மானசாவின் அம்மா பூரணி சமையல் வேலைகளை முடித்துவிட்டு வீட்டு வேலைகளை செய்ய தொடங்கினாள். தொடப்பத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ரூமையும் பெருக்கிக் கொண்டு வந்தவள் மகளின் அறை கதவை திறந்தாள்.
அந்த ரூமில் மகள் இல்லை. பாத்ரூமிலும் இல்லை. இந்த நேரத்துக்கு இவள் எங்கே போனாள் என்று பூரண யோசித்த நேரத்தில் வாசலில் கார் ஹாரனின் சத்தம் கேட்டது.
வீட்டில் இருந்த மூன்று பேரும் வெளியே சென்றார்கள்.
தீனாவும் மானசாவும் மாலையும் கழுத்துமாக வாசலில் நின்று இருந்தார்கள். மானசாவின் கையில் குழந்தை இருந்தது.
அவர்களை இப்படி கண்டதும் வாசல்கால் மீது முதுகு சாய்ந்து விட்டாள் பூரணி. நெஞ்சின் மீது கை வைத்தவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.
சந்தானம் அதற்கு மேல் கோபமாக இருந்தார். மகளை அடிப்பதற்காக கைகளை ஓங்கிக்கொண்டு சென்றார். மானசாவின் முன்னால் வந்து பாதுகாப்பாக நின்ற தீனா “தப்பு முழுக்க என் மேலதான் சார். உங்க பொண்ணை அடிக்காதிங்க. கோபமா இருந்தா என்னை அடிங்க..” என்று சொன்னான்.
சந்தானம் யோசிக்கவே இல்லை. இவன் மீது மட்டும் அவருக்கு என்ன ஸ்பெஷல் மரியாதை வந்துவிடப் போகிறது? அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டார்.
“பொண்டாட்டி செத்து ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள இன்னொருத்தியை கட்டி இருக்க. நீ எல்லாம் ஆம்பளையாடா? த்தூ..”
அவன் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. “உங்க பொண்ணையும் நல்லா பார்த்துப்பேன் சார்..” என்றான்.
அவனின் மறு கன்னத்தில் அறையை விட்டார் இவர். “ப்ரீத்தியும் என் பொண்ணுதான்டா. பிள்ளையை பெத்து போட்டுட்டு செத்து கிடக்கிறா. ஒரு சொட்டு கண்ணீர் வரலைன்னாலும் பரவால்ல. அரை சோகமாவது உன் முகத்துல இருந்ததா? நீ அவளையே அந்த லட்சணத்துலதான் பார்த்துட்டு இருந்திருக்க? இதுல இவ வேற வேணுமா?” என்று கேட்டவர் “அந்த தாலியை அத்து எறிஞ்சிட்டு உள்ளே வா..” என்று மகளை அதட்டினார்.
தலைகுனிந்து நின்றிருந்தவள் தந்தைக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை.
பூரணி கண்ணீரோடு இவர்களின் அருகே வந்தாள். “அவன் குழந்தையை அவன் ஆசிரமத்துக்கு அனுப்பட்டும். கொன்னு கூட போகட்டும். நீ எதுவும் தப்பா யோசிக்காதன்னு அவ்வளவு சொன்னேனே கேட்டியா? இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறியே பாவி..” என்று அழுதாள்.
அக்கம் பக்கத்து வீட்டார் இந்த வீட்டை நெருங்க ஆரம்பித்தார்கள்.
“நாங்க இன்னொரு நாள் வரோம் ஆன்ட்டி..” என்ற தீனா மனைவியை காருக்கு அழைத்துப் போனான்.
“இப்ப மட்டும் நீ அவனோடு போயிட்டா உன்னை நான் முழுசா தலை முழுகிடுவேன். ஒழுங்கா என்கிட்ட திரும்பி வா..” அப்பா எச்சரித்தார்.
மானசா கண்ணீரோடு தந்தையை பார்த்தாள். அவரிடம் செல்லதான் அவளின் கால்கள் விரும்பின.
அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த தீனா “குழந்தையை கொடுத்துட்டு எங்க வேணாலும் போ. நான் குழந்தையை ஆசிரமத்துக்கு அனுப்பிக்கிறேன்..” என்று இவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மிரட்டலாக சொன்னான்.
மானசா குனிந்த தலையோடு காருக்குள் ஏறினாள்.
தீனா மாமனாரை திரும்பி பார்த்தான். இவன் இதழில் சிறு நக்கல் புன்னகை உலாவியது.
காருக்குள் ஏறி ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பி விட்டான்.
பூரணி வீட்டுக்குள் வந்து சுவரோடு அமர்ந்து புலம்பியபடி அழ ஆரம்பித்து விட்டாள். அக்கம் பக்கத்து பெண்மணிகள் அவளை சுற்றி அமர்ந்து அவளிடமே விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டு அவளுக்கே சமாதானமும் சொன்னார்கள்.
“குழந்தையை பெத்த பிறகு பெரியவ செத்துட்டா சின்னவளை கல்யாணம் பண்ணி வைக்கும் பழக்கம் காலங்காலமா நம்ம நாட்டுல இருக்கு. நீ இதை பெருசா நினைக்காத..” என்றாள் ஒருத்தி.
“அதுக்குன்னு அவன் முழுசா மூனு மாசம் கூட முடியாம இவளை கல்யாணம் பண்ணுவானா? புள்ளையை வளர்க்க துப்பில்லன்னா அந்தப் புள்ளையை கொண்டு வந்து பூரணிக்கிட்டயாவது கொடுத்துட்டு போயிருக்கணும். ப்ரீத்தியை வளர்த்தியவ அந்த குழந்தையை வளர்த்த மாட்டாளா?” என்று கேட்டாள் இன்னொருத்தி.
“அவன்கிட்ட பணம் இருக்கு. மானசாவும் விழுந்துட்டாளோ என்னவோ?” காற்று வாக்கில் ஒருத்தி மானசாவின் மீது பழியை தூக்கி போட்டாள்.
பூரணிக்குதான் அவமானத்தால் செத்து விட வேண்டும் என்று தோன்றுகிறது.
வீட்டிற்கு திரும்பி போகும் வழியில் மானசா அழுது கொண்டேயிருந்தாள்.
“வருத்தப்படாத. கொஞ்ச நாள்ல நான் உன் பேரன்ட்ஸை கன்வின்ஸ் பண்ணி உன்னை அவங்களோடு சேர்த்து வைக்கிறேன்..” என்றான் தீனா.
இவள் அவனை எரிச்சலாக பார்த்தாள். நீ என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் எனக்கு உன் உதவியே தேவைப்பட்டு இருக்காது. பிள்ளையையும் கிள்ளி விட்டுவிட்டு இப்போது தொட்டிலையும் ஆட்ட நினைக்கிறாயா? என்று மனதுக்குள் கேட்டாள்.
குழந்தை பசிக்கு அழ ஆரம்பித்தது. இவள் புட்டி பாலை குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை சரியாக குடிக்கவே இல்லை. இவளுக்கு அழுகையாக வந்தது. ஏன் ப்ரீத்தி செத்துப் போன என்று இல்லாதவளை நினைத்து அழுதாள்.
“வந்து பக்கத்துல உட்காரு பேசலாம்..” என்று அழைத்தான்.
அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவள் “நான் குழந்தையோட ரூம்ல தங்கிக்கிறேன்..” என்று சொன்னாள்.
அதிர்ந்தவன் “குழந்தையை கொடு..” என்று பிடுங்க வந்தான்.
குழந்தையோடு பின்னால் சாய்ந்தாள் அவள். அவனும் சேர்ந்து சாய்ந்தான். ஆனால் அவள் மீது மோதாமல் சோபாவின் கைபிடியில் கை பதித்தான். அவனின் மூச்சுக்காற்று அவள் முகத்தில் மோதியது.
குழந்தையை அணைத்துக் கொண்டிருந்தவள் “ப்ளீஸ். நான் இங்கேயே இருந்துக்கிறேன். குழந்தையை கேட்காத. தொட்டிலை மட்டுமாவது இந்த ரூமுக்கு கொண்டுவர சொல்றியா?” என்று கேட்டாள்.
அவளை தின்பது போல் பார்த்தவன் “நீ என்ன கேட்டாலும் செய்வேன். ஆனா என்னை விட்டு பிரிஞ்சி போக மட்டும் ட்ரை பண்ண கூடாது. சரியா?” எனக் கேட்டான்.
அவனின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவள் சரி என்பது போல் தலையாட்டினாள்.
ஒரு ஆணோடு இவ்வளவு நெருக்கத்தில் இருப்பது இதுவே முதல் முறை. அவளின் இந்த பயம் கூட அவனுக்கு பிடித்திருந்தது. குனிந்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டான். அனிச்சையாக அவளின் கரம் தன் கன்னத்தை துடைத்தது.
அவள் செய்ததைப் பார்த்து சிரித்தவன் “இவ்வளவு சீன் வேணாம் பேபி. உன்னோட ஹெட் டூ டோ எனக்கு சொந்தம். ஒவ்வொரு மைக்ரோ மீட்டர்லயும் என் வாசம் மட்டும்தான் நிரம்பி இருக்கப் போகுது. நார்மலா இரு.. ரொம்ப திங்க் பண்ணாத..” என்று சொன்னான்.
அவள் விழிகள் படபடத்தது. விலகிக் கொண்டான். அவனே சென்று தொட்டிலைக் கொண்டு வந்து தனது அறையின் ஒரு மூலையில் அந்த தொட்டிலை நிறுத்தினான்.
அழகான மரத்தொட்டில். இவனின் அம்மா குழந்தைக்காக ஸ்பெஷலாக ஆர்டர் போட்டு வாங்கிய தொட்டில்.
“நீ சொன்ன. சோ தொட்டிலை கொண்டு வந்து போட்டுட்டேன். ஆனா குழந்தை அழுதா எனக்கு ஆகாது. அழுகை சத்தம் என் காதுல விழுந்தா குழந்தையையும் தொட்டிலையும் தூக்கி வெளியே வீசிடுவேன். அண்டர்ஸ்டாண்ட்?” என கேட்டான்.
அவனை வெறிக்க வெறிக்க பார்த்தவள் “மிருகம்தானே நீ?” என்று கேட்டாள்.
சட்டையை கழட்ட ஆரம்பித்தவன் ”நைட்டு தெரியும், நான் மிருகமா மனுஷனான்னு..” என்று நக்கலாக சொன்னான்.