உயிர் 15
ஈஸ்வரன் சென்னைக்கு கிளம்பிச் சென்று சில நாட்கள் ஆகியிருந்தது.
மீனாட்சியும் கோமதியும் சங்கர பாண்டியனின் முடிவினை பற்றி யோசித்து கொண்டிருந்தனர்.
சங்கர பாண்டியனுக்கும் கோமதிக்குமே சண்டை வெடித்துக் கொண்டிருந்தது.
கோமதியோ மகளிடம், “மீனாட்சி...சண்டை காரன் கால்ல விழுகுறத விட சாட்சிக்காரன் கால்ல விழுகறது மேல்…பேசாம ஆதி கிட்டயே நேரா போய் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்லிட்டு வந்துடு மா. ஆதி வேணாம்னு சொன்னா நிச்சயம் உங்க அப்பா மேற்கொண்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய மாட்டார். போம்மா…போய் அவன் கிட்ட பேசிட்டு வந்துடு…” என்றார்.
மீனாட்சியுமே அதைத்தான் யோசித்து வைத்திருந்தாள்.
“ சரிம்மா…” என்றவள் வெளியே வருவதற்கும் வடிவாம்பாளும் மயில்வாகனமும் வீட்டினுள்ளே நுழைந்தார்கள்.
“ வா வடிவு….என்ன இவ்வளவு வெள்ளை வந்துருக்க..?” என்றார் சங்கர பாண்டியன்.
“ நல்ல காரியத்தை தள்ளி போடக்கூடாது பாருண்ணே…அதேன் …நம்ம வண்டியூர் ஜோசியர் கிட்ட போய் ரெண்டு பேரோட ஜாதகத்தை காமிச்சு பொருத்தம் பாத்துட்டு வந்தோம். சும்மா சொல்லக்கூடாதுண்ணே…ரெண்டு பேரோட ஜாதகமும் அவ்வளவு அம்சமா பொருந்திருக்காம். இந்த கல்யாணம் நடந்தா சொக்கநாதர் மீனாட்சி மாதிரி அவ்வளவு அன்னியோன்மா இருப்பாங்களாம். கையோட கல்யாணத்துக்கு நாளும் குறிச்சிட்டு வந்துட்டோம்…” என்றவர் மீனாட்சி திகைத்து நிற்பதைக் கண்டு , “ வாம்மா…மருமவளே…. உங்கப்பா சொல்லிருப்பாருல்ல…. உனக்கும் ஆதிக்கும் கல்யாணம் பேசி முடிச்சிருக்கு. அவனுக்கு உன்னையே ரொம்ப பிடிச்சிருக்கு. என் புள்ளையும் நல்ல அம்சமா…, தேசிங்கு ராசா கணக்கால்ல இருக்கான். . இதுல வேணாம் சொல்ல ஒண்ணுமேயில்லை. எங்க அண்ணே…எது செஞ்சாலும் உன்னோட நல்லதுக்கு தான் பண்ணும் அதை மட்டும் நினைவில வச்சிக்க…. நகை , நட்டு, சீர் செனத்தியெல்லாம் நான் எதிர்பாக்க மாட்டேன். இப்ப கூட நீ கட்டுன புடவையோட வந்தா கூட சரிதேன்….” என்றார்.
கோமதியோ மனதினுள் , ” ஆரு…நீ…? உன்னையே பத்தி எனக்கு தெரியாதா….? நீ கேக்காமலேயே சொத்து.. பத்து… தோட்டம் தொறவெல்லாம் இந்த மனுசன் பொண்ணுக்கு எழுதி வச்சிருவாருன்னு தெரிஞ்சே தானே இந்த நாடகம். ஆடுற….?சோத்து கையால காக்காவை கூட விரட்டாத நீய்யி….. வரதட்சணை இல்லாம என் பொண்ணை ஏத்துக்கப் போற…?” என நினைத்து கொண்டு , “ ம்ம்கூம்…” என வெளிப்படையாக நொடித்துக் கொண்டார்.
அதனைக் கண்ட வடிவின் முகம் மாறியது.
“ என்னைக்கு தேதி குறிச்சிட்டு வந்துருக்கவ…?” என்றார் சங்கர பாண்டியன்.
“ ரெண்டாவது வார வெள்ளிக்கிழமை நல்ல நாளாக இருக்கு. அன்னைக்கு காலையில நிச்சயமும் அது முடிஞ்சு கல்யாணமும் வச்சிடலாம்…. அடுத்த வாரத்திலேயே நகை, புடவை மத்த சொந்த பந்தங்களுக்கு துணிமணி எல்லாம் எடுத்துட்டு வந்துடலாம். ஆதியும் நேஹா புள்ளையும் இன்னைக்கு டெல்லிக்கு போறாங்களாம். கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் வர முடியுமாம். அவனுக்கு வேண்டியதை அவன் பாத்துக்கிறேன்னுட்டான்.” என் செய்ய வேண்டிய வேலைகளை மளமளவென பட்டியலிட்டுக் கொண்டிருந்தார் வடிவு.
மீனாட்சியும் கோமதியும் வாயடைத்து போய் நின்றிருந்தனர்.
“ஏன் இவ்வளவு அவசரம் அவசரமாக திருமண ஏற்பாடுகள்…? தந்தை கூட இவ்வளவு விரைவாக திருமண ஏற்பாடுகளை செய்ய விரும்ப மாட்டாரே…?” என்ற கேள்வி மூளையை அரித்துத் தின்றது.
இத்திட்டத்தின் காரணகர்த்தாவாகிய ஆதியோ , முக்கியமான வேலைக்காக டெல்லிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.
தனது தாயின் மூலமாக அவசரமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தான்.
நேஹாவோ ,“ ஆதி…கிளம்பியாச்சா…! சீக்கிரம் டா…..”
என்றவள் அவனருகே வந்து “ ஆதி நிஜமாவே மீனாட்சியை கல்யாணம் பண்ணிக்க போறீயா…? அவ தான் ஈஸ்வரனை விரும்புறாளே டா…? ஈஸ்வரனும் அவளை தான் டா விரும்புறாரு. ஆதி…..பீ…. சீரியஸ் நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரியுதா….? பாவம் டா ரெண்டு பேரும்….மீனாட்சியை நீ உண்மையா விரும்பியிருந்தன்னா இப்படியெல்லாம் பண்ணமாட்ட ஆதி…. ரெண்டு குடும்பத்து சண்டையை மேலும் பெரிசு பண்ணி அவளை மேரேஜ் பண்ணப்போற….? வேண்டாம் ஆதி….லீவ் இட்… பல வருஷமா ஒருத்தரை ஒருத்தர் மனப்பூர்வமாக விரும்புறாங்க ஆதி….ப்ளீஸ்….டேட் பிக்ஸ் பண்ண உங்க அம்மா மாமா வீட்டுக்கு போயிருக்காங்க…நிறுத்திடு ஆதி…. இன்னும் ஒண்ணும் ஆகல….நீ வா நம்ம லண்டனுக்கே போயிடலாம். மனசுல ஒருத்தனை நினைச்சிட்டு வேற ஒருத்தனுக்கு எந்த பொண்ணும் கழுத்து நீட்ட மாட்டா… நீ மீனாட்சியை குறைச்சலா எடை போடத டா…சொல்றதை கேளு ஆதி….” என தொண்டை கமற அவனிடம் வாதிட்டு கொண்டிருந்தாள் நேஹா.
அவனோ அதெல்லாம் காதிலேயே வாங்காமல், “ லுக் ஹியர் நேஹா….நான் என்ன பண்ணனும்னு நீ எனக்கு டீச் பண்ணாத…! ஐ நோ..வாட் ஐ ஹேவ் டு டூ…புரியுதா… நான் கூட தான் அவ மேல உயிரையே வச்சிருக்கேன்…சத்தியமா அவளை விட்டேனா செத்துடுவேன் டி…முடியலை…அவளுக்காக தான் வந்தேன்.. அவளுக்காக தான் இதெல்லாம்… எனக்குள்ள அவ இருந்து தீயா தகிச்சிட்டு இருக்கா….நான் பண்றது சரி தப்புங்கறதை விட அவ எனக்கு வேணும். அண்ட் எனி காஸ்ட். எனக்கு இந்த காசு…பணம்…சொத்து…சொந்தம் எதுவும் வேணாம். மீனாட்சி மட்டும் போதும்… ஜஸ்ட் ஐ நீட் ஹெர்…இடியட்….ஐ நீட்…ஹெர்….” என மெதுவாக ஆரம்பித்து அவனது பேச்சு ஆவேசமாகி தொண்டை கிழிய கத்தினான்.
அவனது கடத்தலில் பயந்து போன நேஹா வேகமாக அவனருகே வந்து , “ஆதி…..ஆர்…யூ…ஒகே… கூல்….” என்றாள்.
ஆதியோ தாடியை நீவியபடி மெதுவாக அவளை நோக்கி ,” பைத்தியக்காரன் மாதிரி கத்திட்டு இருக்கேன் ல….எஸ்…ஐ ஹேவ் கான் மேட்…ஐ ஹேவ் கான் மேட் வித் ஹெர்….” என தனது நெஞ்சினை நீவியபடி மெதுவாக கூறினான்.
“ அப்ப…ஈஸ்வரனோட நிலைமை..?”
“ நீ அவனை கல்யாணம் பண்ணிக்கோ…” என குண்டைத் தூக்கி போட்டான்.
“ வாட்…..உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு…? இன்னைக்கு ஏன் இப்படி உளறி கொட்ற…? “
“ உளறல …..நிஜமா தான் சொல்றேன்…அவனை நீ கல்யாணம் பண்ணிக்கோ…ரொம்ப நல்லவன்…அவனை விட யாரும் உன்னையே நல்லா பாத்துக்க மாட்டாங்க…உன் லைஃப் நல்லா இருக்கும். நீ இழந்த பாசத்தையும் உண்மையான அன்பையும் அவனால மட்டும் தான் கொடுக்க முடியும். மீனாட்சி வாய்ல இருந்தும் கொஞ்ச நாள்ல இந்த வார்த்தை வரும்…. அவனுக்கு வசதி குறைவுன்னு நீயும் என்னோட மாமா மாதிரி ஸ்டேட்ஸ் பாக்குறியா…?”
“ அட பைத்தியத்துக்கு பொறந்த அரை மெண்டலே…!. இவ்வளவு நாள் என் கிட்ட பழகி என்னைய பத்தி இப்படிதான் தெரிஞ்சு வச்சிருக்கியா…?
“ ஏய்…! யாரைப் பார்த்து பைத்தியம்ங்கற…? யாரை அரை மெண்டல்ங்கற…?”
“ ஷ்ஷ்..ப்ப்பா ஒரு ஃப்ளோல வந்துடுச்சு. விடு… பேச்சை மாத்துற ஆதி நடக்காத ஒண்ணை நீ யோசிக்குற. நீ…பண்றது தப்பு…நீ என்ன வேணாலும் பண்ணு…நான் இங்கிருந்து கிளம்புறேன்…” என்று தனது பையை தூக்கிக்கொண்டு நடந்தாள் நேஹா.
“நேஹா ஒன் மினிட்….” என்றபடி அவளருகே வந்து நின்றவன் , “ நா கேக்கற ஒரு கொஸ்டின்னுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ…” என்றான்.
“ கேட்டுத் தொலையும்…” என எரிந்து விழுந்தாள் .
லேசாக சிரித்தபடி, “ தமிழ் சினிமா பாத்து கெட்டு போயிட்ட ரொம்பவே….ஒகே…நேரா விஷயத்துக்கு வர்றேன். இந்த ஒரு மாசத்துல ஈஸ்வரன் ஒரு தடவை கூட உன்னையே இம்ப்ரெஸ் பண்ணவே இல்லை..?”