2 – உள்நெஞ்சே உறவாடுதே!

5
(9)

முகமூடிகளின் எண்ணிக்கை
முந்தியடித்துக் கொண்டே வளர்கிறது…
முக்கியத் தருணங்களிலெல்லாம்
முக்கியமாய் நடிப்பதற்கு!!!

——————————–

பிரம்மாண்டமாக நடைபெற்றது ஷக்தி மகிழவன் மற்றும் பிரக்ருதியின் திருமணம். சில மணி நேரங்கள் வரை சிரித்த முகத்துடன் அனைவரையும் எதிர்கொண்ட பிரக்ருதியின் முகமே சோர்வடைந்து விட்டது.

அதற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாமல், “அம்மா… நான் ரூம்க்குப் போகனும். ப்ளீஸ்” என்று ஆர்த்தியிடம் பரிதாபமாகக் கேட்டாள்.

“விளையாடுறியா ஒழுங்கா மாப்பிள்ளை பக்கத்துல நில்லு!” என்று கடியும் போதே அங்கு லேகா வந்தவர் “என்னங்க அண்ணி?” என்றார்.

“அது… வந்து அவளுக்கு டயர்டா இருக்காம்” என்று அசட்டுப் புன்னைகையுடன் பொய்யுரைக்க, முகபாவனைகளைத் தொலைத்து நின்றிருந்த ஷக்தி மகிழவன் அப்போது தான் திரும்பி அவளைப் பார்த்தான்.

கழுத்தில் சில நிமிடங்களுக்கு முன் அவன் அணிவித்த மஞ்சள் நாண். நெற்றி வகுட்டில் குங்குமம். கண்களில் மட்டும் சிறு அயர்ச்சி.

லேகாவோ, “சட்டுன்னு மேடையில இருந்து கிளம்ப முடியாது பிரகா. சொந்தக்காரங்க வரிசை கட்டி வர்றாங்க பாரு” என்று விட, அவளுக்கு அழுகையே வரும்போல இருந்தது.

அதில் ஷக்தி, “அம்மா ஐ நீட் ரெஸ்ட்… கொஞ்சம் ப்ரெஷ் ஆப் ஆகிட்டு வர்றோம்” என முடிவாக கூறி விட்டு, “வர்றியா?” என மனையாளைப் பார்த்தான்.

அவள் திரும்பி தாயைப் பார்க்க, அவரும் போ வென தலையசைத்ததும், அவளும் அவன் பின்னே சென்றாள்.

இருவரும் ஒரு அறைக்குள் புகுந்ததும், “நான் கூப்பிட்டா வர மாட்டியா? அதுக்கும் அம்மாவோட பெர்மிஷன் வேணுமா?” எனக் கேட்டான் நிதானமாக.

அவளோ இதனை எதிர்பாராது திகைத்து விழித்தாள். கோபமாகக் கேட்கிறானோ என அவன் கண்களை அவசரமாக அளக்க, அதில் அப்படி ஏதும் தெரியவில்லை.

அவள் அமைதியாய் நின்றதில், “மறுபடியும் ஸ்டேஜுக்குப் போகணும் பிரக்ருதி. இங்கயும் நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம. உக்காரு…” என்றான்.

“நான்… நான் வாஷ்ரூம் போகணும்” அவளுக்கு வியர்த்து விட்டது.

“சரி போ” அவன் புரியாத தொனியில் கூறிட, அவசரமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

பின் மெத்தையில் சற்று நேரம் அமர்ந்து தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டான் ஷக்தி.

நெஞ்சை எதுவோ அழுத்திக் கொண்டே இருந்தது. அந்த அழுத்தத்தில் தலையும் பாரமாகிட, அன்றைய தினம் அவனது தினசரி வழக்கங்கள் அனைத்தும் மாறிப் போனதே சோர்வைக் கொடுத்தது.

மெத்தையில் படுத்து விட்டத்தைப் பார்த்திருந்தான் இலக்கின்றி.

சில பல நிமிடங்கள் கடந்தே குளியலறையில் இருந்து வெளியில் வந்தாள் பிரக்ருதி.

மீண்டும் அவளிடம் பளீரென புன்னகை தவழ்ந்தது.

கீழ்க்கண்ணால் அவளைப் பார்த்தவன், “ப்ரெஷ் ஆகிட்டியா?” எனக் கேட்க, “ம்ம் ஆகிட்டேனே” என வேகமாகத் தலையாட்டிட, “குட்” என்று விட்டு மீண்டும் விட்டத்தைப் பார்த்தான்.

அவளோ அப்படியே நின்றிருக்க, “உக்காரு… கால் வலிக்கலையா?” என அவன் கேட்டதும்,

“ரொம்ப வலிக்குது” என மூக்கைச் சுருக்கினாள்.

அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டவள், “உங்களுக்கும் கால் வலிக்குதா?” எனக் கேட்க, தலையை ஆட்டினான்.

இருவரும் சில நிமிடங்களை அமைதியில் கழித்து விட்டு மீண்டும் மேடை நாடகத்தைத் தொடங்கினர்.

அன்று மாலையே விமானத்தில் அவர்கள் சென்னைக்கு செல்வதாக இருந்தது.

பிரக்ருதியும் தனது வேலையை சென்னைக்கு மாற்றிக்கொண்டாள். அன்றைய இரவு ஷக்தி மகிழவனின் வீட்டிலேயே தயாராக, புது இடத்திற்கு வந்ததுமே பிரக்ருதிக்கு உதறத் தொடங்கியது.

ஆர்த்தியும் ரவிதரனும் அவளுடன் தான் இருந்தனர். “பிரகா… இன்னைக்கு ஒரு நாள் தான் இங்க. அப்பறம் மாப்பிள்ளை தனியா வந்துடுவாராம். நீ நெர்வஸ் ஆகாத” என ஆர்த்தி கூறி இருக்க, தலையை மட்டும் ஆட்டியவள், “நீ என் கூடவே இருமா” என்றாள் பயத்துடன்.

லேகா அங்கு வந்தவர், “அதுசரி… அம்மா உன்கூடவே இருக்க முடியுமா பிரகா. அதான் நான் உன்கூட இருக்கேனே. நான் உன்னை நல்லபடியா பார்த்துப்பேன்மா” என அன்பாய் மொழிந்தவர், “இவன் தனியா போறது தான் எனக்குப் பிடிக்கவே இல்லை. எனக்கு என்ன பத்து பசங்களா இருக்காங்க. இருக்குறதே ஒத்த பையன் தான. நீயாவது அவன்கிட்ட சொல்லுமா” என அவள் கையைப் பிடித்திட, நடுங்கிய கைகளுடன் அவரிடம் இருந்து கரத்தை மெதுவாகப் பறித்துக்கொண்டாள்.

வலிய புன்னகையை வரவழைத்து “சரிங்க ஆண்ட்டி” என்றவளிடம், “இன்னும் என்ன ஆண்ட்டின்னுட்டு அத்தைனு சொல்லு” என்றதும் அவளும் சரியென தலையசைத்தாள்.

பின் அவளை அலங்காரம் செய்து ஷக்தி மகிழவனின் அறைக்கு அழைத்துச் சென்றார் லேகா.

அவளுக்கு பல அறிவுரைகள் வேறு. எச்சிலை விழுங்கிக் கொண்டவளுக்கு உள்ளே நுழைந்ததும் கரங்கள் நிதானமின்றி ஆடத் தொடங்கி விட்டது.

நல்லவேளையாக முதலிரவுக்காக அறையை தடபுடலாக எல்லாம் தயார் செய்யவில்லை. சாதாரணமாகவே இருந்தது.

மெத்தையில் காலை நீட்டி அமர்ந்து புத்தகம் ஒன்றில் மூழ்கி இருந்த ஷக்தி, “ஹாய்” என்றான் கிஞ்சித்துக்கும் புன்னகைக்காமல்.

“ஹ ஹாய்…” புன்னகைத்து வைத்தவளிடம், “இது என் ரீடிங் டைம்… இன்னும் ரெண்டு பேஜஸ் முடிக்கணும். முடிச்சுட்டு வரட்டுமா?” எனக் கேட்க, சரியென தலையசைத்தாள்.

அவன் பொறுமையாய் படித்து முடித்து வரும் வரை, மெத்தையில் அமர்ந்திருந்தவளுக்கு படபடப்பாகவே இருந்தது.

ஆகினும் மோதிரம் போடும்போதே தனது அனுமதி வேண்டியவனாதலால் அவன் அருகில் மட்டும் சற்று நம்பிக்கை வளர்ந்திருந்தது அவளுக்கு.

புத்தகத்தை மூடி, அதன் இருப்பிடத்தில் வைத்து விட்டு வந்த ஷக்தி அவளருகில் இடைவெளி விட்டு அமர்ந்தான்.

நூலகம் போல ஒரு பக்க சுவர் முழுக்க புத்தகம் அடுக்கி இருந்ததைக் கவனித்தவள், “நீங்க நிறைய புக்ஸ் படிப்பீங்களா?” என இயல்பாய் பேச்சைத் தொடங்க,

“ம்ம்… படிக்க பிடிக்கும். உனக்கு?” என்றான்.

“ம்ம் எனக்கும் பிடிக்கும். அமைதியான ரூம்ல காம்மா இருக்கணும்” எனக் கண்ணை மூடி சிலாகித்துச் சொன்னவள்,

“நம்ம தனியா தான் இருக்கப் போறோமா? அத்தை உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க தனியா வேணாம்னு” என்றாள் அவன் முகம் பார்த்து.

“எனக்கு பிரைவசி வேணும். இங்க இருந்தா, நமக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் இதே ரூம்ல தான் இருந்தாகணும். தனியா போனா, நமக்குத் தேவையான ஸ்பேஸ் கிடைக்கும். உனக்கு பிரைவசி வேணாமா?”

“வேணும் வேணும்” வேகமாக தலையாட்டிக் கொண்டாள். அவனாகவே தனிமை தருகிறேன் என்ற போது அதனை மறுக்க அவள் என்ன பைத்தியமா?

“ஆனால் அத்தை? என்கிட்ட சொல்ல சொன்னாங்களே” சட்டென முகம் வாடியது அவளுக்கு.

“இது நான் ஏற்கனவே எடுத்த டிசிஷன். உன்கிட்ட சொன்னாலும் மாறாதுன்னு அவங்களுக்கு தெரியும் பிரக்ருதி. சோ உன் மேல தப்பு வராது” என்றான் கண்ணை மூடித் திறந்து.

அதில் பளிச்சென புன்னகைத்தவள், “தேங்க்ஸ் ஷக்தி… உங்களை பேர் சொல்லிக் கூப்பிடலாம்ல?” அவள் கண் சிமிட்டிக் கேட்க, “தாராளமா!” என்றான்.

“நீங்க ஏன் சிரிக்கவே மாட்டுறீங்க?” தலையை உயர்த்தி அவள் கேட்க,

அவனோ புருவம் சுருக்கி “ஏன் சிரிக்கணும்” என்றதில் விழித்தாள்.

இதை அவள் எதிர்பார்க்கவில்லையே. சில நொடிகளில் சமாளித்து,

“என் ஷோ நீங்க கேட்டுருக்கீங்களா?” எனக் கேட்டாள்.

“இல்ல” உடனடியாகப் பதில் அளித்ததில் அவளிடம் சிறு சுணக்கம்.

“நான் எஃப். எம்ல ஒர்க் பண்றேன்னு தெரிஞ்சும் கேட்கலையா?”

“கேட்க தோணல. அதனால என்ன? இப்ப எப்படி பேசுவன்னு பேசிக்காட்டு கேட்குறேன்” என்றவனிடம்,

“பேசிக்காட்டவா? ம்ம்” என யோசித்தாள்.

“சரி, என்னோட ஷோ டாபிக்கே தினம் ஒரு முறையாவது ஸ்மைல் பண்ணனும்னு தான். மத்தவங்களோட புண்ணிற்கு மருந்தா இல்லைன்னாலும் பரவாயில்ல, தினம் ஒருத்தரோட புன்னகைக்கு காரணம் ஆகுங்கன்றது தான் என் கான்செப்ட். கடைசியா முடிக்கிறப்ப கூட ரேடியோ அலைகளுடன் இணைந்திருங்கள், மகிழ்ந்துருங்கள்னு சொல்லுவேனே?” எனக் காலை ஆட்டியபடி அவள் உற்சாகமாகக் கூறினாள்.

அதனை அமைதியாய் கேட்டுக்கொண்டவன் எதிர்வினை ஆற்றவில்லை.

அவளோ சட்டென விழி விரித்து “உங்க பேர்லயும் மகிழ் வரும்ல?” என ஆச்சர்யமாகக் கேட்க, “ம்ம் அதுக்கென்ன?” என்றான் புரியாமல்.

“அட, நான் மகிழ்ந்துருங்கன்னு சொல்றேன்ல. ரெண்டும் சிங்க் ஆகுது பாருங்க”

“ஓ!”

“பேர்லயே மகிழ்னு வச்சிருக்கீங்க., ஆனா ஹேப்பியா சிரிக்க மாட்டுறீங்க?” அவன் நெற்றி மத்தியில் சிறு முடிச்சு.

“சரி இனி நான் உங்களை மகிழ்னு தான் கூப்பிடுவேன். அதைக் கேட்கும்போதெல்லாம் உங்களுக்கு ஸ்மைல் பண்ணனும்னு தோணனும் சரியா?” என்றிட, அவனோ “எனக்கு தூக்கம் வருது. தூங்கலாமா?” எனக் கேட்டதும் அவள் முகம் வாடி விட்டது.

“ம்ம்” தலையை உருட்டியவள், “நான் எங்க தூங்கணும்?” எனக் கேட்டாள்.

“நீ பெட்ல தூங்கு. நான் சோஃபால தூங்குறேன்” அவன் எழுந்ததும்,

“இல்ல வேணாம் எனக்கு சோஃபா கம்ஃபர்ட்டா இருக்கும்” என்றவள், சோபாவை ஆக்கிரமித்துக்கொள்ள, அவன் விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை எரிய விட்டான்.

“மகிழ்!” படுத்தபடியே பிரக்ருதி அழைக்க, ஷக்தி திரும்பினான்.

“ரூமை நல்லா இருட்டாகிடுறீங்களா ப்ளீஸ்…” எனக் கேட்டதும், சரியென்றவன் அறையை முழுதாய் இருட்டாக்கினான்.

அவர்களது வாழ்வின் வெளிச்சம் மலர்வதற்கான முதற்படியே அவ்விருட்டு என்றறியாமல், மறுநாள் தனிக்குடித்தனம் செல்ல ஆயத்தமாகினர்.

“உன்னால என் பையனை கைக்குள்ள போட முடியலைல?” லேகாவிற்கு சிறு வருத்தம். அதனைக் கோபமாக மருமகளிடம் காட்டி விட்டார்.

அவளுக்கோ பதில் சொல்ல இயலவில்லை. “நான் சொன்னேன் அத்தை” என அவள் பதற்றத்துடன் கூறிட, பிரகாசம் தான் “அவன் அப்டி தான்னு உனக்கு தெரியாதா லேகா” என மனையாளைக் கடிந்து கொண்டார்.

பெரிய பணக்காரர்கள் வசிக்கும் படியான, அதிக பொருட்ச்செலவில் தயாரான அபார்ட்மெண்ட் தான் அது. பல்வேறு வசதிகளைக் கொண்ட ஃபிளாட்டின் இரு படுக்கையறைகளிலும் விஸ்தாரமான பால்கனி இருந்தது.

அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து விட்டு சமையலறையை ஒழுங்கு படுத்தியும் கொடுத்து விட்டு, இரு வீட்டுப் பெரியவர்களும் கிளம்பி விட்டனர்.

“உனக்கு வீட்ல சேஞ்சஸ் எதுவும் செய்யணுமா?” கையில் புத்தகத்தை எடுத்தபடி கேட்டான் ஷக்தி.

“இப்போதைக்கு இல்ல. ஹோம் பீல் தான் குடுக்குது” என்றவளின் பொருள்களும் ஷக்தியின் அரையிலேயே செட் செய்யப்பட்டிருந்தது.

“நீங்க நாளைல இருந்து ஒர்க்குக்கு போகணுமா?” அவள் கேட்க,

“ம்ம் நிறைய வேலை இருக்கு” என்றான்.

“நீங்க என்ன வேலை பாக்குறீங்க?” பிரக்ருதி கேட்டதும், ‘அதுவே உனக்கு தெரியாதா’ என்பது போல அவளைப் பார்த்தான்.

“அது அம்மா சொல்லிருப்பாங்க. நான் கவனிக்கல” அவள் அசட்டுச் சிரிப்பை உதிர்க்க, அவன் விவரம் கூறினான்.

“ஓ… கேம்ஸ் கிரியேட் பண்ணுவீங்களா? என்ன மாதிரி கேம்ஸ்… கேண்டி க்ரஷ், சப்வே மாதிரியா?” கன்னத்தில் கை வைத்து ஆர்வமாகக் கேட்டாள்.

“நோ. மைண்ட் ரிலேக்சிங் கேம்ஸ், பஸில் மாதிரியான கேம்ஸ் தான் கிரியேட் பண்ணுவேன்” என்றதும், “வாவ்” என்றாள்.

“பஸில் சால்வ் பண்றதே கஷ்டம். நீங்க அந்தக் கஷ்டத்தை க்ரியேட்டே பண்றீங்க. வேற லெவல் போங்க…” என சிலாகிக்க, துளி அளவாய் அவனிடம் சிறு புன்னகை.

“ஹை… இன்னைக்கு டாஸ்க் முடிஞ்சுது” அவள் துள்ளிக்குதிக்காத குறையாக சிரித்தாள்.

“என்ன டாஸ்க்?” அவன் புரியாமல் வினவ,

“உங்களை லைட்டா ஸ்மைல் பண்ண வச்சுட்டேன்” என்றவளை கண்ணெடுக்காமல் பார்த்து வைத்தான்.

“சீரியஸ்லி?”

“பின்ன, நீங்க ஸ்மைல் பண்ணுனீங்க தான. பொய் சொல்லக் கூடாது” அவள் விரல் நீட்டி குறும்பாய் பார்க்க,

அவனோ “எனக்குப் பொய் சொல்லத் தெரியாது” என்றான் அமர்த்தலாக. அவன் முகத்திலும் குரலிலும் அத்தனை மென்மை. அதற்காக அவளைப் போல அத்தனை உணர்வுகளையும் காட்டிடவில்லை. நிதானமாக விழியசைவுகளில் அவளை உள்வாங்கிக்கொண்டான்.

“எனக்கும் உங்க கேம் டவுன்லோட் பண்ணிக்குடுங்க. நான் விளையாடுறேன்” ஆர்வமாக பிரக்ருதி கேட்க, “கண்டிப்பா” என்றான்.

“சோ உங்க டே ரொட்டின் என்ன?” மெல்ல அவள் பேச்சுக்கொடுக்க,

“என்னோட ரொட்டின் எப்பவும் சேம் தான். மார்னிங் 6 க்கு எந்திரிப்பேன். 7 வரை பீச்ல ஜாக்கிங் போவேன். 9 மணிக்கு ஷார்ப்பா டிபன் சாப்டுடுவேன். மார்னிங் ப்ரேக்பாஸ்ட் எப்பவும் எனக்கு இட்லி தான். அப்பறம் பத்து மணிக்கு ஆபிஸ். அங்கயும் ஒரு டைம்டேபிள் வச்சுருப்பேன். பஸில் யோசிக்க ஒரு குறிப்பிட்ட டைம். கோடிங் பண்ண குறிப்பிட்ட டைம்னு… ஷார்ப்பா 7 மணிக்கு ஆபிஸ்ல இருந்து கிளம்பிடுவேன். 8 மணிக்கு டின்னர் சாப்பிடணும். 8.30 டு 9 புக் ரீடிங். அப்பறம், பிடிச்ச சாங்ஸ் கேட்டுட்டே தூங்கிடுவேன்” என்றவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள்.

“அப்போ அப்போ, லீவ் நாள்ல இந்த ஸ்கெடியூல் லைட்டா மாறலாம். உனக்கு எப்படி?” ஷக்தி கேட்டதும்,

“எனக்கு தினமும் ப்ரீ பிளான்ட் எல்லாம் கிடையாது. ஆனா, அடுத்த நாள் என்ன நடக்கப் போகுதோ அதை முதல் நாளே ப்ரிப்பேர் பண்ணிப்பேன்” என்றதும், அதனைக் கேட்டுக்கொண்டவன், “ஷோக்கு ப்ரிப்பேர் பண்ணி தான போக முடியும். இல்லன்னா அங்க சொதப்பிடும் ரைட்?” என அவளை முழுதாய் புரியாமல் கேட்டதில் மையமாகத் தலை ஆட்டிக் கொண்டாள் பிரக்ருதி.

“இன்னைக்கு திங்ஸ் எடுத்து வச்சே செம்ம டயர்ட். தூங்கலாமா பிரக்ருதி?” ஷக்தி கேட்க, “ஓகே மகிழ். குட் நைட்!” என்றவள், “நீங்க பெட்ல படுங்க. நான் சோஃபால தூங்குறேன்” என்றாள்.

“அங்க தூங்குறது டிஸ்கம்ஃபோர்ட்டா இருந்தா பெட்லயே படுத்துக்க…” ஷக்தி கூறியதும்,

“இல்ல வேணாம்…” எனப் பெருந்தன்மையாக தான் அவள் மறுத்தாள்.

அவனோ “அப்போ ஓகே” என்று படுத்து உறங்கி விட, ‘திரும்ப ஒரு தடவை சொல்றதுக்கு என்னவாம்…’ என சிலுப்பி விட்டு, சோபாவில் படுத்துக்கொண்டாள்.

கண்ணை மூடிய ஷக்தி மகிழவனுக்குள், ‘இவள் கூட பேசிட்டுத் தூங்குனா ஒரு மாதிரி எனர்ஜியா இருக்கு’ என்ற எண்ணம் தோன்ற, அவளுக்கோ ‘இவரோட இருக்கும்போது தனிமை வேணும்னு தோணல. இதுவே நல்லாருக்கு’ என்ற நிம்மதி உணர்வு தானாய் பிறந்தது.

இருவரும் தனிமையை எதிர்பார்த்து தான் அவசரமாக தனியாக வந்தனர். தனி தனி அறையும் அவர்களுக்காக தேர்ந்தெடுத்தது தான். ஆனால், என்னவோ இருவருமே தனி அறைக்குச் செல்வதைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை. இருவரின் அண்மையுமே இருவருக்கும் தொந்தரவு தராத போது, தனிமையை வேண்டும் அவசியம் எதற்கு வரப்போகிறது!?

உறவு தொடரும்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!