உயிர் 16:
வீட்டிற்கு வந்தவள் தனது தாயிடம் நடந்தவைகளை அனைத்தும் கூறினாள்.
“ ஏன் மீனாட்சி…. இந்த ஆதி எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணுறானா…? இல்லை தெரியாம பண்ணுறானா…? எனக்குக் எதுவும் புடிபடல…நீ எதுக்கும் ஈஸ்வரனை ஃபோன்ல கூப்பிட்டு பாரு….அவன் காதுலயும் போட்டு வை….நா பாண்டியன் கிட்டயும் பேசுறேன்….” என்று கூறிவிட்டு எழுந்து சென்றார்.
அவளோ கண் மூடி அமர்ந்திருந்தாள்.
ஆதி கூறிய விஷயம் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஈஸ்வரன் ஆதியினுடனான திருமண விஷயத்தை கேள்விபட்டால் எவ்வாறு எதிர்வினையாற்றுவான் என்று நினைத்தாலே ஆயாசமாக இருந்தது அவளுக்கு.
அலைபேசியில் பாண்டியனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள் புகழினி, “என்ன தான் பிரச்சினை உங்க அப்பாவுக்கு…? ஹான்…இல்லை தெரியாம தான் கேக்குறேன்…ஏன் இவ்வளவு அவசரமா மீனாட்சிக்கு கல்யாணம் ஏற்பாடு செய்றாரு…? அவ மனசுல எங்கண்ணன் இருக்குன்னு தெரியும்ல…? பின்ன ஏன் இப்படி பண்ணிட்டு இருக்காரு…? பாவம் மீனாட்சி விசனப்பட்டுட்டே இருக்குது… எங்க அண்ணனும் சென்னைக்கு போயிருக்கு…. இப்படி திருட்டு தனமா ஏற்பாடு பண்ணிட்டு இருந்தா என்ன பண்றது…? இதெல்லாம் கொஞ்சமும் நல்லாயில்லை பாண்டியன் சொல்லிட்டேன்…ஹலோ…! லைன்ல இருக்கீங்களா…? இல்ல கீழே வச்சிட்டு வேடிக்கை பாக்குறீங்களா….? ஹலோ…. ஹலோ…!” என உயர் டெசிபலில் கத்திக்கொண்டு இருந்தாள்.
அவனோ பெருமூச்சுடன், “புகழ் மா…. கொஞ்சம் அமைதியா இரு….ஏன் இப்படி டென்ஷன் ஆகுற…? கொஞ்ச நேரம் முன்னதான் எங்கப்பா ஃபோன்ல கல்யாணத்துக்கு வேலையெல்லாம் தலை மேல் இருக்குது. சீக்கிரம் கிளம்பிவான்னு சொன்னாரு….அடுத்து அம்மா…கல்யாணத்தை வந்து நிறுத்துன்னு… அடுத்தது நீ…. என்னால இப்ப உடனே வர முடியாத சூழ்நிலை. கொஞ்சம் புரிஞ்சிக்க…சொன்னா உனக்கு கோவம் தான் வரும். உங்கண்ணனை தைரியமா வந்து மீனாட்சிய பொண்ணு கேக்க சொல்லு….அவனும் கொஞ்சம் இறங்கி வரணும். எப்ப பார்த்தாலும் மீனாட்சி தான் அவனை தேடி போறா… என்னைக்காவது உங்கண்ணன் அவளை தேடி வந்து ஆசையா பேசிருக்கா…? கடுகடுன்னு தானே இருக்கான். இங்க பாரு நானும் அப்பாகிட்ட சொன்னேன் சொன்னேன் , ஆனா அவரு காது கொடுத்து கேக்க மாட்டேங்குறாரு…. கண்டிப்பா நான் சீக்கிரம் வரப் பாக்குறேன் மா.,நா சொன்னதையும் நீ உங்கண்ணன் கிட்ட சொல்லு…வச்சிடுறேன்…* என்று வைத்துவிட்டான். புகழினி அமைதியாக அலைபேசியை பார்த்திருந்தாள்.
பாண்டியன் சொல்வதில் இருந்த உண்மை அவளை சுட்டது. ஈஸ்வரன் மீதும் சிறிது கோபம் தான் வந்தது அவளுக்கு.
ஈஸ்வரனுடைய அலைப்பேசிக்கு அழைத்து அழைத்து பார்த்தாள ் மீனாட்சி.
அவன் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை . சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
இரவு பதினோரு மணியளவில் மீனாட்சிக்கு அழைத்திருந்தான் ஈஸ்வரன்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் கைகளால் துழாவி அலைப்பேசியை எடுத்து காதில் வைத்தாள்.
“ என்ன மீனாட்சி….ஏன் இவ்வளவு தரம் ஃபோன் பண்ணிருக்க…? என்ன அவ்வளவு அவசரமான விசயம்..?” என்றான்.
“ போன விசயம் என்னாச்சு…?”
“ அது கிடக்கு…நீ மொத என்ன விசயம்ன்னு சொல்லு…. தேவையில்லாம நீ இம்புட்டு தரம் கூப்பிட மாட்டியே…! என்ன விசயம்..?” என்றான் கறாராக.
“அது வந்து….மாமா…” என முதலில் தயங்கியவள் பின்னர் ஒருவாறு வீட்டில் நடந்ததை கூறி முடித்தாள்.
எதிர்புறம் அமைதியாக இருக்கவே…, “மாமா….!மாமா….! லைன்ல இருக்கியா….?ஹலோ…! ஹலோ…!”
“ சொல்லு…” என்றான் அழுத்தமாக.
“ நீ தான் மாமா…சொல்லனும்…நானும் அப்பாகிட்ட…சண்டை போட்டேன்…ஆனா அவரு…எல்லா ஏற்பாடுகளையும் முடிச்சிட்டாரு…இன்னைக்கு போய்…நகை ஜவுளி யெல்லாம் வாங்கிட்டு வந்துட்டாக…நீ சீக்கிரம் வா மாமா… ஏதாவது பண்ணு. எனக்கு பயமா இருக்கு…” என அழும் குரலில் கூறினாள்.
“ ம்ம்ச்….அழாத…அந்தாளு மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்காரு….ம்ம்ம்…நான் வந்துடுறேன்…. மீனாட்சி…கவலைப்படாதே…ஆதி கிட்ட பேசிப் பாத்தியா நீயு…”
“ பேசத் தான் போனேன்….ஆனா…அவரு அவசர வேலையாக வெளியூர் கிளம்பிட்டாரு….” என்றவள் ஆதிஞஞ தன் காதலை கூறியதை மட்டும் மறைத்து விட்டாள்.
ஈஸ்வரனின் கோபத்தை தான் அவள் நன்கு அறிவாளே…
“ என்ன மீனாட்சி…?எல்லாத்துக்கும் ஒவ்வொரு காரணத்தை சொல்லிட்டு இருக்கவ…. ம்ம்ச்…எல்லாத்தையும் நானே வந்து பேசனுமா..? நீயும் கொஞ்சம் உங்கப்பா கிட்ட எதிர்த்து பேசு…கல்யாணம் பண்ணிக்க முடியவே முடியாதுன்னு நில்லு…” என சூடாக அவன் பேசியவுடன் அவளுக்கும் கோபம் வந்து விட்டது.
“ அய்யோ…! எங்கப்பா நான் சொல்லி கேக்கவே மாட்டேங்குறாவ….நான் என்ன சொல்லி உங்களுக்கு புரிய வைக்க….எனக்கு அதெல்லாம் தெரியாது நீங்க வந்து எங்கப்பா கிட்ட பொண்ணு கேளுங்க…உங்க வெட்டி வீராப்பை எனக்காக வேண்டி கொஞ்சம் தள்ளி வச்சிட்டு சீக்கிரம் வாங்க…. இன்னும் பத்து நாள்ல கல்யாணம்…. ஏதாவது பண்ணுங்க….” என கோபப்பட்டாள்.
ஈஸ்வரனுக்கோ வந்த வேலை சரியாக முடியும் என தோன்றவில்லை.
ஏற்கனவே அந்த சிந்தனையில் இருந்தவனுக்கு மீனாட்சியின் பேச்சு ஆத்திரத்தை வரவழைக்க,
“ என்ன பேசிட்டு இருக்க நீயு….எனக்கு தைரியம் இல்லைன்னு நினைக்கிறியா…? ஒரு நிமிசம் எனக்கு போதும் உன்னை வீடு புகுந்து தூக்க….ஆனா செய்யாம நிக்கேன்…ஏன்னு தெரியும்ல…? பொட்ட புள்ள உன் பேரு கெட்டுடக் கூடாது…எனக்கும் தங்கச்சி இருக்கா… வசதியா உன்னையே பாத்துக்கனும்னு தான் இம்புட்டு போராடிட்டு இருக்கேன்….உனக்கு அம்புட்டு அவசரமா இருந்தா போடி…..போ… போய் அந்த பணக்கார பயலையே கட்டிக்க….எனக்கொன்னும் இல்லை…எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி உன்னை இழுத்துட்டு ஓடச் சொல்லுதியோ…?உங்கப்பன் என்ன பேச்சு பேசுவான்னு தெரியுமுல்ல…? சும்மா நொய்யு நொய்யுன்னுட்டு..உன் இஷ்டத்துக்கு பேசாத… வந்துட்டா….” என அவளது மனதை குத்திக் கிழித்தான்.
அவனது புத்திக்கு தெரிந்தது அவளை காயப்படுத்துகின்றோம் என… அவனை மீறி கட்டுப்பாடில்லாமல் உதடுகள் அவளை காயப்படுத்தியது.
ஆலையை விற்பதில் ஏற்பட்ட தோய்வு…. பணத்தேவை என அவனுக்கு தலைக்கு மேல் கடமைகள் காத்திருந்ததால் காதல் சற்று பின்னுக்கு தள்ளப்பட்டது.
மீனாட்சிக்குமே அதற்கு மேல் அவனிடம் வாதிட தெம்பில்லை. இருவரது நிலையுமே கடினமான சூழ்நிலையில் இருந்ததால் அவரவர் பேசுவது அவர்களுக்கு சரியாக தோன்றியது. மற்றவரது நிலையை உணரும் நிலையில் இருவரும் இல்லை.
இத்தனை நாட்களாக ஈஸ்வரனது நிலையை எண்ணி அவனுக்கு விட்டுக்கொடுத்து வந்தவள் இன்று தலைக்கு மேல் கத்தி என்ற நிலையில் அவளும் நிதானத்தை கைவிட்டாள்.
சதுரங்க ஆட்டத்தில் காய்களை சாமர்த்தியமாக நகர்த்தியவனோ பிரச்சனையின் தீவிரம் பற்றி சிந்தனையின்றி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.
அடுத்தடுத்து கல்யாண வேலைகள் வேகமாக நடந்தது.
பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் கொடுத்தாகி விட்டது.
மதுரையிலேயே பெரிய திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்தார் சங்கர பாண்டியன்.
சீர் தட்டுகள், தங்க ,வைர, வெள்ளி நகைகளை குவித்திருந்தார் சங்கர பாண்டியன். ஆதிக்கு பட்டு வேஷ்டி சட்டை, தங்க கைக்கடிகாரம், புலி நகம் பதித்த தங்க சங்கிலி, பிரேஸ்லெட், ஆகியவைகளை வாங்கி பரப்பி வைத்திருந்தார் .
பட்டுப் புடவைகளை நூற்று கணக்கில் வாங்கி பெட்டியில் அடுக்கி இருந்தார்.
குடும்பம் நடத்துவதற்கு தேவையான அனைத்து வகையான பொருட்களையும் வாங்கிக் குவித்தவருக்கு தெரியவில்லை அவளது மனதை விலை பேச முடியாதென்று.
எந்த ஒரு பொருளையுமே மீனாட்சியும் கோமதியும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
மீனாட்சி அதன் பின்னர் ஈஸ்வரனுக்கு அழைக்கவேயில்லை. மனதால் மிகவும் தளர்ந்து போயிருந்தாள்.
ஈஸ்வரனது வார்த்தைகள் அவளது செவிகளில் மீண்டும் மீண்டும் மோதி அவளை தன்னிலையிழக்கச் செய்து கொண்டிருந்தது