45. காதலோ துளி விஷம்

4.8
(134)

விஷம் – 45

தன்னுடைய படுக்கையில் படுத்திருந்தான் யாழவன்.

அவன் கோமாவில் இருந்து விழித்து இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டிருந்தன.

அவனுக்கு உடல் நன்றாக தேறிவிட்டிருந்தது.

காயங்களும் மாறிவிட்டிருந்தன.

ஒரு பக்கக் கன்னத்தில் மட்டும் மெல்லிய கோடு தழும்பாக பதிந்திருந்தது.

இரண்டு மாதத்தில் கோமாவில் இருந்து விழித்திருந்தாலும் கூட சட்டென அவனால் எழுந்து நடந்துவிட முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நடைக் கம்பியைப் பிடித்து ஆரம்பத்தில் நடக்க ஆரம்பித்தவன் இப்போது நன்றாகவே நடைக் கம்பியின்றி நடந்தான்.

நடந்து முடிந்த கோர விபத்தில் இருந்து அவன் உயிர் பிழைப்பான் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

உயிர் பிழைக்காமல் போயிருந்தால் கூட நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் அவனுக்குள் இருக்கத்தான் செய்தது.

விதியை நினைத்து சிரித்துக்கொண்டான் அவன்.

இப்போதெல்லாம் வாழ்க்கையை வாழ்வதில் அவனுக்கு எந்த விதமான பற்றும் இருக்கவில்லை.

அவனுடைய அன்னை ரூபாவதியோ அரணை பார்த்துக்கொள்ளும் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டார்.

இனி நான் எதற்கு வீணாக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்றுதான் அவனுக்குத் தோன்றியது.

அவனுடைய தேவை இங்கே இருக்கும் யாருக்கும் தேவையே இல்லை.

தன்னை மறந்து தன்னுடைய இறப்பை ஏற்று இயல்பான வாழ்க்கையை அர்ச்சனா வாழப் பழகிவிட்டாள் என்பது மட்டும்தான் அவனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

கோமாவில் இருந்து விழித்ததும் அவளுடைய முகத்தைப் பார்க்கத்தான் ஆசை கொண்டான்.

இரண்டு மாதங்களாக சுயநினைவின்றி கோமாவில் இருந்திருக்கிறோம் என்பதே அவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

அர்ச்சனா குழந்தையை பெற்றெடுத்திருப்பாளே என்ற ஆர்வம் அவனுக்குள் அதிகரித்தது.

அவளையும் குழந்தையையும் அக்கணமே பார்த்துவிடத் துடித்தான் அவன்.

அவன் உயிரோடு இருக்கும் விடயம் அர்ச்சனாவிற்குத் தெரியாது என அவனுடைய அன்னை கூறியதும் ஒரு கணம் திகைத்தாலும் மறு நொடியே அமைதியாகி விட்டான் அவன்.

ஆம் நிதர்சனம் புரிய ஆரம்பித்ததும் தன்னுடைய ஆசைகளையும் ஆர்வத்தையும் அடக்கிக் கொண்டான் யாழவன்.

போதும் அவனால் அவள் வேதனை பட்டதெல்லாம் போதும்.

தன்னைக் காதலித்து கைபிடித்த இரண்டாவது நாள் தொடக்கம் இன்று வரை அவளுக்கு அவனால் கிடைத்தது வேதனை மட்டுமே.

இனியாவது அவள் என்னை மறந்து நன்றாக இருக்கட்டும் என அப்படியே ஒதுங்கிக் கொண்டான் அவன்.

ரூபாபதிக்கோ தன்னுடைய மகன் சொன்னதும் புரிந்து கொண்டான் என மகிழ்ச்சியாக இருந்தது. எங்கே மீண்டும் அர்ச்சனாவின் பின்பு சென்று வேதனைப்பட்டு தன் வாழ்க்கையை தொலைத்து விடுவானோ எனப் பயந்தவருக்கு அவனுடைய மாற்றம் நிம்மதியைக் கொடுத்தது.

எப்படியாவது இவனுடைய மனதை மாற்றி அவனை பழைய யாழவன் போலவே மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என ஒரு தாயாய் ஆசை கொண்டார் அவர்.

ஆனால் நடந்ததோ வேறு.

அவன் சிரிப்பைத் தொலைத்தான்.

தனிமையில் நேரத்தை கழிக்க ஆரம்பித்தான்.

அரணை தூரத்தில் நின்று பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டான்.

ஆசையாக நெருங்குவதோ அவனைத் தூக்கிக் கொஞ்சுவதோ இல்லை.

ஆதங்கம் தாங்காமல் ரூபாவதி வேதனையுடன் நேரடியாக அவனிடம் கேட்டுவிட,

“அரணுக்கு மட்டும் நான் பாசத்தைக் கொடுத்தா அது நான் யாழனிக்கு பண்ற துரோகம் மாதிரி ஆயிடும்மா..” என்றான் வலி தேங்கிய குரலில்.

அதிர்ந்து விட்டார் ரூபாவதி.

“முட்டாள் மாதிரி பேசாதடா.. யாழினிக்குதான் அர்ச்சனா இருக்காளே..”

“அரணையும்தான் அர்ச்சனா வந்து பாத்துக்குறாளே.. தினமும் பால் கொடுத்து அவன் கூட இருந்துட்டுதானே போறா.. ரெண்டு குழந்தைக்கும் அம்மாவோட பாசம் கிடைக்குது.. அதே மாதிரி ரெண்டு குழந்தைக்கும் அப்பாவோட பாசம் கிடைக்காமலேயே போகட்டும்..

யார் கூடவும் வாழறதுக்கு எனக்கு தகுதி இல்லம்மா..

அரண் உங்ககிட்டயே வளரட்டும்.. அர்ச்சனாவோட பாசம் அரணுக்கு கிடைக்கிறதே பெரிய விஷயம்மா.. அவ அவளோட வாழ்க்கைய அவளுக்கு பிடிச்ச மாதிரி வாழட்டும்..” என்றவன் அத்துடன் அந்தப் பேச்சை முடித்துக் கொண்டான்.

ரூபாவதியோ உடைந்து போனார்.

தன் மகன் செத்துப் பிழைத்து வந்த பின்பு கூட இப்படி நிம்மதி இல்லாமல் வேதனையில் துடிக்கின்றானே என அவருக்கு வருத்தமாக இருந்தது.

நேரடியாக அர்ச்சனாவிடம் சென்று யாழவன் உயிரோடுதான் இருக்கின்றான் அவனை மன்னித்து ஏற்று சந்தோஷமாக வாழ முடியுமா எனக் கேட்டுவிட்டால் என்னவென்று கூட அவருக்குத் தோன்றியது.

ஆரம்பத்தில் யாழவனுடைய தந்தைதான் அவன் உயிரோடு இருக்கும் விடயத்தை பற்றி யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றிருந்தார்.

அவனுடைய விபத்து கொலை முயற்சியாக கூட இருக்கலாம் என எண்ணிப் பயந்தவர் அவன் உயிர் தப்பியத்தை இரகசியமாகவே வைத்துக் கொள்ள ரூபாவதிதான் முதலில் அர்ச்சனாவிடமும் உண்மையைக் கூற வேண்டாம் என தன்னுடைய கணவனிடம் கூறினார்.

விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன்மகனை அர்ச்சனா வெறுப்பில் இன்னும் வதைத்து விடுவாளோ என்ற பயம் அவருக்கு.

அதன் பின்னர் அவன் கோமாவிற்கு சென்றதும் அர்ச்சனாவிடம் உண்மையை கூறுவதா வேண்டாமா என்ற தயக்கம் அவரிடம் இருக்கத்தான் செய்தது.

ஒருவேளை அவன் கோமாவில் இருந்து மீண்டு வராவிட்டால் இன்னொரு வேதனையை அவளுக்குக் கொடுத்தது போல் ஆகிவிடுமே என மீண்டும் உண்மையை அவளிடம் இருந்து மறைத்து விட்டார் ரூபாவதி.

இரண்டு மாதங்களில் அவன் கோமாவில் இருந்து விழித்து விட இதற்கு மேல் உண்மையை மறைத்தால் அது பெரும் பாவமாகிவிடும் என எண்ணியவர் உண்மையைக் கூறலாம் என எண்ணிய போது வேண்டாம் என மறுத்து விட்டான் யாழவன்.

இதோ இப்போது வரை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் தன் மகனின் நிலையை எண்ணி அவருக்கு நெஞ்சில் உதிரம் வழிவது போலத்தான் இருந்தது.

நடந்து முடிந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தவாறு படுத்திருந்த யாழவனோ அடிக்கடி நேரத்தைப் பார்த்தான்.

இந்த நேரத்தில் தானே அச்சு அரணைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வருவாள்..?

அவளைப் பார்ப்பதற்காகவே அரணுடைய அறையில் கேமராவை பொருத்தி இருந்தான் யாழவன்.

அவள் அந்த அறைக்குள் நுழைந்தது தொடக்கம் அரணுடன் விளையாடி அவனைத் தூக்கிக் கொஞ்சி அவனோடு பேசுவதை எல்லாம் தன் அறையில் இருந்து இரசித்துப் பார்ப்பதே யாழவனுக்கு வாடிக்கையாகிப் போனது.

அவளுடைய கொஞ்சல் பேச்சில் அவனுக்கு விழிகளில் கண்ணீர் பொங்கும்.

என் யாழனைப் போலவே இருக்கின்றாயே என அவள் அவனிடம் பேசி முத்தமிடும் போதெல்லாம் இவனுடைய இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

மேலாடை விலக்கி அவள் குழந்தைக்கு பால் புகட்டும் நேரம் மட்டும் தடுமாற்றத்துடன் தன் பார்வையைத் திருப்பிக் கொள்வான் அவன்.

ஐயோ அந்த நொடிகள் யாவும் கடந்த முடிவதற்குள் இவனுக்கு தேகம் படபடத்து வியர்த்து விடும்

ஏன் அவள் மீது இப்படி பைத்தியக்காரத்தனமான காதல் என்பது அவனுக்கு இன்னமும் புரியவில்லை.

கிட்டத்தட்ட இந்தக் காதலுக்கு அடிமையாகி விட்டது போலத்தான் உணர்ந்தான் அவன்.

இதோ அவள் வர வேண்டிய நேரம் தாண்டி அரை மணி நேரம் கழிந்தும் கூட அவள் வரவில்லை என்றதும் அவனுக்கு தலைவலியே வந்து விட்டது.

அந்த அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்தவன் தன் நிதானத்தை இழந்த போது அவனை அதற்கு மேலும் சோதிக்காது அரணின் அறைக்குள் அர்ச்சனா நுழைவது கேமராவின் வழியாக இவனுக்குத் தெரிந்தது.

அதன் பின்னரே நிதானத்திற்குத் திரும்பினான் அவன்.

அவள் வந்துவிட்டாள்.

இனி அவள் இங்கே இருக்கும் மூன்று மணி நேரமும் அவனுக்கு சொர்க்கம்தான்.

விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு திரையில் தெரிந்த தன்னவளின் முகத்தை ஆழ்ந்து இரசிக்கத் தொடங்கினான் யாழவன்.

****

பித்தப் பிடித்தவள் போல நடந்து வந்து அரணுடைய அறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு விழிகள் கலங்கிக் கொண்டே இருந்தன.

எப்போதும் வரும் நேரத்திற்கு அவள் வராததால் குழந்தை தேடி அழ ஆரம்பித்து விட்டான் என ரூபாவதி கூறியதும் அவளுக்கோ உள்ளம் பதறிவிட்டது.

வேகமாக அந்த அறைக்குள் வந்து அரணைத் தன் கரங்களில் ஏந்தி கொஞ்சத் தொடங்கியவள் வழமை போல ஆயிரம் கதைகளை அரணுடன் பேசாது அமைதியாக அவனுக்குப் பால் கொடுக்கத் தொடங்க,

அவளையே கேமராவின் வழியாக பார்த்துக் கொண்டிருந்த யாழவனுக்கோ அவளுடைய முகத்தில் இருந்த குழப்பமும் வாட்டமும் எதற்காக என்று புரியவில்லை.

அவளுக்கோ இன்று விஷ்வா வந்து கூறிய வார்த்தைகள் தான் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தன.

“அர்ச்சனா.. எனக்கு என்னவோ யாழவன் செத்துட்டான்னு தோணல.. எல்லாரும் சேர்ந்து ஏதோ உண்மையை மறைக்கிறாங்க.. அவனோட இறுதிக் கிரியைக்கு அவங்க வீட்டுக்குப் போனேன். என்ன உள்ளேயே அலவ் பண்ணல… அவன் பாடிய கூட கண்ல காட்டல.. அவங்க வீட்ல யாழவனோட போட்டோ போட்டு ஒரு மாலை கூட மாட்டல.. நேத்து யாழவனோட இன்ஸ்டா ஆக்டிவ்னு காட்டுச்சு…. ப்ளீஸ் நீயாவது உண்மைய சொல்லு… என்னோட ஃப்ரெண்ட் எப்படி இருக்கான்..? உனக்கு ஏதாவது தெரியுமா..?” என விஷ்வா அவளிடம் மன்றாடிக் கேட்க, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லைங்க..” எனக் கூறி விஷ்வாவை அனுப்பி வைத்துவிட்டு அன்னத்தின் பேச்சை கேட்காது அரணைப் பார்க்க வந்தவளுக்கு மெல்ல சந்தேகம் துளிர் விட ஆரம்பித்தது.

ஒருவேளை யாழவன் நிஜமாகவே உயிருடன் இருக்கின்றானோ..?

அப்படி இருந்தால் இவர்கள் ஏன் அதை என்னிடம் மறைக்க வேண்டும்..?

தலை வெடித்து விடும் போல இருந்தது அவளுக்கு.

குழந்தை பால் குடித்து முடித்ததும் தன்னுடைய ஆடையை சரி செய்துவிட்டு குழந்தையை மார்போடு சாய்த்துக் கொண்டவள் அதன் நெற்றியில் கனிவாக முத்தம் பதித்தாள்.

மனதில் தோன்றிய சந்தேகத்திற்கான பதிலை கண்டறிய வேண்டும் என உந்தியது அவளுடைய மனம்.

அவள் யாரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாளோ அவன் அவளைத்தான் இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லையே.

இந்த விதிதான் இன்னும் எத்தனை விந்தைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறதோ..?

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 134

No votes so far! Be the first to rate this post.

1 thought on “45. காதலோ துளி விஷம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!