“எல்லாம் சரியா இருக்கு தானே.. அங்க போனதும் எதுவும் பிரச்சனைனு சொல்லிடாத திரும்ப எல்லாத்தையும் ரெடி பண்ண முடியாது. இன்னைக்கு நாம அந்த அக்ரீமெண்ட்ல குபேரன் சார் கிட்ட சைன் வாங்கியே ஆகணும்” என்று காரை ஓட்டிக்கொண்டே சூர்யா கேட்கவும்.
அவன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வேதவள்ளியோ பக்கவாட்டாக அவனை திரும்பிப் பார்த்து, “எல்லாம் சரியா இருக்கு சார் நான் செக் பண்ணிட்டேன். ராம் சார் தான் இதையெல்லாம் என்கிட்ட கரெக்ஷ்ன் பார்த்து கொடுத்தாங்க.. அதனால் எந்த பிராப்ளமும் வராது”.
“எதுக்கும் இன்னொரு தடவை ரீட் பண்ணு” என்றதும்.
‘ஐயோடா’ என்பது போல் அவனை பார்த்தவள். சலிப்பான பெருமூச்சுடன் மூன்றாவது முறையாக அந்த அக்ரீமெண்டை சூர்யாவின் முன்பு வாசித்துக் காட்ட தொடங்கினாள்.
ஆம், இரண்டு முறை இதே போல் தான் வாசித்துக் காட்ட சொன்னான். அவளும் அவன் கூறியது போலவே அக்ரீமெண்டை வாசித்து காட்டி விட்டாள்.
அதில் எந்த பிழையும் இல்லை என்பதை தெரிந்து கொண்டாலும் இப்பொழுது மூன்றாவது முறையாக மீண்டும் அதே அக்ரிமெண்டை அவன் வாசிக்க சொல்லவும் இவளுக்கே சலிப்பாகிவிட்டது.
‘எத்தனை தடவை படிச்சாலும் அதுல இருக்கிறது தான் இருக்க போகுது. திரும்பத் திரும்ப படிச்சா புதுசா ஏதாவது இருக்கவா போகுது. இவர் ஏன் தான் இப்படி இருக்காரோ’ என்று மனதிற்குள் எண்ணி நொந்தவாறு வேறு வழியில்லாமல் அவன் கூறியபடியே மூன்றாவது முறையாக அவனுக்கு வாசித்து காட்டினாள்.
“ம்ம்.. பர்ஃபெக்ட்” என்றவனோ சாலையில் இருந்து தன் பார்வையை விளக்காமல் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான்.
அவனின் கைகள் அழுத்தமாக ஸ்டியரிங்கை பற்றி இருந்தது. வழக்கத்திற்கு மாறாக இன்று ஏனோ அவனின் முகத்தில் அதீத அழுத்தம் அப்பட்டமாக தெரிந்தது. அதன் விளைவு மீண்டும் மீண்டும் அவளை வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.
வழக்கத்தை விட இன்று சூர்யாவிடம் அதிக இறுக்கம் தென்பட்டது. அவனிடம் இருக்கும் அழுத்தத்தை தவிர்க்க வழி தெரியாமல் தான் தன் கவனத்தை வேறு எதிலாவது செலுத்த வேண்டும் என்பதற்காக வேதவள்ளியை படித்த அக்ரீமெண்டையே மீண்டும் மீண்டும் வாசித்து காட்ட சொல்லி படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறான்.
அப்படியாவது தன் கவனம் திசை மாறாதா என்ற ஆசை தான் அவனிடம்.
இதற்காக தான் ராம் அப்பொழுதே கூறினான். அங்கே அவர்கள் வருவார்கள் நாமும் நிச்சயம் போய் தான் ஆக வேண்டுமா என்று இதற்காக தான் வினவினான்.
ஆனால் என்ன செய்வது வந்தாக வேண்டிய கட்டாயம். இல்லை என்றால் சூர்யாவும் அவர்கள் வரும் இடத்திற்கு வர விருப்பப்பட மாட்டான். முடிந்தவரை தவிர்த்து விடுவான் தான்.
ஆனால் இன்று குபேரனிடம் கையெழுத்து வாங்க வேண்டிய வேலை இருக்கிறதே.. அவர்களுக்காக பயந்து இதை விட முடியாதே என்று எண்ணியவன் நிச்சயமாக இங்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
ஆனாலும் நேரம் நெருங்க நெருங்க அவனுக்குள் ஒருவித இறுக்கம், ஏமாற்றம், ஆத்திரம் அவனையும் மீறி ஏற்படுவதை அவனாலுமே தவிர்க்க முடியவில்லை.
ஆனாலுமே காயத்தை ஏற்படுத்தியவர்களை பழிவாங்கவோ, வலிக்க செய்யவோ இவன் எண்ணவில்லை. அதற்கு கூட அவர்கள் தகுதியற்றவர்கள் என்று எண்ணி விட்டான் போலும்..
ஆனால் அவர்களோ எப்படியும் நிச்சயம் அவன் இங்கே வருவான் என்பதை அறிந்தவர்கள் அவனின் ரணத்தை மேலும் சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதற்காகவே காத்துக் கொண்டிருந்தனர்.
குபேரன் கார்ப்பரேட்டுகளில் பெரும்புள்ளி.. பல பிசினஸ்களை செய்கிறார்.
அவரின் சொத்தின் மதிப்பு பல கோடிகள் என்பது மட்டும் தான் அனைவருக்கும் தெரியுமே தவிர.. எத்தனை கோடிகள் என்பது யாருக்கும் தெரியாது. அவ்வளவு ஏன் அவரை பற்றிய எந்த ஒரு விவரமும் யாருக்கும் முழுமையாக தெரியாது.
சூரியாவை போன்று வளர்ந்து வரும் தொழிலதிபர்கள் அவருடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது.
ஆனால் ஏனோ அவருக்கு சூர்யாவின் திறமையை மிகவும் பிடித்து விட்டது. அதனாலேயே அவனுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ள உடனே சம்மதம் தெரிவித்து விட்டார்.
இன்று அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க தான் சூரியா முக்கியமாக இங்கு வந்ததே..
கார் அந்த பிரம்மாண்ட ரிசார்டினுள் நுழையவும் வேதவள்ளியோ அனைத்தையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இப்படிப்பட்ட இடங்களை எல்லாம் பார்த்ததே கிடையாது.
இவர்கள் கார் உள்ளே சென்று நின்றதுமே அங்கே பணிபுரிபவர் ஓடி வந்து சூர்யாவிடம் இருந்து சாவியை பெற்றுக் கொண்டார்.
சூர்யா மிடுக்கான தன் நேர் நடையுடன் வேகமாக உள்ளே நுழைய. அவனின் பின்னோடு அவனின் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தாள் வேதவள்ளி.
அவ்விடத்தின் பிரம்மாண்டம் அவளை வியப்படைய செய்தது.
உள்ளே பெரிய ஹால்.. முழுவதும் ஏசியின் உதவியோடு குளிரூட்டப்பட்டிருந்தது. குளுமை உடலை ஊசியென துளைக்கும் அளவிற்கு இருந்தது.
அழகிய விலை உயர்ந்த கலை நயமிக்க பொருட்கள் ஆங்காங்கே வீற்றிருக்க.. அவ்விடத்தை பார்க்கவே அத்தனை அழகாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சி அளித்தது.
அவ்விடத்தை தாண்டி சென்றாள் மிகப்பெரிய பரப்பிலான கார்டன் ஏரியா நேர்த்தியாக அழகாக வெட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு இருந்தது. சுற்றிலும் பல வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கின.
அங்கே தான் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு நேரம் என்பதால் ஆங்காங்கே வண்ண விளக்குகளும் அவ்விடத்திற்கு தகுந்தார் போல் பொருத்தப்பட்டு இருக்க.. அவ்விடத்தின் பிரம்மாண்டத்தை மேலும் மெருகேற்றி காட்டியது அவ்விளக்குகள்.
சூர்யாவிற்கு அந்த ரம்யமான பிரம்மாண்ட இடம் அவனை சற்றும் அமைதி படுத்தவில்லை. அவனுக்குள் அழுத்தம் இன்னும் அதிகரிக்க தான் செய்தது.
இப்பொழுதே அவ்விடம் முழுவதும் ஆட்கள் வந்துவிட்டனர். சூர்யாவும் வேதவள்ளியுடன் அங்கே வட்ட வடிவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமரவும்.
அவர்களுக்கு சரியாக நேர் எதிராக அவன் யாரை காண விருப்பமில்லை என்று எண்ணுகிறானோ அவர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களின் இதழிலோ ஏளன புன்னகை.
அவன் தான் பிரேம்.. அருகில் அவனின் மனைவி அக்ஷ்ராவும் அமர்ந்திருந்தாள். இருவரும் சூர்யாவை பார்த்து தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்து சிரித்துக் கொண்டனர்.
“வழக்கம் போல நம்மளை பாக்காம ஓடி ஒளிஞ்சுப்பானு நினைச்சேன். பரவாயில்ல வந்துட்டானே” என்றாள் அக்ஷ்ரா தன் ஒற்றை காலின் மீது மற்றொரு காலை போட்டவாறு திமிராக.
அவள் அணிந்திருந்த உடையோ அவளின் அங்க வனப்பை அனைவருக்கும் அப்பட்டமாக பறைசாற்றியது.
“நான் தான் சொன்னேன்ல அவன் கண்டிப்பா இந்த பார்ட்டிக்கு வருவான்னு.. அவனுக்கு இன்னைக்கு அக்ரீமெண்ட் ரெனிவல் பண்ற வேலை வேற இருக்கு” என்ற பிரேமை மெச்சும் பார்வை பார்த்த அக்ஷ்ரா, “யூ ஆர் சச் ச பிரில்லியன்ட் பிரேம். எப்படி இவனை பத்தி எல்லா விஷயமும் பர்ஃபெக்ட்டா சொல்றீங்க..”.
“எல்லாத்துக்கும் நான் தான் ஸ்பை வச்சிருக்கேனே.. அவனுக்கே தெரியாம அவனுடைய கம்பெனியில் என்னுடைய ஸ்பை இருக்கான். அவன் அங்க அவனுடைய விரலை அசைச்சா கூட எனக்கு அது நியூஸ் வந்துடும்” என்று கோணலாக புன்னகைத்தான்.
அதன் பிறகும் அவர்கள் சூர்யாவையே கமெண்ட் அடித்து சிரித்துக்கொண்டிருக்க.
ஆனால் அவனோ அழுத்தமாக தன் பற்களை கடித்துக் கொண்டு வேறு எங்கோ பார்த்தவாறு அமர்ந்திருந்தான். வேதவள்ளியும் அவர்களை கவனிக்கவில்லை. அவ்விடத்தையே சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டு அதன் அழகை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு ஏனோ இங்கே வந்ததுமே மனம் அமைதியான உணர்வு. அங்கே பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களும், இரவு நேரத்திற்கு தகுந்தார் போல் அங்கே போடப்பட்டிருக்கும் விளக்குகளும் அவ்விடத்தின் ரம்யத்தை இரட்டிப்பாக்க அவளின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
தன் அருகில் இறுக்கத்தை தத்தெடுத்த முகத்துடன் கடுமையாக அமர்ந்திருக்கும் சூரிய பிரசாத்தையும் அவள் கவனிக்கவில்லை..
சற்று தள்ளி அமர்ந்திருக்கும் பிரேமையும், அக்ஷ்ராவையும் அவள் கவனிக்கவில்லை.
முற்றிலுமாக அவ்விடத்தின் அழகில் மூழ்கி போய்விட்டாள் என்று தான் கூற வேண்டும்.
சற்று நேரத்திலேயே குபேரன் அவ்விடம் வந்துவிட. இனிதே நிகழ்ச்சி ஆரம்பமாகியது. சற்று நேரம் அவர் மைக்கில் உரையாடிவிட்டு விருந்தை துவங்கி வைத்தார்.
அதன் பிறகு அங்கே வந்திருந்த அனைவரும் மற்றவர்களுடன் பேசிக்கொண்டு பஃபே முறையில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை சுவைத்துக் கொண்டிருந்தனர்.
சூர்யாவின் எண்ணமோ எப்பொழுது இங்கு இருந்து கிளம்பலாம் என்பதில் தான் இருந்தது.
உணவை உண்ணும் மனநிலை எல்லாம் இப்பொழுது அவனுக்கு இல்லை. அனைவரும் உணவருந்த தொடங்க சூர்யா மட்டும் அமைதியாக நின்று இருப்பதை கண்ட குபேரன் அவன் அருகில் வந்து, “ஹலோ மிஸ்டர்.சூர்யா ஹவ் ஆர் யூ? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” என்றார் புன்னகையோடு.
“ஹலோ சார் ஐ அம் பைன் நீங்க எப்படி இருக்கீங்க”.
பொதுவான நல விசாரிப்புகளும் பிசினஸை பற்றிய பேச்சுக்களும் சென்று கொண்டிருக்க.
“சார் நம்முடைய அக்ரீமெண்ட் எக்ஸ்பயரி ஆகப்போகுது. அதற்கான ரெனிவல் அக்ரிமெண்ட் நான் ரெடி பண்ணி கொண்டு வந்து இருக்கேன். உங்களுடைய சைன் வேணும்” என்றவாறு வேதவள்ளியை பார்க்கவும்.
அவளும் தன் கையில் இருக்கும் பைலை அவனை நோக்கி நீட்டினாள். அதை வாங்கியவன் குபேரனை நோக்கி நீட்ட. அவரும் அதை ஒருமுறை தன் பிஏவிடம் சரி பார்க்க சொன்னவர். அவர் சரி பார்த்து கொடுத்ததும் கையொப்பமிட்டார்.
“ஓகே சூர்யா உங்கள மாதிரி யங் சக்சஸ்ஃபுல் பிசினஸ்மேனை பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள பார்க்கும் பொழுது சின்ன வயசுல என்னை பார்த்த போலவே இருக்கு மேன்” என்று அவனின் தோளில் தட்டிக் கொடுத்தவர்.
“கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும்” என்று விட்டு வேறு ஒருவருடன் பேச சென்று விட்டார்.
அவர் கூறியதற்காக ஒரு தட்டில் சிறிதளவு உணவை எடுத்துக் கொண்டு வந்தவன். ஓரமாக நின்று உணவருந்த தொடங்கினான்.
வேதவள்ளியோ அந்த அக்ரீமெண்டை பத்திரப்படுத்தி வைத்துவள். அவளும் உணவருந்த வேண்டி சூர்யாவை விட்டு சற்று தள்ளி சென்றாள்.
யாரை அவன் சந்திக்கவே கூடாது என்று எண்ணுகிறானோ.. யாரிடமிருந்து விலகி செல்ல வேண்டும் என்று எண்ணுகிறானோ.. இதோ அவனை தேடி அவ்விருவரும் வேண்டுமென்றே வம்பிழுக்க வந்து விட்டனர்.
“ஹலோ மிஸ்டர்.சூர்யா எப்படி இருக்கீங்க” என்று நக்கல் இழைந்தோடும் குரலில் கேட்ட பிரேம் தன் மனைவியுடன் அவன் அருகில் வர.
அவனோ அவர்களுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் தான் பிடித்திருந்த ப்ளேட்டை மேலும் அழுத்தமாக பற்றியவாறு நின்று இருந்தான்.