விஷம் – 50
வீட்டின் வாயிலை மெதுவாகத் திறந்தவுடன் அர்ச்சனாவின் இதயம் மிக மிக வேகமாக துடித்தது.
அவளுடைய நடையைப் பார்த்த உடனே, உள்ளே இருந்த அவளுடைய அன்னை பதற்றமாக எழுந்து வந்தார்.
“அச்சு, கதிர் தம்பிகிட்ட பேசிட்டியா..? எந்த பிரச்சனையும் இல்லையே… அவர்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டியா..?” என்ற கேள்விகளில் பதட்டமும், கவலையும் கலந்து இருந்தது.
அர்ச்சனா உள்ளே நுழைந்தாள்.
வாயைத் திறக்கத் தயங்கினாள்.
இதோ இப்போது சொல்லவிருக்கும் பொய், எந்த விதத்தில் அம்மாவின் நம்பிக்கையை குலைக்கப்போகிறதோ என்ற பயத்தில் அவளுடைய நெஞ்சம் படபடத்தது.
“ஏன்மா அமைதியா இருக்க..? என்னன்னு சொல்லு…” என்றார் அன்னம்.
“அம்மா அ… அது வந்து நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்ல அது கதிரை கல்யாணம் பண்ணிக்க இல்லம்மா… க.. கதிரோட பிரண்டு நி.. நித்திலனைத்தான் எனக்கு பிடிச்சிருக்குமா… அ.. அவருக்கும் என்ன ரொம்ப பிடிச்சிருக்கு… நா… நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கட்டுமா..?” என தயங்கியவாறே அர்ச்சனா கேட்டதும் நெஞ்சில் கையை வைத்தவாறு அதிர்ந்து அசைவற்று நின்று விட்டார் அவளுடைய அன்னை.
அடுத்த நொடியே அவருடைய கரமோ வேகமாக அர்ச்சனாவின் கன்னத்தில் பதிய,
அன்னை தன்னை அடித்ததில் விக்கித்துப் போய் விட்டாள் அர்ச்சனா.
“ஐயோ கடவுளே… ஏன்டி இப்படி பண்ற..? நீ என்னதான்டி நினைச்சுகிட்டு இருக்க..? எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது…? பைத்தியக்காரி மாதிரி தெரியுதா..?”
“அம்மா…??”
“ப்ச்… பேசாத… முன்னாடி எவ்வளவோ சொன்னேன் இவ்வளவு பெரிய பணக்கார சம்பந்தம் நமக்கு சரி வராது வேணாம்னு கேட்டியா..? காதலிக்கிறேன்மா ரொம்ப நல்லவர்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட… கல்யாணம் பண்ணிக்கிட்டு போன வேகத்துல மறுபடியும் இங்க வந்து அந்த வாழ்க்கை சரி வராது… அவன் வேணாம்னு சொன்ன… அப்புறம் இல்லாதவன நெனச்சு அழுதுகிட்டு இருந்த… இப்போ உன்னையே நினைச்சுகிட்டு இருந்த ஒருத்தன் பொண்ணு கேட்டு உன்னோட வாழ்க்கையை சரி பண்ணலாம்னு வந்தா அவன வேணாம்னு சொல்லிட்டு அவனோட ப்ரண்டை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்றியே…. ச்சை… உன்னை நான் என்னடி பண்றது..?” என அவர் அழத் தொடங்கி விட,
அர்ச்சனாவுக்கோ மனம் தாளவில்லை.
விழிகளில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.
“அழாத அர்ச்சனா… எல்லா தப்பும் உன்னோடதுதான்… உனக்கு வாழ்க்கைல ஒழுங்கா முடிவெடுக்க தெரியலன்னா என்கிட்டயாவது கேட்டு முடிவு எடுக்கலாம்ல..? தெரியாத ஒருத்தனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னா என்ன அர்த்தம்..? மறுபடியும் உன்னோட வாழ்க்கைய நீயே சிக்கலா மாத்தப் போறியா..?” என சீறினார் அவர்.
“ஐயோ அம்மா இந்த கல்யாணமே நடக்காது… போதுமா..?” என்றாள் அவள்.
அன்னமோ அதிர்ந்து பார்க்க “என் யாழன் உயிரோட னதான்மா இருக்காரு… அவருக்கு எதுவுமே ஆகல…” என்றவள் அனைத்தையும் தன்னுடைய அன்னையிடம் கூற இடிந்து போய் அமர்ந்து விட்டார் அவர்.
“யாழன் வெளியே வர்றதுக்காகதான் இப்படி நாடகம் ஆடலாம்னு முடிவு பண்ணினேன்.. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க..” என்ற மகளை வெறித்துப் பார்த்தவர்,
“முட்டாள்தனமா பேசாத… ஊரைக் கூட்டி பத்திரிகை அடிச்சு போலிக் கல்யாணம் நடத்த நமக்கு என்ன பைத்தியமா..? யாழவன் உயிரோட இருக்காருங்கிறது உண்மைன்னா இப்பவே வா.. அவங்க வீட்டுக்கு போய் அவங்ககிட்ட பேசலாம்… நியாயம் கேட்கலாம்… யாழவனைத் தேடலாம்…
இல்லன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட்டாவது பண்ணலாம்… அதை விட்டுட்டு இது என்ன பைத்தியக்காரத்தனமான முடிவு..? நீ படிச்ச பொண்ணா இல்லையான்னே எனக்கு சந்தேகமா இருக்கு..” என கோபத்தில் கூறினார் அவளுடைய அன்னை.
“என்ன அந்த வீட்ல போய் கெஞ்ச சொல்றீங்களாம்மா..? ஆல்ரெடி நான் அத்தைகிட்டயும் மாமாகிட்டயும் பேசிட்டுதான் வந்தேன்.. அவங்க என்கிட்ட பொய் தான் சொல்றாங்க… அரவிந்தன பத்தி கேட்டும் கூட என்கிட்ட எதுவுமே சொல்லல.. அவனோட போன் நம்பர் கூட கொடுக்கல… எவ்வளவு கஷ்டப்பட்டு உண்மையை கண்டுபிடிச்சேன் தெரியுமா..? விஷ்வா மட்டும் வந்து யாழவனப் பத்தி கேட்கலைன்னா இப்போ வரைக்கும் என்னோட யாழன் செத்துட்டாருன்னுதான் நினைச்சுகிட்டு இருந்திருப்பேன்..
நான் யாழவன பிரிஞ்சு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் அவரோட மனநிலை எப்படி இருந்துச்சுன்னு எனக்கு தெரியும்மா.. அப்போ அவர் என்ன காதலிச்சுக்கிட்டுதான் இருந்தாரு… எனக்காக எதுவும் செய்ய தயாரா இருந்தாரு… ஆனா இப்ப நான் அவரைப் பார்த்தே பல மாசமாகுது…
அவர் என்னைப் பாக்க வரல. உயிரோடு இருக்கிற விஷயத்தை கூட என்கிட்ட மறைச்சுட்டாங்க.. அரணை என்கிட்ட கொடுக்க வேணாம்னு சொல்லி இருக்காரு.. இப்படி நிறைய விஷயம் எனக்கே தெரியாம நடந்து முடிஞ்சிருச்சும்மா…
இதுக்கெல்லாம் என்ன காரணம்னு எனக்குத் தெரியணும்.. ஒருவேளை என்னை வெறுத்துட்டாரோ என்னவோ.?” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.
“என் மேல அதே காதல் இருந்தா நான் இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறத அவரால கண்டிப்பா பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. என்னத் தேடி கண்டிப்பா வருவாரு… அப்படி அவர் தேடி வந்தாருன்னா பழசு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு அவர் மட்டும் போதும்னு அவர் கூடவே போயிடுவேன்மா…
ப்ளீஸ் இந்த ஒரு வாட்டி மட்டும் என்னை நம்புங்க… எந்த தப்பும் நடக்காது… நிச்சயமா யாழன் என்னத் தேடி வருவாரு…” என அழுத தன் மகளை கண்ணீரோடு அணைத்துக் கொண்டார் அவர்.
அங்கே ஓரமாக நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தனாவுக்கோ தன்னுடைய சகோதரியை நினைத்து கவலையாக இருந்தது.
“அம்மா அக்கா சொல்றதுதான் சரிமா… உண்மையை மறைச்சவங்க இப்போ போய் நாம கேட்டா மட்டும் உண்மைய சொல்லுவாங்களா..? போலீஸ் எல்லாம் அவங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணும்… அக்காவை அவளோட இஷ்டத்துக்கு விடுமா… இது அவளோட வாழ்க்கை… கடைசியா இதை ட்ரை பண்ணி பார்க்கட்டுமே.. மாமா கண்டிப்பா வருவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்றாள் கீர்த்தனா.
“சரி நீ சொல்ற மாதிரியே பண்ணலாம்.. இன்னைல இருந்து ரெண்டு வாரத்துக்குள்ள கல்யாணம்னு எல்லாருக்கும் சொல்லுவோம்… அதுக்குள்ள உன்னோட புருஷன் உன்னைத் தேடி வந்துட்டாருன்னா சரி… அப்போவும் அவர் உன்னத் தேடி வரலைன்னா நீ அவரை மறந்துட்டு நான் சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கணும்… இதுக்கு ஓகேன்னா சொல்லு உன்னோட பிளானுக் நான் ஒத்துக்கிறேன்..” என அன்னம் கூற, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“ம்மா.. அது எப்படிமா..?” தடுமாறினாள் அவள்.
“நீதான் அவ்ளோ ஸ்ட்ரோங்கா யாழவன் தேடி வருவாருன்னு சொல்றியே.. அப்புறம் எதுக்கு தயங்குற..? அவரு தேடி வந்தா எனக்கும் சந்தோஷம்தான்.. அப்படி தேடி வரலைன்னா கதிரையே கல்யாணம் பண்ணிக்கோ.. அந்தப் பையன் உன்ன நல்லா பாத்துப்பான்..” என்றவரின் அழுத்தமான குரலில் அவளுக்கு தலை வலித்தது.
வேறு வழியின்றி சரி என ஒத்துக் கொண்டாள் அவள்.
அர்ச்சனாவை நெருங்கிய அன்னமோ அவளுடைய கரத்தை எடுத்து தன் தலையின் மீது பதித்தவர்,
“யாழவன் வரலைனா என்மேல சத்தியமா நான் சொல்ற பையனை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.. இது சத்தியம்..” எனக் கூற,
அவளுக்கு விழிகளில் இருந்து மீண்டும் கண்ணீர் பொல பொலவென பொழியத் தொடங்கியது.
சரியென மீண்டும் தலையசைப்பை பதிலாகக் கொடுத்துவிட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டவளுக்கு ஏன் தனக்கு மட்டும் இத்தனை துயரம் என்ற கேள்விதான் முதலில் எழுந்தது.
வேகமாக தன்னுடைய விழிகளைத் துடைத்துக் கொண்டவள் நிச்சயம் யாழவன் தன்னைத்தேடி வருவான் என்ற இறுதி நம்பிக்கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
****
ஒரே ஒரு பத்திரிக்கையை மட்டும் அடித்து யாழவனின் வீடு தேடிச் சென்று ரூபாவதிக்கு பத்திரிக்கையை கொடுத்துவிட்டு வந்திருந்தாள் அர்ச்சனா.
கல்யாணத்துக்கு கண்டிப்பாக வருவோம் எனக் கூறி அனுப்பியதோடு அவர்களின் உரையாடல் முடிந்து போயிற்று.
அடுத்த ஐந்து நாட்கள் கடந்தும் யாழவனிடமிருந்து எந்தவிதமான அழைப்போ அணுகுமுறையோ இல்லாது போக, தவித்துப் போனாள் அர்ச்சனா.
புதுவிதமான அச்சங்கள் எல்லாம் அவளை சூழத் தொடங்கின.
ஏதோ நிஜமான மாப்பிள்ளை போல கல்யாண வேலைகளில் தீவிரமாக மூழ்கினான் நித்திலன்.
அன்னமோ யாழவன் வரவில்லை என்றால் அந்த மண்டபத்திலேயே நிஜமாக கல்யாணத்தை நடத்தி விடும் முடிவோடு அவளுக்கு புடவைகள் மண்டபம் அலங்காரம் என அனைத்தையும் திட்டமிட்டு செய்யத் தொடங்க,
இவளுக்கோ இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையாகிப் போனது.
இன்னும் ஐந்து நாட்களில் திருமணம் என முடிவாகியும் கூட ஏன் அவளுடைய யாழவன் இன்னும் அவளைத் தேடி வரவில்லை..?
ஒருவேளை இந்த அர்ச்சனா வேண்டாம் என்று முடிவு செய்து விட்டானா..?
இனி அவன் தன்னைத்தேடி வரவே மாட்டானோ..?
அச்சத்தில் அவளுக்கு தூக்கம் வர மறுத்தது.
தூங்காத இரவுகள் ஒவ்வொன்றாய் அதிகரித்துக் கொண்டே சென்றன.
ஐந்து நாட்கள் நான்கு நாட்களாக மாறின.
நான்கு நாட்கள் மூன்று நாட்களாக மாறின.
மூன்று நாட்கள் இரண்டு நாட்களாக மாறிவிட அர்ச்சனாவின் பொறுமையோ காற்றில் கரைந்து காணாமல் போயிருந்தது.
விடிந்தால் திருமணம் என்ற நிலை வந்துவிட தன் உணர்வுகளை மொத்தமாக தொலைத்தாள் காரிகை.
ஏன் விஷக் குட்டி ஏன் எங்களை டென்ஷன்லயே வச்சிருக்கணும் அதான?