உணர்வற்ற
உள்நெஞ்சின்
உருவம் கேட்டால்…
உயிர் மட்டுமே உனதாகும்!!!
சிறிது நேரம் தனித்து இருந்து விட்டு, ஷக்தியின் அறைக்கே சென்றாள் பிரகிருதி.
அலைபேசியில் கவனத்தைச் செலுத்தி இருந்தவன், அவள் வந்ததைக் கண்டதும், “ரொம்ப லேட் ஆகிடுச்சு ருதி. படுத்து தூங்கு” என பக்கத்து படுக்கையைக் கை காட்ட, அவனை முறைத்து விட்டு, சோஃபாவில் படுத்துக் கொண்டாள்.
அதில் ஆடவனின் முகம் சுருங்கிப் போனது. எதுவும் பேசாமல் உறங்கி விட்டான். பிரகிருதிக்கு ஏனென்று தெரியாமல் கண்ணீர் கண்ணில் நிறைந்து நின்றது.
மறுநாள் காலையில் உடற்பயிற்சியை வேகமாக முடித்த ஷக்தி, அவனாக காலை உணவைத் தயாரித்தான். குளித்து முடித்து சோர்ந்த முகத்துடன் அடுக்களைக்கு வந்த பிரகிருதி அவனை எதிர்பாராமல் திகைத்தாள்.
“இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க ஜாகிங் முடிச்சு?” அவள் கேட்க,
“உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன் ருதி. சாம்பார்க்கு உப்பு கரெக்ட்டா இருக்கான்னு பாக்குறியா?” என்றவன் தொடர்ந்து,
“எனக்கு பேசிக் சமையல் தான் தெரியும். உன்ன மாதிரி காய்கறி கூட்டு, சைட் டிஷ் எல்லாம் செய்ய தெரியாது. சாம்பார் யூ டியூப் பார்த்து வச்சேன். ரைஸ், ரைஸ் குக்கர்ல வச்சுட்டேன். லன்ச் பாக்ஸ்க்கு வேற ஏதாவது செய்யணுமா?” எனக் கேள்வியாய் வினவனின் செயல்களில் அவள் மீதான அக்கறை நிரம்பி வழிந்தது.
அதில் அவளது ஏமாற்ற உணர்வுகள் தானாக அழிக்கப்பட்டு விட, “உங்களுக்கு டைம் ஆச்சுல்ல. நீங்க போய் குளிச்சுட்டு வாங்க. மீதியை நான் பாத்துக்குறேன்” என்றாள் சின்னப் புன்னகையுடன்.
அவளது புன்னகையில் அவனது புருவ சுருக்கமும் மெல்ல விடுபட்டது.
“சரி நான் குளிக்கிறேன்” என உடனடியாக அறைக்குச் சென்று விட்டான்.
“சியூர்… உனக்குப் பரவாயில்லையா பெயின்” என்று மேலோட்டமாகக் கூட கேட்கவில்லை அவன். அது சின்னதாய் மனதினுள் உறுத்தினாலும், ஒதுக்கித்த தள்ள முயன்றவள் அவன் விட்ட வேலையைத் தொடர, அவனோ எப்போதும் விட வேகமாகக் கிளம்பி வந்தான்.
வந்தவன், விறுவிறுவென மாதுளையை உரித்து பழச்சாறு தயாரித்து, “இதைக் குடிச்சுடு ருதி” எனக் கொடுக்க, பரபரவென எரிந்து கொண்டிருந்த வயிறும் மனதும் ஜில்லென ஆனது போலொரு உணர்வு அவளுக்கு.
“தேங்க்ஸ் மகிழ்!” அவன் தயாரித்த பழச்சாறைக் குடித்தவளுக்கு கண்கள் பளிச்சென ஆனது.
பின் இருவரும் தத்தம் வேலைக்கு கிளம்பி விட, அன்றைய நாளே இருவரின் மனதிலும் சிறு நிறைவைக் கொடுத்தது.
அடுத்து வந்த நாள்கள் மெல்லிய தென்றலாய் கடந்தது.
மிட் – டே ஷோவாக பகல் நேரத்தில் நான்கு மணி நேரம் தொடர்ந்து அவளது நிகழ்ச்சி இருக்கும். சில நேரம் ப்ரி – ரெக்கார்டாகவும், சில நேரம் லைவ் ஷோவாகும் நிகழும். மாலை ஆறு மணி அளவில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலையெல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு வருபவள், சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, இரவு உணவைத் தயாரிப்பாள்.
முடிந்தவரை 7.30 மணிக்குள் ஷக்தி வீட்டை அடைந்து விடுவான்.
“நான் வந்ததும் டின்னர் செய்யலாமே ருதி. நானும் ஹெல்ப் பண்ணுவேன்ல…” இரவு உணவை உண்டபடி ஷக்தி கேட்க,
“அது பரவாயில்ல மகிழ். நான் செஞ்சுடுவேன்” என்றவளுக்கு, அவனும் வந்த பிறகு இரவு உணவு தயாரித்தால் உதவியாக இருக்கும் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்தது. அதுவும் போக, அவனிடம் பேசிக்கொண்டே வேலை செய்தால் இன்னும் புத்துணர்ச்சியாக இருக்குமென்பது அவளது சிறு ஆசை.
இப்போதெல்லாம் அவனிடம் பேச்சை வளர்ப்பது அவளுக்குப் பிடித்திருக்கிறது. அதனாலேயே அவன் வரும் முன் வேலைகளை முடித்து விடுவாள்.
அவனும் அவள் சொன்னதைக் கேட்டு விட்டு, “குட் ருதி” என்று பேச்சை முடித்து விட, ‘அடப்பாவி ஒரு கர்ட்டசிக்கு எதையும் செகண்ட் டைம் கேட்க மாட்டுறானே’ என்று புகைந்து கொண்டாள்.
அன்று வெள்ளிக்கிழமையாக இருக்க, பிரகிருதிக்கும் வேலை சீக்கிரம் முடிந்ததில், சட்டென ஒரு திட்டம் தோன்றியது.
ஷக்தி மகிழவனுக்கு சர்ப்ரைஸ் டின்னர் ரெடி செய்யலாம் என விரும்பியவள், பால்கனியிலேயே சிறு சிறு விளக்குகள் அமைத்து, மெழுகுவர்த்தியையும் எரிய விட்டிருந்தாள். வழக்கமாக செய்யும் உணவைத் தவிர்த்து, சப்பாத்தியும் சிக்கன் குருமாவும் செய்திருந்தாள்.
வீட்டிற்கு திரும்ப ஷக்தி மகிழவன் லேசாய் புருவம் நெறித்தான்.
“என்ன இது?”
“உங்களுக்காக தான். சர்ப்ரைஸ் டின்னர் பிளான். எப்படி இருக்கு டெக்கரேஷன்?” என ஆர்வமாய் வினவ, அவனோ உணர்வற்று “ஆனா, இது இன்னைக்கு டூ – டு லிஸ்ட்ல இல்லையே!” என்றதில் அவள் முகம் மாறி விட்டது.
“சர்ப்ரைஸ் எப்படி டூ – டு லிஸ்ட்ல இருக்கும்” குரல் தாழ்ந்து விட,
அவன் பதிலற்று அறைக்குள் சென்று விட்டான்.
அவனது உதாசீனம் அவளைக் கலங்க வைத்தது.
சிறிது நேரம், உணவு உண்ண வந்தான். ஆனால், எப்போதும் போல அவளிடம் பேசவில்லை. அமைதியாக இருந்தான்.
கோபத்தில் இருக்கிறானோ என அவனது முகத்தை அவசரமாக அனுமானித்தவளுக்கு எதையும் புரிந்து கொள்ள இயலவில்லை.
“பிடிக்கலையா டின்னர்?”
இரு சப்பாத்திகளை உண்டு முடித்து எழுந்தவனிடம் கேட்டாள் பிரகிருதி.
சில நொடிகள் அமைதி விட்டு, “மே பி!” என்று விட்டுச் சென்றதில், பொலபொலவென கண்ணீர் கொட்டியது அவளுக்கு.
அவளால் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் அவளைப் போலவே தலைவனின் புறக்கணிப்பில் உருகிக் கரைந்தது.
மறுநாள் இரவு வீட்டிற்கு வரும்போதே ஷக்தி மகிழவனின் முகம் பிரகாசமாக இருந்தது.
“ஹாய் ருதி…” என்றவனின் முகம் பாராது “ஹாய்” என்று விட்டு, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் புதைந்தாள் பிரகிருதி.
“உனக்கு ஒன்னு வாங்குனேன். பாக்குறியா?” என ஒரு பரிசுப்பொருளை நீட்டினான்.
நெற்றி சுருங்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஆடவனின் இதழ்களில் தாங்கிய மென்புன்னகையில் தன்னை மறைந்தே போனாள்.
“என்ன இது கிஃப்ட்டா?” விழி அகல அவள் கேட்க,
“ம்ம்” எனக் கண்ணிலேயே தனது அன்பைத் தெரிவித்தவன், “பிரிச்சுப் பாரு ருதி” என்றான்.
கைகள் நடுங்க பளபளவென ராப் செய்யப்பட்டிருந்த பரிசுப்பொருளை வாங்கியவள், அதனைப் பிரித்துப் பார்த்தாள்.
உள்ளே, வெள்ளையும் சிவப்பும் கலந்த கல் பதித்து மினுமினுத்த பேன்சி தங்கத் தோடு மின்னியது.
கண்ணிமைக்காது அதனைப் பார்த்தவளிடம், “கிஃப்ட் ஓகே வா ருதி? ஓகேன்னா போட்டுக்கோயேன். ரெகுலர் யூஸ்க்கு உன் ட்ரெஸிங்கு செட் ஆகும்…” என்றான் ஆர்வம் மிகுந்த குரலில்.
அதனை நிதானமாய் ஏறிட்டவள், பாக்ஸை மூடி வைத்து விட்டு, ரெடிமேடாக ஒரு புன்னகை பூத்தாள்.
“நைஸ் மகிழ். மண்டே ஸ்டூடியோக்கு போகும்போது போட்டுக்குறேன்…” என்றவள் அதனை அலமாரியில் வைத்து விட, ஷக்தியின் முகம் பொலிவிழந்தது.
“அப்செட்டா இருக்கியா ருதி?” தனது கூர்பார்வையை அவள் மீது செலுத்திக் கேட்க, அவளோ “இல்லையே மகிழ்” எனப் புன்னகைத்துக் கொண்டாள் போலியாக.
அந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் செல்லும் எண்ணம் இருவருக்கும் இல்லை. வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய நிலையிருக்க, தத்தம் பணிகளிலேயே விடுமுறையைக் கழித்தனர்.
திங்கள்கிழமை காலையில் ஷக்தி ஆசையாகக் கொடுத்த தோடை அணிந்து கொண்டாள் பிரகிருதி.
அதனைப் பார்த்த ஷக்திக்கு ரசனை மின்னியது.
அமைதியாய் அழுத்தமாய் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளும் கவனித்து இருக்க கூடும்.
இன்று அவனது ரசனையை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவளுக்கு இல்லை.
“யூ மேக் மீ காம் ருதி” வார்த்தைகளில் நேசம் வழிந்தோடியது அவனுக்கு.
ஒரு கணம் அவளது விழிகள் மின்னி மறைந்தாலும், சில உருவம் கொடுக்க இயலாத வார்த்தைகளால் நலிந்தவள், கலங்கிய கண்ணைக் கட்டுப்படுத்திக்கொண்டு “தேங்க்ஸ் மகிழ்” என்றவள் வேலைக்கு கிளம்பிச் சென்று விட்டாள்.
அன்றென பார்த்து, ரெக்கார்டாட் செக்ஷனில் சிறு பிழை நேர்ந்து விட, லைவ் ரெக்கார்டிங்கிலும் சொதப்பி போஸ்ட் ப்ரொடக்ஷன் எட்டு மணி வரை நீடித்து விட்டது.
தாமதமாகும் எனத் தெரிந்ததால் ஷக்திக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டாள்.
“நான் பிக்கப் பண்ணட்டா ருதி?” அவனது கேள்விக்கு, அவளால் பதில் கூற இயலவில்லை.
அவனைப் பார்க்க வேண்டும் போலவும் இருந்தது, இப்போதிருக்கும் மனநிலையில் பார்க்க வேண்டாமென்றும் தோன்றியது.
“வேணாம் மகிழ்” அரை மனதுடன் மறுத்திருக்க, “ஓகே ருதி. நான் வீட்ல டின்னர் ரெடி பண்ணி வைக்கிறேன் நீ வா…” என்று பேச்சை முடித்துக் கொண்டான்.
அவனிடம் சிறு சிறு விஷயங்களையும் எதிர்பார்த்து ஏமாந்து போகும் பாவைக்கு, இதயம் வெடிக்க துடித்தது.
வேலையை முடித்து மேலிடத்தில் திட்டும் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தவளுக்கு அழுத்தம் தலைக்கேறி இருந்தது.
இதில், வீட்டினுள் நுழைந்ததும் அதிக மசாலா கலக்கப்பட்ட பிரியாணி வாசம் வேறு குடலைப் பிரட்டியது. அதில் இருந்து தப்பித்து “ஹாய்” கூறிய ஷக்தியைத் தவிர்த்து அறைக்குள் சென்றாள்.
அங்கோ அவளுக்குப் பிடிக்காத ஒவ்வாத பெர்ஃபியூம் ஸ்மெல். ட்ரம்ஸ் இசை கொண்ட பாடல் வேறு பின்னால் ஒலித்துக் கொண்டிருந்தது. அதுவேறு தலையிலேயே நங்கு நங்கென்று அடிப்பது போல அவளைக் கடுப்பேற்றியது.
விறுவிறுவென வெளியில் வந்தவள், “என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” எனக் கேட்கும் போதே அழுகை வந்துவிட,
“உனக்காக பிரியாணி பண்ணிட்டு இருந்தேன் ருதி. என்ன ஆச்சு…” என அவன் அருகில் வர, விருட்டென பின்னால் நகர்ந்தவள், “உங்களைக் கேட்டானா நான் பிரியாணி…” என்று விட்டு காதில் அணிந்திருந்த தோடை முதல் வேலையாக கழற்றினாள்.
“அது உனக்கு கம்ஃபர்ட்டபிளா இல்லையா ருதி?” ஏமாற்றம் நெஞ்சை நிறைக்க கேட்டான் ஆடவன்.
“எனக்கு நீங்களே கம்ஃபர்ட்டபிளா இல்ல… உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு தான எனக்குப் பிடிக்காத எல்லாம் செய்றீங்க. எனக்குத் தெரியும். உனக்கு என்னை பிடிக்கல” எனக் கேவி கேவி அழத் தொடங்கினாள்.
அவனோ அசையாமல், “ஏதேதோ உளறாத. நீ என் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்க ருதி. அதனால தான இதெல்லாம் செய்றேன்…” எனத் தன்னைப் புரிய வைக்க முயன்று அவள் கையைப் பிடிக்க வர அவள் மீண்டும் பின்னால் விலகினாள்.
“நீங்களும் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கீங்க. அதனால தான் உங்ககிட்ட ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி ஏமாந்து போறேன். நான் இதுவரை யார்கிட்டயும் எதுவும் எதிர்பார்த்தது இல்லை தெரியுமா. எதிர்பார்த்தாலும் கிடைக்காது… ஆனா உங்ககிட்ட இருந்து கிடைக்கலன்னும் போது எனக்குப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு” எனத் தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து விட்டவளின் அருகில் தானும் அமர்ந்தான்.
“ருதி ப்ளீஸ்… எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. நான் உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்னு புரியுது. ஆனா ஏன் எப்படின்னு புரியல ருதி…” தவிப்பாக கேட்டவனிடம்,
“புரியலையா? எல்லா நேரமும் என்னை நீங்க அவாய்ட் தான் பண்றீங்க. ஹர்ட் பண்ணிட்டு அப்பறம் எதுவும் தெரியாத மாதிரி நடந்துக்குறீங்க. அன்னைக்கு சர்ப்ரைஸா டின்னர் பிளான் பண்ணுனா நீங்க ரியாக்ட் பண்ணவே இல்ல. என் மனசுல என்ன இருக்குன்னு நான் வாயில சொன்னா தான் உங்களுக்கு புரியுமா? நான் பேசுறதுல எது பிடிச்சு பேசுறேன் எது பிடிக்காம பேசுறேன்னு புரியவே புரியாதா உங்களுக்கு…?” என்றவளின் எதிர்பார்ப்பில் அவன் முகம் இறுகிப்போனது.
“புரியாது ருதி!” மெல்ல அவன் கூற, “ஹான்?” எனக் கண்ணை சுருக்கினாள்.
“எனக்குப் புரியாது. நீ சொல்றதை வச்சு மட்டும் தான் உன்னை நான் புரிஞ்சுக்க முடியும். உன் முகத்தைப் பார்த்து உன் மனசை ரீட் பண்ண ட்ரை பண்றேன். என்னால முடியல ருதி. ஐ காண்ட்! நீ சொல்லு… நீ நீ… நான் எப்படி ரியாக்ட் பண்ணனும்னு சொல்லு. பண்றேன்” என்றான் பரிதவிப்புடன்.
அவளோ இன்னுமே புரியாமல் அவனைப் பார்த்து வைத்தாள்.
“நான் அழுதா அழாதன்னு என் கையைப் பிடிச்சு சமாதானம் செய்யக் கூட நான் தான் சொல்லனுமா?” ஆதங்கத்துடன் அவள் கேட்க, ஷக்தி பட்டென அவள் கையைப் பிடித்து விட்டான்.
திருதிருவென விழித்தவளிடம், “அவ்ளோ தான… அழாத ருதி. நான் கையைப் பிடிச்சா உனக்கு இந்த டியர்ஸ் நின்னுடுமா. எனக்கு எனக்குத் தெரியல. தெரிஞ்சுருந்தா நான் பிடிச்சுருப்பேன் ருதி” என்றவனைத் திகைத்துப் பார்த்தாள்.
அவளது குழப்பத்தை ஓரளவு ஊடுருவ முடிந்தது அவனால்.
அதில் கண்ணை மூடித் திறந்து, “உனக்கு என்னைப் பத்தி எதுவுமே சொல்லலையா என் வீட்ல?” எனக் கேள்வியாய் வினவ, அவளின் தலை தானாக அசைந்தது.
“நான் சொல்ல சொன்னேன். இட்ஸ் மை மிஸ்டேக்…” என்றவன் சிறு இடைவெளி விட்டு,
“எனக்கு அலெக்ஸிதைமியா. இது ஒரு வகையான ஆட்டிசம் மாதிரி. என்னால எல்லாமே ஃபீல் பண்ண முடியும். ஆனா என்ன ஃபீலிங்னு அதை வார்த்தையா சொல்ல முடியாது. கன்ஃபியூஸ் ஆகிடுவேன். நீ உன் முகத்துல காட்டுற மாதிரி ரியாக்ஷன்ஸ், சாட், ஃபீல் குட் இதெல்லாம் பிரிச்சு பார்த்து என்னால ரியாக்ட் பண்ண முடியாது ருதி. என்னையவே என்னால புரிஞ்சுக்க முடியாதுங்கும் போது, உன் மனசுல இருக்கறதை என்னால எப்படி புரிஞ்சுக்க முடியும். ஆனா, நீ என் பக்கத்துல இருக்கும்போது நான் ஃபீல் பண்ற லைட் ஃபீல என் லைஃப்ல நான் எப்பவும் ஃபீல் பண்ணது இல்ல. என்னால வார்த்தையா சொல்ல முடியாது அவ்ளோ தான். மத்த படி, ஐ கேன் ஃபீல் யூ. என் மனசுக்குள்ள, உன்னை… உன்னை ரொம்ப ஆழமா ஃபீல் பண்ணிட்டே இருப்பேன் ருதி.” பிடித்திருந்த அவளது மென்கரத்தை விடாமல், கண்களின் வழியே தனது வலியையும் காதல் உணர்வையும் வெளிப்படுத்தியவனை திக்பிரம்மை பிடித்தது போல கண்ணிமைக்காது பார்த்தாள் பிரகிருதி.