தொல்லை – 09
கதிரின் கோபத்தை முதன்முறையாகக் கண்ட அஞ்சலிக்கு உடல் வெலவெலத்துப் போனது.
அவனுடைய கோபத்திற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று கூடத் தெரியாமல் உறைந்து போய்விட்டாள் அவள்.
அவளுக்கு இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை.
தந்தை ஒரு பக்கம், உண்மையைச் சொல்லக் கூடாது என மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். தன்னுடைய அக்காவோ உண்மையைச் சொன்னால் என் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்..
அவர்கள் இருவருக்கும் இடையே நான் அல்லவா சிக்கித் தவிக்கின்றேன்?
என்னைப் பற்றி மட்டும் ஏன் யாருமே சிந்திக்கவில்லை?
அக்கணம், அவளைவிட கதிரை நினைத்துத்தான் அவளுக்கு இன்னும் கவலை அதிகரித்தது.
கதிரைப் பார்க்கும்போது அவளுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
எவ்வளவு ஆசைகளுடன் திருமணத்தை முடித்திருப்பான்?
அவனுக்கு கிடைத்த அனைத்தும் ஏமாற்றங்கள் மட்டுமல்லவா..?
தன்னுடைய புறக்கணிப்பால் கதிரின் மனம் உடைந்து போவதை உணர்ந்து கொண்டவளுக்கு நெஞ்சம் வலித்தது.
அழுகை வந்தது.
உடைந்து போய் கட்டிலில் அமர்ந்தவள், கீழே தைலம் இருந்த சிறிய கண்ணாடி புட்டி உடைந்திருப்பதைக் கண்டு முகம் வாடினாள்.
இதைச் சுத்தம் செய்யாவிட்டால் யாருடைய காலையாவது இந்தக் கண்ணாடித் துண்டுகள் பதம் பார்த்துவிடும் என உணர்ந்து, அதைச் சுத்தம் செய்வதற்காக அவள் எழுந்தபோது, சென்ற வேகத்திலேயே மீண்டும் அந்த அறைக்குள் வந்தான் கதிர்.
அவனைக் கண்டதும் அவளுக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
எங்கே தன்னை ஏதாவது திட்டி விடுவானோ எனப் பயந்து போனாள் அவள்.
கதிரோ நேரே அவள் அருகே வந்தவன், “சாரி, மது… ரொம்ப கோபப்பட்டுட்டேன், சாரி..” என அவளிடம் மென்மையான குரலில் கூற அவளுடைய விழிகள் விரிந்தன.
அதிர்ந்து பார்த்தவளை நோக்கி சிறு புன்னகையை பரிசாகக் கொடுத்தவன் கீழே விழுந்த கண்ணாடித் துண்டுகளைக் குனிந்து பொறுக்கத் தொடங்க, இவளுக்கு உள்ளம் உருகிப் போனது.
“ஐயோ, மாமா, நீங்க எதுக்கு இதெல்லாம் பண்றீங்க? முதல்ல எழுந்திருங்க, நானே சுத்தம் பண்ணிடுறேன்,” எனப் பதறியவள், அவன் அருகில் சென்று குனிந்து, உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் பொறுக்குவதற்காகத் தன்னுடைய கரத்தை நீட்ட,
சட்டென அவளுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டான் கதிர்வேலன்.
“ஏய், இதெல்லாம் நீ எதுக்கு பண்ற? நானே பண்றேன். உன்னோட கைல கண்ணாடித் துண்டு கிழிச்சிடுச்சுன்னா என்ன பண்றது?” என அவன் பதற,
அவளுக்கோ அவனுடைய வார்த்தைகளில் தொனித்த அக்கறை சிலிர்க்க வைத்தது.
“அப்போ உங்க கையில காயம் பட்டா பரவாயில்லையா மாமா?” என முதன்முறையாக அவளே அவனிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.
“எனக்கு காயம் பட்டாக்கூட வலிக்காது. இரும்பு பாடி!” எனத் தன்னுடைய நெஞ்சைத் தொட்டுக் காண்பித்தவன், சிரிப்போடு அந்தக் கண்ணாடித் துண்டுகளைப் பொறுக்க,
“என்னதான் இரும்பு பாடி இருந்தாலும் ரத்தம் வந்தால் எல்லாருக்கும் வலிக்கத்தான் செய்யும்..” என்றவள், துடைப்பத்தை எடுத்து வந்து, அவனுடன் சேர்ந்து அவளும் அந்த இடத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
இருவரும் ஒன்றாக அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, கைகளைச் சுத்தப்படுத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
இதற்கு முன்பு இறுக்கமாக இருந்த சூழல் இப்போது அழகாக மாறியது.
“சாரிடி, ரொம்ப டென்ஷனா இருந்தேன். அதான் கோபத்துல தைல புட்டியைத் தூக்கி எறிஞ்சுட்டேன். இப்போ உனக்குத் தலைவலி எப்படி இருக்கு? இன்னும் இருக்கா?” என அவன் கேட்க,
“இல்லை..” எனத் தலை அசைத்தாள் அவள்.
“ம்ம்… ஓகேமா வயிறு வலி எப்படி இருக்கு?”
“இப்போ வயிறு வலிக்கல மாமா…”
“சரி வா சாப்பிடலாம். காலைல இருந்து நீயும் நானும் மட்டும்தான் இன்னும் சாப்பிடல.” என்றான் அவன்.
“அத்தையும் மாமாவும் சாப்பிட்டாங்களா?” எனக் கேட்டாள் அஞ்சலி.
“அவங்க அப்பவே சாப்பிட்டாங்கடி. நீ தோட்டத்துக்கு வர்றியா..? நாம அங்க இருந்து சாப்பிடலாம். அங்கே ரொம்ப குளிர்ச்சியா நல்லா இருக்கும்..” என்றான் அவன்.
அவனுடைய அழைப்பை மறுக்கத் தோன்றாது சரியெனத் தலை அசைத்தவள் “நான் போய் சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரேன்..” என்றாள்.
“ராஜி அக்காகிட்ட சாப்பாடு எடுத்துட்டு வரச் சொல்லி நான் அப்பவே சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல கொண்டு வந்து தருவாங்க. நாம தோட்டத்துக்கு போலாமா?” என்றவன் அவள் ஆம் என்றதும் அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றான்.
இப்போதுதான் அவர்களுடைய தோட்டத்தையே உற்றுக் கவனித்தாள் அஞ்சலி.
அனைத்து வகையான பூச்செடிகளையும் அங்கே பார்த்தவளுக்கு வதனம் மலர்ந்தது.
இன்னும் சற்று தள்ளி நின்ற மாமரங்களையும் கொய்யா மரங்களையும் பார்த்தவளுக்கு முகத்தில் புன்னகை பெரிதாக விரிந்தது.
அவளுடைய மலர்ந்த முகத்தை இரசித்துப் பார்த்தான் கதிர்.
சற்று முன்னர் இருந்த கோபமெல்லாம் அவனுக்கு மாயமாகி மறைந்தே போனது.
அடுத்த சில நொடிகளில் கைகளில் தட்டுடன் அங்கே வந்தார் ராஜேஸ்வரி.
கதிரின் வீட்டில் பல வருடங்களாக வேலை செய்யும் நம்பிக்கைக்குரிய பெண்மணி என்று அவரைச் சொன்னால் மிகையாகாது.
தோட்டத்தில் இருந்த சிறிய மேடை மீது உணவுத் தட்டுகளை அவர் அடுக்கி வைத்துவிட்டுப் போக அங்கே இருந்த கல் பெஞ்சில் இருவரும் அமர்ந்து கொண்டனர்.
சில்லென்ற காற்று அவர்கள் இருவரையும் தழுவியது.
“உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு…” என்றாள் அவள்.
“உன்ன விட இது அழகா இல்ல..” என்றான் அவன்.
எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் அவளுடைய முகம் சிவந்து போனது.
மெல்லத் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.
அவள் வெட்கத்தில் முகம் சிவந்ததும் தலையைக் குனிந்து கொண்டதையும் கண்ட கதிருக்கோ உற்சாகம் பிறந்தது.
தோசையைப் பிய்த்து சட்னியைத் தொட்டவன் அவன் சாப்பிடுவதற்கு முன் அவளுக்கு நீட்ட ஒரு நொடி திணறிப்போனவள் ‘எங்கே மறுத்தால் கோபம் கொள்வானோ’ எனப் பயந்து மெல்ல அவன் ஊட்டியதை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.
அதன் பின்னர் அவனும் இயல்பாகப் பேச அவனுடைய பேச்சு அவளுக்கு சுவாரஸ்யமாகவே இருந்தது.
அவனுடன் தனக்குப் பிடித்த ஒரு சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல இருந்த உணர்வில் தன்னுடைய இடது பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே ஐந்து வயது அல்லது ஆறு வயது கொண்ட ஒரு சிறுவன் அவர்கள் உண்பதையே பார்த்துக்கொண்டு கையில் விளையாடிய மண்ணுடன் நிற்பதைக் கண்டவள் “அது யாரு மாமா?” எனக் கதிரிடம் கேட்டாள்.
“நம்ம தோட்டக்காரனோட பையன்னு நினைக்கிறேன்டி” என்றான் அவன்.
“ஏய் குட்டிப் பையா இங்க வாங்க.. உங்க பேரு என்ன..?” என அஞ்சலி அவனை அருகே அழைக்க, அவனும் தயங்கித் தயங்கி மெல்ல அவள் அருகே வந்தான்.
“உங்க பேரு என்ன?” என மீண்டும் அவனிடம் கேட்டாள் அவள்.
“எ… என் பேரு… ராக்கி…” என்றான் சிறுவன்.
“அடடே எவ்ளோ அழகான பேரு!” எனச் சிரித்தவாறு கூறியவள் அந்தச் சிறுவனின் பார்வை ஏக்கத்துடன் தன்னுடைய தட்டில் இருந்த தோசை மீது படிவதைக் கண்டதும் அவளுக்கோ உள்ளம் பிசைந்தது.
“ஏன் அங்கேயே நிக்கிறீங்க? அத்தையோட மடில வாங்க…” என அந்தச் சிறுவனை அழைத்தாள் அஞ்சலி.
“மது அவனோட உடம்பு முழுக்க மண்ணா இருக்கு. உன்னோட புடவையில அழுக்கு பட்டுடும்” என்றான் கதிர்.
“என்ன மாமா பேச்சு இது..? உயிர் இல்லாத இந்தப் புடவை முக்கியமா..? அங்க நின்னு ஏக்கமா பாத்துக்கிட்டு இருக்க இந்த உயிர் முக்கியமா? இவனை இப்படியே திருப்பி அனுப்பிச்சா எனக்கு மனசு கஷ்டமாயிடும்…” என்றவள் மீண்டும் சிறுவனைப் பார்த்து அழைக்க அவனோ இப்போது அவளை நெருங்கி வந்தான்.
“உங்க பேரு அத்தையா?” என அவன் கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்தது.
“உங்களுக்கு நான் அத்தைதான்..” என்றவள் தன்னுடைய மடியில் அந்தச் சிறுவனை அமர வைத்து தட்டை எடுத்து அவனுக்கு தோசையை ஊட்டத் தொடங்க அடுத்த சில நொடிகளில் அவளுடன் நன்கு ஒட்டிக்கொண்டான் ராக்கி.
அஞ்சலி கூறிய வார்த்தைகள் கதிரை வியக்க வைத்தன.
தான் அசட்டுத்தனமாகப் பேசிவிட்டோம் எனத் தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டவன் அவர்கள் இருவருடைய உரையாடலையும் அமைதியாக இருந்து இரசிக்கத் தொடங்கினான்.
அதே கணம் தோட்டக்காரனோ அங்கே வேகமாக ஓடி வந்தவன் “டேய் ராக்கி யாரைக் கேட்டு சின்னம்மாவோட மடியில உட்கார்ந்த? இங்க வாடா முதல்ல…” என அவர் அதட்டி அழைக்க,
“இல்ல இருக்கட்டும் குமரா. ராக்கி எங்க கூடவே கொஞ்ச நேரம் இருக்கட்டும். நீ போய் வேலையைப் பாரு…” என்றான் கதிர்.
“ஆமாப்பா நீங்க போய் வேலையைப் பாருங்க. நான் அத்தை கூட கொஞ்ச நேரம் இருந்து இந்த தோசையெல்லாம் சாப்பிட்டுட்டு அப்புறமாக வரேன்..” என்றான் சிறுவன்.
“ஹா ஹா… அதான் பெரிய மனுஷனே சொல்லிட்டாரே அவர் அப்புறமா வருவாரு..” என கதிர் சிரித்தபடி கூற குமரனுக்கும் சிரிப்பு வந்தது.
சங்கடமான புன்னகையைக் புரிந்துவிட்டு சிறு தலையசைப்புடன் “சீக்கிரமா வா..” என்பது போல முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் அந்தத் தோட்டக்காரன்.
“இவ்வளவு குட்டியா இருந்துக்கிட்டு எப்படிப் பேசுறான்னு பாருங்க!” என சிரித்தாள் அஞ்சலி.
ஒருவாறு அவனுக்கு தோசையை ஊட்டி முடித்ததும் “ரொம்ப நல்லா இருக்கு அத்தை. நன்றி!” என்றவாறு மடியில் இருந்து இறங்கியவனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் அஞ்சலி.
“ஹி… ஹி…” எனக் கிளுகிளுத்துச் சிரித்த சிறுவனோ “நான் போய் விளையாடுறேன்..” என்றவாறு குடுகுடுவென ஓடிவிட அவனையே பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த அஞ்சலிக்கு மனதில் இருந்த பாரங்கள் யாவும் சற்றே அகன்றாற்போல இருந்தது.
“இந்தக் குட்டிப் பசங்களோட சிரிப்புக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்ல?” எனக் கேட்டவளின் அருகே வந்து அமர்ந்த கதிர்வேலனோ,
“ம்ம்… அவன் ரொம்ப லக்கி..” என்றான் ஏக்கப் பெருமூச்சோடு.
“ஏ… ஏன் மாமா?” எனப் புரியாமல் கேட்டாள் அவள்.
“உன்னோட மடியில உட்கார்ந்து உன் கையால சாப்பாடு சாப்பிட்டு உன்கிட்ட முத்தமும் வாங்கிட்டுப் போறானே… அவன் ரொம்ப ரொம்ப லக்கி தானே?” என இவன் ஏக்கத்துடன் கூற இவளுக்கோ நொடியில் மூச்சடைத்துப் போனது.
💜💜
ஹாய் தங்கம்ஸ்..
ரெண்டு நாளா கொஞ்சம் பிஸியா இருந்தேன்.. அதனாலதான் எபி போட முடியல…
அதுக்கெல்லாம் சேர்த்து இன்னைக்கு இன்னும் ரெண்டு அத்தியாயங்கள் பதிவிடுறேன்..
நீங்க மறக்காம உங்க கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கோங்க.. உங்க கமெண்ட்ஸ் பார்த்தாதான் எனக்கு டைப் பண்ண உற்சாகமே வரும்..