நீ எந்தன் மோக மழையடி

4.8
(8)

பாகம் -4

 

குமுதம், “நீங்க இன்னும் பொண்ணு பிடிச்சிருக்கா என்று சொல்லவே இல்லையே” என்கவும்.

சாந்தி மற்றும் சக்தி இருவரும் ஒருவரை ஒருவர் பதட்டத்தோடு பார்த்துக் கொள்ள மகேஷ், “அதான் என் பையன் பிடிச்சிருக்கு என்று சொல்லிட்டானே… அப்புறம் நான் தனியா சொல்றதுக்கு என்ன இருக்கு” என்றார்.

அவர் வார்த்தையிலேயே அவர் கோபம் அனைவருக்கும் புரிந்துவிட… சாந்தி அந்த சூழலை சமாளிக்க எண்ணி சிரித்துக் கொண்டே “சரி அப்போ நாங்க கிளம்பறோம்.. நல்ல நாள் பார்த்து புரோகிதர் கிட்டு  கேட்டுட்டு உங்களுக்கு நான் ஃபோன் பன்றேன்” என்றார்.

பிறகு, மகேஷ் முதலில் அங்கிருந்து வெளியேறி விட அவரைப் பின் தொடர்ந்து ஒவ்வொருவராக அனைவரும் அங்கிருந்து விடைப்பெற்றுக் கொண்டார்கள்.

ஆம், மகேஷ் பெரிய பிஸினஸ் மேன் அவருக்கு காசு பணம் முக்கியம் கிடையாது. நான் செய்வது தான் சரி என் பேச்சை தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்ற குணம் கொண்டவர். அதே சமயம் குடும்பத்தின் மீதும் அதிகம் பாசம் கொண்டவர்.

ருத்ரன் காதலித்தது தான் அவருக்கு பிரெச்சனையே தவிர்த்து யாழினி வசதி இல்லாத குடும்பம் என்பது அவருக்கு பிரெச்சனை கிடையாது…

அவர் நல்ல பெண்ணாக பார்த்து ருத்ரனுக்கு கல்யாணம் பண்ணனும் என்று பல கனவுகள் வைத்திருக்க திடிரென்று ருத்ரன் காதலை பற்றி சொல்லிவிட அதை அவறால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இந்த கல்யாணத்தில் பையனின் பிடிவாதத்திற்காக மட்டுமே அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

யாழினி ஒருவித கோபத்தோடு ருத்ரனை பார்த்து முறைத்துக் கொண்டிருக்க.

ருத்ரன் தன் கேசத்தை கோதி விட்டு புருவத்தை உயர்த்தியவாறு அவளை பார்த்து எதையோ சாதித்தது போல் புன்னகையோடு வெளியேறினான்.

பிறகு, அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு விட… யாழினி அழுதுக் கொண்டே அவள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

மயில், “என்ன டி ஆச்சு ரூம்ல? மாப்பிள்ளை என்ன சொன்னார்? நீ கல்யாணத்தை நிறுத்த சொல்லி அவர்கிட்ட சொல்லிட்டியா?”.

யாழினி, “நான் என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு துளியளவும் இல்லடி… என் தலையெழுத்து என்னவோ அதன்படி தான் எல்லாமே நடக்கும் என்று நினைக்கிறேன்”.

மயில், “நீ எதுக்கும் கவலைப்படாத டி… இப்போ எதுக்கு இப்படி மனம் தளர்ந்து பேசுற”.

யாழினி அதற்கு பதில் அளிக்காமல் கட்டிலில் அமர்ந்து கால்களை குறுக்கே கட்டிக்கொண்டு முகத்தை புதைத்து அழுது கொண்டே அமர்ந்திருந்தாள்.

மயில் அவள் தலையை வருடி விட்டு, “எனக்கு ஒரு சந்தேகம் டி?” என்கவும்.

யாழினி நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவள் என்ன என்பது போல் புருவத்தை சுருக்கிக் கேட்க மயில், “நீ ஏன் இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்ற? அந்த ருத்ரன் உன்ன பிடிச்சிருக்குன்னு தானே கல்யாணம் பண்ணிக்க வந்திருக்காரு”.

“நீ அவரையே கல்யாணம் பண்ணிக்கலாம்ல டி முடிச்சு போன காதலை நெனச்சு இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி அழுதுகிட்டே இருக்க போகிற” என்றாள்.

யாழினி,  “நீ இவ்வளவு சாதாரணமாக சொல்லிட்ட என்னோட காதல பத்தி… ஆனா என்னால அவ்ளோ சீக்கிரம் என் காதல மறக்க முடியாது டி…”

“நீ ஸ்டடிஸ் முடிச்சுட்டு இப்போதான் ஊருக்கு வந்து இருக்க அதனால் உனக்கு எதுவுமே தெரியாது டி…” என்றாள்.

மயில், “அதான் டி நானும் கேட்கிறேன்… நான் காலேஜ் படிக்க நாலு வருஷம் மட்டும் தான் பாரின்கு போனேன். அது வரைக்கும் சின்ன வயசுல இருந்து உன் கூடவே தான் சுத்திக்கிட்டு இருந்தேன்”

“உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும்… இந்த காலேஜ்ல ஒரு பையனை நீ காதலிச்சு இருக்க அதை பத்தி நீ என்கிட்ட அதிகம் சொன்னது கூட கிடையாது….”

“திடீர்னு ஒரு நாள் போன் போட்டு வீட்டுக்கு தெரியாம அவனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்ன நான் கூட வேண்டாம் அதெல்லாம் சரி வராது சொன்னேன்”

“ஆனா, நீ கேட்கல… அப்புறம் ஒரு நாள் நீயே ஃபோன் போட்டு கல்யாணம் நின்று போச்சு பார்த்திபன்கு எல்லாம் தெரிஞ்சு கல்யாணத்தை நிறுத்திட்டான்னு சொன்ன…”

“உன் காதல் என்னடி ஆச்சுன்னு கேட்டதுக்கு அது முடிஞ்சு போச்சு அப்படின்னு நீ தான் சொன்ன… புரியுற மாதிரி கொஞ்சம் தெளிவா சொல்லு ன்னு சொன்னேன் அதை பத்தி பேசவே வேண்டாம்னு நீ சொல்லிட்ட”

“நான் உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு அதோட உன்கிட்ட உன் காதலை பத்தி கேட்கிறதையே விட்டுட்டேன். நீ ஒருத்தனை விரும்புன அந்த காதல் முடிஞ்சு போச்சுன்னும் நீ தான் சொன்ன அது தப்பு இல்ல”

“ஆனா, முடிஞ்சு போனதை நெனச்சுக்கிட்டு இப்போ உன்னை விரும்பி ஒரு பையன் வரும்போது நீ ஏன் வேண்டாம் என்று தடுக்குற”

“உன்னோட லவ் பெயிலியர் க்கு அப்புறம் நான் எத்தனையோ வாட்டி போன் கால் பண்ணேன்.. ஆனா, உனக்கு ரீச் ஆகவே இல்ல…‌ நான் நேத்து ஊர்ல இருந்து வரும்போது உங்க அண்ணன் உனக்கு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கதா கேள்வி பட்டேன்”

“நீ ஒருத்தங்கள நேசிச்சு அவங்க உனக்கு கிடைக்கலன்னு இப்போ வரைக்கும் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க இல்ல… அதேபோல் தானே இப்போ ருத்ரன்னோட நிலைமையும். நீ கிடைக்கலன்னா அவனும் இப்படி தான கவலைப்பட்டுக் கொண்டிருப்பான் அவனை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாரு டி…” என்றாள்.

யாழினி, “நீ சொல்றது எல்லாம் சரி தான் டி… உண்மையாவே என்ன ஒருத்தன் நேசிச்சு இதுபோல வந்திருந்தால் நான் எப்படி ரியாக்ட் பண்ணி இருப்பேன்னு எனக்கு தெரியல…”

“ஆனா, இந்த ருத்ரன் வேணும்னே என்ன கல்யாணம் பண்ணிக்க வந்து இருக்கான்… அவனோட பார்வையே சரி இல்லை… உண்மையை சொல்லனும் என்றால் அவன் என் கூட காலேஜ் படிச்சவன் தான்… எனக்கு சீனியர் தான்.. ஆனா, அவன் எனக்கு துரோகம் பண்ணி இருக்கான் உனக்கு தெரியுமா..” என்றாள்.

மயில் அதிர்ச்சியாக, “என்னடி சொல்ற! துரோகம் பண்ணி இருக்கானா? எனக்கு புரியல” என்றாள்.

யாழினி, “ஆமா” என்று தலை அசைத்தாள்.

மயில் மெல்லிய குரலில், “அப்போ இவன் நல்லவன் இல்லையா டி?” என்றாள்.

யாழினி, “எனக்கு தெரிஞ்சு இவன் நல்லவனே கிடையாது டி. நான் இன்னொருத்தனை காதலிச்சது தெரிந்தும்… எப்படி எல்லாம் காதலிச்சேன் என்று தெரிஞ்சும் கூட இவன் இப்போ என்னை பொண்ணு கேட்டு வந்திருக்கான்… அப்போ இவன் நல்லவனா? நீயே சொல்லு…” என்றாள்.

மயில் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ந்து விழித்துக் கொண்டிருக்க.

யாழினி, “இன்னும் சொல்லப்போனால் இந்த ருத்ரன் உண்மையாகவே யாருன்னா…..” என்று அவள் கூற வரும் முன்பே பார்த்திபன் கதவை திறந்து கொண்டு அறையின் உள்ளே நுழைந்திருந்தான்.

அவனைப் பார்த்தவுடன் இருவரும் எழுந்து நிற்க பார்த்திபன் புன்னகையோடு, “ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல தான் வந்தேன்.. அம்மா அம்மா” என்று சத்தமாக கூச்சல் போட அடுத்த கனமே குமுதம் மற்றும் சங்கர் இருவரும் அந்த இடத்தை வந்தடைந்தார்கள்.

குமுதம், “என்னப்பா.. இவ்ளோ சத்தம்போட்டு கூப்பிட்ட..” என்றார்.

பார்த்திபன், “ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லலாம் என்று தான் கூப்பிட்டேன். மாப்பிள்ளை வீட்ல இருந்து இப்போதான் போன் பண்ணாங்க. அவங்க வீட்டுக்கு நல்லபடியா போய்ட்டாங்களாம்” என்றான்.

மயில், “ஓ… நல்லபடியா வீட்டுக்கு போய்ட்டாங்களா.. ரொம்ப சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கீங்களே.. நான் போய் ஸ்வீட் எடுத்துட்டு வரேன் சந்தோஷமான விஷயம் பேசினா ஸ்வீட் சாப்பிடணும் இல்ல” என்று கேலி செய்வதுபோல் கூறினாள்.

பார்த்திபன் அவளைப் பார்த்து முறைக்க அவன் முறைப்பெல்லாம் எனக்கு பக்கோடா சாப்பிடுவது போல் என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

பார்த்திபன், “நான் அதை சொல்ல வரல… அவங்க போற வழியில் அவங்களுக்கு ரொம்ப நெருக்கமான புரோகிதர் கிட்ட நம்ம யாழினி ஓட ஜாதகமும் மாப்பிள்ளை ஜாதகமும் காமிச்சு ஜோடி பொருத்தம் எப்படி இருக்குன்னு கேட்டாங்களாம்”

குமுதம், “என்னப்பா சொன்னாங்க… பொருத்தம் எல்லாம் சரியா இருக்கா?” என்றார் ஆவலுடன்.

பார்த்திபன், “நீ வேற ஏன் ம்மா… என்னை கொஞ்சம் சொல்ல விடுங்க…” என்றான்.

குமுதம், “சரி சரி குறுக்கே நாங்க யாரும் பேசல நீ சொல்லு” என்கவும்.

பார்த்திபன், “புரோகிதர் எல்லா பொருத்தமும் சரியா இருக்கு இன்னும் இரண்டு வாரம் கழிச்சு வர்ர ஞாயிற்றுக்கிழமை கல்யாணத்த வச்சுக்கலாம் முன்னாடி நாள் ராத்திரியே நிச்சயத்தை வச்சுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டாங்களாம்” என்றான் சந்தோஷமாக.

ஆனால், அதைக் கேட்டு சந்தோஷப்பட வேண்டிய யாழினி எதையோ பறி கொடுத்தது போல் எங்கோ வெறித்தபடி நின்று இருந்தாள்.

சங்கர், “நீ சொல்றது எல்லாம் சரிப்பா… ஆனா, இவ்ளோ அவசரமா கல்யாணத்தை பண்ணனும்னு என்ன அவசியம்? கொஞ்சம் மாப்பிள்ளை பற்றி நல்லா விசாரிச்சுக்கோ…” என்றார்.

குமுதம், “நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா… இவ்வளவு பெரிய சம்பந்தம் நம்ம குடும்பத்தை தேடி வந்திருக்கு ஏதோ கடவுள் நம்ம மேல கொஞ்சம் கருணை காமிச்சு இந்த சம்பந்தத்தை அனுப்பி வச்சிருக்காரு இல்லன்னா கனவுல கூட இந்த மாதிரி ஒரு வாழ்க்கை நம்ம பொண்ணுக்கு அமையாது”

“எப்படியாவது இந்த கல்யாணம் மட்டும் இந்த தடங்கலும் இல்லாமல் நல்லபடியாக நடந்துச்சுன்னா நம்ம குலதெய்வ கோவிலுக்கு யாழினியும் மாப்பிள்ளையும் கூட்டிட்டு போய் பொங்கல் வைக்கணும்” என்றார்‌.

பார்த்திபன், “அப்பா நீங்க எதுக்கும் பயப்படாதீங்க யாழினி என்னோட தங்கச்சி அவளுக்கு ஒரு குறை கூட இல்லாமல் இந்த ஊரே பெருமையா பேசுற அளவுக்கு பெரிய அளவுல அவ கல்யாணத்தை நான் நடத்துவேன்”

“இந்த பையன் நம்ம யாழினியை எந்த அளவுக்கு காதலிக்கிறான் என்று எனக்கு நல்லாவே தெரியும். அது இப்போ வேணும்னா யாழினிக்கு புரியாமல் இருக்கலாம் ஆனா சீக்கிரமே அவளும் புரிஞ்சுப்பா” என்றான்‌ யாழினியை பார்த்துக் கொண்டே.

ஆனால், யாழினி அது எதுவும் காதல் விழாதவாறு கடமை என நின்று இருந்தாள்..

அவள் நிற்கும் தோரணையிலேயே அவளுக்கு இதில் விருப்பமில்லை என்பது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தது.

மயில், “நீங்க சொல்றதெல்லாம் சரிதான்… நீங்க உங்க தங்கச்சி மேல வைத்திருக்க பாசமும் சரிதான்..‌ ஆனா, ஒருத்தவன் உங்க தங்கச்சியை காதலிக்கிறதா சொன்னவுடன் நீங்க உங்க இஷ்டத்துக்கு கல்யாண ஏற்பாடு பண்றீங்க”

“ஆனா, உங்க தங்கச்சிக்கு அவன பிடிச்சு இருக்கான்னு கேட்டீங்களா? அவனை முன்ன பின்ன உங்க தங்கச்சி பார்த்திருக்கிறாளா? நிஜமாகவே அந்த பையன் உங்க தங்கச்சியை காதலிக்கிறானா?”

“உங்க தங்கச்சி பின்னாடி எத்தனை நாளாக அவன் சுத்திக்கிட்டு இருக்கிறான்.. இப்படி ஏதாச்சும் உங்க தங்கச்சி கிட்ட நீங்க கேட்டீங்களா” என்றாள் கோபமாக.

பார்த்திபன், “எனக்கு எல்லாமே தெரியும்… மாப்பிள்ளை எல்லாத்தையுமே என்கிட்ட சொல்லிட்டாரு. அதனால் புதுசா யாழினி கிட்ட கேட்டு தெரிந்து கொள்வதற்கு எனக்கு எதுவுமே இல்லை”

“என்கிட்ட ஒரு விஷயத்தை பற்றி மாப்பிள்ளை சொன்னாரு.. ஆனால், அதை இப்போதைக்கு யாழினி கிட்ட சொல்ல கூடாதுன்னும் சொல்லி இருக்காரு”

“அந்த விஷயம்  மட்டும் தெரிந்தால் யாழினி இதுபோல் அழதுகிட்டு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு

சொல்ல மாட்டாள். சந்தோஷமா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிப்பா. நான் எது பண்ணாலும் அது யாழினி நல்லதுக்கு தான் பண்ணுவேன்” என்றான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!