சுலோச்சனா உறக்கத்தில் இருந்து எழுந்தாள். காலை நேரத்து கடமைகளை எல்லாம் முடித்து விட்டு பணிப்பெண் உதவியோடு தன் சக்கர நாற்காலியில் ஏறி அமர்ந்தாள்.
குழந்தையின் அறைக்கு சக்கர நாற்காலியை உருட்டினாள்.
அப்போது பார்த்து ஒரு பணிப்பெண் இவளிடம் ஓடி வந்தாள். “சார் கல்யாணம் பண்ணி வந்திருக்காரு மேடம்..” என்றாள்.
சுலோச்சனாவுக்கு அந்த வார்த்தைகளை கேட்டதற்கே நெஞ்சு அடைத்து விட்டது. அப்படி மட்டும் இருக்க கூடாது என்று வேண்டினாள்.
வாசலை நோக்கி நாற்காலியை உருட்டினாள். வாசல் கதவை நெருங்கினாள். வெளியே வாசலில் தீனாவும் மானசாவும் மாலையும் கழுத்துமாக நின்றிருந்தார்கள். மானசாவின் கழுத்தில் மஞ்சள் தாலி தொங்கிக் கொண்டிருந்தது. மானசா நேராக பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தாள். பெரிய பாவம் செய்த உணர்வு அவளுக்குள்.
“என்னடா பண்ண பாவி?” என்று அவர்களைப் பார்த்ததும் அழுதாள் சுலோச்சனா.
“இதுக்கு பதிலா நீ என்னை கொன்னு கூட போட்டிருக்கலாமே!” என்று கதறினாள்.
அவளின் கதறலில் மானசாவுக்கு மனம் பதறியது. ஆனால் தீனா கல் போல் நின்றிருந்தான்.
“இப்படி ஒரு துரோகியை பெத்துட்டேனே. ப்ரீத்திக்கு வந்த மரணம் எனக்கு வந்திருக்கக் கூடாதா? கடவுளே இதையெல்லாம் பார்க்கதான் என்னை உயிரோடு வச்சிருக்கியா?” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் சுலோச்சனா.
பெற்ற தாயை இப்படி அழ வைத்து திருமணம் செய்வதால் இவனுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? மானசாவுக்கு தீனாவின் மீதிருந்த அருவருப்பு கூடியது.
“பெத்த வயிறு பத்தி எரியுது. இப்படி பண்ணி வந்து நிக்கிறியே பாவி. என் தலையில நெருப்பள்ளி கொட்டியது போல வலிக்குதுடா..” என்று கதறினாள் சுலோச்சனா.
அவளின் அழுகையை பார்த்து மானசாவுக்கு மனம் கதறியது.
அவள் சுலோச்சனாவை நோக்கி நடக்க முயல, அவளின் கையை பிடித்து நிறுத்தினான் தீனா.
அம்மாவை வெறித்தவன் “எனக்கு இவளை பிடிச்சிருக்குன்னு நான் முதல்ல உங்ககிட்டதான் வந்து சொன்னேன். நீங்கதான் என்னோட வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கல..” என்று சொன்னான்.
மானசா அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள். இதையும் மனம் வந்து தாயிடம் போய் சொல்லி இருக்கிறானே. மனிதன்தானா இவன்? இப்படி எல்லாம் இவன் இருந்தால் அந்தப் பெற்ற தாயின் மனம் ஏன் அப்படி அடித்துக் கொள்ளாது?
“இவளோட சம்மதத்தோடுதான் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன். என் வாழ்க்கையை டிஸ்டர்ப் பண்ணாதிங்க மம்மி..” என்றவன் வீட்டைப் பார்த்தான்.
“ஆரத்தி எடுத்து வாங்க..” என்றான்.
பணிப்பெண் ஒருத்தி ஆரத்தியை கொண்டு வந்தாள். ஆனால் அவள் தன்னை தாண்டி செல்லும்போது அந்த தட்டை பிடுங்கி கொண்ட சுலோச்சனா ஆரத்தி தட்டை புது ஜோடிகளின் மீது கோபத்தோடு தூக்கி அடித்தாள்.
மானசாவின் மீது மோத இருந்தது அந்த தட்டு. தீனா முன்னால் நகர்ந்து நின்று அவளைப் பாதுகாத்தான். ஆரத்தி தட்டு இவனின் நெஞ்சின் மீது மோதி கீழே விழுந்தது. அம்மாவை கோபத்தோடு பார்த்தான்.
“ரொம்ப ஓவரா பண்றிங்க மம்மி..” என்று தன் அதிருப்தியை சொன்னான்.
“நான் ஓவரா பண்றேனா?” நெஞ்சில் அடித்துக் கொண்டு கேட்டாள் சுலோச்சனா.
“எனக்கு இவளை பிடிச்சிருக்கு மம்மி. ஐ லவ் ஹேர்..” என்று அவன் சொன்னது மானசாவின் செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது. காதலின் அர்த்தம் என்னவென்று இவனுக்கு தெரியுமா? தெரிந்துதான் அனைத்தையும் பேசிக் கொண்டிருக்கிறானா? அவளுக்கு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.
இவன் சொல்வதை கேட்க கேட்க சுலோச்சனாவுக்கு ஆத்திரம் பொங்கியது. “செத்துப்போனவளுக்கு ரெண்டு பேருமே துரோகம் பண்ணியிருக்கிங்க. நீங்க நல்லாவே இருக்க மாட்டிங்க. நாசமா போயிடுவிங்க..” என்று அழுகையோடு சாபம் வைத்துவிட்டு நாற்காலியை திருப்பிக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.
தீனா திரும்பி மனைவியின் முகத்தை பார்த்தான். அவளின் விழிகள் கலங்கி இருந்தன.
அவளுக்கு இந்த திருமணத்தையே பிடிக்கவில்லை இது முதல் விஷயம். தோழிக்கு துரோகம் செய்கிறோமே என்கிற குற்ற உணர்வு ஒரு புறம். தாய் தந்தையிடம் கூட சொல்லாமல் இப்படிப்பட்ட ஒருவனை திருமணம் செய்து விட்டோமே என்ற வருத்தம் ஒருபுறம். இதில் ஒரு தாயின் மனதையும் உடைத்து விட்டோம் என்பதும் சேர்ந்து கொண்டது. ஆரம்பிக்கும் முன்பே அவளுக்கு இந்த திருமணத்தின் மீது அளவுக்கு அதிகமாக வெறுப்பு வந்துவிட்டது.
அவளின் முகத்தில் ஆரத்தி தண்ணீர் கொஞ்சமாக தெறித்து இருந்தது. இவன் தன் கர்ச்சிப்பை எடுத்து அந்த தண்ணீரை துடைத்தான்.
இவள் அவனை ஏறிட்டு பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு எச்சத்தை பார்க்கும் அருவருப்புதான் இருந்தது. ஆனால் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனுக்கு அவள் கிடைத்தால் போதும். அவள் எப்படி பார்த்தால் என்ன?
அவளின் கைப்பிடித்து வீட்டுக்குள் கூட்டிப் போனான்.
வீட்டிலிருந்த பணிப்பெண்கள் ஆங்காங்கே நின்றபடி இவர்கள் இருவரையும் பார்த்தார்கள். மானசாவின் நெஞ்சின் மீது யானை ஒன்று ஏறி நின்ற அளவுக்கு பாரம் ஏறி இருந்தது.
அவளை தனது அறைக்கு கூட்டிப் போனான் தீனா. “இதுதான் நம்முடைய ரூம்..” என்று சொன்னான்.
இவளுக்கு குமட்டியது.
“குழந்தையை என்கிட்ட கொடு..” என்று கேட்டாள். குழந்தையை அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பி விடுவேன் என்று சொன்ன இவனை நம்புவதற்கே பயமாக இருந்தது. குழந்தையை கையில் வாங்கினால்தான் இவளுக்கு மன நிம்மதியே கிடைக்கும்.
“இப்பவேவா? இன்னும் உன்னோட வீட்டுக்கு போகல. போய் அவங்ககிட்டையும் நமக்கு கல்யாணமான விஷயத்தை சொல்லணுமே..” என்றான் தீனா.
இவளுக்கு நெஞ்சம் விம்மியது. மாமியாராவது பரவாயில்லை வெறுமனே சாபம் விட்டுவிட்டு அமைதியாகி விட்டாள். அம்மா துடைப்பத்தால் அடிக்க போகிறாள். என்னை இப்படி ஒரு சங்கடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டானே இந்தப் பாவி. நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமெல்லாம் சேர்ந்து என்னை இப்படி ஒரு கயவனிடம் சிக்க வைத்திருக்கிறதோ?
கைவிரல்களை மடக்கி இறுக்கியவள் “என் கையில குழந்தையை கொடு. குழந்தையை வாங்காம நான் எங்கேயும் வரமாட்டேன்..” என்று பிடிவாதமாக சொன்னாள்.
குழந்தையை கருவியாக பயன்படுத்துகிறோமே என்று இவனுக்கும் கொஞ்சம் மன வருத்தம்தான். ஆனால் இவளை தன் வசம் விழ வைக்க அவனுக்கும் வேற வழி தெரியவில்லை.
“வா..” என்று குழந்தையின் அறைக்கு கூட்டி போனான்.
இவர்கள் குழந்தையின் அறைக்கு வந்தபோது சுலோச்சனா குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி கதறி அழுதுக் கொண்டிருந்தாள்.
“இந்த குடும்பத்துல ஏன்ம்மா வந்து பிறந்த? உங்கப்பா உனக்காக கூட ஒரு செகண்ட் யோசிக்காம போயிட்டானே!” என்று அழுதாள்.
அவளின் அழுகையை பார்த்ததும் மானசாவுக்கு விழிகளில் கண்ணீர் அருவி போல பெருக்கெடுத்து விட்டது. எவ்வளவு மனமுடைந்து போய் அழுகிறாள்? பெற்ற தாயின் கண்ணீரை கண்டு கூட மனம் இறங்காத இவன் என்ன மனிதன்?
மகனையும் புது மருமகளையும் மாறி மாறி பார்த்தவள் “நான் ஏன் குழந்தையை கொடுக்கணும்?” என்று கேட்டாள்.
“இந்தப் பிள்ளையை கூட மனசுல நினைக்காமதானே உன்னோட சுகத்தை மட்டும் பெருசா நினைச்சி கல்யாணம் பண்ணி வந்திருக்க? இப்ப எதுக்குடா பிள்ளையை கேக்குற பாவி?” என்று கேட்டாள்.
“குழந்தை கொடும்மா. கேள்வி கேட்காதே..” என்று கல்போல் நின்று சொன்னான்.
“என் பேத்தியை இனிமே நீ தொடக்கூடாது..” என்று சுலோச்சனா அதிகாரமாக சொன்னாள்.
இவன் அதற்கு மேல் காலம் தாழ்த்தாமல் அம்மாவிடம் இருந்து குழந்தையை பிடுங்கினான்.
“விடுடா..” என்ற அம்மாவின் கையை தள்ளி விட்டவன் குழந்தையை கொண்டு வந்து மானசாவிடம் நீட்டினான்.
சுலோச்சனாவின் கதறலால் தன்னை மறந்து கண்ணீர் விட்டு கொண்டிருந்த மானசா திரும்பி இவன் முகம் பார்த்தாள். “உனக்கு மனசாட்சி இருக்கா?” என்று கேட்டாள்.
“எனக்கு டைம் ஆயிட்டு இருக்கு. குழந்தையை வாங்கிக்க. நாம உன் வீட்டுக்கு கிளம்பலாம். வேணாம்ன்னா குழந்தையை இங்கேயே விட்டுட்டு போகலாம்..” என்றான் சுயநலத்தை மட்டும் முன்வைத்து.
அவன் கையிலிருந்த குழந்தை அழுது கொண்டிருந்தது. இவனுக்கு குழந்தையை எப்படி தூங்குவது என்று கூட ஒழுங்காய் தெரியவில்லை.
இவள் குழந்தையை வாங்கிக் கொண்டாள். அழுது கொண்டிருந்த குழந்தையை மென்மையாக கைகளை அசைத்து தாலாட்டினாள். இவளின் கையென்ற தொட்டிலில் பாதுகாப்பை உணர்ந்த அந்த குழந்தையும் அப்போதே அழுகையை நிறுத்திக் கொண்டது.
ஆனால் மாமியாரின் அழுகைதான் இவளுக்கு இதய வலியை கொடுத்தது.
“போகலாம்..” என்றவன் அவளின் புஜத்தை பிடித்து இழுத்தான். இவள் அவசரமாக குழந்தையின் அத்தியாவசிய பொருட்கள் இருந்த பையை கையோடு எடுத்துக் கொண்டாள்.
மாமியாரை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.
வெளியே அவளுக்காக காரின் கதவை திறந்து விட்டான் தீனா.
பயணிக்கும் போது குழந்தையின் முகத்தை பார்த்துக்கொண்டே வந்தாள் மானசா. அரை தூக்கத்தில் இருந்தது அந்த குழந்தை. ப்ரீத்தி எத்தனை கனவுகளோடு பிள்ளையை சுமந்திருப்பாள்? ஒரு நாள் கூட முழுதாக இந்த குழந்தையோடு வாழாமல் போய்விட்டாளே! மானசாவின் விழி நீர் நிற்கவேயில்லை.