உயிர் தொடும் உறவே-17

4.3
(7)

உயிர் 17:

 

திருமண நாளும் நெருங்கியது. ஆதிக்கு வேலை முடிந்து விட்டது தான் .

ஆனால் கள்ளிக்குடிக்கு வந்தால் திருமணத்தை எப்பாடு பட்டாவது மீனாட்சி நிறுத்திவிடுவாள் என்று தெரியும்.

அதனால் ஊருக்கு செல்லாமல் காலம் தாழ்த்திக் கொண்டேயிருந்தான்.

பாண்டியனும் , ஈஸ்வரனுமே தங்களுடைய வேலைகளில் சிக்கிக் கொண்டு முன்னதாகவே  ஊர் திரும்ப‌ முடியாது திணறினார்கள்.

 

திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு பாண்டியன் வந்து தனது தந்தையிடம் சண்டை போட்டான்.

அவனது வார்த்தைகளையும் ஒரே வரியில் முறியடித்தார் சங்கர பாண்டியன்.

 

“ இந்த கல்யாணம் நடக்கலன்னா…என் பொணத்தை தான் பாப்பீக…. உங்களுக்கு அதேன் ஆசைன்னா….?உங்க விருப்பப்படி செய்ங்க…ஒண்ணு நினைவில வச்சிக்கோங்க நா சொன்னதை செய்வேன்னு நல்லாவே தெரியும் உங்களுக்கு…இது என் கௌரவப் பிரச்சினை….அம்புட்டுதேன் சொல்லுவேன் . மீறி அவளை அந்த ஈஸ்வரன் பையலோட அனுப்பி வைக்க நினைச்சீங்கன்னா….?என்‌னோட மறு அவதாரத்தை பாப்பீக…எதைப் பத்தியும் இந்த சங்கர‌பாண்டியன் கவலைப்பட மாட்டான்…” எனத் ஆக்ரோஷமாக துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நடந்தார்.

 

பாண்டியனுக்குமே எப்போதடா ‌ஈஸ்வரன் ஊரிலிருந்து வருவான்..?‌ என்றிருந்தது.

 

“ பாப்பா….ஈஸ்வரனோ…ஆதியோ வந்தா தான் டா…நம்மால எதுவும் செய்ய முடியும்…” என்று மீனாட்சியிடம் கூறினான்‌ பாண்டியன்.

 

மிகவும் ‌துவண்டு போயிருக்கும் நேரத்தில் தான் மீனாட்சியை “பாப்பா” என்றழைப்பான்.

திருமணத்திற்கு முதல் நாள் இரவு தான் ‌ஆதி ஊர் திரும்பியிருந்தான்.

நேஹாவும்‌

வேறு வழியின்றி ‌அவனுடன் வந்திருந்தாள்.

 

திருமணம் விடியற்காலையில் நடக்க இருந்தது. ஈஸ்வரனது வேலை முந்தைய நாள் மதியம் தான் முடிந்தது. உடனே பேருந்தினை பிடித்து கள்ளிக்குடிக்கு கிளம்பியவன் வரும் வழியில் பெரும் விபத்து நடந்தததால் போக்குவரத்து மாட்டிக்கொண்டு விட்டான்.

அப்படியும் ‌பாதி தூரம்‌ நடந்தும் எங்கிருந்தோ ஒரு பேருந்தினை பிடித்து வியர்க்க விறுவிறுக்க நேராக திருமண மண்டபத்திற்கு வந்தான்.

 

களையிழந்த முகத்தோடு அமர்ந்திருந்தாள் ‌மீனாட்சி. மனதினுள் பெரும் பிரளையமே நடந்து கொண்டிருந்தது.

கண்களில் கண்ணீர் விழவா..? வேண்டாமா..? என்றிருந்தது.

 

கதவு படாரென்று திறக்கும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பியவள் ஈஸ்வரனை கண்டு கண்கள் கலங்க எழுந்து நின்றாள்.

 

“ வந்துட்டியா……. மாமா…!” என்று ஆவலுடன் அவனருகே செல்ல முயன்ற போது ,

“ இங்க என்ன உனக்கு வேலை…?” என்ற குரல் கேட்கவும் திரும்பி பார்த்தான் .

 

சங்கர பாண்டியன் தான் நின்றிருந்தார்.

 

“ இங்க பாருங்க நானும் ‌மீனாட்சியும் ‌ஒருத்தர ஒருத்தர் விரும்புறோம். அவளை கல்யாணம் பண்ணிக்க போறேன்…மீனாட்சியை என் கிட்ட குடுத்திடுங்க. நான் நல்லா பாத்துக்குவேன்‌. உங்க வெட்டி வீராப்பையெல்லாம் இதுல காட்டாதீக….ஏன் இப்படி அவசர அவசரமா கல்யாணத்தை நடத்துதீக…? நான் அவளை கூட்டிட்டு போறேன்….” என்றான்.

 

“ ஓ…ஓ…அம்புட்டு ஏத்தமாகிடுச்சா..உனக்கு..?சொந்தமா நல்ல வீடு கூட இல்லாத பரதேசி நீயு…. உனக்கு என் பொண்ணு கேக்குதா…? அதேன் வேக வேகமா வந்து அவளை இழுத்துட்டு போறீயாக்கும்…. உன்னோட புத்திய‌ காமிச்சிட்டல நீயு….வேற எப்படி இருக்கும் உங்க புத்தியெல்லாம்…? நாளைக்கு உன் தங்கச்சியும் ஓடிப் போன சரி‌ன்னு சொல்லுவியோ….?”‌என‌ முடிக்கும் முன்பே , “ ஏய்….! மரியாதை….மரியாதையா….பேசு….” என அவரின் முன்பு விரல் நீட்டி பேசியவன் பின்னர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு தணிந்த குரலில், “இங்க பாருய்யா… நீங்க சொல்ற மாதிரி பெருசா சொத்து சுகம் எதுவும் இல்லை தான் எனக்கு. ஆனா அவ மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை என்னால மட்டுந்தேன் தர முடியும்….இங்க பாரு…உன்னோட வீணாப் போன கௌரவத்தை பாத்து உன் பொண்ணோட மனசை கொன்னுபுடாத…” என்றான்.

 

இவையனைத்தும் வெளியே இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஆதிக்கோ எங்கு மாமன் மனது மாறி மீனாட்சியை ஈஸ்வரனுக்கு மணமுடிக்க சரியென்று கூறி விடுவாறோ என பதட்டத்தில் மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.

ஏதோ முடிவு செய்தவன் மனதினை கல்லாக்கிக் கொண்டு விறு விறுவென நடந்தான்.

அதி காலை காரிருள் இன்னும் விலகாத நிலை.

 நேராக ஈஸ்வரனது நிலத்திற்குச் சென்றவனது கைகளில்  தீப்பெட்டி.

யாரும் பார்த்து விடுவாளோ என திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே ஈஸ்வரனது இன் நிலத்தை பார்த்தான்.

 

அறுவடைக்கு நன்றாக வளர்ந்து நின்ற நெற்கதிர்கள் மெல்லிய நிலா வெளிச்சத்தில் காற்றில் அழகாக அசைந்தாடியது.

கிட்டத் தட்ட நான்கு ஏக்கருக்கு மேலாக செழிப்புடன் வளர்ந்திருந்தன நெற்கதிர்கள்.

பழங்காலத்தில் கதைகளில் சொல்லப்படுவது போல பூதத்தின் உயிர் ஒரு விளக்கினுள்ளே இருக்கும் என்பது போல ஈஸ்வரனது உயிர் அந்த நெற்கதிர்களில் தான் உள்ளது என்பதை ஆதி கள்ளிக்குடி கிராமத்திற்கு வந்தவுடனே நன்கு அறிந்து கொண்டான்.

பெற்ற தாய் குழந்தைகளை வாஞ்சையுடன் தடவி பாசமாக பார்ப்பது போல ஈஸ்வரனும் நெற்கதிர்களை தொட்டுத் தடவி அவைகளுடன் மென்மையாக பேசிக்கொண்டு இருப்பான்.

பல மாதங்களாக பாடுபட்டு ,நாற்று நட்டு, கதிர்களை நோய் எதுவும் அண்டாமல் பார்த்து பார்த்து வளர்த்தவைகள் இன்னும் சில நிமிடங்களில் அக்னி தேவனுக்கு இரையாகப் போவதை நினைத்தவனது இதயம் ஒரு நிமிடம் கசங்கியது.

 

மீனாட்சி மீது கொண்ட கண்மூடித்தனமான காதல் அவனது புத்தியை மழுங்கடித்து .

 

செய்யும் தவறு மனதினை சுட , கைகள் நடுங்க மெல்லத் தீப்பெட்டியை உரசினான். அவனது பதட்டத்தில் சரியாக உரச வரவில்லை . அந்த மெல்லிய குளிரிலும் அவனுக்கு வியர்த்து கொட்டியது.

சட்டையில் நெற்றியை துடைத்தபடி வேகமாக உரசினான். இப்போது பற்றிக்கொண்டது தீக்குச்சி. திரும்பி நின்று கொண்டு தீக்குச்சியை பின்னால் தூக்கி போட்டான்.

 

சிறிது சிறிதாக பற்றிக்கொண்ட நெருப்பு ‌வயல்வெளி முழுவதும் சில நிமிடங்களில் பரவியது.

 

வேகமாக திருமண மண்டபத்திற்கு திரும்பினான் ஆதி.

வியர்வை வழிய நீண்ட நெடுமூச்சுகளை விட்டான் ஆதி.

 

இங்க ஈஸ்வரனோ சங்கர‌ பாண்டியனுடன் விவாதத்தில் இருந்தான்.

 

“கடைசியா இப்ப என்ன சொல்றீக…?” என்றான்.

 

“ என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு….மீனாட்சியை உனக்கு கட்டித் தரேன்… வெறும் பயலுக்கு அவ்வளவு திமிரா…”

 

ஈஸ்வரனுக்கு இதயம் முழுவதும் வலி பரவியது. மீனாட்சியையும்‌ கோமதியையும்‌ பார்த்து பெருமூச்சு விட்டான்.

 

மீனாட்சி கண்களில் தெரிந்த கண்ணீர் அவனது இதயத்தை கூறு போட்டது.

 

இக்கணம் வரை எதற்காகவும் அஞ்சாது , எதற்காகவும் கலங்காது நேர்மையான உழைப்பும் முன்னேற்றமும் கொடுத்த திமிரில் நிமிர்ந்து இருந்தவன் இன்று காதலுக்காக சங்கர பாண்டியனது காலைப் பிடிக்கத் தயாரானான்.

 

அவரது காதலைப் பிடிக்க குனிந்தவாறு கைகளை நீட்ட, அக்கைகளை மெல்லிய வளைக்கரம் ஒன்று பிடித்து தடுத்தது.

நிமிர்ந்தவனது பார்வையில் விழுந்தாள் மீனாட்சி.

 

“ வேணாம் மாமா…. தயவு செய்து அவரோட கால்ல விழுந்து என் கழுத்துல தாலி கட்டாத..அது இந்த ஈஸ்வரனுக்கு அழகு இல்லை….என்னிக்கா இருந்தாலும் நீ தனிக்காட்டு ராஜா தான்…. உன்னோட கால் தூசிக்கு இங்க யாரும் தகுதியானவக இல்லை…. உம் மேல நான் வைச்ச பாசம் இந்த ஜென்மத்துக்கு மாறாது….அது காதலா இல்லாட்டியும் ‌…உன்‌ மேல இருக்குற தூய்மையான அன்பா இருக்கும்….நீ தோக்கக் கூடாது மாமா…. எப்பவும்…எப்பவும்….” என்றவள் ஒரு வினாடி தன் மனதை இரும்பாக்கிக் கொண்டு ,  “பரவாயில்ல மாமா….நான்…நான் …இந்த வாழ்க்கையை ஏத்துக்குறேன்….இது.. நான் எங்கப்பாவுக்கு கொடுக்குற தண்டனை…எனக்காக நீ தலை குனிஞ்சு நிக்க வேணாம்…போயிட்டு மாமா… உனக்கான நல்ல வாழ்க்கையை அமைச்சிக்க….அவரு கால்ல விழுந்து உன்னை நீயே  அசிங்கப் படுத்திக்காத…நம்ம காதல் வேணா தோத்துருக்கலாம்…ஆனா‌ உம்மேல வச்ச பாசம் எப்பவும் மாறாது. அது காதலா இல்லாட்டியும் கூட தூய்மையான பாசமா இருக்கும் . அதை எந்த கொம்பனாலும் மாத்த முடியாது…” என் கண்ணீருடன் ஆரம்பித்து ஆங்காரமாக கூறியவள் கையெடுத்து கும்பிட்டு,” தயவு செஞ்சு போயிடு மாமா…இங்க இருந்து கல்யாணத்தை பாத்து முழுசா உடைஞ்சு போயிடாத… என்னால தாங்க முடியாது…போ..மாமா..போயிடு…” என கையெடுத்து கும்பிட்டு அழுதாள்.

 

ஈஸ்வரனோ துக்கம் தொண்டையை அடைக்க குரல் நடுங்க, “ நிஜமா தான் சொல்றீயா….?மீனா.. மீனாட்சி…” என்றான்.

 

குனிந்து கொண்டே கண்ணீரோடு “ஆம்” என தலையசைத்தாள்.

 

அவளது கண்ணீர் சிறிதும் சங்கர பாண்டியனை அசைத்து பார்க்கவில்லை.

வடிவாம்பாள் சொந்தகளுடன் பேசிக்கொண்டிருந்ததால் மீனாட்சியின் அறையினுள் நடந்தவை எதுவும் அவருக்குத் தெரியவில்லை.

 

ஈஸ்வரனோ மீண்டும் ,  “மீனாட்சி நல்லா யோசிச்சு தான் சொல்லுதியா..?”என்றான்.

 

கோமதியோ தனது கணவனை முறைத்துக் கொண்டே , “ வேண்டாம் மீனாட்சி….தப்பு பண்ணாத…டி.  ஏன் இம்புட்டு வீம்பு புடிக்கீக நீங்க…? பாவம் மேல பாவத்தை சேக்காதீக…” என சொல்லி முடிப்பதற்குள் அறை விழுந்தது அவரது செவியில்.

 

“ எனக்கு என்ன செய்யனும்னு செய்யக்கூடாதுன்னு தெரியும்…நீ வாய‌ மூடிட்டு உம்ம வேலையை மட்டும் பாரு….” என‌ அடிக்குரலில் கர்ஜித்தார்.

 

ஆதியோ மணமேடையில் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்க, ஐயரோ..” பொண்ணு…அழைச்சிட்டு வாங்கோ….நாழியறது…. சீக்கிரம்…சீக்கிரம்…” என‌ அழைக்க.

தவிப்புடன் மீனாட்சியை பார்த்தான் ஈஸ்வரன் ,  “என்னை விட்டுவிட்டுச் செல்கிறாயா…?” என்ற அர்த்தம் பொதிந்திருந்தது.

வலி மிகுந்த விழிகளுடன் அவனருகே வந்து நின்றவள் அவனது காலில் விழுந்து விட்டாள்.

 

“ மீனாட்சி…” என பதறி விலகினான் ஈஸ்வரன்.

“உன்னோட ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும் மாமா…. நல்லா ‌..” மேற்கொண்டு பேச முடியாமல் தொண்டை அடைக்க குரலை செருமிக் கொண்டு ,  “நல்லாயிருன்னு சொல்லிட்டு திரும்பி பாக்கம போயிடு மாமா…” என்றாள்.

 

அவளது தலையில் கை வைத்து ஏதோ சொல்ல வந்தவன் கலங்கிய குரலில், “அவ்வளவு பெரிய தாராள மனசு எங்கிட்ட இல்லை மீனாட்சி….நான் போறேன்…” என்றவன் அவளை திரும்பியும் பராமல் தளர்ந்த நடையுடன் வெளியே சென்றான்.

 

இருவரது குரலில் இருந்த வலியும் வேதனையும் கல்லையும் கரைய வைக்கும் . ஆனால் கல்லை விட கடினமான இரும்பாக மாறியிருந்தது சங்கர பாண்டியனது இதயம்.

மகளின் கண்ணீர் சிறிதும் பாதிக்கவில்லை அவரை.

ஆணவம் , வெட்டி கௌரவம் தன்னகங்காரம் அவரது கண்களையும் புத்தியையும் முழுவதும் மழுங்கடித்திருந்தது.

 

பாண்டியனோ ஆத்திரத்துடன் தந்தையின் அருகே வர கைப்பிடித்து தடுத்துவிட்டார்‌ கோமதி.

 

தந்தையை கண்டு , “நீங்கெல்லாம் ஒரு மனுசனா…? ச்சை….இதை பாக்க தானா என்னைய வேற ஊர்லயிருந்த அவசரமா வரச் சொன்னீக….என்ன.. கூந்தலுக்கு…..?” என‌ வண்ண‌ வண்ணமாக திட்டிய படி மண்டபத்தினுள் சென்றான் ‌பாண்டியன்.

 

தளர்ந்த நடையுடன் வெளியே செல்பவனை உதடுகள் துடிக்க பார்த்திருந்தவள் மணமேடைக்குச் சென்று ஆதியின் அருகில் அமர்ந்தாள்.

 

ஆதி திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவளின் உள்ளக் கொதிப்பினை ஒரளவு ஊகிக்க முடிந்தது.

மீனாட்சியோ…ஆதியை சிறிதும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவன் மீது கொலை வெறியில் இருந்தாள்.

ஆம்..! முதல் நாள் இரவே தானும் ஈஸ்வரனும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகவும் திருமணத்தை நிறுத்தும்படி மன்றாடினாள்.

 

அவனோ முடியவே முடியாது என்று மறுத்து விட்டான்.

அவன் தான் அவளை தன்னுடையவளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவினில் உறுதியாக இருக்கின்றானே..‌!பிறகெப்படி அவளை ஈஸ்வரனுக்கு விட்டுத் தருவான்.

 

சீதையை மாறுவேடத்தில் கவர்ந்து சென்ற ராவணணை காட்டிலும் பன்மடங்கு ராட்சசனாய் தெரிந்தான் ஆதி.

அவன் ஈஸ்வரனுக்கு செய்து வைத்துவிட்டு வந்திருக்கும் துரோகத்தை அறிந்தால் அவளது நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை அவனால் அனுமானிக்கவே முடியவில்லை.

அதனால் வந்த சஞ்சலத்தால் தான் அவனது முகம் இறுகிப் போயிருந்தது.

தெரிந்து செய்யும் தவறுகள் என்றுமே மன்னிக்கப்பட மாட்டாது என்பதை அங்கணம் அவன் உணராது போனான்.

 

வெளியே வந்து நின்ற ஈஸ்வரனது செவியில், “கெட்டிமேளம்…. கெட்டிமேளம்…” என்ற‌ மங்கல ஓசை நாராசமாக விழுந்து இதயத்தை ரெண்டாகப்‌ பிளந்தது.

இந்த உலகம் இன்றோடு முடிந்துவிடாதா…?என்ற எண்ணம் தோன்ற தலையை பிடித்து கொண்டு,” ஆ…..ஆ….ஆ..” என கத்தினான்.

 

இதயத்தில் ஆயிரம் சம்மட்டியால் அடித்தது போன்றதொரு வலி தோன்றி உயிரை வெளியே இழுத்துப் போட்டது.

தன்னில் இருந்த ஒரு பாதியை தொலைத்து விட்டு நடைபிணமாக நின்றான் ‌ஈஸ்வரன்.

கண்கள் ஜீவனற்று வெறுங்கூடுடன் நடந்து சென்றான்.

 

இங்கோ மீனாட்சி கண்ணனை இழந்த மீராவினைப் போல களையிழந்து ஆதியினது கைகளால் பொன் தாலி வாங்கிக் கொண்டாள்.

 

ஆதி மீனாட்சியின் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு விலகிய போது அவளது கண்ணீர் அவனது கரங்களில் பட்டுத் தெறித்தது.

அவளது நிலையை கண்ட ஆதிக்கு உள்ளே எதுவோ பிசைவது போலிருந்தது.

வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயமாக தெரிந்தது.

 

ஊமையாய் அழுதது பெண்ணவள் உள்ளம்.

 

வரட்டு பிடிவாதத்தினாலும் , வீண் கௌரவத்தினாலும் சுற்றி பின்னப்பட்ட சதி வலையினாலும் பாதிக்கப்பட்டது மீனாட்சி மட்டுமே.

அவளை உயிருடன் கொன்றிருந்தால் கூட இவ்வளவு வலி தோன்றியிருக்காது போலும்…

இந்த இதயத்திற்கு ஏன் எதையும் தாங்கக்கூடிய சக்தி இல்லை ..? ஆறா ரணங்களை உண்டு பண்ணுகிறதே‌..? என் தத்தளித்து தவித்துப் போனாள்.

 

சங்கர பாண்டியனோ வெகு இயல்பாக அடுத்தடுத்து சம்பிரதாயங்களை செய்து கொண்டிருந்தார்.

வடிவாம்பாளும் மயில்வாகமும் வாயெல்லாம் பல்லாக வலம் வந்தனர்.

 

தளர்ந்து நடையுடன் வந்தவனை  “ஈஸ்வரா……”என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

 

கலங்கிய முகத்துடன் திரும்பியவனை கண்டு மூச்சு வாங்க நின்றான் அவனது நண்பன் மணி.

 

“ உன்னை எங்கனயெல்லாம் தேடுதேன் ஈஸ்வரு. எங்க போன….?” என‌ மூச்சிறைக்க கேட்டான்.

 

“ சீக்கிரம் வாம் ல…”என்றான்.

 

அவனோ பதிலேதும் கூறாமல் அமைதியாக நின்றான்.

 

“ ஏலேய்…! ஈஸ்வரு…உன்னோட வரப்புல நெருப்பு புடிச்சிரிச்சு லே…சீக்கிரம் வா…. முக்கால்வாசி அணைச்சாச்சு…விரசா வா…” என‌அவனது கைகளை பிடித்து கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு ஓடினான் மணி.

 

ஈஸ்வரனுக்குஅவன் கூறியது மூளையில் பதியவே சில கணங்கள் ஆகியது.

 

சட்டென நின்றவன் மணியின் சட்டையை பிடித்து கொண்டு, “ என்ன ல சொல்லுத…? எப்படி..? என்னாச்சு..?” என தொண்டை கமறக் கேட்டான்.

அவனது பிள்ளைகள் போன்றதல்லவா நெல் மணிகள்…? இதயம் வேகமாக துடிக்க நின்றான்.

 

“ நீ வா‌….ல..மொத…என்னன்னு தெரியல…. காலையில் எங்கப்பா தோட்டத்துக்கு போறப்ப பாத்துருக்காக…திகு திகுன்னுட்டு வரப்பு பூராவும் நெருப்பு புடிச்சு எரிஞ்சிருக்கு..தீ அணைக்குற வண்டிக்கு சொல்லிட்டு உன்ன தேடுனா…நீ ஆளையே காணோம்…அதோ அங்க பாரு…” என கை நீட்டினான்.

 

திரும்பி பார்த்தவனது கண்களில் கருகிய நெற்கதிர்களே தென்பட்டது.

இன்னும் சில இடங்களில் எறிந்து கொண்டுதான் இருந்தது.

அவனோ செய்வதறியாது திகைத்து நின்றான்.

 

அவைகளுடன்‌ பேசி , தொட்டு , சிலிர்த்து ரசித்து சிறு பூஞ்சைகள் கூட அண்டாது பாதுகாத்தான்.

பருவமடைந்த இளமங்கையை பொத்தி பொத்தி பாதுகாப்பதை போல கண்ணின் மணியாக அரவணைத்திருந்தான்.

 

அடுத்த சில தினங்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் அனைத்தும் நெருப்பிற்கு இரையாகியிருப்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

 

எரிந்த கொண்டிருந்த சிலவற்றையும் அணைக்க தோன்றாமல் சிலைப் போல நின்றிருந்தான்.

 

“ அண்ணே…! அண்ணே..! வந்துட்டியா…?பாத்தியாண்ணே…அத்தனையும் கருகி போச்சண்ணே….! அய்யோ…! என்ன பண்றது..? எல்லாத்தையும் உன்‌ உசுரை விட அதிகமா நேசிச்சியேண்ணே….அம்புட்டும்‌ கருகி போச்சே…! எப்படி நடந்துச்சு…. தெரியலையே…” என தலையில் அடித்து கொண்டு அழுதாள் புகழினி.

 

ஈஸ்வரனோ தொப்பென்று வரப்பிலேயே அமர்ந்து கொண்டு, “ ஆமா…அம்புட்டும் கருகி தான் போச்சு…. அம்புட்டும் என்னை விட்டுட்டு போயிடுச்சு….” என பிதற்றிக் கொண்டே கண்களில் வழிந்த நீரினை  சட்டையில் துடைத்தான்.

 

மிச்சம் மீதியில்லாமல் அனைத்தும் கருகியிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!