சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 53
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
அடுத்த நாள் விடியற்காலையில் சுந்தர் புரண்டு படுக்க விழித்த சுந்தரி தன் கையை அவன் கன்னத்திற்கு அடியிலிருந்து அவன் விடுவித்திருந்ததை பார்த்தாள்..
மெதுவாக ஓசை எழுப்பாமல் எழுந்து தன் அறைக்கு வந்தாள் சுந்தரி..
நான்கு மணி அளவில் தன் அறைக்கு வந்து தூங்கியவள் களைப்பினாலும் இரவு வெகு நேரம் விழித்திருந்ததினாலும் காலை விடிந்ததை கூட அறியாமல் எப்போதும் ஐந்து மணிக்கு எழுந்திருப்பவள் ஆறரை மணி ஆகியும் உறங்கிக் கொண்டிருந்தாள்..
அவளை ரதியும் எழுப்ப மனம் இல்லாமல் சமையல் அறைக்கு சென்று மேகலாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தாள்..
காலை எழுந்தவுடனே கீழே வந்த சுந்தரிடம் ரதி “காப்பி கலந்து கொடுக்கிறேன்..” என்று சொல்ல
“இல்லை.. எனக்கு எதுவும் வேண்டாம்.. நான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் கார்மெண்ட்ஸ் போகணும்.. நான் கிளம்புறேன்..” என்று சொல்லி அடுத்த அரை மணி நேரத்திற்குள் எதுவும் சாப்பிடாமல் கார்மெண்ட்ஸ்க்கு கிளம்பி சென்றான்..
சுந்தரி எழுந்தவுடன் ரதி மேகலா நடராஜன் மூவரும் அவள் மனதை மாற்ற முயன்று கொண்டிருந்தனர்.. ஆனால் அவளோ அவர்கள் பேசியதை எல்லாம் காதில் வாங்காமல் கடனுக்காக உண்டு விட்டு கல்லூரிக்கு கிளம்பி சென்று விட்டாள்..
கல்லூரிக்கு சென்ற சுந்தரியின் முகத்தை கண்ட வனிதா அவள் முகம் சோர்ந்து இருப்பதை பார்த்து ஏதோ பிரச்சனை என்று உணர்ந்தாள்..
“என்னடி ஆச்சு? நாங்க வந்த பிறகு ஏதாவது பிரச்சனையா?” என்று அவளைக் கேட்க சுந்தரி நிகழ்ந்த அனைத்தையும் வனிதாவிடம் மறைக்காமல் சொன்னாள்..
அவளுக்கும் ஆறுதலுக்காக தன் தோழியின் தோள் தேவைப்பட்டது..
“ஏண்டி நீ இப்படி இருக்க? கிடைச்ச நல்ல வாழ்க்கைய இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்கிறியே.. சொன்னா கேளு சுந்தரி.. நீ சுந்தரோடயே இரு.. நீயே அந்த ஷாலினிய பத்தி சொல்லி இருக்கே என்கிட்ட.. அவதான் ஒரு மாதிரி திமிர் பிடிச்ச கேரக்டர்னு உனக்கு தெரியும் தானே..? அன்னைக்கு அந்த மாதேஷயும் நம்ப ராகினி தேவி மேடமோட பொண்ணோட பார்த்ததா சொன்னே.. அந்த ஆளும் சரியில்ல.. அவங்க பேசறத எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு நீ ஏண்டி உன் வாழ்க்கையை கெடுத்துக்குற..” என்று வனிதா கேட்க
“இத பத்தி நிறைய பேசியாச்சு.. வனிதா.. இது பத்தி நாம பேச வேண்டாமே..” என்றாள்..
“சரி.. அதுக்கப்புறம் உன் இஷ்டம்..” என்றாள் வனிதா..
அதன் பிறகு ராகினி தேவியின் கடைக்கு போய் வேலை செய்துவிட்டு இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பினாள்.. சுந்தரி..
அதற்குள் சுந்தர் வீட்டுக்கு வந்து அவன் அறைக்கு சென்று படுத்துவிட்டான் என்று ரதி சொல்லவும் மெல்ல போய் சுந்தரின் அறையை எட்டிப் பார்த்தாள்..
இன்றும் அவன் முந்தைய நாள் படுத்திருந்ததை போலவே படுத்திருக்க அவன் அருகில் சென்று அவனை நேராக படுக்க வைக்க அவன் கையை பிடித்து தூக்க அவன் கையோ அனலாய் சுட்டது..
சட்டென தன் உள்ளங்கையை அவன் நெற்றியில் வைத்து பார்த்தவள் அவன் உடல் அனலாய் கொதிக்க அவன் கன்னத்தில் கை வைத்து “சுந்தர் சுந்தர்.. உங்களுக்கு ஜுரம் அடிக்குது.. டாக்டர் வீட்டுக்கு போலாம் வாங்க..” என்று சொல்லி பலமுறை தட்டி எழுப்ப முயன்றும் அவன் எழாமல் இருக்கவே அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது..
வேகமாக அங்கிருந்து எழுந்து கீழே ஓடியவள் மேகலாவின் அறையின் கதவை சென்று தட்டினாள்..
சுந்தரி பதட்டமாய் பலமுறை கதவினை தட்டி விட மேகலாவும் படபடப்புடன் ஓடி வந்து கதவை திறந்து “என்ன சுந்தரி.. என்ன ஆச்சு?” என்று கேட்க
“அத்தை அவருக்கு உடம்பு அனலா கொதிக்குது அத்தை.. எழுப்பினாலும் எழுந்துக்க மாட்டேங்குறாரு..” என்று சொல்ல
அவர்கள் அவன் அறைக்கு செல்லவும் ரதியையும் எழுப்பி கூட்டிப் போனாள் சுந்தரி..
மேகலா சுந்தரின் அருகில் சென்று தொட்டு பார்த்தவள் “என்னங்க.. இப்படி கொதிக்குது..? புள்ளை அசைய கூட மாட்டேங்குறான்.. மயக்கமா இருக்கிற மாதிரி இருக்கே..” என்றவள் திரும்பி “கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா சுந்தரி..” என்று சொல்ல
ஓடி சென்று சிறிது தண்ணீரை கொண்டு வந்த சுந்தரி அவன் முகத்தில் தண்ணீரை தெளித்து கண்ணை துடைத்து விட்டாள்..
அதன் பிறகும் அவன் கண்ணை திறக்கவில்லை..
ஆனால் அவனுடைய வாய் மட்டும் புலம்ப ஆரம்பித்தது..
“சுந்தரி.. என்னை விட்டு போயிடாத சுந்தரி.. வேணாம் சுந்தரி.. என்னால நீ இல்லாம வாழவே முடியாது சுந்தரி..” என்று அவன் சொன்னதை கேட்டு சுந்தரியின் கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது..
அதன் பிறகு கார் ஓட்டுநரின் உதவியுடன் சுந்தரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்..
சுந்தரை காரில் அமர வைத்து தன் தோளில் அவன் தலையை சாய்த்து கொண்ட சுந்தரி ரதியை வீட்டை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நடராஜனுடனும் மேகலாவுடனும் மருத்துவமனைக்கு சென்றிருந்தாள்..
அங்கே மருத்துவர் சுந்தரை பரிசோதித்து விட்டு அவனுக்கு வேண்டிய சிகிச்சை செய்து விட்டு வெளியே வந்தவுடன் சுந்தரி அவர் அருகில் போய் நிற்க “அவரு சாப்பிட்டு எவ்வளவு டைம் ஆகுது..? கடைசியா எப்ப சாப்டாரு..?” என்று கேட்டார்..
சுந்தரியும் காலையில் தான் சிற்றுண்டி சாப்பிட்டு கிளம்பி சென்றவள் கல்லூரியில் வனிதாவின் வற்புறுத்தலில் கேண்டீனில் பேருக்காக எதையோ சாப்பிட்டு இருந்தாள்..
அதேபோல் சுந்தரும் சாப்பிட்டு இருப்பான் என்ற ஊகத்திலேயே இருந்திருந்தாள் அவள்..
ஆனால் மருத்துவர் இப்படி கேட்டவுடன் தான் அவளுக்கு ஒரு வேளை அவன் சாப்பிடவே இல்லையோ என்று தோன்றியது..
திருமணம் நடந்த அன்று மதியம் சாப்பிட்டதோடு சரி.. அதன் பிறகு அவன் வீட்டில் சாப்பிடவே இல்லை என மேகலா கூறினாள்..
“என்ன அத்தை.. இப்படி சொல்றீங்க..? அவர் வேண்டாம்னா விட்டுடுவீங்களா? வற்புறுத்தி சாப்பிட வைக்க வேண்டாமா?” என்று மேகலாவை கோவித்தாள் சுந்தரி..
“ஏன் சுந்தரி.. உனக்கு தான் அவன பத்தி தெரியும் இல்ல..? நாங்கல்லாம் சொன்னா கேட்டுடுவானா..? காலையில ரதி காபி கலந்து கொடுக்கிறேன்னு சொன்னதுக்கு எனக்கு எதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டான்.. நாங்க எல்லாம் ஒருவேளை ஆபீஸ்ல சாப்பிட்டு இருப்பான்னு நினைச்சோம்.. எங்களுக்கு என்ன தெரியும் நாள் முழுக்க பட்டினி கெடப்பான்னு.. நைட்டு வந்தவன் நேரா ரூமுக்கு போய் படுத்துட்டான்.. நான் போய் சாப்பிட வான்னு கூப்பிட்டப்போ நான் வெளியில சாப்பிட்டு வந்துட்டேன்னு தான் என்கிட்ட சொன்னான் சுந்தரி..” என்றார் மேகலா..
அதற்குள் அந்த மருத்துவர் “கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க.. அவர் கையில வேற அடிபட்டு இருக்கு.. அது கொஞ்சம் செப்டிக் ஆயிருக்கு.. அதனாலதான் ஃபீவர் வந்திருக்கு அவருக்கு.. நான் அதுக்கு மருந்து போட்டு இருக்கேன்.. இப்போ குளுக்கோஸ் கூட ஏத்தி இருக்கோம்.. ஆனா அவருக்கு சாலிடா ஏதாவது சாப்பாடு சாப்பிட்டாதான் உடம்புல இருக்குற வீக்னெஸ் போகும்.. நீங்க அவருக்கு ஏதாவது சாப்பாடு கொடுங்க..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனார் மருத்துவர்..
நடராஜன் “சரி.. நான் போய் கேண்டீன்ல ஏதாவது வாங்கிட்டு வரேன்.. அவனுக்கு கொடுக்கலாம்..” என்று சொல்லிவிட்டு மருத்துவமனையின் கேன்டீனுக்கு சென்று அங்கிருந்து இட்லி வாங்கி வந்தார்..
சுந்தர் குளுக்கோஸ் ஏறியதில் கண் விழித்திருந்தான்..
சுந்தரி உள்ளே சென்று “நேத்தில இருந்து நீங்க எதுவுமே சாப்பிடலையா?” என்று கேட்க
“எனக்கு பசிக்கல” என்றான் சுந்தர்..
“பசிக்கலையா..? அது எப்படி பசிக்காம போகும்..? முந்தா நேத்து மதியம் சாப்பிட்ட சாப்பாட்டோட இருக்கீங்க.. கைல வேற அடிபட்டு இருக்கு.. எதுக்காக இப்படி சாப்பிடாம உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கறீங்க..? இவ்ளோ பெரிய ஆளா வளர்ந்து இருக்கீங்க..? டைமுக்கு சாப்பிடணும்னு கூட உங்களுக்கு தெரியாதா? குழந்தை மாதிரி சாப்பிடாம அடம் பிடிக்கிறீங்க?” என்று அவனை திட்டினாள் அவள்..
அவனோ குனிந்து கொண்டு அவள் முகத்தை பார்க்காமல் “நான் சாப்பிட்டா உனக்கு என்ன? சாப்பிடலைன்னா உனக்கு என்ன? இன்னும் கொஞ்ச நாள்ல நீ என்னை விட்டு போக போற? அப்புறம் நான் சாப்பிட்டேனா சாப்பிடலையான்னு உனக்கு தெரிய போகுதா? நீதான் அன்னைக்கே என்னை விட்டு போறேன்னு சொன்னே இல்ல? அப்படி போயிருந்தேன்னா இப்ப நான் சாப்பிடாம இருந்து செத்து போயிருந்தா கூட..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் வாயை தன் கையால் மூடினாள் சுந்தரி..
” என்ன பேச்சு இது? அத்தை மாமா எல்லாம் இருக்காங்க.. அவங்களுக்கு எவ்ளோ மனசு கஷ்டமா இருக்கும் இந்த வார்த்தையை கேட்டா..” என்று அவள் சொல்ல
“அப்போ அவங்களுக்கு தான் கஷ்டமா இருக்குமா..? நான் செத்துப் போறேன்னு சொன்னா உனக்கு கஷ்டமாவே இல்லையா சுந்தரி?” என்று கேட்டான்..
சட்டென்று அவள் கண்கள் பனிக்க.. அதைப் பார்த்தவனுக்கு அந்த கேள்வியை தான் கேட்டிருக்காமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது..
“சரி போனது போகட்டும்.. இந்த இட்லிய சாப்பிடுங்க..” என்று ஒரு துண்டு இட்லியை பிய்த்து சாம்பாரில் தோய்த்து அவன் வாய்க்கு அருகில் அவள் எடுத்துப் போக அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்..
“எனக்கு வேண்டாம்..” என்று அவன் சொல்ல
“என்ன.. வேண்டாமா? டாக்டர் நீங்க ஏதாவது சாப்பிட்டே ஆகணும்னு சொல்லி இருக்காரு..” என்றாள் அவள் குழந்தையை உண்ண வைக்க மிரட்டும் அன்னையாக..
“யாருக்காக நான் நல்லா சாப்பிட்டு இப்ப ஆரோக்கியமா இருக்கணும்.. ஒன்னும் தேவை இல்ல.. என்னால சாப்பிட முடியாது.. அப்படியே எதாவது ஆனா ஆகட்டும்..” என்று அவன் சொல்ல…
“ஓ அப்படியா.. சரி.. அப்படின்னா நான் எதுக்கு உங்க வீட்ல இருக்கணும்.. விவாகரத்து கிடைக்கிற வரைக்கும் நான் எதுக்கு அங்க வெயிட் பண்ணனும்..? நானும் ரதியும் எங்க வீட்டுக்கு போறோம்..” என்று சொல்லி எழுந்தவுடன் அவள் கையை பிடித்து அமர வைத்தான் சுந்தர்..
ஏட்டிக்கு போட்டியாக இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மேகலாவும் நடராஜனும் எப்படியும் இருவரும் சண்டை போட்டு ஒரு வழிக்கு வந்து சமாதானம் ஆகி விடுவார்கள் என்று வெளியே சென்று விட்டார்கள்..
அதன் பிறகு சுந்தரி இட்லியை எடுத்து அவனுக்கு வாயில் கொடுக்க முதலில் வாயை திறந்தவன் பிறகு வாயை மூடி அவளை ஏமாற்ற அவள் அவனை முறைத்தாள்..
“நான் இந்த இட்லி சாப்பிடணும்னா ரெண்டு கண்டிஷன் இருக்கு..” என்றான் அவன்..
“என்ன கண்டிஷன்?” என்பது போல் அவள் பார்க்க “முதல் கண்டிஷன் நம்மளுக்கு டிவோர்ஸாகி நீ என்னை விட்டு போற வரைக்கும் நீ என் ரூம்ல என் கூட தான் இருக்கணும்..” என்று அவன் சொல்ல
“முடியாது..” என்றாள் அவள்..
“ஏன் அவசரப்பட்டு முடியாதுன்னு சொல்ற? ரெண்டு கண்டிஷனும் கேட்டுட்டு அதுக்கப்புறம் மொத்தமா முடியாதுன்னு சொல்லு..” என்று சொல்லிவிட்டு
“இரண்டாவது கண்டிஷன் உன்னை தினமும் உன் காலேஜுக்கு கொண்டு போய் நான் தான் விடுவேன்.. அதே மாதிரி உன் கடையிலிருந்து நான் தான் வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்.. இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் ஓகேன்னா சொல்லு.. நான் இந்த இட்லியை சாப்பிடுறேன்..” என்றான் அவன்..
” ஓஹோ.. நீங்க இந்த இட்லியை சாப்பிடவே வேண்டாம்.. நான் ரதியோட கிளம்பி எங்க வீட்டுக்கு போறேன்..” என்று அவள் சொல்ல
“தாராளமா போ.. ஆனா போறதுக்கு முன்னாடி நான் கட்டின தாலியை கழட்டி என் கையில குடுத்துட்டு போ.. டிவோர்ஸ் ஆகுற வரைக்கும் நான் உன் புருஷன்தான்.. ஒரு புருஷனா நான் உனக்கு எதுவுமே பண்ணக்கூடாதுன்னா எதுக்கு உன் கழுத்துல சும்மா அந்த தாலி தொங்கிட்டு இருக்கணும்.. அத கழட்டி கொடுத்துட்டு நீ பாட்டுக்கு போயிட்டே இரு..” என்று அவன் சொல்ல அப்படியே உறைந்து நின்றாள் அவள்..
“என்ன.. பேச்சையே காணோம்.. இப்போ முடிவு உன் கையில தான்.. நீ இந்த ரெண்டு கண்டிஷனுக்கும் ஒத்துக்கிட்டு இந்த இட்லியை எனக்கு கொடுக்க போறியா..? இல்ல தாலிய கழட்டி கொடுத்துட்டு ரதியோட உங்க வீட்டுக்கு போக போறியா?” என்று அவன் கேட்க அப்படியே அமர்ந்தவள் இட்லி துண்டை எடுத்து அவன் வாயின் அருகே கொண்டு போனாள்..
அவன் புருவத்தை சுருக்கி அவளை கேள்வியாக பார்க்க
“உங்க கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துக்கிறேன்.. இட்லிய சாப்பிடுங்க..” என்று உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டே சொன்னவள் கையில் இருந்து இட்லியை உண்டவன் அவள் விரலையும் லேசாக கடித்துவிட
“அம்மா..” என்று கத்தினாள் அவனை முறைத்துக் கொண்டே..
“என்ன.. ரொம்ப வலிச்சிருச்சா? பரவால்ல வலிக்கட்டும்… என்னை விட்டுட்டு போறேன்னு சொல்ற இல்ல..? அதுக்கு தான் இது.. வேணும்னா நான் உனக்கு ஒரு துண்டு இட்லி ஊட்டுறேன்.. நீயும் பதிலுக்கு என் விரலை கடிச்சுக்கோ..” என்று அவன் சொல்ல
அதை கேட்டு நாணி சிரித்தவள் தலையை இடவலமாய் ஆட்டியபடி “உங்களை திருத்தவே முடியாது..” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவனுக்கு இட்லி ஊட்ட ஆரம்பித்தாள்..
அவனும் அன்னையிடம் சமர்த்தாக சாப்பிடும் பிள்ளை போல அவள் கொடுத்த இட்லியை வாயில் ஆவலோடு வாங்கி சாப்பிட்டான்..
“கொஞ்சம் சீக்கிரம் குடு சுந்தரி.. ரொம்ப பசிக்குது.. ரெண்டு நாளாச்சு சாப்பிட்டு..” என்று அவன் சொல்ல
“இத்தனை நேரம் என் கிட்ட கண்டிஷன் சொல்லும்போது இந்த பசி எல்லாம் எங்க போச்சாம்?” என்று அவன் கையிலே ஒரு அடி போட்டாள் சுந்தரி..
அன்று மதியம் மருத்துவமனையிலிருந்து சுந்தரை வீட்டுக்கு அனுப்பி விட அவனோடு வீட்டுக்கு வந்த சுந்தரி அவனுக்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்தாள்..
இரவு உணவு முடித்து இருவரும் சுந்தரின் அறைக்குள் செல்ல சுந்தரி அங்கு இருந்த சோஃபாவில் சென்று படுத்துக்கொள்ள “ஏன் அங்க படுத்துக்கற?” என்று கேட்டான் சுந்தர்..
“உங்க கண்டிஷன் என்ன? உங்க ரூம்ல படுத்துக்கணும்னு தானே.. உங்க கூட வந்து கட்டில்ல படுக்கணும்னு கிடையாது இல்ல.. நான் இங்கேயே படுத்துக்கிறேன்..” என்று சொல்லி அவள் அங்கேயே படுத்துக் கொள்ள அவனும் “சரி. ” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு படுக்க சென்றான்..
“சுந்தர் சார்.. ஒரு நிமிஷம்..” என்று சுந்தரி அழைக்க சார் என்ற அந்த அழைப்பு கொடுத்த வலியில் முகத்தை சுருக்கியவன் “என்ன?” என்பது போல் பார்க்க
“நாளைக்கு என்னை காலேஜ்ல கொண்டு விடுறதுக்கு முன்னாடி நம்ப டிவோர்ஸ் விஷயமா ஒரு வக்கீல போய் பாத்துட்டு போயிறலாம்..” என்றாள் சுந்தரி..