எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 18

4.7
(17)

புயல் – 18

இந்த பிரச்சனை எல்லாம் முடிந்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள்.

“யாரோ உன்னுடைய பேரை கெடுப்பதற்காக தான் வேணும்னே இப்படி எல்லாம் செஞ்சிருக்காங்க. அது மட்டும் இல்லாம இப்போ இது மீடியாவுல வந்துட்டதால உன் மேல கேஸ் போடவும் நிறைய சான்ஸ் இருக்கு. அதுக்கு நீயும் வேதவள்ளியும் உங்க சைடு கிளாரிஃபிகேஷனை கொடுக்கணும்”.

சற்று நேரம் எதையோ சிந்தித்த சூரியா, “சரி, நேத்து ஆக்சிடென்டலா தான் அப்படி ஒரு விஷயம் நடந்ததுனு நாங்க சொல்லிடுறோம்” என்றவன் வேதவள்ளியை உறுத்து விழித்தவாறு, “சொல்லுவ தான” என்றது தான் தாமதம்.

அவளின் தலையோ வேகமாக ‘ஆமாம்’ என்று ஆடியது

சீதாவிற்கு வேதவள்ளியை பார்த்து சலிப்பாக இருந்தது, “எதுக்கு தான் இப்படி பயந்து நடுங்குற.. உன் மேல இந்த விஷயத்தில் எந்த தப்பும் இல்லை அப்புறம் ஏன் நீ இப்படி பயப்படுற?”.

“ஐயோ! வேண்டாம் சீதா.. என்னால இவரோட வாழ முடியாது. பார்த்தல்ல உங்க எல்லார் முன்னாடியும் எப்படி எல்லாம் பேசுறார்னு இவரோட எப்படி வாழ்க்கை முழுக்க என்னால வாழ முடியும். எனக்கு வேண்டவே வேண்டாம்” என்றாள் பதறி கொண்டு.

“இது ஆக்சிடென்டலா தான் நடந்துச்சுன்னு சொல்றதுக்கு உண்மையிலேயே உங்களுக்கு சம்மதமா வேதவள்ளி” என்றான் ராம்.

“என்ன பேசுற ராம் அப்போ நான் வேணும்னே பண்ணேன்னு அவளை சொல்ல சொல்றியா”.

“ச்ச.. ச்ச.. நான் அப்படி சொல்லல டா இதுக்கு அப்புறம் பியூச்சர்ல அவங்க நிறைய இஷ்யூஸ் பேஸ் பண்ண வேண்டி வரலாம் அதுக்காக தான் கேட்கிறேன்”.

“முடியாது.. இந்த விஷயத்துல இவங்க ரெண்டு பேரும் இது தெரியாம நடந்துச்சுன்னு மீடியா முன்னாடி சொல்ல ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க மாட்டேன்” என்றார் தாத்தா திட்டவட்டமாக.

“தாத்தா இப்ப நீங்க என்ன பண்ணனும்னு சொல்றீங்க” என்று கடுப்பாக கேட்டான் சூர்யா.

“இங்க பாரு சூர்யா அவங்க என்னன்னு நியூஸ்ல போட்டு இருக்காங்கன்னு பார்த்தியா.. உன்னால வேதவள்ளியுடைய வாழ்க்கையே நாசமா போயிடுச்சு அப்படி இப்படின்னு என்னென்னமோ எழுதி இருக்காங்க. அது வரைக்கும் மட்டும் அவங்க போடல.. இங்க பாரு அதுக்கு அப்புறம் வேதவள்ளி நம்ம வீட்டுக்கு வந்து நேத்து நைட்டு ஸ்டே பண்ணதையும் சேர்த்து தான் போட்டு இருக்காங்க” என்று மற்றும் ஒரு வீடியோவை அவனிடம் காட்டினார்.

ஆம், இதுவுமே பிரேமின் வேலை தான்.

அங்கிருந்து அவர்கள் கிளம்பிய பிறகும் கூட ஒரு ஆளை நியமித்து சூர்யாவும் வேதவள்ளியும் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டம் விட சொல்லியிருந்தான். அவன் தான் வேதவள்ளி இன்னும் சூர்யாவின் வீட்டில் இருப்பதை அவனுக்கு வீடியோ ஆதாரத்துடன் அனுப்பி இருந்தான்.

அந்த வீடியோவும் அடுத்ததாக நியூஸ் சேனலில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.

“வாட் த ஹெல்! இங்க என்ன நடந்துட்டு இருக்கு” என்றவனுக்கு அத்தனை ஆத்திரம் கோபத்தில் அவனின் முகமே சிவந்து போய்விட்டது.

“சார் நான் வேணும்னா மீடியாவுல பேசுறனே.. இது எதுவுமே தெரியாம தான் நடந்ததுனு நானே சொல்லிடுறேன்” என்று சூர்யாவின் கோபத்தை கண்டு வேதவள்ளி அவசரமாக கூறவும்.

“கல்யாணம் வேணும்னா தெரியாம நடந்ததுனு சொல்லலாம். ஆனா நேத்து நைட் ஃபுல்லா நீ இங்க இருந்து இருக்கேன்னு நியூஸ்ல போடுறாங்க.. நீயே வெளியில் போய் ஒன்னும் நடக்கலைன்னு சொன்னாலும் அதை யாரும் நம்ப மாட்டாங்க மா. இதனால உன் வாழ்க்கை தான் வீணா போகும். அதுவும் மத்தவங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் உன்னால பதில் கூட சொல்ல முடியாது”.

சூர்யாவிற்கு கோபமும் ஆத்திரமும் அதிகமாக இருக்க. எதிலும் சரிவர தன் கவனத்தை செலுத்த முடியவில்லை. சற்று நேரம் தன் முகத்தை அழுந்த தேய்த்து தன் கண்களை மூடி அமர்ந்திருந்தவன் தன்னை சற்று நிதானப்படுத்தி கொண்டு மீண்டும் தன் செல்பேசியை ஆன் செய்து அதில் நேற்று முதல் போடப்பட்ட அனைத்து வீடியோக்களையும் ஒன்று விடாமல் பார்த்தான்.

இறுதியாக பிரேக்கிங் நியூஸில் ஓடிக் கொண்டிருக்கும் செய்தியை பார்த்தான். வேதவள்ளியை கட்டாயப்படுத்தி அவன் தாலி கட்டியதாகவும் அதோடு மட்டுமல்லாமல் அவளை தன் வீட்டிற்கே அவளின் விருப்பமின்றி அழைத்து சென்றதாகவும் செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

அதை பார்த்தவனுக்கு பிபி ஏகத்திற்கும் ஏகிற. அதற்கு மேல் அந்த செய்திக்கு கீழே வந்திருக்கும் கமெண்ட்டுகள் தான் அவனின் ரத்த கொதிப்பை அதிகரித்தது.

‘விருப்பம் இல்லாம தாலி கட்டி அந்த பொண்ண கூப்பிட்டு போய் அப்படி என்ன பண்ணி இருப்பான்’.

‘ராத்திரி முழுக்க கூட வச்சிருந்து இருக்கான். சும்மா உக்காந்து பூஜையா பண்ணி இருப்பான்..’

‘அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’.

மேலும் எத்தனையோ கமெண்டுகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு எல்லாம் கொச்சையாகவும் எழுதி போட்டிருந்தனர்.

சிலர் வேதவள்ளியை பற்றியும் போட்டு இருக்க.. அவனுக்குமே இப்பொழுது என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.

“சூர்யா இந்த விஷயத்துல தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு இதுல உங்க ரெண்டு பேருடைய வாழ்க்கைமே சம்மந்தப்பட்டிருக்கு”.

“சொல்லுங்க தாத்தா”.

“நாம ஒரு பிரஸ்மீட் அரேஞ்ச் பண்ணலாம். அதுல நீங்க ரெண்டு பேரும் விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொல்லணும்”.

அவர் கூறியதை கேட்டு இருவருமே அதிர்ந்து விழிக்க, “என்ன சொல்றீங்க தாத்தா?”.

“தயவு செஞ்சு நான் சொல்ற மாதிரி செய் சூர்யா நியூஸ்ல வந்த கமெண்ட் எல்லாம் பார்த்த தானே” என்றதுமே அவனிடம் மௌனம்.

இத்தனை நேரம் அவனும் வேதவள்ளியை திட்டினான் தான். ஆனாலும் சற்று நிதானமாக யோசிக்கும் பொழுது அவளின் நிலை இவனுக்கும் நன்கு புரிந்தது. தன்னால் தான் அவளுக்கும் இப்பொழுது இப்படி ஒரு சிக்கல் என்ற நிதர்சனம் அவனின் முகத்தில் அறைந்தது.

என்ன தான் அவளை அவன் குற்றம் சாட்டினாலும் தவறு மொத்தமும் முழுக்க முழுக்க தன் மேல் தான் என்பது அவனுக்குமே புரிந்தது.

பிரேமும் அக்ஷ்ராவும் பேசியதை எண்ணி அதிகமாக குடித்த தன் முட்டாள் தனத்தை எண்ணி இப்பொழுது வருந்தினான். அதனால் தானே இத்தனை சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது.

மேலும் தொடர்ந்த தாத்தா, “ராம் நாளைக்கே சூர்யாவுக்கும் வேதவள்ளிக்கும் நம்ம ரிசப்ஷன் வைக்கணும்”.

“ஐயோ சார்! அதெல்லாம் எதுவும் வேண்டாம்” என்று வேதவள்ளி பதறி கொண்டு கூறவும்.

“இங்க பாருமா நாங்க செய்யுறது உனக்காகவும் தான்”.

“இல்ல வேண்டாம் சார். என்னால இவரோட வாழ முடியாது”.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவனுக்கு அவளின் வார்த்தை வேறு மேலும் அவனின் கோபத்தை தூண்டும் படியாக தான் இருந்தது.

“ஏன்?” என்றான் தன் கோபத்தை அடக்கிய குரலில்.

அவனின் கேள்விக்கு பதில் உரைக்க முடியாமல் வேதவள்ளி தன் வாயை மூடிக்கொள்ளவும்.

“உன்கிட்ட தான கேக்குறேன் ஏன் வாழ முடியாது”.

அவளோ பயத்தில் கையை பிசைந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருக்கவும்.

சற்று நேரம் சிந்தித்த சூர்யா தன் தாத்தாவை பார்த்து, “தாத்தா எனக்கு நீங்க எது செஞ்சாலும் ஓகே தான். ஃபர்ஸ்ட் ஒரு பிரஸ்மீட் அரேஞ்ச் பண்ணுங்க. அதுல எனக்கும் இவளுக்கும் விருப்பப்பட்டு தான் இந்த கல்யாணம் நடந்துச்சுன்னு நாங்க நியூஸ் கொடுக்கிறோம். அதுக்கு அப்புறம் நீங்க எது செஞ்சாலும் எனக்கு சம்மதம்” என்றவனோ வேதவள்ளியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்கு எழுந்து சென்று விட்டான்.

அவனுக்குள் என்ன மாதிரியான உணர்வு என்று அவனால் கூற முடியவில்லை. அன்று அக்ஷ்ரா கூறிய அதே வார்த்தையை இன்று இவளும் கூறிவிட்டாளே..

தன்னுடன் இவளாலும் வாழ முடியாதா.. ஏன் அப்படி நான் என்ன செய்து விட்டேன் என்ற பல கேள்விகள் அவனுக்குள் எழ. இப்பொழுது இருக்கும் சூழலில் வேதவள்ளியின் வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்திருக்கிறான்.

ஏனெனில், தாங்கள் இருவருமே விருப்பமில்லாமல் தான் இந்த திருமணம் நடந்தது என்று கூறிவிட்டு வெளியே சென்றால் வேதவள்ளி எதிர் கொள்ள வேண்டிய கேள்விகள் எப்படி இருக்கும் என்பதை சூர்யாவால் நன்கு அறிய முடிந்தது. அதன் வெளிப்பாடு தான் இந்த முடிவு.

என்ன இருந்தாலும் சாதாரணமான ஒரு பெண்ணால் இப்படியான சூழ்நிலையை அவ்வளவு எளிதில் கடந்து வந்து விட முடியாதே என்பதை நன்கு உணர்ந்தவன் இப்பொழுது இருக்கும் சூழலில் இருவருமே விருப்பப்பட்ட தான் திருமணத்தை செய்து கொண்டோம் என்று கூறுவது தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தான்.

பின்னர் வேதவள்ளிக்கு விருப்பமான வாழ்க்கையை நாமே அமைத்துக் கொடுக்கலாம் என்றும் யோசித்து வைத்துக் கொண்டான்.

அவன் சென்ற பிறகு வேதவள்ளிக்கு தான் பெரும் பயம் பிடித்துக் கொண்டது. அவனின் எண்ணத்தை அவளால் சற்றும் கணிக்க முடியவில்லை.

சீதாவும் செய்தி சேனலில் ஒளிபரப்பாகும் செய்தியை பார்த்தவளிற்கு சூர்யா கூறி செல்வது தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அவள் பேசி ஒருவாறு வேதவள்ளியை சம்மதிக்க வைத்து விட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சூர்யா கூறியது போல் பிரஸ்மீட்டை ஏற்பாடு செய்திருந்தான் ராம்குமார்.

அடுத்தடுத்த வேலைகள் கடகடவென அரங்கேறியது.

செய்தியாளர்கள் சந்திப்பில் சூர்யாவிடமும் வேதவள்ளியிடமும் கேட்பதற்காக பல கேள்விகளை எடுத்துக் கொண்டு வந்திருந்த செய்தியாளர்கள் அனைவரின் வாயையும் அடைப்பதாக இருந்தது அவனின் பதில்.

வேதவள்ளிக்கோ என்ன பேசுவது என்று புரியாத நிலை. என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற மனநிலையோடு தான் அந்த பிரஸ் மீட்டிற்குள் நுழைந்தாள்.

சரியாக அவ்விடத்திற்குள் நுழைந்ததும் சூர்யா அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு அவளை தன்னுடன் நெருக்கமாக அழைத்து வரவும்.

அவளுக்கு தடதடவென உதற தொடங்கி விட்டது. தன் பதட்டத்தை முகத்தில் காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டுப் போனாள்.

“உங்க எல்லாரையும் இங்க கூப்பிட்டு இருக்கிறது எங்களுடைய மேரேஜ் அனவுன்ஸ்மென்ட்ட சொல்றதுக்காக தான். நானும் வேதவள்ளியும் அவங்க என்னுடைய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தது முதல் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம். நேத்து எதிர்பாராமல் மேரேஜ் செஞ்சுக்கிற மாதிரி சிச்சுவேஷன் ஆகிடுச்சு. அதனால தான் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஆனால் நியூஸ் சேனல்ல எல்லாம் வேற விதமா அது டெலிகாஸ்ட் ஆனதால் தான் இப்போ இதை உங்க எல்லார்கிட்டயும் சொல்ற மாதிரி பிரஸ் மீட் வச்சு எக்ஸ்பிளைன் பண்ணிக்கிட்டு இருக்கோம்”.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!