21.சிந்தையுள் சிதையும் தேனே..!

4.6
(14)

தேன் 21

மரணப் பதிவு பிரிவில் இருந்து வெளியே வந்த கார்த்திகேயனின் கையில் பிடிக்கப்பட்டிருந்த ஆவணங்களைப் போலவே, அவன் மனமும் கோபத்தால் பதறிக் கொண்டிருந்தது. அந்த ஆவணங்களின் ஒவ்வொரு வரியும், இழைக்கப்பட்ட அநியாயத்தின் சாட்சியாக இருந்தது.

“உயிரோட இருக்குறவ பொய்யா சாகற மாதிரி பதிவு பண்ணினா, அது கொலைக்கு சமம் தான்…” என்று தன் உள்ளத்துக்குள் கொந்தளித்த படி  வேகமாக நடந்தான்.

நேராக கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரது மேசையின் மீது அந்த காகிதங்களை தூக்கி வீசினான். அவன் வந்த வேகமும், நடந்து கொண்ட முறையையும் பார்க்க கமிஷனருக்கு சற்று கோபத்தை எழச் செய்தது.

“என்ன இங்க நடக்குது கமிஷனர் அங்கிள் இதெல்லாம் என்னது..?” என்று கார்த்திகேயன் ஆவேசமாகக் கேட்க உடனே அந்தக் காகிதங்களை எடுத்து பார்த்தவருக்கு, புருவங்கள் முடிச்சிட்டன.

“இது தெரியாதா நிவேதாவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்..”

“அது எனக்கும் தெரியும் உங்களுக்கு இப்போ நடந்து கொண்டிருக்கிற விஷயம் தெரியுமா தெரியாதா..? இந்த ஆபிஸ விட்டு வெளியே வந்து கொஞ்சம் பாருங்க ஊர்ல உலகத்துல என்ன நடக்குதுன்னு..”

“கார்த்தி பிரச்சனை என்னன்னு நேரா சொல்லு சுத்தி வளைச்சு பேசாத எனக்கு நிறைய வேலை இருக்கு..”

“நிவேதா உயிரோட தான் இருக்கா அப்படி இருக்கும்போது எப்படி இது சாத்தியமாகும்..”

“என்ன சொல்ற நிவேதா உயிரோடு இருக்காளா வாவ் இட்ஸ் கிரேட் நியூஸ்..” என்று சந்தோசமும், அதிர்ச்சியும் ஒன்று சேர தனது இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவர்,

“ஆனா எப்படி..?” என்று குழப்பத்துடன் கேட்க,

“ஆக்சிடென்ட் நடந்த இடத்திலிருந்து யாரோ நிவேதாவ கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க நல்ல வேலை கருணாகரன் சார்ட் கண்ணுல நிவேதா தெய்வாதீனமா பட்டது இல்லன்னா இன்று வரைக்கும் இந்த நிமிடம் வரைக்கும் நிவேதாவை நீங்க எல்லாம் தேடிக்கிட்டு தான் இருந்திருப்பீங்க..” என்று விரக்தியாக கார்த்திகேயன் கூற,

அதனை முழுமையாக நம்ப முடியாமல்,

“நீ உண்மையாத்தான் சொல்றியா  கார்த்தி இவ்வளவு நடந்து இருக்கு ஆனா கருணாகரன் என்கிட்ட ஒன்னு கூட சொல்லலையே..!”

“அவர் மகள் கிடைச்ச சந்தோஷத்துல துள்ளிக் குதிச்சுக்கொண்டு திரிகிறார் இதுல உங்களை எங்க ஞாபகம் வச்சு இருக்க போறாரு..”

“அப்படின்னா கார்த்தி இதெல்லாம்..” என்று கையில் இருந்து காகிதங்களை காட்ட,

“அனைத்தும் திட்டமிட்ட சதியும், சூழ்ச்சியும்..”

“அப்போ அது யாரா இருக்கும்..?”

“இதோ இப்ப அதைத் தேடத்தான் புறப்பட்டுக்கிட்டு இருக்கேன் உங்களோட யூனிஃபார்மா தந்தீங்கன்னா போட்டுட்டு நான் தேடி எல்லா டீடெயில்ஸையும் கலெக்ட் பண்ணிட்டு உங்களுக்கு அக்யூஸ்ட் யாருன்னு வாட்ஸ்அப்ல அனுப்பி விடுறேன் நீங்க ஓடிப்போய் அவன அரெஸ்ட் பண்ணுங்க ஓகேயா..?” என்று கார்த்திகேயன் ன் எகத்தாளத்துடன் கூற,

“என்ன கார்த்தி வாய் ரொம்ப நீளுது இந்த போலீஸ்காரங்க ஒன்னுக்கும் உதவ மாட்டாங்கன்னு சொல்லாம சொல்லிக் காட்டுறியா..?” என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு கமிஷனர் கேட்டார்.

“அப்புறம் என்ன செய்ய சொல்றீங்க இதோ நிவேதா செத்துட்டான்னு சொல்லி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கையில இருக்கு நிவேதா என்னன்னா அங்கு உயிரோட இருக்கா நிவேதாவையும் உங்களோட போலீஸ் டிபார்ட்மெண்ட் கண்டுபிடிக்கல அப்படி இருக்கும்போது எப்படி நம்புறது இதனால்தான் உங்களோட டிபார்ட்மெண்ட பத்தி மக்கள் மனசுல தப்பான அபிப்ராயம் இருக்கு இவ்வளவு போலீஸ்காரர் இருந்தும் ஒரு பெண்ணோட சாவ பத்தி ஒழுங்கா விசாரிச்சு  தடயங்களை அறியாமல் இப்படி ஒரு பெரிய தப்பு நடக்கவே உங்களோட போலீஸ் டிபார்ட்மென்ட்டோட வீக்னஸ் தான் காரணம்..” என்று அடித்து உரைத்து கார்த்தி கூற,

அவன் கூறும் நியாயங்களில் புதைந்துள்ள உண்மையை அறிந்த கமிஷனருக்கு பதில் கூற முடியவில்லை.

“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்த டாக்டரை உடனே கண்டுபிடிச்சா சில விஷயங்களை கண்டுபிடிக்கலாம் என்று நினைக்கிறேன் எனக்கு உங்களோட ஹெல்ப் வேணும் சீக்கிரமா அவரை கண்டுபிடித்து அந்த டாக்டர வாயால இருந்து உண்மையை வர வைக்கணும் ..”

“நீ ஒன்னும் கவலைப் படாத கார்த்தி இத நானே நேரே வாங்கி விசாரிக்கிறேன்..”

“அந்த டாக்டர் பத்தின டீடெயில்ஸ் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்லையே இருக்கு உடனே அவனைக் கைது செஞ்சுட்டு எனக்கு கால் பண்ணுங்க நான் சில கேள்விகள் எல்லாம் அவன்கிட்ட கேட்டாகனும்..” என்று வேறெங்கோ வெறித்துப் பார்த்தபடி கூறினான் கார்த்திகேயன்.

அங்கிருந்து நேராக வைத்தியசாலைக்கு புறப்பட்ட கார்த்திகேயன் வேகமாக காரை ஓட்டத் தொடங்கினான்.

காரின் வேகத்தை விட அவனது மனதில் தோன்றும் எண்ணங்களின் வேகம் அதிகமாக இருந்தது.

அவனது மனதில் ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான்,

‘இதே மாதிரி நிவேதாவை கொல்ல எண்ணினரா..? அல்லது கருணாகரனை பயமுறுத்துவதற்காகவும், எச்சரிப்பதற்காகவும் இப்படி நடந்து கொண்டாரா? அல்லது நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிவுறுத்தல் கொடுக்கப்படுதா..?

முதல் கருணாகரன் சார்ந்த தொழில் வட்டாரத்தில் இருக்கிற எதிரிகளை கணக்கிட்டு பார்க்கணும் அதெல்லாம் அவ்வளவு எளிதான காரியம் அல்லவே தொழில் அதிபர் அதுவும் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தமான ஒருவர் என்றால் அவருக்கு ஆயிரத்துக்கு மேல் எதிரிகள் இருப்பார்கள்

இவன்தான் எதிரி என்று எவ்வாறு கண்டுபிடிப்பது சரி ஏதோ ஒரு வகையில் அவன் ஏதாவது ஒரு தடையத்தை விட்டுவிட்டு தான் சென்று இருப்பான்.

அவன் செய்த சிறிய தவறுதான் எங்களுக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் பார்ப்போம்..’ என்று சிந்தித்தபடி வைத்தியசாலையை அடைந்தான்.

கார்த்திகேயன் உடனே நேராக நிவேதாவின் அறைக்குள் கதவை திறந்து கொண்டு உள்நுழைய நிவேதாவோ நீர் அருந்துவதற்காக அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எட்டி எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

ஆனால் அது அவளுக்கு சற்று தூரத்தில் இருந்ததால் அதனை எடுக்க முடியவில்லை. எழுந்து கொள்ளவும் முடியாமல் அவள் தடுமாறி நிற்க உடனே அவளது தேவை அறிந்து கார்த்திகேயன் அவள் அருகே வந்து தண்ணீர் போத்தலை எடுத்துக் கொடுத்தான்.

அவனையும் போத்தலையும் ஒரு அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு தண்ணீர் போத்தலை வாங்கி நீரை அருந்திவிட்டு மீண்டும் அவனிடமே அதனைக் கொடுத்தாள்

ஒரு தீர்க்கமான பார்வையுடன்,

“இப்போ உடம்பு எப்படி இருக்கு..?” என்று அக்கறையுடன் கேட்டான்.

“ஆஹ்.. கொஞ்சம் பரவாயில்லை தல தான் அடிக்கடி சுத்துற மாதிரி இருக்கு..”

“ஓகே இன்னும் ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும்..”

“இன்னும் ரெண்டு நாளா..? எனக்கு இதுக்குள்ள இருக்க ரொம்ப போர் அடிக்குது என்ன சீக்கிரமா வீட்டை கூட்டி போக மாட்டீங்களா..?” என்று கண்களை சிமிட்டி சிறுபிள்ளை போல கேட்டாள்.

அவனுக்கு ஏனோ அவளை புதிதாக பார்ப்பது போல இருந்தது.

“திரும்பவும் உனக்கு டெஸ்ட் எடுக்கணுமாம் சீப் டாக்டர் நேத்து தான் வந்து சொல்லிட்டு போனாங்க அந்த டெஸ்ட் எடுத்து முடிச்சு அதோட ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம்தான்  வீட்ட போறதா இல்லையான்னு சொல்லுவாங்க..”

அவள் சலிப்புடன் கார்த்திகேயனை பார்த்து,

“நான் நல்லா தானே இருக்கேன் எனக்கு ஒன்னும் இல்ல ப்ளீஸ் இங்க இருந்து என்ன கூட்டி போங்க..” என்றதும் கார்த்திகேயன் சிறு புன்னகையுடன்,

“எல்லாம் உன்னோட நல்லதுக்கு தான் சொல்றாங்க கொஞ்சம் பொறுமையா இரு உனக்கு இங்கே என்ன வசதி தேவையோ அதை நான் செய்து தாரேன் என்ன வேணுமோ கேள் வீணா பிடிவாதம் பிடிக்காத..”

“உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்..”

“தாராளமா கேட்கலாம்..”

“எல்லாரும் என்ன தெரியுதா தெரியுதான்னு என்ன கேட்டாங்க ஆனா நீங்க மட்டும் அந்த கேள்வியை ஏன் என்கிட்ட கேட்கல..?”

புருவத்தை உயர்த்தி சிரித்தபடி,

“பரவாயில்லையே ஆக்சிடென்ட்க்குப் பிறகு உன்னோட மூளை நல்லா வேலை செய்து போல இப்படி எல்லாம் யோசிச்சி இருக்க..” என்று கார்த்திகேயன் கிண்டலாக கூறவும் நிவேதா இரு கண்களை பெரிதாக்கி முறைத்துப் பார்த்தாள்.

“ஓகே ஓகே கூல் உன்ன பெத்து வளர்த்த அம்மா அப்பாவையே உனக்கு ஞாபகம் இல்லை இதுல நான் எப்படி ஞாபகத்துக்கு இருக்க போறேன் இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் உன்கிட்ட கேட்டா தெரிஞ்சுக்கணும் அது சரி யாராவது நான் உனக்கு யாருன்னு சொன்னாங்களா..?” என்று ஆர்வமாகக் கேட்க,

அதைக் கேட்டதும் தலை குனிந்த படிவம் ஆம் என்று தலையாட்டினாள்

குறும்பாகச் சிரித்தவன்,

“என்னன்னு சொன்னாங்க..?”

“நீங்க.. நீங்க.. வந்து என்ன கட்டிக்க இல்ல.. கல்யாணம் இல்ல.. கல்யாணத்துக்கு பேசி வச்ச மாப்பிள்ளைன்னு சொன்னாங்க..” என்று வார்த்தைகளைக் கூறி முடிக்க பெரும்பாடு பட்டாள் நிவேதா.

“அம்மாடியோ நிவேதாவுக்கு வார்த்தைகள் தடுமாறுமா எனக்கு ஏனோ தெரியல உன்னை பார்க்க ரொம்ப ரொம்ப புதுசா இருக்கு ஆனா அந்த நிவேதாவை விட இந்த நிவேதாவ பெட்டர் பேசாம உனக்கு பழைய நினைவு எல்லாம் வராமல் இருந்தாலே போதும்..” என்று மனதில் நினைத்ததை கார்த்திகை என் வெளிப்படையாகவே கூறிவிட்டான்.

“எனக்கும்தான் ஏதோ நடுக்காட்டில் கண்ணை கட்டி விட்டது போல இருக்கு எனக்கு எதுவுமே ஞாபகத்துக்கு இல்லை..”

“உண்மையிலேயே உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையா..?”

“நீங்களும் என்ன நம்பலையா..? எனக்கு அதை நினைக்க ரொம்ப கவலையா இருக்கு நான் எப்படி..? எல்லாமே புதுசா இருக்கு யோசிக்க யோசிக்க தல ரொம்ப  வலிக்குது..”

“ஒன்னும் யோசிக்க தேவையில்லை இதுவரைக்கும் எல்லாம் நல்லபடியா தான் நடந்துக்கிட்டு இருக்கு இனிய நல்லபடியா நடக்கும் அந்த நம்பிக்கையோட இரு ஞாபகம் வராம இருக்கிறதே உனக்கு  நல்லது உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கும் நல்லதுன்னு தான் நான் நினைக்கிறேன்..”

“ஏன் அப்படி சொல்றீங்க நான் ரொம்ப மோசமான பொண்ணா..?” என்று அவள் கேட்டதும்,

‘உண்மைய சொல்லுவோமா பொய்ய சொல்லுவோமா பாவம் உண்மையை கேட்டு அவளுக்கு தலை வலி தான் கூடும்..’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன்,

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல கருணாகரன் சார் எங்க போயிட்டாங்க..?”

“அம்மாக்கு ஏதோ மருந்து வாங்கனும்னு வெளியே போயிட்டாங்க..”

“சரி நீ ரெஸ்ட் எடு நான் அம்மாவ பாத்துட்டு அப்புறமா வாரேன்..” என்றிட சரி என தலையசைத்தாள்.

அந்த அறையில் இருந்து வெளியே வந்த கார்த்திகேயனுக்கோ முற்றிலும் நிவேதா புதிதாகவே தோன்றினாள்.

ஒரு வார்த்தை பேசினால் அதற்கு நான்கு வார்த்தைகள் எதிர்த்து பேசுபவள் இன்று கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தலையசைப்பே பதிலாக உள்ளன.

ஏனோ தெரியவில்லை அந்த கர்வமும், திமிரும் தொலைந்து போய் அமைதியும், சாந்தமும் நிறைந்த நிவேதாவை பார்க்கப் பார்க்க அவனது மனதிற்குள் அவனை அறியாமலே  பிடித்தத்தை ஏற்படுத்தியது.

அதனால் தினமும் நிவேதாவுடன் அதிகளவு பொழுதை கழிக்க எண்ணி அவளுடனே இருந்து அவளது தேவைகளை பூர்த்தி செய்தான்.

நிவேதாவிற்கு மீண்டும் ஞாபகம் வருமா..? அல்லது கார்த்திகேயன் மனதில் நிவேதாவின் மீது உள்ள அக்கறை காதலாக மாறுமா..?

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!