“இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. இவளைப் போயி என் பக்கத்தில் உட்கார வச்சுட்டு” என்று கடுப்புடன் காரை இயக்கினான் அரவிந்தன்.
மயூரியோ அவனை ரசித்தபடியே , “ஏசிபி ஸார் பாட்டு எல்லாம் போட மாட்டீங்களா?” என்றாள். அவளை முறைத்த அரவிந்தன் “எனக்கு பாட்டு எல்லாம் பிடிக்காது” என்று கூறி விட்டு சாலையில் கவனத்தை செலுத்தினான்.
எதார்த்தமாக அவள் புறம் திரும்பியவன் காரை நிறுத்தி விட்டு கோபமாக அவளை முறைத்தான்.
“அறிவு இல்லையா உனக்கு?” என்ற அரவிந்தனை கேள்வியாக பார்த்தாள் மயூரி.
“சீட் பெல்ட் போட தெரியாதா என்ன” என்றான் அரவிந்தன் கோபமாக. “தெரியாதே” என்றாள் மயூரி நக்கல் தொணியுடன்.
அவளை முறைத்த அரவிந்தன், “சீட் பெல்ட் போடு” என்றிட , “அவளுக்கு தான் தெரியாதுன்னு சொல்லுறாளே அரவிந்த் நீ போட்டு விடேன்” என்று கன்னிகா கூறிட அவரை கோபமாக முறைத்தவன், “சீட் பெல்ட் போடு” என்று அவளைப் பார்த்து பற்களைக் கடித்தான்.
ஸ்கூலில் அறைஞ்சது போல திரும்பவும் அறைஞ்சுருவானோ என்று பயந்த மயூரி தானே சீட் பெல்ட்டை அணிந்து கொண்டாள்.
“ஹாய் மயூரி நீ என்ன எங்க மாமா கூட வந்திருக்க அத்தையை காணோம்” என்று ரூபிணி கேட்டிட, “நானும் வந்துட்டேன் டீ” என்று வந்தார் கன்னிகா.
“உன் சித்தி ஊருக்கு போய் இருக்காங்களாம் மயூரி ஹோட்டலுக்கு சாப்பிட போறேன்னு சொன்னாள். நாங்களும் ஹோட்டலுக்கு தான் போகிறோம்னு அழைச்சிட்டு வந்தோம்” என்ற கன்னிகா அர்ஜுனன் அருகில் அமர்ந்து கொள்ள மயூரி அரவிந்தன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
தன் தாயை அவன் முறைக்க ஆரம்பிக்க அவர் அவனை கண்டு கொண்டால் தானே.
“மயூரி உனக்கு என்ன பிடிக்குமோ ஆர்டர் பண்ணுமா” என்று கன்னிகா கூறிட அவள் தனக்கான உணவை ஆர்டர் செய்தாள்.
“சித்தி எங்கே போயிருக்காங்க” என்று ரூபிணி கேட்டிட, “என் அப்பாவை பார்க்க” என்றாள் மயூரி. “உன் அப்பா எங்கே இருக்காரு” மயூரி என்ற ரூபிணியிடம் , “பாளையங்கோட்டையில் இருக்காங்க” என்றாள் மயூரி.
“பாளையங்கோட்டையா உங்க அப்பா என்ன ஜெயிலிலா இருக்காரு” என்று கிண்டலாக கேட்டான் அர்ஜுனன். அவனைப் பார்த்து கசந்த புன்னகையை புரிந்தவள் , “ஆமாம்” என்று கூறிட , “ஐ யம் ஸாரி மயூரி நான் சும்மா கிண்டலாதா கேட்டேன்” என்றான் அர்ஜுனன்.
“இட்ஸ் ஓகேங்க” என்ற மயூரி அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள். “தப்பா எடுத்துக்காதே மயூரி உன் அப்பா ஏன்” என்று தயங்கினாள் ரூபிணி.
“ரூபிணி இப்போ இந்த கேள்வி அவசியமா பேசாமல் சாப்பிடுங்க நேரமாச்சு” என்று அரவிந்தன் கூறிட அனைவரும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், “அர்ஜுன் நீ என் காரை எடுத்துட்டு போ எனக்கு ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு நான் பைக்ல வரேன்” என்று கூறினான் அரவிந்தன்.
“ஆண்ட்டி எனக்கு ஒரு வேலை இருக்கு நீங்க வீட்டுக்கு போங்க நான் கேப் புக் பண்ணி வந்துடுறேன் ப்ளீஸ்” என்று மயூரி கூறிட, “இந்த டைம்ல எப்படிம்மா உன்னை தனியா விட்டுட்டு போறது” என்றார் கன்னிகா.
“ப்ளீஸ் ஆண்ட்டி” என்று அவள் கெஞ்சிட கன்னிகாவும் வேறு வழி இல்லாமல் அவளை விட்டுவிட்டு சென்றார்.
“என்னம்மா இப்போவும் அந்த மயூரியை அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க விருப்பமா உங்களுக்கு” என்றான் அர்ஜுனன்.
“ஏன் டா இப்படி ஒரு கேள்வி கேட்கிற” என்ற கன்னிகாவிடம் , “இல்லை அந்த பொண்ணோட அப்பா ஜெயிலில் கிடக்கிறார். ஜெயிலுக்கு போனவரோட பொண்ணை எப்படி நம்ம அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும். அண்ணன் வேற ஐபிஎஸ் ஆஃபீஸர்” என்றான் அர்ஜுனன்.
“மயூரியா ஜெயிலில் இருக்கிறாள் அவளோட அப்பா தானே இருக்காரு அது மட்டும் இல்லை அவர் ஜெயிலில் இருக்கிற விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும் அபிராமி என்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டாங்க எனக்கு அது ஒரு பெரிய பிரச்சனையே கிடையாது” என்றார் கன்னிகா .
“ஏன்டி உன்னோட சித்தி சித்தினு சொல்லுற உங்க சித்தப்பா ஜெயில்ல இருக்காருன்னு உனக்கு தெரியாதா?” என்ற அர்ஜுனனிடம், “சத்தியமா எனக்கு தெரியாது அர்ஜுன் அவங்க ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே எங்க ஊரை காலி பண்ணிட்டு வந்துட்டாங்க அதனால அவங்க வீட்ல என்ன நடக்குது எதுவுமே எங்களுக்கு தெரியாது சொந்த பந்தங்கள் கூடவும் அவ்வளவா காண்டாக்ட்ல கிடையாது .நானே எதார்த்தமா அவங்களை பார்க்கும்போது என்ன இவங்க நம்ம அபிராமி சித்தி மாதிரி இருக்காங்களேன்னு சொல்லிட்டு தான் பேச ஆரம்பிச்சேன். அப்பதான் அவங்க என் சித்திங்கிறது எனக்கே தெரிஞ்சிருச்சு” என்றாள் ரூபிணி .
“சரி இப்ப மயூரி அப்பா ஜெயில்ல இருக்கறதுனால உனக்கு ஏதும் பிரச்சனையா அர்ஜுன்” என்ற கன்னிகாவிடம், “எனக்கு என்னம்மா பிரச்சனை அரவிந்த் அண்ணனுக்கு அந்த பொண்ணை புடிச்சிருந்தால் தாராளமா கல்யாணம் பண்ணிக்கட்டும்” என்றான் அர்ஜுனன்.
“சரி சரி இப்போதைக்கு இந்த பேச்சு எதுக்கு நீ ரோட்டை பார்த்து வண்டி ஓட்டு” என்ற கன்னிகா அமைதியாக யோசிக்க ஆரம்பித்தார் .
“என்ன சொல்றீங்க சிவா” என்ற அரவிந்தனிடம் , “ஆமாம் சார் பீச்சுலதான் அந்த கும்பல் வந்து போதை மருந்து சப்ளை பண்ணிட்டு இருக்காங்க அப்படிங்கிற ஒரு இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு” என்றான் சிவகுமார்.
“ஓகே ஓகே நான் அதை பார்த்துக்கிறேன்” என்ற அரவிந்தன் நேராக அந்த கடற்கரைக்கு சென்றான்
மனது சரியில்லை என்று தான் மயூரி அந்த கடற்கரைக்கு வந்தாள். வந்தவள் கண்களில் அவன் பட்டு விட “ஏய் நில்லுடா” என்று அவள் கத்திட அவளைப் பார்த்து பதறிப் போய் ஓட ஆரம்பித்தான் அவன்.
“ராஸ்கல் எங்கே ஓடப் பார்க்கிற” என்ற மயூரி அவனை விரட்டிக் கொண்டு ஓட , அந்த நேரம் அங்கு வந்த அரவிந்தனின் மீது மோதி விழுந்தாள் மயூரி.
“ஏங்க அறிவில்லையா? பார்த்து வர மாட்டீங்களா?” என்று அவள் எழுந்து கொள்ள அரவிந்தன் நின்றிருந்தான்.
“நீ இப்படி ஓடிப் பிடிச்சு விளையாடனும்னு தான் அம்மா கூட போகாமல் இங்கே வந்தியா” என்றான் அரவிந்தன்.
“ஓடிப் பிடிச்சு விளையாடுறேனா என்ன போலீஸ்கார் நீங்க வேற என் ஸ்டூடண்ட் அவன். முளைச்சு மூனு இலை விடலை அது அந்த கட்டுமரத்துக்கு பின்னாடி உட்கார்ந்து நான்கு பொறுக்கி பசங்களோட சேர்ந்து கஞ்சா இழுத்துட்டு இருக்கான். அதான் அவனை பிடிக்க விரட்டினேன் நீங்க குறுக்கே வந்துட்டீங்க. உங்க மேல மோதி நான் விழுந்துட்டேன் அவன் ஓடிட்டான்” என்றாள் மயூரி.
“எந்த கட்டுமரம் பின்னாடி எத்தனை பேரை பார்த்த” என்று அரவிந்தன் கேட்டிட , “அதோ” என்று அவள் கை நீட்ட அங்கே இருந்து ஒரு நான்கு பேர் பயங்கர போதையில் வந்து கொண்டு இருந்தனர்.
“டேய் குட்டி சோக்கா இருக்குதுடா பொடியன் இவளைப் பார்த்து பயந்து ஓடிட்டான்” என்ற ஒருவன், “இவன் யாருடா கூட” என்று மயூரியை நெருங்கி வர அவளோ அவளருகில் வந்தவனின் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்.
அவள் அறைந்ததில் அவன் பொறி கலங்கிப் போய் நிற்க, “ஏய் யாரு மேலடீ கை வச்ச” என்று மற்ற நால்வரும் அவளை நெருங்கிட அரவிந்தன் அவர்களை அடிக்க ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்து மயூரியும் அவர்களை அடி வெளுக்க ஆரம்பித்தாள்.
“என்னடா சொன்ன நாயே குட்டி சோக்கா இருக்கா சொல்லுவியா? சொல்லுவியா? சின்ன பையனுக்கு கஞ்சா இழுக்க சொல்லிக் கொடுப்பியா?” என்று அடி வெளுக்க ஆரம்பித்தாள்.
“அக்கா மன்னிச்சுக்கக்கா இனிமேல் அந்த பையனுக்கு கஞ்சா இழுக்க சொல்லிக் கொடுக்க மாட்டேன்” என்று அடி தாங்காமல் அவன் சொன்னாலும் மயூரி விடாமல் அடி வெளுக்க ஆரம்பித்தாள்.
அரவிந்தன் தன் ஆட்களை வர வைத்து இந்த நால்வரையும் அள்ளிக் கொண்டு செல்ல உத்தரவிட அவர்களும் அந்த கயவர்களை அள்ளிக் கொண்டு சென்றனர்.
அவள் கோபமாக எங்கோ கிளம்ப, “ஏய் எங்கே போற” என்றான் அரவிந்தன். “அந்த நாதாரி கிஷோர் வீட்டுக்கு. அவனை நாலு மிதி மிதிச்சா தான் என் ஆத்திரம் அடங்கும். படிக்கிற வயசில் கஞ்சா அவனை மட்டும் இல்லை அவனை கண்டுக்காமல் இருக்கிற அவனோட அம்மா, அப்பாவையும் நாலு வெளு வெளுக்கனும் அப்போ தான் என் ஆத்திரம் அடங்கும்” என்றாள் மயூரி.
“ஹேய் கொஞ்சம் அமைதியா இரு” என்ற அரவிந்தன் , “நாளைக்கு அந்த பையனோட பேரன்ட்ஸை ஸ்கூலுக்கு வரச் சொல்லி வார்ன் பண்ணு இப்போ வீட்டுக்கு கிளம்பு” என்றான் அரவிந்தன்.
“நீங்க போங்க போலீஸ்கார் நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்றாள் மயூரி.
“அறிவு இருக்கா உனக்கு மணி பத்தரை இந்த டைம்ல இங்கே தனியா இருப்பியா வா” என்று அவளை அழைத்திட, “அவளோ பனிரெண்டு மணி வரை கூட நான் தனியா இருப்பேன் எனக்கு எந்த பயமும் இல்லை” என்றாள் மயூரி.
“அதான் பார்த்தேனே அந்த ரவுடியை நீ வெளுத்த வெளுவை உனக்கு பயம் இல்லை தான்” என்று சிரித்தவன், “கிளம்பு” என்று அவளை அழைத்திட , “அவளோ நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க போலீஸ்கார்” என்றாள்.
“அவளை முறைத்தவன் பேசாமல் வா” என்றான். “கேப் புக் பண்ணிட்டியா இல்லை இனிமேல் தான் பண்ணனுமா” என்று கேட்டிட , “வா வான்னு பாசமா கூப்பிட்டதும் உங்க கூட பைக்ல அழைச்சிட்டு போவீங்கனு எதிர்பார்த்தேன் நீங்க என்னடான்னா கேப் புக் பண்ணி போக சொல்லுறீங்க” என்றாள் மயூரி.
“என் அம்மா கிட்ட கேப் புக் பண்ணி வீட்டுக்கு வந்துருவேன்னு தானே சொன்ன இப்போ மட்டும் என்ன” என்ற அரவிந்தனிடம், “கேப் புக் பண்ணி வர அளவுக்கு என் கிட்ட காசு இல்லை” என்று அவள் கைகளை விரித்து காட்ட அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“வீட்டுக்கு தானே போற அங்கே போயி எடுத்து கொடு” என்றான் அரவிந்தன்.
“கேப் புக் பண்ணி பத்தி விடுறதிலேயே குறியா இருக்காரு. ஏன் இவரு கூட
என்னை கூட்டிட்டு போனால்” என்று பற்களைக் கடித்துக் கொண்டு அவள் கேப் புக் செய்ய முயன்றாள்.