சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 57 ❤️❤️💞

4.9
(20)

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 57

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

சுந்தரியும் வனிதாவும் வடிவமைத்த உடையை பார்த்த சைத்ரா அப்படியே வியந்து நிற்க அவளை முதுகில் தட்டிய வனிதா “சைத்ரா.. ப்ளீஸ்.. சீக்கிரம் அவளுக்கு மேக்கப் போட ஆரம்பிங்க.. உங்க கிட்ட அரை மணி நேரம் தான் இருக்கு..”

அவளை அவளுடைய பிரமிப்பில் இருந்து வெளியேற்ற தன்னுடைய உறை நிலையில் இருந்து வெளியே வந்த சைத்ரா வேகமாக வேலையில் இறங்கினாள்..

அந்த உடையை அணிந்து கொண்ட சுந்தரி அப்படியே ஒரு அழகான மணப்பெண்ணாய் காட்சியளிக்க அவளுக்கு ஒப்பனை செய்து அந்த உடைக்கேற்றார் போல் நகைகளை அணிவித்து சைத்ரா அவளை எழுப்பி நிற்க வைத்து பார்க்க தன் கண்ணே பட்டுவிடும் போல இருந்தது அவளுக்கு..

“சுந்தரி.. சத்தியமா சொல்றேன்.. சுந்தர் இந்த டிரஸ்ல உன்னை பார்த்தான்னா அதுக்கப்புறம் இந்த ஜென்மத்துக்கு இல்ல இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் உனக்கு டிவோர்ஸ் எல்லாம் கொடுக்க மாட்டான்.. அவ்ளோ அழகா இருக்கடி செல்ல குட்டி.. பொண்ணா இருக்குற எனக்கே உன்னை பாத்தா அவ்ளோ ஆசையா இருக்கு.. சுந்தர் நெலமை எல்லாம் அவ்வளவுதான்.. ஃப்ளாட் ஆயிடுவான் உன்னை பார்த்தா.. நீ வேணா பாரு இந்த ஃபேஷன் ஷோ முடிஞ்சு உனக்கு எத்தனை ப்ரொபோசல்ஸ் வருதுன்னு..”

சைத்ரா இப்படி உற்சாகமாய் பேசிக் கொண்டிருக்க சுந்தரி முகத்திலோ சிறிய மகிழ்ச்சி கூட தென்படவில்லை.. சிறிது பதட்டமாகவே அவள் இருக்க “என்ன ஆச்சு… சுந்தரி..?” என்று வனிதா கேட்டாள்..

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி.. பாரு என் காலெல்லாம் எப்படி உதறுதுன்னு.. என்னால முடியாதுடி வனிதா.. பேசாம நீ இந்த டிரஸ்ஸை போட்டுட்டு கேட் வாக் பண்ணிடறியா?” என்று கேட்க

வனிதா “என்ன விளையாடுறியா நீ..? என்னால எல்லாம் முடியாது..” என்று சொல்ல சுந்தரி சைத்ரா பக்கம் திரும்பினாள்..

“இதை பாரு சுந்தரி.. இந்த டிரஸ் உனக்கு போட்டு பார்த்தப்புறம் யாருக்குமே அதை போட்டுக்கிற தைரியம் வராது.. அவ்ளோ அழகா இருக்கு உனக்கு இந்த டிரஸ்.. அது மட்டும் இல்லாம இன்னும் அவங்க கூப்பிடுறதுக்கு அஞ்சு நிமிஷம் தான் இருக்கு.. இப்ப எதையுமே மாத்த முடியாது.. நான் சொல்றதை கேளு.. நிச்சயமா நீ தான் ஜெயிப்ப.. சுந்தரி.. தைரியமா போய்ட்டு வா..”

“வேணும்னா இங்கேயே ஒரு ரெண்டு மூணு வாட்டி நடந்து பிராக்டிஸ் பண்ணிக்கோ..” என்று சொல்லி அவளுக்கு தைரியம் கொடுப்பதற்காக சைத்ராவும் வனிதாவும் அவள் கூடவே நடந்தார்கள்..

ஆனால் சுந்தரிக்கோ பயத்தில் கால் மடங்கி மடங்கி நடுவில் கீழே விழப் போக சைத்ரா அவளை பிடித்து “எதுக்கு சுந்தரி இவ்வளவு பயப்படுற..? அங்க இருக்கிற எல்லாருமே நம்மளை மாதிரி மனுஷங்க தான்.. நீ உங்க வீட்டு ஹால்ல நடக்கிற மாதிரி நினைச்சுட்டு நடந்துட்டு வந்துரு..”  சைத்ரா சொல்ல அவளை முறைத்தாள் சுந்தரி..

“அங்க போய் நடக்கப் போறவங்களுக்கு தான் தெரியும் இந்த டென்ஷன்..” என்க

 “சுந்தரி.. நான் நிறைய ஃபேஷன் ஷோல பார்ட்டிசிபேட் பண்ணி இருக்கேன்.. ஆனா இப்ப இந்த டிரஸ்ஸை போட்டுட்டு நான் அங்க போனேன்னா சுந்தர் என்னை முதல்ல கொன்னுட்டு அப்புறம் தான் பேசுவான்.. அதனால தயவு செஞ்சு நீயே போய்ட்டு ப்ரெசென்ட் பண்ணிட்டு வா.. இதுக்கு மேல அவன்கிட்ட வாங்கி கட்டிக்க  என்னால முடியாது” என்றாள் சைத்ரா..

ஒப்பனைக்கான நேரம் முடிந்து விட மெதுவாக மேடையின் பின்பக்கம் போய் நின்றாள் சுந்தரி.. அங்கே வந்திருந்த தீக்ஷாவுக்கும் சுந்தரியின் உடையை விட்டு கண் அகலவே இல்லை.. ஒரு மணி நேரத்தில் அவளால் எப்படி இப்படி ஒரு நேர்த்தியான அழகான வடிவமைப்பை செய்ய முடிந்தது.. என்று மனதிற்குள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனாள் அவள்..

அது ஒரு புறம் இருக்க அந்த உடை சுந்தரிக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது.. அவள் கூந்தல் வடிவமைப்பில் இருந்து அவள் முக ஒப்பனை உடை அவள் காலில் அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் காலணி வரை பார்த்த தீக்ஷா வியப்பில் பேசக் கூட மறந்து போனாள்..

கல்லூரி முதல் நாள் அன்று புடவையில் வந்த சுந்தரி அவள் கண் முன் வந்தாள்.. இந்த சுந்தரி அந்த சுந்தரியிலிருந்து முற்றிலுமாக மாறுப்பட்டிருப்பதாக உணர்ந்தாள் அவள்..

அதன் பிறகு ஒவ்வொருவராக நீண்ட மேடையில் மிகவும் அழகாக நடந்து விட்டு தாங்கள் வடிவமைத்த  உடையின் அழகை எல்லோருக்கும் விருந்தாக்கி கொண்டிருக்க சுந்தரிக்கோ கால்கள் இன்னும் நடுக்கம் எடுத்து ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டன..

என்னதான் சுந்தரியின் உடையை பார்த்து தீக்ஷா பிரமித்து போயிருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் “சுந்தரி.. நீ எல்லாம் எப்படி இங்க வந்து ஜெயிக்க முடியும்?” என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்..

அதை பார்த்த சுந்தரிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் வடிந்து விட்டது.. அடுத்து தீக்ஷா ஏற்பாடு செய்த மாடல் அழகி மேடையில் வலம் வந்து கொண்டிருந்தாள்..

சுந்தரியின் கால்களோ ரொம்பவும் நடுக்கம் எடுத்து அவளுக்கு ஒத்துழைக்கவே மறுத்தது…

அடுத்து மேடையில் அவள் பெயர் அழைக்கப்பட தைரியமே இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்தவளின் கால்கள் ஏகத்துக்கும் நடுங்க எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து திரும்ப உள்ளே சென்று விடலாம் என்று பின்னோக்கி கால் வைத்த நேரத்தில் அவளுக்கு முன்னால் நேர் எதிரே சுந்தர் நின்று கொண்டிருந்ததை பார்த்தாள்..

அவன் தன்னை உச்சியிலிருந்து பாதம் வரை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு உடல் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது.. அவன் வாய் ஏதோ அசைந்து அவளிடம் சொல்லிக் கொண்டிருந்ததை உணர்ந்தவள் அவன் என்ன சொல்கிறான் என்று அறிந்து கொள்ள அவனையே விழி அகற்றாமல் பார்த்தபடி தன்னையும் அறியாமல் அழகாக ஒயிலாக அடிமேல் அடிவைத்து அந்த மேடையில் நடந்து வந்து கொண்டிருந்தாள்..

3 அடி எடுத்து வைத்தவள் அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்து கொண்டு வெட்கப்பட்டு சிரித்தபடி அவனை நோக்கி தன்னையும் அறியாமல் நடந்து கொண்டு இருந்தாள்..

அவன் அவளைப் பார்த்து “என் கருப்பட்டி அழகி..!!” என்று ஆசையாக சொல்லி இதழ் குவித்து காற்றில் ஒரு முத்தமும் அனுப்பி இருந்தான்.. அவளுடைய வெட்கத்தினால் அவளுடைய நடை அழகு இன்னும் கூடி இருந்தது..

அவள் தன்னை மட்டுமே பார்த்துக் கொண்டு வருவதை கவனித்த சுந்தர் திடீரென கூட்டத்தில் மறைந்து போக அப்போது தான் தான் எங்கே இருக்கிறோம் என்று உணர்ந்தாள் அவள்.. ஏற்கனவே அந்த மேடையின் நடுபகுதிக்கு மெதுவாக மணப்பெண் போல வெட்கப்பட்டுக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள்..

பிறகு அங்கே சூழ்ந்திருந்த அனைவரையும் பார்த்து அவளுக்கு கால் நகர முடியாமல் நடுக்கமெடுக்க மீண்டும் கூட்டத்தில் இருந்து தோன்றினான் சுந்தர்..

தன் கண்ணை மூடி திறந்து அவளை அமைதி படுத்தியவன்.. மேலும் கை விரல்களை மடக்கி கட்டை விரலை தூக்கி காட்டி “நீ தான் ஜெயிப்ப.. சூப்பரா இருக்கே..” என்று சொல்ல அந்த நொடி அவளுக்கு தைரியம் ஊட்ட அவன் அவள் மனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டது போல் உணர்ந்தாள் ..

அடுத்த நொடி ஒரு தேர்ந்த மாடல் அழகியை போல இந்த பக்கமும் அந்த பக்கமும் லெஹங்காவின் கீழ்பகுதியை பிடித்துக் கொண்டு எல்லோருக்கும் தன் உடையின் அழகான வடிவமைப்புகள் தெரியுமாறு அந்த உடையை எடுத்துக்காட்டி கொண்டு  தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் “நான் தான் இந்த பிரபஞ்ச அழகி..” என்பது போல் தனக்குள் சுந்தரால் ஏற்பட்டு இருந்த உணர்வை அப்படியே வெளிக்காட்டியபடி நடந்தவள்.. இடுப்பில் கை வைத்து அந்த மேடையில் முன்பக்கத்தில் வந்து நின்றாள்..

உலகத்தில் தனக்காக இருந்த அத்தனை காதலையும் சேர்த்து வைத்து தன் கண்களில் வெளிப்படுத்திக் கொண்டிருந்த சுந்தரை பார்த்தவளுக்கு அதற்கு மேல் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை..

சுந்தரை நோக்கி உதடு குவித்து அவன் கொடுத்த முத்தத்திற்கு பதிலாய் ஒரு பறக்கும் முத்தம் ஒன்று கொடுத்து அவனை பார்த்து கண்ணடித்தவள் அங்கிருந்து நடந்து மேடையின் பின்பகுதிக்கு சென்று விட்டாள்..

தன்னுடைய நம்பிக்கை.. தைரியம்.. அழகு.. அன்பு.. அமைதி.. சக்தி.. மனம் எல்லாமே சுந்தரை மையப் படுத்தியே இருந்தது என்பதை அவள் புரிந்து கொண்டாள்.. ஆனால் இதே போன்ற ஒரு மையப் பொருளாக தான் சுந்தருக்கு இருக்கவில்லையே என்று அவள் மனம் நினைத்து வாடி போனது.. சுந்தரின் வாழ்வில் தான் ஒரு அவமான சின்னமாக மட்டுமே இருக்கிறோம் என்ற ஒரு நொடி நினைப்பு அத்தனை நேரம் அவளுக்கு இருந்த உற்சாகத்தை கரைத்து குடித்தது..

தன்னால் அவன் அவமானத்தையும் அவன் நண்பர்களின் ஏளனத்தையும் தவிர வேறு எதையும் பெறப்போவது இல்லை என்று தனக்குத்தானே முடிவு கட்டிக் கொண்டாள் அவள்..

மேடையில் சுந்தரை பார்த்து அவள் பேசிய காதல் பாஷைகளும் அவள் தந்த பறக்கும் முத்தமும் அவனைக் காணும் போது அவள் உடல் மொழியின் வழியாக பொழிந்த அவள் காதல் உணர்வுகளும்  சுந்தர் உடலில் இருந்த அத்தனை பாகங்களுக்கும் ஒருவித சிலிர்ப்பை தந்து அவன் கால்களை தன் கருப்பட்டி அழகியை நோக்கி ஓட வைத்தது..

அதே நேரம் சுந்தரியை கீழிருந்து கண்ட சித்தார்த் ஷ்ரவன் அவள் அழகில் அப்படியே மயங்கி போய் சுந்தருக்கு முன்னால் அவளுக்கு வாழ்த்து சொல்ல வந்தான்.. ஆனால் அவளை அருகில் வந்து பார்த்தவன் ஏதோ ஒரு உந்துதலில் அப்படியே அவளை கட்டி அணைத்துக் கொண்டான்..

சுந்தரி முதலில் அவனிடமிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தவள்.. அவனுக்கு பின்னே சுந்தர் தன்னை நோக்கி ஆசையுடன் ஓடி வருவதை பார்த்து எதுவும் செய்யாமல் அப்படியே சிலையாக நின்றாள்..

இந்தக் காட்சியை கண்டு சுந்தர் தன்னைத் தவறாக நினைத்து கோபப்பட்டு வெறுத்து விட்டால் விவாகரத்து கிடைக்கும் போது அவனுக்கு ரொம்பவும் வலி இல்லாமல் போகும் என்று எண்ணினாள் அவள்..

ஆனால் அவள் அறியாத ஒன்று என்னவென்றால் சுந்தர் அவளை அணு அணுவாய் அறிந்து வைத்திருந்தான் என்பதே.. அங்கிருந்து வந்தவன் சித்தார்த்தை அவளிடம் இருந்து விலக்கி நிறுத்தி வைத்து அவனை முறைத்துப் பார்த்தான்..

அப்போதுதான் சித்தார்த்துக்கு தான் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்று விளங்கவும் “சாரி சுந்தரி.. சாரி சுந்தர் சார்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றுவிட்டான்..

அதன் பிறகு சுந்தரியின் மேல் கையை பிடித்த சுந்தர் “என்னோட வா..” என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்கு சென்றான்..

கதவை அடைத்து தாழிட்டவன் ” என்ன செஞ்சுகிட்டு இருந்த அங்க..?” என்று கேட்டான் ஒரு புருவத்தை தூக்கி அவளை தீர்க்கமாக பார்த்தபடி..

சுந்தரி அவன் தன்னை சந்தேகப்பட்டு தான் அப்படி கேட்கிறான் என்று நினைத்து “என்ன செஞ்சுகிட்டு இருந்தேன்?” என்று திரும்பவும் கேட்க

“என்ன நெனச்சு இப்ப அங்க அப்படி பண்ண?” என்று கேட்டான்..

“என்ன பண்ணேன்..?” என்று அவள் மறுபடியும் அவன் கேள்வி தன்னை பாதிக்கவே இவ்லை என்பது போல் கேட்க

“அந்த சித்தார்த் உன்னை கட்டிபிடிக்கும் போது நீ எதுவுமே பண்ணாம இருந்தா.. நீயும் அவன் மேல ஆசையா இருக்கேன்னு நெனைச்சு உன்மேல கோபப்படுவேன்.. சந்தேகப்படுவேன்னு நினைச்சியா..?”

தான் மனதில் நினைத்ததை அப்படியே அவன் வாயிலிருந்து கேட்டவள் ஸ்தம்பித்து நின்றாள் அவன் கேள்வியில்..

“உன்னை பத்தி தெரியாதவன்னா அப்படி உன்னை சந்தேகப்படலாம்.. நான் உன் மனசுக்குள்ளேயே இருக்கேன் டி.. நீ இங்க நினைக்கிறதுக்கு முன்னாடி..” என்று அவள் நெஞ்சில் சுட்டுவிரலால் சுட்டிக்காட்டியவன் “இங்கே எனக்கு தெரிஞ்சிடும்..” என்று தன் நெஞ்சை சுட்டிக்காட்டி சொன்னான்..

“இல்ல.. நான் அந்த சித்தார்த்தை விரும்புறேன் அப்படின்னு நீ பொய்யை சொன்னேன்னா.. நீ விரும்புறேன்னு சொன்னதுக்காக உன்னை அவன்கிட்ட அப்படியே தூக்கிக் கொடுத்துட்டு நான் போக மாட்டேன் சுந்தரி.. சுந்தருக்கு மட்டுமே சொந்தமானவ நீ.. இந்த சுந்தர் சுந்தரிக்கு மட்டுமே சொந்தமானவன்.. இதுல எந்த மாற்றமும் கிடையாது.. இந்த ஜென்மத்துல நான் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. இதை நல்லா இங்க போட்டு வச்சுக்கோ..”

அவள் நெற்றியின் பக்கவாட்டில் சுட்டிக்காட்டி கூறவும் அவள் அப்படியே வாய் பிளந்து பேசுவதற்கு வார்த்தை இல்லாமல் அவனையே விழி உருட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்..

“ஆனா சுந்தரி செல்லம்.. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கடி.. அந்த வானத்திலிருந்து யாரோ தேவதை பொண்ணு இறங்கி வந்த மாதிரி எனக்காகவே பொறந்து வளர்ந்த என் அழகிடி நீ.. அப்படி எல்லாம் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..” என்று சொன்னவன் அவள் எதிர்பாராத நேரம் அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்தி அவள் இதழில் தன் இதழால் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்தான்..

இந்த திடீர் முத்தத்தை எதிர்பார்க்காத சுந்தரி முதலில் அதிர்ந்தவள் பிறகு அந்த முத்தத்தில் கரைந்து அவனுடைய பின்னந்தலையிலிருந்த முடிக்குள் தன் விரல்களை நுழைத்து அந்த முத்தத்தை தொடர்ந்தாள்..

அவர்களுக்குள் இருந்த அத்தனை ஆசையையும் வெளிப்படுத்திய அந்த முத்தத்தில் இருந்து மூச்சு காற்றுக்காக விலகியவர்களின் கண்கள் கலங்கி இருந்தன..

“எவ்வளவு ஆசை வச்சிருக்கேடி என் மேல.. ஏண்டி இப்படி பண்ற..? உன்னையும் நீ கஷ்டப்படுத்திக்கிட்டு என்னையும் கஷ்டப்படுத்துற..?” என்று அவளை திட்டியவன்

 “சுந்தரி.. உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்.. இதை விட்டா எனக்கு சரியான நேரம் கிடைக்கும்னு தோணல.. நான் உன்னை விரும்பறேன்.. மனசார விரும்பறேன்.. எப்போலருந்து நான் உன்னை லவ் பண்றேன்னு நீ என்னை கேட்டா அதுக்கு என்கிட்ட பதில் இல்ல.. நீ உங்க வீட்டுல சூசைட் அட்டெம்ப்ட் பண்ணப்போ தான் உன் மேல எனக்கு இருந்த காதலை நான் புரிஞ்சுக்கிட்டேன்.. நீ இல்லேன்னா எனக்கு வாழ்க்கையே கிடையாது.. நீ இல்லனா அடுத்த நிமிஷம் நான் செத்துருவேன்.. இல்ல நடப்பொணமா ஆயிடுவேன்..  ஐ லவ் யூ சுந்தரி.. ப்ளீஸ்..  எதுக்காகவும் என்னை தூக்கி எறிஞ்சிடாத.. அதை என்னால தாங்க முடியாது.. எனக்கு நல்லது நடக்கணும்கறதுக்காக கூட என்னை தள்ளி வச்சு என்னை ஒண்ணுமே இல்லாதவனாக்கிடாதடி..” என்று சொல்லி மறுபடியும் அவள் இதழில் பட்டும் படாமல் ஒரு முத்தம் பதித்து அங்கிருந்து கதவை திறந்து கொண்டு சென்று விட்டான் சுந்தர்..

சுந்தரிக்கோ அவன் பேசிய வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் அவள் காதில் ரீங்கரித்துக்

கொண்டிருக்க அப்படியே நின்று கொண்டிருந்தாள் அசைவு இல்லாமல் அவன் போன வழியை பார்த்துக் கொண்டு..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!