தேவை எல்லாம் தேவதையே….

4.9
(24)

தேவதை 25

 

தர்ஷினி தனக்கு வசியின் மீது இருக்கும் காதலை வெளிப்படையாக சொல்லியதும் தேவா உறைந்து போய் அப்படியே அமர்ந்திருந்தான்… கண்களில் இருந்த கண்ணீரும் வர மறுத்து வற்றிப் போய்விட்டது….

நீல நிற வானில், மின்னும் மின்மினிகளும், கொள்ளை கொள்ளும் நிலவு மகளும், அலைகளின் ஓசையும், சில்லென்ற உடலை துளைக்கும் காற்றும், கடல் நீரும் அவன் பாதங்களை தொட்டு அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்று போனது..

இயற்கை வருணனைகளே! அவனை அரவணைக்க முயன்று தோல்வியை தழுவ… சாதாரண மனிதன் ஜெய்யால் மட்டும் எப்படி முடியும்?

தேவா இப்படியே படு டா வீட்டுக்கு போக வேணாம்.. என்றவன் அவனை படகில் படுக்க வைத்தவன், தானும் அருகில் படுத்திருந்தான்… ஒரு முறை தர்ஷி இல்லை என்றால், நான் உயிர் துறப்பேன் என தேவா சொன்னது, ஜெய்க்கு நியாபகம் வரவே, ஜெய் பயந்தவன் கண் விழித்த படியே அவன் அருகில் படுத்திருந்தான்…

எந்த நிலைமை தனக்கு வரக்கூடாது எந்த வார்த்தை தன் தேவதையிடமிருந்து வந்துவிடக் கூடாது என பயந்திருந்தானோ! அந்த வார்த்தைகளை அவன் தேவதை கூறி தேவாவை உடைத்து விட்டாள்..

. தேவதை என்றால், சொர்க்கத்திற்கு சொந்தமானவள் தானே! இவள் மட்டும் ஏன் எப்போதும் எனக்கு கல்லறை உருவாக்கி காத்திருக்கிறாள் என்னை நரகத்தில் தள்ள… முடிந்து விட்டது இனி எனக்கு அவள் இல்லை, எனக்குள் அவள் வாழும் இதயம் வலிக்கிறது,, இதற்கு மேல் அவ்வளவு காதலையும் வெளிப்படுத்த முடியாவிட்டால் நான் பைத்தியாமாகி என் மூளை செயல் இழந்து மூச்சி விடக் கூட முடியாமல் இறந்து விடுவேன்,..

வானத்தில் இருக்கும் நிலவு மகளும் தர்ஷியின் முகத்தை நினைவூட்ட, கண்கள் மூடினான், இரு துளி கண்ணீர் வெளியேறி அவன் செவியை ஈரமாக்கியது…

அவன் கண்ணீரை துடைத்து விட்ட ஜெய், டேய் மச்சான் அழணும்னா அழுதுரு டா, நா இருக்கேன் டா, என் தோளுல சாஞ்சிக்க டா,, நீ இப்டி வெறுத்து போய் இருக்குறத பாத்தா எனக்கு பயமாருக்கு டா,ப்ளீஸ் டா என கெஞ்சினான்….

என்ன கொடுமை ஜெய்யை சமாதானப் படுத்த தேவா வந்திருந்தான், ஆனால் இப்போது தேவாவை ஜெய் சமாதானப் படுத்தும் நிலையில் இருக்கிறான்….

இல்ல டா அழ வரல..கொஞ்சம் தூங்குனா சரியாகிருவேன் என்றவன் கண்களை மூடினான்… ஜெய் ரொம்ப நேரம் அவன் முகத்தை பார்த்த படியே இருந்தான், தன் நண்பன் ஏதாவது செய்துகொள்வானோ என்ற பயம் அவனை தூங்க விடவில்லை… ஆனால் தூக்கம் எப்போதும் மனிதனை அழுத்தும் உண்மை கூற்றின் படி, ஜெய்க்கு கண்கள் எரிய ஆரம்பிக்க, அங்கிருக்கும் வலையை எடுத்து அவன் மீது போர்த்தி விட்டவன், தேவாவிடம் சீரான மூச்சி வந்த பிறகே சிறிது கண் அசந்தான்….

தேவா அதிகாலை நேரத்தில் கண் விழித்தவன், தன் நண்பன் ஜெய்யை பார்த்து, சாரி டா மச்சான் என்னால முடியல, தர்ஷி என்னோட சரி பாதி டா அவ இல்லாம நா எப்படி வாழ முடியும்! , அன்னைக்கு உன்கிட்ட சொன்னத இன்னைக்கு நிஜமாக்க போறேன் டா… உன்ன மாதிரி ஒரு நண்பன் யாருக்கும் கிடைக்க மாட்டான்.. நா ரொம்ப லக்கி டா., அம்மாவயும், அப்பாவையும் அடிக்கடி போய் பார்த்துக்க.. என கண்ணீருடன் முனுமுனுக்க வார்த்தைகள் யாவும் அந்த கடல் காத்தோடு கரைந்து விட்டது..

மெல்ல அவனை விட்டு விலகி, தன் மேல் இருக்கும் வலையை எடுத்து, ஜெய்க்கு போர்த்தி விட்டவன்.., ஒரு முறை அவன் தலை முடியை வருடினான்… தர்ஷி முகம் கண்ணுக்கு வரவே… சட்டென எழுந்தவன் தன் மொபைலை ஜெய் அருகில் வைத்து விட்டு, படகில் இருந்து மெதுவாக கீழே இறங்கி, கடலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான்….

வண்டு என்ன உனக்கு பிடிக்காதா? ஏன் என்ன லவ் பண்ணல? என்ன விட உன்ன யாரால நல்லா பாத்துக்க முடியும்? எனக்காக நீ அழ மட்டும் கூடாது டீ, நீ எப்பவுமே சந்தோசமா இருக்கணும், வாய் முனுமுனுக்க அலைகளை கடந்து சென்றுக் கொண்டிருந்தான்….

அலைகளுக்கும் அவன் இறப்பதில் விருப்பம் அல்லவே! அவனை கரைக்கு தள்ளியது… விடாப்பிடியாய் கடலுக்குள் நுழைந்தான்..

கழுத்து வரை தண்ணீர் இருக்க, அலைகள் அவனை முழுதுமாக தன்னுள் அடக்கிக் கொண்டது…

தேவா பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை.. இறக்கும் நிலையிலும் தர்ஷியின் நியாபக அலைகள், முதன் முதலில் பள்ளியில் தன் அருகில் வந்து அமர்ந்தது முதற்கொண்டு, வயதிற்கு வந்து குருதி படிந்த நிலையில் அவன் முன் கூச்சப்பட்டு நின்றது, தேவதை போல் பாவாடை தாவணியில் அவன் முன் நின்றது, இவள் தான் என் தேவதை என உணர வைத்த தருணம் என அனைத்தும் அவன் கண் முன் நினைவலைகளாய் வர… உதடுகள் உயிர் போகும் நிலையிலும் புன்னகை சிந்தியது…

உன் மீதான காதல் என்பது நான் இருக்கும் வரை அல்ல,

நான் இறக்கும் வரை தொடரும்….

 

என்பதற்கேற்ப உயிர் பிரியும் நிலையிலும் அவள் மீது காதல் தான்….

உப்புத் தண்ணீர் முழுவதுமாக அவன் வயிற்றை நிரப்பி வெடிக்கும் அளவிற்கு வந்து விட்டது… உப்புக்களும், மணலும் காதுக்குள் சென்று அடைத்து விட்டது.., நுரையீரல் ஆக்ஸிஜனுக்காக ஏங்கி மூச்சு விட தவித்தது,,.. கண்கள் சொருகி ஆழ் கடலுக்குள் சென்றான் நம் கதையின் நாயகன் தேவா….

சிறிது நேரத்திற்கு முன் ஜெய் வீட்டில், மைக்கேல் ஜெய் அறைக்கு சென்று பார்த்தவர் அவன் அங்கு இல்லாததும், ஏண்டி புள்ள சரசு.. நம்ம மொவன காணும் எங்கடி நைட் வீட்டுக்கு வராம எங்குட்டு போனான்? மைக்கேல் தன் மனைவியிடம் கேட்க…

தெர்லங்க பிரெண்ட்ஸ்க்கூட போயிருப்பான், இல்லனா சப்பைகிட்ட கேட்டு பாருங்க என்றவர் முதுகு காட்டி படுத்து விட.. மைக்கேலுக்கு மனது ஏதோ தவறாக நடக்க போவதாக உணர்ந்தவர், நாலு வீடு தள்ளி இருக்கும் சப்பை வீட்டிற்கு சென்று, வாசலில் கட்டிலில் படுத்துறங்கும் சப்பையை எழுப்பினார்… ஏலே ஜெய் எங்க?

தூக்கக் கலக்கத்துடன், மாமா ஜெய் நம்ம படகுல தான் இருப்பான், தேவாவும் கூட போனான்…

சரி வா கிளம்பு, போய் என்னனு பாப்போம்..

ஏன் மாமா 4 மணிக்கு எழுப்பி உயிர வாங்குற?

பேச நேரம் இல்ல சீக்கிரம் வா… என அழைத்து வெகு வேகமாய் கடற்கரைக்கு சென்றனர்….

ஜெய் கண் விழித்தவன், பக்கத்தில் பார்க்க தேவா இல்லை அவன் செல்போன் மட்டும் தான் இருந்தது… தேவா தேவா அரண்டு போய் சுற்றிலும் தேடி பார்த்தான்…

அவன் கண்கள் அடுத்து சென்றது கடலை நோக்கி தான்… தேவா என கத்தியவன் கடலை நோக்கி வேகமாக ஓடினான்… கடலுக்குள் செல்ல மைக்கேலும், சப்பையும் அங்கு வந்தவர்கள் கண்ணில் அது பட்டது….

ஏலேய் சப்பை ஓடியால நம்ம புள்ள கடலுல குதிக்கப் போவுது என கத்திய படி என்றவர் ஓடி சென்று ஜெய்யை பிடித்தனர்….

இழுத்து வெளியே வரப்பார்க்க,

எப்போய் தேவா ப்பா என கடலை காட்டி ஜெய் கதறினான். .. சூழ்நிலையை புரிந்துகொண்ட இருவரும் ஜெய்யை விட்டுவிட்டு கடலில் குதித்தனர்….

ஆழ் கடலுக்குள் கிடந்த தேவாவை இரு கை பிடித்து தூக்கியது…. அவன் கன்னம் தட்டி எழுப்ப தேவா கண் விழித்தான்…

கருநீல வானம், சுற்றி பார்க்க சிறு துளி ஆர்ப்பாட்டம் இல்லாமல் கடல் அமைதியாக இருக்க, கண்ணிற்கு எட்டும் தூரம் வரை கரை தென்படவில்லை… தான் படகில் இருப்பதை மட்டும் உறுதி செய்துகொண்டான்…

எங்கே இருக்கிறேன்? யார் என்னை காப்பாற்றியது? என குழப்பம் அடைந்து

எதிரில் இருப்பவரை பார்த்தான்…

தேஜஸ் நிறைந்த முகம், பளீர் என வெண்ணிற உடையில் இருந்தார்… புன்னகை சிந்திய உதடுகளும், ஏதோ சொல்ல வரும் கண்களும், அவனை ஈர்த்தது… அலையென பொங்கிய அவன் மனம் சாந்தமாக மாறியது… இரு கை கூப்பி தன்னை அறியாமல் வணங்கினான்….

மென் புன்னகை சிந்தியவர், உனக்கான நேரம் இது வல்ல, உன்னை பெற்றவர்களும், உன் மேல் அதீத பாசம் உள்ள உன் நண்பனும் என்ன பாவம் செய்தார்கள்? வாழ் நாள் முழுதும் உன்னை நினைத்து அழும் நிலைக்கு எதற்காக அவர்களை தள்ளுகிறாய்? வாழ்க்கை உனக்கு அவ்வளவு அற்பமா? என குரல் மட்டும் கேட்க.. தேவாவிற்கு தான் செய்த தவறு புரியவந்தது .. மன்னிப்பு கோரினான்….

உன் காதல் உண்மை, அது உன்னை வந்து எப்படியும் சேரும்… போ சந்தோசமாக உனக்கான வாழ்க்கையை வாழு, எதை நினைத்தும் கலங்காதே என அவனை நெஞ்சில் கை வைத்து கடலுக்குள் மீண்டும் தள்ள முயற்சிக்க….

தேவா கடலுக்குள் விழ சென்றவன் நொடிதனில் அவர் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவர் கண்களை பார்த்து இறைஞ்சினான்….

அவன் பார்வையை புரிந்துகொண்டவர், நான் இருக்கிறேன் செல் என்பது போல் கண்ணை சிமிட்ட, புன்னகை சிந்தியவன் பிடித்திருந்த அவர் கைகளை நம்பிக்கையுடன் விட்டவன் கடலுக்குள் விழுந்த நொடி…..

 

லொக் லொக் லொக் என இருமியவாறு கண் விழித்தான் தேவா…

எதிரில் சப்பை, மைக்கேல், அவனது நண்பன் ஜெய் என அனைவரும் இருந்தனர்…. டேய் தேவா என ஜெய் கத்தியவன் அவனை இறுக்கி கட்டிக் கொண்டான்….

மைக்கேல் சிறு வயதிலிருந்து கடலுக்கு சென்று வரும் பழக்கம் உள்ளவர், ஆழ் கடலுக்குள் சென்று முத்தெடுத்து பழக்க பட்டவர் என்பதாலும், அவருக்கு மூச்சை பிடித்து ஆழ் கடலுக்குள் செல்வது பெரிய விஷயம் அல்ல… இந்நிலையில் தான் கடலின் ஆழத்தில் இருக்கும் தேவாவை கண்டுபிடித்து இழுத்து கரைக்கு வந்தார்…

இன்னேரம் வேறு இடத்திற்கு இழுத்து செல்லும் கடல், இவனை மட்டும் ஒரே இடத்தில் வைத்திருப்பது ஏன்!? அவருக்கும் ஆச்சரியமே! , இந்த இருட்டில் அவர் கைக்கு தேவா அகப்பட்டது நினைத்து சந்தோஷப்பட்டவர் தொலைத்த பொருளை மீட்ட சந்தோசத்துடன் கரைக்கு வந்திருந்தார்…..

தொடரும்……

 

( நாம் இறந்த பின் நமது மூளை 7 நிமிடங்கள் வரை செயல்படுமாம், அறிவியல் பூர்வமாக உண்மை… குறிப்பாக இறக்கும் தருவாயில் கனவு காணுதல், பழைய நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்தல் போன்ற செயல்பாடுகள் அதிகமாக வெளிப்படுவதாக சொல்லப்படுகிறது, மேலும் இறந்து அவர்களது ஆத்மா மேலே சென்ற பின் வெளிச்சத்தை பார்ப்பதாகவும், அங்கிருந்து வரும் அசரீரி உன் நேரம் முடியவில்லை, மீண்டும் செல் என குரல் கேட்டு மீண்டும், உயிர்த்தெழுந்ததாகவும், மரணத்தை நெருங்கிய சிலர் அபிசியலாக பேட்டி கொடுத்திருக்கின்றனர்.. ) இதன் அடிப்படையில் தான் இந்த எபிசோட் எழுதி இருக்கிறேன்… இதை மையமாக வைத்து ஏன் கற்பனை கலந்து எழுதி இருக்கிறேன் 🙏🙏🥰🥰

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!