ஹாலில் அமர்ந்து காபி அருந்தி கொண்டிருந்த தாத்தா நேரத்தை பார்த்தார் மணி எட்டு..
“இவ்வளவு நேரம் சூர்யா தூங்க மாட்டானே” என்று எண்ணியவர் நேற்று தாமதமாக தூங்கியதால் இருவரும் இன்னும் எழுந்திரிக்கவில்லை போலும் என்று எண்ணிக் கொண்டு காபியை அருந்தி கொண்டிருந்தார்.
அந்த நேரம் தான் வேதவள்ளியின் அலறல் சத்தம் அவரின் காதை எட்டியது.
வேதவள்ளியின் முன்பு இப்படி ஒரு நிலையில் நாம் நிற்போம் என்று சூர்யா கனவில் கூட நினைத்தது கிடையாது.
சட்டென்று நழுவிச் சென்ற துண்டை எடுத்து கட்டியவனிற்கு அவள் மேலும் கொலைவெறி ஆத்திரம் எழுந்தது. அவள் தானே துண்டில் கையை வைத்து இழுத்து விட்டது. ஆனால் அவள் அப்படி நடந்து கொண்டதற்கு காரணம் நாம் தான் என்பதை வசதியாக மறந்து போய் விட்டான்.
ஆழ்ந்த நித்திரையில் இருப்பவளுக்கு தன் முகத்தில் அவ்வளவு நீரை ஊற்றினால் அவளும் என்ன தான் செய்வாள். மூச்சடைக்க திணறிப் போய் எழுந்தவள், பக்கத்தில் இருந்த துண்டை பிடித்து அதில் சற்று அழுத்தத்தை கொடுத்து எழுந்து அமர்ந்து விட்டாள்.
அதுவோ இப்படி நழுவி செல்லும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. முதலில் அவள் பிடித்தது அவனின் துண்டு என்பதே அவளுக்கு தெரியாது. அவள் தான் கண்களை திறக்கவே இல்லையே..
எதையோ பிடித்துக் கொண்டு எழுகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவளும் அப்படி செய்தாள். தன் அருகில் சூர்யா துண்டுடன் நின்றிருப்பதை பார்த்திருந்தால் அவள் நிச்சயம் இப்படி எல்லாம் செய்திருக்கவே மாட்டாள்.
பதட்டத்தில் நடந்தேறிய சம்பவம் தான் இது.. ஆனாலுமே, அவள் கண்விழித்ததும் முதலில் கண்ட காட்சி தனக்கு முன்னே ஆடைகள் இன்றி நின்றிருக்கும் சூர்யாவின் வெற்று உடலை தான்.
அவளுக்கு எப்படி இருக்கும்..
இதுவரை எந்த ஆண்டவனுடனும் அவள் நெருங்கிக் கூட பழகியது கிடையாது. அப்படி பட்டவளின் முன்பு அவன் இப்படி நிற்கவும் பயந்து கத்த தொடங்கி விட்டாள்.
இவளின் சத்தத்தை கேட்ட தாத்தா என்னவோ ஏதோவென்று பதறிப் போய் ஓடி வந்து அறை கதவை தட்டியவர், “சூர்யா என்ன ஆச்சு.. கதவை திற.. ஏன் அந்த பொண்ணு இப்படி கத்துது? கதவை திறப்பா” என்று பதட்டத்தோடு வேகமாக படபடவென கதவை தட்டினார்.
“ஸ்டுப்பிட்.. பைத்தியம்.. கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா.. இப்படித்தான் நடந்துப்பியா” என்று மேலும் வாய்க்குள்ளேயே அவளுக்கு பல திட்டுகளை வாரி வழங்கியவன் வேகமாக சென்று கதவை திறந்து விட்டான்.
வேதவள்ளிக்கு அவன் ஏன் தன்னை திட்டி விட்டு செல்கிறான் என்பது கூட புரியவில்லை. தவறு அவன் மேல் தானே.. அவன் தானே தன் முன்னே அப்படி நின்றான். ஆனால் என்னை ஏன் திட்டுகிறான் என்று அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
சூர்யா கதவை திறந்ததும் வேகமாக உள்ளே நுழைந்த தாத்தா அங்கே கண்கள் கலங்கி நனைந்து போய் அழுது கொண்டு அமர்ந்திருக்கும் வேதவள்ளியை பார்த்தவர் சூர்யாவை பார்த்து, “என்ன பண்ணி வச்சிருக்க?” என்றார் கோபமாக.
ஏற்கனவே வேதவள்ளியின் செயலால் கடும் கோபத்தில் இருந்தவன் தன் தாத்தாவும் வந்ததும் வராததுமாக தன்னை சாடவும் அவனின் கோபம் எல்லை கடந்து போனது.
பற்களை கடித்துக் கொண்டு, “தாத்தா நான் ஒன்னும் பண்ணல.. அவ தான்..” என்றவனுக்கு அதற்கு மேல் கூறவும் முடியாமல் வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே அடங்கி போயின.
“என்ன அவ தான்.. நீ தான் அந்த பொண்ணு மேல தண்ணியை ஊத்துனியா..”.
அவனோ அதற்கு பதில் அளிக்காமல் அழுத்தமாக அவரை பார்த்துக்கொண்டே நின்று இருந்தான்.
“சொல்லு சூர்யா” என்று அவர் அதட்டவும்.
அவனும் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தான்.
இதுவரை சூர்யா தான் அனைவரிடமும் கோபமாக கடிந்து பேசி வேதவள்ளி பார்த்திருக்கிறாள். முதல் முறை அவனையே அவனின் தாத்தா கோபமாக பேசுவதை பார்த்தவளுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.
“எதுக்கு சூர்யா இப்படி பண்ண?” என்று அடுத்த கேள்வி அவரிடம்.
“இவ எதுக்கு தாத்தா என்னுடைய ரூமுக்கு வந்த படுத்திருக்கா.. நான் ஒன்னும் வேணும்னே தண்ணி எல்லாம் ஊத்தல.. அவளை எழுப்பி பார்த்தேன் அவ எழுந்திரிக்கவே இல்லை தூங்கிக்கிட்டே இருக்கா.. அதான் கோபத்துல பக்கத்துல இருந்த தண்ணியை எடுத்து மேல ஊத்திட்டேன்”.
“சின்ன பசங்க மாதிரி பிகேவ் பண்ணாத சூர்யா”.
“ஏய்! நீ எதுக்குடி இங்க வந்து படுத்து இருக்க.. முதல்ல நீ எதுக்கு என் வீட்டுக்கு வந்த.. உன்னை யாரு என் வீட்டுக்குள்ள விட்டது. பார்ட்டி முடிந்ததும் கிளம்பி போய் இருக்க வேண்டியது தானே” என்றவனுக்கு நேற்று இரவு என்ன நடந்தது என்று எதுவும் புரியவில்லை.
அவனின் வார்த்தையில் வேதவள்ளி அவனை அதிர்ந்து பார்த்தாள். மது போதையில் நிதானம் இழந்து இப்படி அவன் செய்து விட்டான் என்பது அவளுமே அறிந்த விஷயம் தான். ஆனால், மறுநாள் அனைத்தையும் இப்படி மறப்பான் என்பது அவள் சற்றும் அறியாத விஷயம்.
“என்னடா இப்ப எதுக்கு அந்த பொண்ண திட்டுற.. எதுக்கு இங்க வந்தானா கேக்குற.. உன் பொண்டாட்டி உன் ரூம்ல தூங்காம வேற எங்க போய் தூங்குவா” என்று அவரும் உனக்கு நான் சற்றும் சளைத்தவன் இல்லை என்பது போல் அதே கோபத்தோடு கூறினார்.
அதில் அவரை அதிர்ந்து பார்த்தவன், “வாட்! பொண்டாட்டியா.. யாருக்கு யார் பொண்டாட்டி.. என்ன தாத்தா உளருறீங்க”.
“யாரு.. நான் உளருறேனா.. நீ நேத்து என்ன காரியம் பண்ணி இருக்கேன்னு நீயே பாரு” என்றவாறு அவனின் முகத்தருகே தன் செல்பேசியில் அந்த வீடியோவை ஓடவிட்டு காட்டினார்.
அந்த வீடியோ காட்சியை பார்த்தவனின் விழிகளும் அதிர்ந்து விரிய. அவனால் சற்றும் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
என்ன தான் நிதானம் இழந்திருந்தாலும் ஒரு பெண்ணின் கழுத்தில் அவளின் விருப்பத்தை கூட கேட்காமல் தாலி கட்டும் அளவிற்கு சென்றிருக்கிறேனா என்று எண்ணும் பொழுதே அவன் மீதே அவனுக்கு அத்தனை ஆத்திரம், கோபம்..
வீடியோவை பார்த்து முடித்தவனின் கண்களும் கோபத்தில் சிவந்து போயிருக்க.
“இப்ப சொல்லு உன் பொண்டாட்டி உன் ரூம்ல இல்லாம வேற எங்க டா போவா” என்று மீண்டும் அதே கேள்வியை அவனை நோக்கி வீசினார்.
தன் தலையை அழுத்தமாக கோதியவன், “தாத்தா இதெல்லாம் தெரியாமல் நடந்தது. வேணும்னு ஒன்னும் நான் இவ கழுத்துல தாலி கட்டல” என்றவனோ அங்கே இன்னும் தான் கண்ட காட்சியிலிருந்தே மீளாத அதிர்ச்சியோடு அமர்ந்திருப்பவளை நோக்கி, “ஏய்! நான் தான் குடிச்சிருந்தேன்.. எனக்கு தான் போதையில என்ன பண்றோம்னு தெரியல. நீ நிதானமா தானே இருந்த.. நீயாவது என்னை தள்ளிவிட்டு இருக்கலாம் இல்ல. எதுக்குடி சும்மா நிக்கிற” என்று தனக்கு இருக்கும் முழு கோபத்தையும் அவளிடம் கொட்டி தீர்த்தான்.
“என்ன பேசுற சூர்யா நீ.. அந்த பொண்ணு சுதாரிக்கிறதுக்குள்ள நீ தாலியவே கட்டி முடிச்சுட்ட.. இப்ப போய் அந்த பொண்ணு கிட்ட சண்டை போடுற.. தப்பு எல்லாம் உன் மேல தான் இருக்கு. அப்படி என்ன நிதானம் இழக்கிற அளவுக்கு குடிக்கிற பழக்கம். உன்கிட்ட நான் பல தடவை சொல்லி இருக்கேன் உனக்கு டிரிங்க்ஸ் ஒத்துக்காதுனு.. ஏன் என் பேச்சைக் கேட்கவே மாட்டேங்குற.. ஒழுங்கா என் பேச்சை கேட்டு இருந்தா இப்படி ஒரு நிலைமை உனக்கு வந்து இருக்காது”.
“தாத்தா ப்ளீஸ் தெரியாம நடந்திடுச்சு அதுக்காக வாழ்க்கை முழுக்கை என்னை இவ கூட இருக்க சொல்றீங்களா”.
வேதவள்ளியோ அவனின் ருத்ர தாண்டவத்தை பார்த்து அரண்டு போய் அமர்ந்திருந்தாள். ஒரு வார்த்தையும் பேசவில்லை.. அவளுக்கும் சேர்த்து தாத்தாவே பேசிக்கொண்டு இருந்தார்.
சரியாக அந்நேரம் ராம் வீட்டிற்குள் நுழையவும். சூர்யாவின் சத்தத்தை கேட்டு அவனின் அறையை நோக்கி சென்றான்.
சீதாவுமே வேதவள்ளியின் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தவள் சத்தம் வரும் திசையை நோக்கி சென்றாள்.
அங்கே இருப்பவர்களின் முகத்தை வைத்தே என்ன நடந்திருக்கும் என்பதை ராம் யூகித்து விட்டான்.
சீதாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை.
நேராக வேதவள்ளியின் அருகில் வந்தவள், “என்னாச்சுடி?” என்று கேட்கவும்.
அவளை இந்நேரம் இங்கே சற்றும் எதிர்பாராத வேதவள்ளியோ பாய்ந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“சரி சூர்யா எதுவா இருந்தாலும் நாம பேசிக்கலாம். நாங்க வெளியில் வெயிட் பண்றோம் நீங்க ரெண்டு பேரும் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வெளிய வாங்க” என்று விட்டு ராம்குமார் உடன் அவர் ஹாலிற்கு சென்று விடவும்.
சூர்யாவும் வேதவள்ளியை முறைத்துக் கொண்டே மாற்று உடையை எடுத்துக் கொண்டு உடை மாற்றும் அறைக்குள் புகுந்தவன். ஒரு நொடியில் வேறு உடைக்கு மாறி ஹாலிற்கு சென்று விட்டான்.
தன்னை இறுக்கமாக அணைத்திருந்தவளின் உடல் வெடவெடப்பது சீதாவால் நன்கு உணர முடிந்தது.
அவளை தன்னிடமிருந்து பிரித்தவள், “என்ன ஆச்சுடி இங்க என்ன பிரச்சனை?”.
அவளிடம் தாத்தாவிற்கும் சூர்யாவிற்கும் இடையேயான வாக்குவாதத்தை மட்டும் கூறியவள். சூர்யா தனக்கு கொடுத்த தரிசனத்தை பற்றி மட்டும் மறைத்து விட்டாள்.
“என்ன இது.. பண்றது எல்லாம் அவர் பண்ணிட்டு இப்போ உன் மேல குற்றம் சொல்றாரா.. இதை எல்லாம் சும்மா விடக்கூடாது. நீ வா நான் பாத்துக்குறேன்” என்று தான் கொண்டு வந்த உடையை அவளை அணிய வைத்து அவளுடன் வெளியே வந்தாள்.
வேதவள்ளியோ அவளின் கையை அழுத்தமாக பற்றி நிறுத்தியவள், “நீ எதுவும் பேசாத சீதா எதுவா இருந்தாலும் அவங்களே முடிவு பண்ணட்டும். நான் ஒன்னும் விருப்பப்பட்டு இந்த வாழ்க்கையை அமைத்துக்கல.. அதனால என்ன நடந்தாலும் எனக்கு சம்மதம் தான்”.
“லூசு மாதிரி உளராதே.. ஊரே அவர் உனக்கு தாலி கட்டி இருக்க வீடியோவை பார்த்து இருக்கு. நீயே அவர் பொண்டாட்டி இல்லன்னு நடுரோட்டில் நின்று கத்தினாலும் எவனும் நம்ப மாட்டான். இனி உன்ன பாக்குறவன் எல்லாருமே சூர்யாவோட பொண்டாட்டியா தான் பார்ப்பான். நீ வாயை மூடிக்கிட்டு வா என்ன பேசணும்னு எனக்கு தெரியும்” என்று வேதவள்ளியின் வாயை அடைத்தவள் அவளின் கையை பிடித்துக் கொண்டு விறுவிறுவென கூடத்திற்கு சென்றாள்.