கருடா 21
“மாமா…”
மனைவியின் கைப்பிடித்துக் கதை பேசிக் கொண்டிருந்த பொன்வண்ணன், மருமகனின் குரல் கேட்டுத் திரும்ப, “இன்ஸ்டிடியூட்ல கொஞ்சம் சேஞ்சஸ் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?” அவர் எண்ணத்தைக் கேட்டான்.
“அதை உன்கிட்ட முழுசா ஒப்படைச்சு ரொம்ப நாள் ஆகுதுப்பா. இனி அது முழுக்க முழுக்க உன் சம்பந்தப்பட்டது. எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் நீ தான் எடுக்கணும்.”
“இருந்தாலும்…” என அவன் இழுக்க,
“நான்தான் அன்னைக்கே சொல்லிட்டேனே… ஒருவேளை, நீ என் பொண்ணைப் பிரிஞ்சால் கூட அதை நீ தான் நிர்வாகம் பண்ணனும்னு.” என்றவரின் முகத்தைத்தான் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன்.
மென்மையாகப் புன்னகைத்த ரிதுவின் தந்தை, “அவ்ளோ பெரிய நிர்வாகம் கைக்குக் கிடைச்சும், இன்னும் ஆட்டோ ஓட்டிட்டு இருக்க. உன்ன மாதிரி ஒருத்தன் எடுக்கிற முடிவு தப்பாகாது. சங்கடமில்லாமல் செய்ய வேண்டியதைச் செய்.” என்றார்.
மௌனமாகத் தலையசைத்துத் திரும்பினான். கை இரண்டையும் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள் அவன் மனைவி. என்னவென்று புருவம் உயர்த்தியவனுக்குத் தோள்களைக் குலுக்கி ‘ஒன்றும் இல்லை’ என்றாள்.
“ஸ்கூல் சவாரிக்கு தான் போறேன், வரியா…” கேட்டான்.
அதற்குத்தான் தயாராகி வந்து நிற்கிறேன் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், அவனுக்காகத் தலையாட்டுவது போல் தலையாட்டினாள். கருடேந்திரன் கையில் ஆட்டோ கிடைத்த நாள் முதல் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. முழு நேரமும் ஆட்டோ ஓட்டவில்லை என்றாலும், அவனை நம்பிக் காத்திருந்த மூன்று சவாரிகளை மட்டும் ஓட்டிக் கொண்டிருக்கிறான். காலையில் பள்ளிச் சவாரியும், வங்கியில் வேலை பார்ப்பவரின் சவாரியும் முடித்துவிட்டு, நேராக ராதா இன்ஸ்டிடியூட்டுக்குச் செல்பவன், மாலை அந்த ஊனமுற்றவரின் சவாரியை முடித்து வீடு வருகிறான்.
“என்ன பண்ணப் போற?”
“சரியா கிளாஸ் எடுக்காத ப்ரொபசர்ஸ் எல்லாரையும் மாத்தப் போறேன்.”
“இது இன்ஸ்டிடியூட்டுக்காக எடுத்த முடிவு மாதிரித் தெரியலையே.” என்றவளைத் திரும்பிப் பார்க்க, “அன்னைக்கு உன்னை அசிங்கப்படுத்தின புரபசர்ஸைப் பழி வாங்கறதுக்காக எடுத்த மாதிரி இருக்கு.” என்று கண்ணடித்தாள்.
“அதுக்கெல்லாம் எங்கம்மா நேரம் இருக்கு? ஆல்ரெடி ஒருத்தியைப் பழி வாங்க வந்துட்டு, நேத்து ராத்திரி எல்லாம் பாதத்தை அமுக்கி விட்டுட்டு இருந்தேன். இதுல இவங்களைப் பழி வாங்கி என்னத்தைச் சாதிக்கப் போறேன்.”
சத்தமிட்டவளின் கூச்சல் தாங்காது அந்த மூன்று சக்கர வாகனம் அலறியது. ஓட்டிக் கொண்டிருந்தவன், “ஆத்தா, வண்டி தாங்காது!” கேலி செய்ய, “கன்னியப்பனை வாங்கிட்டோம்னு நக்கல்ல பேசுறியா, இப்ப நான் நினைச்சா கூடத் தூக்கிடுவேன்.” கண்களைச் சுருக்கி முறைத்தாள்.
அவளைப் போல் ஆட்டோ அலறச் சிரித்தவன், “முதல்ல தூக்குறதா சொன்ன என்னைத் தூக்குங்க முதலாளி. ரெண்டு நாளா ஏமாத்திட்டு இருக்கீங்க.” என்றான்.
“மாடு மாதிரி இருக்க…”
“ஹா ஹா… மத்த வியாக்கியானம் எல்லாம் சலிக்காமல் பேசுற, ஒரு ஆம்பளையத் தூக்க வக்கில்லை, த்தூ…”
பின்னால் அமர்ந்திருந்தவள் அவன் கழுத்தோடு கையைச் சுற்றி இறுக்கி, “சாவடிச்சிடுவேன் டா.” என்க, “போடி களவாணி!” என்ற ரகளையோடு அவர்களின் பயணம் தொடங்கியது.
***
“எங்கப்பா இருக்க?” என்றவள் குரலில் இருக்கும் பதற்றத்தை உணர்ந்து,
“பயப்படாத ரிது, அத்தைய நான் பார்த்துக்குறேன்.” என்றான்.
“அப்பா போன் பண்ணதும் என்ன பண்றதுன்னே தெரியலப்பா. இப்பன்னு பார்த்து ஈஸியார் வரைக்கும் வந்துட்டேன். பயப்படுற மாதிரி எதுவும் இருக்காதுல்ல.”
“நான்தான் சொல்றேன்ல, பயப்படாதுன்னு. இந்நேரம், டாக்டர் வீட்டுக்குப் போய் இருப்பாங்க. நானும் வீட்டுக்குத்தான் போயிட்டு இருக்கேன். டென்ஷன் ஆகாம ஆக வேண்டியதைப் பாரு. என்ன ஏதுன்னு பார்த்துட்டுச் சொல்றேன்.”
“என்னப்பா நீ, அம்மாக்கு உடம்பு முடியலன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் எப்படி நிம்மதியா வேலை பார்க்க முடியும்? காலையில பார்க்கும்போது நல்லாத்தான் இருந்தாங்க. திடீர்னு என்னாச்சுன்னு தெரியல. இதோட ரெண்டாவது டைம், இந்த மாதிரி.”
“ஒரு நிமிஷம் இரு.” என அவள் பேச்சை நிறுத்தியவன்,
“இப்ப நீ பதற்றப்பட்டா மட்டும் எல்லாம் சரியாயிடுமா? அத்தையைப் பார்த்துக்க இங்க ரெண்டு பேர் இருக்கோம். அங்க உன்னைப் பார்த்துக்க யார் இருக்கா? இப்போ உனக்கும் உடம்பு முடியாமல் போயிட்டா நான்தான் ஓடி வரணும். கடைசில மாமா தான் கஷ்டப்படுவாரு.” என்றவன் பேச்சைப் புரிந்து கொள்ளாது ஏதேதோ உளறிக் கொண்டிருந்தாள்.
அன்னையின் மீதுள்ள பாசத்தில் பேசியதையே திரும்பத் திரும்பப் பேசினாள்.
அவள் மனநிலை புரிந்து அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் வீட்டிற்கே வந்து விட்டான். அதைச் சொல்லியும் கூடப் புலம்பலை நிறுத்தாதவள், “ஐ லவ் யூ…” என்ற வார்த்தையில் சிலையானாள்.
பேச்சு வராததை உணர்ந்து சத்தம் வராமல் சிரித்தவன், “நான் இருக்கும் போது அத்தைக்கு என்ன ஆகிடப் போகுது? இப்ப என்னோட கவலை எல்லாம் உன்னப் பத்தி தான். இவ்ளோ டென்ஷனா ட்ராவல் பண்ணி வந்தினா, என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது. எனக்காகக் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு ரிது…” என்ற வார்த்தையில் கண் கலங்கினாள்.
இது போன்ற ஆறுதலான வார்த்தைகளைக் கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. அதுவும், அன்னையின் பாசத்தைக் காண முடியாது ஏங்கி இருக்கிறாள். அப்படியானவளுக்கு, கருடேந்திரன் அன்னை ஆனான். அவன் பார்த்துக் கொள்வான் என்ற அதீத நம்பிக்கையில் மனம் லேசானது.
கருடேந்திரன் மீது வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை. கட்டியவளின் அன்னையைப் பாசத்தோடு கவனித்தவன், மாமனாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு மனைவியை அழைத்து விபரத்தைக் கூறினான். அதன்பின் தான் முழு நிம்மதி வந்தது ரிதுசதிகாவிற்கு.
தன்னவனுக்கு மனதார, “தேங்க்ஸ் பா” என்றுரைக்க,
“நீ இப்படிக் கூப்பிடுறது ரொம்பப் பிடிச்சிருக்கு.” என்றான்.
“எப்படி?”
“பா…”
“உண்மையா பிடிச்சிருக்காப்பா?”
“ரொம்பம்மா…”
“எனக்கும் பிடிச்சிருக்கு!”
“மா வா…”
“இல்ல, உன்ன…” என்றதும் ரிதுவின் கணவனை வெட்கம் சூழ்ந்து கொண்டது.
***
வீட்டிற்கு ஓடோடி வந்தவள், ராதாவிடம் தன் அன்பு அனைத்தையும் கொட்டிவிட்டு அமைதியாக அமர்ந்திருக்கிறாள். உடன்பிறப்புகளோடு பேசிக் கொண்டிருந்தான் கருடேந்திரன். அவனிடம் பேச வந்தவள், அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பைக் கண்டு வந்த வழியே திரும்பி விட்டாள்.
பிள்ளைகள் இருவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த சரளா, மகன் வார்த்தைகளை ரகசியமாக ஒட்டுக் கேட்க, “இங்க ஒருத்தவங்க, நீ பேசுறதை, கேட்டும் கேட்காத மாதிரியும் உட்கார்ந்து இருக்காங்க.” என்றான் மூர்த்தி.
“தயவுசெஞ்சு அவங்களை அப்படியே உட்கார்ந்து இருக்கச் சொல்லுடா. என்னமோ ஊர் உலகத்துல அவங்களுக்கு மட்டும் தான் மருமகள் கிடைச்சிருக்க மாதிரி, புள்ளையப் பொசுக்குன்னு தூக்கிப் போட்டுட்டாங்க. அவ கூட என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டா. ஆனா, உங்க அம்மா இருக்காங்க பாரு, அந்த வீட்டு எஜமானி சரளா…” என்றதும் கேட்டுக் கொண்டிருந்தவர் முறைக்க, அவர் நிலையைப் பார்த்த மற்ற மூவரும் சிரித்தார்கள்.
“என்னமோ, பார்க்கக் கூடாதவனைப் பார்த்த மாதிரி மூஞ்சத் திருப்பிக்கிட்டுப் போறாங்க. அதுவும் அந்தச் சக்கரைப் பொங்கல மருமகள் கையில மட்டும் கொடுத்துட்டுப் போறாங்க. அவ என்னடான்னா, எனக்காகக் கொடுத்தாங்கன்னு சொல்லி என் முன்னாடியே வழிச்சி நக்குறா… உங்க அம்மாகிட்டச் சொல்லுடா மூர்த்தி…” என்றதும்,
“என்னன்னு அண்ணா?” என ஆர்வமாகக் கேட்டாள் நதியா.
“அவங்க கிட்டயும், அவங்க என்ன பண்ணாலும் வேடிக்கை பார்க்குற அவங்க புருஷன் கிட்டயும், என்னைக்கும் நான் பேச மாட்டேன். நேத்து வந்தவளுக்காகப் பெத்த பிள்ளையப் பகைச்சிக்கிட்டாங்க.” என்றான்.
பெற்றோர்கள் இருவரும் தங்களுக்குள் பார்த்துக் கொள்ள, உடன்பிறப்புகள் இருவரும் சத்தமிட்டுச் சிரித்தனர். அவர்கள் சிரிப்பில் உற்சாகம் கொண்டவன் இன்னும் கேலி செய்ய, “பேச மாட்டேன்னு சொல்லிட்டு, எதுக்குடா எங்களைப் பத்திப் பேசுறான்? முதல்ல போன வைக்கச் சொல்லுடா…” சிடுசிடுத்தார் சரளா.
“அவங்களைப் பத்திப் பேசணும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்லை. பார்க்கலாம். இந்த மூத்த பிள்ளை இல்லாம எத்தனை நாள் சந்தோஷமா இருக்காங்கன்னு. அடுத்த வாரம் அவங்க பிறந்தநாள் வருது. அன்னைக்குத் தெரியும் கருடேந்திரன் யாருன்னு.”
“ஒன்னும் தெரிய வேணாம், போனை வைடா” என அழைப்பைத் துண்டித்தவர் சிரிக்கும் பிள்ளைகளை விரட்டினார்.
எப்போதும், அன்னையின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடுவான் மூத்த பிள்ளை. அவர்களுக்கு அந்த நாள் ஒரு திருவிழா தான். பிறந்த நாளுக்குள், மருமகளோடு மகனும் வந்துவிட வேண்டும் என்ற பிரார்த்தனை தான் இப்போது அவருக்கு.
குடும்பத்தாரிடம் பேசியதில் மகிழ்வாக இருந்தவன், பால்கனிப் பக்கம் வந்தான். நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்கும் மனைவியைக் கண்டு புருவம் சுருக்கியவன், “தூறல் போடுற மாதிரி இருக்கு. எதுக்காக உட்கார்ந்துட்டு இருக்க?” கேட்க, “சும்மாதான்!” என்றாள்.
குரலில் இருக்கும் மாற்றத்தை உணர்ந்தவன் அங்குச் சென்றான். அவன் வந்ததைக் கூட உணராது, நிலா இல்லாத அமாவாசை இருட்டை ரசித்துக் கொண்டிருந்தாள். கால் நனைக்க, நீச்சல் குளப் படிக்கட்டின் மூன்றாவது கல்லில் அமர்ந்திருந்தவளைச் சேர்த்தணைத்துக் கொண்டு, இரண்டாவது கல் மீது அமர்ந்தான் கருடேந்திரன்.
கட்டியவன் அணைத்ததில், கவனத்தை அவன் புறம் திருப்பியவள் உணர்வே இல்லாத சிரிப்பை வெளிக்காட்ட, அவள் கழுத்தோடு முகம் புதைத்தவன், “முதலாளிக்கு என்ன யோசனை?” கேட்டான்.
மறுப்பாகத் தலையசைத்தவளின், காதோரம் முத்தமிட்டுப் பற்களால் மெல்லக் கடித்து இழுக்க, “ப்ச்!” தட்டி விட்டாள்.
“ரொம்பத்தான்!”
“ரொமான்ஸ் பண்ற மூடுல நான் இல்ல.”
“நான் கூடத்தான் இல்ல. இப்படி உன் பக்கத்துல உட்கார்ந்ததும் தன்னால பண்ண வரல…”
“உனக்கு என்னப்பா, நீ பைத்தியம்!” என்றதும் அவள் முகத்தைத் திருப்பினான். கன்னங்களை ஒரு கையால் இழுத்துப் பிடித்து, “கடிச்சுக் கொதறிடுவேன்.” எனக் கடிப்பது போல் நெருங்க, ஏற்கெனவே செய்தவன் என்பதால் சுதாரித்து அவன் முகத்தைத் தள்ளி விட்டாள்.
விடாத கருடன், அவளை மெல்ல உயர்த்தித் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு, கால்கள் நான்கையும் நீரில் முழ்க விட்டு, “அத்தைய நினைச்சா?” கேட்க, “ம்ம்” என்றாள்.
“அதான் ஒன்னும் இல்லன்னு டாக்டரே சொல்லிட்டாங்களே, அப்புறம் எதுக்குடி…”
“பயமா இருக்கு!”
“உன்ன விட்டுப் போகணும்னா, எப்பவோ போயிருப்பாங்க அத்தை. அந்த உயிரைப் பிடிச்சு வச்சிருக்கறது உனக்காக மட்டும் தான். உடம்பு சரியாகி, உன்னை ஆசை தீரக் கொஞ்சற வரைக்கும் அவங்களுக்கு எதுவும் நடக்காது. நடக்காதுன்னு முதல்ல நீ நம்பனும். உன்னோட நம்பிக்கை தான் அவங்களைக் காப்பாத்தும்.” என்றவனைக் கட்டிக் கொண்டாள்.
மழைச்சாரல் லேசாகத் தூற ஆரம்பித்தது. இருவர் மேனியிலும் தங்கள் வரவை உணர்த்த மழை போராட, சுயநினைவு இருந்தால் தானே விலகி ஓடுவார்கள். கதகதப்பான அணைப்பில் தங்களை மறந்து போனார்கள். நீச்சல் குளத்தில் நிரம்பி இருந்த நீரில், கால்களைப் பாம்பு போல் பிணைத்துக் கொண்டனர். சிகப்பு நிற நகப்பூச்சில் மின்னிக் கொண்டிருந்த கால் விரல்களுக்கு நடுவில், தன் கால் விரல்களை நுழைத்தவன் மெதுவாக இறுக்க, அவனுக்குள் அடங்கிப் போனாள் ரிதுசதிகா.
தூறல் சற்று அதிகரித்தது. ஈரமான கால்களுக்குப் போட்டியாக உடலும் நனைய ஆரம்பித்தது. கழுத்து வளைவுக்குள் புதைத்து வைத்திருந்த முகத்தை எடுக்க மனமின்றி ஊர்வலம் நடத்தத் துவங்கியவனால், எவ்வளவு முயன்றும் நிறுத்த முடியவில்லை. கழுத்து வளைவுகள் போதாது என்று நெஞ்சுக் குழிக்குள் உறவாட முயன்றான். ஆடையும், அவளின் நாணமும் அதற்குத் தடை போட, இடைக்குள் கை நுழைத்து நாணத்திற்குத் தடை போட்டான்.
மீதம் இருப்பது அவள் மேனியில் இருக்கும் ஆடை மட்டுமே. அதிகம் ஆண்கள் உடுத்தும் ஆடையைப் போட்டே பழக்கப்பட்டவள், அவனுக்கு வசதியாக அமையும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டாள். கழுத்துக்குக் கீழ் இருக்கும் பட்டனில் கைப்பட்டதும், மின்சாரம் பாய்ந்தது போல் அவன் கை மீது கை வைத்துத் தடுக்க, கேட்கும் ரகமா அவன் தாகம்!
அவளையும் தாண்டி, இரண்டு மூன்று என்று அவனுக்கு வசதியாக எடுத்து விட்டவன், சுகமாகப் பயணிக்கத் தன்மேல் லாவகமாகச் சாய்த்துக் கொண்டான். மூச்சுக் காற்றும், அடர்ந்த மீசையும் நெஞ்சுக் குழிக்குள் இஷ்டத்திற்கு ஊர்வலம் செல்ல, தேவதை அவள்தான் அணைத்துப் பிடிக்க ஆதரவு இன்றித் தடுமாறிப் போனாள். தன் மோகத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் நடுங்கும் அவள் தேகத்தைச் சேர்த்துப் பிடித்தவன், படகும் அவனானான்… துடுப்பும் அவனானான்.
மேகத்திற்குள் ஒளிந்திருந்த நிலவு, பொறுத்தது போதும் என்று அவன் துணைக்குக் கை கோர்க்க, மழைதான் வெட்கத்தில் முகம் சிவந்தது. அடிக்கடி இதழ்கள் உரசிக் கொள்ளும் முத்தச் சத்தம், இடியை விடப் பலமாக இருக்க, பின்னிப் பிணைந்திருக்கும் கால்கள் உணர்வுகளை அடக்கும் குவியலாக இருந்தது. எல்லாம் அவன் வசதிக்கு என்று ஆட்சி செய்து கொண்டிருந்தவன், வெடுக்கென்று விலகியதில் ஏமாந்த பிள்ளையாய் முழிக்க, மடியில் இருந்து எழுந்தவள் இரண்டு படிக்கட்டு இறங்கி அவன் ஆடையைப் பிடித்து இழுத்தாள்.
பசி எடுத்த வயிற்றுக்குச் சாப்பாடு கிடைக்காதோ என்ற அச்சத்தில் இருந்தவனுக்கு, அறுசுவை உணவே தயார் என்று அழைத்தாள். ஒய்யாரமாக அவள் இழுப்பிற்கு அசைந்து வந்தவன் நீர் சூழ ஆழத் துவங்கினான். பாதுகாப்புக் கவசமாக அவர்களைச் சுற்றி நீர் இருந்தது. அந்தத் தைரியத்தில், தன்னவன் கழுத்தோடு இரு கைகளைச் சுற்றிக் கொண்டவள் அப்பட்டமாக, அவன் முகம் சிவக்கும் அளவிற்கு ரசித்தாள்.
முதலில் அதை ஏற்றவனால், நேரம் கடக்கத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கட்டியவனுக்குள் இத்தனை வெட்கமா என வெட்கிப் போனவள், அதை இன்னும் அதிகரிக்க இதழைக் குவித்தாள். அத்தனை நேரம் அவள் ரசிப்பு போதும் என்று தயங்கிக் கொண்டிருந்த கருடேந்திரன், ஆர்வமாகக் கண்களை விரிக்க முத்தமிட நெருங்கினாள்.
பட்டென்று கொடுத்து விட்டால் கூட ஆசை தீர்ந்துவிடும். கொடுக்கப் போகிறேன் என்று விளையாட்டுக் காட்டுவது தான் பெரும் சோதனையாக இருந்தது. நெருங்கி வருவதும், விலகுவதுமாக விளையாடிக் கொண்டிருக்கும் தன்னவளிடம் இருந்து ஒரு முத்தத்தை வாங்கப் போராடிக் கொண்டிருந்தான் கருடன். அவளாகத் தருவதாக இல்லை. இவனும் வாங்காமல் விடுவதாக இல்லை. யார் தோற்று, யார் வெற்றி பெறப் போகிறார்களோ!
பொறுத்துப் பார்த்தவன், பின்னந்தலைக்குள் விரல் நுழைக்க முயற்சித்தான். அவளின் கேசம் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. அடர்ந்த கருப்பு நிற வானவில் இல்லாததால், பின் கழுத்தில் விரல் பதித்துத் தன் பக்கம் இழுத்தவன்,
“முடிய வளர்த்துக்கோடி முதலாளி!” என்றான் கிறக்கமாக.
அதைவிட அதிகம் கிறங்கி, “ஏன்?” எனச் சொக்க வைத்தவளை இன்னும் தனக்குள் சேர்த்துக் கொண்டவன், “பூ வாங்கித் தரணும்னு ஆசையா இருக்கு.” என்றவன் பேச்சுக்கள் அனைத்தும் அவள் காதுக்குள் காணாமல் சென்றது.
“வேற…”
“கேட்கட்டுமா?”
“ம்ம்!”
“கிஸ் பண்ணு…” என்றதும் உதடு குவித்துப் பறக்கும் முத்தத்தைக் கொடுக்க,
“ஏமாத்துக்காரி!” முணுமுணுத்தான்.
“இப்ப நீ கொடு.”
இடைக்குள் இருந்த கையைச் சுதந்திரமாக நடமாட விடாமல் இம்சை செய்த ஆடையை விரட்டி அடிக்க ஒதுக்கி விட்டவன், “உன்ன மாதிரியா, என்னை மாதிரியா” கேட்டுக் கொண்டே வருடி விட்டான்.
கூச்சத்தில் கண்மூடி, இமை முடிகளை அவர்களைப் போல் உறவாட விட்டவள், “நம்மளை மாதிரி!” என ரகசியமாக அவன் காதுக்குள் கவி பாடினாள்.
தன்னவளின் விருப்பத்தைக் கேட்டவன், சலசலக்கும் நீராகச் சிரிக்க, முத்தத்திற்குத் தயாரானாள் உதடு குவித்து. அவள் விருப்பத்திற்கு ஏற்ப முத்தமிட நெருங்கினான். சொல்லி வைத்துக் கொடுக்கும் பொழுது பெரும் தொந்தரவு அந்த வெட்கம்தான். பெண்மைக்கு மட்டுமல்ல, ஆண்மைக்கும் அது பெரிய எதிரி! இருவரும் ஒரே நேரத்தில் அந்த எதிரியோடு சண்டையிட்டுத் தோற்றுப் போய் கண்களை மூடிக் கொண்டனர்.
விழி வழியாக, வெட்கம் எனும் ஆயுதத்தை நுழைத்துக் கொண்டிருந்த அந்தத் தந்திரவாதி, மூடிக் கொண்டதில் ஏமாந்து ஒளிந்து கொள்ள, அதரங்கள் ஒன்றோடு ஒன்று உரசியது. உரசிய வேகத்தில் முத்தமிடும் வேலையைக் கனகச்சிதமாகத் தொடங்கியது. மழைத் தேவனுக்கு என்ன கடுப்போ, வேகமாக வீசி அடித்தான். அடித்துப் பிடித்து விலகியவர்கள் நீச்சல் குளத்தைக் காலி செய்தனர்.
ஒரே ஓட்டமாகத் தங்கள் அறைக்குள் வந்தவர்கள், செய்து கொண்டிருந்த காரியம் புரிந்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். ஆனாலும், மோகம் அடங்குவதாக இல்லை. அதற்காக மீண்டும் ஆரம்பிக்கவும் துணிவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவள், ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் செல்ல,
“நானே கூப்பிடனும்னு நினைச்சேன்…” என அவள் எடுத்த துண்டை வாங்கித் தோளில் போட்டவன், அவள் தோளில் கை போட, “அடி வாங்குவ…” என்றதோடு நிறுத்தாமல் இரண்டு அடியை வைத்துவிட்டுக் கதவைச் சாற்றிக் கொண்டாள்.
உள்ளே அனுமதிக்காதவளை, வந்ததும் பழி தீர்ப்பதற்காக வாசலிலேயே நின்றிருந்தான் கருடேந்திரன். அதை அறியாதவள் பன்னீரில் குளித்த ரோஜாவாகப் புது உடையில் வெளியில் வர, ஒரே தாவாகத் தாவி அள்ளிக் கொண்டான். விடச் சொல்லிக் கேட்பாள் என்று எதிர்பார்த்ததற்குப் பதிலாக, கைகளை இணைத்துச் சம்மதம் கொடுக்க, “இதுக்குச் சேர்ந்தே குளிச்சு இருக்கலாம்.” எனக் கண்ணடித்தான்.
“இப்பக் கூட ஒன்னும் கெட்டுப் போகல.” என்றவள் மீதிச் சங்கதியை விழிகளில் தெரிவிக்க, அவனுக்குள் இருந்த ஆண்மை துள்ளிக் குதித்தது அள்ளிப் பருக.
மீண்டும் முத்தமிடத் தயாரானது சிங்கமும், புலியும். யார் பற்களில் யார் சிக்கப்போவது என்ற எதிர்பார்ப்போடு இந்த முறையும் அதரங்கள் உரசியது. மழை போல் எந்தத் தொந்தரவும் இல்லை என்ற தைரியத்தில், சாவகாசமாக இதழ் உரசி எச்சிலில் நனைந்து உறவாடத் தொடங்கும் நேரம் கைப்பேசி அடித்தது.
ரிதுவின் எண்ணிற்கு அழைப்பு வந்ததால், அவளின் கவனம் அதில் திரும்பியது. தன் மீது கவனத்தைத் திருப்பப் போராடியவன் கைகளில் இருந்து விடுபட்டவள் எடுத்தாள். காதலில் கசிந்துருகிய முகம், பயத்தில் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. அதை அறியாதவன், பின்னால் நின்று அணைத்துக் கொண்டு தன் இஷ்டத்திற்கு ஆசையை இழுத்துச் சென்றான். எந்த உணர்வும் இன்றிப் பாறையாக நின்றிருந்தவள் முகத்தை நெருங்க, தலை நிமிர்ந்தவன் உணர்வுகள் சப்பென்று அடங்கியது.
“என்ன?”
அவன் கேட்கும் வரை சுயநினைவு இல்லாதவள், “ஒ..ஒன்னும் இல்ல.” சமாளித்தாள்.
நம்பாதவன் யார் அழைத்திருக்கிறார்கள் என்று ஃபோனைப் பார்த்தான். உடனே அதைத் தனக்குப் பின்னால் வைத்துக் கொண்டவள், “ஆபீஸ் கால், நான் பேசிட்டு வந்துடறேன்.” பால்கனிப் பக்கம் சென்றாள்.
வித்தியாசமாக இருக்கும் மனைவியின் செயலைக் கவனித்துக் கொண்டே மெத்தையில் அமர்ந்தான். அவனை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே மீண்டும் அந்த அழைப்பை எடுத்துக் காதில் வைத்து, “நான் வீட்ல இருக்கும் போது கால் பண்ணாதீங்கன்னு சொல்லி இருக்கேன்ல.” எனப் பல்லைக் கடித்தாள்.
“சாரி மேடம், மயக்கம் தெளிஞ்சு ரவி தப்பிச்சுட்டான்.”
“வாட்!” என்றவள் அதிர்வைக் கவனித்த கருடேந்திரன் அதிர, தன்னவனை ஓரக் கண்ணால் பார்த்தவள் உணர்ச்சியை அடக்கி, “கொடுத்த காசுக்கு, சரியா வேலை பார்க்கத் தெரியாதா? மரியாதையா கண்ணுல படாம எங்கயாவது ஓடிடுங்க.” எனச் சத்தம் வராமல் கடித்துக் குதறியவள் அழைப்பைத் துண்டித்தாள்.
மீண்டும் ஓரக் கண்ணால் தன்னவனைப் பார்த்தவள் ரகசியமாகச் சிரித்துக் கொண்டாள். இதுவும் அவள் திட்டத்திற்குள் ஒன்று. டிடெக்டிவ் மூலம் ரவி பற்றிய தகவல்களைச் சேகரித்தாள். இரு அடியாள்களிடம் ஒப்படைத்து, போதைப் பொருளைக் கொடுத்துச் சித்திரவதை செய்தாள். எப்படியும் அவன் தப்பிப்பான் என அந்தத் தருணத்திற்காகக் காத்திருந்தவள், யாரையோ தொடர்பு கொண்டு, “சிக்கிட்டானா?” கேட்க, “எஸ் மேடம்!” என்றார் ஒருவர்.
அவளாகப் பேசுவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவன், ஏமாற்றத்தோடு உறங்க ஆரம்பித்தான். மெல்ல மெத்தைக்கு வந்து அவன் அருகில் படுத்தாள்.
எந்த அசைவும் இன்றி உறங்கும், தன்னவன் உறக்கத்தை உறுதி செய்தவள் சத்தம் வராமல் அங்கிருந்து வெளியேறினாள்.