நெஞ்சம் – 14
அவன் பேச்சில் அவனிடம் இருந்து பதறி அவள் விலக, கொஞ்சம் நிதானித்தான் அர்விந்த். அதற்குள் குளம் கட்டிய அவள் விழிகள் உடைப்பெடுத்து விட்டது.
“அழாம ஏறு வண்டியில்” என்றான் இறுக்கமாக. அவள் வருந்துவது அவனை வருத்தும் எப்போதுமே. கோபம், வருத்தம் என கலவையாய் மாறியது அவன் மனநிலை. அவளிடம் அக்கறை காட்டுகிறேன் என்று நெருங்காமல், தள்ளியே இருந்திருந்தால் இது போல் அவர்களுக்குள் எந்த வருத்தமும் குழப்பமும் நேர்ந்திருக்காது என்று நினைத்துக் கொண்டான் அர்விந்த்.
அட லூசு பயலே, அவ வருத்தம் தாங்காம இப்படி யோசிக்கிறியே, உனக்கும் அவளுக்குமான கனக்ஷன் நீ பழகினதுனால இல்லை! அந்த கனக்ஷன் நான் கொடுத்தது, அது இருந்ததுனால தான் நீ பழகவே செஞ்சே! இதை எல்லாம் உனக்கு புரிய வைக்க விட மாட்டேங்கிற டா மக்கு பயலே…. மன்மதன் புலம்பினார்.
பைக்கில் ஏறியவள் அவனை தெரியாமல் கூட தொட்டு விடக் கூடாது என்று ஜாக்கிரதையாக அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்தாள். அவளின் சின்ன அசைவு வைத்தே அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவன், எடுத்த எடுப்பிலேயே வண்டியை வேகம் விரட்டினான். தவிர்க்கவே முடியாமல் அவனின் மீது சென்று மோதினாள் மலர்.
டேய், அரை மண்டை, ஏண்டா அவளை இப்படி படுத்துற? மனச்சாட்சி நியாயம் கேட்க, டாம், ஜெர்ரியை இரு விரலால் தூக்கி வீசுவது போல் அதை தூக்கி ஓரம் போட்டான் அவன்.
வீடு வரவும்,
இறங்கி வேகமாக வீட்டிற்குள் ஓடினாள். வீட்டினுள் அருணாவை கண்டதும் மீண்டும் அவள் அழ, பின்னேயே வந்த அர்விந்த்,
“ஏய்! அழுதே பிச்சுடுவேன்…. நிறுத்து! நிறுத்துறியா இல்லையா? போன் எடுத்துட்டு போகலை, வீட்டு அட்ரஸ் தெரியலை… யார் போன் நம்பரும் தெரியலை…. நீயெல்லாம் எதுக்கு வெளில போறே?” என்று உச்ச ஸ்தாயில் கத்தினான். காது கேட்காத பாட்டிக்கே கேட்டு இருக்கும்!!
“கத்தாம பொறுமையா பேசு அர்விந்த், என்னமா மலர் ஆச்சு? எங்க போனே? எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா?” அருணா கேட்க,
“அம்மா! அம்மா!” என்றவளுக்கு அழுகை தான் வந்ததே தவிர வேறு சொல்ல வரவில்லை. அவர்கள் அருகிலேயே நின்று அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்த அர்விந்தை கண்டு அவள் அழுகை மேலும் பெருகியதே தவிர குறையவில்லை! அதை புரிந்துக் கொண்ட அருணா அவனை அவன் அறைக்குள் தள்ளினார். பின் பொறுமையாக மலரை ஆசுவாசப்படுத்தி நடந்ததை கேட்க, மலரும் நடந்த அனைத்தையும் கூறினாள்.
“உனக்கே உன் தப்பு தெரியுதா? நீ எதை எல்லாம் இனிமே செய்யணும் தெரியுதா?” என்றார் அருணா. அந்த அப்பார்ட்மெனண்ட் வாசலில் நின்றிருந்தபோது தான் அவள் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று வருந்தினாளே! அது போக எப்படி எல்லாம் நடந்து கொண்டு இருக்கலாம் என்றும் யோசித்து இருந்தாள். அதனால் தலையை பலமாக ஆட்டினாள் அவள். அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் பேசாமல் போய் கொஞ்சம் நேரம் படு என்று அனுப்பி வைத்தார் அருணா.
அவள் சென்று படுத்த சிறிது நேரத்திற்கு எல்லாம் அவளைத் தேடி வந்து விட்டான் அர்விந்த். அருணாவிடம் இருந்து விஷயத்தை தெரிந்து கொண்டவன்,
“யாரு அவன்? இதுக்கு முன்னாடி கடைக்கு போறப்போ பார்த்து இருக்கியா? பேசி இருக்கியா? என்ன சொன்னான்?” என்று கேட்டான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு. இதுவரை மலர் கண்டிராத அளவு இரத்தமென சிவந்து இருந்தது முகம் கோபத்தில். அவன் ஒரு பொஸஸிவ் பொன்னுரங்கமாக இருந்தது இருவருக்குமே புரியவில்லை. அவள் என்னவோ அந்த பொஸஸிவ் பொன்னுரங்கத்தை பொன்னம்பலம் ரேஞ்சிற்கு நினைத்துக் கொண்டு பயந்து போனாள்.
ஏம்மா… எம்மா…. அவ்ளோ எல்லாம் இல்லை மா என் ஓனர்…. வேகமாக சொன்னது அவன் மனசாட்சி!
“அவன் யாருனே எனக்கு தெரியாது, நான் யார் கூடவும் பேசினதும் இல்லை, பார்த்ததும் இல்லை….” வேகமாக சொன்னாள் மலர்.
“இனிமே நீ கடைக்கு போனா நானும் வரேன், ஆளைக் காட்டு!”
“எனக்கு அவன் மூஞ்சி எல்லாம் நியாபகமே இல்லையே….” பாவமாக சொன்னாள் மலர்.
பயத்தில் அவன் சட்டையை மட்டும் பார்த்து ஓடிக்கொண்டிருந்தவளுக்கு அந்த முகம் எப்படி நியாபகம் இருக்கும்? அடையாளம் காட்டக் கூட தெரியவில்லையே அவளுக்கு என்ற கடுப்பில்,
“ரொம்ப நல்லது! இப்படியே புத்திசாலியாவே இரு! வாழ்க்கையில் உருப்பட்டுருவே” என்று பல்லை கடித்தபடி பேசினான். அதோடு மலரின் பொறுமையும் பறந்து போக,
“நான் எப்படி வேணா போறேன், நீங்க எதுவும் சொல்லவேண்டாம்…. உங்களுக்கு அவசியமும் இல்லை” அவளும் கடுகடுத்தாள்.
“பேசினே, பல்லை தட்டிருவேன் பார்த்துக்க… என்கிட்ட மட்டும் நல்லா திமிரா பேசு, ரோட்டில் அழுதுகிட்டு நில்லு… ஒன்னும் தெரியாத மக்கு”
அவளை எந்த உரிமையில் இப்படி எல்லாம் திட்டுகிறோம் என்று கூட உணராமல் தன் இஷ்டத்துக்கு அவளை பேசினான் அர்விந்த்.
“ஆமா ஆமா இவரை மாதிரி பெரிய அறிவாளி யாரும் இல்லை! இவரை கட்டிப்பிடிக்க பிளான் போட்டு ரோட்ல போய் நின்னு நான் அழுதேன்னு கண்டுபிடிச்சுட்டார்ல சான்சே இல்லை….” மலரா இது என்கிற அளவில் அவனை நன்றாக வாரினாள். அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு சிரிப்பு பொங்கி வர, அடக்கி கொண்டு, அவளை முறைத்தான்.
அவ்வளவு அதிகபட்ச கோபத்திற்கு இடையில் சிரிப்பு வருகிறது என்றால், அவள் மேல் எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்?
“என்னை கிண்டல் பண்ற அளவு வந்துட்டியா? நீ செஞ்சதை தானே சொன்னேன்!”
“நீங்க என்னை உங்க இஷ்டத்துக்கு பேசினா, எனக்காக நான் தான் பேசணும்! நான் ஒன்னும் நீங்க சொல்ற மாதிரி செய்யலை, எல்லாம் உங்க கற்பனை!”
“ஓ! என் கற்பனை? ம்ம்ம்…. என்னை நீ பார்க்கிறதே இல்லை? உனக்கு மனசில வேற ஒன்னும் இல்லை? எதுவுமே நினைக்கிறது இல்லை என்னை பத்தி? ம்ம்… அப்படியா?”
இதையெல்லாம் தெரிஞ்சு நீ என்னடா செய்ய போறே…. அதான் எதுவும் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியே!! இப்போ எதுக்கு அந்த பிள்ளையை நோண்டுற? *****கிட்டு போடா உன் வேலையை பார்த்துகிட்டு மன்மதன் பொங்கி எழுந்தார்.
“எல்லாம் தெரிஞ்சுகிட்டு என்னை கேட்காதீங்க சார்! நீங்க என்னை பத்தி யோசிக்க தேவையில்லை! உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமோ இல்லை அதனால் ஏதும் பிரச்சனையோ இல்லை!” தீர்க்கமாக பேசினாள் மலர்.
“அதெப்படி? நான் சம்பந்தப்பட்டு இருக்கேனே!”
“அதனால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கா சார்? நான் உங்ககிட்ட பேசுறது கூட இல்லையே?” அலுத்து போனவளாய் பேசினாள் மலர்.
அவள் மனசில் அவன் இருப்பதும், விழியின் விழியில் தெரிக்கும் அன்பும் அவனுக்கு பெரிய உவகை தரும் விஷயம். அதை பற்றி பேச இன்று சந்தர்ப்பம் அமைய, வம்படியாக பேச்சை வளர்த்தான் அர்விந்தன். பாதிப்பு இல்லை என்று அவள் நினைக்கிறாள் ஆனால் அவனுக்குள்ளும் இருக்கிறதே பாதிப்பு! ஒரே பிரச்சனை, தெள்ள தெளிவாக அவனுக்கு புரியவில்லை.
இப்போதும் அவளுடன் பேச, அவளின் கேள்வியை சமாளிக்கும் நோக்கில் மட்டுமே இருந்தவன் ரொம்பவும் யோசிக்காமல் பட்டென்று,
“நான் உன்கூட சம்பந்தப்படுறேதே எனக்கு பிரச்சனை தான் விழி” என்று சொல்லிவிட்டான். வேகமாக அவன் சொன்ன விதத்தில் மிகவும் காயப்பட்டு போனாள் மலர்.
“ஓ!” என்றவள், துக்கம் தொண்டையை அடைக்க, கண்கள் கலங்கி நிற்க, “என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது சார், இன்னும் ஒரு மாசம் மட்டும் என்னை சகிச்சுக்கோங்க, அப்பறம் என்னை பத்தி எதுவுமே உங்களுக்கு தெரியாது சார்!” என்றாள் கை கூப்பி.
அவளின் சொல் சட்டென்று அர்விந்தின் மனதை சட்டென்று கனமாக்கியது. அவள் சொல்லியதை கற்பனை செய்து பார்த்தவனுக்கு, நெஞ்சம் பாரமாகி போனது! பாரமாகி போன மனது அவன் வாயை அடைக்க, ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து அகன்றான். செல்லும் அவன் மனது அவள் சொன்ன வார்த்தையிலேயே உழன்றது. இவளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லாமல் போகப் போகிறதா? கண்களை இறுக மூடித் திறந்தான் அர்விந்த். அவ்வளவு வருந்தினாலும் அந்த சூழ்நிலையை மாற்ற அவன் சிந்தனையில் எந்த எண்ணமும் எழவில்லை! மாற்றும்படி அவன் மனம் அவனை உந்தவில்லை! அலங்காரம் செய்த கடவுளை தரிசிக்க திரை விலக வேண்டும் அல்லவா?
அடுத்து வந்த நாட்கள் மிகவும் கொடுமையாக சென்றது இருவருக்கும். அவனுக்கு அவள் கிளம்பி விடுவாள் என்பதே சொல்ல முடியாத மன இறுக்கத்தை கொடுத்தது. அதனால் தன் உலகத்தை அமைதியிடம் தத்து கொடுத்து விட்டான் அர்விந்த். அவனுண்டு, அவன் வேலை உண்டு என்று ஆனான். மகன் எப்போதுமே வேலையில் பிசியாக இருப்பான் என்றாலும் அடிக்கடி கோபப்படுபவன், பல விஷயத்தில் கருத்து சொல்பவன், இப்படி அமைதியாக இருக்கிறானே என்று கவலைப்பட்டனர் பெற்றோர் இருவரும். அதை அவனிடமே கேட்டனர்,
“என்னபா? இப்படி உன் இயல்பே மாறி இருக்க? ரொம்ப டென்ஷனா வேலையில? கொஞ்சமாச்சும் கல்யாணம் நினைச்சு சந்தோஷமா இருடா… உன்னை பார்த்தா கவலையா இருக்கு! நம்ம வீட்டில் கல்யாண களையே இல்லை!”
அருணாவும் தியாகுவும் மாறி மாறி பேச, “எனக்கே தெரியலை மா” என்று சொன்னான் அரவிந்தன்.
அவன் அப்படி என்றால், மலருக்கு அவனின் வாரத்தைகளில் இருந்து. அவள் பார்ப்பது கூட அவனுக்கு பிடிக்கவில்லையே என்ற வருத்தம்! அதனால் முடிந்தவரை அவன் கண்ணிலேயே படாமல் வேலை வேலை என்று மட்டுமே இருந்தாள்.
மூன்று மாதமும் ஓடி முடிந்து, மலரை அழைத்து செல்ல மாணிக்கம் வந்திருந்தார். அன்று காலை கிளம்பி மாலை பெங்களூர் வந்தவர், இரவு பேருந்திற்கே மகளை அழைத்துச் செல்ல டிக்கெட் வாங்கி கொடுக்க சொல்லி இருந்தார் தியாகுவிடம். மலரின் யோசனை தான் இது. எப்போதடா இங்கிருந்து செல்வோம் என்றல்லவா இருக்கிறாள் அவள்.
அன்று அவள் வீட்டிற்கு கிளம்புகிறாள் மலர் என்பது ஏற்கனவே இயல்பை தொலைத்து விட்டு திரியும் அரவிந்தனை இன்னும் இறுக்கமாக ஆக்கியது. அவள் விஷயத்தில் தன்னால் எதையும் சரி செய்ய முடியவில்லை, நடந்த கனமான விஷயங்களால் தங்களுக்குள் அனைத்தும் சரி இல்லாமல் போய் விட்டது என்றே நினைத்தான் அரவிந்தன். அவள் கிளம்புவதை அமைதியாக பார்த்தபடி ஹாலில் அமர்ந்து இருந்தான். மனம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டு இருந்தது. யாரிடமும் பேச மனமில்லா விட்டாலும் ஓரிரு வார்த்தைகள் மாணிக்கத்திடம் பேசினான். அவரிடம் பேசாவிட்டால் நன்றாக இருக்காது என்று தோன்றியது அவனுக்கு.
அவள் அனைத்தையும் ரெடி செய்து அடுத்து சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான் எனும் போது, அவளுக்கு தாம்பளத்தில், பூ பழம், வெத்தலை பாக்கு என அனைத்தும் வைத்து, ஒரு நல்ல பட்டு புடவையுடன், அவள் சம்பளத்தை சேர்த்து ஒரு லட்சம் பணமாக வைத்து கொடுத்தனர் அருணாவும் தியாகுவும். அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கியவள், சம்பளம் மட்டும் போதும் என்று எவ்வளவோ மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை. உனக்கு திருமண வயது வந்து விட்டது அதற்கு சிறிய அன்பளிப்பு என்று சொல்லிவிட்டனர். (உங்க பையனை அன்பளிப்பா கொடுங்க அது போதும்) பாட்டியும் சேர்ந்து கொண்டு அவளை எடுத்துக் கொள்ள சொல்லி வற்புறுத்தினார். அவள் வீட்டினருக்கும் உடைகள் வாங்கி இருந்தனர். அவர்கள் திருமணம் என்றதும் அவள் கண்கள் தானாக சற்று தள்ளி நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அர்விந்தை தான் நோக்கியது. அவனும் அந்நேரம் கண்களை சிமிட்டாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இருவரின் கண்களும் ஒரு நிமிடம் கவ்விக் கொண்டு உறைந்து நின்றது, பின் வேகமாக விலகி கொண்டது.
மலர் அவர்களை பிரிவதற்கு வரும் கண்ணீரை மறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அருணாவை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டவளிடம்,
“அடுத்த வாரம் ஜனனி வரா, இன்னும் பத்து நாள்ல அர்விந்துக்கு கல்யாணம், இருந்துட்டு போன்னு சொன்னா கேட்க மாட்டேங்குற! நீ உன் அம்மா, தங்கச்சி எல்லாரையும் பார்க்கணும்னு தான் விடுறேன், ஒழுங்கா கல்யாணத்துக்கு வந்து சேர்!” என்று அன்பு கட்டளை இட்டார். பின் மாணிக்கவாசகத்திடம், குடும்பத்தோட அவசியம் கல்யாணத்துக்கு வரணும் என்று கேட்டுக் கொண்டார்.
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கியவள், அர்விந்தை நெருங்கினாள். கால்கள் இரண்டும் இரும்பு குழாய் போல கனமாக கனத்து நகர்வேணா என்பது போல் இருந்தது அவளுக்கு. எங்கே அவனை கட்டிக்கொண்டு அழுது கிழுது விடுவோமோ என்று பயந்தவள், அவனிடம் இருந்து சற்று தள்ளியே நின்று கொண்டு,
“ஹாப்பி மேரீட் லைப் சார்! என்னை மறந்துடாதீங்க” என்றாள் தைரியமாக.
அவனால் வாயை திறந்து பேசவே முடியவில்லை! தலையை மட்டும் ஆட்டினான். பின் என்ன தோன்றியதோ, கையை நீட்டி அவள் கையை பற்றி அவள் கையுடன் அவன் கையை சேர்த்து குலுக்கினான். அப்போதும் ஒரு சொல் கூட வரவில்லை அவன் வாயில் இருந்து.
அவன் கை குலுக்கும் போது, அருணா மாணிக்கவாசகத்திடம், “மலரை எங்க அர்விந்த் அப்படி கவனிப்பான், சின்ன பொண்ணுனு அவளோ அக்கறை அவ மேல் அவனுக்கு.”
வெறும் அக்கறை மட்டும் தானா? அவன் விழியின் விழி அவனை கேட்டது.