ப்ரீத்தியை போஸ்ட் மார்ட்டம் செய்ய எடுத்து போன பிறகு மானசா குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள். அடிக்கடி தலையில் அடித்துக் கொண்டாள்.
“எல்லாம் என் தப்பு. அவகிட்ட நான் சண்டை போட்டிருக்க கூடாது.. என்னால்தான் அவ வீட்டை விட்டு போனா. இன்னைக்கு இறந்துட்டா..” என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.
கண்ணீர் எவ்வளவு இறங்கியது என்று அவளுக்கே தெரியவில்லை. இழப்பு இவளையும் சேர்ந்து செத்து விட சொன்னது.
அழுது அழுது மண்டை வெடித்தது.
தீன குணாளன் வராண்டாவில் அமர்ந்திருந்தான். தன் லேப்டாப்பில் பார்க்க வேண்டிய வேலைகளை அப்போதுதான் செய்து முடித்தான்.
அந்த நேரத்தில் அவனின் பிஏ மருத்துவமனைக்குள் ஓடி வந்தான்.
இவன் அருகில் வந்து நின்றவன் “சாரி சார். போன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சி..” என்றான்.
இவன் லேப்டாப்பை அவனிடம் தந்தான். அவனும் இந்த லேப்டாப்பை தன் முதுகில் மாட்டியிருந்த பேக்கில் பத்திரப்படுத்தினான்.
கை கடிகாரத்தை பார்த்தபடி எழுந்து நின்ற தீனா “சீக்கிரம் போஸ்ட் மார்ட்டத்தை முடிக்க சொல்லு..” என்றான்.
பிஏ தலையாட்டி விட்டு ஓடினான்.
இவன் கேசத்தை கோதிக் கொண்டான். குழந்தை பிறந்த பிறகு ப்ரீத்தியை அனுமதித்திருந்த அறைக்கு சென்றான்.
கட்டிலின் மீது அமர்ந்து முகத்தை மூடியபடி அழுதுக் கொண்டிருந்தாள் மானசா. அவளின் தாய் சத்தமில்லாமல் அழுதுக் கொண்டிருந்தாள். அப்பா குழந்தையின் தொட்டிலை சோகத்தோடு ஆட்டிக் கொண்டிருந்தார். ப்ரீத்தியின் அசிஸ்டென்ட் செல்போனில் யாருக்கோ செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள்.
ஆனால் இவனின் பார்வை மானசாவை மட்டும் மோதியது. அவளின் தோள்களில் விழுந்து கிடந்த கேசம், காதுகளில் ஆடிக் கொண்டிருந்த கம்மல், முகத்தை மூடியிருந்த கைகளில் அலங்காரமாக இருந்த வெண்டை பிஞ்சு விரல்கள், சிங்கிள் ப்ளீட் சேலை முழுதாக மறைக்காமல் விட்டிருந்த அவளின் உருவ அழகு என்று அனைத்தும் அவனின் கவனத்தை ஈர்த்தது.
அவன் இதயம் புதிதாக துடித்தது. கண்ணில் இருந்த கண்ணாடியை சரி செய்துக் கொண்டான்.
ப்ரீத்தியின் அசிஸ்டன்ட் இவனை பார்த்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். “சார்?” என்று இவனின் உத்தரவுக்காக காத்திருந்தாள்.
மானசாவை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள் இவள் புறம் திரும்ப கூட இல்லை.
“அம்மா என்ன சொன்னாங்க?” எனக் கேட்டான்.
இவனின் குரல் அதிக ஒலி இல்லாமல் இருந்தாலும் அடர்த்தியாக இருந்தது. இந்த குரலில் மானசாவும் திரும்பிப் பார்த்தாள்.
அவனின் பார்வை தன்னை விழுங்குவதை கண்டு ஒரு நொடி அதிர்ந்து விட்டாள். வேங்கையின் பார்வை அவனிடம் இருந்தது.
மானசா தன்னை பார்க்க ஆரம்பித்ததும் இவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
“மேடம் இறுதி சடங்குக்கு ஏற்பாடுகள் பண்ணிட்டு இருக்காங்க. குழந்தையை பத்தி நிறைய கேட்டாங்க..” என்றாள்.
அவன் பார்வை தொட்டிலை தொட்டு விட்டு வந்தது.
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க சார். கிளம்பிடலாம்..” என்றாள் அந்த பெண்.
இவன் சரி என்று தலையாட்டி விட்டு அங்கிருந்து நடந்தான்.
ஓரமாக வந்து சுவரோடு சாய்ந்து நின்றான். மானசாவின் முகம் இதயம் முழுக்க ஆக்கிரமித்து இருந்தது. என்ன உணர்வு இது என்று அவனுக்கே புரியவில்லை.
போஸ்ட் மார்ட்டம் முடித்து உடம்பை தந்ததும் கிளம்பினார்கள்.
மானசாவும் அவளின் குடும்பமும் தீனாவின் காரை பின் தொடர்ந்து வந்தது. குழந்தை மானசாவிடம்தான் இருந்தது.
டிவியில் காட்டப்பட்டது போலவே பெரிய அரண்மனை வீடு. வாசலுக்கும் கேட்டுக்கும் இடையில் மட்டுமே அரை கிலோ மீட்டருக்கும் மேல் இடைவெளி இருந்தது.
வாசலில் இருந்த கண்ணாடி பெட்டியில் ப்ரீத்தியின் உடம்பை வைத்தார்கள்.
மலர் வளையம் வைத்து மாலை போட்டார்கள்.
மானசா அழுகையோடு அந்த கண்ணாடி பெட்டியை நெருங்கியபோது ஒரு பணிப்பெண் வந்து குழந்தைக்காக கையை நீட்டினாள். மானசா குழந்தையை தரவில்லை.
அவள் குழந்தையை பிடுங்கிக் கொள்ள முயன்ற நேரத்தில், எதிரில் நின்றிருந்த தீனா அந்த பெண்ணை பார்த்து போக சொல்லி கண் சைகை காட்டினான்.
அவள் பயத்தோடு விலகி போனாள்.
தீனாவின் அம்மா சுலோச்சனா வீல்சேரில் இருந்தாள். மருமகளின் பிணத்தை நெருங்கியவள் கண்ணாடியின் மீது வருடினாள். அந்த வீட்டின் பணியாட்கள் சிலர் வாசலில் ஆங்காங்கே நின்றிருந்தார்கள். சொந்தங்கள் சிலர் மரியாதைக்காக சோகத்தில் இருந்தார்கள்.
“இப்படி நீ விட்டு போயிருக்க வேணாம்..” என்றாள் சுலோச்சனா.
அவள் கண்ணீர் சிந்த, “வேணாம் மேடம். உங்க உடம்பு மோசமாகிடும்..” என்று பணிப்பெண் ஒருத்தி அவளுக்கு நினைவூட்டினாள்.
“வீட்டை ஆள வந்தவளே போயிட்டா. இனி நான் எப்படி போனா என்ன?” என்று கேட்டு கண்ணீர் விட்ட சுலோச்சனா “இந்த எமன் என்னை கூட்டி போயிருக்க கூடாதா?” என்று அழுதாள்.
“எங்கே என் பேத்தி?” என்று கேட்டு பார்வையை அலைபாய விட்டாள்.
மானசாவுக்கு தீனாவை பார்க்கும்போதே வெறுப்பின் காரணமாக கொல்ல வேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் மாமியார் மீது ஒரு மதிப்பு வந்திருந்தது.
தன்னோடு அணைத்திருந்த குழந்தையை கொண்டு போய் அந்த மாமியாரின் மடியில் வைத்தாள்.
சுலோச்சனா மானசாவை கேள்வியாக பார்த்தாள். “யாரும்மா நீ?” எனக் கேட்டாள்.
“ப்ரீத்தியோட பிரெண்ட் அன்ட் சிஸ்டர்..” என்றாள்.
இந்த பெண்மணி இவளை ஆச்சரியத்தோடு பார்த்தாள். “ப்ரீத்தி எதுவும் சொல்லல..” என்று முணுமுணுத்தாள்.
குழந்தையின் கன்னம் வருடியவள் “என் பேத்திக்கு பிறக்கும்போதே இப்படியொரு சோதனை..” என்று புலம்பினாள்.
குழந்தை பசிக்கு அழுதது. இவள் இடுப்பில் சொருகி வைத்திருந்த பால்டப்பாவை எடுத்து நீட்டினாள்.
பணிப்பெண் ஒருத்தி வந்து குழந்தையை தூக்கினாள்.
“நானி எப்ப வருவாங்க?” எனக் கேட்டாள் சுலோச்சனா.
“சொல்லி இருக்கேன் மேடம். இன்னைக்கு நைட் இல்லன்னா நாளைக்கு காலையில் வந்துடுவாங்க..” என்று சொன்ன அந்த பணிப்பெண் குழந்தையை உள்ளே தூக்கி போனாள்.
மானசாவின் விழிகள் அந்த பெண்மணியை பின்தொடர்ந்தது.
குழந்தை அழுதாள். இவளுக்கு கையில் ஏந்தி தாலாட்டு பாட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவ்விடத்தில் முடியவில்லை.
ப்ரீத்தியை பார்க்க தீனாவின் உறவினர்கள் நிறைய பேர் வந்தார்கள்.
ப்ரீத்தியின் உடம்பு முறையாக எரிவூட்டப்பட்டது. தீனா கண்ணில் கூட எந்த கவலையும் இல்லாமல் கொள்ளி வைத்திருந்தான்.
மானசா ரோபோட் போல நின்று எரியும் சிதையை பார்த்தாள்.
உள்ளம் அழுது ஆர்பாட்டம் செய்தது. வெளியே எதையும் காட்ட முடியவில்லை.
உணர்வுகள் இறந்து விட்டது போல் வலி. கண்ணீரை வெளியேற்றும் சுரப்பிகளை தவிர வேறு எந்த விசயமும் வேலை செய்யவில்லை.
அவள் பிறந்த அதே நாளில் பிறந்து, இத்தனை ஆண்டுகளாக உடன் வளர்ந்த ஒருத்தி இன்று சாம்பலாக போய் விட்டாள். இவளால் இதய வலியை தாங்க முடியவில்லை. இதயத்தின் வெறுமையையும் ஏற்க முடியவில்லை.
சிதையில் இறங்கி விடு என்றது மனம்.
இவள் தன்னை மறந்து சிதையை நோக்கி நடக்க, யாரோ அவசரமாக அவளின் கையை பிடித்தார்கள்.
உணர்ச்சிகள் இல்லாத முகத்தோடு திரும்பி பார்த்தாள். தீனா நின்றிருந்தான். மற்ற அனைவரும் அங்கிருந்து கிளம்பி கொண்டிருந்தார்கள்.
வெட்டியான் மட்டும் அங்கே இருந்தார்.
இவள் தீனாவை குழப்பமாக பார்த்தாள். அவன் ஏன் தன் கையை பிடித்தான் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு தன்னிலை மறந்து இருந்தாள்.
“போகலாம்..” என்றவன் அவளை தன்னோடு இழுத்து போனான்.
இவள் சரி என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் அவனோடு சென்றாள்.
அவளின் அப்பா தன் காரில் ஏறினார். அம்மா மகளை தேடினாள். இவளை கண்டு அருகில் வந்து கைப்பிடித்தாள். தீனா அந்த கையை விட்டு விட்டான்.
அம்மா மானசாவை தன்னோடு அழைத்துப் போனாள்.
தீனாவின் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டுக்குள் ஏற்றி வைத்திருந்த விளக்கை வாசலில் இருந்தபடி வணங்கினார்கள்.
“கிளம்பலாமா?” என்றார் அப்பா.
அம்மா சரியென தலையாட்டி மகளின் கைப்பிடித்து இழுத்து போனாள். மானசாவின் பார்வை அந்த வீட்டின் மீதே இருந்தது.
வீட்டுக்கு வந்த பிறகு மூன்று பேரும் குளித்தார்கள். அம்மா அழுதபடியே குளித்திருந்தாள். ஆனால் மானசாவுக்கு அந்த அழுகை கூட வரவில்லை.
இரவு நேரம்.
மானசா கட்டிலில் கவிழ்ந்து விழுந்தாள்.
“ப்ரீத்தி ஏன் இப்படி பண்ற? எனக்கு அவனை பிடிச்சிருக்கு. உனக்கு பிடிக்கலன்னு பிரேக்அப் பண்ண சொன்னா என்னடி நியாயம்?” இப்படிதான் ஆரம்பித்தது இவர்களின் சண்டை.
கல்லூரியில் ஒன்றாக படித்த மாணவன் ஒருவன் காதல் கடிதத்தை கொண்டு வந்து நீட்டவும் மானசாவும் வாங்கி விட்டாள்.
அவனை ப்ரீத்திக்கு பிடிக்கவில்லை. பிரேக்அப் செய்ய சொன்னாள். இவள் செய்யவில்லை. அவள் வீட்டை விட்டே கிளம்பி விட்டாள்.
அவள் வீட்டை விட்டு சென்ற ஒரே வாரத்தில் மானசா தன் காதலை பிரேக்அப் செய்து விட்டாள். ஆனால் ப்ரீத்தியிடம் அதை பற்றி சொல்லவில்லை. சண்டை போட்டு சென்ற அவளே வந்து பேசட்டும் என்று விட்டு விட்டாள்.
நடந்த அனைத்தும் நடந்து முடிந்து விட்டன. இப்போது இவளின் எண்ணம் முழுக்க ப்ரீத்தியின் குழந்தையிடமே இருந்தது.
சின்ன குழந்தை. அவளை அந்த வீட்டு மனிதர்கள் பார்த்துக் கொள்வார்களா? ப்ரீத்தியின் கணவன் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள மாட்டான். அது அவனின் முகத்தை பார்க்கும்போதே தெரிகிறது. ஆனால் அந்த குழந்தை..
இவள் தன் அறையை விட்டு ஓடினாள்.
பூரணி தன் கணவனுக்கும் மகனுக்கும் இரவு உணவை பரிமாறிக் கொண்டிருந்தாள்.
“அம்மா.. நாம போய் ப்ரீத்தியோட குழந்தையை வாங்கி வந்துடலாமா?” எனக் கேட்டாள்.
அம்மாவும் அப்பாவும் இவள் புறம் பார்த்தார்கள்.
“அவங்க ஒரு சாதாரண குடும்பமாக இருந்து நாம் போய் கேட்டா குழந்தையை தருவாங்க. ஆனா அவங்க பெரிய பேமிலி. நமக்கு கேட்க கூட தகுதி இல்ல..” என்றாள் அம்மா.
ப்ரீத்தியை தன் மகளாக பார்த்த பூரணிக்கு குழந்தையும் தனது பேர குழந்தையாகதான் தோன்றியது.
“இந்த உலகத்துல தகுதி பார்த்து பேசணும். இல்லன்னா ரொம்ப தப்பா நடந்துடும்..” என்றார் அப்பா.
இவள் புரிந்துக் கொண்டதாக தலையாட்டி விட்டு தன் அறைக்குள் புகுந்து மீண்டும் அதே போல் கவிழ்ந்துப் படுத்தாள்.
தீன குணாளன் தன் அம்மாவின் அறைக்கு வந்தான். மருமகள் இறந்த துக்கத்தில் இருந்தாள் சுலோச்சனா. ஏற்க முடியாத மரணம் அது.
இவள் மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவளின் வீல் சேருக்கு முன்னால் வந்து தரையோடு மண்டியிட்டு அமர்ந்தான் தீனா.
அம்மா அவனின் தலையை வருடினாள். மகன் தன் மனைவி இருந்த துக்கத்தில் இருக்கிறான், இவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தவித்தாள். உள்ளுக்குள் உடைந்தாள்.
அவன் அந்த கவலை இல்லாமல் “எனக்கு ப்ரீத்தியோட சிஸ்டரை பிடிச்சிருக்கும்மா. லவ்ன்னு நினைக்கிறேன். நான் அவளை கல்யாணம் பண்ணிக்கட்டுமா?” எனக் கேட்டான்.
சாய்ந்து அமர்ந்திருந்த சுலோச்சனா அதிர்ச்சியோடு நேராக அமர்ந்தாள்.
“என்ன சொன்ன?” எனக் கேட்டாள்.
“அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கா. அவளை பார்க்கும் போதெல்லாம் ஹார்ட் ஒரு மாதிரி துடிக்குது. ஐ வாண்ட் ஹேர். ஐ நீட் ஹேர்..” என்றவனின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறையை தந்தாள் சுலோச்சனா.
இவன் திகைப்போடு அம்மாவை பார்த்தான்.
“உன் பொண்டாட்டி இன்னைக்கு காலையில் செத்திருக்கா. ஒருநாள் கூட முழுசா முடியாம நீ இன்னொரு பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்ற. உனக்கு வெட்கமா இல்லையா?” என்று சீறினாள்.