சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 56
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
ஷாலினி அதிசயமாய் பார்த்து கொண்டிருக்க பின்னே ஒரு மிருதுவான இசை ஓடிக்கொண்டிருக்க சுந்தர் சுந்தரியின் கைபிடித்து அதற்கேற்றார் போல் அவளையும் ஆட்டுவித்து தானும் ஆடிக் கொண்டிருந்தான்..
உச்சியில் இருந்து விழும் அருவி ஆறாய் ஓடி வளைந்து நெளிந்து செல்வது போல் அவள் இடை பற்றி அவள் கண்ணுக்குள் கண்ணை வைத்துக்கொண்டு அழகாக நளினமாக அவளையும் அசைய வைத்து தானும் லாவகமாக அவளை வளைத்து நெளித்து தன்னுடைமை போல் சில நேரங்களில் சேர்த்து இறுக்கி ஆடிக்கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க வயிறு பற்றி எரிந்தது ஷாலினிக்கு..
நடுவில் சுந்தரி தடுமாறி விழப்போக அவளை அப்படியே தூக்கிக் கொண்டு சுற்றி சுற்றி ஆடியவனை பார்த்து அப்படியே வாய் பிளந்து நின்றாள் ஷாலினி..
ஏதோ ஆடுவதற்கும் ஆட்டுவிப்பதற்குமே பிறந்தவன் போல் ஆடிக் கொண்டிருந்தான் சுந்தர்.. ஆட்டத்தின் நடுவே அவன் சுந்தரியிடம் காட்டிய நெருக்கம் ஷாலினிக்கு இன்னும் எரிச்சலையே தந்தது..
சுந்தரியை தன் தலைக்கு மேல் தூக்கியவன் அவளை அப்படியே தன் உடல் மேல் சரிய விட்டு மெதுவாக கீழ் இறக்கி அவள் சுட்டுவிரலை அவள் தலைக்கு மேல் பிடித்து அவளை சுழற்றி சுழற்றி பிறகு அப்படியே தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன் அவளை பின்பக்கமாக அப்படியே சாய்த்து ஊஞ்சலாய் ஆட்டி அவள் இடையில் அவன் வலது கை இருக்க அவனுடைய வலது பக்க தோளில் அவள் இடது கை இருக்க அவள் வலக்கை விரலோடு தன் இடக்கை விரல்களை கோர்த்தவன்.. அவளை நதி போல நகர்த்திக்கொண்டு சுற்றி ஆடிக்கொண்டிருந்தான்..
அங்கே ஒருத்திக்கு அதைக் காண பொறுக்கவில்லை அதற்கு மேல்.. தன் காலால் தான் உட்காந்திருந்த இருக்கையை உதைத்தவள் காலில் வலி எடுக்க அப்படியே வேகமாய் அந்த இடத்தை விட்டு மாதேஷையும் அழைத்துக் கொண்டு வெளியே போனாள்..
அந்த இசை தொகுப்பு முடியும் வரை சுந்தரியோடு ஆடிய சுந்தர் அதன் பிறகு இருவருக்கும் மூச்சு வாங்க ஆட்டத்தை நிறுத்தியவன் சுற்றி எல்லோரும் ஆரவாரத்துடன் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்த சந்தோஷமாய் அவள் தோளை அணைத்த படி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தான்..
அவன் கையின் காயம் கூட இன்னும் சரியாக ஆறவில்லை.. அதுவும் வலி எடுத்ததோ என்னவோ.. ஆனால் அந்த வலியை பொறுத்துக்கொண்டு ஷாலினி எதிரே சுந்தரியின் மதிப்புக்கும் மரியாதைக்கும் எந்த குறைவும் வந்து விடக்கூடாது என்று அவளைப் பூ போல கையாண்டு நடனமாடி முடித்து விட்டான்..
சுந்தரியோடு காரில் அமர்ந்தவன் ஓட்டுநர் அதை ஓட்டிக்கொண்டு போக சுந்தரியை பெருமையாய் பார்த்தான்.. அவள் உச்சந்தலையில் கை வைத்து தடவி “நான் இன்னைக்கு மாதிரி என்னைக்குமே சந்தோஷமா இருந்தது இல்ல சுந்தரி.. ரொம்ப தேங்க்ஸ்..” என்றான்..
அவளோ அவ்வளவு நேரம் தன் உணர்வுகளை அடக்கி வைத்திருந்தவள் அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்..
“நான் இப்படி எல்லாம் டிரஸ் பண்ணுவேன்னோ இல்ல இந்த மாதிரி பார்ட்டில அதுவும் டான்ஸ் ஆடுவேன்னெல்லாம் கனவு கூட கண்டது கிடையாது.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சுந்தர் சார்.. எங்க அம்மா இருந்திருந்தா கூட எனக்காக இவ்ளோ செஞ்சு இருக்க மாட்டாங்க.. நீங்க எனக்கு அதுக்கும் மேல.. உங்களை நிஜமாவே சாமின்னு தான் கூப்பிட தோணுது..” என்றாள் அவள்..
“என்னை சாமின்னு எல்லாம் கூப்பிட வேண்டாம் சுந்தரி.. என்னை விட்டு பிரிய மாட்டேன்னு சொன்னா போதும்..”
அந்த நிலையிலும் சுந்தரியை தன்னுடனே இருக்க வைக்க அவன் முயற்சி செய்ய அவளோ “இப்பதான் என்னால நீங்க எந்த காலத்துலயும் அவமானப்படக்கூடாதுன்னு இன்னும் உறுதியா தோணுது சுந்தர் சார்.. நான் உங்களோட இருந்தா நீங்க நிச்சயமா அவமானப்படுவீங்க.. அதுக்கு நான் காரணமா இருக்க மாட்டேன்..” என்று சொல்லி அவனிடமிருந்து விலகி தனியாக அமர்ந்தாள்..
“ஏன் சுந்தரி இப்படி பிடிவாதம் பிடிக்கிற?” என்று அவளை கெஞ்சும் தொனியில் கேட்டவன் அவளை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்..
அதன் பிறகு வீட்டுக்கு வந்தவர்கள் பூனை போல மெதுவாக அவர்கள் அறைக்கு செல்ல பார்க்க அப்போது ரதி அவள் அறையை விட்டு வெளியே வந்து விளக்கை போட்டாள்..
சுந்தரியை பார்த்தவள் தன் கண்களையே நம்ப முடியாமல் “ஏய்.. நீயாடி சுந்தரி இது..?” என்று கேட்க சுந்தரி சிரித்துக் கொண்டே தலையை குனிந்தாள்..
“வெக்கம் எல்லாம் படற.. அப்ப நீ என் சுந்தரி தான்.. ஆனா எப்படி இவ்ளோ அழகா டிரஸ் பண்ணி இருக்கே.. நெஜமாவே உன்னை அடையாளமே தெரியல.. ரொம்ப அழகா இருக்க சுந்தரி.. சுந்தர் சாருக்கு ஏத்த மாதிரி..” என்றாள்..
அவள் தலையை சுற்றி கைகளால் திருஷ்டி கழிப்பது போல் செய்தவள் “சரி.. மணி 12 ஆயிருச்சு.. ரெண்டு பேரும் போய் படுத்துக்கோங்க..” என்று சொல்லி அவர்களை அவர்களுடைய அறைக்கு அனுப்பினாள் ரதி..
சுந்தரின் அறைக்கு சென்ற சுந்தரி உடையை மாற்றிக் கொண்டு அங்கே இருந்த சோஃபாவில் சென்று படுக்க அவளை பாவமாக பார்த்திருந்த சுந்தரும் அப்படியே கட்டிலில் படுத்துக்கொண்டான்..
இன்று அவளுடன் அவ்வளவு நெருக்கமாக நடனமாடி விட்டு வந்த பிறகு அவளை விட்டு தனியே படுக்க அவனுக்கு ஏனோ மனம் ஏற்றுக் கொள்ளவே இல்லை.. ஆனாலும் ஒரு வழியாக மனத்தை சமாதானப்படுத்தி கட்டிலில் படுத்துக் கொண்டான் சுந்தர்.. சுந்தரியும் அவனை ஒரு ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டே தான் படுத்திருந்தாள்..
இருவரும் அப்படியே உறங்கி போக இரவு இரண்டு மணி அளவில் தன்னை சுற்றி ஏதோ ஒரு கை இறுக்க கட்டி இருக்க அதிர்ந்து போய் விழித்த சுந்தரி திரும்பி பார்க்கவும் சுந்தர் அவள் முகத்தருகே தன் முகத்தை வைத்துக்கொண்டு அந்த சோஃபாவில் இடுக்கி கொண்டு அவளை அணைத்து படுத்திருந்தான்..
அப்படியே மெதுவாக அவன் புறம் திரும்பியவள் அவன் தலையை எடுத்து தன் தோளில் வைத்து தடவி கொடுத்தாள் “என்னை மன்னிச்சுடுங்க அழகா.. உங்களுக்கு நல்லது நடக்கணும்னா நான் உங்களை விட்டு போய் தான் ஆகணும்.. உங்க கூட இருந்தேன்னா என்னாலதான் உங்களுக்கு கஷ்டம்ன்னு நினைச்சு நினைச்சு நானும் தினமும் தினமும் அழுதுகிட்டே தான் இருப்பேன்.. அதுக்கு தள்ளி இருந்து நீங்க சந்தோஷமா இருக்கிறதை பார்க்கவாவது செய்யலாம்னுதான் நான் உங்களை விட்டு பிரிஞ்சு போறேன்..”
அவன் காதுகளில் பேசிக்கொண்டிருந்தாள் அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணி..
ஆனால் அவன் சிந்திய கண்ணீர் அவள் முதுகை நனைத்துக் கொண்டிருந்தது.. அப்படியே இன்னும் இறுக்கி அணைத்து படுத்தவன் அவளை விட்டு பிரிய மனம் இல்லாமல் இந்த இரவு இப்படியே உறைந்து விடாதா என்று ஏங்கினான்..
இருவரும் அப்படியே உறங்கி போக அடுத்த நாள் காலை வழக்கம் போல் சுந்தரியை அழைத்துக் கொண்டு அவள் கல்லூரிக்கு போனான்..
போகும் வழியில் சுந்தரியிடம் “இப்பதான் உனக்கு மாடர்ன் டிரஸ் போடறதுல எல்லாம் ஒன்னும் பிராப்ளம் இல்லல்ல? அந்த காம்படிஷன்ல நீ பார்ட்டிஸிபேட் பண்ற.. போய் முதல்ல பேரை குடுக்கற..” என்று சொன்னான்..
அவளும் சரி என தலையாட்டியவள் அவன் சொன்னபடியே தன் பெயரை அந்த போட்டியில் கலந்து கொள்ள கொடுத்தாள்.. அதில் பங்கேற்கும் இன்னொரு குழுவாக அவளை முதல் நாள் கேலி செய்த தீக்ஷா, மோனா, மிஷால் மற்றும் விக்கி பங்கேற்று இருந்தனர்..
அடுத்த வார இறுதியில் அந்தப் போட்டி நடக்க இருக்க வீட்டுக்கு வந்ததும் தினமும் அவளுக்கு பல்வேறு ஆடைகளை வடிவமைக்கும் உபகரணங்களையும் வாங்கி கொடுத்து பயிற்சி மேற்கொள்ள சொல்லி இருந்தான் சுந்தர்..
அவளும் அப்படியே இரவு 12 மணி வரை தினமும் வேலை செய்துவிட்டு பிறகு உறங்க ஆரம்பித்தாள்..
ஒரு வாரத்திற்கு பிறகு போட்டி நடக்கும் நாளும் வந்தது.. போட்டிக்கு சுந்தரி வனிதாவோடும் சித்தார்த்தோடும் போய் இறங்கினாள்..
போட்டி நடக்கும் இடத்திற்கு சுந்தர் ஏற்கனவே வந்திருந்தான்..
“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க..? நான் பாத்துக்கிறேன்.. நான் போற இடத்துக்கு எல்லாம் ஏன் வரீங்க? நான் தனியா இன்டிபென்டன்ட்டா ஒர்க் பண்ணி ஜெயிக்க வேண்டாமா? எப்ப பாரு என்னை ஏதோ கோழியை அடை காக்கிற மாதிரி சுத்தி சுத்தி வந்து எல்லா பிரச்சனையிலிருந்தும் காப்பாத்திகிட்டே இருக்கீங்க.. இந்த போட்டியை நானே பார்த்துக்கறேன்.. நீங்க வீட்டுக்கு கிளம்பி போங்க..” என்றாள் சுந்தரி..
அப்போது அங்கே வந்த அந்த போட்டியை நடத்துபவர் “ஹாய் சுந்தர்.. வாங்க வாங்க.. வருஷா வருஷம் நீங்க இந்த காம்பெடிஷனுக்கு வந்து உங்களோட கார்மெண்ட்ஸ்ல இருந்து எங்களுக்கு வேண்டிய மெட்டீரியல்ஸ் எல்லாம் சப்ளை பண்றீங்க.. ப்ளீஸ் வாங்க.. இந்த வாட்டி நிறைய நியூ டிசைனர்ஸ் எல்லாம் பார்ட்டிசிபேட் பண்றாங்க.. உங்களை ஒன் ஆஃப் தி ஜட்ஜஸ்ஸா இருக்க சொன்னேன்.. நீங்க இருக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க.. அட்லீஸ்ட் உள்ள வந்து நடக்கிற ஃபேஷன் ஷோவை பாருங்களேன்..” என்று கேட்டார்..
அதைக் கேட்ட சுந்தரிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. அவளைப் பார்த்து சிரித்த சுந்தர் “சரி.. வாங்க போலாம்..” என்று அவரிடம் சொல்லிவிட்டு அவரோடு உள்ளே சென்று விட்டான்..
சுந்தரி போட்டியாளர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவள் அங்கே ஏற்கனவே தீக்ஷாவும் அவளது கூட இருக்கும் பட்டாளமும் வந்திருப்பதை பார்த்தாள்.. அவர்களுடன் இன்னொரு பெண்ணும் வந்து இருந்தாள்.. மாடலாக அவர்கள் வடிவமைக்கும் உடையை அணிவதற்கு..
சுந்தரிக்கு தங்களோடு அந்த மாதிரி எந்த பெண்ணும் வரவில்லையே என்று சிறிது அச்சமாகத்தான் இருந்தது.. அப்போது சைத்ரா அங்கே வரவும் சுந்தரி ஆச்சரியப்பட்டு போனாள்..
“சைத்ரா.. நீங்க எங்க இங்க..?” என்று கேட்க “உன் புருஷன் தான் நீ தான் இங்க ஃபேசன் ஷோல மாடலா நீ டிசைன் பண்ண டிரஸ் போட்டுக்க போறியாம்.. அதான் உனக்கு மேக்கப் போடறதுக்கு என்னை இங்க வர சொல்லிட்டான்.. ஒரு மிரட்டு மிரட்டுனான் பாரு..”
அவள் புலம்ப சுந்தரி தலையில் அடித்துக் கொண்டாள்..
“இவரால எல்லாருக்கும் பிரச்சனைதான்.. ஏன் தான் எல்லாரையும் தொந்தரவு பண்றாரோ..?” என்று அவள் சொல்ல சைத்ரா அவளிடம் “உன் மேல அவன் உயிரையே வெச்சிருக்கான் சுந்தரி.. உனக்கு சின்ன கஷ்டம் கூட வரக்கூடாதுன்னு நினைக்கிறான்.. புரிஞ்சுக்கோ சுந்தரி..” என்றாள்..
அவள் சொன்னதைக் கேட்டு சுந்தரியின் கண்கள் பனித்தது.. ஆனால் அவள் முடிவில் அவள் ரொம்ப உறுதியாக இருந்ததால் அதை யாராலும் அசைக்கவே முடியவில்லை..
அதன் பிறகு போட்டியின் விதியை அறிவிக்க ஒருவர் வந்து நுண்பேசி முன் நின்றார்..
“ஹாய் எவ்ரிபடி.. பார்ட்டிசிபேட் பண்ற எல்லாருக்கும் ஒரு பிளைன் லெஹங்கா கொடுத்துடுவோம்.. அதை டிசைன் பண்ணி அதை பிரைடல் வேரா மாத்த வேண்டியது உங்களோட வேலை.. இதுக்கு உங்களுக்கு ஒன் ஹவர் டைம்.. நீங்க அதுல எதை வச்சு வேணா டிசைன் பண்ணலாம்.. என்ன வேணா யூஸ் பண்ணலாம்.. ஆனா ஒன் அவர்க்கு உள்ள முடிச்சிடணும்.. அதுக்கப்புறம் நீங்களோ உங்க மாடலோ அந்த டிரஸ் போட்டுக்கிட்டு ரன் வேல டிஸ்ப்ளே பண்ணனும்.. அதுக்கப்புறம் அடுத்த அரை மணி நேரத்துல நாங்க முடிவுகளை அறிவிப்போம்..”
“உங்களுக்கு ஒரு கேபின் அரேஞ்ச் பண்ணி இருக்கோம்.. எல்லாரும் அவங்கவங்க கேபின்க்குள்ள போயிருங்க..” என்று சொல்ல சுந்தரி அவள் பெயர் எழுதிய கேபினுக்குள் வனிதாவுடன் உள்ளே சென்றாள்..
அங்கே உள்ளே ஒரு பெண் உருவ பொம்மை (மானெக்வின்) மேல் ஒரு லெஹங்கா போடப்பட்டிருந்தது..
போட்டி தொடங்கப் போகும் ஐந்து நிமிடத்திற்கு முன் சுந்தர் உள்ளே வந்தவன் சுந்தரி கன்னத்தில் கை வைத்து “நிச்சயமா நீ தான் இதுல வின் பண்ணுவ.. எனக்கு எந்த டவுட்டும் இல்ல.. தைரியமா உனக்கு என்ன தோணுதோ அப்படி பண்ணு.. நீ வின் பண்ணப்பறம் நான் வந்து ஒரு கிஃப்டோட உன்னை பார்க்கிறேன்..” என்றவன் கைவிரல்களை மடக்கி கட்டைவிரலை மட்டும் தூக்கி “ஆல் த பெஸ்ட்..!!” என்று சொல்லிவிட்டு அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து விட்டு அங்கிருந்து சென்றான்..
போட்டி ஆரம்பிக்கப் போகிறது என்று சொன்னவுடன் அவளுக்கு சிறிது படபடப்பாக இருந்தது.. ஆனால் சுந்தர் வந்து அவளுடன் பேசி சென்ற பின் அந்த படபடப்பு குறைந்து விட்டிருந்தது..
போட்டி தொடங்கி விட்டது என்று அறிவிப்பாளர் அறிவிக்கவும் சுந்தரி ஃபேப்ரிக் பெயிண்ட் எடுத்து அழகாக கண்ணன் ராதை படத்தை சிறிது சிறிதாக அந்த லெஹங்காவின் கீழ்ப்பகுதியில் வரைய ஆரம்பித்தாள்..
அதன் பிறகு லெஹங்காவின் மேல் பகுதியில் இடது பக்கம் ஒரு இருதய வடிவத்தை வரைந்து அதன் உள்ளும் புல்லாங்குழல் ஊதும் கண்ணன் படத்தை வரைந்தாள்..
அதன் பிறகு அந்த லெஹங்காவின் துப்பட்டாவை எடுத்தவள் அதிலும் பெரிதாக ராதாகிருஷ்ணன் படத்தை பெரிதாக வரைந்தாள்..
இந்த மூன்று பகுதியும் வரைந்து முடிப்பதற்குள் அறிவிப்பாளர் 40 நிமிடங்கள் முடிந்து விட்டது என்று சொல்ல.. அடுத்து வண்ண வண்ண முத்துக்களை எடுத்து நூலில் கோர்த்து கண்ணனுடைய கிரீடம் புல்லாங்குழல் ராதை உடைய தலை முடி பகுதி அவளுடைய சேலை என எல்லா இடங்களிலும் அதை தைத்து விட்டாள்.. வனிதாவும் அவள் கூடவே வேக வேகமாக இந்த வேலைகளில் உதவி செய்து கொண்டிருந்தாள்..
இன்னும் பத்து நிமிடங்களே இருக்க ஆங்காங்கே பளபளக்கும் கண்ணாடி கற்கள் பதித்து இறுதியில் துப்பட்டாவை எடுத்து அந்த உருவ பொம்மை மேல் போட்டவள் அது கச்சிதமாக இருப்பதைக் கண்டு திருப்தி அடைந்தாள்.. அவள் எல்லாவற்றையும் முடிப்பதற்கும் நேரம் முடிந்தது என்று அறிவிப்பாளர் அறிவிப்பதற்கும் சரியாக இருந்தது..
அடுத்து அறிவிப்பாளர் அவர்களுக்கு அரை மணி நேரம் கொடுத்து அதற்குள் அந்த உடையை அணிந்து கொண்டு மேடையில் ரன்வேயில் அதை போட்டுக் கொண்டு கேட்வாக் செய்து காட்ட வேண்டும் என்று சொல்லவும் சரியாக அந்த நேரம் சைத்ரா அவள் அறையினுள் வந்தாள்..
வந்தவள் அவள் வடிவமைத்த ஆடையை பார்த்து அப்படியே சிலையாய் நின்று விட்டாள்..
“சுந்தரி.. நீயா இதை செஞ்ச..?” என்று அப்படியே சிலையாய் நின்றவள் சுந்தரியை மகிழ்ச்சியில் இறுக்க தழுவிக் கொண்டு “நிச்சயமா நீ தான் வின் பண்ணுவ.. சுந்தரி..” என்றாள்..