அகத்தின் அலைவரிசைகளெல்லாம் அகத்தினுள்ளே அடக்கமாகி அழுகி விடுவதிலேயே அழுத்தமெனும் ஆழிப்பேரலை ஆட்டம் காண்கிறது!!!
தட தடவென ஓடும் இரயிலின் ஜன்னல் வழி தெரியும் இருட்டில் துழாவியது ஆடவனின் கருவிழிகள். குளிரூட்டப்பட்ட ரயில் கேபினில் அவனுக்கு மட்டும் தனி கேபின் ஒதுக்கப்பட்டிருந்தது.
சில நேரங்களில் அவனுக்குள் வீற்றிருக்கும் உருவமறியா உணர்வுகளை காகிதத்தில் கிறுக்கி விடுவது அவனது வழமை.
இந்தியாவின் டாப் டென் தொழிலதிபர்களில் அவனும் ஒருவன்.
கேம்ஸ் மற்றும் பஸ்ஸில் (puzzle) தயாரிப்பதில் வல்லவன். லாஜிக், எமோஷன், புத்திக்கூர்மையைப் பட்டைத் தீட்டும் விதமான ஆரோக்கியமான மொபைல் கேம்ஸை தயாரித்து, அதில் வெற்றியும் கண்டவன்.
வெகு அரிதான வேளைகளிலேயே இது போன்ற பயணங்களெல்லாம் ஏற்பான். தனிமை விரும்பி. சொன்ன வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் அவனுக்கு. யார் மீதும் கோபத்தை அள்ளி வீசியது கிடையாது தான். ஆனால், அவன் நேருக்கு நேராய் பார்த்து விட்டால், எதிரில் நிற்பவருக்கு உதறல் எடுத்து விடும். அவனது பார்வைக் கூர்மையை ஏற்க திணறியே, அவனது பணியாளர்கள் வேலையை கச்சிதமாக முடித்து விடுவார்கள்.
ஒவ்வொரு விளையாட்டையும் அவன் உருவாக்கும் திட்ட முறையும், அதனை மற்றவர்களுக்குப் புரியும் படி விளக்கும் அசாத்திய திறனும் அவனுக்கு கீழே பணிபுரியும் அனைவரையும் வியக்க வைக்கும்.
அவசியமற்று யாரிடமும் குரலை உயர்த்திப் பேசியதோ, துச்சமாக ஒரு வார்த்தைக் கூறியதோ கிடையாது. ஆனால், அவனிடம் தனது பிரச்சினையைக் கூறி கண்ணீர் வடித்தாலும் அதனை கண்டுகொள்ளக்கூட மாட்டான். அவனுக்கு கீழே வேலை பார்க்கும் சிலருக்கு அவனது பண்பு பிடித்திருந்தாலும், பலருக்கு அது தலைக்கணமாகவே தோன்றியது.
மற்றவரின் விருப்பங்களையும் கணிப்புகளையும் ஒரு பொருட்டாக எண்ணாதவனுக்கு அவனது வேலை மட்டுமே பிரதானம். அவனைக் கட்டுப்படுத்தும் உரிமை அவனது தாய் தந்தைக்கே உள்ளது.
இப்போது அவர்களது சொல்லுக்கு கட்டுப்பட்டு தான், சென்னையில் இருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான் ஷக்தி மகிழவன். அவனுக்கு நிச்சயதார்த்தமாம்!
—-
“ஹாய் பேப்ஸ்… ஹேப்பி ஸ்மைல் டே. தினம் ஒரு தடவையாவது கண்டிப்பா புன்னகைக்கப் பழகுங்க. மத்தவங்களோட புண்ணிற்கு மருந்தா இல்லைன்னாலும் பரவாயில்ல, தினம் ஒருத்தரோட புன்னகைக்கு காரணம் ஆகுங்க. இன்னைக்கு நம்ம பார்க்கப் போற டாபிக் பத்தி பேசுறதுக்கு முன்னாடி சில்லிங்கா ஒரு பாட்டோட ஆரம்பிக்கலாம். இது சந்திரன் எப். எம் 91.3. பேசிட்டு இருக்குறது நான் உங்க ஆர். ஜே பிரக்ருதி. ரேடியோ அலையுடன் இணைந்திருங்கள். மகிழ்ந்திருங்கள்” புன்னகை நிரம்பித் தவழ்ந்தது அவள் முகத்தில்.
ரேடியோ ஜாக்கிக்கான குரல் வளமும் பேச்சில் தெளிவும் பரவியிருந்தது. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க, ஹெட் போனை மெல்ல இறக்கி விட்டு பார்வையை வாசல் புறம் திருப்பினாள்.
அங்கு அவளது மேனேஜர் விமலா நின்றிருக்க, “ஹாய் மேம்” என அவருக்கும் புன்னகை முகத்துடன் விஷ் செய்திட,
“ஹாய் மை டியர். இன்னைக்கு எங்கேஜ்மெண்ட் இருக்குன்னு சொன்னியே?” விமலா கேட்டதும்,
“ஈவ்னிங் தான மேம். ஷோ ரெண்டு மணி நேரத்துல முடிஞ்சுடும். ஈவ்னிங் வந்துடுவீங்க தான?” என உரிமையாக அழைத்தாள் பிரக்ருதி.
“நான் வர்றது இருக்கட்டும். நீ சரியான நேரத்துக்குப் போய் சேரு டியர்… ஓகே ஓகே யூ கன்டின்யூ தி ஷோ” என அவர் வெளியில் செல்ல, தலையாட்டிப் புன்னகையைத் தொடர்ந்தவள் மீண்டும் நிகழ்ச்சியினுள் புதைந்து போனாள்.
நிகழ்ச்சியை முடித்து விட்டு, தனது சக பணியாளர்களை மீண்டும் ஒரு முறை நிச்சயத்திற்கு அழைத்து விட்டே வீடு வந்து சேர்ந்தாள்.
“பிரகா… மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர்ற நேரமாச்சு. கிளம்பு!” என்றதில் அத்தனை நேரம் முகத்தில் ஒட்டி இருந்த புன்னகை மறைந்து போயிற்று.
“ம்மா… எனக்கு கொஞ்சம் டைம் வேணும். ஏன் இவ்ளோ அவசரம்?” என்றதில் கதவைப் படாரென திறந்து உள்ளே வந்த ஆர்த்தி இருள் சூழப்பட்ட அறைக்கு வெளிச்சம் கொடுத்தார்.
“ஏன்மா லைட்டைப் போட்ட?” அவளிடம் சிடுசிடுப்பு.
“உனக்கு ஏற்கனவே சொல்லியாச்சு தான? அப்பறம் என்ன டைம் வேணும் உனக்கு. ஒழுங்கா லட்சணமா ரெடியாகி வந்து நில்லு. உனக்கு மாப்பிள்ளை மோதிரம் போட்டு விடுவாரு. நீயும் போட்டு விடணும். அதோட எந்த தேதி பக்கத்துல வருதோ அதுல கல்யாணத்தை முடிச்சு உன்னை அனுப்பி விட்டா தான், உன் அப்பாவுக்கு நிம்மதி கிடைக்கும். இல்லன்னா, வயித்துல நெருப்பைக் கட்டிட்டு தான் இருக்கணும் நானு” என்றவர் உறவினர்கள் வரும் அரவம் கேட்க நில்லாமல் வெளியில் சென்று விட்டாள்.
அவளோ வெளிறி விட்டாள். நீர்த்துளி ஒன்று அவள் கண்ணில் நிரம்பி நிற்க, அதனை அழுந்த துடைத்துக் கொண்ட பிரக்ருதி, கண்ணாடி முன் நின்று கொண்டாள்.
ஆர்த்தி எடுத்து வைத்திருந்த புடவையை அணிந்து கொண்டு மெலிதான அலங்காரத்தில் தானே தயாராகி கொண்டாள்.
வெளியில் அவளது தந்தை ரவிதரன், “மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துட்டு இருக்காங்களாம். அவள் கிளம்பிட்டாளான்னு பாரு ஆர்த்தி” எனச் சத்தம் கொடுக்க, ஆர்த்தி அவசரமாக மகளின் அறைக்குள் நுழைந்தார்.
அங்கு அவள் நளினமாக தயாராகி இருப்பதைக் கண்டு கையாலேயே திருஷ்டி சுற்றியவர், “அழகா இருக்க பிரகா” என்று விட்டு, “சரி சரி நான் கூப்பிடும்போது வெளில வா. சரியா…” என்று விட்டு கதவை அடைத்து விட்டு சென்றார்.
—
கோவையின் புகழ்பெற்ற லீ மெரிடியன் ஹோட்டல் அறை செழிப்பாய் மிளிர்ந்து கொண்டிருந்தது. நிச்சயத்திற்காக லாவெண்டர் நிற சட்டையும், வெள்ளை நிற பேண்டும் அணிந்து டக் – இன் செய்திருந்த ஷக்தி தனது அறையை விட்டு வெளியில் வர, அப்போது அவனை அழைக்க வந்த அவனது தந்தை பிரகாசம் நிறுத்தினார்.
“ஷக்தி… கிளம்பி ட்ரெஸ் பண்ணிட்டு எங்க போறடா?”
“மணி நாலரைப்பா. காபி குடிக்கணும்!” என்றவனை வெட்டவா குத்தவா ரீதியில் பார்த்தார் பிரகாசத்தின் அருகில் நின்றிருந்த அவனது தாய் லேகா.
“இன்னைக்கு உன்னோட டைம் டேபிளை எல்லாம் மூட்டை கட்டி வச்சுடு ஷக்தி. ஒத்தப் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்குள்ள எவ்ளோ பாடு…” என வருந்திக்கொண்டார்.
இந்த சம்பந்தம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவருக்கு கண்ணீராய் வெளிப்பட, அவனோ அசைவின்றி பார்த்து நின்றான்.
“தலையெழுத்து… அம்மா அழுதா சமாதானம் செய்ற புள்ளையைக் கூட பெத்துக்கல” எனத் தலையில் அடித்துக்கொள்ள, அப்போதும் அவன் அப்படியே நின்றான்.
பிரகாசம் தான், “அவனைப் பத்தி தெரியும்ல. விடு லேகா. கல்யாணம் நல்லபடியா முடியும். நீ கவலைப்படாத. முதல்ல அழுகுறதை நிறுத்து” என மனையாளைத் தட்டிக் கொடுத்திட, ஷக்தி மகிழவன் எதுவும் பேசாது அமைதி காத்தான்.
பின் மூவருமாக ஹோட்டல் அறையைக் காலி செய்து விட்டு, மணப்பெண் வீட்டை நோக்கிப் பயணித்தனர்.
காபி டைம் மிஸ் ஆனதில் ஷக்தியின் முகம் நிர்மலமாக இருந்தது.
“கொஞ்சம் சிரிச்ச மாதிரி வா ஷக்தி” என்ற லேகாவைத் திரும்பி பாராது அழுத்தமாய் பார்வையை வெளிப்புறம் சிதற விட்டிருந்தான்.
பிரகாசம் தான், “விடு லேகா!” எனக் கண்ணால் சமாதானம் செய்ய, சற்றே கலக்கத்துடனே தான் பெண் வீட்டிற்குச் சென்றனர்.
மாப்பிள்ளை வீட்டாரை அனைவரும் தடபுடலாக வரவேற்க, ஷக்தி அப்படியே வாசலில் நின்று விட்டான்.
“என்கேஜ்மெண்ட் சிம்பிளா வீட்ல தான செய்யப்போறேன்னு சொன்னீங்க? இவ்ளோ பேர் எதுக்கு?” என்றவனின் முகத்தில் அழுத்தம் அதிகரிக்க,
லேகாவோ, “நம்ம தான் நம்மளோட ரிலேட்டிவ்ஸ் யாரையும் கூப்பிடல. அதுக்காக அவங்களை கூப்பிடாதீங்கன்னு சொல்ல முடியாது ஷக்தி. கல்யாணம் முடியிற வரை வேற எந்த சீனையும் உருவாக்காம அமைதியா இரு ப்ளீஸ்” எனப் பல்லைக்கடித்து கடிந்தார்.
பிரகாசம் தான் இருவரையும் சமாளித்து உள்ளே அழைத்துச் செல்ல, “வாங்க வாங்க…” எனக் கைகூப்பி வரவேற்ற ரவிதரன், மூவரையும் அமரச் செய்தார்.
ரவிதரனுக்கும் சொத்துக்கள் ஏராளம். அவருக்கு ஒரு பையனும் பொண்ணும். மகன் திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகி விட, கல்லூரி முடித்த கையோடு மகளுக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடத்தி விட முயன்றவருக்கு தடைக்கல்லாக மகளே நின்றாள். இதோ அவளுக்கு 25 வயதும் கடந்து விட்டது. இனியும் அவளை எதிர்பார்த்திருந்தால் சொந்தம் பந்தம் முன்பு தான் தலைகுனிய வேண்டுமென்ற காரணத்தினால், அவரது செல்வாக்கை விட உயர்ந்த செல்வாக்கை கொண்ட பிரகாசத்தின் சம்பந்தத்தை விரும்பி ஏற்றார்.
அவர்களாக கலந்து பேசி, இதோ நிச்சயம் வரையில் கொண்டு வந்து விட்டனர்.
லேகா தனது மகன் இறுகிய நிலையில் அமர்ந்திருப்பது கண்டு, “சம்பந்திமா பொண்ணைக் கூப்பிடலாமே” என்றிட, “இதோ” என்ற ஆர்த்தி அறை வாயிலில் நின்று மகளைச் சத்தம் கொடுத்தார்.
உள்ளே இருந்து புன்னகை முகத்துடன் வெளியில் வந்த மகளை நிம்மதியாய் பார்த்தவர், “எல்லாருக்கும் காபி குடு” என்று ஒரு காபி ட்ரேயை நீட்ட, சரியென தலையசைத்து சபைக்கு வந்தாள்.
அங்கு பிரகாசத்திற்கும் லேகாவிற்கும் காபி கொடுத்தவள், ஷக்தியின் முன்னும் நீட்டினாள், புன்னகை மாறாமல்.
அதற்கு எதிரொளிப்பாய் அவனிடம் சிறு இளக்கமும் இல்லை.
“தேங்க்ஸ்” என்று காபியை எடுத்துக் கொண்டவனைத் திகிலுடன் பார்த்தாள். தான் புன்னகைத்தால், அவனும் புன்னகைக்க வேண்டும் தானே?
மருமகளின் கலக்கம் உணர்ந்தோ என்னவோ லேகா, “அவன் எப்பவும் இப்படி தான்மா. சிரிக்கவே யோசிப்பான். அவனுக்கும் சேர்த்து நீ தான் சிரிச்ச முகமா இருக்குற. உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு” என்றார் லேகா.
அதற்கும் புன்னகைத்தவள், “எனக்கும் உங்களை பிடிச்சுருக்கு ஆண்ட்டி” என்றாள்.
அதில் லேகாவிற்கு மகிழ்வு தாளவில்லை. “உக்காருமா” என அவருக்கு பக்கத்து இருக்கையைக் கை காட்டினார் லேகா. அதில் விழித்தவள் தாயைப் பார்க்க, “உக்காரு” எனக் கண்ணைக் காட்டியதும், அமர்ந்து கொண்டாள்.
அவளிடம் பொதுவாக சில விஷயங்களை பேசிய லேகா, அவளது வேலையைப் பற்றிக் கேட்க, அவளும் பகிர்ந்து கொண்டாள்.
“அப்போ வீட்ல பேச்சு சத்தத்துக்குப் பஞ்சமே இருக்காது…” எனப் பெருமை பட்டுக் கொண்ட லேகாவிடம், “கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் தான இருக்கப்போறாங்க” என்ற பிரகாசம், அவர் பங்கிற்கு கேள்வி கேட்க, அவளும் சலிக்காமல் பதில் கூறினாள்.
இவர்களின் உரையாடலில் ஷக்தி மகிழவன் கலந்து கொள்ளவே இல்லை. காபியை நிதானமாகக் குடித்து முடித்தவன், பிரக்ருதியிடமே கப்பை மீண்டும் கொடுக்க, வாங்கிக் கொண்டவளிடம் “வாட்டர் ப்ளீஸ்!” என்றிட, தலையை உருட்டியவள் வேகமாக சென்று எடுத்து வந்தாள்.
இருவரும் இயல்பாகப் பேசிக்கொள்வதில் பெரியவர்களுக்கு அத்தனை நிம்மதி.
கையோடு தாம்பூலத் தட்டை மாற்றிக்கொண்டார்கள். “ஷக்தி மோதிரத்தைப் போடு” என லேகா தங்க மோதிரத்தை எடுத்து அவன் கையில் கொடுக்க, அவன் புருவ மத்தியில் சிறு முடிச்சு.
எழுந்து எதிரில் நின்றிருந்தவளின் அருகில் சென்றவன், அத்தனை நேரமும் புன்னகைத்து கொண்டிருந்த பிரக்ருதி கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்ததைக் கண்டு, “உன் கையைப் பிடிச்சுக்கவா?” என அனுமதியாய் கேட்க, விலுக்கென நிமிர்ந்தவளின் முகம் சட்டென பளிச்சிட்டது.
“ம்ம்” என வேகமாகத் தலையாட்ட, அவன் மென்மையாய் அவள் விரல் பற்றி மோதிரமிட்டான்.
பின் பிரக்ருதியிடம் ஆர்த்தி மோதிரத்தை நீட்ட, அதனை வாங்கியவள் நிச்சலனமாக இருந்த அவன் முகம் கண்டு, “உங்க கையைப் பிடிச்சுக்கவா?” எனக் கேட்க, அவன் கண்களில் சிறு ஒளி.
“ம்ம்” என அவனும் தலையாட்ட, சின்னச் சிரிப்புடனே அவனது விரல்களில் மோதிரம் அணிவித்தாள் பிரக்ருதி.