அன்னமே 51 to 53

5
(12)

அன்னமே 51 to 53

 

தங்கங்களே மன்னிக்கவும். லேட் பண்ணிட்டேன் 🫂

காலமும் நேரமும் எதுக்காகவும் யாருக்காகவும் காத்திருக்கறது இல்ல. யாரு என்ன திட்டம் போட்டாலும் சரி. என்ன நினைச்சாலும் சரி நடக்கறதுதான் நடக்கும். ஆத்து நெறைய தண்ணி போனாலும் ஒட்டுற தண்ணிதான் ஒடம்புல ஒட்டும்.

 

அன்னத்துக்கும் சத்தியசீலனுக்கும் ஒண்ணுக்கொன்னு நல்லா ஒத்துப் போச்சு. சத்தியசீலனோட கொடுக்குப் பேச்சு அன்னத்துக்கு பழகிப்போவ, இப்பவெல்லாம் அதுக்குப் பயந்து நடுங்கறது இல்ல.

 

இப்ப புது யோசனையில் இருந்தா அன்னம். அவன் பாட்டுக்கு உம்மனசுல காதல் வந்துச்சுன்னா நீ சொல்லாமையே எனக்குத் தெரியுமுன்னு சொல்லிட்டான். அவளுக்கு அங்கதான் குழப்பமே ஆரம்பிச்சுது.

 

இப்பவும் அதைத்தான் யோசிச்சுட்டு தண்ணி தொட்டி கரையில உக்காந்து தண்ணிக்குள்ள காலை விட்டு நனைச்சிட்டு இருந்தாள்.

 

அந்தக் கண்றாவி வந்துச்சுன்னா இந்த அளவுக்கு வந்தே இருக்காதேன்னு நெனச்சவளுக்கு இளவரசன் நியாபகம் வந்துச்சு. அவனை காதலிக்கறம்னு ஒரு காலத்துல நெனச்சுட்டு இருந்தா அன்னம்.

 

ஒருவேளை அதான் காதலா? தாடையில் கைவைச்சு யோசிச்சவ வாய மூடிட்டு அதோட இருந்திருக்கலாம்.

 

அவளுக்காக இளநீய வெட்டி அதோட இளந்தேங்காய தோண்டி தேங்கா மூடியிலேயே வச்சு கொண்டு வந்தான் சத்தியசீலன்.

 

“இந்தா புள்ள. இதைத் தின்னு” ன்னு அவ கையில தந்தான்.

 

அதை வாங்கினவ, “காதல்ன்னா என்ன. இளவரசனை லவ் பண்ணேன்னு நெனச்சேன் கொஞ்ச நாளா அதுவா” கேட்டவ தண்ணி தொட்டிக்குள் குப்புற விழுந்தாள்.

 

போன வாரம் டாக்டர்கிட்ட அவளை கூட்டிட்டு போய் செக்கப் பண்ண போக உடம்புல சத்து இல்லன்னு அவர் சொல்லவும் பாவம் புள்ளைன்னு இளநீய வெட்டி கொண்டு வந்தான்.

 

வாய மூடிட்டு வாங்கி திங்காம கண்டதையும் பேசி அவனை கோவப்படுத்த, அவ முதுகுப்பக்கம் நின்னவன் புடிச்சு தள்ளிவிட்டுட்டான்.

 

“அம்மா” ன்னு குப்புற விழுந்த அன்னம் தண்ணிக்குள்ள தத்தளிச்சு அடிச்சு புடிச்சு நேரா நின்னா.

 

“எதுக்குய்யா தள்ளி விட்ட” தும்மல் போட்டுக்கிட்டே கேட்டாள்.

 

“உள்ள தள்ளி முக்கி கொன்னிருக்கணும் உன்ன” அவளை முறைச்சுட்டே நின்னான். எம்புட்டு தைரியம் இருந்தா எம்முன்ன வச்சே அடுத்தவன் பேரை சொல்லிட்டு இருப்பா தள்ளிவிட்டதோட நின்னது தப்புன்னு நெனச்சான்.

 

அதுக்கும் மேல போவ அவனுக்கு மனசு வரல, இப்பதான் செத்துப் பொழைச்சா. எதையாவது பண்ணி போய் சேர்ந்துட்டா என்ன பண்ண பயம் அவனை கட்டிப் போட்டது.

 

“அதப் பண்ணுய்யா முதல்ல. பொண்டாட்டிய கட்டிட்டு வந்தமா குடும்பம் நடத்தினமான்னு இல்லாம காதல் கத்திரிக்கான்னு ஆராச்சி பண்ணிட்டு இருக்க?. விளக்கம் கேட்டா எட்டி உதைச்சு தள்ளுற” தொட்டியில் இருந்து வெளியே வந்தாள்.

 

அவளுக்கு கை கொடுத்து மேலே தூக்கிவிட்டான் சத்தியசீலன்.

 

“புருஷன் முன்ன அடுத்தவன பத்தி பேசுன உன்ன சாவடிக்காம விட்டேன் பாரு” சொல்லிட்டு போவ.

 

ஓடிப்போய் அவனுக்கு முன்ன நின்னவ, “நீ சொல்றது எனக்கு வராமயே போய்ட்டா என்ன பண்ணுவ?” கேட்டாள்.

 

“வரும் வராம எங்கிட்டு போவும்” சொன்னவனுக்கு புரிஞ்சது அவளுக்கு தன் மேல முழுசா விருப்பம் வந்திருச்சுன்னு.

 

அவ கண்ண பாத்தே கண்டுகிட்டான். அவளுக்கும் அது புரியட்டுமுன்னு விலகி நின்னான்.

 

“அடப்போய்யா. எனக்கென்னமோ சந்தேகமா வருது” சொல்லிட்டு சிரித்தாள்.

 

“என்ன சந்தேகம் வருது” அவ சிரிப்பும் பார்வையும் சரியில்லாம போவ ஜடையை பிடிச்சு இழுத்து நிக்க வச்சான்.

 

“அன்னைக்கு அண்ணன் அடிச்ச அடியில படக்கூடாத இடத்துல பட்டுடுச்சோ. அதான் என்னைய கண்டா ஆவலையோ” அறியாத குழந்தை மாதிரி இமைகளை படபடத்து அவனை பார்த்தாள்.

 

“கழுத உன்ன வாடி கிட்ட” ன்னு அவளை பிடிக்க போனான்.

 

அவன் கைக்கு சிக்காம அவ வீட்டுக்குள்ள ஓடிப்போவ, பொண்டாட்டி ஈரச் சேலையோட போவ, இங்க இவன் மனசுக்குள்ள குளிர் பிடிச்சுகிச்சு.

 

வீட்டுக்குள்ள போனவளை நெஞ்சம் அதிர பாத்தவனுக்கு கேட்ட இழுத்துப் பூட்டிட்டு அப்பவே உள்ள போய் கதவை சாத்திக்க ஆசைதான்.

 

ஆனாக்கா லோடு ஏத்திக்க லாரி வந்து நின்னுகிட்டு இருக்க நேரத்துல, அங்க பாக்கவா இங்க பாக்கவான்னு தவிச்சவன் வேற வழியே இல்லாம தோப்புக்குள்ள நடந்தான்.

 

“யோவ் அவ்வளவுதானா. அப்ப நா சொன்னது நெசந்தானா”ன்னு கேட்டாள் அன்னம்.

 

“வந்து வச்சுக்கறேண்டி உன்ன” சொல்லிட்டு அவன் போய்விட.

 

“ஆன மட்டும் நல்லா தூண்டி விட்டாச்சு. இனி வந்தா மனுஷன் சண்டைக்கு வருவானே?” நெனச்சுட்டே சேலைய மாத்தி கட்டினாள்.

 

அவனுக்காக சமைச்சவளுக்கு பெத்தவங்க பாத்து கட்டி வச்சிருந்தாக்கூட இம்புட்டு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்காதுன்னு தோணுச்சு அன்னத்துக்கு.

 

உனக்கு புடிச்சத பண்ணு புள்ள, ஆனா எதைப் பண்ணுனாலும் ஒரு வார்த்த என்கிட்டே கேட்டுட்டு பண்ணுன்னு புருஷன் சொல்ல அவளுக்கு ஒரே சந்தோசமா போனது. சுதந்திரமா இரு ஆனா என் கண்பார்வைய விட்டு போயிராதன்னு அன்பா கட்டிப்போட்டான்.

 

அவன் மிரட்டல் உருட்டல் கண்டு பயந்த காலம் மலை ஏறிப் போச்சு. அவன் கோவமா இருக்கையில் இவளுக்கு பயமாத்தான் இருக்கும் அந்த சமையம் ஒன்னும் தெரியாத பாப்பாவாட்டம் இருந்துக்குவா அன்னம்.

 

அவனுக்காக சமைச்சவ வெளியே திண்ணையிலேயே காத்தாட சாப்பிடலாமுன்னு எடுத்து வச்சிட்டு ரெண்டு வட்டிலையும் தயாரா வச்சிட்டா.

 

பொழுது சாய குளிச்சுட்டு சேலைய மாத்தினவ விளக்கு போட்டு சாமிய கும்பிட்டு அந்த நாளுக்கு உண்டான வேலைய முடிச்சுட்டா.

 

“எல்லா வேலையும் முடிஞ்சுது தின்னுட்டு படுத்தா போதும்” ன்னு சொன்னவளுக்கு ஏக்கப் பெருமூச்சு வந்துச்சு. கல்யாணமாகி இம்புட்டு நாளாச்சு ஒண்ணுமே நடக்கலை. இப்படி ஒரு கொடுமை எங்கிட்டாவது நடக்குமா.

 

நெனச்சவளுக்கு கல்யாணத்துக்கு முன்ன அவன் வம்பா தொட்டு கசக்கிய இடங்கள் நெருப்பா சுட விரகத்தில் தவிச்சுப் போனாள் அன்னம்.

 

ராத்திரியில அவனை வெட்கம் விட்டு கட்டிக்க துடிச்சாலும் மனசு கேக்காம திரும்பி படுத்துக்குவா? அவன் மேல கோவமா வரும் அவளுக்கு.

 

இன்னைக்கு எப்படியாவது அவனை கவுத்துடனும் மனசுக்குள் திட்டம் போட்டவ அவன் பைக் வரும் ஓசை கேட்டு முந்தானையை சரிய விட்டாள் அரைகுறையா.

அங்கம் தெரிஞ்சும் தெரியாம இருக்க ஒத்தையா போட்டு பின்னு குத்திகிட்டா.

 

 

 

அத்தியாயம் 52

 

 

தேங்காய் லோடு ஏத்தி விட்டுட்டு, கிளம்பியவனை தடுத்து நிப்பாட்டியது அவனுக்கு வந்த அழைப்பு.

 

“எடுப்பட்ட நாயே இப்பத்தானடா கெளம்பித் தொலைச்ச. அதுக்குள்ள என்ன கேடு வந்து சேந்துச்சு உனக்கு” பொண்டாட்டிய தேடிப் போற நேரத்துல கொலையா கொன்னுகிட்டு இருக்கானேன்னு வயித்தெரிச்சல் வந்துச்சு அவனுக்கு.

 

“அண்ணா ஒரு சம்பவம் நடந்து போச்சு. நீ வந்தாத்தான் காரியம் ஆவும்னே. ஒரே ஒருக்கா மட்டும் காப்பாத்தி வுடுங்கன்னே. புண்ணியமா போவும்” அழுவா குறையா கேட்டான் அவன்.

 

“என்னவா இருந்தாலும் நீயே பாருடா. எனக்கு சோலி கெடக்குது” அவனை கட் பண்ணிவிட நெனக்க பாக்க.

 

“அண்ணே அண்ணே நீ மட்டும் உள்ள வரலைன்னா கைல இருக்க அம்புட்டு பணத்தையும் புடுங்காம உட மாட்டாங்கண்ணே” னு கத்தியவன் குரலை அலட்சியப்படுத்த மனசு வராம,

 

“என்ன விஷயம்னு சொல்லி தொலை”

 

“அண்ணா இன்சூரன்ஸ் காலாவதி ஆச்சுன்னு லாரிய போலீசு புடிச்சு வச்சுட்டாங்க. நீங்க வந்து பாருங்க” கூப்பிட்டான் ட்ரைவர்.

 

“ஒரு போலீச சமாளிக்க முடியல இவனுங்களுக்கு” பைக்கில் ஏறி கிளம்பினான் ஸ்டேஷனுக்கு.

 

அங்க போன சத்தியசீலன் அவங்ககிட்ட பேசி சமாளிச்சு, லாரியை போக வேண்டிய இடத்துக்கு அனுப்பிட்டு, வீட்டுக்கு போவனும்னு வந்தவனை வழியிலேயே தயாளன் வீட்டு கார் வழி மறிச்சு நின்னது.

 

“பன்னாடை நாயிங்க. வழிய மறிச்சு நிக்குதுங்க பாரு” நட்ட நடு வழியில காரு நிக்க போதா குறைக்கு ரெண்டு பக்கமும் பள்ளமா இருக்க விலகிப் போவ முடியாத நிலையில நின்னுட்டான்.

 

“கருப்பனுக்கு இந்த கூறு கெட்ட புத்தி வராதே. பேசனும்னா தோப்புக்கே வந்து நிப்பான். தயாளன் நம்ம கண்டாலே குப்புற அடிச்சு ஓடுவாப்புல. இது யாரா இருக்கும்?” யோசிச்சவன் பைக்கில் இருந்து இறங்கி நின்னான்.

 

அவன் பைக்கை நிறுத்தி இறங்கிட்டு அப்படியே நிக்க கண்ட சுலோச்சனா எரிச்சலா பார்த்தார் அவனை.

 

அவனா வந்து பேசட்டும்னு பாத்தவருக்கு அவன் வர வழிய காணாத போவ, “திமிரு புடுச்சவன். இவன்கிட்ட மாட்டிட்டு என் பொண்ணு என்ன பாடு படுறாளோ. டைவர்ஸ் வாங்கிட்டு அவளுக்கு விடுதலை வாங்கித் தர வேணும்” சங்கல்ப்பம் செய்தார் மனசில.

 

பத்து நிமிசமாவியும் காரும் நகர காணோம் அதுல இருந்து யாரும் வெளிய வராம இருக்க, இவனுக்கு வேடிக்கை பாக்க குஷியா இருந்துச்சு.

 

இருக்க இடத்தை வேடிக்கை பாத்தவன் அப்படியே நின்னுட்டான்.

 

அவன் வருவான் வருவான்னு பாத்துட்டு சலிச்சுப் போய் காரை விட்டு இறங்கிய சுலோச்சனாவ பாத்து சத்தியசீலனுக்கு வியப்பான வியப்பு.

 

அம்மாடியோ எம்புட்டு நகை? ஆச்சரியமா பாத்தவன், பட்டுப்புடவை அலங்காரம்னு வந்து நின்னவங்களையும் தன் பொண்டாட்டியையும் ஒப்பிட்டு பாத்தான்.

 

“நல்லவேல அந்த சிறுக்கிய ஆரம்பத்துலயே தலை தட்டி உக்கார வச்சுட்டோம். இல்லாட்டி இந்த அம்மா மாதிரி கலர் லைட்டு மாதிரி மின்னறேன்னு அடம்புடிப்பா. அஞ்சு லட்ச ரூபாய்க்கு ஆப்பு வச்சிட்டா ஒரே நாள்ல. இந்தம்மா மவன்னு நிரூபிச்சுட்டா கழுதை” பொண்டாட்டிய செல்லமா கொஞ்சிட்டே மாமியார பாத்தவனுக்கு, இதுக்கு எம்புட்டு வயசு இருக்குமுன்னு யோசனை வந்துச்சு.

 

“முப்பத்தியாறு இருக்குமா?” சுலோச்சனாவ உத்து உத்துப் பாத்தவன், “காக்க காக்க கனகவேல் காக்க. முருகா மாமியாகாரிய தப்பா பாக்கறது தப்பி” கன்னத்துல போட்டுக்கிட்டான்.

 

அவன் பார்வையில் நெளிந்தார் சுலோச்சனா. பொறுக்கி எப்புடி பாக்குறான்னு பாரு. மாமியார்ன்னு மதிப்பு மரியாதை இல்லாமன்னு முந்தானையை இழுத்து சரி பண்ணினார்.

 

இதுக்கு இன்னும் குமரின்னு நெனப்பு, எப்புடி இழுத்து மூடுதுன்னு பாருன்னு நெனச்சவன் “அப்புடியே இடுப்பு பளிச்சுன்னு தெரியுது. அதையும் மறைச்சு மூடுங்க” சத்தியசீலன் சத்தமா சொன்னான் அடங்காத சிரிப்போட.

 

இவன பத்தி கனிச்சது சரிதான்னு பைக் பக்கத்துல நின்னுட்டிருந்தவன கேவலமா பாத்தார் சுலோச்சனா.

 

அந்த கிராமத்துலயே அந்த எட்டுப்பட்டியிலேயே ரோல்ஸ் ராய்ஸ் காரு வச்சிருக்கற அம்மணி சுலோச்சனாதான். டிரைவிங் தெரிஞ்ச பெண்மணி.

 

கருப்புச்சாமியும் தயாளனும் காய்ஞ்சு கருவாடா நாயா பேயா ஓடா தேஞ்சு சம்பாதிக்கற அம்புட்டு பணத்துக்கும் என்ன வேல அங்க. இந்தம்மா சீட்டுக்கட்டு மாதிரி அள்ளி விட்டு செலவு பண்ணும் எல்லாத்தையும்.

 

சத்தியசீலன் தானா பக்கத்துல போயி என்னன்னு கேட்டா மானங்கெட்டதனமா போவுமுன்னு நின்ன கெடையில அப்படியே நின்னுபுட்டான்.

 

சுலோச்சனா அவன் பக்கத்துல வந்தார் அடங்கா கோவத்தோட.

 

“நிலாம்பரி இந்தம்மாகிட்ட பிச்சை எடுக்கணுமாட்ட இருக்குதே. என்னா நடை சாமியோவ். கால்ல கெடக்கற செருப்பே தங்கமாட்ட இருக்கே. கருப்பு பன்னி சரியான பைத்தியக்காரன். இந்த பொம்பளைக்கு பயந்து பொண்டாட்டிய தொரத்திட்டான்” நெனச்சவன் பக்கத்துல வந்து நின்ன மாமியாரை கேள்வியாக பார்த்தான்.

 

அவன் திமிரா நின்ன தோரணையில மெச்சுதலா புருவம் உயர்த்திய சுலோச்சனா, “என் பொண்ணை எப்ப அனுப்ப போற?” எகத்தாளமா கேட்டார்.

 

சத்தியசீலனுக்கு ஆம்பளை பொம்பளைன்னெல்லாம் வேறுபாடு பாக்க தெரியாது. கோவம் வந்துட்டா நாக்க புடுங்கிட்டு சாவலாமான்னு நெனச்சிட வச்சுடுவான் பேச்சு கேக்கறவன.

 

இந்த கெழவி ச்சே ச்சே சின்ன புள்ள கணக்கா இருக்கு பாவம் கிழவின்னு நெனச்சாவே உசுரை விட்டாலும் விட்டுப்புடுமுன்னு மீசையை முறுக்கி விடற சாக்குல சுலோச்சனா கண்ணுல படாம சிரிச்சுட்டான்.

 

எதிர்த்தாப்புல நிக்கற மருமகன் நெனப்ப அறியாத சுலோச்சனா, “நா சொன்னது கேக்குதா. அன்னத்த அனுப்பி வைப்ப” ன்னு திரும்ப சொன்னார்.

 

“எதுக்கு அனுப்பனும்?” அவனுக்கு புரியல. அந்தம்மா எதுக்கு நடுவழியில் நின்னுகிட்டு இத கேக்குதுன்னு. ஒருவேள மருமவன விருந்தாட கூப்பிடுதான்னு தப்பா யோசிச்சான்.

 

“நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உனக்கு என் மவ கேக்குதா. என் காலு செருப்புக்கு தகுதி இல்லாதவன்டா நீ. ஒழுங்கா அவளை வீட்டுக்கு அனுப்பு” சொன்னவருக்கு இது சாத்தியமான்னு யோசிக்கற அளவு நிதானம் இல்ல.

 

கெழவி செத்தாச்சு. இனி கருப்பன் நம்ம பேச்சைத்தான் கேட்டு அடங்கி ஒடுங்கி இருப்பான்னு இருந்தா, கண்டுக்காம போறான். அம்புட்டு ஏன் ஊட்டுக்குள்ள யாரையும் அண்டக் கூட விடாம பூட்டிட்டு போறான். செவ்வந்தி கொண்டு வந்தது எல்லாத்தையும் திருப்பி அனுப்பச் சொன்னா அதையும் கேக்காம போறான்.

 

அன்னம் மட்டும்தான் சுலோச்சனா பேச்சை நின்னு கேக்கறவ. அதனால அவளை கிட்டக்கவே வச்சுக்க நெனச்சார்.

 

“வாயில ஏதாவது வந்துறப் போவுது. ஏம்மா நீ பொம்பளைதான. புள்ளைய புருஷன்கிட்ட இருந்து பிரிக்க பாக்குற?” வேஷ்டியை மடிச்சுக்கட்டிய சத்தியசீலன் இதுக்கு மேல இங்கிட்டு இருந்தா தோதுபடாதுன்னு பைக்கில ஏறிட்டான்.

 

பெத்த புள்ளைய பொழைக்கட்டும்னு நெனைக்காத பொம்பளைக்கு புத்தி எப்படி வேனுமுன்னாலும் போவும், கைய புடிச்சு இழுத்துட்டான்னு அய்யோ அம்மான்னு கத்துனாலும் கத்திப்புடும். சாட்சிக்கு பக்கத்துல மனுஷ மக்க யாருமில்லன்னு நெனச்ச சத்தியசீலன் விலக, அவன் கையை புடிச்சுட்டார் சுலோச்சனா.

 

 

அத்தியாயம் 53

 

 

முறுக்கிவிட்ட மீசையும் வெள்ளை வேஷ்டியும் சட்டையும் இவனுக்குன்னே உருவான கணக்கா ஆம்பளையா லட்சணமா, கோவத்துல உக்கிரனா இருந்தாலும் குணவான இருந்த மருமவன் கிடைக்க ஏழேழு ஜென்மத்துக்கும் பெத்தவங்களுக்கு குடுத்து வைக்கணும்.

 

உடுத்துன புடவையோட புள்ளைய கூட்டிட்டு போனவன் அவளுக்கு பாத்து பாத்து வசதிய செஞ்சு கொடுத்தான். காசை காசுன்னு பாக்காம அவ வசதிக்கு வீட்ட மாத்தி கொடுத்தான். ஏன் எதுக்குன்னு ஒத்த சொல்லு சொல்லல.

 

அவளை என்னைக்கும் தலையிறக்கமா உணர வைக்கல.

 

தன்ன நம்பி வந்த பொண்டாட்டிய கண்ணு கலங்காம பாத்துக்கணுன்ற அக்கறை இருக்கற பொறுப்பான ஆம்பளை அவன்.

 

அவனை நோகடிக்க ஆயத்தமானார் சுலோச்சனா. பொண்ணை கொடுத்த வீட்டுல பணிஞ்சு போனா தப்பில்லன்னு கிராமத்து பக்கத்துல பெரியவங்க சம்பந்திமார்களுக்கு புத்திமதி சொல்லுவாங்க.

 

அது எதுக்குன்னா மாப்பிள்ளைய பெத்தவங்க கோவத்துல புள்ளைய குத்தம் குறை சொல்லத்தான் செய்வாங்க. அதுக்கு கண்ணை கசக்கிட்டு மவ வீட்டுக்கு வந்து நின்னா புத்திமதி சொல்லி அனுப்பாம வெட்டுவேன் குத்துவேன்னு பொண்ணு வீடு ஒருபக்கம் குதிக்க, பொண்ணை பெத்தவனுக்கு இம்புட்டு ரோசமுன்னா பையனை பெத்தவன் எனக்கு எம்புட்டு பகுமானம் இருக்குமுன்னு ஒண்ணுக்கொன்னு மோதிட்டு பகையாளியா நிப்பாங்க.

 

புள்ள ஒருபக்கம் பையன் ஒரு பக்கமுன்னு கோர்ட்டு வாசல்ல நிப்பாங்க பிரிஞ்சு போவ. அந்த கதையை நெசமாக்க துணிஞ்சார் மவளோட மனசுல என்ன இருக்குன்னு அறியாம.

 

பைக்கில ஏறப் போனவன் கைய பிடிச்சு இழுத்து நிக்க வச்சார் சுலோச்சனா.

 

திகைச்சுப் போயி நின்னுட்டான் அப்படியே. இன்னைக்கு சோதனை காலமாட்டம் இருக்கே, சூதானமா இல்லாங்காட்டி செவ்வந்தியை மாதிரியே நம்மையும் இந்தம்மா கசாப்பு போட்டுரும். எச்சரிக்கையானவன், மாமியாரை ஏறிட்டு பார்த்தான் மமதையோட.

 

அவன் வாழ்நாள்ள எத்தனையோ பாத்துட்டான். தேங்காய் லோடு கயிறு லோடு அதுல இருந்து வர்ற குப்பைன்னு தரை லோக்கல் வரைக்கும் வியாபாரம் பண்றவனுக்கு இந்தம்மா புத்திய சமாளிக்கறது சுளுவான விஷயம்தான். எங்க தட்டுனா இது அடங்கும்னு தெரிஞ்சவன்.

 

சின்ன வயசுலயே பெத்தவங்களை இழந்துட்டு, அவங்க சம்பாதிச்சு வச்சதை தின்னு அழிக்காம ஒண்ண நூறாக்கினவன் அவன். அவனோட ஆணவமும் திமிரும்தான் அவனை ஆளாக்கி விட்டுச்சு இல்லாட்டி எப்பவோ அவன் நிலத்தை புடுங்கிட்டு ஓட விட்டு அடிச்சிருப்பானுங்க வினயக்கார பங்காளிக அம்புட்டு பேரும்.

 

அப்படிப்பட்டவன் கண்ணுலயே இந்தம்மா விரலு விட்டு ஆட்டிப் பாக்குது. ஏற்கனவே கோழிய பலி கொடுத்து பகைய இழுந்துவிட்ட பழைய தீர்க்கப்படாத கணக்கு ஒண்ணு இருக்க போனா போவட்டும் பொண்டாட்டிய பெத்த மவராசின்னு விட்டு தொலைச்சுப்புட்டான் சத்தியசீலன்.

 

ஒத்த கோழிக்கு குடும்பமே பகையா போன பழங்கதை, இன்னும் கெட்டியா புடிச்சுட்டு தொங்குறாங்க கருப்பனும் சத்தியசீலனும். இப்பத்தான் சண்டையை விட்டுப்புட்டு அன்னத்துக்கொசரம் இவன்கிட்ட முகம் கொடுத்து பேசலாமுன்னு மனச தேத்திக்கிட்டு வரான் கருப்பன்.

 

பொண்ண பெத்துட்டா மாப்பிள்ளை வீட்டு தரையில கெடக்குற துரும்பு கூட நாட்டாம பண்ணுமாம்னு சத்தியசீலன் முகத்த வேண்டா வெறுப்பா பாத்து சிரிக்கறன்னு பேருல கருப்பன் பல்லை காட்டி வைக்க, அவனோ போடா வெண்ணைன்னு வீராப்பா போறான்.

 

சத்தியசீலன் கோவமா போறதுக்கு காரணம் செவ்வந்திதான்னு கருப்பனுக்கும் தெரியும். பொண்டாட்டிய வச்சு பொழைக்க துப்பில்லாத நாயின்னு காறித் துப்பிட்டு போவான்.

 

இப்படி மானங்கெட்டு போனாலும் பரவால்லன்னு கருப்பனும் சத்தியசீலனும் உறவை ஒட்ட வைக்க பாக்க இந்தம்மா அதை இன்னும் பகையா மாத்த கங்கணம் கட்டிக்கிட்டு நின்னுச்சு.

அதுவே இந்தா வெட்டிக்கோன்னு தலையை தானா அவன்கிட்ட நீட்ட, அவனும் வெட்ட தயாராவிட்டான்.

 

அவன் யோசனையா சுத்திமுத்தியும் பாத்துட்டு நிக்க, பயந்துட்டான்னு சுலோச்சனா நெனச்சுட்டார்.

 

“அங்கிட்டு பாரு. குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட்டுப்புட்டு சனமெல்லாம் வந்துட்டு இருக்காங்க. பிடிக்காத மருமவள அவங்க கண்ணு பாக்க தொரத்தி விட்டவடா நானு. அப்படிங்கையில் உன்னையும் என்ற புள்ளைங்க கூட வாழ விடுவேன்னு நெனச்சியா” அவர் பேச்சுல கண்ணுல வன்மம் தெறிச்சது ஆனாக்கா முகத்துல பரிதாபக்கலை ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

 

செவ்வந்திய பாத்தாவே புடிக்காது சுலோச்சனாவுக்கு. அப்படித்தான் சத்தியசீலனையும். அவங்க சின்ன வயசுல இருந்தே அப்படித்தான்.

 

நா இப்படித்தான்னு பேச்சுல செயலுல தைரியமா திமிரா இருக்கவங்கள புடிக்காது இவங்களுக்கு. இவர்கிட்ட பேசயிலயும் அப்படியே தெனாவெட்டா இருந்துட அவங்களை பாத்தாவே கரிச்சுக் கொட்டினார். காத்தால எந்திரிச்சதும் மூதேவி பால் கேனோட வந்து நிப்பான்னு எட்டு மணிக்குத்தான் வெளியவே வருவார்.

 

சத்தியசீலன் அப்பன் அம்மா முதற்கொண்டு குடும்பத்துக்கே தைரியமா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேச்சு இருக்க குடும்பத்தையே குற்றம் குறைன்னு அத்துவிட்டவர் சுலோச்சனா.

 

இப்படியிருக்க நெலமைல மகன் இவதான் வேணுமுன்னு பழக்கத்துல இல்லாத அதிசயமா கால்ல விழுந்து கேட்டு நிக்க, அவன்கிட்ட தன் வன்மத்த கொட்ட விரும்பாம சரின்னு தலையாட்டி வச்சார் சுலோச்சனா.

 

யாரும் குறுக்க வராம இருந்திருந்தா தூயவனுக்கே மவள கட்டி வைக்க தயாரா இருந்தார், இந்த பொறுக்கிக்கு அவன் பரவாயில்லன்னு சுலோச்சனாவோட அகம்புடிச்ச மூளை யோசிச்சுது. புள்ளயோட எதிர்காலத்த விட தான் புடிவாதமே பெருசா தெரிஞ்சுச்சு. அகந்தை கண்ணை மறைக்க நன்னெறிகளை மறந்து போனார். பெத்த மக்களோட விருப்பம் வாழ்க்கையை பத்தி யோசிக்காம விட்டுட்டார்.

 

செவ்வந்தி ஊட்டுல இருந்து பஞ்சாயத்துக்கு வருவாங்க திருப்பி மவன் தலையில கட்டுவாங்கன்னு பயந்து கெடந்தவர், “அவ கொண்டு வந்த பொருளை அனுப்பி விடலாமுன்னு” சொல்லப் போவ,

 

“இங்கிட்டே கெடக்கட்டும், தேவைன்னா அவளே வந்து எடுத்துட்டு போவட்டுமுன்னு” சொல்லிட்டான் கருப்பன்.

 

செவ்வந்தி ஊட்டுலயும் இருந்து அதை எடுத்துப் போவன்னு யாரையும் வரகாணோம். அதனால அக்கம் பக்கத்துல ஜாடையா சொல்லி அனுப்பினார்.

 

கண்ணப்பன் மனசுல என்ன இருக்குதோ அவரும் யாரு பேச்சையும் கேட்டுக்கலை, கருப்பன் வீட்டுல மகளுக்கு சீரா கொடுத்த எதையும் கேட்டுக்கல அதோட மதிப்பே குறைந்த பட்சம் அஞ்சு லட்ச ரூபாய்க்கு வரும்.

 

அங்க இங்க சுத்தி கடைசியில சத்தியசீலன்கிட்ட வம்புக்கு நின்னார் சுலோச்சனா.

 

சுலோச்சனா தாய் வீட்டு சொந்தம் எல்லாம் பின்னால காருல வந்திருக்க அவங்க காரும் நின்னுருச்சு. தயாளன் கருப்பன் வரலை அந்நேரத்துக்கு. சுலோச்சனாவுக்கு இது சாதகமா போச்சு. அவங்க இருந்திருந்தா வாய திறக்கவே விடமாட்டாங்க இவரை.

 

“கைய விடுங்க” அவன் பேச்சுல தீ பட்டது போல விலகி நின்னார் சுலோச்சனா.

 

சத்தியசீலன் பேச்சுல இம்புட்டு கட்டளையா? விக்கித்துப் போயி ஓரடிக்கு தள்ளி நின்னுட்டாரு அவர்.

 

“சரித்தேன் உங்க சொந்த பந்தமெல்லாம் வந்து நிக்குது இங்குட்டு. செவ்வந்தி புள்ள பாவம் அப்பாவி சூது வாது தெரியாத புள்ளைய ராசி கெட்டவன்னு தூரத்திப்புட்டீங்க. நீங்க பண்ண தப்ப சரி செஞ்சவன் நானு. எனக்கு என்ன வச்சிருக்கீங்க?” தன் நெஞ்சை தொட்டு கேட்டவன் கேள்வியில் இருந்த உண்மை சுட்டது அவரை.

 

“ஆயா வயசுல இருக்க உங்களை கற்பழிக்க முயற்சி பண்ணிட்டேன்னு பிராது தரப்போறீங்களா அதும் அந்த வக்கத்த நாயிங்க முன்ன? கல்யாணம் ஆன பொண்ண மாமியாக்காரி அடிச்சு விரட்டுறா அதை மனசுல ஈரம் இல்லாம ரசிச்ச ஈனப் பிறவிங்கதான இதுங்க எல்லாம்” சத்தியசீலன் பேச்சில் சுலோச்சனா ரத்தம் திகு திகுன்னு கொதிச்சுது.

 

அவன் பேச்சுல இருந்த உண்மை அவரை அசைக்கல. அவன் ஆயான்னு சொன்னது பேரிடியா அவர் இதயத்தை உடைச்சுப் போட்டது.

 

“என்னம்மா என்னாச்சு”ன்னு கேட்டுட்டு வந்த யாருக்கும் அவரு பதில சொல்லல. விரைச்சுப் போயி நின்னுட்டாரு.

 

“பேரனுக்கு சேவகம் பண்ணுறத உட்டுப்புட்டு வயசான காலத்துல இம்புட்டு அல்டாப்பு” மாமியா மனச சுக்கு நூறா உடைச்செறிஞ்சுட்டு வந்த வழியிலேயே கெளம்பிட்டான் சத்தியசீலன்.

 

அவன் ஆயான்னு சொன்ன வார்த்தை உப்பா கரிக்க மயக்கம் போட்டு விழுந்துட்டார் சுலோச்சனா.

 

சத்தியசீலன் வரவுக்காக ஆவலா காத்திருந்த அன்னத்துக்கு பைக் சத்தம் கேக்க செவிமடுத்து கேட்டவளுக்கு வண்டி சத்தத்தை வச்சே வர்றது புருஷன் பைக்கு இல்லன்னு தெரிஞ்சு போச்சு.

 

சேலைய நல்லா உடுத்திகிட்டவ வர்றது யாருன்னு நின்னு பார்த்தாள்.

 

“அன்னம் நல்லாருக்கியா கண்ணு” வந்தவரு அவளுக்கு மாமன் முறையாவுது. சுலோச்சனாவுக்கு அண்ணன் முறை அவரு.

 

இவரு எங்க இங்கன்னு நெனச்ச அன்னம் சத்தியசீலனுக்கு இவரு வந்த சேதி தெரிஞ்சா பாம்பா கொத்துவானேன்னு அதுவேற பயத்த தந்துச்சு.

 

“கண்ணு அங்க உன் புருஷன் உங்கம்மாகிட்ட கேக்க கூடாத கேள்விய கேட்டு சண்டை போட்டுட்டாரு. இப்ப உங்கம்மா உடம்பு முடியாம கெடக்குன்னு” தகவல் சொன்னார்.

 

உடம்புக்கு முடியாம கெடக்காருன்னு சொல்ல அன்னம் மனசுக்கு பதறிக்கையா ஆச்சு.

 

புருஷன் வந்தா சாமியாடுவானேன்னு மறந்து போனவ மறுகேள்வியே கேக்காம அவர் கூடவே பைக்குல அப்பன் வீட்டுக்கு போனா.

 

அன்னம் அந்தப் பக்கமா போவ மாற்று பாதையில வீட்டுக்கு வந்து பொண்டாட்டிய தேடுனவன் காதுல அன்னம் அப்பன் வீட்டுக்கு போன சேதிய வேலையாள் சொல்ல நிலைகுத்தின பார்வையோட நின்னுட்டான் சத்தியசீலன்.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!