முருகன் கோவிலில் ஏற்கனவே திருமணத்திற்க்கான முன்பதிவு நடை பெற்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ஐயர் மந்திரங்கள் சொல்ல அதை திரும்ப சொன்னபடியே பட்டு வேட்டி பட்டு சட்டையில் பேரழகனாக அமர்ந்திருந்தான் ஹர்ஷா.
மிதமான ஒப்பனையுடன் மிக நேர்த்தியாக புடவை கட்டி, தங்க ஆபரணங்கள் அணிந்து கல் வைத்த பொட்டு வைத்து பார்த்து கொண்டே இருக்கலாம் போன்ற அழகில் தயாராகி இருந்தாள் அம்ருதா. அவளுக்கான புடவையும் நகையும் பார்த்து பார்த்து வாங்கி கொடுத்திருந்தான் ஹர்ஷ மித்ரன்.
ஐயர் பெண்ணை அழைத்து வர கூற, அம்ருதாவை அழைத்து வந்து ஹர்ஷாவின் அருகில் அமர வைத்ததும் அனைவரது பார்வையும் ரசனையாக ஒரு முறை அவர்கள் இருவரையும் தொட்டு மீண்டது.
ஹர்ஷா தனது அருகில் அமர்ந்திருக்கும் அம்ருதாவை கண்டதும் ‘இவள் என்னவள்’ என்ற உணர்வு தானாகவே எழத் தொடங்கியது.
ஹர்ஷாவின் அன்னை கூட ஒருமுறை இருவரது ஜோடி பொருத்தத்தையும் பார்த்து மெச்சி கொண்டார். அவர் மனதில் இருவரையும் சேர்த்து மகிழ்ச்சியோடு பார்த்து கொண்டிருக்கும் தருணம் ஆத்யா வந்து அம்ருதாவின் மடியில் அமர, அவரது மனது மீண்டும் பிடித்தமின்மைக்குள் வந்துவிட்டது. சட்டென முகத்தை திருப்பி கொண்டார்.
அதிக பட்சம் நூறு பேர் கொண்ட திருமணம் மிகவும் எளிமையாக ஆனால் மணமக்கள் மனம் முழுவதும் நிறைவாக நடந்து கொண்டிருந்தது.
ஐயர் மங்கள நாணை எடுத்து ஹர்ஷாவின் கரத்தில் கொடுக்க, அதை வாங்கி அம்ருத்தாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாக ஏற்று கொண்டான் ஹர்ஷ மித்ரன்.
இரு குடும்பத்தாரும், சொந்தங்கள், நண்பர்களும் என அனைவரும் மன நிறைவுடன் ஆசீர்வதிக்க நிரஞ்சனா மட்டும் வெறுப்போடு அர்ச்சதையை தூக்கி இருவருர் மீதும் வீசினாள். ஹர்ஷா தனது கரத்தினால் அவளை சுற்றி அவளது நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்க, அதை தொடர்ந்து இருவரும் அக்கினியை வலம் வந்தனர். நிழற்படங்களும், நிகழ்படங்களும் படம்பிடிக்கபடும் போது தேவையற்ற அளவுக்கு அதிகமான நெருக்கத்தை தவிர்த்தான் ஹர்ஷா.
அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹர்ஷாவின் உணவகத்திலிருந்தே வித விதமான உணவுகள் வரவழைக்கப்பட்டு தலைவாழை இலை போட்டு பந்தியில் பரிமாறினர். உண்டு முடித்து வெகு நேரம் ஆகியும் உணவின் சுவை நாவிலேயே இருப்பதாக உணர்ந்தவர்கள் ஹர்ஷாவிடம் சென்று மனதார பாராட்டினர். திருப்தியாக அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னர் சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவறாக விடைபெற்று மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
இத்தனை நாள் தன் குடும்பத்துடன் இருந்த இனிமையான நிகழ்வுகள் யாவும் அம்ருதாவின் மனக்கண்ணில் தோன்றி மறைய, தன் குடும்பத்தாரை பிரியும் வேதனை மனதில் அப்பி கொண்டது. விழிகளில் கண்ணீர் ததும்பி நிற்க, தாயும் தந்தையும் சமாதானம் செய்யும் போது நிரஞ்சனாவின் மனமோ ‘ம்க்கும்.. இப்போ இது ஒண்ணுதான் குறைச்சல்’ என்று எண்ணி கொண்டது.
ஒருவழியாக சமாதானம் செய்த அம்ருதாவின் தாயும், தந்தையும் அவளை ஹர்ஷாவின் காரில் ஏற்றி அனுப்பி வைக்க, அவர்களுக்கு முன்பாக சற்று இடைவெளி விட்டு புறப்பட்டு சென்றது பார்த்திபன், கீர்த்தனா செல்லும் கார்.