அத்தியாயம் 05

5
(1)

மாலை ஆறுமணிக்கு வீட்டிற்க்கு வந்தான் ரகு… வீட்டில் கந்தசாமி இல்லை… அவர் அதிகம் வீட்டில் இருக்க மாட்டார்… வீட்டை தாண்டி முச்சந்தி பக்கம் இருக்கும் கோவில் திண்ணையில் அமர்ந்து அவர் வயதை ஒத்தவர்களுடன் பேசி நேரத்தை ஓட்டிவிட்டு சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே வீட்டிற்க்கு வருவார்..

வீட்டிற்குள் வராமல் பொடக்காளிக்குள் நுழைந்து கொண்டான் ரகு..

அவனின் வரவை கவனித்த கன்னிமா அடுப்பை பற்றவைத்து பால் பாத்திரத்தை வைத்தாள்…

முகம் கைக்கால் கழுவி விட்டு வீட்டிற்குள் வந்த ரகு… “கன்னி அடியே கன்னி” என்று கத்தினான்…

“இங்க தான்- ப்பா இருக்கேன்… அஞ்சு நிமிஷம் உக்காருங்க டீ போட்டு எடுத்துட்டு வரன்” என்று அடுப்படியிலிருந்து குரல் கொடுத்தாள் கன்னிமா…

அடுப்படிக்குள் நுழைந்த ரகு… “கன்னி உன் பாட்டி வந்தாங்களா?” என்று கேட்டான்…

“ம்.. ஆமாப்பா! மருவீட்டுக்கு அழைக்க வந்தாங்க… மாமா சொன்னாரா?” என்று கேட்ட கன்னிமா சர்க்கரையை டம்ளரில் போட்டாள்…

“சொன்னது யாரோ?… ஏண்டி உன் ஆயாவுக்கு அறிவிருக்கா?… மருவீட்டுக்கு அழைக்க தனியா வா வருவாங்க?… அக்கம் பக்கம் பாத்தா என்ன நினைப்பாங்க?… கண்ணாலம் முடிஞ்சி அடுத்த நாள் இந்தாயா என்ன தனியா வந்து அழைக்குதுண்ணு அசிங்கமா பேச மாட்டாங்க?” என்று கோவமாக கேட்டான்…

திக்கென்று அவனை பார்த்த கன்னிமா… “எதுக்குப்பா இவ்வளவு கோவம்… எனக்குண்ணு இருக்குறது ஆயா மட்டும் தான்… நீங்க ஏன் தப்பாவே யோசிக்குறிங்க?” என்று கவலையாக கேட்டாள்…

“வேற எப்படி டி யோசிக்க சொல்லுற?” என்று எரிந்து விழுந்து கோவத்தை காட்டினான் ரகு..

“அப்பா அம்மா யாருமே இல்லைன்னாலும் மாப்பிள்ளை வீட்டுல முறையை சரியா பண்ணனும்னு வயசான காலத்துல இந்த வெயில்ல வந்துட்டு போறாங்களே- ன்னு யோசிக்க மாட்டீங்களா? ஒரு பிரச்சனை- க்கு ரெண்டு பக்கம் இருக்குதுப்பா” என்று நிதானமாக கூறினாள் கன்னிமா…

ரகுவரன் நடுக்கூடத்திற்கு சென்றுவிட்டான்.. வேதனையை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு கணவனுக்கு டீயை போட்டு எடுத்து வந்து அவனிடம் டம்ளரை நீட்டினாள் கன்னிமா..

டம்ளரை வாங்கி கீழே வைத்த ரகுவரன் அவளின் கையை இறுக்கமாக பற்றினான்…

“என்னப்பா?”

“யோசிக்காம வார்த்தையை விட்டுப்புட்டேன் டி.. எதையும் மனசுல வச்சிக்காத” என்றான் தவிப்பாக..

அவன் மீசையை முறுக்கி விட்ட கன்னிமா.. “கோவம் நிறைய வருமோ” என்று சிரிப்புடன் கேட்டாள்…

“ஆமாண்டி! என்ன ஏதுண்ணு புரியாமயே பேசிப்புடுவேன் ஆனா பண்ணது தப்புன்னு தெரிஞ்சதும் உடனே ஓடிவந்துடுவேன்… இந்த மன்னிப்பு மசுரெல்லாம் எனக்கு வராது.. ஆனா வேற மாறி என் மன்னிப்பை சொல்லிடுவேன்” என்றான் ரகுவரன்…

“எப்படி?” என்று புருவம் உயர்த்தி கேட்டாள் கன்னிமா…

“இங்காரு கன்னி மூஞ்சிய இப்படியெல்லாம் காட்டினா நான் மன்னிப்பு கேட்காம மஞ்சத்துக்கு இழுத்துட்டு போயிடுவேன்” என்றான் கண்டிப்புடன்…

அவன் சொன்னதை கேட்டு புரியாமல் விழித்த கன்னிமா பின் புரிந்ததும் அவனின் தோளில் செல்லமாக அடித்து… “ஏன்- ப்பா இப்படியெல்லாம் பேசுறீங்க?… சரி முதல்ல அந்த டீயை குடிங்க ஆரிடப்போவுது” என்றாள் அவன் கையிலிருந்து கையை விடுவித்தவாரு…

“சரி கன்னி நீ போய் முகம் கழுவிட்டு கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்ற ரகுவரன் கீழே இருந்த டம்ளரை எடுத்தான்…

“என்னப்பா முன்னாடியே சொல்ல மாட்டிங்களா?… நான் இன்னும் நைட்டுக்கு எதையுமே செய்யல… ஆமா பொருள் வாங்கிட்டு வரன்னு சொன்னிங்களே வாங்கியாந்திங்களா?” என்று கன்னிமா கேட்க..

“கோவிலுக்கு போயிட்டு வரும் போது வாங்கிட்டு வரலாம் போடி” என்றான் ரகுவரன்…

புன்னகையுடன் அடுப்படியை நோக்கி நடந்த கன்னிமா டீயை குடித்து விட்டு வேறு புடவைக்கு மாறி ரெடியாகி வந்தாள்…

அவள் தலையில் பூ இல்லாததை கண்டுகொண்ட ரகுவரன் தன்னிலையை எண்ணி நொந்தான்..

பூஜை கூடையை எடுத்துக்கொண்டு அவன் அருகில் வந்த கன்னிமா… “ஏங்க கிளம்பலாமா?” என்று கேட்க…

“ம்”.. என்று மட்டும் சத்தம் கொடுத்த ரகுவரன் அறைக்கு சென்று லுங்கியை கழட்டி போட்டுவிட்டு வெள்ளை வேஷ்டியை எடுத்து கட்டிக்கொண்டு வந்தவன் மனைவியை பக்கத்திலிருந்த ஈஸ்வரன் கோவிலுக்கு கூட்டி வந்தான்…

கோவிலுக்கு முன்பே பூக்கடைகளும் பூஜை சமான பொருட்கள் விற்கும் கடைகளும் குழுமி இருக்க… தொண்டையை செருமிய ரகுவரன்.. “கன்னி சாமிக்கு பூ வாங்கிட்டு வா” என்று 50 ரூபாய் பணத்தை நீட்டினான்..

பணத்தை வாங்கும் போது தான் அவன் முகத்தை ஆராய்ந்தாள் கன்னிமா… அவன் முகத்தில் பொழிவே இல்லை.. யோசனையுடன் நின்ற கணவனை புரியாமல் சில நொடி கண்டவள் பின் பூஜை சாமான்களை வாங்கிக்கொண்டு வந்தாள்…

செருப்பை கழட்டி விட்டு இருவரும் கோவிலுக்குள் வந்து கடவுளை வணங்கினர்.. முதலில் விநாயகர் பின் நாயன்மார்கள், அனுமான், தட்சணாமூர்த்தி, முருகன், துர்க்கை அம்மன், சனிபகவான், பைரவர், கன்னிமார்கள், சூரியன், சந்திரன், பெருமாள் என ஒவ்வொரு சன்னிதியாக வணங்கிவிட்டு கடைசியில் நந்தியை தொட்டு கும்பிட்டவாரு ஈஸ்வரன் சன்னிதிக்குள் சென்றனர்..

கற்பூரம், பூ, ஊதுபத்தி மட்டும் வாங்கியிருந்த கன்னிமா அதை அர்ச்சகரிடம் கொடுத்தாள்..

அதை வாங்கிக்கொண்டு மந்திரங்களை கூறியபடியே ஈஸ்வரனுக்கு அந்த பூவை போட்ட அர்ச்சகர் கற்பூரத்தை பற்ற வைத்து தீபாரதனை காட்டியவாரு ஈஸ்வரன் மேலிருந்த மல்லிகைப்பூவை எடுத்துக்கொண்டு வந்து கன்னிமாவிடம் கொடுத்து தீபாராதனை தட்டை நீட்டினார்…

பூவை வாங்கிக்கொண்ட கன்னிமா தீபாராதனையை முகத்தில் ஒத்திக்கொண்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு தள்ளி நிற்க… ரகுவரணும் பிரசாதம் வாங்கிக்கொண்டு மனைவியின் நெற்றி வகுட்டில் குங்குமத்தை வைத்துவிட்டான்… அவனின் முகத்தில் புன்னகை தாண்டவமாடியது…

நாள் ஒன்றிற்கு 700 ரூபாய் சம்பளம் வாங்கியும் மனைவிக்கு பூ வாங்கித்தரமுடியவில்லையே என்று எண்ணி வருந்தினான்.. அவனின் வருத்தம் ஈஸ்வரனுக்கு கேட்டதோ என்னவோ? அவரே அந்த பூவை கொடுத்துவிட்டார்…

கோவில் வராண்டாவில் கணவன் மனைவி இருவரும் அமர்ந்தனர்..

“கன்னி அந்த பூவை கொடுடி நான் வச்சி விடுரன்” என ரகுவரன் கேட்கவும்… புன்னகையுடன் பூவை நீட்டினாள் கன்னிமா..

மலர்ந்த முகத்துடன் மனைவியின் கூந்தலில் குண்டு மல்லிகை வைத்து அழகு பார்த்தான் ரகுவரன்..

திரும்பி அவனை பார்த்து அழகாய் சிரித்தாள் கன்னிமா.. அவனுக்குத்தான் மனம் நிறைவாக இருந்தது… 20 ரூபாய் பூ தான் ஆனால் அது எத்தனை நிறைவை கொடுக்கிறது…

கடவுளுக்கு கணக்கு பார்க்காமல் 50 ரூபாய் செலவு செய்தவன் மனைவிக்கு 20 ரூபாய்க்கு பூ வாங்கி தர யோசித்தான்… அவனின் பக்தியில் கடவுளே மனமிரங்கி அர்ச்சகர் மூலம் பூவை கொடுத்து விட்டார்…

வீட்டிற்க்கு வரும் வழியில் மளிகை செலவோடு தேவையான காய்கறிகளையும் வாங்கிக்கொண்டு வந்தனர்.

ரகுவரன் அறைக்குள் முடங்கினான்.. கன்னிமா சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

கந்தசாமி சாப்பிடும் நேரத்திற்கு வந்தார்.. அவருக்கு டீயை சூடு பண்ணிக்கொடுத்த கன்னிமா.. “மாமா சாயங்காலம் வந்திருக்கலாமில்ல. சூடா குடிச்சிருப்பிங்க?. இப்போ திரும்ப கொதிக்க வச்சி கொண்டு வந்தேன் சுவையே அவ்வளவா இருக்காது” என்றாள் உண்மையான அக்கறையோடு..

“கோவில் திண்ணையில தான் கன்னிமா உக்காந்திருந்தேன். போற வரவனுங்களை பாத்துக்கிட்டு அப்படியே நேரம் போனதே தெரியலை.. நாளைக்கு நேரத்துக்கு வந்துரேன்” என்றார் கந்தசாமி புன்னகையுடன்..

கன்னிமா அடுபடிக்குள் நுழைந்து கொண்டாள்..

“அப்பா” என்றவாறு அறையிலிருந்து வெளிவந்த ரகுவரன்… “அப்பா!.. அக்கா ஃபோன் போட்டுச்சி செலவுக்கு பணம் இல்லையாம்.. உனக்கு ஆயிரவா பணம் வந்துருக்குமில்ல அதை கேட்டுச்சு.. நீ பிரபா அண்ணன்- கிட்ட கொடுத்துடு அண்ணன் ஃபோன்- ல வச்சிருக்கும் அப்படியே அனுப்பி விட்டுரும்” என்றான்…

“டேய் அவகிட்ட ஆயிரவா கூடவா இல்லை.. உன் அக்கா காரிக்கு கறக்குறது தான் வேலையே?.. அவ கேட்டதும் நான் கொடுக்கணுமா?.. நான் ஆஸ்பத்திர்க்கு போவத்தான் வச்சிருக்கேன்.. என்கிட்ட பணம் இல்லை.. அவ கேட்டா சொல்லிடு” என்றார் கந்தசாமி…

“ஏன்- ப்பா பணம் இல்லைன்னு தானே கேட்குது.. அதுக்கு நம்மளை விட்டா யாரு இருக்கா?” என்று வெள்ளேந்தியாக கூறியவனுக்கு தெரியவில்லை அவள் ஒரு பச்சோந்தி என்பது.

“என்கிட்ட பணம் இருந்தா தானே ரகு தரமுடியும்.. இந்த ஆயிரத்தை கொடுத்துட்டு சர்க்கரை ஏறிட்டு சாவாட்டா” என்று கோவமாக கேட்டார் கந்தசாமி..

“சரிப்பா நீ தரவேண்டாம் அதுக்கு ஏன் வார்த்தையை விடுற”.

“நானே ஊட்டுல உக்காந்துட்டு கவர்மென்ட் கொடுக்குற பணத்தை வச்சி சர்க்கரை நோய்- க்கு மாத்திரை வாங்கி தின்னு காலத்தை ஓட்டிட்டு கடக்குறேன்… அதையும் புடுங்கணும்னு அக்காவும் தானும் விதண்டாவாதம் பண்ணினா கோவம் வாராதா?… நான் இருந்தா தானே இந்த ஆயிரம் உங்களுக்கு கண்ணை உருத்தும்” என்றார் கந்தசாமி..

ரகு அமைதியாக அறைக்கு சென்றுவிட்டான்… நடந்த அனைத்தும் கன்னிமா காதில் வாங்கினாலும் இருவருக்கும் இடையில் வரவில்லை…

‘கவர்மென்ட் ஆயிரத்து இரநூறு தானே தராங்க!.. ஆயாக்கூட வாங்குமே?.. இவங்க என்ன ஆயிரம்னு சண்டைக்கட்டுறாங்க.. ம் ஒருவேளை வேற ஸ்கீம் மூலமா கூட ஆயிரம் வாங்கலாம்.. நமக்கென்ன? இந்த விசியம் தேவையில்லாதது’ என்று மனதில் நினைத்துக்கொண்டு ஜாரை மிக்ஸியில் பொருத்தி சட்டினியை அறைத்தாள்…

 

தொடரும்…!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!