எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 11

4.7
(14)

புயல் – 11

“என்ன சார் எப்படி இருக்கீங்கன்னு கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க அக்ஷ்ரா நீ கேளு நீ கேட்டால் தான் சார் பேசுவார் போலருக்கு” என்றான் ஏளன குரலில்.

“மூஞ்சிய பாத்தாலே தெரியல பிரேம் உங்களுக்கு.. நல்லா இருந்திருந்தா இந்நேரம் சாதாரணமா பேசி இருக்க மாட்டாரு.. பாவம், இன்னும் என் நினைப்பிலேயே இருக்காரு போலருக்கு” என்று உச்சி கொட்டியவாறு பரிதாபப்படுவது போல் கேலி செய்தாள்.

அவர்கள் இருவரையும் கோபமாக உறுத்து விழித்தவனோ பற்களை கடித்துக்கொண்டு முகம் இறுக நின்றிருந்தான்.

“ஆனா சும்மா சொல்லக்கூடாது சூர்யா உன் டேஸ்ட் ஒன்னு ஒன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு. அக்ஷ்ராவும் உன்னுடைய செலக்சன் தானே செமயா இருக்கா” என்று தன் அருகில் நின்று இருந்தவளை பார்த்து தாப குரலில் கூறியவன்.

சற்று தள்ளி உணவருந்தி கொண்டிருந்த வேதவள்ளியை கைகாட்டி, “அது யாரு உன் கூட தானே வந்து இருந்தா அவளையும் சும்மா சொல்லக்கூடாது செம பிசா இருக்கா” என்றது தான் தாமதம் அவனின் முன்பு தன் ஒற்றை விரலை தூக்கி காட்டியவன் மிரட்டும் தோணியில், “மைண்ட் யுவர் வேர்ட்ஸ்! அவ எங்க கம்பெனி ஸ்டாப்.. அவளை பத்தி தப்பா ஒரு வார்த்தை பேசுன அப்புறம் பேசுறதுக்கு வாயில் நாக்கு இருக்காது அறுத்துடுவேன் ஜாக்கிரதை” என்று கர்ஜித்தான்.

அவளை பற்றி கூறியதும் அவனின் கோபத்தை கண்டு அக்ஷ்ராவிற்கு எரிச்சலாக வந்தது.

“ப்பா.. எவ்ளோ சூடு.. இவ்வளவு நேரம் நீ உருகி உருகி காதலிச்சவளை பத்தி பேசினேன் அப்போ எல்லாம் ஏன்னு கூட கேக்கல உன்கிட்ட வேலை பார்க்கிற பொண்ண பத்தி பேசினதும் உனக்கு இவ்வளவு கோபம் வருதா” என்று தன் புருவத்தை உயர்த்தி ஆச்சரியமாக கேட்டவன்.

“சோ சி இஸ் சம்திங் ஃபார் யூ மோர் தென் அ ஸ்டாப் அம் ஐ ரைட்..”.

கோபத்தில் சூர்யாவின் முகம் முழுவதும் செவ்வண்ணம் பூசிக்கொள்ள, “தேவையில்லாத பேச்செல்லாம் பேசாத அவளை பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு”.

“சரி பேசல.. அவளை பத்தி பேச எனக்கு எந்த ஒரு ரைட்சும் இல்ல. ஆனா இவளை பத்தி பேசுறதுக்கு எனக்கு முழு ரைட்சும் இருக்கு இல்ல தாலி கட்டி இருக்கேன்மா இப்போ இவ என்னுடைய பொண்டாட்டி.. சும்மா சொல்லக்கூடாது நீ ஏன் இவளை உருகி உருகி காதலிச்சு கரெக்ட் பண்ணனு கல்யாணத்துக்கு அப்புறம் தான் நானே தெரிஞ்சுகிட்டேன்.

சீ இஸ் சோ பியூட்டிஃபுல்.. என்ன இருந்தாலும் காதலிச்ச பொண்ணு விட்டுட்டு போன வருத்தம் உனக்குள்ள இருக்க தான் செய்யும். ஆனா என்ன பண்றது ஒரு பொண்ணுக்கு தேவையானதை உன்னால கொடுக்க முடியலையே” என்றவாறு அவன் தன் தோள்களை குலுக்கி இதழை பிதுக்கி காட்டவும்.

அவனின் வார்த்தையில் ஏற்பட்ட கோபத்தில் சூர்யாவின் கைகள் மெல்லமாக நடுங்கத் தொடங்கியது. அதற்கு மேலும் அங்கே நிற்காமல் தன் கையில் இருந்த தட்டை அருகில் இருந்த டேபிளின் மீது டங்கென்று வைத்தவன் விறுவிறுவென நடந்து சென்றான்.

அங்கே வந்திருந்தவர்கள் குடிப்பதற்காக விதவிதமான மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒன்றை எடுத்தவன் அப்படியே பாட்டிலோடு தன் வாய்க்குள் சரிக்கவும்.

அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தவன், “ஐயோ சார்! இதை இப்படியெல்லாம் குடிக்க கூடாது சார்” என்று தன்னால் முடிந்த மட்டும் தடுக்க முயற்சித்தான்.

ஆனால் அவனின் செயலுக்கான பலன் தான் பூஜ்ஜியம் ஆகிப் போனது. மொத்த பாட்டிலையும் குடித்து முடித்த பிறகு தான் தன் வாயிலிருந்து எடுத்தான் சூரிய பிரசாத்.

பிரேமின் தோளில் செல்லமாக தட்டிய அக்ஷ்ரா, “ஹேய் பிரேம் பாவம் சூர்யா அங்க பாருங்க ட்ரிங் பண்ண போய்ட்டான். அவன் ட்ரிங் பண்ணா நிதானத்திலேயே இருக்க மாட்டான் அது உங்களுக்கே தெரியும் இல்ல.. ஏன் அவன் கிட்ட தேவையில்லாம பண்ணனும்”.

“அவனை வெறுப்பேத்தி அவன் கஷ்டப்படுவதை பார்க்கும் பொழுது என்னமோ தெரியல ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நான் பேசுனதுக்கு அவனால பதில் கூட பேச முடியல பாத்தியா வாயடைச்சு போயிட்டான்”.

இது எதையுமே கவனிக்காத வேதவள்ளியோ புதிதாக தனக்கு கிடைத்த அனுபவத்தை வீணாக்காமல் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன குட்டி நீ எங்க இருக்க?” என்ற குரலை வைத்தே அந்த குரலுக்கு சொந்தக்காரன் யார் என்பதை கண்டுபிடித்த வேதவள்ளிக்கு இதயம் படபடவென அடித்துக் கொள்ள தொடங்கி விட்டது.

பதட்டத்தோடு சட்டென்று தனக்கு பின்னே திரும்பி பார்த்தாள். சடகோபன் தான் கோணல் சிரிப்போடு அவளை மேலிருந்து கீழ் பார்வையால் வருடியவாறு நின்று இருந்தான்.

அவனின் பார்வையே பேதை அவளுக்கு அருவருத்து போக.. தன் முகத்தை அருவருப்பாக சுழித்தவள் அங்கிருந்து நகர முற்பட்டாள்.

“அன்னைக்கு ஏதோ பத்தினி மாதிரி பணத்தை கொண்டு வந்து கொடுத்துட்டு போன இப்போ இவ்வளவு பெரிய பார்ட்டிக்கு வந்து இருக்கியே.. என்ன பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் கைக்குள்ள போட்டுக்கிட்டியா என்ன.. இப்போ இதெல்லாம் உனக்கு பழகி இருக்குமே” என்றவனின் வார்த்தையில் வேதவள்ளிக்கோ தூக்கி வாரி போட்டது.

சட்டென்று என்ன வார்த்தை பேசி விட்டான். தொண்டையில் எதுவோ அடைக்கும் உணர்வு. அவனுக்கு எதிர்த்து பதில் அளிக்க கூட முடியாமல் அடைத்துக் கொண்டு நின்றது.

“இப்போ உனக்கு எல்லாத்துக்கும் ஓகே தான.. அன்னைக்கு என்னை விட நாராயண மூர்த்தி தான் ரொம்ப கவலைப்பட்டான் உன்னை மிஸ் பண்ணிட்டோமேனு”.

“பார்த்து.. பேசுங்க சார்.. நான் இங்க வேலை விஷயமா வந்து இருக்கேன்” என்றவளின் வார்த்தைகள் ஆத்திரத்திலும், பதட்டத்திலும் தந்தி அடிக்க வெளியேறியது.

“எந்த வேலையா வந்தாலும் சரி அப்படியே இந்த வேலையையும் கொஞ்சம் பாத்துட்டு போறது.. இங்க பாரு இங்க இருக்கிற எவனும் ராமன் கிடையாது. நீ வந்து சிக்கியிருக்கிறது என்னை மாதிரி பல பேர் இருக்கிற கோட்டை. ஒழுங்கா சம்மதிச்சினா வெளியில் யாருக்கும் தெரியாம காதும் காதும் வச்ச மாதிரி ரூம் புக் பண்ணிடுவேன்.

நடக்கிற விஷயமும் நமக்குள்ள மட்டும் இருக்கும். இல்ல, இங்க இருக்கிறவனுங்க எல்லாமே முரட்டு பீசு.. நியூஸ் கொஞ்சம் லீக் ஆனாலும் எல்லாரும் சேர்ந்து உன்னை சிதைச்சிடுவானுங்க. இவனுங்க எல்லாம் எப்ப எவ கிடைப்பான்னு அலையுறவனுங்க”.

அவனின் வார்த்தையில் அவள் கையில் இருந்த உணவு தட்டு பயத்தில் தானாக கைநழுவி கீழே விழுந்து விட. அவனின் வார்த்தைகளை கேட்ட முடியாமல் இரு காதுகளையும் கைகளால் பொத்திக் கொண்டாள்.

அவளுக்குள் மெல்லிய நடுக்கம் பரவ தொடங்கியது.

உடல் முழுவதும் சில்லிட்ட உணர்வு..

இவ்வளவு நேரம் ரம்யமாகவும் புதிய அனுபவமாகவும் தோன்றிய அவ்விடமோ இப்பொழுது யாரை பார்த்தாலும் பயம் பிடித்துக் கொண்டது.

சட்டென்று எட்டி அவளின் கையை பிடித்த சடகோபன், “முரண்டு பிடிக்காமல் மரியாதையா என்னோட வந்துடு” என்றவாறு இழுத்தான்.

அவனுமே போதையின் பிடியில் தான் இருந்தான்.

அவனிடமிருந்து தன் பலம் மொத்தத்தையும் திரட்டி தன் கையை வெடுக்கென்று இழுத்தவள் ஓட்டமும் நடையுமாக சூர்யாவை தேடி சென்றாள்.

எங்கு தேடியும் அவளின் கஷ்ட காலத்திற்கு சூர்யா வேறு கிடைக்கவே இல்லை. சடகோபன் வேறு அவளின் பின்னோடு மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்க.. அவளுக்கோ இதயத்துடிப்பு தாறுமாறாக அதிகரித்தது.

“ஐயோ கடவுளே! சூர்யா சார் எங்க போனாருன்னு தெரியலையே.. ஒருவேளை, என்னை இங்க விட்டுட்டு அவர் கிளம்பி போயிட்டாரா.. இங்க இருந்து எப்படி வெளிய போறதுன்னு கூட தெரியலையே” என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு சூர்யாவை தேடிக் கொண்டிருந்தாள்.

அப்போது தூரத்தில் கையில் மது கோப்பையுடன் அமர்ந்திருக்கும் சூர்யாவை கண்டு கொண்டவள் வேகமாக அவனை நோக்கி நடக்க தொடங்கினாள்.

“சரி வாங்க பிரேம் கிளம்பலாம்” என்ற அக்ஷ்ராவிடம், “சும்மா இரு அக்ஷீ அவனை இன்னும் கொஞ்சம் நல்லா வெறுப்பேத்திட்டு போகலாம்” என்றவாறு அவனும் அக்ஷராவின் கையை பற்றி தன்னுடன் அழைத்துக் கொண்டு சூர்யா இருக்கும் இடத்தை அடைந்தான்.

அவர்களை கண்ட சூர்யா தன் கையில் இருக்கும் மது கோப்பையை அழுத்தமாக பற்றவும்.

“என்னடா பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே இங்க வந்துட்ட.. உன் கஷ்டத்தை எல்லாம் இதை குடித்து சரி பண்ணிக்கிறியா” என்று கேட்டவாறு சத்தமாக சிரித்தான் பிரேம்.

“மரியாதையா இங்க இருந்து போய்டு இல்ல சாவடிச்சிடுவேன்” என்று கடும் கோபத்தோடு வார்த்தைகளை கடித்து துப்பியவனை கோபத்தோடு முறைத்த பிரேம், “இவ்வளவு நடந்தும் உன்னோட திமிரு இன்னும் அடங்கலையே.. அதை அடக்காம நான் இங்க இருந்து போக மாட்டேன் டா. உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லிட்டு போகலாம் என்று தான் வந்தேன். என் வைஃப் அக்ஷ்ரா இப்போ பிரக்னண்டா இருக்கா” என்றதும்.

சூர்யாவின் விழிகளில் ஏதோ ஒரு வலி தோன்ற அவர்கள் பார்ப்பதற்குள்ளாகவே சட்டென்று அதை மறைத்துக் கொண்டான்.

“என்னடா இவ்வளவு பெரிய ஹேப்பி நியூஸ் சொல்லி இருக்கேன். எந்த ஒரு ரியாக்ஷ்னும் இல்லாம அப்படியே உக்காந்து இருக்க. ஓ! இதை கேட்டு உன்னால் சந்தோஷம் கூட பட முடியாது இல்ல.. பாவம், நீயும் என்ன தான் பண்ணுவ.. உன்னால தான் ஒன்னும் முடியாதே” என்றான் தன் கடைசி வாக்கியத்தில் மட்டும் சற்று அழுத்தத்தை கொடுத்தவாறு.

அதில் சூர்யாவின் விழிகள் அக்ஷ்ராவில் அழுத்தமாக படிய.

அவளோ எந்த தவறும் செய்யாதவள் போல் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றிருந்தாள். அப்பொழுது வேதவள்ளி பதட்டத்தோடு அவ்விடம் வந்து சேரவும்.

சூர்யாவிற்கு அவனுக்கு பதில் கூட தர முடியாத நிலை.. வேதவள்ளியின் முன்பு என்ன பேசுவது என்று அமைதியாகி விட்டான்.

ஆனாலும், அவன் கூறியதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து மீண்டும் அப்படியே தன் வாய்க்குள் சரித்தான்.

முதல் முறை அவனின் நிலையை கண்டு அதிர்ந்து விழித்தாள் வேதவள்ளி.

பிரேமும் அக்ஷ்ராவும் அவனின் நிலையை கண்டு நக்கல் சிரிப்போடு தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

தனக்கு எதிரே நிற்கும் புதியவர்களை புரியாமல் பார்த்த வேதவள்ளி மெதுவான குரலில், “சார் கிளம்பலாம் சார்”.

இதற்கு மேலும் இங்கே இருக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. சடகோபன் வேறு இவளுக்காக சற்று தூரத்திலேயே நின்று காத்துக் கொண்டிருந்தான்.

இவன் வேறு கொஞ்சம் கொஞ்சமாக தன் நிதானத்தை இழந்து கொண்டிருக்கிறான். இங்கிருந்து சென்றால் போதும் என்று ஆகிவிட்டது வேதவள்ளிக்கு..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!