மகாதேவிடமிருந்து அழைப்பு வந்திருப்பதைக் கண்டவள் உடனடியாக அவனுக்கு அழைப்பெடுத்தாள் மகிமா.
அவனும் அழைப்பை ஏற்று, “சொல்லு மகி” என்றான்.
“அண்ணா எங்கிருக்க” என கேட்டாள்.
“வேற எங்க தாண்டி இருக்க போறேன்… ஆபீஸ்ல தான்… நேத்து ஏன் நீ வரல… நான் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன்னு தெரியுமா” என்று கேட்க,
“இந்த ராட்சஷன் என்ன வர விடல்ல அண்ணா… சரி அத விடு… நீ எப்போ பசுபிக் ஓஷன்கு போவ” என்று கேட்டாள் மகிமா.
“டூ டேஸ்ல… போவேன் மகி” என்றான்.
“ஆஹ்… ஒகே அண்ணா நானும் உன் கூட வரேன்” என்று கூற,
“என்னடி சொல்ற… அபிக்கு தெரியுமா?” என்று கேட்டான் மகாதேவ்.
“இல்ல அண்ணா… தெரிஞ்சா வீட்ட விட்டு வெளிய கால் வெக்கவே விட மாட்டான்… நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். உன் கூடவே இருந்தே என் ரிசேர்ச பார்கிறேன் டா” என்றாள்.
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது…
தனியாக ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றவள் இப்போது அவன் கூடவே வருகிறேன் என்கிறாளே… அவனுக்கும் இது சரி என்றே பட்டது… தனியாக போவதை விட அவன் கூடவே அவளை அழைத்து செல்வது பாதுகாப்பான விஷயம் அல்லவா…
“ஆனா அபிக்கு தெரியாம நீ வர்றது ரொம்ப டேஞ்சர்…” என்றான் மகாதேவ்.
அதற்காகத்தானே அவள் அவனுடனே வருகிறேன் என்கிறாள்…
ஒன்று அபின்ஞானை விட்டு வந்தது போலவும் இருக்கும்… அடுத்தது அவள் ஆய்வையும் இங்கேயே முடித்து விடலாம்…
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்…
இதுதான் அவளது திட்டம்…
“எந்த பிரச்சனயும் வராம நான் பார்த்துக்குறேன் அண்ணா” என்றாள்.
“சரி… நீ பார்த்து கவனமா வா… மார்னிங் முன்று மணிக்கு ஷிப் ஹாபர்ல இருந்து கிளம்பும்… நான் டிரைவரோட கார அனுப்புறேன்…என்னால வர முடியாது… ஷிப் ல ஒர்க் இருக்கு… நீ பத்திரமா வந்து சேரு…” என்றவன் அழைப்பை துண்டித்தான்…
இப்போதுதான் அவளுக்கு மூச்சே வந்தது…
இரண்டு நாட்களில் அபின்ஞானிடமிருந்து அவளுக்கு விடுதலை…
சத்தமில்லாமல் அவனிடமிருந்து நழுவிக் கொள்ள நினைத்தாள்…
அவள் மனம் கொஞ்சம் அமைதி அடைந்ததும் தான் நேற்று இரவு அன்னபூரணி அம்மாளுடன் பேசியது நினைவு வந்தது.
“ஐயோ… இவன் மேல இருந்த ஆத்திரத்ல யோசிக்காம அத்தை கிட்ட கண்டபடி பேசிட்டேனே…” என்று வேகமாக ஃப்ரெஷ் ஆகிக்கொண்டு அவரிடம் சென்றாள்…
அவரோ முன் ஹாலில் அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருக்க… அவர் அருகே அமர்ந்தவள், அவர் தோளில் சாய்ந்து கொண்டு, “ஐ அம் சாரி அத்த… நேத்து ஏதோ டென்ஷன்ல யோசிக்காம அப்படி பேசிட்டேன்…” என்று உண்மையான வருத்தத்துடன் மகிமா சொல்ல,
“எனக்கு உன்ன பத்தி தெரியாதம்மா… நான் உன்ன என் சொந்த பொண்ணு மாதிரி தான் பார்க்கிறேன்…” என்று அவரும் அவள் தலையை தடவிக் கொடுத்தார்.
“அத்த என் மேல கோபம் ஒன்னும் இல்லையே” என்று மனம் கேட்காமல் அவர் தோளில் வாகாக சாய்ந்த படி மகிமா மீண்டும் கேட்க,
“மகி… உனக்கு ஏதோ பிரச்சனைன்னு எனக்கு நேத்தே புரிஞ்சிடுச்சி… உன் அண்ணா நேத்து ரிஷப்ஷனுக்கு வரல்ல… அவன் வராதது எனக்கும் கவலை தான்… அபியும் நான் சொல்றத கேட்க மாட்டான்… நீ அந்தக் கோபத்துல தான் பேசி இருப்பன்னு நினைச்சேன்” என்று அவளுக்கு ஆறுதலாகவே கூற,
அவரை அணைத்துக் கொண்ட மகிமாவுக்கோ கண்கள் கலங்கிப் போயின…
‘இவரை விட்டு இரண்டு நாட்களில் போக வேண்டுமே’ என்று நினைக்கும் போதே மனதில் பாரமேறிக் கொண்டது.
மற்ற பெண்களுக்கு மாமியார் வீட்டில் எத்தனையோ பிரச்சினைகள்… ஆனால் அவளுக்கோ தங்கமான புகுந்த வீடு கிடைத்திருப்பது அவள் அதிஷ்டம் தான்… ஆனால் அங்கே இருக்க முடியாது போய் விட்டது அவள் கணவனாலே…
இப்போது அவள் முழுமையாக அவனை புறக்கணிக்க தொடங்கி இருந்தாள்.
அவன் பேசிய வார்த்தைகளாலும் நடந்து கொண்ட முறையாலும் அவன் முகத்தை பார்க்கவே அவளுக்கு பிடிக்கவில்லை.
அடுத்த இரண்டு நாட்களும் எப்படி ஓடியது என்றே தெரியாது…
அன்று அபின்ஞான் பகல் உணவுக்கு வீட்டுக்கு வந்திருந்தான்… மகிமா தன் உடைகளை மடித்துக் கொண்டிருந்தாள்…
அவளோ அவனை திரும்பிக் கூட பார்க்காமல் தன் வேலைகளில் கவனமாய் இருக்க, அவளை ஊன்றிப் பார்த்தபடி அவள் பின்னால் வந்து நின்று, “மகி நீ என் கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறியா?” என்று அவள் பின் கழுத்தில் மங்கியிருந்த காயத்தை வருடியபடி கேட்க,
உடை மடித்துக் கொண்டிருந்தவள் அசையாமல் அப்படியே நின்று விட்டாள்…
“அவனுக்கு தெரிந்து விட்டதோ” என பயந்தவள் தன் நடுங்கும் கரங்களை அவனுக்கு தெரியாமல் மறைத்தவள், “நான் உங்க கிட்ட இருந்து எத மறைக்க” என்றாள் சமாளிப்பாக…
அவளை வித்தியாசமாக பார்த்துக் கொண்டே வெளியே சென்றான் அபின்ஞான்…
அவன் பார்வைகான அர்த்தம் தான் அவளுக்கு புரியவில்லை…
அது சந்தேகப் பார்வையா? அல்லது எச்சரிக்கும் பார்வையா? என்னை விட்டு உன்னை செல்ல விட்டு விடுவேனா என்ற அகங்கராப் பார்வையா? என்று தான் அவளுக்கு புரியவில்லை…
ஆனால் அதை நினைத்து மகிமா கவலைப்படவும் இல்லை.
இன்று அவள் புறப்பட வேண்டும்…
அதற்குரிய ஏற்பாட்டை செய்ய தொடங்கினாள்.
அவர்களது அறையின் கடிகாரத்தின் ஓசை மட்டும் தான் ‘டிக் டிக்’ என்று ஒலித்துக் கொண்டிருந்தது…
நேரத்தை பார்த்தாள். இரவு ஒரு மணி…
அவள் அருகே அபின்ஞான் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்…
அவன் தூங்குகிறானா என்று உற்றுப் பார்த்தவள், ஒரு சில நிமிடங்களின் பின் மெதுவாகக் கட்டிலில் இருந்து எழும்பினாள்…
அபின்ஞானிடம் ஏதாவது அசைவு தெரிகிறதா என்று பார்க்க… அவன் மார்போ சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது…
“நல்லா தூங்கிட்டான் குரங்கு” என்று நினைத்தவள், தான் தயாராக்கி ஒளித்து வைத்திருந்த உடைப்பெட்டியை சத்தம் எழுப்பாமல் எடுத்தவள் வெண்ணிற டீ-ஷார்ட் மற்றும் டெனீமை அணித்தவள், அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள்….
அவ் விட்டிலிருந்து வெளியே வரும் வரை அவள் இதயமோ வெளியே வரும் அளவுக்கு துடித்துக் கொண்டிருந்தது…
அன்று அவன் கம்பெனிக்கு செல்லும் போது அவனை பற்றி அவளுக்கு தெரியாது. இப்போது தான் அவனை பற்றி அடி முதல் நுனி வரை நன்றாக தெரியுமே மாட்டினால் அவள் கதை முடிந்தது…
வீட்டின் கேட்டை திறந்து கொண்டு வந்தவள் மகாதேவ் அனுப்பி இருந்த காரில் ஏறிக்கொண்டாள்….
அரை மணி நேரத்திலே துறைமுகத்துக்கும் வந்து விட்டாள்…
மகாதேவும் அவள் வரும் வரை காத்துக் கொண்டிருந்தான்.
அவள் வந்ததும் இருவரும் அங்கிருந்த ஒரு படகில் ஏறி கப்பலை நோக்கிச் சென்றனர்.
கப்பல் அருகே வந்ததும் அங்கே பொருத்தப்பட்டிருந்த ஏணியில் இருவரும் மேலே ஏறி கப்பலை அடைந்தனர்…
மேலே வந்ததும் அவளை அணைத்துக் கொண்டவன், “எப்படி இருக்க” என்று சிரித்தபடி கேட்க,
“நல்லா இருக்கேன் அண்ணா… அபிய ஏமாத்திட்டு வந்துட்டேன்” என்று கண் சிமிட்டி கூற…
“சரி பார்த்துக்கலாம் வா” என்றவன் மகிமாவை உள்ளே அழைத்து சென்றவன், தன் வேலைகளை பார்க்கச் சென்றான்…
மூன்று மாடிகளை கொண்ட பாரிய சொகுசு கப்பல் அது…
மகிமா கப்பலினுள் செல்லவில்லை. வெளியே நின்று கடலை பார்த்துக் கொண்டிருந்தாள்…
காற்றோ வேகமாக வீசிக் கொண்டிருந்தது…
அவள் மனதிலோ வித்தியாசமான ஒரு உணர்வு… பதற்றமாக உணர்ந்தாள்.
ஏதோ தவறாக நடக்க போவதாகவே அவள் மனம் உறைத்துக் கொண்டிருந்தது.
அவனைப் பிரிந்து வந்தும் அவள் மனம் நிம்மதி அடையவில்லை.
பயமாகத்தான் இருந்தது அவளுக்கு…
கப்பல் இங்கிருந்து கிளம்பினால் தான் அவள் மனம் நிம்மதி அடையுமோ என்னவோ…
அவனுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் என்று அவள் மனம் அதிலே உலன்று கொண்டிருந்தது.
மகாதேவ் பதற்றமாக இருப்பதை கண்டவள் அவனருகே சென்று, “என்ன பிரச்சன அண்ணா… டென்ஷனா இருக்க” என்று கேட்டாள்.
“ஷிப்ல ஏதோ பிராப்ளமாம், இவனுங்க சரியா ஒன்னும் செக் பண்ணில்ல… இப்பதான் சரி பார்த்துட்டு இருக்கானுங்க” என்றான் கோபமாக…
அவளுக்கோ நெஞ்சடைத்துப் போனது.
காலை ஆறு மணி தாண்டி விட்டிருந்தது.
மகிமாவுக்கோ நேரம் செல்ல செல்ல பயத்தில் கைகால்கள் நடுங்கத் தொடங்கின…
“ஐயோ… அபி இந்த டைமுக்கு எழுந்திருப்பானே… நான் வந்தது தெரிஞ்சிறுக்குமோ?” என்ற அலைபேசியை தூக்கிப் பார்த்தாள்.
யாரிடமிருந்தும் எந்த அழைப்பும் வந்திருக்கவில்லை.
அவர்களது கப்பலை இன்னும் சரிபார்த்து முடியவில்லை…
மகிமா… குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்கும் நடந்து திரிந்து கொண்டிருந்தாள்.
அந்நேரம் கப்பலின் வெளியே ஏதோ சத்தம்… மகாதேவும் வெளியே தான் நின்றிருந்தான்.
பெருமூச்சுடன் கண்ணை மூடி திறந்து கொண்டாள்…
மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தாள்.
ஆம்… அவள் உள்ளுணர்வு பொய்யாகவில்லை…
அவளை மீண்டும் சிறைப்பிடித்து செல்ல அவளது ராட்சஷனே வந்திருந்தான்…
அவர்களது கப்பலுக்கு வெளியே கரையில் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய படி அங்கிருந்த படகு ஒன்றில் சாய்ந்து நின்றிருந்தான் அபின்ஞான்…
நீல நிற ஷேர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து… கண்களில் கூலஸ் போட்டிருந்தான்.
அதனால் அவன் முக உணர்வுகளை படிக்க முடியவில்லை அவளாள்…
மகாதேவுடன் ஏதோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தான்…
அபின்ஞானுடன் பேசி விட்டு கப்பலுக்கு வந்த மகாதேவ்… மகிமாவை பார்த்து, “மகி நம்ம கப்பல சரி பண்ண டூ டேஸ் தாண்டிடும்… நம்ம மத்த ஷிப்ஸ் ஒண்ணும் இப்ப ஹாபர்ல இல்ல… ஷிப்ஸ் எல்லாம் திரும்பி வர ஒன் வீக் தாண்டிடும்…அபிட ஷிப்பும் நம்ம ஷிப்கு அடுத்த பக்கம் தான் நிக்குது…” என்று அவனது கப்பலை கைநீட்டி காட்டியவன், “நாம இப்ப அபிட கப்பல்ல தான் பசிபிக் ஓஷனுக்கு போயாகணும் மகி…” என்று நீளமாக பேசி முடித்தான் மகாதேவ்.
மறுக்க முடியாத நிலையில் தான் மகாதேவும், மகிமாவும் இருந்தனர். அவளே எதிர்பாராத வகையில் அவள் மனக்கோட்டை இடிந்து விழ… அபின்ஞானுடைய கப்பலுக்கே போய் சேர வேண்டி இருந்தது விதியின் சதி தானோ….
அபின்ஞானின் கப்பலும் மூன்று மாடிகளை கொண்ட ஆடம்பரமான கப்பலாகவே இருந்தது…
அபின்ஞானது பிஏ வான கரனும், சஞ்சனாவும் அங்கேதான் இருந்தனர்.
மகாதேவ் தன் பி ஏ வான ராகவுடன் வந்திருந்தான்…
அபின்ஞான் அனைவரையும் மூன்றாம் மாடிக்கு அழைத்து சென்றவன் அவர்களுக்கு உரிய அறைகளை காட்டினான்.
மூன்றாம் மாடியில் இருந்த அனைத்து அறைகளுமே சொகுசாகவும் ஆடம்பரமாகவும் இருந்தன…
அதேபோல் எல்லாராலும் மூன்றாம் மாடியினுல் நுழையவும் முடியாது
மகாதேவ் அவனது பி ஏ ராகவ், சஞ்சனா மற்றும் கரன் அவர்கள் நால்வருக்குமே தனித்தனி அறைகளை கொடுத்தவன், மகிமாவின் கையை பிடித்து இழுத்தபடியே தன் அறைக்குச் செல்ல மகிமாவும் அவன் பின்னால் இழுப்பட்டு சென்றாள்..
அபின்ஞானின் அறையோ…அவர்களது வீடு போல்தான் இருந்தது…
முன் கூடம்… படுக்கையறை… சமையலறை… குளியலறை மற்றும் நீச்சல் தடாகம் என்று சகல வசதிகளுடனும் இருந்தது…
எந்தத் தேவைக்காகவும் வெளியே செல்ல வேண்டிய அவசியமே இல்லை…
நீச்சல் தடாகத்தின் மறுபக்கம் ஒரு கண்ணாடி கதவு இருந்தது… அதை திறந்து கொண்டு வெளியே சென்றால் அது பெல்கனி போன்ற அமைப்பில் இருந்தது… அங்கிருந்த கம்பியை பிடித்துக்கொண்டு ஆர்ப்பரிக்கும் கடலை வெறித்தப் பார்த்தபடி நின்று இருந்தாள் மகிமா…
அவளருகே வந்து நின்ற அபின்ஞான், “நான் அவ்ளோ சொல்லியும் நீ கேக்கல” என்றவன் குரலில் இருந்தது என்ன உணர்வு என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை…
அவனை சலிப்பாகப் பார்த்தவள், “நான் இங்க வந்ததுல எந்த லாபமோ அர்த்தமோ இல்லையே… நீங்க தான் கண்டு புடிச்சிடீங்களே” என்றாள் இயலாமையுடன்…
“இல்லன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா… ரொம்ப வருத்தமா தான் இருக்கு… திரும்ப திரும்ப உங்க மூஞ்சியே பார்க்க வேண்டி இருக்கே” என்று அவளும் அவன் மேல் உள்ள கோபத்தில் பேச…
“ஆஹான்… இனி நீ என்னோடு தான் இருக்கணும்…. நான் அவ்ளோ எடுத்து சொல்லியும் அத மீறி இருக்க… அதுக்கு உனக்கு கட்டாயம் ஏதாவது தண்டனை தந்தே ஆகணுமே” என்று அவன் தாடியை நீவிய படி யோசிப்பது போல் பாவனை செய்ய
அவளுக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தாலும் அவனை கண்டுகொள்ளாது போல கடலையே பார்த்தபடி இருந்தாள்…
“நீ அக்ரிமெண்ட்ட மீறினதால என்னால உனக்கு டிவோர்ஸ் தர முடியாது… உனக்கு பிடிக்காத என்னோட தான் லைப் லாங் நீ டிராவல் பண்ணியாகணும்” என்று கூற,
அவனை அதிர்ந்து பார்த்தவள், “என்ன விளயாடுறீங்களா? என்னால உங்களோட வாழ முடியாது” என்றாள் கோபமாக…
“நீ முடியாதுன்னு சொல்ல சொல்ல அதையே பண்ணனும் போலவே இருக்கே… இப்ப என்ன பண்ணலாம்” என்று அவன் வில்லன் சிரிப்பு சிரித்தபடி கேட்க,
அவளுக்கு கை கால்களே ஓடவில்லை… எப்படி வந்து இவனிடம் மாட்டிக் கொண்டோம் என்று தான் இருந்தது…
அவள் அவனை வெறுப்பாக பார்த்தபடி இருக்க… அவள் எதிர்பார்க்காத நேரம் அவளை நெருங்கியவன், அவள் இடையை பிடித்து இழுத்து கப்பலில் ஓரத்தில் இருந்த கம்பியில் சாய்ந்து அவள் முகம் நோக்கி குனிந்தான்…
அதிர்ச்சியாக கண்ணை விரித்தவள் அவன் உதடுகள் அவள் இதழ்களை நெருங்கிய நேரம் தலையை பின்னுக்கு கொண்டு செல்ல… தன் இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன்… அவள் இடையை பிடித்து தன்னோக்கி இழுத்து அவள் கீழ் அதரங்களை சிறை பிடிக்க, அவளோ அதிர்ச்சியில் சிலை போல் நின்றிருந்தாள்…
எவ்வாறு எதிர்வினை ஆற்றுவதுதென்று கூட பதற்றத்தில் தெரியவில்லை…
அவனது முத்தம் எவ்வளவு நேரம் நீடித்ததென்றும் தெரியவில்லை…
அவனாகவே அவளிடம் இருந்து மெதுவாக விலகி அவளைப் பார்த்தான்…
மகிமாவோ பேய் அறைந்தது போல் இருந்தாள்…
“இனி என்ன பிரிய நினைச்சா இதுதான் உனக்கு தண்டன…” என்று கூறிய வாரே மீண்டும் குனிந்து அவள் என்னவென்று உணற முன்பே அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டவன் நிதானமாக அவளிடமிருந்து விலகி தலையை கோதிக் கொண்டே அறைக்குள் சென்றான்.
அவள் இதயமோ பந்தயக்குதிரை போல் துடித்துக் கொண்டிருந்தது…
தன் மார்பை தடவி தன்னை அமைதி படுத்த முயன்றாள்…
அவன் தன்னை முத்தமிடுவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை…