திருமண திகதி முடிவாகி இருந்த நிலையில் நாட்களும் வேகமாக நகர தொடங்கியது. அம்ருதாவிற்கு தேவையான புடவையும், நகையும் ஹர்ஷாவே வாங்கி கொடுத்தான். அம்ருத்தாவின் வீட்டிலிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. இதை அனைத்தையும் பார்த்த நிரஞ்சனாவிற்கு மனம் முழுவதும் எரிய தொடங்கியது. எப்படியோ இந்த வீட்டை விட்டு போனால் போதும் என்று நினைத்தாலும் வசதியான இடத்திலிருந்து வரன் வந்ததில் பொறாமையே அதிகமாக இருந்தது.
திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் முக்கியமான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருக்க, ஏதாவது பேச வேண்டிய அவசியம் இருந்தால் மட்டுமே ஹர்ஷாவும், அம்ருதாவும் பேசி கொண்டனர். அதை தவிர்த்து சாதாரண உரையாடல்கள் எதுவும் அவர்களுக்கு இடையில் நடக்கவே இல்லை.
அம்ருதா தன் அறையில் அமர்ந்து தன்னுடைய அலுவலக வேலைகளை பார்த்து கொண்டிருந்த நேரம், உள்ளே வந்தாள் நிரஞ்சனா. இன்னமும் அழகு குறையாமல் இயல்பாகவே பொலிவான முகத்துடன் இருக்கும் அம்ருதாவை கண்டு,
“என்ன அம்ருதா முகமெல்லாம் ஜொலிக்குது? என்ன கல்யாண கலையா?”
தன்னை நோகடிக்கதான் வந்திருக்கிறாள் என்பது புரிந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவளை மீண்டும் வம்புக்கு இழுத்தாள் நிரஞ்சனா.
“உன்னப்பத்தின எல்லா விஷயத்தையும் அந்த ஹர்ஷாகிட்ட சொல்லிட்டியா? பார்த்தா சொன்ன மாதிரி தெரியலையே..?” என்று குத்தலாக கேட்டவளிடம்,
“அவர் பழச பத்தி எதுவும் பேச வேண்டாம்னு சொல்லிட்டாரு நிரஞ்சனா. இரண்டு பேரோட பாஸ்ட்டுமே தேவை இல்லாதது இனி எதிர்காலத்தை பத்தி மட்டும் யோசிச்சா போதும்னு சொல்லிட்டாரு” என்றதும் இதை கேட்டு மேலும் மேலும் பொறாமையில் வெந்தவள்,
“ஆம்பிளைங்க முதல்ல அப்படித்தான் சொல்லுவாங்க. நாளைக்கு உன்னோட பாஸ்ட் லைஃப்னால ஏதாவது பிரச்சனை வந்தா?, இல்ல அதை பத்தி வேற ஒருத்தர் மூலமா தெரிய வந்தா? அப்போவும் இதே மாதிரி இருப்பாருன்னு நினைக்கிறியா? நெவெர். யாருமே அப்படி இருக்க மாட்டாங்க. நானே வேண்டாம்னு சொல்லி இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லியிருக்கணும்ல? அப்படீண்ணுதான் கேப்பாங்க. ஏன்னா மேடமோட வரலாறு அப்படி” என்று அம்ருதாவின் எதிர்கால வாழ்வை பற்றின பயத்தை மனதுக்குள் விதைத்தாள் நிரஞ்சனா.
“நான் என்னவோ உன் நல்லதுக்குதான் சொல்றேன். ஏன்னா.. முதல் வாழ்க்கைதான் இப்படி ஆகிடுச்சு. இரண்டாவது வாழ்க்கையாவது நல்லா இருக்கணும்ல? திரும்ப பிரச்சனைனா மூணாவதா ஒரு ஆளை தேட முடியுமா சொல்லு? என்றதும் அம்ருதா விழிகளில் இருந்து சரேலென வழிந்தது உவர்நீர்.
நிரஞ்சனாவின் வார்த்தைகளில் உச்சக்கட்ட அவமானத்தை உணர்ந்தவளின் மனது தனலில் விழுந்த புழுவாய் துடிக்க, உதடு கடித்து அழுகையை முழுங்க நினைத்தவளால் தனது அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இதை பார்த்த நிரஞ்சனாவிர்கோ ஏகப்போக திருப்தி.
“சரி அம்ருதா, உன்னோட நல்லதுக்குதான் சொன்னேன். இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, நீ போய் அந்த ஹர்ஷாகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடு. அதே போல அவரோட வாழ்க்கைல என்ன நடந்துச்சுனும் கேட்டு தெரிஞ்சுக்கோ. ஒருவேளை அவரோட வாழ்க்கையில் நடந்த விஷயத்தை மறைக்க கூட பாஸ்ட் பத்தி பேச வேண்டாம்னு சொல்லி இருக்கலாம் இல்லையா? என்னவோ போ. இந்த முறையாவது கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணு.
இரண்டாவது கல்யாணமும் பிரச்சனைல முடிஞ்சா ஏற்கனவே சொந்த பந்தம், ஊர்காரங்க எல்லாரும் உன்னை கேவலமா பாக்குறாங்க. அப்புறம் சில சினிமா நடிகை வாழ்க்கை மாதிரி ஆகிட போகுது. இதுக்கு மேலையும் பிரச்சனை நடந்து திரும்ப வீட்டுக்கு வந்தா அப்புறம் ஆம்பிளைங்க எல்லாம் உன்னை வேற மாதிரி பொண்ணாதான் பார்ப்பாங்க. அப்படி பார்க்க வச்சுடாத, யோசிச்சுக்கோ.” என்றவள் அங்கிருந்து கிளம்பி சென்று விட,
மொத்தத்திற்கும் உடைந்தே போனால் அம்ருதா. அவள் அறையை விட்டு போனதும் கதவை சாற்றி தாளிட்ட நொடி உறங்கும் குழந்தை கண்களில் படவே, வாயை தனது இரு கரங்களால் அழுந்த பொத்தியவள் சத்தமின்றி விம்மி வெடித்து அழ தொடங்கினாள். நிரஞ்சனாவின் வார்த்தைகள் அனைத்தும் மனதில் அனலாய் பரவ அந்த உணர்வை தாங்காமல் இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.
அதிலும் ‘சில சினிமா நடிகைகள் போல வாழ்க்கை ஆகிவிட போகிறது, வேறு மாதிரி பெண்ணாக பார்ப்பர்கள், மூணாவதா ஒரு ஆளை தேட முடியுமா?’ என்ற வார்த்தைகள் எல்லாம் ‘அப்பப்பா… என்ன மாதிரியான வார்த்தைகள் அவை? என்னை எப்படியெல்லாம் பேசி விட்டாள்? எனக்கு போய் இந்த நிலை வர வேண்டுமா? சில வருடங்கள் முன்பு இப்படியான வாழ்க்கையை என்னுடைய கற்பனையில் கூட கண்டதில்லையே? இதெல்லாம் நிஜமாக எனக்கு நடக்க வேண்டுமா? நான் அப்படி என்ன பாவம் செய்துவிட்டேன் இறைவா?’ என்று தனது அடுத்தடுத்த கேள்விகளையும் மன குமுறல்களையும் கண்ணீருடன் இறைவனிடமே சமர்ப்பித்தாள்.
நெடு நேரமாக அழுது அழுது ஏங்கியவளின் அழுகை சிறிது சிறிதாக குறைந்து விசும்பல் ஒலி மட்டுமே வெளிப்பட முகம் முழுவதும் சிவந்து காணப்பட்டது. பிறகு ஒரு முடிவு எடுத்தவளாக தன்னுடைய கடந்த காலத்தை பற்றி ஹர்ஷாவிடம் கூறி விட வேண்டும் என்று மனதில் உறுதியாக எண்ணியவள் இன்று நேரில் சென்று அவனிடம் பேசிவிட வேண்டும் என்று ஹர்ஷாவிற்கு அழைப்பு விடுத்தாள்.
மறுபுறம் ஹர்ஷாவோ தனது உணவகத்தில் அலுவலக அறையில் இருந்தபடியே கண்காணிப்பு கேமராவில் அனைத்தும் சரியாக நடக்கிறதா? என்று பார்த்து கொண்டிருக்க, அம்ருதாவிடம் இருந்து அழைப்பு வரவே நம்ப முடியாமல் பார்த்தவன், உடனடியாக அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“ஹலோ அம்ருதா..” என்ற அடுத்த நொடி,
“நான் உங்ககிட்ட நேர்ல பேசணும். ஒரு முக்கியமான விஷயம் என்றதும், புருவங்கள் இடுங்க சிந்தித்தவன் சரி எங்க வரணும் சொல்லுங்க வரேன்”
“இப்போ நீங்க எங்க இருக்கீங்க?”
“நான் நம்ம ரெஸ்டாரண்ட்லதான் இருக்கேன்.”
“சரி நீங்க அங்கேயே இருங்க, நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன். நான் அங்க வரதுனால உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?”
“அதெல்லாம் எதுவும் இல்ல. நீங்க எப்போ வேணாலும் வரலாம் அம்ருதா.”
“சரி” என்று அழைப்பை துண்டித்து விட்டு ஒன்றிற்கு இரண்டு முறை முகத்தை சோப்பு போட்டு கழுவியவள் தனது அழுத தோற்றத்தை மறைக்க முயன்றாள். குழந்தை உறங்கி கொண்டிருக்க, அறையை விட்டு வெளியே வந்தவள்,
“அம்மா ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை நான் ஆபீஸ் போய்தான் பாக்க முடியும். சீக்கிரம் வந்துடுவேன். அது வரைக்கும் ஆத்யாவை பார்த்துக்கோங்க. என்றவள் அங்கிருந்து அவசரமாக சென்றுவிட்டாள்.
காவேரியும் உண்மை என்று நம்பியவர் “பாத்து பத்திரமா போய்ட்டுவாமா” என்றவரின் வார்த்தைகள் காற்றில் கரைந்து காணாமல் போனது. அதை கேட்க அம்ருதா அங்கு இருந்தால்தானே?
அம்ருதா வருவதற்குள் முக்கியமான வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று அவசரமாக ‘எல்லாம் சரியாக நடக்கிறதா?’ என்று பார்வை இட்டவன், அவள் உள்ளே வருவதை கண்டதும் வாங்க அம்ருதா என்றவனது விழிகள் ஆத்யாவை தேடியது. அவள் வரவில்லை என்றதும் மனம் சற்று ஏமாற்றம் அடைய, “ஆத்யாவ கூட்டிட்டு வரலையா?” என கேட்டான்.
“இல்ல.. அவ தூங்கிட்டு இருக்கா.. அதான் நான் மட்டும் வந்தேன்” என்றவளின் குரலில் சிறு தடுமாற்றம் இருந்தது.
அவள் பதற்றமாகவும் ஏதோ சிந்தனையுமாக இருப்பதை கண்டு ‘என்னவாக இருக்கும்?’ என்று சிந்தித்தவன் ‘சரி எதுவா இருந்தாலும் அவங்களே சொல்லட்டும் என்ற முடிவுடன்,
“ஏதாவது சாப்பிடறீங்களா?” என கேட்க, “இல்ல, அதெல்லாம் எதுவும் வேண்டாம்” என மறுத்து விட்டாள். “ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்க? சொல்லுங்க” என்றவனை பார்த்து
“அது… அது வந்து…” என்று தட்டு தடுமாறி ஆரம்பித்தவள், “என்னோட பாஸ்ட் லைஃப் பத்தி உங்ககிட்ட பேசணும்” என்றாள்.
இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து “ஊஃப்.. இவ்வளவு தானா? இதுக்கா தயங்குனீங்க? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சுடேன்” என்றான்.
“ம்ம்ம்…” என்றவள் அதற்க்கு மேல் பேசவே சங்கட பட அவள் முகத்தை பார்த்தே அவள் நிலையை நன்றாகவே புரிந்து கொண்டான். அதில் பேச தொடங்கியவன்,
“இதோ பாருங்க அம்ருதா, நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். பாஸ்ட் பத்தி நாம எதுவும் பேசிக்க வேண்டாம். ஒருவேளை என் சைடு உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க. நான் தெளிவு படுத்துறேன். ஆனா உங்களோட பாஸ்ட் எதுவா இருந்தாலும் அதை பத்தி நான் கவலை படல. எனக்கு அது தேவையும் இல்ல.” என்று உறுதியாக கூறியவனை சற்றே வியப்பு மேலிட பார்த்தவள்,
“இத நான் சொல்லாம விட்டு நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா, நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலன்னு கேக்க மாட்டீங்களா?” என்றாள் அம்ருதா.
அதில் மெல்லிய புன்னகை வைத்தவன் “உங்களுக்கு லீகளா டிவோர்ஸ் ஆகிடுச்சு. எனக்கும் அப்படித்தான். இனிமேல் என்ன பிரச்சனை வரும்னு நினைக்குறீங்க? அப்படியே ஏதாவது வந்தாலும் அது வரும்போது பார்த்துக்கலாம். இப்போ இருந்தே வராத பிரச்சனை வந்துடுமோன்னு யோசிச்சு பயப்படாதீங்க.”
“ஒருவேளை அப்படி வந்தா, நீ ஏன் இதெல்லாம் என்கிட்ட முன்னாடியே சொல்லலன்னு கேக்க மாட்டீங்களா?” என்று மீண்டும் கேட்டவளை பார்த்து,
“கண்டிப்பா மாட்டேன். அது என்ன மாதிரியான பிரச்னையா இருந்தாலும் அப்போ நீங்க என்னோட வைஃப். அதை சால்வ் பண்ண நான் கண்டிப்பா ஃபுல் சப்போர்ட் பண்ணுவேனே தவிர முன்னாடியே ஏன் சொல்லலன்னு கேட்கவே மாட்டேன். நீங்க என்னை தாராளமா நம்பலாம்.
இனிமேலும் இதை பத்தி நீங்க எதுவும் பேசவே வேண்டாம், மனசுல போட்டு குழப்பிக்க வேண்டாம்” என திட்டவட்டமாக கூறியவன் பேச்சில் இருந்த உறுதியில் கண் இமைக்காமல் அவனையே பார்த்தால் அம்ருதா.
‘இதுவரை தன் அன்னையிடம் தன்னை பெண் கேட்டு வந்தவர்கள் யாராக இருப்பினும் முதலில் கேட்பது என்னுடைய கடந்த காலத்தை பற்றிதானே? தன் அன்னை அதை சொல்லி முடிப்பதற்குள் எவ்வளவு தயங்குவார்? அதிலும் ஒவ்வொருவரிடமும் முதலில் இருந்து காரணத்தை கூற வேண்டுமே? அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு வேறு பதில் சொல்ல வேண்டுமே?’
இதை பற்றியெல்லாம் அறிந்ததினாலேயே மறுமணம் என்றாலே வேப்பங்காயாய் கசந்து போனது. சில நாட்களுக்கு முன்பு முதன்முறையாக அவன் கடந்த காலத்தை பற்றி பேச வேண்டாம் என கூறியது கூட ஏதோ ஒரு பெருந்தன்மையாக கூறுவது போல நினைத்திருக்க, இன்று அவன் பேசியதிலிருந்து அவனது குணமே அதுதான் என்பது தெள்ள தெளிவாக தெரிந்து போனது.
‘அதிலும் அவனுடைய கடந்த காலத்தை பற்றி கூட கூற தயாராக இருப்பவன், என்னிடம் எதையும் கேட்டு, எந்த சங்கடத்திற்கும் என்னை ஆளாக்கவில்லை. ஹர்ஷா ஒரு நல்ல மனிதன்’ என்ற முறையில் அம்ருதாவின் மனதில் தன் முதல் அடியை எடுத்து வைத்தான்.