18. சிந்தையில் சிதையும் தேனே..!

4.9
(11)

அத்தியாயம் 18

காலை பொழுது இனிதாக கதிரவன் ஒளி பிரகாசிக்கும் வகையில் அழகாய் புலர்ந்தது.

இருவரும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தொலைபேசி அழைப்பு மணி ஒலிப்பது போல சத்தம் கேட்டது.

முதலில் அவ்வொலி கேட்டு கண்விழித்த காயத்திரி ‘ஏதோ புதிய வகையான ரிங்டோனாக உள்ளதே இது அவருடைய ஃபோனின் ரிங்டோன் இல்லையே..!’ என்று சந்தேகத்துடன் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தார்.

அருகில் இருந்த மேசையில் அந்த தொலைபேசி சத்தமிட்டு கொண்டே இருந்தது.

‘இது அவருடைய தொலைபேசி இல்லையே யாருடையதாக இருக்கும் சரி எடுத்து தான் பார்ப்போமே..!’ என்று தொலைபேசியில் கையில் எடுக்க அந்நேரம் பார்த்து கருணாகரனும் நித்திரை கலைந்து விழித்துக் கொண்டார்.

தொலைபேசியை அழுத்தி காதில் வைக்க கருணாகரனுக்கு திகைப்பூண்டை மிதித்தது போல இருந்தது. கட்டாயமாக இது கார்த்திகேயனின் அழைப்பாக தான் இருக்கும்.

நேற்று கருணாகரனின் தொலைபேசி கீழே விழுந்து உடைந்ததால் இரவு கார் விபத்து நடந்த இடத்தில் இருந்து வைத்தியசாலை திரும்பும் போது எதற்கும் உதவியாக இருக்கட்டும் என்று கார்த்திகேயன் தனது தொலைபேசியை கருணாகரனிடம் கொடுத்து விட்டிருந்தான்.

இப்போது அழைப்பது அவனாகத்தான் இருக்கும் என்று நன்கு தெரியும். காயத்ரியிடம் ஏதாவது உளறி விட்டான் என்றால் என்ன செய்வது என்று தெரியாமல் கருணாகரனின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

யாருடைய தொலைபேசி என்று புரியாமல் எடுத்து காதில் வைத்த காயத்ரி எதுவும் பேசாமல் இருக்க,

“ஹலோ சார் நான் கார்த்திகேயன் பேசுறேன் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சு அது நம்ம நிவேதா தான்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க இங்க ரொம்ப சீரியஸா பிரச்சனை போய்கிட்டு இருக்கு நீங்க கொஞ்சம் வந்தீங்கன்னா நல்லா இருக்கும் நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு அதுக்கு நீங்கதான் சைன் பண்ணனும் ப்ளீஸ் சார் சீக்கிரமா வாங்க..” என்று கார்த்திகேயன் தொலைபேசி ஊடாக கூற காயத்ரிக்கு நிவேதா தான் என்று கார்த்திகேயன் சொன்னதிலிருந்து அதற்கு அப்புறம் கூறியது ஒன்றும் காதில் விழவே இல்லை.

செவிகள் இரண்டும் அடைத்தது போல் இருந்தது. உடனே காயத்ரியின் முகமாற்றத்தை கண்டு கொண்ட கருணாகரன் தொலைபேசியை வாங்கி காதில் வைத்து,

“கார்த்தி என்ன ஆச்சு..?”

“சார் இப்போ சொன்னேனே சார் நிவேதா தான்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க சில பேப்பர்ஸ்ல நீங்க சைன் பண்ணனும் சீக்கிரமா வாங்க சார்..” என்று கூறியதும் கருணாகரனுக்கு சித்தம் கலங்கியது.

அந்தப் பக்கம் இருந்து கார்த்திகேயன்,

“சார் சார்..” என்று கத்திக் கொண்டிருக்க,

கருணாகரன் அதிர்ச்சியுடன் துன்பம் சூழ,

“கா..கார்த்தி நீ.. நீ.. இதுக்கு முன்னுக்கு பே…பேசுனது கா…காயத்ரி கூட..” என்று வார்த்தைகள் தந்தியடிக்க கூறியவர், அப்படியே திகைத்துப் போய் நின்றார்.

முன்னே இருந்த காயத்ரியின் குருதி அமுக்கத்தின் அளவு அதிவேகமாக அதிகரித்துக் கொண்டே இருந்தது.

“என்னங்க சொல்றான் கார்த்தி நீங்கதானே சொன்னீங்க நிவேதாவ 2 நாள்ல கண்டுபிடித்து  தந்திடுவாங்கன்னு அதுக்கு அர்த்தம் இதுதானா அப்போ நிவேதாவுக்கு என்ன ஆச்சு நேத்து எங்க போனீங்க என்கிட்ட என்னத்த மறைக்கிறீங்க என்ன நடந்துச்சு சொல்லுங்க..? என்ன நடந்துச்சு..? என்ன நடந்துச்சு ப்ளீஸ் சொல்லுங்க..” என்று காயத்ரி மீண்டும் மீண்டும் கேட்க,

கருணாகரனுக்கோ நிலைமை கை மீறி போவது நன்றாக விளங்கியது. எவ்வாறு காயத்ரியை சமாதானப்படுத்துவது என்று புரியாமல் நிலைமை கைமீறிப் போவது நன்றாக விளங்கியது.

“காயுமா நீ கொஞ்சம் பொறுமையா இரு நான் என்னனு உனக்கு விளக்கமா சொல்றேன்..” என்று அருகில் சென்று அவரது இரு கைகளையும் பிடித்துக் கேட்க, காயத்ரியோ படு ஆக்ரோஷமாக கோபத்துடன் அவரது கோர்ட்டை கொத்தாகப் பிடித்து,

“சொல்லுங்க என்னோட மகளுக்கு என்ன ஆச்சு சொல்லுங்க கார்த்தி சொல்றது உண்மையா..?  சொல்றது உண்மையா..? சொல்லுங்க எனக்கு இப்போ தெரிஞ்சாகணும் நீங்க சொல்ல மாட்டீங்கல்ல நீங்க சொல்லத் தேவையில்லை நானே போய் தெரிஞ்சுக்கிறேன்..” என்று கட்டிலில் இருந்து காயத்ரி இறங்க அவருக்கு உடல் நிலையை பரிசோதிப்பதற்கு பொருத்தப்பட்டு இருந்த மருத்துவ சாதனங்கள் அனைத்தும் நகர விடாமல் காயத்ரியைக் கட்டிப் போட்டது.

உடனே அனைத்தையும் பிய்த்து எறிந்த காயத்ரியின் கையில் இருந்து குருதி வெள்ளமாக ஓட அதனைப் பார்த்து தடுக்க வந்த கருணாகரனை, தள்ளிவிட்டு படு வேகத்துடன் அவ்வறையை விட்டு வெளியேறினார்.

அனைத்தையும் மூடி மறைத்து தன்னிடம் பொய் வேடம் போட்டுவிட்டார் என்று கொதித்தெழும் சினம்  காயத்ரிக்கு கருணாகரன் மேல் ஏற்பட்டது.

வெளியேறி இரண்டு அடி எடுத்து வைத்தவர் அப்படியே அறை வாசலிலேயே சரிந்து மயங்கி விழுந்தார்.

“டாக்டர்.. டாக்டர்..” என்று அந்த வைத்தியசாலையே அதிரும் வண்ணம் கத்திக் கூச்சலிட்டார் கருணாகரன்.

அவரது இதயமே உடைந்து சிதறியது போல் இருந்தது. உடனே காயத்ரியை கையோட அனைத்துத் தூக்கிக்கொண்டு அறையின் உள்ளே மெத்தையின் மேல் போட்டுவிட்டு அருகில் இருந்த தாதியரின் அறைக்குள் புகுந்து மிகவும் பதற்றத்துடன்,

“காயத்ரி மயங்கி விழுந்துட்டம்மா சீக்கிரமா வாங்க..” என்று கூறவும் உடனே வந்து பார்த்த தாதி அதிர்ந்து போனார்.

காயத்ரிக்கு பொருத்தி இருந்த அனைத்தும் கலைந்து எரியப்பட்டதை பார்த்ததும், “என்ன சார் இதெல்லாம் இப்படி கிடக்கு யார் இப்படி பண்ணினது..” என்று மிகவும் பதற்றத்துடன் கேட்க,

“காயத்திரி தாமா இப்படி பண்ணினது சீக்கிரமா ஏதாவது பண்ணுமா..” என்று கூற அந்த தாதியோ அருகில் இருந்த அவசர அழைப்பு மணியை அழுத்த உடனே அவ்விடத்திற்கு வைத்தியநாதன் வந்து சேர்ந்தார்.

“ஓ காட் வட் ஹப்பண்ட்..?” என்று கூறியவர், நின்று நிதானமாக விளக்கம் கேட்க நேரமில்லாமல் துரித கதியில் சிகிச்சையைத் தொடங்கினார்.

கருணாகரனை அறையில் வெளியே அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் புதிய உபகரணங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு உடனே காயத்ரிக்கு அதனை பொருத்த காயத்ரியின் இதயத்துடிப்பின் அளவோ அதிகரித்த வண்ணமே இருந்தது.

பல தடவை முயற்சித்துப் பார்த்தும் அவரது இதயத்துடிப்பு குறையவே இல்லை. சிகிச்சை அளித்து களைத்துப் போன வைத்தியநாதன் சோர்ந்த முகத்துடன் வெளியே வந்தார்.

அவரின் வருகையை எதிர்பார்த்து இருந்த கருணாகரன்,

“என்ன டாக்டர் காயத்ரிக்கு இப்போ எப்படி இருக்கு..? நான் போய் பார்க்கலாமா..?” என்று அவரது சோர்ந்த வதனம் பார்த்து வினவ,

“மிஸ்டர் கருணாகரன் நீங்க என்ன விஷயத்த அவங்க கிட்ட சொன்னீங்க நான் உங்ககிட்ட என்ன சொன்னனான் அவங்க மனசு கவலைப்படுற மாதிரியும் அதிக சந்தோஷப்படுற மாதிரி எதையும் சொல்ல கூடாதுன்னு உங்களுக்கு சொன்னானா இல்லையா..?” என்று வைத்தியநாதனும் கோபம் கொள்ள,

“நான் மறைக்கத்தான் முயற்சி செய்தேன் ஆனா..” என்று வார்த்தைகள் முட்ட,

“கருணாகரன் உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கவே இல்லை உங்களுடைய கேயார்லசால இப்போ  அவங்க எவ்வளவு சீரியஸா இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா

அவங்கள எப்படியாவது நார்மல் நிலைக்கு கொண்டு வரணும் ஏதாவது பண்ணுங்க உங்களுக்கு தான் தெரியும் நீங்க தான் அவங்களோட இந்த நிலைக்கு காரணம் என்னால முடிந்ததை நான் பண்ணிட்டேன் இன்னும் இவங்களுக்கு ஹாட் பீட் ரேட் அதிகரித்துக் கொண்டே போச்சுன்னா இனி எதுவுமே என்னோட கைல இல்ல..” என்று வைத்தியநாதன் கண்டிப்புடன் கூறி அவ்விடத்தை விட்டு செல்ல,

கருணாகரனுக்குப் பித்துப் பிடித்தது போல இருந்தது. காயத்ரியின் இந்த நிலைமைக்கு காரணம் நீங்கதான்னு என்னப் பார்த்து டாக்டர் சொல்லிட்டு போறாரே..! நானா என்னோட பொண்ணோட… நான் தான்… என் காயத்ரியின் நிலைமைக்கும் நான் தான் காரணம் எல்லாத்துக்கும் நான்தான் காரணம் ஏன் இப்படி என்ன வஞ்சிக்கிற கடவுளே..!” என்று பைத்தியம் பிடித்தவர் போல புலம்பியபடி நடந்து வர எதிர்புறத்தில் மிக வேகமாக சுவர் பக்கம் ஒரு ஸ்ட்ரெச்சரில் யாரோ ஒருவரை விரைவாக தள்ளி கொண்டு வந்தனர்.

அதற்கு வழி விடுவதற்கு அவர் சுய நினைவில் இருந்தால் தானே. அவர் பாட்டிற்கு மனதில் உள்ள சோகங்களை எல்லாம் வாய் வழியாக புலம்பிக்கொண்டே வந்து கொண்டிருந்தார்.

அந்த ஸ்ட்ரெச்சரை தாதியர்கள் தள்ளிக் கொண்டு வர கருணாகரனும் வழி விடாமல் நடந்து வர இவர்கள்,

“வழி விடுங்க.. வழி விடுங்க… சார் வழி விடுங்க..” என்று கூறும் வார்த்தைகள் அவரது காதில் விழவே இல்லை.

இறுதியில் அந்த ஸ்ட்ரக்சர் அவர் மீது மோதிய பின்பே அவருக்கு சுயநினைவு வந்தது. அது அருகில் வந்து மோதியது சில விநாடிகள் தான்.

ஆனால் அந்த நொடி மனதில் ஏதோ புதுவித சலனம் ஏற்பட்டது. அந்த வினாடி இதயம் நின்று துடித்தது போன்று ஒரு மாயை தோன்றியது.

கருணாகரன் என்னவென்று தெரியாமல் திரும்பிப் பார்த்தார்.

மறுபடியும் பார்ப்பதற்கும், நம்புவதற்கும் அவரது கண்கள் உறைந்தது போல் உருவத்தின் மீது இருந்து இமைக்க மறந்து நகராமல் அடம் பிடித்தன.

அவரது முகத்தில் இருந்த வலி, அப்படியே நகராமல் ஸ்ட்ரெச்சரை இறுகப் பற்றியபடி நின்றுவிட்டார்.

கால்கள் நடுங்கின. இதயம் உடைந்து போனது போல.

அந்த ஒரு நிகழ்வு, அவன் வாழ்க்கையின் எல்லா தருணங்களையும் விழுங்கியது.

அந்த நொடியில்தான் கருணாகரனின் மூச்சு மெதுவாக வெளிவந்தது.

“நி..வே…தா…” என உதடுகள் ஆழமாக அசைந்தன. ஆனால் குரல் இல்லை.

மூடிய கண்களில் வழிந்த கண்ணீர் சொன்னது. ‘நான் என் மகளை மீண்டும் கண்டேன்..’

கருணாகரனுக்கு அப்போதுதான் புரிந்தது. வாழ்க்கையின் மிக நெருக்கமான தருணங்கள் சில நேரங்களில் எப்படியும் திட்டமிட முடியாத, ஆனாலும் வாழ்நாள் முழுக்க மனதிலேயே பதிந்துவிடும்.

 

அப்படின்னா அங்கே காரில் இறந்து கிடப்பது யார்..?

கருணாகரன் பார்த்தது உண்மையிலேயே நிவேதா தானா..?

அடுத்த பதிவில் பார்ப்போம்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!