கதவைத் தட்டும் சத்தத்தில், யார் என்று கேட்டான் காளையன். நான் தான் என்றாள் மலர்னிகா. குரலில் அவள் தான் வந்திருப்பது என்று உணர்ந்தவன், “உள்ளே வா மலர் புள்ள.” என்றான். அவளும் உள்ளே சென்றாள்.
“சொல்லு புள்ள ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டான். அதற்கு அவள் எதுவும் பேசாமல், தனது கையில் இருந்த கிரீமை அவனிடம் நீட்டினாள். சிரித்தவாறு அதை வாங்கிக் கொண்டவன், “ரொம்ப நன்றி புள்ள.” என்று சொல்லியவாறு, அவனது வலது கையில் காயம் பட்டிருந்ததால் இடது கையால் கிரீமை போட முயன்றான். இடது கை அவனுக்கு பழக்கம் இல்லை. அதனால் வலது கையில் இருந்த காயத்திற்கு மருந்து போடுவது கடினமாக இருந்தது.
அதைப் பார்த்த மலர்னிகா அவனுக்கு உதவ வந்தாள். மெல்ல காளையனுக்கு அருகில் சற்று இடம் விட்டு கட்டிலில் அமர்ந்தாள். அவனது கையை தனது ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறுக்கையால் அந்த கிரீமை அவனது காயத்தில் பூசி விட்டாள். கிரீமை காயத்தில் போடவும் காளையனுக்கு எரிச்சல் மிகுந்தது. “ஐயோ அம்மா எரியுதே.” என்றான்.
அதற்கு மலர்னிகா எதுவும் பேசவில்லை. பேசாமல் இருந்து கிரீமை போட்டுட்டு காயத்தில் ஊதிக் கொண்டிருந்தாள். காளையன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்து அவளின் பிரச்சனையை அறியாமல் என்று நினைத்தான்.
“அம்மணி நான் ஒன்னு கேட்டா சொல்லுவீங்களா?” என்றான். அதற்கு மலர்னிகா பதில் பேசவில்லை. நீங்க முன்னாடி நல்லா பேசுவீங்கனு அத்தை சொன்னாங்க. ஆனால் இப்போ பேசுறீங்களே இல்லை. ஏன் எங்களையும் ஊரையும் யாரையும் பிடிக்கலையா உங்களுக்கு?” என்று கேட்டான்.
அவள் இல்லை என்று தலையாட்டினாள். அப்போ உங்களோட அளவிற்கு நாங்க படிக்கலைன்னு யோசிக்கிறீங்களா?” என்றான். அதற்கும் அவள் இல்லை என்று தலையாட்டினாள். “சரி அப்போ உங்களுக்கு வேற ஏதோ பிரச்சனை அது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். என்னனு எங்கிட்ட சொல்ல வேண்டாம். ஆனால் நீங்க பேசினா நல்லா இருக்கும்ன்றது என்னோட அபிப்பிராயம்.
கொஞ்சமாவது எங்க கூட பேசுங்க ரொம்ப நாள் கழிச்சு நீங்க அத்தை எல்லாரும் இங்க வந்தது எங்க வீட்ல எல்லாருக்கும் சந்தோஷம். ஆனால் நீங்க பேசாம இருக்கிறது அவங்க எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் உறுத்திட்டே இருக்கும். முக்கியமா அத்தைக்கு. உங்களோட சந்தோசம்தான் அவங்களோட சந்தோசம் என்று இத்தனை நாள் இருந்தாங்க.
இப்போ நீங்க இங்க வந்ததுக்கு பிறகு இப்படி உம்மென்று இருக்கிறது பார்க்க அவங்களுக்கும் கஷ்டமா இருக்காதா? ” என்றான். அப்போதுதான் வாயை திறந்தாள் மலர்னிகா.” அப்பிடி இல்லைங்க எனக்கு புது இடம், அதுதான் எனக்கு பேசறது கஷ்டமா இருக்கு. ” என்றாள்.
அதற்கு காளையன்,” ஏன் புள்ள எங்களை புதுசா பாக்குறீங்க? நாங்க உங்களோட சொந்தக்காரவங்கதான். முதல்ல அப்படித்தான் இருக்கும். பிறகு சரி ஆயிடும்.” என்றான். அவளும் சரி என்றாள். பின்னர் காளையன் தயக்கத்துடன்,” நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன். தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்கு யாராலாவது ஏதாவது பிரச்சனை வந்து இருக்கா, நீங்க இருந்த ஊர்ல? ” அப்படி கேட்டான் காளையன். இப்படி திடீரென கேட்பான் என்பதை அறியாத மலர்னிகா உடனே திடுக்கிட்டு பார்த்தாள்.
அவளது பார்வையிலே புரிந்து கொண்டான். மேலும் அதைப் பற்றி கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பவில்லை.” உங்களை இங்க இருக்கிற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் வரீங்களா?” என்று கேட்டான்.
மலர்னிகாவிற்கு ஏனோ போகலாம் என்று தோன்றியது. இருந்தாலும் அவனது காயம் ஞாபகம் வந்தது. “உங்களோட கையில காயம் இருக்கே.” என்றாள். அதற்கு அவன் நாம நடந்து போற தூரம்தான் புள்ள, போகலாம்.” என்றான்.
அவளும் சரி போகலாம் என்றதும், இருவரும் கீழே வந்தனர். அப்போது கீழே இருந்த நேசமதி,” என்ன எங்க கிளம்பிட்டீங்க? “என்று கேட்டார். அதற்கு காளையன்,” அம்மா மலர்புள்ள வந்ததிலிருந்து அறைக்குள்ளே இருக்குது. அதுதான் நான் அருவிக்கரை ஓரமாக மலைப்பக்கமா கூட்டிட்டு போய் காட்டிட்டு வாரேன்.” என்று சொன்னான்.
அதற்கு குணவதி, “அதுவும் சரிதான் காளையா. பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வா.” என்று சொன்னார். உடனே அவனும் சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான் இருவரும் சேர்ந்து செல்வதை பார்த்துக் கொண்டு நின்றார் குணவதி.
இருவரும் சேர்ந்து நடந்து கொண்டிருந்தனர். வழியில் இருந்தவற்றை பற்றி காளையன் பேசிக் கொண்டு வர, அவற்றை மௌனமாக கேட்டுக் கொண்டு வந்தாள் மலர்னிகா. அவள் பதில் பேசவேண்டும் என்று காளையனும் எதிர் பார்க்கவில்லை.
மலையடிவாரத்தில் அருகில் சென்றனர். அங்கே மேலே இருந்த நீர்வீழ்ச்சியில் இருந்து ஓடி வருகின்ற அருவி அந்த மலையடிவாரத்திலே விழுந்தது. சில்லென்று வீசும் காற்றும் நதிகளின் சலசலப்பும் மலர்னிகாவின் மனதுக்கு குளிர்ச்சியை தந்தது.
மெதுவாக தனது காலில் இருந்த காலணியை கழட்டி வைத்துவிட்டு தண்ணீரில் இறங்க போனாள் பாவம் இதுவரை அருவியில் இறங்கி பழக்கம் இல்லை போல பாசியில் காலை வைத்து விட்டாள். அவள் விழப்போகிறாள் என்பதை உணர்ந்த காளையன் சட்டென்று அவளது கையைப் பிடித்துக் கொண்டான் இருவர் கண்களும் பாஷை பேசியது.
கம்பெனிக்கு வந்த மோனிஷாவின் கண்கள் சபாபதியின் இடத்தை நோக்கியது. சபாபதி இன்னும் கம்பெனிக்கு வந்திருக்கவில்லை. என்னாச்சு சபாக்கு? எப்பவும் நேரத்தோட வந்துருவான் கம்பெனிக்கு. இன்னைக்கு லேட்டாகுது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் மோனிஷா.
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வேக வேகமாக வந்தான் சபாபதி. சபாபதியை பார்த்ததும் கண்களை சிமிட்டி சிரித்தாள் மோனிஷா. பதிலுக்கு சபாபதியும் சிரித்துக் கொண்டான். பின் இருவரும் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். பின்னர் இடைவெளியின் போது கேண்டினில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது சபாபதி அவளிடம் எதையோ பேச வருவதும் பின்னர் அதை சொல்ல தயங்குவதுமாக இருந்தான். அவன் வந்ததில் இருந்து அவனைக் கவனித்துக் கொண்டு இருந்த மோனிஷா, என்ன சபா எங்கிட்ட ஏதாவது கேட்கணுமா? இல்லை ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்டாள்.
அவள் அவனைப் பார்த்து இப்படி கேட்டதும் அவளை பார்த்து பேச மேலும் தயங்கினான் சபாபதி.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊