வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ?! – ௭ (7)

4.9
(23)

அம்பு – ௭ (7)

இந்த்ர தனுஷ் – ஒரு காலத்தில் பெயர் பெற்ற வில்லாளன்.. வில் வித்தையில் கர்ணன் அர்ஜுனனுக்கு அடுத்ததாக இவன் பெயரை சொல்லும் அளவிற்கு அதில் சிறந்து விளங்கியவன்.. வில்வித்தைக்கான போட்டி எங்கு நடந்தாலும் அங்கு அவன் பெயர் முதல் மூன்று இடங்களில் எதிரொலிக்காமல் இருந்ததே இல்லை..

அப்படிப்பட்டவன் மூன்று வருடங்களாய் ஒரே அறையில் உலகமே கவிழ்ந்து போனதாய் உயிர் இல்லாது முடங்கி இருந்தான்.. தன்னவளின் நினைவுகளோடு தனிமையில் ஆதங்கத்தோடும் ஏக்கத்தோடும் வேதனையோடும் கழித்துக் கொண்டிருந்தான் அவன்..

வில் வித்தை பயிற்சிக்காக அவன் ஏற்படுத்திய பயிற்சி கூடம் தான் இந்த்ர தனுஷ் ஆர்ச்சரி அகடமி.. மூன்று வருடங்களுக்கு முன்னால் அந்த அகடமியில் பயிற்சிக்கு இடம் கிடைக்காது ஏமாந்து திரும்பி போனவர்கள் எத்தனையோ பேர்..

ஆனால் மூன்று வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதன் பெயரை இழந்து பொலிவை இழந்து இன்று விரலால் எண்ணி விடக்கூடிய எண்ணிக்கையில் மட்டுமே விளையாட்டு வீரர்கள்  அங்கே பயிற்சிக்கு வந்து கொண்டு இருந்தார்கள்.. ஒன்று இரண்டு பயிற்சியாளர்கள் மட்டுமே இருக்க அவர்களும் அங்கு வேலை செய்யும் ஆர்வமே இல்லாமல் விலகிப் போக நினைத்திருந்தார்கள்..

இந்த சமயத்தில்தான் சம்யுக்தா அகடமியோடு பார்ட்னர்ஷிப் டீலிங் பேச போயிருந்தவன் கண் முன்னால் இப்போது வில்விழியாக மாறி இருந்த மலர்விழி தோன்றியிருந்தாள்..

காரில் வரும்போது அதை ஓட்டிக்கொண்டு வந்தவன் நடுநடுவே வில்விழியின் மடியில் “அவ்வா.. ட்ர்ர்.. பப்பே..” என்று புரியாத மழலை சிதறல்களை உளறல்களாய் உதிர்த்தபடி அவள் முகத்தில் கை வைத்து விளையாடி கொண்டு அவள் விழியோடு விழி உருட்டி பேசிக்கொண்டு இருந்த சக்தியை சுவாரஸ்யமாய் அதே சமயம் ஏதோ ஒருவித ஏக்கப் பார்வை வீசி பார்த்துக் கொண்டு வந்தவன் நடு வழியில் திடீரென வண்டியை நிறுத்தினான்..

இந்தரிடம் வில்விழி என்னவென்று கேட்க அவனோ அவளிடம்

“ஏ வில்லி.. எனக்காக ஒரே ஒரு வேலை மட்டும் பண்றியா?” என்று கேட்க

“கண்டிஷன் எதையும் என்னால மாத்த முடியாது.. அது தவிர வேற எதை வேணா கேளு பண்றேன்..”

“அதுதான் அந்த கண்டிஷன் எல்லாம் பண்றேன்னு ஒத்துக்கிட்டேனேடி.. அதை பத்தி மறுபடியும் பேசமாட்டேன்.. இது வேற.. கொஞ்சம் வீட்டு வரைக்கும் எனக்கு பதிலா நீ கார் டிரைவ் பண்றியா? ப்ளீஸ்..” சக்தியை விழிகள் கலங்க பார்த்தபடி அவளிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தவன் அவன்..

அவன் முதல் முறையாய் அவளிடம் கெஞ்சுகிறான்.. அதுவும் அவன் குழந்தையோடு நேரம் செலவிட.. அவன் நினைத்திருந்தால் என் உதிரத்தில் உதித்த குழந்தை இவள்.. இவளோடு விளையாடுவதற்கு உன்னிடம் நான் எதற்கு அனுமதி கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம்..

மூன்று வருடங்களுக்கு முன் அவள் பார்த்த இந்தரின் இயல்பு அதுதானே..

எதையுமே அனுமதி கேட்காமல் ஆளுமையோடு ஆண்டு தானே அவனுக்கு பழக்கம்.. வில்விழியை பொறுத்தவரை அவளிடத்தில் தனக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் இல்லை என்று எண்ணியிருந்தவன் அவன்..

இன்று அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு அவன் குழந்தையின் கூட நேரம் செலவிட அவளிடம் வண்டி ஓட்ட சொல்லி மன்றாடி கொண்டிருக்கிறான்..

வில்விழிக்கு முதல் முறையாக இந்த ஆறு மாத சவாலில் அவன் ஜெயித்து விடுவானோ என்று ஒரு சிறு நம்பிக்கை தோன்றியது.. அந்த நம்பிக்கை அவள் இதழில் ஒரு புன்முறுவலையும் கொண்டு வந்திருந்தது..

“சரி சரி ரொம்ப கெஞ்சுற.. பாக்க பாவமா இருக்கு.. ஓட்டுறேன் ஓட்டுறேன்..” என்றவள்

குழந்தையை எடுத்துக் கொண்டு தன் பக்க கதவை திறந்து இறங்கி வந்து அவனிடம் குழந்தையை கொடுத்தது தான் தாமதம்.. அதன் பிறகு அவள் பக்கம் விழியை கூட நகர்த்தவில்லை அவன்..

இதை கவனித்தவளோ உதட்டை சுழித்த படி “ரொம்ம்ம்ம்பத் தான்..” என்று முணுமுணுத்துக் கொண்டே ஓட்டுனர் இருக்கையில் ஏறிக்கொண்டாள்..

காரில் ஏறிய பிறகும் புலம்பலை நிறுத்தவில்லை அவள்.. பெற்ற மகள் மீதே பொறாமை தலைவிரித்தாடியது அவளுக்குள்.. உண்மையில் அவள் தான் இந்தர் அவளுக்காக ஏங்கியதை விட அவன் அன்புக்காக இந்த மூன்று வருடங்களாக ஏங்கிப் போயிருந்தாள்.. வெளியில் சிங்க பெண்ணாக அவள் எவ்வளவு தான் சாதித்திருந்தாலும் அவள் இரவுகளில் அவள் தலையணை கண்ணீரில் நனையாத நாட்களே இல்லை எனலாம்..

அவனுடைய தீண்டலுக்காகவும் அணைப்புக்காகவும் இதழ் அணைப்புக்காகவும் ஏங்கி ஏங்கி உள்ளுக்குள உருகி போய் இருந்தாள் பெண்ணவள்.. அவளின் விரக தாபம் அவளை உறங்க விடவில்லை.. பல நாட்கள் பசலை நோய் கண்டவளைப் போல   தலைவனின் அருகாமைக்காய் உடல் வாடி மனம் வாடி துடித்துப் போயிருந்தாள் அவள்..

இப்போது அவள் இங்கு வந்தவுடன் அவன் கவனம் முழுதும் அவள் மீது இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தவளுக்கு மகளைக் கண்ட நொடி தன்னை மறந்து மகளின் உலகத்துக்குள் மூழ்கி போய் இருந்தவனின் புறக்கணிப்பு அவளை வாட்டியது..

மகளுக்கு அவள் தந்தையின் முழுமையான அன்பு கிடைப்பது அவளுக்கும் மகிழ்ச்சியை தான் தந்தது என்றாலும் தனக்குத்தான் எப்போதும் அவன் பார்வையில் முதலிடம் இருக்க வேண்டும் என்று அசையாத வேட்கை கொண்டாள் அவள்..  மனை அதிகாரத்திற்குப் பிறகே மகள் அதிகாரம் வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு பெருத்த ஏமாற்றமாகித் தான் போனது..

“புள்ள வந்த உடனே பொண்டாட்டி கண்ணுக்கு தெரியலல்ல… அந்த முட்டை கண்ணை உருட்டி உருட்டி புரியாத பாஷை பேசி பேசியே அவனை அப்படியே மயக்கி தன் பக்கம் இழுத்துகிட்டா.. சவால்ல வேற ஜெயிச்சுட்டான்னா நம்மள கண்டுக்கவே மாட்டான் போலயே.. ம்ம்ம்ம்.. இந்த ஆறு மாசத்துல இவனை ஒரு வழி பண்ண வேண்டியது தான்.. இருடா.. உன்னை என் பின்னாடி பழையபடி அலைய வைக்கிறேன்..” மனதிற்குள் சபதம் எடுத்து கொண்டாள் வில்விழி..

யார் எவர் பின்னால் அலைய போகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்..

குழந்தையை கையில் வாங்கியவுடன் அவளை உயர தூக்கியவன் அவளை உலுக்கி விளையாட்டு காட்ட அவளோ களுக் களுக்கென்ற  சிரித்து வெள்ளை முல்லை சிரிப்பில் தன் தந்தையை தன்னோடு காந்தமாய் ஈர்த்து கட்டிபோட்டாள் சக்தி..

“சக்தி செல்லம்.. அப்பா கிட்ட வந்துட்டீங்களா? இனிமே நீங்க எப்பவும் அப்பாவோட தான் இருப்பீங்க.. உங்களை எங்கேயும் போக விட மாட்டேன்.. என் தங்கம் டா நீங்க..” என்று சொல்லி

அப்படியே தன் மார்போடு அவளை இறுக்க அணைத்து சக்தியின் முகம் முழுவதும் முத்தமிட்டு கொண்டே தன் பக்க இருக்கையில் வந்து ஏறி அமர்ந்து கொண்டான்..

அதன் பிறகு இமைக்கும் நொடி கூட சக்தியின் முகத்திலிருந்து வேறு பக்கம் அவன் பார்வை திரும்பவில்லை.. கார் வீடு வந்து சேரும் வரை தன் மகளோடு ஆசை தீர விளையாடிக் கொண்டிருந்தான் அவன்.. ஆனால் வீட்டுக்கு வந்தும் ஆசை தீர்ந்த பாடில்லை அவனுக்கு..

அப்போதும் சக்தியை விலக மனமில்லாமல் அவளை தானே தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய உள்ளே நுழைந்தவனை கண்ட சகுந்தலா அவன் மலர்ந்த முகத்தையும் அவன் பக்கத்திலேயே இருந்த  வில்விழியையும் பார்த்தவள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனாள்..

“மலரு.. வந்துட்டியாம்மா?” என்று கேட்டபடி முன்னே அடிவைத்து அவளை நோக்கி போனவளை மார்க்கண்டேயனின் குரல் தடுத்தது..

“சக்கு… இன்னொரு அடி எடுத்து வச்ச நீயும் அவளோடயே சேர்ந்து வீட்டை விட்டு வெளியில போக வேண்டியதுதான்..”

அதன் பிறகு சகுந்தலா எங்கே முன்னேறி செல்வது அப்படியே தான் நின்ற இடத்திலேயே வந்து ஆணி அடித்தார் போல் நின்று கொண்டாள்..

தன் இடத்தில் இருந்து மெல்ல எழுந்த மார்க்கண்டேயனோ “எதுக்குடா இந்த ஓடுகாலியை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்தே? நான் எவ்வளவு நாளா உன்னை இவளை மறந்துட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லிட்டு இருக்கேன்..? இத்தனை நாளா இவளை மறக்க முடியாம ஏதோ உயிர் போன மாதிரி ஜடமா வாழ்ந்துட்டு இருந்த.. இப்ப இவளை பார்த்த உடனே இவளை கூட்டிட்டு வந்துட்டியா? என்ன.. இவளோட வாழ போறியா?”

“ஆமாம்பா.. அவளோட வாழ போறேன்.. அதுல என்னப்பா தப்பு? எனக்கு பொண்டாட்டின்னா அது அவ மட்டும் தான் பா.. என் மனசுல இருந்து அவளை தூக்கி எறிஞ்சிட்டு வேற யாரையும் அந்த இடத்துல வைச்சு என்னால  பார்க்க முடியாது.. அவ என் வாழ்க்கையில இருக்கணும்னா அதுக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்..’

“பைத்தியக்காரனாடா நீ என்னிக்கு உன்கிட்ட சொல்லாம உன்னை விட்டுட்டு ஓடிப்போனாளோ அன்னிக்கே உனக்கும் இவளுக்கும் இருக்கிற உறவு அறுந்து போச்சு.. இப்ப அவளோட வாழ போறேன்னு கூட்டிட்டு வந்து இருக்கியே திரும்ப அதே மாதிரி ஓட மாட்டான்னு என்னடா நிச்சயம்? அப்படி ஓடிட்டான்னா மறுபடியும் இதே மாதிரி தேவதாஸா திரிஞ்சுக்கிட்டு இருப்பியா? இங்க பாரு.. அதுக்கு நீ இவ்வளவு நாள் இருந்த மாதிரி எப்பவும் தேவதாசாவே இருந்திரு.. இன்னொரு முறை அடி வாங்குனா தாங்க மாட்ட டா நீ..”

“இல்லப்பா.. அவ என்னை விட்டு போக மாட்டா.. நிச்சயமா நான் இந்த முறை என்னை விட்டு அவளைப் போக விடமாட்டேன்.. அப்படி அவ போகக்கூடாதுன்னா அது உங்க கையில தான் பா இருக்கு..”

“என்னது.. இந்த ஓடுகாலி ஓடாம இருக்குறது என் கையில இருக்கா? ஏதாவது புரியிற மாதிரி பேசுறியா நீ..

அது சரி.. இந்த குழந்தை யாரு..?”

அவனையும் அவளையும் நிதானமாக முறைத்தபடி அவர் கேட்க

“உங்க பேத்திபா.. என் பொண்ணு சக்தி.. இப்போ என்னோட இன்னொரு உயிர்..”

அதைக்கேட்ட சகுந்தலாவின் கைகளும் கால்களும் உடனே ஓடிச் சென்று தன் பேத்தியை கையில் அள்ளிக் கொள்ள துடித்துப் பரபரத்தது..

“ஓ.. இப்ப எனக்கு புரியுது.. இங்க பார்.. இந்த குழந்தைக்காக நீ அவளோட சேர்ந்து வாழணும்னு கட்டாயம் எல்லாம் இல்லை.. இந்த குழந்தையை நம்மளே வச்சுப்போம்.. அவளை அத்து விட்டு அனுப்பிச்சு விடு.. அவளை எல்லாம் நம்ப முடியாது.. சொன்னா கேளுடா..  இந்த குழந்தை இந்த வீட்டு வாரிசு.. இவளை விட்டுக் கொடுக்க முடியாது.. இந்த ஓடுகாலி ஏதாவது பிரச்சனை பண்ணா அதை கோர்ட்டு மூலமா எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்.. இந்த குழந்தை அவகிட்ட வளர்ந்தா அவளை மாதிரியே இன்னொரு ஓடுகாலியா தான் வளருவா..”

“மாமா வார்த்தையை அளந்து பேசுங்க.. என் பொண்ணுக்கு என்னைக்கும் அந்த நிலைமை வராது.. நான் வரவும் விட மாட்டேன்.. அவ கனவு காணற மாதிரி  ஒரு வாழ்க்கையை தேடி ஓட வேண்டிய அவசியத்தை என்னிக்குமே அவளுக்கு வரவே விட மாட்டேன்.. அவ கனவு நிறைவேற அவளுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை நானே அவளுக்கு பண்ணி கொடுப்பேன்.. என்னால யார் உதவியும் இல்லாம தனியாவே அதை பண்ணமுடியும்”

“யாருடி உனக்கு மாமா? என்னைக்கு நீ இந்த வீட்டை விட்டு போனியோ அப்பவே  இந்த மாமா மருமக உறவு எல்லாம் முடிஞ்சு போச்சு.. இப்ப எங்க வீட்டை பொறுத்தவரைக்கும் நீ யாரோ ரோட்ல போற ஒருத்தி.. நான் என் புள்ள கிட்ட பேசிட்டு இருக்கேன்.. நீ வாயை திறக்காத..”

“நீங்க உங்க புள்ள கிட்ட என்ன வேணா பேசலாம்.. ஆனா என்னை பத்தி என் பொண்ணை பத்தி பேசுனீங்கன்னா நான் வாயை தொறந்து தான் ஆகணும்.. கஷ்டப்பட்டு புள்ளைய பெத்து ரெண்டு வருஷம் வளர்த்து உங்க கிட்ட தூக்கி குடுத்துட்டு போவேன்னு நினைச்சீங்களா..? அதுக்கு வேற ஆளை பாருங்க.. என் குழந்தை என்னோட தான் இருப்பா.. இந்தர்.. நீங்க குழந்தைய குடுங்க நான் கிளம்புறேன்.. இது சரிப்பட்டு வராது..”

அவள் பட்டென்று சொல்லிவிட இந்தரோ ஆடி போனான் ஒரு நொடி..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!