அந்தியில் பூத்த சந்திரனே – 12

4.9
(9)

தங்கள் இருவருக்குமான காஃபி, டீயை எடுத்துகொண்டு அறைக்குள் நுழைய, ஆத்யா இன்னும் உறங்கி கொண்டிருந்ததை பார்த்தவள்  நேராக ஹர்ஷாவிடம் சென்றாள். ஹர்ஷாவோ பால்கனியில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்தான். அம்ருதா அவன் அருகில் வந்து “காஃபி எடுத்துக்கோங்க” என்று கூறி அவன் முன்பு நீட்ட,  “தேங்க்ஸ் அம்ருதா” என்றவன் அதனை புன்னகை முகமாய் வாங்கி கொண்டான்.

 

இருவரும் அருந்தி கொண்டிருந்த நேரம் ஆத்யா தூக்கம் கலைந்து எழுந்தவள் அம்ருதாவிடம் தூக்க கலக்கத்தில் தடுமாறியப்படியே நடந்து வந்தாள். “என் செல்லமே எழுந்துட்டீங்களா?” என்றபடியே அம்ருதா குழந்தையை தூக்கி மடியில் வைக்க, அவள் கழுத்தை  கட்டிக் கொண்டு ஹர்ஷாவையே பார்த்து கொண்டிருந்தாள் ஆத்யா. என்ன நினைத்தாளோ! இரண்டு கரத்தையும் உயர்த்தி ஹர்ஷாவிடம்  தூக்கும்படி சைகை செய்ய, உடனே முகம் மலர அவளை தூக்கி அள்ளி அனைத்து கொண்டவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

“யார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் போகவே மாட்டா. அதுவும் தூங்கி எழுந்தா என்னைவிட்டு நகரவே மாட்டா. உங்ககிட்ட வந்துட்டாளே!” என்றாள் அம்ருதா.

 

“என் பட்டு பாப்பாவுக்கு அப்பாவை பிடிச்சு போச்சு. ஆமாதானே கண்ணம்மா? என்று கேட்க, அவளும் “ஆமாம்” என்பது போல் மேலும் கீழும் தலையாட்டினாள்.

 

குழந்தையை பார்த்து சிரித்து கொண்டவள், சிறிது நேரத்திற்கு பிறகு, “சரி அப்பாகிட்ட அப்புறமா விளையாடுங்க, இப்போ வாங்க.. பிரஷ் பண்ணிட்டு குளிச்சுட்டு வந்துடுவோம்.” என்று கொஞ்சியப்படியே குளியலறைக்கு அவளை அழைத்துச் சென்றாள்.

குழந்தையை குளிக்க வைத்து வேறு உடை மாற்றியதும் மூவரும் சேர்ந்து கீழே செல்ல, வேலைக்கார பெண்மணி உணவை மேஜையின் மீது அடுக்கி வைத்து கொண்டிருந்தார்.

 

பார்த்திபனும், கீர்த்தனாவும் அமர்ந்திருக்க, அவர்களுடன் இவர்களும் இணைந்து கொண்டனர்.

ஆத்யாவோ புதிய இடம், புதிய ஆட்களை வித்யாசமாக பார்த்து கொண்டிருந்தாள். அம்ருதா குழந்தைக்கு உணவை ஊட்டி முடித்தவள் தானும் உண்ணத் தொடங்கினாள்.

யாரும் ஒரு வார்த்தையும் பேசி கொள்ளவில்லை. இடமே அமைதியாக இருந்தது. அதை கலைக்கும் விதமாக,

“இரண்டு பேரும் சாப்ட்டு முடிச்சுட்டு பக்கத்துல இருக்க கோவிலுக்கு போய்ட்டு வாங்க”என்றார் கீர்த்தனா.

“ஓகே மா”. அவ்வளவுதான் மீண்டும் அமைதி.

அம்ருதாவிற்கு இது வித்யாசமாக தெரிந்தது. அவள் வீட்டில் அனைவரும் பேசி சிரித்த படியே உணவை எடுத்து கொள்வது வழக்கம். ‘சரி, இங்கு இப்படித்தான் போலும்’ என்று எண்ணி கொண்டவள் தானும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

பிறகு மூவரும் விடைபெற்று கோவிலுக்கு சென்றனர். போகும் வழியெங்கும் ஆத்யா பேசி கொண்டே வர, அதற்க்கு பதில் அளித்த படியே வந்தான் ஹர்ஷா.

கோவிலின் வாசலில் காரை நிறுத்திவிட்டு அம்ருதாவிற்கு பூ வாங்கி கொடுத்தவன் ஆத்யாவை அழைத்து கொண்டு உள் நுழைந்தான். அதே நேரம் அம்ருதாவின் வீட்டிலிருந்து அழைப்பு வர, அதை ஏற்று காதில் வைத்ததும்,

” அம்ருதா.. எப்படி மா இருக்க? என்றார் காவேரி.

 

“நல்லாருக்கேன் மா..  அதை ஏன் இவ்வளவு பதட்டமா கேக்குறீங்க?”

 

“இல்லடா. உன் மாமியார் முகமே சரி இல்ல. அதான் உன்னையும் பாப்பாவையும் ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு மனசு அடிச்சுகிட்டே இருந்துச்சு”

 

“அதெல்லாம் ஒன்னும் சொல்லல மா. நல்லாதான் பேசினாங்க. இப்போ நானும் அவரும் பாப்பா கூட கோவிலுக்கு வந்திருக்கோம். அத்தைதான் எங்களை அனுப்பி வச்சாங்க” என்றதும்தான் காவேரிக்கு மனமே நிம்மதி அடைந்தது.

“சரிடா. நானும் அப்பாவும் மறு வீட்டுக்கு அழைக்க உங்க வீட்டுக்கு வரோம்.” என்றதும்,

“அப்படியா? வாங்க வாங்க.. கிளம்பிட்டீங்களா? நாங்க சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுறோம்” என்றாள் அம்ருதா.

 

“ஹேய்.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். பொறுமையா மாப்பிள்ளை கூட சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு போ. நாங்க இனிமேல்தான் கிளம்ப போறோம்”

 

“ஓ… சரிம்மா.. நான் அவர்கிட்ட சொல்லிடுறேன்.”

 

“சரி அம்ருதா. நேர்ல பேசுவோம்” என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டார்.

 

“புன்னகை முகமாய் வந்த அம்ருதாவை கண்டவன், என்ன அம்ருதா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?” என்றான் ஹர்ஷா.

 

“ம்ம்ம்.. ஆமா.. அம்மாவும் அப்பாவும் மறுவீட்டுக்கு அழைக்க நம்ம வீட்டுக்கு வராங்களாம்.” என்றவள் சிறிது யோசனைக்கு பின்னர், “எனக்காக ஒரு விஷயம் பண்றீங்களா?” என்றாள்.

“சொல்லுங்க அம்ருதா, என்ன செய்யணும்?”

“ப்ளீஸ்.. இப்படி வாங்க போங்க சொல்லாம, வா போன்னு பேசுறீங்களா? அம்மாவும் அப்பாவும் பார்த்தா வித்யாசமா நினைப்பாங்க.” என்றதும் அழகாக புன்னகையித்தவன்,

“அவ்வளவுதானா? ஓகே.. கூப்பிட்டா போச்சு.. என்று தன் தோள்களை குலுக்கியவன்,

“சரி வா சாமி கும்பிடலாம்” ஆத்யாவை தூக்கி கொண்டு அவளையும் அழைத்து கொண்டு செல்ல, இருவரும் இறைவனிடம் மனதார பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் சிறிது நேரம் கோவில் பிரகாரத்தில் அமர்ந்ததும்,

“உன்னோட வீட்ல எத்தனை நாள் இருக்க ஆசை படுற?”

 

“ஒரு மூணு நாள் இருப்போமா?” என்றாள் ஆவலாக.

 

அதை புரிந்து கொண்டவனுக்கு மறுக்கவே தோன்றவில்லை. “சரி. இருப்போம் ஆனா எனக்கு ரெஸ்டாரண்ட்ல வேலை இருக்கும் அம்ருதா. வேலை முடிச்சுட்டு நான் அங்க வந்துடுவேன். உனக்கு ஓகேதான?”

 

“ம்ம்ம்.. சரிங்க…” என்றவள்  அதனை தொடர்ந்து “சரி கிளம்பலாமா?” என்றதும் இருவரும் அங்கிருந்து எழுந்து கொண்டனர். ஆத்யாவோ அங்கிருக்கும் பொம்மையை கை நீட்டி “எனக்கு பொம்ம ஏனும் ” என்று கேட்டதும் அவள் கேட்ட பொம்மையை வாங்கி கொடுத்தவர்கள் திரும்ப வீட்டிற்கே சென்றனர்.

 

உள்ளே நுழையும்போதே காவேரியும், ஆறுமுகமும் பேசும் சத்தம் கேட்க, ஆத்யா தாவி குதித்து ஓடினாள். “வாங்க அத்த, வாங்க மாமா”என்றவன் அவர்களுடன் சேர்ந்து கொள்ள அவனை தொடர்ந்து அம்ருதாவும்  அவர்களை வரவேற்றாள்.

பார்த்திப்பனும், கீர்த்தனாவும் கூட அங்கே அமர்ந்திருக்க, ஆத்யாவின் கையில் இருக்கும் பொம்மையையும், அம்ருதா பூ வைத்து, நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து இருப்பதை பார்த்த அம்ருதாவின் பெற்றோர்களுக்கு மனம் நிறைவாக இருந்தது.

“அது.. வந்து.. மாப்ள உங்களையும் பொண்ணையும் மறுவீட்டுக்கு அழைக்கலாம்னு வந்தோம் என்றதும்,

 

“அம்ருதா சொல்லிருந்தா அத்த, நாங்க வரோம் ஆனா வேலை முடிச்சுட்டு ஈவினிங் வரட்டுமா? நீங்க வேணும்னா இப்போ அம்ருதாவையும் குழந்தையையும் உங்ககூட கூட்டிட்டு போங்களேன்.” என்றான்.

“இல்ல மாப்ள. முதல் முறையா வர போறீங்க. தனித் தனியா வந்தா நல்லாருக்காது. நீங்க வேலைய முடிச்சுட்டு அம்ருதாவையும், பாப்பாவையும் உங்க கூடவே கூட்டிட்டு வாங்க” என்றதும்

“சரி” என்றவன் சிறிது நேரம் அவர்களுடன் செலவழித்தான். பிறகு அவர்கள் இருவரும் கிளம்பி சென்றுவிட மூவரும் தங்களது அறைக்கு சென்றனர்.

 

“அம்ருதா நீ தேவையான எல்லாத்தையும் பேக் பண்ணி ரெடியா இரு. நான் வேலை முடிச்சுட்டு முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வந்துடுறேன். நாம சேர்ந்து கிளம்புவோம் பாய்..” என்றவன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு, அம்ருதாவின் நெற்றியிலும்  முத்தமிட்டுவிட்டு சட்டென அங்கிருந்து கிளம்பி சென்று விட்டான்.

 

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் நின்றவள் முகம் அடுத்த விநாடியே நாணத்தில் சிவக்க, தானாக புன்னகையித்து கொண்டாள்.
ஹர்ஷாவும் புன்னகை முகமாய் கீழிறங்கி வர இதை கண்ட பார்த்திபனுக்கும், கீர்த்தனாவுக்கும் கூட மனது நிறைவாக இருந்தது. ‘இவன் இப்படி சிரிப்பதை பார்த்தே எத்தனை காலம் ஆனது?’ என்று எண்ணியவர்கள் ‘கூடிய விரைவில் தன் மகன் பழைய படி மாறிவிடுவான்’ என்று திருப்தி பட்டு கொண்டனர்.

அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றவன் நேராக ரெஸ்டாரண்ட் செல்ல மனம் முழுவதும் மகிழ்ச்சியில் இருந்தவனுக்கு முகமும் பிரகாசமாய் இருந்தது. அதை கெடுப்பதர்க்காகவே அவனுக்காக காத்திருந்தாள் ஒருத்தி.

 

அவன் தனது அலுவலக அறைக்கதவை திறந்த நேரம் அங்கே அமர்ந்திருந்தாள் தாரிக்கா. அவனின் முன்னாள் மனைவி. பின்னிருந்து பார்க்கையிலேயே ‘அவளாக இருக்குமோ?’ என்று எண்ணியவன் முகம் குழப்பமும் கோபமுமாக வெளிப்பட, வேக எட்டுக்களை வைத்து முன்னேறியவன் கண் முன்பு இருந்தவளை காணக் காண கட்டுக்கடுங்காத கோபம் அவனை ஆட்கொண்டது.

அவள் இங்கு இருப்பாள் என சிறிதும் எதிர் பார்க்காதவன் முகமோ கோபத்தில் இறுகி போக,

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, நீ என்னோட ரெஸ்டாரண்ட்க்கே வருவ? அதுவும் என்னோட ஆஃபீஸ் ரூம்குள்ள நுழையுற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா? முதல்ல உன்னை யாரு உள்ள விட்டது? என்று அவன் கர்ஜனை போல கேட்க,

 

“வெயிட்.. வெயிட்.. வெயிட்… இப்போ ஏன் இவ்வளவு கோப படுற ஹர்ஷா? கூல்…” என்றவள் அவனை கிண்டலாக பார்த்து “உனக்கு நேத்து கல்யாணம் ஆகிடுச்சாமே! அதான் வாழ்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன். இது ஒரு தப்பா?” என்று சாதாரணமாக கேட்பது போல் அவள் கேட்க,

 

“வாயை மூடு டி. உன்மேல கொலை வெறில இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரம் என் கண் முன்னாடி நீ இருந்தாலும், உன்னை கழுத்தை நெறிச்சு கொன்னு போட்டுடுவேன். கெட் அவுட்..” என்று அவன் அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த,

 

முகத்தை சோகமாக, அழுவது போல் மாற்றிக் கொண்டவள் “உன்னாலதான் ஹர்ஷா என் வாழ்க்கையே அழிஞ்சு போய்டுச்சு, அதுக்கு நான்தான் உன்னை கொல்லனும். நீ  என்னவோ என்மேல இவ்வளவு கோபப்படுற? என்ன ஹர்ஷா பழசெல்லாம் மறந்து போய்டுச்சா?” என்றதும்

முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டவனை பார்த்து நக்கலாக, “என்கூட சேர்ந்தே உன்னால ஒரு குழந்தையை பெத்துக்க முடியல. உனக்கு இன்னொரு கல்யாணம் கேட்குதா?” என்று கேட்டுவிட,

“ஏய்…” என்று அவள் கழுத்தை இறுக பற்றியவன், இன்னும் எத்தனை நாளைக்குடி இப்படி சொல்லிக்கிட்டு திரிய போற? நீ சொன்னது எல்லாமே சுத்த பொய்ன்னு எனக்கு எப்போவோ தெரிஞ்சு போச்சுடி. எவ்வளவு கேவலமா நடிச்சிருக்க? என்றதும் அதிர்ந்து போனாள் தாரிக்கா.

“தப்பையெல்லாம் உன்மேல வச்சுக்கிட்டு அதை மறச்சது மட்டும் இல்லாம நீ என்மேலயே பொய்யான பழி சொல்லிருக்க? இவ்வளவும் பண்ணிட்டு, எவ்வளவு தைரியம் இருந்தா, இப்போகூட என்னை பார்க்க வந்திருப்ப? என்றதும், அதிர்ச்சியில் விழிகள் அகல விரிய,

‘இது எப்படி இவனுக்கு தெரிஞ்சுது? அதுக்கு வாய்ப்பே இல்லையே?’ என்று எண்ணியவள் மனதில் பயம் சூழ தொடங்கியது.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!