“என்னமா பேசுற நீ அது எப்படி யாரையும் காதலிக்காமல் வயிற்றில் பிள்ளையோட வந்து நிக்க முடியும். இவ யாரையோ காதலிக்கிறா அதனால தான் இப்படி எல்லாம் ஆகி இருக்கு” என்று நித்யா கோபமாக கூறவும்.
“நீ வேற ஏன் டி.. இப்போ எல்லாம் காதலிச்சவனோட மட்டும் இப்படி தப்பு பண்றது கிடையாது. வயசு கோளாறுல கூட இப்படி பண்ணுவாங்க.. நிஜமாவே யாரையாவது காதலிச்சிருந்தா இந்நேரம் வாயை திறந்து சொல்லி இருக்க மாட்ட இவனால தான் இப்படி ஆச்சுன்னு.. தெரியலன்னு சொல்றாளே இதுல இருந்தே தெரியலையா பெருசா தப்பு செஞ்சு மாட்டிக்கிட்டோமேனு இப்ப மறைக்க தெரியாம முழிக்கிறா” என்று நாக்கை ஈட்டி ஆக்கி வார்த்தைகளால் அவளை குத்தி கிழித்தார்.
என்ன தான் தன் மகளின் மேல் நாராயணனுக்கு கோபம் இருந்தாலும் இத்தகைய வார்த்தைகளை எல்லாம் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இங்கே நின்றால் இதற்கு மேலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழிவாக அவளை பற்றி பேசுவார்கள் என்ற எண்ணத்தோடு, “தயவு செஞ்சு வீட்டை விட்டு வெளியில் போயிடு” என்றார் அவளின் முகத்தை திரும்பியும் பாராமல்.
அவரின் வார்த்தையில் அதிர்ந்தவள் ஓடிப்போய் அவரின் கால்களை கட்டிக்கொண்டு, “இப்படி எல்லாம் சொல்லாதீங்க பா. உங்களை விட்டுட்டு நான் எங்க போவேன். எனக்கு யாரையும் தெரியாது” என்றாள் அழுகையினோடு.
நாராயணனுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. தன் மகளை இப்படி ஒரு நிலையில் காண்போம் என்று அவர் நினைத்தும் பார்த்ததில்லையே..
தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டார். அவரின் கண்களிலுமே கண்ணீர் வடிந்து கொண்டு தான் இருந்தது.
“அப்போ என்ன நடந்துச்சுன்னு உண்மைய சொல்லு.. ஒரு வேளை இந்த குழந்தைக்கு அப்பா ஒருத்தர் இல்லையோ” என்று வரம்பு மீறி பாக்யா பேசி விட.
நாராயணனுக்கு அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் ஆத்திரம் எழுந்தது. இனியாள் இப்படி ஒரு தவறை செய்யாமல் இருந்திருந்தால் இவர்களிடம் எல்லாம் பேச்சு வாங்கும் நிலை ஏற்பட்டு இருக்காதே.. அவள் செய்த பிழையினால் மற்றவர்கள் அனைவரும் எப்படியெல்லாம் தவறாக அவளை பற்றி பேசுகிறார்கள் என்று எண்ணும் பொழுதே அனைத்து கோபமும் அவருக்கு இனியாளின் மேல் தான் திரும்பியது.
“தயவு செஞ்சு நீ வீட்டை விட்டு வெளியே போயிடு. இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த குழந்தைக்கு அப்பா யாரோ அவன் கிட்டயே போயிடு. அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழு.. நாங்க யாரும் உன்னை தடுக்க மாட்டோம். ஆனால் திரும்ப எங்க முகத்தில் முழிச்சிடாத இங்கிருந்து போ” என்று அந்த வீடே அதிரும்படி கத்தினார்.
அவரின் எண்ணமோ எப்படியும் இவள் யாரையாவது காதலித்து தானே இப்படி ஒரு தவறு நடந்திருக்கும். அதை பற்றி எல்லாம் நம்மிடம் கூற பயப்படுகிறாள் என்று எண்ணியவர்.
மற்றவர்களின் அவதூறான வார்த்தையை கேட்க சற்றும் திறன் இல்லாமல் அவள் விருப்பப்படியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளட்டும் என்று இவ்வாறு கூறிவிட்டார்.
ஆனால் பாவம் அப்படி ஒரு காதலன் அவளுக்கு இல்லவே இல்லை என்ற உண்மையை அவருக்கு யார் எடுத்துரைப்பது.
அவசரத்திலும், கோபத்திலும், ஆத்திரத்திலும் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என்பதற்கு முன் உதாரணமாக திகழ்கிறார் நாராயணன் அவளின் புறமிருக்கும் நியாயத்தை கேட்டிருந்தாலே அவள் மேல் எந்த தவறும் இல்லை என்பது அங்கிருக்கும் அனைவருக்கும் விளங்கி இருக்கும். ஆனால் யாருமே அவளை பேசக்கூட விடவில்லை.
அவளின் கையை பிடித்து எழுப்பி நிற்க வைத்த முகிலன், “அதான் அப்பா சொல்றாங்க இல்ல.. வீட்டை விட்டு வெளியே போ யார் கூட சேர்ந்து இப்படி ஒரு தப்பை பண்ணியோ அவன்கிட்டயே போயிடு. இப்படி ஒரு அசிங்கத்தை வீட்டில் வச்சிக்கிட்டு எல்லார்கிட்டயும் பேச்சு வாங்க எங்களால முடியாது. எங்க வீட்டு பொண்ணு செத்துட்டான்னு நாங்க வெளியில் சொல்லிடுறோம். தயவு செஞ்சு திரும்ப இந்த பக்கம் வந்துடாத உன்ன பாக்கவே அருவருப்பா இருக்கு” என்று வார்த்தைகளை கண்ட மேனிக்கு கடித்து துப்பியவன், அவளை தர தரவென இழுத்துக் கொண்டு வந்து வாசலை தாண்டி நிற்க வைத்து கதவை அரைந்து சாற்றினான்.
இது நாள் வரை வீட்டையும், பள்ளியையும், கல்லூரியையும் தாண்டி அவள் எங்கேயும் சென்றது கிடையாது. சொந்த பந்தங்களின் வீட்டிற்கு கூட சென்று தங்கியது கிடையாது.
சிறு வயது முதலே தன் மகளை தன் கைக்குள்ளேயே பொத்தி வைத்து அப்படி பார்த்துக் கொண்டார் நாராயணன்.
இப்படி திடீரென ஒரு கோழிக்குஞ்சியை தன் கூட்டில் இருந்து வெளியே துரத்தி விட்டால் அது என்ன செய்யும்.. அப்படிப்பட்ட நிலை தான் இனியாளுக்கும்..
எங்கே செல்வது, யாரிடம் செல்வது என்று ஒன்றும் தெரியவில்லை. பயத்திற்கும் மேல் குற்ற உணர்ச்சி தான் பெரிதாக இருந்தது.
அதிலும், தன் தந்தைக்கு எத்தகைய துரோகத்தை செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியே அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருந்தது.
நிற்க முடியவில்லை.. கால்கள் தடதடவென உதறியது. தன் வாழ்க்கையில் இப்படி ஒரு நாள் வரும் என்பதை அவள் சற்றும் சிந்தித்தும் பார்த்தது கிடையாது.
இதனை எப்படி கையாள்வது என்றும் தெரியவில்லை. பைத்தியம் பிடித்தவள் போல் கால் போன போக்கில் கண்ணீர் வழிய நடக்க தொடங்கினாள்.
இனியாளை அவளின் தந்தையுடன் அனுப்பி வைத்த மதன் குழப்பத்தோடும், கலக்கத்தோடும் அவர்களின் வகுப்பறையை நோக்கி நடந்து கொண்டு இருந்தான்.
அப்பொழுது அவனின் செவி மடலை தீண்டியது ஆஷாவின் வார்த்தைகள்.
“ஏன் டி இப்படி எல்லாம் சொல்ற.. நீ சொல்றதை யாராவது கேட்டா என் நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு” என்று படபடத்தாள் ஆஷா.
“எனக்கு என்னமோ அப்படித்தான் இருக்கும்னு தோணுது ஆஷா. இல்லைனா இனியாள் மேல எந்த தப்பும் இல்லையே.. அவ யாரையும் லவ் பண்ணவும் இல்ல. அப்படி லவ் பண்ணி இருந்தா அவளே சொல்லி இருப்பாள்ல.. அன்னைக்கு டூர்ல நீ மட்டும் அவளுக்கு தூக்க மாத்திரையை கலக்கி கொடுக்காமல் இருந்திருந்தால் அவளுக்கு இப்படி எல்லாம் நடந்திருக்காம இருக்குமோ”.
சட்டென்று சாதனாவின் வாயை பொத்திய ஆஷா, “பைத்தியம் மாதிரி பேசாத அன்னைக்கு தான் அவளுக்கு தப்பா நடந்துச்சுன்னு உனக்கு எப்படி தெரியும்”.
“எனக்கு என்னமோ அதான் சந்தேகமா இருக்கு. இல்லனா, இனியாள் இப்படி தப்பு பண்ற பொண்ணா நீயே சொல்லு.. நீ கூட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன இல்ல அவ கேரக்டரை தப்பா பேச முடியாது நல்ல பொண்ணுனு.. எனக்கென்னமோ விஷயம் வெளிய தெரிஞ்சிடுமோனு பயமா இருக்குடி. தெரிஞ்சா நாம ரெண்டு பேரும் தானே மாட்டுவோம். நீயாவது மதன் சாருக்காக இப்படி எல்லாம் பண்ண.. ஆனா, நான் எந்த தப்புமே பண்ணாம தேவை இல்லாம மாட்ட போறேன்” என்று புலம்பி கொண்டு இருந்தாள்.
“நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கியா.. ஏதாவது பேசியே என்னை காட்டி கொடுத்திடாத” என்று அவளை திட்டிக் கொண்டே அந்த மறைவான இடத்தில் இருந்து வெளியே வந்த ஆஷாவும், சாதனாவும் மதன் இங்கே நிற்பான் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவனை கண்ட இருவரும் அதிர்ந்து போய் செய்வதறியாது நின்று இருந்தனர்.
அவர்களையே உறுத்து விழித்த மதன், “அப்போ இது எல்லாத்துக்கும் நீ தான் காரணமா?” என்றான் ஆஷாவை பார்த்து.
“இல்ல.. இல்ல சார்” என்று அவள் வேகமாக மறுக்கவும்.
“ச்சீ.. என்ன பொண்ணு நீ உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அசிங்கமா இல்ல. அவளும் உன் கூட படிக்கிறவ தானே அவளை இப்படி ஸ்பாயில் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு. அன்னைக்கு மட்டும் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இப்படி எல்லாம் நடக்கவே விட்டிருக்க மாட்டேன். உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. பணம் இருக்குன்ற திமிர்ல தான நீ இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க.. நீ என்ன செஞ்சாலும் கேட்க ஆள் இல்லைனு நினைச்சுட்டியா” என்று சரமாரியாக கத்த தொடங்கி விட்டான்.
“இல்ல.. இல்ல மதன் சார் நான் என்ன சொல்றேன்னு கொஞ்சம் பொறுமையா கேளுங்க”.
அன்றே ஆஷா தன்னிடம் கூறினாளே.. இனியாளுக்கு தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தாக.. அதை நாம் எப்படி மறந்தோம். ஒருவேளை, அன்று தான் ஏதாவது நடந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
சாதனாவை நோக்கி சொடக்கிட்டவன், “இப்போ அங்க அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு ஒன்னு விடாம நீ என்கிட்ட சொல்லணும். இல்ல, உன் மேல தான் சிவியரான ஆக்சன் எடுக்க சொல்லி நான் பிரின்ஸ்பல் கிட்ட சொல்லுவேன்” என்று மிரட்டலாகவே கூறினான்.
அவன் கூறியதை கேட்டு பயத்தில் நடுங்கிய சாதனாவும் அன்று நடந்த மொத்த சம்பவத்தையும் அப்படியே ஒப்பித்தாள்.
அவள் கூறுவதை கேட்க கேட்க மதனுக்கோ ஆத்திரம் தலைக்கேறியது. தன்னாலேயே தான் விரும்பும் பெண்ணிற்கு இப்படி ஒரு அநீதி நடந்திருக்கிறதா என்பதை எண்ண எண்ண அவனால் சற்றும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
அதிலும் இனியாளின் இத்தகைய நிலைக்கு தான் தான் காரணம் என்று எண்ணியவனின் மனமோ குற்ற உணர்ச்சியில் மருக தொடங்கியது.
“நான் அன்னைக்கு அவளுக்கு தூக்க மாத்திரை மட்டும் தான் கலந்து கொடுத்தேன். அதுவும் உங்களுக்கு ப்ரபோஸ் பண்றதுக்காக தான். நீங்க அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணிட கூடாது என்ற பயத்தினால் தான் அப்படி எல்லாம் செஞ்சேன். மத்தபடி அவளுக்கு இப்படி தப்பா நடக்கணும்னு எல்லாம் நான் எந்த பிளானும் பண்ணல. நிச்சயமா அன்னைக்கு அவளுக்கு எந்த தப்பும் நடந்திருக்காது” என்று தன்னிலை விளக்கம் அளித்தாள் ஆஷா.
“ச்சீ.. வாய மூடு.. பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ இப்படி எல்லாம் பேச உனக்கு கொஞ்சம் கூட நாக்கு கூசல.. பாவம் இனியாள், எந்த தப்பும் அவ பண்ணல. அவளை லவ் பண்ணது நான் தான். நீ பழி வாங்கணும்னா என்னை தான் ஏதாவது பண்ணி இருக்கணும். அதை விட்டுட்டு அவளுக்கு போய் இப்படி பண்ணி இருக்க..
நீ கொடுத்த தூக்க மாத்திரையை யூஸ் பண்ணதால தான் அன்னைக்கு நைட்டு என்ன நடந்துச்சுன்னு கூட அவளுக்கு நினைவு இல்ல. அப்போ யாராவது அவ கிட்ட தப்பா நடந்து இருந்தாலும் அவளுக்கு தெரிந்திருக்காது. உண்மையிலேயே அவ யாரையாவது காதலிச்சு இப்படி நடந்து இருந்தா அவ உடனே இதுக்கு யார் காரணம்னு எல்லார் முன்னாடியும் சொல்லி இருப்பா” என்று கூறியவனுக்கு அவள் பிரின்சிபால் ரூமில் யாரையும் எதிர் நோக்க முடியாமல் கூனி குறுகியபடி அமர்ந்து அழுது கொண்டிருந்ததே மனக்கண் முன்பு தோன்றி மறைந்தது. நினைக்க நினைக்க ஆஷாவின் மீது ஆத்திரமாக வந்தது.
இவள் மேல் கோபத்தை காட்டுவதற்கு முன்னதாக இனியாளை பார்த்தாக வேண்டும் என்று அவனுக்கு மனம் பரபரக்க. அவர்கள் இருவரையும் முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து உடனே கிளம்பி இனியாளின் வீட்டை நோக்கி புறப்பட்டான்.
அன்று நடந்த அனைத்தையும் அவளின் குடும்பத்தாரிடம் விவரித்து அவள் மேல் எந்த தவறும் இல்லை என்பதை கூறி அவளை தானே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுடன் தான் அவர்களின் வீட்டை நோக்கி பயணித்தான்.
யாரால் இனியாளிற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருந்தாலும் சரி அதற்கு முக்கிய காரணம் நான் தானே.. தன்னால் தானே அவளுக்கு இப்படி ஒரு விஷயம் நேர்ந்திருக்கிறது. இதை தானே சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.