என் பிழை‌ நீ – 21

4.9
(41)

பிழை – 21

“என்ன நடந்தாலும் சரி இந்த விஷயத்துல நான் அவளை சும்மா விடுறதா இல்ல” என்று கோபம் பொங்க பேசியவளை பார்த்த சாதனா, “நாம என்ன ஆஷா பண்ண முடியும் மதன் சார் தான் அவளை விரும்புறாரே”.

“வாயை மூடு சாதனா! அவருக்கு முன்னாடியில் இருந்து நான் அவரை விரும்பிக்கிட்டு இருக்கேன். நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா.. என்ன நடந்தாலும் சரி எனக்கு அவர் வேணும்” என்று தன் பிடியிலேயே வீம்பாக நின்றாள்.

“சரி பாத்துக்கலாம் விடு. நீ அதை நினைச்சு ஒரி பண்ணிக்காத எக்ஸாம் வேற வருது”.

மறுநாள் முதல் இனியாள் வழக்கம்போல் கல்லூரிக்கு வர தொடங்கிவிட்டாள். ஆஷாவின் பார்வை இனியாளையும், மதனையும் துளைத்தெடுத்தது. மதன் தான் இனியாள் அறியாத வண்ணம் அவளை பார்த்தானே தவிர, இனியாள் அவனை பார்த்ததாகவே தெரியவில்லை.

இரண்டு நாட்கள் விடுபட்ட பாடத்தையும் அவனே இனியாளுக்கு தனிமையில் சொல்லியும் கொடுத்தான். இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஆஷாவிற்கு புகைச்சலாக இருந்தது.

இப்பொழுது அவள் தன்னைவிட அதிக மதிப்பெண் வாங்குவது கூட அவளுக்கு பெரிய விஷயமாக தோன்றவில்லை. என் மதனை என்னிடமிருந்து தட்டிப் பறித்து விட்டாளே என்ற ஆத்திரம் தான் மேலோங்கி இருந்தது.

ஆத்திர காரர்களுக்கு புத்தி மட்டு என்று கூறுவது ஆஷாவின் விஷயத்தில் நிரூபனம் ஆகிவிட்டது. மதன் தான் இனியாளை விரும்புகிறானே தவிர இனியாள் அவனை சற்றும் கண்டு கொள்ளவில்லை.

அப்படி என்றால் இனியாளுக்கு இது எதுவுமே தெரியாது என்று தானே அர்த்தம். கோபம் கண்ணை மறைக்க.. இதை கூட சரியாக சிந்திக்க தவறிவிட்டாள் ஆஷா.

கொஞ்சமே கொஞ்சம் இனியாளின் புறமிருந்து சிந்தித்து பார்த்திருந்தாலே பிற்காலத்தில் நடக்கவிருக்கும் பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்.

அந்த ஆண்டிற்கான பரீட்சையும் இனிதே நடைபெற்று முடிந்தது. அனைவரும் பரீட்சை முடிந்த குதூகலத்தில் கதைத்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரியின் விடுப்பு தொடங்கப் போகிறது. அதன் பிறகு ஒரு மாதம் கழித்து தான் கல்லூரி மீண்டும் இயங்கும்.

மதன் வழக்கம்போல் அவர்களின் வகுப்பறைக்குள் நுழைந்தவன் இனியாள் இருக்கும் புறத்தை ஒரு நொடி பார்த்துவிட்டு தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

“எல்லாரும் எக்ஸாம் எப்படி பண்ணீங்க?” என்று அவன் பொதுவாக கேள்வி எழுப்பவும்.

அனைவரும் கோரசாக, “நல்லா பண்ணோம் சார்” என்று பதில் கொடுத்தனர்.

“குட் இன்னையோட இந்த செம் எக்ஸாம் கம்ப்ளீட் ஆகிடுச்சு. இன்னும் ஒன் வீக்ல லீவ் வரப்போகுது என்ஜாய் யுவர் டேஸ்” என்றது தான் தாமதம் அங்கே பெரும் கரகோஷமும், கூச்சலும் எழுந்து அடங்கியது.

அந்நேரம் பியூன் சர்குலருடன் இவர்களின் வகுப்பறையின் வாயிலில் நிற்கவும். அவனை உள்ளே வரும்படி சைகை செய்த மதன் அவன் கொண்டு வந்த நோட்டீசை வாசித்து விட்டு மீண்டும் அவனிடமே கொடுத்து அனுப்பினான்.

அனைவரும் விடுப்பிற்கான அறிவிப்பு என்று அவனின் முகத்தையே ஆவலாக பார்க்கவும்.

அவனோ, “உங்க எல்லாருக்கும் ஒரு ஹாப்பி நியூஸ் சொல்ல போறேன். இன்னும் ஒன் வீக்ல உங்களுக்கு வெக்கேஷன் ஸ்டார்ட் ஆக போகுது. சோ உங்க எல்லாரையும் ஒரு ட்ரிப் கூட்டிட்டு போகலாம்னு காலேஜ் அரேஞ்ச் பண்ணி இருக்காங்க” என்றதும் மீண்டும் அங்கே கூச்சலும் கரகோஷமும் தொடங்கியது.

“கய்ஸ் லிசன், இன்னும் 2 டேஸ் தான் டைம் இருக்கு யார் யார் வரீங்கன்னு நேம் கொடுக்கணும். தேர்ட் டே இங்க இருந்து கிளம்புறோம். நெக்ஸ்ட் 3 டேஸ் ட்ரிப்.. அந்த வீகென்ட் ஊருக்கு திரும்பிடலாம். அதுக்கப்புறம் உங்களுடைய வெக்கேஷன் ஸ்டார்ட் ஆகுது. யார் யாரெல்லாம் ட்ரிப்புக்கு வரீங்கன்னு இந்த த்ரீ டேஸ்குள்ள என்கிட்ட வந்து உங்க நேம் கொடுங்க. ஐ அம் லீவிங் நவ்” என்று விட்டு சென்று விட்டான்.

வகுப்பறையே பெரும் ஆரவாரத்தோடு காட்சி அளித்தது. மாணவ மாணவிகள் அனைவரும் குதூகலித்து கொண்டு கலகலவென பேசிக்கொண்டு இருந்தனர்.

அந்நேரம் இனியாள் மட்டும் எதையோ யோசித்துக்கொண்டு அமர்ந்திருக்க. வெளியூர் செல்ல போகும் உற்சாகத்தோடு அனிதா, “ஹே என்னடி நாங்க எல்லாம் என்ஜாய் பண்ணிட்டு இருக்கோம். நீ மட்டும் இப்படி உம்முனு உட்கார்ந்திருக்க. எல்லாரும் ஒன்னா சேர்ந்து ட்ரிப் போக போறோம். எனக்கு எவ்வளவு எக்சைட்மெண்டா இருக்கு தெரியுமா.. நாம அங்க போய் ஜாலியா என்ஜாய் பண்ணலாம்”.

“இல்ல அனிதா என்னால வர முடியாது”.

“ஏன் டி அப்படி சொல்ற?”.

“எதுக்கு தேவையில்லாத செலவு”.

அவளின் மனதிற்குள் அவ்வபொழுது அவளின் அண்ணி குத்தி காட்டுவது போல் பேசும் பேச்சுக்கள் தான் தோன்றி மறைந்தது.

ஆம், என்ன தான் தன் அண்ணனுக்கு இனியாளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவள் நினைத்திருந்தாலுமே, அவ்வபொழுது அவளின் மனதிற்குள் பொறாமை தலை தூக்காமல் இல்லை.

இனியாளின் தந்தை அவளை தாங்குவதை பார்க்கும் பொழுதெல்லாம் இவளுக்குள் பொறாமை மூண்ட தான் செய்கிறது. என்ன செய்வது.. அதற்கும் மேல் அவளை மூட்டி விடுவதற்காகவே அவளின் தாய் வேறு இருக்கிறார் கேட்கவும் வேண்டுமா..

“கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் இவ்வளவு செலவு பண்ணி இப்ப படிக்க வைக்கலைன்னு யார் அழுதா.. ஒழுங்கா இந்த பணத்தை எல்லாம் கல்யாண செலவுக்கு யூஸ் பண்ணி இருக்கலாம்”.

“வீட்ல பண்ண வேண்டியது எவ்வளவோ செலவு இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு பணத்தை எல்லாம் தண்டமா அழறாங்க”.

அப்படி இப்படி என்று இனியாளை பார்க்கும் பொழுதெல்லாம் ஜாடை மாடையாக அவளின் படிப்புக்கு உண்டாகும் செலவை வைத்து ஏதாவது அவள் மனம் நோகும்படி குத்தி காட்டி பேசிக் கொண்டே இருப்பார்.

அதற்கே அப்படி என்னும் பொழுது இப்பொழுது வெளியூர் செல்ல போகிறோம் என்று பணம் கேட்டால் வீட்டில் தேவையில்லாத பேச்சை எல்லாம் வாங்க வேண்டி இருக்கும் என்று எண்ணிய இனியாள் இந்த ட்ரிப்பிற்கு செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாள்.

“ஏய் இனியாள் அவ்வளவு எல்லாம் செலவாகாது டி” என்று அனிதா கூறிக் கொண்டிருக்கும் பொழுதே சக மாணவி ஒருத்தி, “கைஸ் நோட்டீஸ் போர்டுல ட்ரிப் பத்தின டீடெயில்ஸ் ஒட்டி இருக்காங்க. டவுட் இருக்கவங்க அங்க பாத்துக்கோங்க” என்று விட்டு நகர்ந்தாள்.

இனியாளின் கையை பிடித்த அனிதா, “சரி வா நாம போய் டீடெயில்ஸ் எல்லாம் பாத்துட்டு வருவோம்” என்று உற்சாகமாக அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

இனியாளிடம் அப்படி எந்த ஒரு உற்சாகமும் குதூகலமும் தென்படவில்லை. தன் தோழிக்காக அவளுடன் சென்றாள் அவ்வளவே..

நோட்டீஸ் போர்டை கண்டதும் அனிதா, “7000 ஆகும்னு போட்டு இருக்குடி”.

“நான் தான் அப்போவே சொன்னேன்ல த்ரீ டேஸ் ட்ரிப்னா அதிகமா தான் ஆகும். இதெல்லாம் எனக்கு செட்டாகாது அனிதா நீ போயிட்டு வா”.

“என்னடி இப்படி சொல்ற, நான் வேணும்னா அங்கிள் கிட்ட பேசி பார்க்கிறேன். அங்கிள் ரொம்ப நல்ல டைப் தானே கண்டிப்பா உன்ன அனுப்புவாங்க”.

அது அவளுக்கும் தெரியும். அவளின் தந்தை நிச்சயமாக அவள் ஆசைப்பட்டால் அனுப்பி வைப்பார். ஆனால் அவளுக்கு தான் ஏனோ அவளின் அண்ணியின் வார்த்தையை கேட்க விருப்பமில்லை.

“ப்ளீஸ் அனிதா சொன்னா கேளு என்னால் வர முடியாது.. நீங்க எல்லாம் போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க”.

அனிதாவும் எவ்வளவோ பேசி அவளை சமாதானம் செய்து பார்த்து விட்டாள். இனியாள் தன் பிடியிலேயே நிற்கவும். வேறு வழியில்லாமல், “என்னவோ பண்ணு” என்று விட்டுவிட்டாள்.

மறுநாளே அனைவரும் தங்கள் பெயரை கொடுத்து விட்டனர். இரண்டாம் நாள் அனிதா தன் பெயரை கொடுக்க செல்லவும். அவளுடன் சென்றிருந்த இனியாள் அமைதியாக நின்று இருந்தாள்.

மதன் அவளை கூர்ந்து பார்த்தவன், “நீ நேம் கொடுக்கலையா”.

“இல்ல சார் நான் வரல”.

“ஏன்?”.

“அது.. சும்மா தான் சார். இன்ட்ரஸ்ட் இல்ல” என்றவளை புரியாமல் பார்த்தவனிற்கோ உள்ளுக்குள் பெரும் ஏமாற்றம்.

இந்த ட்ரிப்பை வைத்து அவன் வேறு சில முடிவுகளை எடுத்து வைத்திருக்கிறான் அல்லவா.. இவள் வரவில்லை என்றால் அனைத்தும் பாழாய் விடுமே என்று எண்ணியவன்.

அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “ஓகே” என்றதோடு முடித்துக் கொண்டான் .

அவர்கள் மதனின் அறையிலிருந்து வெளியே வரவும். நாராயணன் அவர்களுக்கு எதிர் புறமாக வரவும் சரியாக இருந்தது.

அவரை கண்ட இனியாள் ஆச்சரியத்தோடு, “அப்பா நீங்க எங்க இங்க?”.

“பீஸ் பே பண்ண வந்தேன்டா. என்னமா அனிதா எப்படி இருக்க?”.

“நல்லா இருக்கேன் அங்கிள்” என்றாள் சுரத்தே இல்லாமல்.

“என்னம்மா என்ன ஆச்சு ஏன் ரொம்ப டல்லா பேசுற?”.

“பின்ன என்ன அங்கிள் நாங்க எல்லாரும் நாளைக்கு ட்ரிப்புக்கு போக போறோம். உங்க பொண்ணையும் வர சொன்னா ரொம்ப தான் ஓவரா சீன் போடுறா”.

“ட்ரிப்பா.. என்ன ட்ரிப்.. என்கிட்ட இனியாள் எதுவுமே சொல்லலையே”.

“எப்படி சொல்லுவா.. அவளே தான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாளே.. அதான் உங்ககிட்ட சொல்லி இருக்க மாட்டா. அவளும் வந்தா நல்லா இருக்கும்” என்று வருத்தத்தோடு கூறி முடிக்கவும்.

இனியாளை பார்த்த நாராயணன், “என்ன இனியாள் என்ன நடக்குது அனிதா எதோ ட்ரிப்புக்கு அழைச்சிட்டு போறதா சொல்றா.. இத பத்தி எல்லாம் நீ என்கிட்ட எதுவும் சொல்லலையே மா”.

“அப்பா அது வந்து நாளைக்கு எங்க காலேஜ்ல எல்லாரையும் ட்ரிப்புக்கு கூப்பிட்டு போறாங்க. நான் தான் எதற்கு தேவையில்லாம உங்க கிட்ட சொல்லனும்னு சொல்லாம விட்டுட்டேன்” என்று தன் நண்பியை முறைத்துக் கொண்டே கூறினாள்.

அனிதாவும் அவளுக்கு நாக்கை துருத்தி வெறுப்பேற்றிக் கொண்டு நின்று இருக்க.

“இங்க பாருடா இவ்வளவு நாள் தான் எக்ஸாம்னு டென்ஷனா படிச்சுக்கிட்டு இருந்த கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறதுக்கு இப்படி ட்ரிப் போறது எல்லாம் தப்பு கிடையாது. நீயும் போயிட்டு வா அனிதா ஆசைப்படுறால” என்றதுமே அனிதாவின் முகம் பிரகாசமாக, “ஐ… தேங்க்யூ அங்கிள்” என்று நின்ற இடத்திலேயே குதிக்க தொடங்கி விட்டாள்.

தான் அனுப்பி வைக்கும் இந்த ட்ரிப்பினால் தான் தன் மகளின் வாழ்க்கையே தடம் புரள போகிறது என்பதை அப்பொழுது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 41

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!