்லக்கா. மொத ராத்திரியில அடக்குன மாதிரி கட்டில்ல உன்ன அடக்கணும்டி. சரின்னு சொல்லு இப்புடியே தூக்கிட்டு போய்டறேன். இந்தவாட்டி நீ என்ன அடக்கிப் பாரேன்டி. மச்சான் மொத்தமா உங்கிட்ட அடங்கிப் போறேன்” அவன் குரல் விரசமா பேசியது.

 

“அதெல்லாம் எங்கிட்ட நடக்காது. வேற ஒருத்திய தேடு” முகம் சிவந்து போனது அவன் பேச்சில.

 

“வேற ஒருத்தியெல்லாம் எனக்கு ஆவாதுடி. நீதான் சிக்குன்னு இருக்க. வேணும்டி. வர்றியா குடிசைக்கு போலாம். இன்னையோட சண்டைய முடிச்சுக்கலாம்” அவன் ஆர்வமா கேட்டான்.

 

அவன் அவதி பொண்டாட்டியா அவளுக்கு புரிஞ்சாலும் “நீ கூப்பிட்டதும் வந்து படுத்தா எனக்கு பேரு வப்பாட்டி இல்லன்னா அவுசாரிய்யா. இப்படி ஒரு நிலைமைக்கு பேசாம கோவில் வாசல்ல உக்காந்து பிச்சை எடுப்பேன் பாத்துக்க” கண்ணீர் தழும்ப விரலை உயர்த்தி பேசினாள் ஆதங்கமாய்.

 

எதுவுமே சரியாவாம படுக்க கூப்பிடுறானேன்னு கோவமா வந்துச்சு அவளுக்கு.

 

“யேய்!” கோவமா கத்தினான்.

 

“எதுக்குய்யா உனக்கு இம்புட்டு கோவம் வருது. கழுத்துல தாலி இல்ல. உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லன்னு ஊருக்கே தெரிஞ்சு போவ உங்கம்மா காரியம் பண்ணிப்புட்டாக. இப்ப வந்து படுக்க வர்றியான்னு கேட்டு நிக்கற?” கேட்டுட்டு நடந்தாள் அவனை திரும்பியே பாக்காம.

 

இப்படி மாத்தி மாத்தி பேசிட்டே செவ்வந்தி வீடு வரைக்கும் கூட வந்துட்டே திரும்பி போனான்.

 

கருப்புச்சாமிகிட்ட செவ்வந்தி பேசிட்டு வர்றதை பாத்துப்புட்டா அமுதா. ஆனா அதைப் பத்தி எதையும் தனக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்கவே இல்ல அவ.

 

அடுத்த நாள் காலம்பறமே அருக்காணி செவ்வந்தி வீட்டுக்கு வந்தா.

 

“செவ்வந்தி” ஊட்டு பக்கம் வரும் போதே உரக்க கூப்பிட்டுட்டு வந்தார் அருக்கானி.

 

“எதுக்குடி வந்தே. அந்த வீட்டு பொம்பளைக்கு இங்க என்ன வேலைங்கறேன்” அருக்கானி அமுதாவுக்கு தங்கச்சி முறை ஆவறதால உரிமையா கேட்டார்.

 

“எங்கக்கா ஊட்டுக்கு வரதுக்கு எதுக்கு தயங்கிட்டு இருக்கனும் நா. ஒரு வேலை இருக்குன்னு வந்தேன்”

 

“அதான சோழியன் குடுமி சும்மா ஆடுதேன்னு பாத்தேன்” அமுதா

 

“வாக்கா” சொன்ன செவ்வந்தி படியில உட்கார்ந்தாள்.

 

“நல்லாருக்கியா புள்ள?” கவலையோட கேட்டார் அருக்கானி.

 

“அதான் பாக்கறியேக்கா. நல்லாத்தான இருக்கேன்” செவ்வந்தியின் உதட்டில் ஜீவனில்லாத சிரிப்பு நெளிந்தது.

 

“கருப்பன் நல்லவந்தேன் கண்ணு. அவனா உன்னை கூப்பிட வருவான். நீ வெசனப்படாத” அருக்கானி ஆறுதல் சொன்னார்.

 

“இருக்கட்டும்க்கா அதைப் பத்துன கவலையில்ல எனக்கு. விதி இப்படித்தான்னா ஆரு மாத்த முடியும்” பெரிய மனுஷியாட்டம் பேசிய செவ்வந்தியை பாத்த அருக்கானிக்கு சுலோச்சனா மீது கோபம் பெருகியது.

 

வெகுளிப் புள்ளைய எம்புட்டு பாடு படுத்திட்டா அந்தப் பெரிய மனுஷின்னு.

 

“கருப்பன் விதை நெல்லு விதைக்க செவ்வந்தியா கூப்பிட்டு விட்டான்க்கா. இவதான் இம்புட்டு நாளா அந்த வேலைய பார்ப்பா. அம்புட்டு கைராசி இவளுக்கு. அதான் இப்ப கையோட கூட்டிட்டு போலாமுன்னு” அருக்கானி சொல்லிட்டு செவ்வந்திய பாக்க.

 

“அவ வர மாட்டாடி. நேத்து சூளைக்கு போயி இவளுக்கு உடம்பு முடியாம போச்சு. சூடு புடிச்சுப் போச்சு. இளநீய குடிச்சுட்டு படுத்தே கிடக்கறா” அமுதா உண்மையைத்தான் சொன்னாரு.

 

“வேல ஒண்ணும் பெருசா இல்லக்கா. வந்து தொட்டு குடுத்துட்டு போனா போதும்” தயங்கி நின்னார். அமுதாவுக்கும் தனக்கும் இருக்க சொந்தத்தை கெடுத்துக்க கூடாதுன்னு கவனம் பாத்தார் அருக்கானி.

 

“சரி அருக்கானி. உன்ற பேச்சுக்கே வருவோம். உனக்கு ஒரு பொம்பளை புள்ள இருந்து அவளுக்கு செவ்வந்தி நெலமை வந்துச்சுன்னா என்னடி பண்ணுவ. புகுந்த வீட்டுல மருமவளா நின்னு நாட்டாம பண்ண வேண்டியவள வேலைக்கு வான்னு கூப்பிட்டா மானங்கெட்டு போய் அனுப்பி வைப்பியா? சொல்லுடி” கேட்ட அமுதா பேச்சில் அம்புட்டு ஆத்திரம்.

 

“பெத்த வயிறு தீயா எரியுதுடி. எம்மவ நல்லா பொழைப்பான்னு அம்புட்டு கனவோட இருந்தேன். சம்பந்தி ஊடு வருவாங்க. வீடு நிறையும் புதுச் சொந்தத்தாலன்னு. மருமவன் வந்தா கோழி அடிச்சு கொழம்பு வைக்கலாமுன்னு அங்க பாருடி நாட்டு கோழியா பாத்து பாத்து வளத்தி விட்டேன். ஒரு நொடியில அத்தனையும் தரைமட்டமா போச்சுடி” பலவீனமா பேசின அமுதா,

 

“இதா இந்தக் கழுதைய பாருடி. சும்மா திங்கனுமான்னு ரோசப்பட்டு சூளையில வேலைக்கு போயிருக்கா. இப்ப அங்க நோவுது இங்க நோவுதுன்னு படுத்துக் கெடக்கா. தலையெழுத்தாடி இந்தக் கொடுமைய காணணும்னு”

 

அருக்கானி வாயில முந்தானைய வச்ச பாட்டுக்கு அழுது தீர்த்துட்டார். இப்பவே சுலோச்சனா முடிய புடிச்சு ரோட்டுக்கு இழுத்து நியாயம் கேக்கணும்னு ஆங்காரமா வந்துச்சு.

 

செவ்வந்தி காதுல விழுந்தாலும் எந்திரிக்காம படுத்துக் கிடந்தா. சூடு புடிச்சுக்க அடி வயித்துல சுருக்கு சுருக்குன்னு குத்துச்சு. அடிக்கடி கொள்ளைப்புறம் போவ வேண்டிய கட்டாயத்துல இருந்தா.

 

செவ்வந்தியோட சோர்ந்த முகத்தப் பார்த்த அருக்கானிக்கும் மனசுக்குள்ள என்னமோ பட, எண்ணெய் பாட்டிலை தானே போய் எடுத்துட்டு செவ்வந்தி பக்கத்துல வந்து உக்காந்துட்டா.

 

“அக்கா சொன்னா கேளு. சூடு புடிச்சா அவ்வளவு சுளுவா குணமாகாது. பேசாம பக்கத்துல இருக்கற ஆஸ்பத்திரிக்கி புள்ளய கூட்டிட்டு போவலாம்” அருக்கானி செவ்வந்தி வயித்துல விளக்கெண்ணைய தடவி விட்டாள்.

 

“அக்கா வளவளன்னு இருக்கும். வேண்டா விடு” தடுத்தாள் அருக்கானிய தடுத்தா செவ்வந்தி.

 

“அட வாய மூடு புள்ள” யாருக்கும் தெரியக்கூடாதுன்னு திருட்டுத்தனமா செவ்வந்திக்கு எண்ணைய தடவுற மாதிரி பார்த்த அருக்கானிக்கு சந்தோசமா போச்சு.

 

“ஆத்தா மகமாயி. இந்தக் குழந்தை வந்த நேரம் பிரிஞ்ச பிள்ளைங்க ஒண்ணு சேரட்டும். நீதான் துணைக்கு இருக்கனும்”னு காசு முடிஞ்சு வைக்க நினைச்சா அருக்கானி.

 

“சரி கண்ணு நா அம்மணியம்மாகிட்ட நாட்டு மருந்து வாங்கிட்டு வாரேன். நீ ஆஸ்பத்திரிக்கெல்லாம் போயிட்டு இருக்காத. பொம்பளைப் புள்ள ஆஸ்பத்திரிக்கு போனா ஊரு என்ன பேசும்” னு பயம் காட்டிட்டு அருக்கானி அமுதாகிட்ட சொல்லிட்டு கெளம்பிட்டாள்.

 

ஓட்டமா ஓடுன அருக்கானி மூச்சு வாங்கிட்டே கருப்பன்கிட்ட விஷயத்த சொல்ல. அம்மனியம்மா மூலமா ஏற்கனவே தெரிஞ்சுகிட்ட கருப்பன், “நா பாத்துக்கறேன்க்கா. நீ கவலைப்படாத”ன்னு தனக்காக பார்த்த அருக்கானிக்கு ஆறுதல் சொன்னான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!