14. சிறையிடாதே கருடா

4.9
(9)

கருடா 14

 

எங்கிருந்து சூரியன் உதயமாவதைப் பார்த்தாலும், உற்சாகம் பிறப்பெடுப்பதைத் தடுக்க முடியாது. அதுவும், கடற்கரையிலிருந்து உதயமாவதைப் பார்ப்பது போல் ஒரு பேரின்பம் வேறில்லை. எப்போதாவது கடற்கரை சென்று மகிழும் கருடேந்திரனுக்கு, இங்கு வந்த நாள் முதல் அந்தத் தரிசனம் கிடைக்கிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்தச் சூரிய உதயத்தைக் கண்ணாடி வழியாகப் பிடிக்கவில்லை. சுதந்திரமாக ரசிக்க வேண்டியதைச் சிறையிட்டு ரசிப்பது போல் தெரிகிறது.

 

கண்ணாடியில், ஐவிரல்களைப் பதிய வைத்துத் தலை கவிழ்ந்து நின்றிருக்கிறான். இரவெல்லாம் ஒரு பொட்டுத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி தாலி கட்டியவள் புறம் மனம் சாய நினைத்தாலும், அவள் கொடுக்கும் வார்த்தையின் வீரியம் அதைத் தடுக்கிறது. பெரிதாக நேசம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மனையாள் என்ற உணர்வு லேசாக மனத்தின் ஓரம் ஒட்டி இருக்கிறது.

 

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவள், திரும்பிப் படுக்க முயல வலி பின்னி எடுத்தது. நேற்று விழும் பொழுது கூட இவ்வளவு வலிக்கவில்லை ரிதுவிற்கு. அந்த அசட்டுத் தைரியத்தில் அதைக் கவனிக்காமல் உறங்கி விட்டாள். இப்போது அது வேலையைக் காட்டுகிறது. 

 

“அப்பா!” என்ற ஓசைக்கு அவன் திரும்ப, இடுப்பைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடியபடி துடித்துக் கொண்டிருந்தாள். 

 

என்னவென்று கேட்க விருப்பமில்லாததால் அவன் அப்படியே இருக்க, “ஓ காட்!” எழ முயற்சித்து முடியாது படுத்து விட்டாள். 

 

“என்னாச்சு?”

 

“ரொம்ப வலிக்குது!”

 

“எங்க?”

 

“இங்கப்பா…” 

 

முதல்முறையாக, மரியாதையாக அழைக்கும் அவள் அழைப்பில் ஒரு நொடி கவனம் சிதறினாலும், “நேத்து விழுந்ததா?” விசாரித்தான். 

 

“அப்படித்தான்பா நினைக்கிறேன். வலில ஒன்னும் முடியல. எந்திரிக்கவே கஷ்டமா இருக்கு.” 

 

“அப்படியே படுத்துரு.” 

 

அறையை விட்டு வெளியேறியவன் சிறிது நல்லெண்ணையோடு உள்ளே வர, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அது தனக்கு வேண்டாம் என்பது போல், சிறிதும் அவள் முகத்தைப் பார்க்காதவன் திரும்பிப் படுக்கக் கூறினான். கருடன் காட்டும் பாராமுகம் புரிந்தாலும் கணக்கில் கொள்ளாது திரும்பிப் படுத்தாள். 

 

மேல் சட்டையை நடு முதுகுக்கு மேல் வரை உயர்த்தி விட, “டேய்! என்னடா பண்ற?” பதறிச் சட்டையை இறக்கி விட முயன்றாள். 

 

“ப்ச்! கைய எடு.” எனத் தட்டி விட்டுச் சட்டையை மேல் உயர்த்தி, “எனக்கு என்னமோ உன் முதுகைப் பார்த்தும் கூட ஃபீலிங்ஸ் வரமாட்டேங்குது. இந்த லட்சணத்துல பயம் வேற வருது.” எனச் சிடுசிடுத்துவிட்டு எண்ணெயை இடுப்பில் ஊற்றினான். 

 

“அப்போ உன்கிட்டத் தான்டா ஏதோ கோளாறு இருக்கு.”

 

எண்ணெயில் தளதளத்துக் கொண்டிருக்கும் இடுப்பில், தப்பென்று ஒரு அடி வைக்கக் கண்ணெல்லாம் கலங்கி விட்டது ரிது சதிகாவிற்கு. அதில் அவளின் திருவாய் தன்னால் மூடிக்கொள்ள நீவி விட்டுச் சுளுக்கை எடுத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும், அவன் இரு கட்டை விரலால் அழுத்தும் பொழுது படக்கூடாத வேதனையைப் பட்டுக் கதறினாள். 

 

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, சரியாகிடும்.”

 

தன் கடமை முடிந்ததென்று எழுந்தவன் கையைப் பிடித்தவள், “தேங்க்ஸ் பா!” என்க, “ம்ம்!” என்றான்.

 

“காலைலயே சூடா இருக்க போல.”

 

“இல்ல.”

 

“என்னைப் பார்த்துச் சொல்லு.”

 

“வேலை இருக்கு, விடு.” கையை உதறி விட்டு வெளியேறினான். 

 

சிறிது நேரத்தில் மீண்டும் தூக்கம் அவளை ஆட்கொண்டது. வந்து பார்த்தவன், நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பவளை அப்படியே நின்று கவனிக்க ஆரம்பித்தான். மனத்திற்குள் சலசலப்பு எழுந்த வண்ணம் இருக்க, அவள் மீது கரிசனமோ, காதலோ தெரியவில்லை. உறக்கம் கலையக்கூடாது என்பதற்காகச் சூரியன் கொடுத்த அனைத்து வெளிச்சத்தையும் மறைத்தான். 

 

அவள் பக்கத்தில், கணவன் போல் உறவாடிக் கொண்டிருந்த போனை சைலண்ட் மோடில் போட்டு ஓரம் ஒதுக்கி வைத்தான். அறையின் குளிரை அதிகம் கூட்டி வைத்துப் போர்வையைப் போர்த்தி விட்டு வெளியேற, அதுவரை தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தவள் விழிகளைத் திறந்தாள். அவன் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டிருந்த ரிதுவின் இதழ்கள் மட்டுமல்ல, கண்களும் சிரித்தது. 

 

***

 

ஓயாமல் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். ஏதாவது அதிசயம் நடந்து தன் பெற்றோர்கள் இங்கு வரக்கூடாது என்ற வேண்டுதலோடு அவன் இருக்க, எண்ணத்தைத் தோற்கடித்து ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். இருவரும் வாய் பிளந்து மருமகளின் வீட்டைக் காண, இப்படிப் பார்ப்பதைப் பார்த்தால் கடுஞ்சொற்களால் நோகடிப்பாளே எனக் கவலை கொண்டான். 

 

“இவ்ளோ பெரிய வீட்டுலயா என் மருமகள் இருக்கா?”

 

“அதான் பாரு சரளா.”

 

“இவ்ளோ பெரிய வீட்ல வாழுற பொண்ணு, நம்ம வீட்ல எப்படிங்க வந்து வாழும்.”

 

“இந்த வீட்டப் பார்த்ததுக்கு அப்புறம், எனக்கும் அந்த நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை.”

 

பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு மனம் நொந்தவன், மௌனமாக அவர்கள் முன் நிற்க, “வாங்க…” என வரவேற்றார் பொன்வண்ணன்.

 

மகனைப் பார்க்காத சரளா உள்ளே செல்ல, “எல்லாம் சரியாகிடும்டா.” என்றார் தந்தை. 

 

வார்த்தைகள் இன்றித் தலையசைக்கும் பிள்ளையின் கவலையைப் புரிந்து கொண்ட சத்யராஜ், ஆதரவாகத் தோள் மீது கை போட்டுத் தட்டிக் கொடுக்க, வாசல்வரை அழைத்துச் சென்றவன், 

 

“உள்ள போங்கப்பா…” என்றான். 

 

“நீ வரலையா?”

 

“நீங்க போங்கப்பா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.”

 

தன் சம்பந்திகளை மகிழ்வாக வரவேற்றவர், மரியாதையாக உபசரிக்க ஆரம்பித்தார். வெளியில் நின்று வாய் பிளந்தவர்கள் உள்ளே வந்ததும் திகைத்தனர். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு திகைப்பைக் கொடுத்தது. ஏதோ பெரிய பணக்கார விழாவிற்குச் சென்றது போல் அவ்வளவு தோரணையாக இருந்தது அந்த வீடு. 

 

“காபி எடுத்துக்கோங்க.”

 

“என்ன சார், நீங்க போய் எடுத்துட்டு வந்துட்டு.”

 

“இதுல என்ன இருக்கு? என் மருமகனோட பெத்தவங்களுக்கு நான் போட்டுத் தராம வேற யார் போட்டுத் தருவா?” 

 

“இருந்தாலும் சங்கடமா இருக்கு சார்.”

 

“இன்னும் என்ன சார்னு…”

 

வெள்ளந்தியாகச் சரளாவும், சத்யராஜும் புன்னகைக்க, “சம்பந்தின்னு கூப்பிடலாமே. எனக்குன்னு இருக்கற ஒரே சம்பந்தி நீங்க மட்டும் தான்.” என்றவர் முகத்தில் இந்த உறவிற்காக ஏங்கும் ஏக்கம் தென்பட்டது. 

 

அதை எதிரில் இருக்கும் இருவரும் உணர்ந்தாலும், பணம் என்னும் கௌரவம் உரிமையை வெளிக்காட்ட விடாமல் தடுத்தது. இந்த நொடி வரை மருமகளும் சரி, அவளின் பெற்றவரும் சரி, எட்ட முடியாத ஏணியாகத்தான் தெரிகிறார்கள். 

 

“உங்க தயக்கம் புரியுது. இருந்தாலும்…” 

 

“விடுங்க சார், இனி நாங்க அப்படியே கூப்பிடுறோம். நீங்க சங்கடப்படாதீங்க.” 

 

மனநிறைவாகப் புன்னகைத்தவர், மகளை அழைத்து வரச் சென்றார். அவர் சென்ற பின், தங்குத்தடை இன்றி அந்த வீட்டை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இதை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். மனம் முழுவதும் சங்கடம் எனும் பேய் ஆட்டிப் படைத்தது அவனை. 

 

மகளைத் தட்டி எழுப்பியவர் வந்திருப்பவர்களின் விவரத்தைக் கூற, “நீங்களே பேசி அனுப்புங்க.” என்றாள். 

 

“அது மரியாதையா இருக்காது ரிது.”

 

“எனக்குப் பிடிக்கல.”

 

“நீ ரொம்பத் தப்புப் பண்ற.”

 

“டார்ச்சர் பண்ணாதீங்கப்பா, பிடிக்கலைன்னு சொன்னா விட்டிடுங்க. எனக்கு அவங்ககிட்டச் சகஜமாப் பேச முடியல.”

 

“பேசவே முயற்சி பண்ணாம, சகஜமாப் பேச முடியலன்னு சொன்னா எப்படி? ஒழுங்கா ரெடி ஆகிட்டு வந்து எப்ப வந்தீங்கன்னு கேளு.” 

 

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு குளியலறை சென்று வந்தவள் கடுகடுவென்று கீழ் இறங்க, “வாம்மா…” அன்பாக அழைத்தார் சரளா. 

 

வழக்கம்போல் அவரைப் புறக்கணித்தவள் அமைதியாக இருக்கையில் அமர்ந்து கொள்ள, “எப்படிம்மா இருக்க?” மாமனார் நலம் விசாரித்தார். 

 

“ம்ம்!” என்றதோடு நிறுத்திக் கொண்டு இருவரையும் சங்கடத்திற்குத் தள்ளினாள். 

 

மருமகளின் உதாசீனத்தை வழக்கம்போல் ஒதுக்கி வைத்தவர்கள், பணத்தை மேஜை மீது வைத்து, “நீங்க கொடுத்த பணம் இதுல இருக்கு. சரியா இருக்கான்னு எண்ணிப் பார்த்துக்கோங்க.” என்றனர். 

 

மகளை ஒரு பார்வை பார்த்தவர் அந்தப் பணம் வேண்டாம் என்று மறுக்க, அவர்களோ உறுதியாக இருந்தனர். ஒன்றும் செய்ய முடியாமல் பொன்வண்ணன் அமைதியாக, “கல்யாணம் ஆகி ஒரு மாசம் முடியப் போகுது. ரெட்டைல தாலிக்கயிறு மாத்தக் கூடாது. அதனால, முடியுறதுக்குள்ள தாலி பிரிச்சிச் கோர்த்துடலாமா?” என்பதற்குப் பொன்வண்ணன் தலையசைப்பதற்கு முன், 

 

“அதெல்லாம் தேவையில்லை.” என்றாள் சத்தமாக.

 

“ரிது!”

 

“நீங்க சும்மா இருங்கப்பா. என்னால இதுக்கு ஒரு காலமும் சம்மதிக்க முடியாது. இவன் கட்டின தாலியவே எப்போ தூக்கிப் போடப் போறோம்னு இருக்கேன். இதுல தங்கத்துல போடுறது தான் கேடு.”

 

“அப்படி இல்லம்மா, மஞ்சள் கழுத்தோட எத்தனை நாளைக்கு இருப்ப. நாலு இடம் போயிட்டு வர பொண்ணு. நீ இருக்க வசதிக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணல.”

 

“அது என்னோட பிரச்சினை. இது என் கழுத்துல இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகுதுன்னு தெரியல. இதுக்கெல்லாம் இவ்ளோ இம்பார்டன்ட் கொடுக்க முடியாது.” 

 

“கொஞ்சம் பொறுமையாப் பேசு ரிது. அவங்க உன்னோட நல்லதுக்காகத் தான் சொல்லிட்டு இருக்காங்க.”

 

“என்னோட நல்லதை முடிவு பண்ண இவங்க யாரு? வந்த வேலைய மட்டும் பார்த்துட்டுப் போகச் சொல்லுங்க.” 

 

“இன்னும் மனசால நீ இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கலன்னு நல்லாப் புரியுது. இருந்தாலும் செய்ய வேண்டிய கடமை இருக்கு. உன் அம்மா நல்லபடியா இருந்திருந்தா, என்ன பண்ணி இருப்பாங்களோ அதைத்தான் நாங்க பண்ண ஆசைப்படுறோம். ஒரு நல்ல நாளாப் பார்த்து இந்த வீட்டுக்குள்ளயே கூட பண்ணிக்கலாம். நம்ம எல்லாரும் சேர்ந்து இருந்தாலே உன் மனசு கொஞ்சம் மாறும்.” 

 

“ஓஹோ!” எனக் கால் மீது கால் போட்டவள், “இப்பத்தான் உங்க திட்டம் புரியுது. புள்ளைய முன்னாடி அனுப்பி வச்சிட்டுப் பின்னாடியே நீங்க வந்து செட்டில் ஆகலாம்னு பார்க்குறீங்க. இதுக்கு இந்தத் தாலி ஒரு சாக்கு. கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உங்களுக்கு? என்னடா ரோஷம் வந்து பணத்தைக் கொடுக்குறாங்களேன்னு யோசிச்சேன். பத்து லட்சத்தைக் கொடுத்துட்டு, பத்துக் கோடியைச் சுருட்டப் பிளான் பண்றீங்க. இப்படி ஒரு பொழப்புக்கு நாண்டுக்கிட்டுச் சாகலாம்.” என்றிட, வெளியில் நின்றிருந்தவனின் ரத்த நாளங்கள் சூடானது. பாறை போல் விறைத்த மனத்தில், பொங்கி எழுந்தது ஆத்திரம். பற்களைக் கடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் ‘பளார்!’ என ஓங்கி அறைந்தான். 

 

அடித்தவன் ஆங்கார மூர்த்தியாக நின்றிருக்க, அங்கிருந்த மற்ற மூவரும் எழுந்து விட்டனர். அடி வாங்கியவள் மட்டும் அழுத்தமாக அதே இருக்கையில் அமர்ந்து இருந்தாள். கருடேந்திரன் என்ன செய்தான் என்பது புரியச் சில நொடிகள் தேவைப்பட்டது அந்தப் பெரியவர்களுக்கு. 

 

“பெரியவங்ககிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாதா? உலகத்துலயே உன்கிட்ட மட்டும்தான் பணம் இருக்கா? இந்த வீட்டுக்கு நெருப்பு வச்சேன்னு வச்சிக்க, இருக்கற அத்தனையும் பொசுங்கிப் போயிடும். எதையும் உன்னால மீட்டு எடுக்க முடியாது. அப்படி அழிஞ்சு போற ஒன்னுக்கு ஏன்டி இவ்ளோ ஆணவத்தோடு ஆடுற. இவ்ளோ பாவத்தையும் பண்ணிட்டு, நீயே உயிரோட இருக்கும்போது என் பெத்தவங்க எதுக்காகச் சாகனும்?” 

 

“கருடா!”

 

“சும்மா இருங்கம்மா. இவளை இவ்ளோ நாள் விட்டு வச்சதே தப்பு. எப்படி நாக்குல நரம்பு இல்லாமல் பேசுறா பாருங்க. இவ அம்மா இவளை ரத்தமும், சதையுமாத் தான் பெத்தாங்களா? இல்ல கருங்கல்லா பெத்தாங்களான்னு தெரியல. இவளை மாதிரி ஈனப்பிறவிங்களை அனுசரிச்சுட்டுப் போறத விட ஒரு தப்பு இந்த உலகத்துல இருக்காது.” 

 

“கொஞ்சம் பொறுமையா இருப்பா, அவ பேசுனது சரின்னு நான் சொல்லல.” எனப் பொன்வண்ணன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, 

 

“தயவு செஞ்சு நீங்க பேசாதீங்க. பெண்ணை எப்படி வளர்க்கக் கூடாதோ, அப்படி வளர்த்து வச்சிருக்கீங்க. இந்த அடியை நியாயமா நீங்க அடிச்சு இருக்கணும். அப்படி அடிச்சிருந்தா, இந்த மாதிரிப் பார்க்குற எல்லாரையும் அவமானப்படுத்திட்டு இருக்க மாட்டா…” என்றிட, அவமானத்தில் தலை குனிந்தார். 

 

“போதும்டா, அவ கூடச் சண்டை போட உன்னை இங்க அனுப்பி வைக்கல. எப்படியாவது மனசு மாறி நல்லபடியா வாழணும்னு தான் அனுப்பி வச்சேன்.”

 

“வாழுறதா?” எனத் தாடைகளைத் தடதடக்கக் கடித்தவன், அவள் அமர்ந்திருந்த சோபாவை எட்டி உதைக்க அது நான்கடி பறந்து போனது. 

 

“எப்படி அழுத்தமா உட்கார்ந்து இருக்கான்னு பாருங்க. இப்படி ஒருத்தி கூட எவனாவது வாழ முடியுமா? தாலியைக் கழற்றி வீசின அப்பவே இவளுக்கும் எனக்குமான உறவு முடிஞ்சு போச்சு. நல்லது பண்றேன்னு என் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க. இவ கழுத்துல தாலி கட்டின நாள்ல இருந்து நான் நானா இல்ல. நிம்மதியா மூச்சுவிட்டு எத்தனை நாள் ஆகுது தெரியுமா? 

 

இந்த வீடு நரகமாய் தெரியுது. இங்க இருக்க சாப்பாடு விஷமா இருக்கு. உங்களுக்காகத் தான் பல்லக் கடிச்சுகிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். எப்போ உங்களையே அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிட்டாளோ, இனி ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க மாட்டேன். இவளுக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை. நான் கட்டின தாலிய நானே கழற்றிட்டுப் போறேன்.” 

 

விருப்பமில்லாது அணிவித்த மாங்கல்யத்தை உருவச் சென்றான் கருடேந்திரன். அப்போதும் கூடச் சிறு சலனம் இல்லாமல் அழுத்தமாக, இருக்கையில் பசை போட்டு அமர்ந்திருந்தாள் ரிது சதிகா. அவன் பெற்றோர்கள் ஓடிச் சென்று தடுத்தார்கள். தலை குனிந்திருந்த பொன்வண்ணன் கூடத் தடுத்தார். 

 

தன்னைத் தடுத்துக் கொண்டிருக்கும் மூவரையும் தாண்டி அவளை நெருங்கியவன், ஆடைக்குள் மறைந்து நெஞ்சுக்குள் உறவாடிக் கொண்டிருந்த அந்த மாங்கல்யத்தை உள்ளங்கையில் பற்றினான். தடுத்துக் கொண்டிருந்தவர்கள் பலத்தை அதிகரித்து அவன் செயலை நிறுத்தப் பார்க்க, அலுங்காது குலுங்காது விழி உயர்த்தினாள். 

 

 

“விடுங்கம்மா!” என அந்த மாங்கல்யத்தை இழுக்க, இரு முறை உண்டான பந்தம் அவ்வளவு எளிதாக அவிழுமா! அவள்தான் அவன் இழுப்பிற்கு அசைந்தாள். தன்னோடு வர மறுத்த மாங்கல்யத்தின் மீது கோபம் கொண்டவன், சக்தியை ஒன்று திரட்டி மீண்டும் இழுக்க, ரிது அவனோடு மோதி விலகினாள். அதுவரை ஆத்திரத்தில் இருந்தவன் விழிகள் அவளிடம் தாவியது. 

 

இப்படியான தருணத்தில் கூட ஒரு பெண் அசராமல் நிற்க முடியுமா? என்ற கேள்வி தான் அவளை ஆராய்ந்தபின் தோன்றியது. சிறுதுளிப் பதட்டம் இல்லை. பொதுவாகவே, கட்டியவனை விட அவன் கட்டிய தாலிக்குத் தான் பெண்கள் அதிகம் மரியாதை கொடுப்பார்கள். அப்படியான அதி தீவிர பயம் தென்படுவதாகத் தெரியவில்லை. 

 

வெறுமையாக இருந்தது அவள் விழிகள். அந்த விழிகளை அவளவனாக ஆராய்ந்தான். இன்று வரை இந்த மாங்கல்யத்தை, அவள் மாங்கல்யமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக அவனுக்கு உணர்த்தினாள். இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தவன் கைகள் தளர்ந்தது. கட்டியவள் மீது எண்ண முடியாத அளவிற்குக் கோபம் இருந்தாலும், மாங்கல்ய பந்தமும், கணவன் என்ற உரிமையும், இத்தனை உதாசீனங்களை ஏற்றுக்கொள்ளத் துணியவில்லை. 

 

ஆண் என்ற கர்வத்திற்குள், அவன் கட்டிய மாங்கல்யத்தை ஒளித்து வைத்தவனால் இதை வெறும் மஞ்சள் கயிறாக நினைக்க முடியவில்லை. பெற்றோர்கள் சம்மதத்தோடு, நல்ல நாள் பார்த்துக் கோவில் சன்னிதானத்தில் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டு நாள்கள் பல ஆகிவிட்டது. வேண்டாம், வேண்டும் என்ற இரு வேறு மன நிலையில் அவன் இருக்க, என்ன மனநிலையில் இருக்கிறாளோ ரிது. 

 

“விடுடா!” எனப் பெரும் சத்தம் போட்ட சரளா, மகன் கையில் குடி கொண்டிருந்த மாங்கல்யத்தை விடுவித்து மருமகள் மார்போடு சேர்த்தார். 

 

“கல்யாணம்னா, உங்க ரெண்டு பேருக்கும் விளையாட்டா இருக்கா? காலங்காலமா இதுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு. அதை அசிங்கப்படுத்தாதீங்க. உங்க கல்யாணம் உங்க விருப்பம் இல்லாம தான் நடந்துச்சு. ஆனா, இது கல்யாணம் தான். நீங்களே இல்லைன்னு சொன்னாலும், உங்க வாழ்க்கையில கல்யாணம்னு ஒன்னு நடந்து முடிஞ்சிருச்சு. இனி நீங்க எத்தனைக் கல்யாணம் பண்ணினாலும் இதான் தொடக்கம்.” 

 

மூச்சு விடாது பேசிய சரளா சற்று மூச்சு வாங்கி, “உனக்கு எதுக்குடா இவ்ளோ கோவம் வருது? இந்தக் கோபத்தால தான் நீயும் நாங்களும் இங்க வந்து நிற்கிறோம். இப்பக் கூட அதை மாத்திக்க மாட்டேன்னு சொல்றியே. உன்ன நினைச்சா ரொம்பக் கவலையா இருக்கு கருடா.” என்றார் தன்மையாக.

 

கருடேந்திரன், அன்னையின் முகம் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொள்ள, சூறாவளியே சுழற்றி அடித்தாலும், கடலை பொரி சாப்பிட்டுக் கொண்டிருப்பது போல் சாதாரணமாக இருந்தாள் அவனின் வீட்டுக்காரி. அவளைக் கண்டவன் கண்கள் கலங்கியது. அதுவரை கல்லாக இருந்தவள் உயிர் பெற, தொடத் துடித்தான்.

 

“அவ பேசுன எதுவும் அவ மனசுல இருந்து வரல. அதனாலதான், அதோட பாதிப்பு இப்ப வரைக்கும் அவ கண்ணுல தெரியல. வலுக்கட்டாயமா தாலி கட்டுன உன்னை எப்படி எல்லாம் பழி தீர்க்க முடியுமோ, அப்படி எல்லாம் பழி தீர்த்துட்டு இருக்கா. நீ தாலியப் புடிச்ச அப்பக்கூட அவ தடுக்காம இருந்ததுக்குக் காரணம் இதுதான்.” என்றிட அப்போதுதான் பொம்மை போல் இருந்தவள் உடலில் உணர்வுகள் உருவானது. 

 

அசையாத சிலையாக இருந்தவள் கண்களில் உண்டான உணர்வைப் புரிந்து கொண்டவர், தன் பக்கம் பார்வை வருவதை அறிந்து அவள் அருகே சென்றார். மாமியாரைப் பார்வையால் சுட்டுப் பொசுக்கினாள். எண்ணற்ற கேள்விகளை நொடிப்பொழுதில் தன்னிடம் இடமாற்றும் மருமகள் கன்னத்தைப் பிடித்தவர், 

 

“உன் மனசு எனக்குப் புரியாம இல்ல. உன்னை மருமகளா பார்க்குறதை விட மகளாப் பார்க்கிறேன். அதனாலதான், இவனை என்ன வேணா பண்ணிக்கன்னு இப்ப வரை அமைதியா இருக்கேன். இனியும் அமைதியாக தான் இருப்பேன். ஏன்னா, இந்த வயித்துல நானும் ஒரு பொண்ணைப் பெத்திருக்கேன். உன் இடத்துல என் பொண்ணு இருந்திருந்தா, இந்நேரம் என் வீட்டு ஆம்பளைங்க மீசைய முறுக்கிக்கிட்டுத் தாலி கட்டுனவன் கையக் கால உடைச்சிருப்பாங்க. தன் வீட்டுப் பொண்ணுக்கு ஒரு நியாயம், அடுத்த வீட்டுப் பொண்ணுக்கு ஒரு நியாயம்னு நானும் சராசரியா யோசிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுட்டேன்.” என்றவரை இது நாள் வரை பார்க்காத கண்ணோட்டத்தில் பார்த்தாள். 

 

“உன்ன நான் ஒரு அயோக்கியனுக்குக் கட்டிக் கொடுக்கல. அந்த ஒரு தைரியத்துல தான் பிடிக்காத ரெண்டு பேரைச் சேர்த்து வச்சிருக்கேன். உன் மனசுல எவ்ளோ கோவம் இருக்கோ, அவ்ளோ கோபத்தையும் கொட்டு. ஆனா, கடவுள் கொடுத்த இந்த உறவை வெட்டி விடணும்னு மட்டும் நினைக்காத. ஒரு நாள் இல்ல ஒரு நாள், இந்த வாழ்க்கை உனக்குப் பிடிக்கும். இந்தத் தாலி உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். காரணம் இல்லாம, ஏணி வச்சா கூட எட்ட முடியாத ஒருத்தனை, உன் வாழ்க்கைக்குள்ள அந்தக் கடவுள் நுழைச்சு இருக்க மாட்டான்.” 

 

“என் பொண்ணுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன்.” 

 

“நியாயமா நாங்கதான் சார் மன்னிப்புக் கேட்கணும். இவ மனசைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம, விருப்பம் இல்லாத தாலிய இன்னும் அழகுபடுத்த நினைச்சது எங்க தப்பு.” 

 

“இதுக்கு மேலயும் சேர்த்து வைக்க யோசிக்காதீங்கம்மா. இவளுக்கும், எனக்கும் ஒத்து வராது. தெரியாமல் தப்புப் பண்ணிட்டேன். இவளுக்கு நான் பண்ணது துரோகம் தான். அதுக்கு ஜெயில்ல கூடப் போடச் சொல்லுங்க. இந்தக் கல்யாணம் மட்டும் வேணாம்.”

 

“இதுக்கு மேல எதுவும் பேசாத கருடா. அம்மா இவ்ளோ சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேங்குற. அம்மா கூட இருக்க உன்னாலயே புரிஞ்சிக்க முடியாத அப்போ, எடுத்துச் சொல்ல ஆள் இல்லாத இவ எப்படிப் புரிஞ்சிப்பா? சரியோ தப்போ, நான் என் மருமகளுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவேன். இன்னொரு தடவை அவளை அடிக்காத. அப்புறம் மகன்னு கூடப் பார்க்க மாட்டேன்.” என்ற பெற்ற தாயின் பேச்சைச் சகித்துக் கொள்ள முடியாது, யாரும் அமராமல் காலியாக இருந்த இருக்கையை எட்டி உதைத்து விட்டு வெளியேறினான். 

 

கோபமாகச் செல்லும் மகனை சத்யராஜ் பாவமாகப் பார்க்க, பிள்ளையின் மனம் புரிந்தாலும் பெண்ணாக யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மீண்டும் ஆளாக்கப்பட்ட சரளா, “நாங்க போனதுக்கப்புறம் இவளை எதுவும் சொல்லாதீங்க சார். எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருச்சுன்னா, அதைப் பேசிக் கிளறாம கொஞ்சம் ஆறப் போட்டாலே போதும், தன்னால சரியாகிடும்.” என்று விட்டுத் தந்தை, மகள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தார் சரளா. 

 

கிளம்புவதற்கு முன் மருமகளிடம் சென்றவர், “என் புள்ள அடிச்சதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்.” என்று விட்டு இரு நொடி அமைதியாக அவள் முகத்தை ஆராய்ந்து, 

 

“நீயே நினைச்சாலும், என் குடும்பத்துக்கும் உனக்குமான பந்தம் அறுந்து போகாது. இந்த ஜென்மத்துல நான்தான் உனக்கு மாமியார்! என்னைக்கா இருந்தாலும் மாமியார் கொடுமையைக் காட்டாமல் விடமாட்டேன்.” என்றதைக் கேட்டதும் சிட்டிக்கு உயிர் வந்தது போல் முகத்தில் லேசான சிரிப்பு உதயமானது. 

 

அதை அங்கிருந்த ஆண்கள் இருவரும் அறியாது போக, “நீயும் கொஞ்சம் மருமகள் கொடுமையைக் காட்டலாம். ரெண்டு பேரும், வேலைய முடிச்சுட்டு வர என் பிள்ளைகிட்டப் பஞ்சாயத்து வச்சு அவனுக்கு யாரு முக்கியம்னு தெரிஞ்சுக்கலாம்.” என்று விட்டு அவளைப் போல் வெளிவராத புன்னகையை அவளுக்கு மட்டும் காட்டிவிட்டு வெளியேறினார். 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!